Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

வெண்முரசு நாவல் 17: இமைக்கணம்

 

large.IMG_7189.png.82db60bff5659aa96712830adcf48086.png

 

 

வெண்முரசு மகாபாரத 26 நாவல் வரிசையில் 17 ஆவது நாவலாகிய “இமைக்கணம்” வாசிப்பை நிறைவுசெய்துவிட்டேன். பகவத்கீதையின் யோகதத்துவங்களை விரிவாகச் சொல்லும் நாவல். மகாபாரதப்போரின் நடுவே கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்ததாகவே அறிந்திருக்கின்றேன். எப்படிப் போர் நடுவே அர்ஜுனனின் கேள்விகளுக்கான பதில்களை தத்துவ விளக்கங்களோடு கிருஷ்ணர் சொல்லியிருக்கமுடியும்    என்ற கேள்வி இருந்ததால், கீதை ஒரு இடைச்செருகல் என்றே நினைத்திருந்தேன். 

 

மகாபாரதப் போரில் கீதை உரைக்கப்படவில்லை எனவும் நால்வேதத்தின் தொடர்ச்சியும் எதிர்நிலையுமான நாராயணவேதம் எனும் கீதைக்காகவே மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்றும் முகவுரை குறிக்கின்றது. 

large.IMG_7779.jpeg.40f50ad71bf4e9fbb1e80a21b1741ed8.jpeg

நாவல் முழுவதும் தத்துவ விசாரணைகள் செறிவாக உள்ளன. சாதாரண இலக்கிய வாசகனுக்கு தத்துவம் செறிந்த நூலை வாசிப்பது இலகுவானதல்ல என்பதால் இதுவரை வாசித்த வெண்முரசு நாவல்களில் இமைக்கணம் நாவலைப் படிக்க அதிக நேரம் எடுத்தது. தத்துவ விசாரணைகள் அவற்றில் நாட்டமில்லாதவர்களுக்கு சலிப்பாக இருக்கும் என்பதால், இந்நாவலில் அவை கதை மாந்தர்கள் அவரரவர் வாழ்வில் எதிர்நோக்கும் இடர்கள், சஞ்சலங்கள், வினாக்கள் அவற்றிற்கான கிருஷ்ணனின் விளக்கங்கள் எனப் புனையப்பட்டுள்மை ஜெயமோகனின் நல்லதோர் உத்தி. எனினும் கண்களை அழுத்தும் நித்திராதேவியுடன் போரிட்டே படித்தேன்!. சிலபகுதிகளை மீளவும் படித்தும்  புரிந்துகொள்ளமுயன்றேன். எனினும் ஒவ்வொருவரினதும் புரிதலுக்கும், அனுபவத்திற்கும் ஏற்பவே இமைக்கணம் நாவலில் வரும் தத்துவவிசாரணைகளைப் புரிந்துகொள்ளமுடியும்.  

நாவலில் ஜெயமோகன் பகவத்கீதையை முற்றிலும் வேறு வகையில் கொண்டுவந்திருக்கின்றார். பாரதப்போரில் கிருஷ்ணன் போரில் நேரடியாக கலந்து கொள்வதில்லை என உறுதிகொடுத்தமையால், பாண்டவர்கள் போருக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்வேளை நைமிஷாரண்யம் என்னும் இமைக்கணக் காட்டில் சென்று குடில்கட்டி அமர்ந்திருக்கின்றார். இக்காட்டில் எல்லாமே கண் இமைக்கும் நேரத்திலேயே நடந்துவிடும். அதனால்தான் நைமிஷாரண்யம் இமைக்கணக் காடு என்று சொல்லப்படுகின்றது. 

நாவலில் வரும் ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளில் அல்லது மனவெளி எண்ணங்களில், சில இடங்களில் Christopher Nolan இன் Inception திரைப்படத்தில் வருவதுபோன்று கனவுக்குள் கனவுகளில் கிருஷ்ணனை கேள்விகளுடன் சந்திக்கின்றார்கள். சில தருணங்களில் கிருஷ்ணன் அவர்களில் சிலரை teleport செய்து வேறு இடங்களுக்கும், நிகழ்காலத்திற்கு முன்னேயும், பின்னேயும் அனுப்பவும் செய்கின்றார்!

நாவலில் கதைமாந்தர்கள் ஒவ்வொருவரின் வழியாகக் கீதையின் ஒவ்வொரு யோகங்களும் விளக்கப்படுகின்றது.  கதை மாந்தரின் கேள்விகளை அறச்சிக்கல் ஒன்றில் குழம்பியிருந்த யமன் அவர்களின் எண்ணங்களுக்குள் புகுந்து, அவற்றை தனக்குள் ஏற்றிக்கொண்டு அவர்களின் வடிவிலேயே இமைக்கணக் காட்டுக்குள் சென்று கிருஷ்ணனுடன் உரையாடி விடைகளைப் பெறுவதாக நாவலில் உள்ளது. எனினும் கதைமாந்தர்களும் யமன் நடாத்தும் உரையாடல்களை தமது ஆழ்கனவுகளில் அறிந்துகொள்கின்றனர்.

 

பன்னிரண்டு பகுதிகளாக உள்ள நாவலில் முதலாவது “காலம்”. “இருப்புக்குப் பொருள் அளிப்பது இறப்பே” என்பதை உணர்த்தும் பகுதி.

தென்திசைத் தெய்வமான யமன் தனது தொழிலை இயற்றாமல் விட்டதால் பூமியில் இறப்பு இல்லாமல்போய்விட்டது. ஆரம்பத்தில் இன்மையற்ற வாழ்வில் திளைத்தாலும், நோயாலும் வலியாலும் அலறும் உயிர்கள் இறப்பை வேண்ட ஆரம்பித்தன. நாரதர் யமனை ஆழுலகத்தில் சந்தித்து உயிர்களை எடுக்கும் தொழிலை ஆரம்பிக்க வேண்ட, யமன் தனது அறச்சிக்கலுக்கு விடை காணவேண்டும் என்றார். கிருஷ்ணனைச் சந்தித்து பதிலை அடையலாம் என்று நாரதர் சொல்ல, அதன்படி யமன் கிருஷ்ணனிடம் மாற்றுருக்களில் செல்கின்றார். 

அப்படி என்ன அறச்சிக்கல் யமனுக்கு வந்தது என்று பார்த்தால், அது ஓர் கிளைக்கதையாக ராமன், லட்சுமணனின் இறுதிக்காலத்தைக் காட்டுகின்றது.  ராமனாக அயோத்தியில் அவதரித்த விஷ்ணு திரும்பவும் விண்ணுலகம் போகாமல் மானுடவாழ்வில் இருக்கின்றார். அவரை “அழைத்து” வர பிரம்மா யமனைக் கேட்கின்றார். யமனும் ஒரு முனிவர் உருவில் அயோத்தி சென்று லட்சுமணனை காவல் இருத்தி ராமனுக்கு தனிமையில் அவர் யார் என்பதை குறிப்பால் சொல்லுரைக்க முயல்கின்றார். அந்தத் தருணத்தில் பலகாலம் தவமிருந்து பசியால் வாடிய துர்வாச முனிவர் ராமனின் கையால் ஒரு கவளம் உணவருந்த விழைந்து வருகின்றார். அவரைத் தடுக்கமுடியாத லட்சுமணன் முனிவர் உருவில் இருந்த யமனிடமும், ராமனிடம் வருகின்றான். ராமனுடன் தனித்து உரையாடியதைக் குழப்பியதற்கு தண்டனையாக லட்சுமணனை குடிநீக்கம் செய்யும் நிலையை யமன் உருவாக்குகின்றார். சரயு நதிக்கரையோரம் குடிலில் தனித்திருந்த லட்சுமணன் தமையனின் பிரிவு தாங்காமல் சரயுவில் மூழ்கி இறக்கின்றான். அதைக் கேட்டு ராமனும் ஓடிவந்து சரயுவில் குதித்து மூழ்கி விண்ணுலகு அடைகின்றார்! பாற்கடலில் ஆதிஷேஷன் எனும் நாகம் மீது விஷ்ணு பள்ளிகொள்ளுவதாக அறிந்திருக்கின்றோம். விஷ்ணு ராமனாக அவதாரம் எடுத்தார் என்பது தெரிந்திருந்தாலும், ஆதிஷேஷன்தான் லட்சுமணனாக அவதாரம் எடுத்தார் என்ற தொன்மக்கதையை முன்னர் அறிந்திருக்கவில்லை! 

 

இரண்டாம் பகுதி ‘இயல்’. கிருஷ்ணனைச் சந்தித்தேயாகவேண்டும் என்ற நினைப்பில் இருக்கும் கர்ணனுக்குள் யமன் புகுந்து கேள்விகளை அறிந்து கர்ணனின் தோற்றத்தில் வந்து கிருஷ்ணனைச் சந்திக்கின்றார். ஷத்திரியனாக ஏற்றுக்கொள்ளப்படாமல் குதிரைச்சாணியில் உழலும் சூதர்களின் மகனாக வளர்ந்ததால் எப்போதும் இழிவை உணர்ந்து சிறுமைகொண்டவனாக கர்ணன் இருக்கின்றான். அவன் ஷத்திரியனாக, குந்தியின் மைந்தனாக, திரெளபதியின் துணைவனாக, ஏற்றுக்கொள்ளப்பட்டால் எவ்வாறு குருகுல சந்ததிகள் எதிர்காலத்தில் தங்களுக்குள் போர்புரிந்து அழிவார்கள் என்பதையும் அதன் துயரம் வரவிருக்கும் போரைவிட மிகவும் அதிகம் என்பதையும் கிருஷ்ணன் காட்டுகின்றார்.  “வெற்றிக்கென்றே செயலாற்றுகின்றனர் மானுடர். ஆனால் வெற்றி எனக்கொள்வது என்ன?” என்ற தத்துவ உசாவல் இப்பகுதியில் வருகின்றது.

 

மூன்றாம் பகுதி ‘ஒருமை’. பீஷ்மரின் உருவில் வந்த யமன் கிருஷ்ணனிடம் போரில் ஈடுபடாமல் கானேகுதல் பற்றி கேள்விகளைக் கேட்கின்றார். “போருக்குத் தேவை பற்று. அதன் மறுபக்கமாகிய வெறுப்பு. பற்று முதிர்ந்து விழைவாகி, விழைவே ஆணவமாகி, ஆணவம் சினமாகி அனலெனப் பற்றிக்கொள்கையிலேயே களம்நின்று போரிடமுடியும்” எனச் சொல்லும் பீஷ்மர், பற்றில்லாத தான் எப்படிப் போரிடமுடியும் என வினவுகின்றார். கிருஷ்ணன் செயல் யோகத்தை உரைத்து பீஷ்மரை “செயலாற்றுக” என தெளிவுறச் செய்து அனுப்புகின்றார். 

“ஒரு செயல் அனைத்துச் செயல்களுடனும் முற்றிணைகையில் அது யோகம் என்றாகிறது. யோகமென அமைந்த செயலே செயல்களில் தூயது. செயல் சிறையிடுவது. யோகச்செயல் விடுவிப்பது” எனும் கூற்று இப்பகுதியில் வருகின்றது.

 

நான்காவதாக ‘அறிவு’ என்னும் பகுதியில் அம்பைக்காக பீஷ்மரைக் கொல்ல அழியா வஞ்சத்துடன் இருக்கும் ஆணிலியான சிகண்டியின் உருவில் யமன் கிருஷ்ணனிடன் வருகின்றார்.   தன் பிறவியின் நோக்கம் என்ன? தான் கொண்ட வஞ்சினமும், நோன்பும் எதன்பொருட்டு எழுந்தன? என்ற ஐயங்களுக்கு கிருஷ்ணன் “ஐயம் கொண்டவனுக்கு செயல் இல்லை. செயலில் திரள்வதே ஞானம். ஞானமில்லையேல் ஐயம் அழிவதில்லை. ஐயம்கொண்டவனுக்கு இவ்வுலகில் எதுவுமில்லை. மாற்றுலகுகளிலும் எஞ்சுவதேதுமில்லை. அனைத்தையும் ஐயப்படுபவன் தனக்குத்தானே விலங்குகளைப் பூட்டிக்கொள்பவன். ஐயம் அறிவின்பொருட்டே எழவேண்டும். விடையின்பொருட்டு மட்டுமே வினா எழவேண்டும்” என செயல் ஞானத்தை போதிக்கின்றார்.

 

ஐந்தாவதான ‘விடுதல்’ என்னும் பகுதியில் விதுரராக யமன் வருகின்றார். கிருஷ்ணனின் மூன்று தூதுக்களும் போரை மூளச்செய்யவே எனக் கடும்சினத்தில் இருந்த விதுரர் பீமன் குலாந்தகன் என்றும் அர்ஜுனன் லட்சம்பேரைக் கொல்லும் வில்கொண்ட சவ்யசாசி என்றும் அவர்களை எவராலும் வெல்லவியலாது என்றும் அறிந்திருந்தார்.  வாழ்நாளெல்லாம் போரைத் தடுக்கவே முயன்ற விதுரர் ஒரு குருதிப்பெருக்கை உருவாக்கி எதை கிருஷ்ணன் அடைய முயல்கின்றார் எனக் கேட்க, கிருஷ்ணன் விதுரரில் உள்ளூற உறைந்துள்ள நஞ்சானது அவர் அஸ்தினபுரியின்மேல் கொண்டிருந்த விழைவு என்று புரியவைத்து, கொண்டவைகளில் இருந்து விடுபடுதலை உரைக்கின்றார்.

 

ஆறாவதான ‘ஊழ்கம்’ என்னும் பகுதியில் மகாபாரத காவியத்தை உருவாக்கிய வியாசரின் உருவில் யமன் கிருஷ்ணனிடம் வருகின்றார். சொற்களைக்கொண்டு காவியங்களைப் புனைந்த வியாசர், வீடுபேறின்றி அலைக்கழிப்பும், துயரும் நிறைந்து நிற்கின்றார். அவருக்கு ஊழ்கம் (தியானம்) தேவையில்லை எனவும் கொடும்பழியிலிருந்தும், ஆறா வஞ்சத்திலிருந்தும், ஆற்றொணாத் துயரிலிருந்துமே பெருங்காவியங்கள் எழுகின்றன என்றுணர்த்தப்பட்டு சொல் திரளும் ஊழ்கம் சொல்லப்படுகிறது.

“கற்பவன் தன்னைத்தானே நம்பிக்கைகளில் இருந்து, பழக்கங்களில் இருந்து, தேய்சொற்களிலிருந்து, முன்னறிவுகளில் இருந்து உயர்த்திக்கொள்ளவேண்டும்” என்ற கூற்று இப்பகுதியில் வருகின்றது.

 

ஏழாவது ‘மறைமெய்’ எனும் பகுதி. அனைத்தையும் கற்றறிந்து அறச்செல்வனான யுதிஷ்டிரர் (தருமன்) வடிவில் யமன் கிருஷ்ணனிடம் வருகின்றார். பாரதவர்ஷத்தின் எதிர்காலத்தை மாற்றும் பல இலட்சம் மக்கள் செத்துக் குவியவிருக்கும் போரினைத் தூண்டிய விசையின் ஊற்று என்ன என்ற யுதிஷ்டிரரின் கேள்விக்கு கிருஷ்ணன் மறைஞானத்தை உரைக்கின்றார். இப்புவியில் வெல்லும் அறம், தோற்கும் அறம் என இரண்டே உள்ளன என்பதையும் வெல்லும் அறமே அறமென்று நிலைகொள்கிறது என்பதையும் யுதிஷ்டிரர் ஐயங்களைத் துறந்து உணர்ந்துகொள்கின்றார் .

 

எட்டாவதான ‘சுடர்வு’ என்னும் பகுதியில் யமன் யமி எனும் பெண்ணாக மாறி திரெளபதியின் உடலுக்குள் புகுந்து அவளது உள்மன ஆழங்களை அறிந்து கிருஷ்ணனிடம் திரெளபதியாகப் போகின்றார். அவள் முற்பிறவியில் தீராத காமம்கொண்டவளாக இருந்தமையால் அவளது கணவரான முனிவரால் “காமம் நுகர்ந்து தீர்வதல்ல, எரிந்து தீர்வது” எனக் கூறப்பட்டு, அவள் ஐந்து கணவர்களைப் பெறுவாள் எனவும், காமத்தின்பொருட்டே குலத்தை அழியச் செய்வாள் எனவும் சபிக்கப்பட்டாள்.

இன்னொரு கதையின்படி விண்ணளந்தோனாகிய விஷ்ணு இராவணனைக் கொல்லவே ராமனாக மண்நிகழ்ந்தார்.  அவர் ஒருமுறை கானுலா சென்றபோது எரிவடிவில் தோன்றிய அக்னி அவரின் மனையாளாகிய சீதையை இராவணன் கவர்ந்து செல்வான் என்பதால் அவளை தன்னிடம் அளிக்குமாறும், தான் வேறு ஒரு சீதையை கொடுப்பதாகவும் கூறினார். அதன்படி ராமன் சீதையை எரிக்குள் அனுப்ப, அவள் ஊனுருகி எலும்புருவாகி கரியானாள். அனலுக்குள் இருந்து ஒளிகொண்ட “அனல்சீதை” வெளிவந்தாள். அவளையே இராவணன் கவர்ந்து இலங்கைக்குக் கொண்டு சென்றான். “அனல்சீதை” என்பதால் அவளை இராவணனால் நெருங்கமுடியவில்லை. இராவணனைக் கொன்று சீதையை மீட்டு அவளை அயோத்தியின் பட்டத்தரசியாக்குவதற்கு முதல்நாள் துணிவெளுப்போன் சீதையின் பத்தினித்தன்மையை சிறுசொல்லால் இழித்துரைப்பதைக் கேட்ட ராமன், சீதையை எரிபுகச் செய்கின்றார். “அனல்சீதை” எரியினுள் புகுந்துகொள்ள பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தீயினுள் புகுந்த உண்மையான சீதை வெளிவருகின்றாள். பத்தினித்தன்மை நிரூபணமாகின்றது. எனினும் தீயினுள் புகுந்த மாயச்சீதை சுடரில் தோன்றி தான் காதலையும் காமத்தையும் அறியவில்லை என ராமனுக்குச் சொல்ல, ராமன் வேள்வி மூலம் அக்னியை வரவழைத்து தீர்வைக்கேட்க, அனலோன் அவளைச் சிவனை நோக்கி தவமியற்றச் சொன்னார். அதன்படி தவமியற்றிய “அனல்சீதை” கொழுநன் வேண்டும் என்று ஐந்து முறை கேட்டதால் ஐந்தும் அருளினேன் என்று சிவன் வரம்கொடுத்து மறைந்தார்.  அந்த அனல்சீதையும் திரெளபதியின் முன்னோர் பிறவி என்கின்றது கதை!  

திரெளபதி அனைத்துயிரையும் விரும்பும் அன்னைத்தெய்வம் எனவும், கிருஷ்ணன் எப்போதும் அவள் அருகில் இருப்பவன் என்றும், அவளுக்கான மெய்மையை அவளே அடையவும் வழிகாட்டப்படுகின்றாள். 

 

ஒன்பதாவது ‘சொல்’ எனும் பகுதியில் தௌம்யர், கர்க்கர் இன்னும் பல வேதியர்கள் கிருஷ்ணனின் இமைக்கணக் காட்டுக் குடிலுக்கு வருகின்றனர். அவர்கள் கிருஷ்ணனிடம் அவரது முழுமை என்ன, ஏன் அவர் பேரழிவை நிகழ்த்துகின்றார், வேதியரான அவர்கள் நடத்தும் வேள்விகளின் பயன் என்ன எனப் பல சந்தேகங்களைக் கேட்டபோது, தானே பிரம்மம்; தனது தோற்றங்களுக்கு முடிவேயில்லை  எனவும் 

செயல்பயனைத் துறந்து அளிக்கப்படும் அனைத்தும் அவிகொடையே எனவும் இந்தப் பூமியில் எல்லா உயிர்களும் வேள்விகளைச் செய்கின்றன எனவும், இப்புடவி வேள்விகளாலேயே நிலைநிறுத்தப்படுகின்றது எனவும் கிருஷ்ணன் விளக்குகின்றார்.

 

பத்தாவது ‘பொருள்’ எனும் பகுதியில் காசியில் இருந்து பன்னிரு முனிவர்களுடன் நைமிஷாரண்யக் காட்டுக்கு வந்த உதங்கர் மேலேறி யமன் கிருஷ்ணனைச் சந்தித்து வேதமுடிபு பற்றி ஏழு வினாக்களைக் கேட்கின்றார். வேதமுடிபு மானுடத்திற்கு அளிப்பது என்ன? என்ற கேள்வியும் அதில் அடங்கும். இக்கேள்விகளுக்கு கிருஷ்ணன் தகுந்த வேதாந்த விளக்கங்களைக் கொடுத்து முனிவர்களின் ஐயங்களைப் போக்குகின்றார்.  வேதமுடிபு பற்றி பருவடிவான வினாக்களே எழுகின்றன எனவும், ஆனால் அது நுண்வடிவான கேள்விக்கே விடையென்றும் சொல்கின்றார். பிரம்மம் என்பது வெறுமொரு வியப்பொலி என்றும், வேதமுடிபு அந்த வியப்பை நினைவுறுத்தி தக்கவைப்பது என்றும் சொல்கின்றார். எல்லைகடந்துசென்று எல்லையின்மையை அறிந்தமைதலே வேதமுடிபு எனவும் சொல்கின்றார்.

 

பதினோராவது ‘முழுமை’ எனும் பகுதியில் கேட்கப்படாத கேள்விகளுக்கு பதில்களை வைத்துக்கொண்டிருந்த கிருஷ்ணன் தேடிய சுகர் எனும் முனிவரின், வியாசரின் ஒரு மகன், வடிவில் யமன் கிருஷ்ணனைச் சந்திக்கின்றார். 

இங்குள்ள அனைத்தையும் துறந்துசெல்பவர்கள் எய்துவது முழுமை. எல்லா அறங்களையும் விட்டுவிட்டு அருவும் உருவுமாகி எல்லைகளைக் கடந்த அதில் அடைக்கலம் கொள்வதே முழுமை என்று முழுமையின் இயல்புகளை யமனுக்கு உரைக்கின்றார். அத்தோடு பல்வேறு வடிவில் வந்தது யமன் என்றும் வெளிப்படுத்தப்படுகின்றது. யமன் தன்னுள் எழுந்த இறுதி வினாவை சொல்லாக்குவதற்குள் இளைய யாதவர் அதை அறிந்தார். அவர் விழிகளிலிருந்து அவ்விடையை யமன் அறிந்தார். அந்த வினாவும், விடையும் என்ன என்று வெளிப்படுத்தப்படவில்லை!

 

நாவலின் இறுதிப்பகுதி ‘இறைப்பாடல்’.  ‘இயல்’ தொடங்கி ‘முழுமை’ வரையுமான பத்து நிலைகளில் கூறப்பட்டவைகள் தொகுக்கப்பட்டு, நைமிஷாரண்யக் காட்டை அடைந்த அர்ஜூனனுக்கு பகவத் கீதையாக கிருஷ்ணனால் உரைக்கப்படுகிறது. வரவிருக்கும் குருஷேத்திரப் போரில் நடப்பவற்றை காலத்தைக் கடந்து அர்ஜுனன் அறிகின்றான். உளச்சோர்வு அடைகின்றான்.

 

உரைகளில் சில:

“செயலாற்றவே பணிக்கப்பட்டிருக்கிறாய். அதன் பயன்களின்மேல் உனக்கு ஆணையில்லை. செயல்களின் பயனைக் கருதக்கூடாது. செயலாற்றாமலும் இருக்கலாகாது. யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு செயலாற்றுக, நடுநிலையே யோகமெனப்படும்.”

“உனக்கான செயலைச் செய்க! ஏனென்றால் செயலின்மையைவிடவும் செயல் மேன்மை உடையது. செயலின்மை கொண்டாயென்றால் உடலைப் பேணவே இயலாதவனாவாய்.”

“எப்போதெல்லாம் அறம் அழிந்துபோய் மறம் எழுகிறதோ அப்போதெல்லாம் நான் பிறக்கிறேன். நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலைநிறுத்தவும் நான் யுகம்தோறும் நிகழ்கிறேன்.”

“அளிக்கப்படுவது பிரம்மம், அவியாக்கப்படுவது பிரம்மம், எரிக்கப்படுவது பிரம்மம், அடையப்படுவதும் பிரம்மம். ஆழ்நிலையில் அமைதலும் பிரம்மமே.”

“அழிவற்ற முதற்பொருளே பிரம்மம். அதன் இயல்பறிதல் ஆத்மஞானம். உயிரெனத் தோன்றுவது இயற்கை. அது பெருகுவதே செயல். அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பொருள்மெய்மை. முதலுருவனைப் பற்றியது தேவமெய்மை. உடலென என்னை அறிதல் வேள்விமெய்மை. இறுதியில் தன் உடலை முற்றிலும் துறந்து எனது நினைவுடன் கடப்போன் எனதியல்பை எய்துவான்.”

“உலகை அழிக்க பெருகியெழுந்த காலம் நான். இதோ அனைத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறேன். எவர் என் எதிரில் இருக்கிறார்களோ அவர்கள் நீ போரிடாமலிருந்தாலும் எஞ்சப்போவதில்லை. ஆகவே நீ எழுந்து நில். போரிட்டுப் புகழ்சூடு. பகைவரை வென்று வளமான நாட்டைப் பெறுக! இவர்கள் முன்னரே என்னால் கொல்லப்பட்டுவிட்டனர். நீ புறநிமித்தம் மட்டுமே. துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்ற வீரர்களையும் கொல். அஞ்சாமல் போர் செய். போர்க்களத்தில் பகைவரை வென்று எழு.”

“ஆற்றவேண்டிய கடமைகளை என்பொருட்டுச் செய்பவன், என்னையே அடையவேண்டுமென குறிக்கோள் கொண்டவன், என்னிடம் தன்னைப் படைப்பவன், பற்றற்றவன், எவ்வுயிரிடமும் பகையிலாதவன் என்னை அடைகிறான்.”

அர்ஜுனனின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில்களையும் கொடுத்து, தனது பேருருவையும் கிருஷ்ணன் காட்டி, அவனின் உளச்சோர்வைப் போக்கி அவனை போருக்கு முழுமையான விருப்புடனும் ஊக்கத்துடனும் ஈடுபடச் செய்யும் மனநிலையை கிருஷ்ணன் உருவாக்குவதோடு நாவல் நிறைவுபெறுகின்றது.

வெண்முரசு வரிசையில் பகவத் கீதையின் யோக தத்துவ விசாரணைகளைத் தொகுத்துச் சொல்லும் இமைக்கணம் மிகவும் முக்கியமான நாவல்.  இந்தியத் தத்துவங்களில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய நாவல்.

 

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசான் ஜெயமோகனின் தளத்தில் இமைக்கணம் நாவல் பற்றிய எனது “வாசக நயப்பு” வெளிவந்துள்ளது😀


https://www.jeyamohan.in/203567/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.