Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7   09 SEP, 2024 | 09:22 AM

image

டி.பி.எஸ். ஜெயராஜ் 

இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சி என்று கருதப்படும் இலங்கை தமிழரசு கட்சி 2024 செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தலில்  ஐக்கிய மக்கள் கூட்டணியின் ( சமகி ஜன சந்தானய ) தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. செப்டெம்பர் முதலாம் திகதி வவுனியாவில் கூடிய அதன் ' மத்திய செயற்குழு ' அதற்கான தீர்மானத்தை எடுத்தது. தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிடும் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரிப்பதில்லை  என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அவர் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்.

சிறுபான்மைச் சமூகங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியமான அரசியல் கட்சிகள் மத்தியில் தமிழரசு கட்சியே ஜனாதிபதி தேர்தலில் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாக இறுதியாக அறிவித்த கட்சியாகும்.

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவையே சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளாகும். எனவே பிரேமதாசவுக்கு முக்கியமான தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு இருக்கிறது என்பது தெளிவானது.

ஜனாதிபதி தேர்தல் அண்மித்துக் கொண்டிருந்த வேளையில் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பெருமளவு வாக்குகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தனதாக்கிக்கொள்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அவர்  சிறுபான்மைச் சமூகங்களுக்கு நேசமானவர் என்ற நற்பெயரை நீண்டகாலமாகக் கொண்டிருப்பவர் என்பதும் தமிழ் மக்கள் மத்தியிலும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் கணிசமான ஆதரவை அனுபவித்தவர் என்பதுமே அதற்கு காரணமாகும். மேலும், அவரின் தலைமையிலான அரசாங்கங்களில் சில சிறுபான்மைச் சமூகக்கட்சிகள் பங்காளிகளாக இருந்தன. அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்தும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் வெளியேறிய செல்வாக்குமிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறார்கள்.

சஜித் பிரேமதாச 

முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் 2020 பாராளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டன. அவை தொடர்ந்தும் எதிரணியிலேயே இருந்துவந்தன. ஆனால், ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டபோது இந்த கட்சிகள் ரணிலின் பக்கத்துக்கு வந்துவிடும் என்று பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. அதனால் சிறுபான்மைச் சமூகங்களின் பெருமளவு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரணில் முகாம் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தது.

சிறுபான்மைச் சமூகங்களின் கட்சிகள் ஜனாதிபதியின் பக்கத்துக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு நடைமுறையில்  சாத்தியமாகவில்லை. முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் மலையக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியும்  அணி மாறுவதற்கு பதிலாக சஜித் பிரேமதாசவுடன் பக்கத்திலேயே தொடர்ந்தும் இருந்தன. இந்த கட்சிகள் பிரேமதாசவுடன் தனித்தனியாக உடன்படிக்கைகளைச் செய்துகொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்துகொண்டன. இப்போது தமிழரசு கட்சியும் அவருடன்  ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொள்ளாமலேயே அவருக்கு அதன் ஆதரவை அறிவித்திருக்கிறது. எனவே பிரேமதாச இந்த கட்சிகளின் உதவியுடன் தமிழ்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளின் மிகவும் பெரும்படியான வாக்குகளை பெற்றுக்கொள்வார் என்று தோன்றுகிறது.

ஆனால், இந்த சிறுபான்மைச் சமூக அரசியல் கட்சிகளின் ஆதரவின் விளைவாக தமிழர்களினதும் முஸ்லாம்களினதும் வாக்குகள் மீது பிரேமதாச ஒரு ஏகபோகத்தைக் கொண்டிருப்பார் என்று அர்த்தமாகிவிடாது. கடந்த காலத்தில் செய்தததைப் போன்று இந்த கட்சிகளினால் தங்களது மக்களின் வாக்குகளை தாங்கள் ஆதரிக்கின்ற வேட்பாளருக்கு மொத்தமாக பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்பது நிச்சயமில்லை.

தமிழ், முஸ்லிம் வாக்காளர்களில் ஒரு கணிசமான எண்ணிக்கையினருக்கு உறுதியான சொந்த அபிப்பிராயங்கள் இருக்கி்றன என்பதையும் அவர்கள் சுதந்திரமாக வாக்களிப்பார்கள் என்பதையும் தெளிவான குறிகாட்டிகள் மூலம் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. கட்சிகளின் தலைவர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கின் போதிலும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கும் நேர்மறையான படிமம் அவருக்கு சார்பாக வாக்காளர்கள்  மீது செல்வாக்கைச் செலுத்தும் சாத்தியம் இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரை, தமிழர்கள்,  முஸ்லிம்கள் மத்தியில் அவருக்கென்று சொந்த ஆதரவுத்தளம் ஒன்றும்  இருக்கிறது.  செந்தில் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி, பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள், ஏ.எச்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆகியவை விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்றன. இந்த கட்சிகளுக்கு புறம்பாக தனிப்பட்ட  சில தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும்  அவரை ஆதரிக்கிறார்கள்.

இந்த கட்சிகளின்  ஆதரவுக்கு மத்தியிலும், சிறுபானமைச் சமூகங்களின் வாக்குகளைப் பெறுவதில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலாக சஜித் பிரேமதாச அனுகூலத்தைக் கொண்டிருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. ஜனாதிபதியை ஆதரிக்கின்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளையும் விட பிரேமதாசவை ஆதரிக்கும் அந்த சமூகங்களின் கட்சிகள் பெரியவை என்பதே அதற்கு காரணமாகும். இருந்தாலும், இந்த கட்சிகள் வழங்கும் ஆதரவு ஒன்றும்  ஒரே சீராக  கெட்டியானவை அல்ல. பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட செல்வாக்குமிக்க சில உறுப்பினர்கள் தங்கள் கட்சிகளின் ஆணைக்கு பணியமறுத்து விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை அறிவித்திருக்கிற்ர்கள்.

அநுரா குமார திசாநாயக்க

இத்தகைய பின்புலத்தில் முக்கியமாக குறிப்பிடவேண்டிய அரசியல் அணியாக  ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. ) தலைமையிலான  தேசிய மக்கள் சக்தி இருக்கிறது.ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி அதன் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரா குமார திசாநாயக்காவுக்கு சிறுபான்மை இனத்துவ கட்சிகளின் ஆதரவை நேரடியாக நாடவில்லை.

பதிலாக அது  தமிழ் மக்களிடமும் முஸ்லிம் மக்களிடமும் நேரடியாக நேசக்கரத்தை நீட்டி ஆதரவைக் கோருகிறது.

தமிழ், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இருந்து உறுப்பினர்களைச் சேர்த்திருக்கும் ஜே.வி.பி./  தேசிய மக்கள் சக்தி கிழக்கில் காத்தான்குடி உட்பட தமிழர்கள், முஸ்லிம்களை பெரும்பான்மையாகக்கொண்ட பகுதிகளில் அதன் கட்சி அலுவலகங்களையும் திறந்திருக்கிறது. சஜித் அல்லது ரணில் அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட அநுரா குமார திசாநாயக்கவும் குறிப்பிடக்கூடிய அளவு தமிழ், முஸ்லிம் வாக்குகளைப் பெறுவார் என்றே தோன்றுகிறது.

இத்தகைய பின்புலத்தில் வடக்கு, கிழக்கிலும் மலையகத்திலும் தமிழ் மக்கள் வாக்களிக்கக்கூடிய பாங்கு ( Potential voting pattern ) குறித்து கவனத்தை செலுத்துகிறது. குறிப்பாக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு கட்சிகள் பிரேமதாசவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் வழங்கும் ஆதரவு மீது கட்டுரை பிரத்தியேக கவனத்தை செலுத்துகிறது. தமிழ் வாக்காளர்களைப் பற்றியும் ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் எவ்வாறு வாக்களிக்கக்கூடும் என்பதை விளக்குவதே நோக்கம்.  தமிழர்களின் வாக்குகளில் பெருமளவானவற்றை சஜித் பிரேமதாச பெறுவாரா என்பதே கேள்வி.

மலையக தமிழர்கள்

மலையகத் தமிழர்கள் என்று அறியப்படும் இந்திய வம்சாவளி தமிழர்கள் மூன்று இனத்துவச் சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியிலும் சிறிய சனத்தொகையைக் கொண்டவர்கள்( 4.1சதவீதம் ) என்பதுடன் இலங்கையில் நான்காவது பெரிய இனக்குழுவினர். நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மையினராக வாழும் அவர்கள் பதுளை, கண்டி, மாத்தளை,  கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் சற்று பெரும்படியான அளவில் வசிக்கிறார்கள்.

தோட்டத் தொழிலாளர்களின் மிகப்பெரிய தொழிற் சங்கமாகவும் மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான அரசியல் கட்சியாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விளங்குகிறது.2022 ஆம் ஆண்டுக்கு பிறகு அது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் பங்காளியாக இருந்துவருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் இருந்து கடந்த பொதுத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஜீவன் தொண்டமானும் மருதுபாண்டி இராமேஸ்வரனும் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டனர். காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார். அதன் தலைவரான செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகிக்கிறார்.

தோட்டத் தொழிலாளர்களின் தினச்சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்தமை, முறையான வீடுகளுடன் கூடிய சமூகக் குடியிருப்புக்களை அமைப்பதற்கான திட்டத்தின் முன்னே்டியாக லயன் அறைகளில் வசிப்பவர்களுக்கு அவற்றை உடைமையாக்கியமை, ' அஸ்வேசும ' வறுமை நிவாரணக் கொடுப்பைவை தோட்டத் தொழிலாளர்களுக்கும் விஸ்தரித்தமை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக அண்மைக்காலத்தில் ஜனாதிபதி விக்கிரமசிங்க பொதுவில் மலையகத் தமிழர்களுடனும் குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடனும் தனனை நேசமானவராக்கிக் கொண்டிருக்கிறார். அவருடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைச் செய்திருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலில் அவரை உறுதியாக ஆதரிக்கிறது.

தமிழ் முற்போக்கு கூட்டணி 

மலையக தமிழ் மக்களின் முக்கியமான கட்சியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விளங்குகின்ற போதிலும், பாராளுமன்ற ஆசனங்களைப் பொறுத்தவரை அது ஏகபோகத்தைக் கொண்டிருக்கவில்லை. உண்மையில், தமிழ் முற்போக்கு கூட்டணியே பாராளுமன்றத்தில் பெரிய எண்ணிக்கையில்  மலையக தமிழ் உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது.  மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், வி. இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றை அங்கத்துவக் கட்சிகளாகக் கொண்டதே தமிழ் முற்போக்கு கூட்டணி. அதன் தலைவராக மனோ கணேசன் இருக்கின்ற அதேவேளை இணைச் செயலாளர்களாக திகாம்பரமும் இராதாகிருஷ்ணனும் உள்ளனர்.

2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் போட்டிரடடுைஆறு ஆசனங்களைக் கைப்பற்றியது. நுவரெலியாவில் இருந்து மூவரும் பதுளை, கண்டி, கொழும்பு மாவட்டங்களில் இருந்து தலா ஒருவரும் தெரிவாகினர். பதுளையில் இருந்து தெரிவான உறுப்பினர் அரவிந்தகுமார் 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதை அடுத்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் அவர் இப்போது ஒரு இராஜாங்க அமைச்சர்.

தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியில் தொடர்ந்து  இருந்து வருகின்றது என்றாலும்,  ஐக்கிய மக்கள் சக்தியின் அணைப்புக்குள்  அதற்குள் அதிருப்தியின் குமுறல்களும் வெறுப்புணர்வான் முணுமுணுப்புகளும் இருந்தன. ஜனாதிபதி தேர்தல் நெருங்கும்போது தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித் பக்கத்தில் இருந்து ரணில் பக்கத்துக்கு மாறக்கூடிய சாத்தியம் இருப்பதாக பரவலாக ஊகங்கள் கிளம்பின. ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.

அதற்கு இரண்டு காரணங்கள்.  முதலாவது நுவரேலியா, இரண்டாவது கொழும்பு. நுவரேலியாவில் தேர்தல்களின்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தொழிலாளர் தேசிய சங்கம் - மலையக மக்கள் முன்னணி கூட்டும் எதிரெதிராகவே போட்டியிடுகின்றன. அவ்வாறு செய்வதன் மூலம் இரு தரப்புமே இரண்டுக்கு மூன்று என்ற விகிதத்தில் பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொள்கின்றன. உதாரணமாக, 2020 பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு இரு ஆசனங்களும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு (  தொழிலாளர் தேசிய சங்கம் - மலையக மக்கள் முன்னணி கூட்டு ) மூன்று ஆசனங்களும் கிடைத்தன. எதிரெதிராக போட்டியிடுவதன் மூலம் மாத்திரமே  இரு தரப்பினரும் கூடுதல்பட்ச ஆசனங்களை பெறக்கூடியதாக இருக்கிறது 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் கூட்டாக ரணிலை ஆதரித்தால்,  அவர்கள் பாராளுமன்ற தேர்தலிலும் இணைந்தே போட்டியிடவேண்டியிருக்கும். அத்தகைய ஒரு சூழ்நிலை இரு தரப்பினருக்கும் குறைந்தளவு ஆசனங்களே கிடைப்பதற்கு வழிவகுக்கும். தவிரவும்,  நன்றாக நிறுவனமயமாக்கப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இழப்பில் கூடுதல் ஆசனங்கள் பெறுவதை உறுதிசெய்யக்கூடியதாகவும் இருக்கும். பாராளுமன்ற தேர்தல் தொடர்பான இந்த கணிப்பீடே ரணில் பக்கத்துக்கு மாறுவதை விடவும் சஜித்துடன் தொடர்ந்து இருப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியை நிர்ப்பந்தித்தது.

மனோ கணேசன்

இதே காரணம் கொழும்பில் மனோ கணேசனுக்கும் பொருந்துகிறது. கொழும்பு மாவட்டத்தில் மிகவும் பெரிய அளவில் வாக்குகளைக் கைப்பற்றி பல பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுவதற்கான தகுதியைக் கொண்ட ஒரு கட்சியில் இருந்து அல்லது கூட்டணியில் இருந்தே போட்டியிட வேண்டிய தேவை மனோ கணேசனுக்கு இருக்கிறது. அவ்வாறு செய்தால்தான்  தமிழ் வாக்குகளில்  மாத்திரம்  தங்கியிருக்கும் மனோ கணேசன் ஒப்பீட்டளவில் குறைந்தளவு விருப்பு வாக்குகளைபை் பெற்று பாராளுமன்றத்துக்கு தேர்வாகக்கூடியதாக இருக்கும்.  கடந்த காலத்தில் மனோ ஐக்கிய தேசிய கட்சியுடன் அணிசேர்ந்து நின்றார். ஆனால்,2020 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சி மிகவும் குறைந்தளவு வாக்குகளையே பெறப்போகின்றது என்பதை உணர்ந்த அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கத்துக்கு  சென்றார். அவவாறு செய்ததன் மூலம் கொழும்பில் அவர் வெற்றிபெற்றார்.

எனவே கொழும்பு மாவட்டம் ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என்ற அபிப்பிராயம்  மனோ கணேசனுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இருக்கின்றது போன்று தெரிகிறது. கொழும்பு மாவட்டத்தில் சஜித்தும் அநுரா குமாரவும் கூடுதல் எண்ணிக்கையில் வாக்குகளைப் பெறக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அதனால்  பொதுவில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் குறிப்பாக மனோ கணேசனும் ஜனாதிபதி தேர்தலில் சஜித்தை ஆதரிக்கவும் பிறகு பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி / ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் போட்டியிடவும் விரும்பியிருக்கிறார்கள். 56 அம்ச சாசனம் ஒன்றில் சஜித்துடன் கைச்சாத்திட்ட அவர்கள் அவரை ஆதரிக்க உறுதியளித்திருக்கிறார்கள்.

ரணில் விக்கிரமசிங்க

சஜித்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி வழங்கும் ஆதரவு எதிர்மறையான விளைவையும் கொண்டிருந்தது. அதன் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகத் திரும்பி ரணில் விக்கிரமசிங்கவுடன் தனியான உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டு அவரை ஆதரிக்கிறார். 2020 ஆம் ஆண்டில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ் முறாபோக்கு கூட்டணியில் இப்போது நான்கு உறுப்பினர்களே இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கத்தில் இலங்கை தேசிய தோடடத் தொழிலாளர் சங்கத்தின் செல்வாக்குமிக்க செயலாளர் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் வடிவேலின் ஆதரவின் வடிவில் ரணிலுக்கு ஒரு ஊக்கம் கிடைத்தது.2020  ஆம் ஆண்டில் ரணிலைக் கைவிட்டு சஜத்துடன் இணைந்துகொண்ட சுரேஷ் பிறகு அவருடனும் முரண்பட்டுக்கொண்டார். மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வந்த அவர் தொழில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அதனால் மலையக தமிழ் வாக்காளர்களைப  பொறுத்தவரை ரணில் ஒரு வலிமையான நிலையில் இருப்பதாக தோன்றியது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஆதரவும் அரவிந்தகுமார், வேலு குமார் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது. சஜித்தை விடவும் கூடுதலான இந்திய தமிழர்களின் வாக்குகளை ரணில் பெறுவது மிகவும  சாத்தியம்.

இலங்கைத் தமிழர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய இனத்தவர்களாக ( 11.1 சதவீதம் ) இருப்பதுடன் மூன்று சிறுபான்மை இனத்தவர்களில் அவர்களே பெரிய சனத்தொகையைக் கொண்டவர்கள். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களே பெரும்பான்மை இனத்தவர்கள். திருகோணமலை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய இனத்தவர்களாகவும் அம்பாறை மாவட்டத்தில் மூன்றாவது பெரிய இனத்தவர்களாகவும் அவர்கள் விளங்குகிறார்கள்.கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவர்கள் கணிசமான ஒரு சிறுபான்மையினராக இருக்கிறார்கள். 

அண்மைக்காலம் வரை இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் அணியாக தமிழ் தேசிய கூட்டயைப்பே இருந்தது. 2020 பாராளுமன்ற தேர்தலில் அதற்கு பத்து ஆசனங்கள் கிடைத்தன. தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவடைந்து அதன் மூன்று அங்கத்துவ கட்சிகளில் ரெலோவும் புளொட்டும் இப்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற புதிய அணியை அமைத்திருக்கின்றன. கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவ கட்சியான இலங்கை தமிழரசு கட்சி இப்போது தனியாக செயற்படுகிறது. ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பத்து பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழரசு கட்சிக்கு ஆறு பேரும் ரெலோவுக்கு மூன்று பேரும் புளொட்டுக்கு ஒருவரும் இருந்தனர்.

தற்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஐந்து அங்கத்துவ கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று அழைக்கப்படும் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு தங்கள் ஆதரவை வழங்குகின்றன. 69 வயதான அரியநேத்திரன்  2004  ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் தமிழரசு கட்சியில் இருந்தே தெரிவு செய்யப்பட்டார். அரியநேத்திரனை ஏழு தமிழ்க்கட்சிகள் ஆதரிக்கின்ற போதிலும்,  இவற்றில் எத்தனை கட்சிகள் அந்த ஆதரவை மனப்பூர்வமாக வழங்குகின்றன என்பது சந்தேகம் நிலவுகிறது. சில கட்சிகள் இரகசியமாக ரணிலை ஆதரிக்கின்றன என்று சந்தேகிக்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் அப்போது ஐக்கியமாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவை அல்ல அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவையே ஆதரித்தது. இருந்தாலும், பத்து பாராளுமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் மாத்திரமே டலஸுக்கு தங்கள் வாக்குகளை அளித்ததாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் அந்த நேரத்தில் தெரிவித்தன. எஞ்சியவர்கள் ஒன்றில் ரணிலுக்கு வாக்களித்தார்கள் அல்லது தங்கள் வாக்குகளை பழுதாக்கினார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக ரணிலே பகிடியாக கூறினார்.

தமிழரசு கட்சி

அதேவேளை, பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர்கள் தனியொரு பெரிய கட்சியாக விளங்கும் தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவுக்கு அதன் ஆதரவை அறிவித்திருக்கிறது. இது சஜித்துக்கு மனத் தைரியத்தை கொடுத்திருக்கின்ற அதேவேளை ரணிலுக்கு பெரிய தாக்கமாகப் போய்விட்டது  ஆனால் தமிழரசு கட்சி இப்போது இரு முகாம்களாக பிளவுபட்டு நிற்கிறது. ஒரு முகாம் சிவஞானம் சிறீதரனை ஆதரிக்கின்ற  அதேவேளை அடுத்த முகாம் மதியாபரணம் ஆபிரஹாம் சுமந்திரனை ஆதரிக்கிறது. மேலும்  தமிழரசு கட்சி தற்போது ஒரு சட்டச்சிக்கலிலும்  அகப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே குறிப்பிட்டவாறு தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு திர்மானித்திருக்கிறது. தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினரான அரியநேத்திரனை ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகுமாறும் மத்திய செயற்குழு கேட்டிருக்கிறது. அந்த குழு தீர்மானத்தை நிறைவேற்றிய போதிலும், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் உட்பட தமிழரசு கட்சியின் ப உறுப்பினர்கள் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தமிழரசு கட்சிக்குள் செல்வாக்குமிக்க ஒரு பிரிவினர் பிரேமதாசவுக்கு மேலாக அரியநேத்திரனை ஆதரிப்பார்கள் என்று தோன்றுகிறது. கடந்த வாரம் இந்த பத்தியில் குறிப்பிட்டதைப் போன்று பாரதூரமாக பிளவுபட்டிருக்கும் தமிழரசு கட்சி நிரந்தரமான ஒரு உடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

பாக்கியசெல்வம் அரியநேத்திரன்

தமிழரசு கட்சியின் உள்ளக நெருக்கடி பிரேமதாசவையும் கடுமையாக பாதிக்கும். அவரை அந்த கட்சி ஐக்கியமாகவும் உற்சாகமாகவும் ஆதரிக்க இயலாமல் போகும். மேலும் கட்சிக்குள் இருக்கும்  அரியநேத்திரன்  ஆதரவுச்சக்திகள் பிரேமதாசவை தீவிரமாக எதிர்க்கும்.  அரியநேத்திரனுக்கு ஆதரவான பிரசாரக் கூட்டங்கள் தமிழரசு கட்சி உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஏற்கெனவே கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றிருக்கின்றன.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்  தங்களது வழிகாட்டல்களை பின்பற்றிவந்திருக்கிறார்கள் என்று தமிழரசு கட்சியின் பேச்சாளரான சுமந்திரன் அடிக்கடி கூறிவந்திருக்கிறார்.  அதற்கு சான்றாக 2010  தேர்தலில் சரத் பொன்சேகாவையும் 2015 தேர்தலில் மைத்திரபால சிறிசேனவையும் 2019 தேர்தலில் சஜித் பிரேமதாசவையும் வடக்கு கிழக்கு தமிழர்கள் ஆதரித்ததை அவர் சுட்டிக்காட்டுகிறார். தமிழரசு கட்சியின் அழைப்புக்கு சாதகமான முறையில்  தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில்  செப்டெம்பர் 21  ஆம் திகதி பிரேமதாசவுக்கு வாக்களிப்பார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

தமிழரசு கட்சி ஒரு சிங்கள வேட்பாளருக்கு மேலாக  இன்னொரு சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை கேட்பதற்கும்   தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று வர்ணிக்கப்படுகின்ற ஒருவருக்கு மேலாக ஒரு சிங்களக்கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நாம் மனதிற் கொள்ளவேண்டும்.

சஜித்துக்கு ஆதரவளிப்பதற்கு தமிழரசு கட்சி எடுத்த தீர்மானம் ரணிலுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது என்பதில் சந்தேகமில்லை. 

தமிழரசு கட்சி சஜித்தை ஆதரிக்கின்ற அதேவேளை ஏனைய ஏழு தமிழ் கட்சிகள் அரியநேத்திரனை ஆதரிக்கும் நிலையில் ரணிலின் நிலை சற்று பரிதாபத்துக்குரியதே.

டக்ளஸும் பிள்ளையானும் 

ரணிலைப் பொறுத்தவரை,  தனது சொந்த ஐக்கிய தேசிய கட்சியை தவிர தமிழ் கட்சிகளின் ஆதரவு என்று வரும்போது தற்போது நிச்சயமாக இருப்பது அவரது அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியினதும் பிள்ளையான் என்ற சந்திரகாந்தனின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினதும் ஆதரவேயாகும்.

தேவானந்தா அமைச்சரவை அமைச்சராகவும் பிள்ளையான் இராஜாங்க அமைச்சராகவும் இருக்கிறார்கள். தேவனந்தாவின் கட்சி இரு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் கூடுதலான விருப்புவாக்குகள் பிளளையானுக்கே கிடைத்தன. தேவானந்தாவுக்கு வடக்கில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஆனால் நிலையான ஒரு வாக்கு வங்கி இருக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து 2018 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தற்போது ஒரு இராஜாங்க அமைச்சர்.  அவரும் ரணிலையே ஆதரிக்கிறார். 2020 பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிட்டவர்களில் வெற்றிபெற்ற ஒரேயொருவரான அங்கஜன் இராமநாதனும் ரணிலை ஆதரிக்கிறார். 2020 தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மிகவும் கூடுதலான விருப்புவாக்குகள் அங்கஜனுக்கே கிடைத்தன.

ரணில் முகாமின் நம்பிக்கை

ரணிலுக்கான தமிழ்க்கட்சி ஆதரவு மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் இலங்கை தமிழர்கள் தேர்தல் தினத்தன்று ரணிலுக்கு மிகவும் ஆதரவாக நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை  அவரது முகாமுக்கு இருக்கிறது. தமிழ்க்கட்சிகள் ஆதரவு அளிக்காவிட்டாலும் ரணில் தமிழ் மக்களின் ஆதரவை நேரடியாகப் பெற்று வாக்குகளைப் பெறமுடியும் என்று அந்த முகாம் கருதுகிறது. வடக்கு,  கிழக்கு தமிழர்கள் மத்தியில் ரணிலுக்கு இருக்கிற நேர்மறையான படிமத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது இந்த நகர்வு வெற்றி பெறக்கூடியதாக இருக்கும் எனலாம்.

https://www.virakesari.lk/article/193187

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.