Jump to content

"விடியல் உன் கையில்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"விடியல் உன் கையில்"
 
 
"இரவின் மடியில் விடியலுக்கு காத்திராதே
விழிகள் திறந்தால் விடியல் உன் கையில்!"
 
நான் என் வீட்டின் மாடத்தில் தூணை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். என்னைச் சுற்றி என்ன நடக்குது என்று ஒன்றுமே புரியவில்லை. உள்ளத்தில் கொதிக்கும் வெப்பம் தாங்கமுடியாமல் இருக்கிறது. நான் இதுவரை சென்ற பாதை இப்ப குழப்பத்தை தருகிறது. நான் கீழே பார்க்கிறேன். வீதியின் ஓரத்தில் ஒரு சிவத்த மோட்டார் வாகனம் விடாமல் சத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறது. என் உள்ளமும் அதற்கு ஈடாக சிவந்து அலறிக் கொண்டு இருந்தது. இப்ப மாலை ஆறு மணி, இருட்ட ஆரம்பித்துக் கொண்டு இருந்தது. எனக்கு எரிச்சல் எரிச்சலாக இருந்தது. என் கண்கள் வீதியால் போகும் வாகனங்களை அங்கும் இங்குமாக நோட்டமிட்டபடி தொங்கிய தோள்களுமாக வாடிய முகமுமாக இருந்தது. என் இதயத்தில் ஒரு வெற்றிடம் விடிவு இன்றி தவிக்கிறது. அது என்ன ? என் தோல்வி தான் என்ன ? எது உண்மையில் என் வாழ்வில் பிழைத்தது? என் மனம் பல பல சிந்தனை வெள்ளத்தால் மூழ்கி, அவை ஒவ்வொன்றும் என்னைப் பார்த்து கத்திக்கொண்டு இருந்தன. அந்த வெறுமை என்னையே விழுங்கும் அளவிற்கு இருக்கிறது. அது தான் நான் உங்களுடன் என் கதையை இப்ப பகிர்கிறேன்.
 
நான் இலங்கையை விட்டு ஒரு அந்நியனாக லண்டன் வந்த நாளை இன்னும் மறக்கவில்லை. என் வாழ்வு ஒரு நோக்கம் கொண்டதாக, ஒரு பெரிய அந்தஸ்து நிலையில் என்னை அமைக்க ஆசைப் பட்டேன். அதை இந்த லண்டன் மாநகரம் எனக்கு தந்தது. நான் வந்து மூன்றாம் நாளே ஒரு பெரிய நிறுவனத்தில் உதவி முகாமையாளராக பதவி பெற்றேன். உண்மையில் என் நோக்கம் இதை விடப் பெரிது, என்றாலும் முதல் படியில் கால் வைத்தல் தானே ஏணியின் கடைசிப் படிக்குப் போகலாம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அது மட்டும் அல்ல, நான் என் முழுக்கவனத்தையும் அந்த நிறுவனத்திலும் என் வேலையிலும் கட்டாயம் செலவழிக்க வேண்டும் என்பதும் தெரியும். ஆனால் என் முதல் தவறை, இப்ப என் உள்ளத்தை தாக்கும் வேதனை, சொல்லிக்கொண்டு இருக்கிறது!
 
நான் என் வாழ்வின் மற்ற விடயங்களில் பெரிதாக கவனம் செலுத்தாமல், வேலை, வேலை , என்றே இருந்துவிட்டேன். பதவி, பதவி இதுவே இதுவே என் முழு நோக்கமாக இருந்தது. இப்ப நினைத்தால் நான் முழு முட்டாள் என்று தோன்றுகிறது. வீடு வாங்கினேன், மோட்டார் வண்டி வாங்கினேன் , பதவி உயர்வு அடைந்தேன். என் செல்வாக்கு நல்ல அழகான பெண்ணை மனைவியாக்கியது. ஆனால் என்னை எதுவுமே திருப்தி செய்யவில்லை. நான் அந்த நிறுவனத்தின் தலைமை பதவியை அடையவேண்டும், என் செல்வாக்கு , அதிகாரம் அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கிலும் ஒலிக்க வேண்டும். அது வரை நான் ஓயப்போவதில்லை! அது தான் என் உள்ளத்தில் எதிர் ஒலித்துக்கொண்டு இருந்தது!
 
ஆனால் நான் மிகத் தவறு செய்தது இப்ப தான் புரிகிறது. நான் எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள், அவளுக்கும் ஆசைகள் இருக்கும் என்பதை மறந்தே விட்டேன்.
 
அந்தஸ்துக்கு ஒரு அழகிய மனைவி, கொலு பொம்மைமாதிரி இருப்பது வாழ்வு அல்ல என்பதை நான் கனவிலும் நினைக்கவில்லை. நான் குடும்பத்தில் இருந்து மனத்தளவில் மிகத் தூரவே இருந்துவிட்டேன். ஆமாம், முதல் இரவு நாம் சந்திக்கும் பொழுது அவள் எத்தனை எதிர்பார்ப்புடன் இருந்தாள் என்பதை, இப்ப தான் அவளின் நாட்குறிப்பில் இருந்து அறிகிறேன்.
 
'என் கணவர் வந்ததும் ஆரத்தழுவி அன்பு செலுத்துவார் என்று எத்தனையோ கனவு கண்டேன். நாம் முதல் முதல் தனிய ஒரு அறையில் சந்திக்கிறோம். பகல் முழுவதும் திருமண கொண்டாட்டம், நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துக்கள் என கழிந்தது. இரவு ஆனதும் ஆனந்தமாய் மகிழ்திருக்கலாம் என்று ஏங்கி நின்றேன். ஆனால் அவரோ, தன் நிறுவனம் பற்றியும், அதில் தான் சம்பள உயர்வுடன் அடுத்த மாதம் புது பதவிக்கு போவதாகவும், நான் வந்த ராசி வேலை செய்வதாகவும் புகழ்ந்தாரே தவிர, இது எம் இருவரின் முதல் இரவு என்பதை எனோ மறந்து விட்டார். என்ன செய்வது கணவன் கதை கதைத்தான். கண் வெட்டாமல் அவனை நான் ரசித்து கொண்டு இருந்தேன். அவரின் பேச்சின் வலி கூட எனக்கு வலிக்வில்லை. அவரை கட்டிப் பிடிக்கும் தைரியம் எனக்கில்லை. மெல்ல வாய்திறந்து, நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்று சொன்னேன். அவரோ எல்லாம் தன் பதவி தந்த அழகு என்றார்'. என்று குறிப்பிட்டு இருந்தார்!
 
எனக்கு அவளை மாதிரியே அழகிய பெண்குழந்தை மூன்று ஆண்டுகள் கழித்து பிறந்தது. அவளுக்கு அது ஒரு ஆறுதல், ஆனால் நானோ இன்னும் என் வேலையில் கடுமையாகவும், பதவி, அதிகார மோகம் அபின் மாதிரியும் என்னை அதில் அடிமையாக்கி விட்டதை நான் உணரவே இல்லை. அவள் பலதடவை தனக்கு மகன் வேண்டும் என்று கூறியதையே பொருட்படுத்தாமல், எல்லாம் என் முழு நோக்கம் அடையட்டும் என்று தள்ளி கடத்திவிட்டேன் . அது அவளை எவ்வளவு பாதிக்கும் என்று யோசிக்கவே இல்லை. நாளடைவில் நான் எனக்கே அந்நியனாகி விட்டேன்!
 
எட்டு ஆண்டுகளுக்கு பின் அவள் மனநிலை பாதித்து தன்னையே இழக்க தொடங்கிவிட்டாள். அவள் உடல்நிலை உருக்குலைய தொடங்கியது. என் மனைவி என்று நான் பெருமை பட்ட அழகு இப்ப அவளிடம் இல்லை. ஆனால் நான் இப்ப அந்த நிறுவனத்தின் தலைமை பதவியில் மிகப்பெரிய வசதிகளுடன், அதிகாரத்துடன் இருக்கிறேன். வைத்தியர் என்னிடம் வந்து அவள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவளுக்கு நல்ல கணவனாக, அவளின் விருப்பு வெறுப்பு அறிந்து நெருக்கமாக அன்பு காட்டினால், அவள் விரைவில் குணமடைவார் என்றார்.
 
இப்ப என் பதவி, பொறுப்பு அதிகாரம் எல்லாம் மிக உச்சியில். எனக்கு நேரம் கிடைப்பதே குறைந்து விட்டது, ஏன், என்னையே இப்ப கவனிக்க முடியாத நிலையாகி விட்டது. அது தான் நான் இப்ப மாடியில் நின்று வெளியே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் மாடியில் இருந்த கதிரையில் சாய்ந்து அயர்ந்துவிட்டேன். என் கன்னத்தை யாரோ தடவுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டு கண்விழித்தேன். என் ஐந்து வயது மகள் தான். நான் விழித்ததும் ஒரு முத்தம் தந்தார், மகளின் கண்ணில் கண்ணீர் ஒழுகிக்கொண்டு இருந்தது. அந்த கண்ணீர் பல கேள்விகளை என் மேல் கேட்டுக் கொண்டு இருந்தது. நான் என்றுமே நல்ல தந்தையாக மகளுக்கு இருந்தது இல்லை . ஆக இந்த ஐந்து ஆண்டும் தேவைக்கு அதிகமான விலை உயர்ந்த உடைகள், தேவைக்கு அதிகமான விலை உயர்ந்த விளையாட்டு சாமான்கள் இப்படி அளவற்று கொடுத்தேனே தவிர, ஒரு சொட்டு அன்பாக பேசியோ, விளையாடவோ, அணைக்கவோ இல்லை. எல்லாம் என் மனக்கண்ணில் ஓடிக்கொண்டு இருந்தது.
 
நான் என் மகளை தூக்கினேன். அவரின் கண்ணீரை துடைத்தேன். மகள் என்னை யாரோ ஒருவன் போல பார்த்தார். பின் ' அப்பா , அம்மா வருவாரா ?' என்று கேட்டார். நான் அவரை கட்டிப்பிடித்து ' கட்டாயம் வருவார், விடியல் பிறக்கும்' என்றேன். விடியல் என் கையில் தான் என்பதை, காலம் கடந்தாலும், மகளின் பார்வை, கண்ணீர் உணர்த்தியது. மகள் அதற்குப் பின் என் கையில் உறங்கிவிட்டார்.
 
இப்ப இருளாகிவிட்டது. அந்த இருண்ட வானில் அழகிய நிலவை பார்த்தேன். அது என் மனைவியின் முகம் மாதிரி எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக புறக்கணித்த என் வெறுமையை நிரப்பும் காலம் வந்துவிட்டது என்று நினைத்தேன். ஒரு தாள் எடுத்து, நான் இதுவரை முயன்று பெற்ற அந்த தலைமை பதவிக்கு விடை கொடுக்க, அதில் இருந்து விலகும் ராஜினாமா கடிதம் எழுதினேன், அதில் பிற்குறிப்பாக நான் அங்கேயே ஒரு சாதாரண ஊழியராக வேலை செய்ய விருப்பம் என்றும் குறிப்பிட்டேன், எனக்கு இப்ப மன நிம்மதி, மகளை கட்டிலில் கிடத்திவிட்டு, படுத்து இருந்த மனைவியின் பக்கத்தில் போனேன். குனிந்து அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்து, அவளின் தலையை என் மடியில் கிடத்தினேன், அவளின் கண்ணில் இருந்து அந்தக் கண்ணீர் என் மடியை நனைத்தது. அவளின் கையை வருடியபடி நான் என்றும் உனக்கு மட்டுமே கணவன், என் பதவியை, அந்த அதிகார மோகத்தை விவாகரத்து செய்துவிட்டேன் என்று கத்தியே விட்டேன்!
 
 
"விடியல் பிறக்கிறது, காற்றில் அதன் குரல் கேட்கிறது
என் உலகம் விழிக்கிறது, மண்டியிட்டு உன்னைச் சந்திக்கிறேன்
உன் மடியில் என் ஆத்மா இனி உறங்கட்டும்
எம் வாழ்வு உன் கையில் இனிமையாகட்டும்!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
318000831_10222129117159702_2397201728104697870_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=1animpltXGEQ7kNvgGvHa_h&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYAjtDEWVVmsWojxjy06cA1SVeFYqydY34HWfyzLTOFMoQ&oe=6664B287 318145642_10222128954555637_3855811771957618135_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=o9slq_lwjpoQ7kNvgHettar&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYApm0NwHieKnVbRSzBZY5d3uFfwVy-ACKtAyDtFh6Dozg&oe=6664BE86
 
 
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.