Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்கி 2898 AD : விமர்சனம்!

christopherJun 28, 2024 08:42AM
prabhas kamal amithab Kalki 2898 AD movie Review!

அறிவியல் புனைவோடு கலந்த மகாபாரதக் கதை!

’பாகுபலி’ முதல் மற்றும் இரண்டாம் பாகம் தந்த ‘பான் இந்தியா’ அந்தஸ்தினால், தனது அடுத்தடுத்த படங்களை எப்படித் தருவது என்கிற குழப்பத்தில் சிக்கிக்கொண்டார் பிரபாஸ். ’பான் இந்தியா’ படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் தான். சாஹோ, சலார், ஆதி புருஷ் போன்ற படங்கள் வந்து போன தடம் தெரியாமல் ஆனதுக்குக் காரணமாகவும் அதுவே இருந்தது. இந்தச் சூழலில் ‘பான் வேர்ல்டு’ படமாக இருக்க வேண்டுமென்ற வேட்கையுடன் வெளியாகியிருக்கிறது, அவர் நடித்துள்ள ’கல்கி 2898 ஏடி’.

நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, பசுபதி, சாஸ்வதா சாட்டர்ஜி, ஷோபனா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘பான் வேர்ல்டு படமாக அமைந்திருப்பது சரி, பார்க்கும்படியாக இருக்கிறதா’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

1270732.jpg

பல கதைகள்!

’கல்கி 2898 ஏடி’ திரைக்கதை மகாபாரதத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்வில் இருந்து தொடங்குகிறது. அர்ஜுனன் மகனையும் அவரது மருமகள் வயிற்றில் வளரும் கருவையும் அழித்த அஸ்வத்தாமனுக்கு (அமிதாப் பச்சன்), ‘கலியுகத்தில் மரணிக்காமல் வாழ்வதே தண்டனை’ என்கிறார் கிருஷ்ணர்.

’ஆறாயிரம் ஆண்டுகள் கழித்து நான் ஒரு தாயின் வயிற்றில் கருவாக உருவாகும்போது, என்னை நீயே பாதுகாப்பாய்’ என்றும் சொல்கிறார்.

பிறகு, கதை கி.பி.2898க்கு தாவுகிறது.

வறண்ட பாலையாக மாறியிருக்கிறது பூமி. லேசர் நுட்பம் பெருகினாலும், காட்டுமிராண்டிகளை விடக் கேவலமாக வாழ்கின்றனர் மக்கள். குடிக்கத் தண்ணீர் இல்லை. பூமியில் மீதமுள்ள ஒரே நகரமாக காசி இருக்கிறது. அதை நோக்கி ஒரு வாகனம் பயணிக்கிறது.

காசியில் அதனை நிறுத்திச் சோதனையிடுகின்றனர் சிலர். அவர்கள், அங்கு அந்தரத்தில் தொங்கும் ‘காம்ப்ளக்ஸ்’ எனும் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

அந்த வாகனத்தில் இருக்கும் பெண்களைத் தனியே சோதனை செய்து, அவர்களில் சிலரைத் தங்களது ஆய்வகத்திற்கு இழுத்துச் செல்கின்றனர். அதற்குக் காரணம், அவர்களது தலைவரான ‘சுப்ரீம் யஷ்கின்’ (கமல்ஹாசன்).

WhatsApp-Image-2024-06-28-at-08.32.47_5c

200 வயதான சுப்ரீம் யஷ்கின் தனது இளமையையும், உலகையே வெல்லும் ஆற்றலையும் பெற, 150 நாட்களைத் தாண்டிய கர்ப்பிணிகளின் கருவில் இருந்து எடுக்கப்படும் ஒரு திரவத்தைத் தனது உடலில் செலுத்த விரும்புகிறார். அதற்காகப் பல பெண்களைக் கடத்தி, செயற்கை முறையில் கருவூட்டி, ஆய்வகத்தில் அவர்களது கருவை வளர்த்தாலும், எவரது வயிற்றிலும் 90 நாட்களைக் கடந்து எந்தவொரு கருவும் வளர்வதில்லை.

இந்தச் சூழலில், எஸ்யுஎம் 80 (தீபிகா படுகோனே) எனும் பெண் 5 மாதங்களுக்கும் மேலாகத் தனது கர்ப்பத்தை வெளியே தெரியாமல் மறைத்து, அந்த ஆய்வகத்தில் பணியாற்றுகிறார். ஒருநாள் அவர் கர்ப்பமாக இருப்பது அங்கிருப்பவர்களுக்குத் தெரிய வர, உடனடியாக அவரது கர்ப்பத்தில் இருந்து திரவத்தை உறிஞ்ச ஏற்பாடு செய்யப்படுகிறது.

அப்போது சில குளறுபடிகள் ஏற்பட, அந்தப் பெண் அங்கிருந்து தப்பிக்கிறார். அதற்கு, அங்கு வேலை செய்யும் இன்னொரு பெண் உதவுகிறார். தான் புரட்சிப்படையைச் சேர்ந்தவர் என்றும், சுரங்கப்பாதை வழியாகத் தப்பித்துச் சென்றால் வெளியே தனது சகாக்கள் காத்திருப்பார்கள் என்றும் அப்பெண்ணிடம் கூறுகிறார்.

அவர் சொன்னது போலவே, காம்ப்ளக்ஸின் வெளியே ஒரு வாகனத்தில் வீரன் (பசுபதி) உள்ளிட்ட சிலர் காத்திருக்கின்றனர். தங்களது இடமான சம்பாலாவுக்கு அந்தப் பெண்ணை அவர்கள் அழைத்துச் செல்கின்றனர்.
அதற்குள், அந்தப் பெண் தப்பித்துவிட்ட விவரம் காம்ப்ளக்ஸை நிர்வகித்துவரும் மனஸுக்கு (சாஸ்வதா சாட்டர்ஜி) தெரிவிக்கப்படுகிறது. அவர் தனது படைகளை அனுப்பி, அந்தப் பெண்ணை இழுத்து வருமாறு கட்டளையிடுகிறார். ஆனால், வீரனின் ஆட்கள் அவர்களை அழித்தொழிக்கின்றனர்.

இந்த நிலையில், பைரவா (பிரபாஸ்) எனும் நபர் அந்தப் பெண்ணைக் கடத்தி மீண்டும் காம்ப்ளெக்ஸில் சேர்க்கத் திட்டமிடுகிறார்.

யார் அவர்? எதற்காக, அவர் அந்தப் பெண்ணைக் கடத்த முற்படுகிறார்? சம்பாலாவில் இருப்பவர்கள் அந்தப் பெண்ணைக் காப்பாற்றினார்களா? இந்தக் கதையில் அஸ்வத்தாமன் எங்கு வருகிறார்? இது போன்ற பல கேள்விகளுக்கு நீட்டி முழக்கிப் பதில் சொல்கிறது இப்படத்தின் மீதி.

உண்மையைச் சொன்னால், பல கிளைக்கதைகளை ரொம்பப் பொறுமையாகச் சொல்லி, பின்னர் அவற்றை ஒன்றிணைக்கும் வேலையைச் செய்திருக்கிறது இயக்குனர் நாக் அஸ்வின் அமைத்துள்ள திரைக்கதை.

அந்த ‘கிளாசிக் அப்ரோச்’, அதற்காக நிறைய நேரத்தையும் விழுங்கியிருக்கிறது. அதனைக் கடந்தால் மட்டுமே திரைக்கதையோடு நம்மால் ஒட்ட முடியும். ’கல்கி 2898 ஏடி’ படத்தில் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலே அதுதான்.

WhatsApp-Image-2024-06-28-at-08.33.03_71

அயர்வூட்டும் திரைக்கதை!

நாக் அஸ்வின் இப்படத்திற்குத் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். மகாபாரதத்தின் சிறு கிளையொன்றில் தொடங்கி இறுதியாக அதனை மையப்படுத்தும் கிளைமேக்ஸை கொண்டிருக்கிறது இப்படம்.

அதற்காக, இதனை முழுமையான புராணப் படமாகக் கருத முடியாது. தரைக்கு மேலே பறக்கும் வாகனங்களையும், லேசர் கற்றையைப் பாய்ச்சும் ஆயுதங்களையும் காட்டுவதால், இதனை எதிர்காலத்தில் நிகழ்வதாகச் சித்தரிக்கப்பட்ட அறிவியல் புனைவாகவும் கருத முடியாது.

அவ்விரண்டுக்கும் இடையே நடுவாந்தரமாக ஒரு புள்ளியில், இரண்டு கழைகளுக்கு நடுவே கட்டப்பட்ட கயிற்றில் சின்னக்குழந்தைகள் நடந்து செல்வது போன்று ‘சாகசங்களை’க் கொட்டியிருக்கிறது ’கல்கி 2898 ஏடி’.

அந்தக் கற்பனையைச் சொல்வதற்கான பாத்திர வார்ப்பு, அவற்றின் தோற்றம், ஆடை அணிகலன்கள், வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள், அவர்கள் வாழும் சூழல், இடங்கள் என்று ஒரு உலகத்தையே இதில் படைத்திருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின். அதற்காக, இதே பாணியில் அமைந்த ‘ஸ்டார் வார்ஸ்’, ‘மேட் மேக்ஸ்’ உள்ளிட்ட சில திரைப்படங்களின் சாயலையும் இதில் புகுத்தியிருக்கிறார்.

இயக்குனரின் கற்பனை உலகத்திற்குள் நாம் புகுவது சிரமமாக இருக்கிறது. உண்மையைச் சொன்னால், அயர்ச்சியில் பல இடங்களில் தூக்கம் கண்களைத் தழுவ முற்படுகிறது. அதனைப் படக்குழு ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

அதிக விஎஃப்எக்ஸ் நிறைந்த ‘சாகச’ திரைப்படங்களைப் பார்ப்பவர்களும், வீடியோ கேம் பிரியர்களும் கூட இப்படத்தோடு ஒன்ற நிறையவே சிரமப்படுவார்கள்.

அத்தடைகளை மீறிப் படத்தோடு ஒன்றிவிட்டால் அவர்கள் ரசித்துக் காணப் பல அம்சங்கள் இதிலுண்டு. மேற்சொன்ன விஷயங்களே, இப்படத்தில் லாஜிக் சார்ந்த கேள்விகளுக்கு இடமில்லை என்பதைப் புரிய வைத்துவிடும்.

போலவே, ‘விஎஃப்எக்ஸ்’ நுட்பம் நிறைந்திருக்கும் படங்களை வெறுப்பவர்களால் இப்படத்தில் ஒரு ‘பிரேம்’ கூட பார்க்க முடியாது. அவர்களது ‘கப் ஆஃப் டீ’யாக இது நிச்சயம் இருக்காது.

முழுக்க ‘க்ரீன்மேட்’ கொண்டு எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதால் விஎஃப்எக்ஸ், டிஐ நுட்பங்களுக்கான தேவை இதில் அதிகம். என்றபோதும், இப்படத்தில் போதுமான அளவுக்குக் கதை நிகழும் களங்களும் கதாபாத்திரங்களின் உணர்வுகளும் காட்டப்படுவதற்கேற்ப ஒளிப்பதிவாளர் டியோகே ஸ்டோயில்கோவிக், கேமிரா நகர்வுகளையும் ஒளி அமைப்பையும் வடிவமைத்திருக்கிறார்.

தயாரிப்பு வடிவமைப்பாளர் நிதின் ஜிகானி சவுத்ரி இதுவரை வழக்கமாக நாம் படங்களில் பார்த்திராத சூழலைக் காட்ட ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். அவரது கற்பனைக்கு மேற்கத்திய படங்களே ‘ரெஃபரன்ஸ்’ என்பது தெளிவாகத் தெரிகிறது.

படத்தொகுப்பாளர் கோட்டகிரி வெங்கடேஷ்வர ராவ் பல இடங்களில் கத்திரி போட்டபிறகும் கூட, இப்படம் சுமார் 3 மணி நேரம் வரை ஓடுகிறது. ரசிகர்கள் கதையோடு ஒன்றுவதில் சிரமங்களை எதிர்கொள்ளக் கூடும் என்று ரொம்ப இறுக்கமாக ‘கட்’ செய்யாமல் தனது ‘கத்திரி’க்கு ‘ரெஸ்ட்’ கொடுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இதில் பாடல்களுக்கு அதிக நேரத்தைச் செலவிடவில்லை. அதே நேரத்தில், இரண்டாம் பாதியில் வரும் கடைசி ஒரு மணி நேரத்தைத் தனது பின்னணி இசையால் சட்டென்று ரசிகர்கள் கடக்க உதவியிருக்கிறார். இதுவரை அவர் தந்த படங்களில் இருந்து அவ்விசை ரொம்பவே விலகி நிற்பதும் சிறப்பு.

படம் ஓடத் தொடங்கி சுமார் 25 நிமிடங்கள் கழித்தே பிரபாஸ் திரையில் ‘எண்ட்ரி’ ஆகிறார். ஹீரோயிசம் அதிகமிருக்கும் படங்களில் அது ஒரு ‘பார்முலா’வாக பயன்படுத்தப்படும். ஆனால், இந்த படத்தில் அவரது அறிமுகத்திற்குப் பிறகு தீபிகா படுகோனேவுக்குத் திரையில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

பிறகு, இரண்டாம் பாதியில் தான் அவர் முழுமையாக வருகிறார். அதற்குப் பதிலாக, அவரது அறிமுகத்தையே இடைவேளைப் பகுதியில் அமைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

WhatsApp-Image-2024-06-28-at-08.34.06_c9

இந்தப் படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருக்கிறார். பெரும்பாலும் அக்காட்சிகள் ‘க்ரீன்மேட்’டில் எடுக்கப்பட்டு விஎஃப்எக்ஸ் நிபுணர் குழுவால் செதுக்கப்பட்டதாக இருக்கின்றன. அதனால், கரகரத்த குரலில் வெளிப்படும் அவரது பேச்சை மட்டுமே கேட்டு ரசிக்க வேண்டியதாக இருக்கிறது.

மிருணாள் தாகூர், ராஜேந்திர பிரசாத், ஷோபனா, சாஸ்வதா சாட்டர்ஜி, பசுபதி, அன்னா பென், மாளவிகா, காவ்யா ராமச்சந்திரன் என்று பலரும் இதில் நான்கைந்து நிமிடங்களுக்கு மேல் வந்து போயிருப்பதால், ‘இந்த படத்துல நானும் இருக்கிறேன்ங்க’ எனும் விதமாகத் தலைகாட்டியிருக்கும் விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், ஸ்ரீனிவாஸ் அவசரலா மற்றும் தெலுங்கு இயக்குனர்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, ராம்கோபால் வர்மா, கே.வி.அனுதீப் இருப்பையே நாம் ‘கேமியோ’வாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பிரபாஸின் வீட்டு உரிமையாளராக வரும் பிரமானந்தம், தெலுங்கு ரசிகர்கள் தியேட்டரில் கூக்குரலிடுவதற்காகப் படத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ’ஏஐ பாட்’ ஆக ஒலிக்கும் கீர்த்தி சுரேஷின் குரலும் அவ்வாறே இதில் இடம்பெற்றிருக்கிறது.

சரி, இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தாலும் ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளும் அளவுக்கு இதில் எவரும் ‘ஸ்கோர்’ செய்யவில்லையா என்ற கேள்வி எழலாம். அதற்குப் பதிலாக அமைந்திருக்கிறது அமிதாப் பச்சனின் நடிப்பு.

ஆறாயிரம் ஆண்டுகளாக உயிர் வாழும் அஸ்வத்தாமனாக வந்து ஒரு பெருங்கற்பனைக்குத் தீனி போட்டிருக்கிறார். அவரது இருப்பே இப்படத்தின் யுஎஸ்பி.

இந்தப் படத்தின் உள்ளடக்கத்தில் இருந்து சிலர் ‘டீகோடிங்’ முறையில் பல தகவல்களைக் கண்டறியலாம். இக்கதை பேசும் ’இந்துத்துவ’ அரசியலைக் கேள்வி எழுப்பலாம். ஆனால், அவையெல்லாமே இப்படத்தை ரசிகர்கள் காணத் துணை நிற்காது என்பதே நிஜம்.

அதேநேரத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கொண்டாடுவதற்கான வாய்ப்பையும் இப்படம் தன்னகத்தே கொண்டிருப்பதை நம்மால் மறுக்க முடியாது.

WhatsApp-Image-2024-06-28-at-08.32.24_7b

பார்க்கலாமா? கொண்டாடலாமா?

’கல்கி 2898 ஏடி’யில் இயக்குனர் உள்ளிட்ட எண்ணற்ற கலைஞர்களின் உழைப்பு குவிந்து கிடக்கிறது. இயக்குனர் எண்ணிய திசையில், அது சீராகப் பாய்ந்து கதை சொல்லவும் உதவியிருக்கிறது.

ஒரு புராணப்படமாகவும் இல்லாமல், அறிவியல் புனைவாகவும் அமையாமல், சூப்பர்ஹீரோ சாகசமாகவும் தென்பட முடியாமல் தவிக்கிறது இதன் திரைக்கதை. ஆனால், அவற்றின் கலவையாகத் திகழ்வதே ’கல்கி 2898 ஏடி’யின் அடையாளம் என்று உறுதியாக நம்பியிருக்கிறார் நாக் அஸ்வின்.

அது உங்களுக்கு உவப்பானதாக இருந்தால் இப்படம் பிடிக்கக்கூடும்; கொண்டாடக்கூடும்.

கே.சங்கர், ராம.நாராயணன் போன்ற இயக்குனர்கள் பக்திப்படங்களின் வழியே வசூலை அள்ளிய காலகட்டத்தில் அவற்றின் ஒரு பிரேமில் கூடத் தலைகாட்ட விரும்பாத கமல்ஹாசன், இந்த வயதில் ’கல்கி 2898 ஏடி’யில் நடித்திருப்பது சினிமா விரும்பிகள் மனங்களில் சில கேள்விகளை எழுப்பக்கூடும். அப்படியொன்று நிகழவில்லை என்றால், இப்படம் வசீகரித்திருக்கிறது என்று அர்த்தம்!

 

https://minnambalam.com/cinema/prabhas-kamal-amithab-kalki-2898-ad-movie-review/

  • கருத்துக்கள உறவுகள்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.