Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கந்தையா அருந்தவபாலன்

இலங்கையில் அரச கட்டமைப்புகளுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு நான்கு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. ஜனாதிபதியையும் பாராளுமன்றம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் போன்றவற்றுக்கான உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்காகவே அத்தேர்தல்கள் இடம்பெறுகின்றன. அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பவை எப்போது நடத்தப்படவேண்டும் என்ற கட்டாய நிபந்தனைகள் காணப்படுகின்ற போதும் ஏனைய இரு தேர்தல்களை நடத்துவதற்கான காலம் அவற்றைப் போல கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்றாகக் காணப்படவில்லை. இதனால் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை ஆட்சியாளர்கள் தமது விருப்பத்துக்கேற்றவாறு கையாளும் நிலைமை காணப்படுகிறது. அதனால்தான் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஆறு ஆண்டுகளுக்கு மேலாகவும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவும் நடத்தப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.

இந்நான்கு தேர்தல்களில் ஜனாதிபதித் தேர்தல் தொகுதிவாரியாக கூடிய வாக்குகளைப் பெறுபவர் ( சில வரையறைகளுடன்) தெரிவு செய்யப்படும் முறையிலும் உள்ளூராட்சி மன்றங்கள் வட்டாரத் தெரிவு மற்றும் விகிதாசார ஒதுக்கீடு என்பவற்றை உள்ளடக்கிய கலப்பு முறையிலும் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகள் முழுக்க முழுக்க விகிதாசார முறையிலும் நடத்தப்படுகின்றன. மாகாண சபைகளுக்கான தேர்தல்களை கலப்பு முறையில் செய்வதற்கும் அதற்கேற்ப தொகுதிகளுக்கான எல்லைகளை வரையறுப்பதற்குமான பிரேரணைகள் நல்லாட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அந்நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கமோ அதன்பின் பதவிக்கு வந்த கோதாபய மற்றும் ரணில் அரசாங்கமோ தொடராது கைவிட்டுவிட்டன. இதனால் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தாமல் இருப்பதற்காகவே அப்பிரேரணைகள் நல்லாட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டன என்ற விமர்சனமும் உள்ளது. அதேபோலவே உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதை விரும்பாத ரணில் அத்தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்காது விட்டார் என்ற விமர்சனமும் உள்ளது.

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கைத் தேர்தல் வரலாற்றில், 1978 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தும் வரை இரண்டு வகையான தேர்தல்களே நடத்தப்பட்டு வந்தன. ஒன்று பாராளுமன்றத் தேர்தல். மற்றது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல். இரண்டு தேர்தல்களிலும் தொகுதி அல்லது வட்டாரத்தில் கூடிய வாக்குகளைப் பெற்று முதலாவதாக வருபவரைத் தெரிவு செய்யும் முறையே பின்பற்றப்பட்டன. 1978 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்புடன் பாராளுமன்றத்துக்கான தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் முழுமையாக விகிதாசார முறைக்கு மாற்றப்பட்டதுடன், 1987 இல் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13 ஆவது திருத்தத்துக்கமைய உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் அவ்வாறே விகிதாசார முறையில் நடத்தப்பட்டன. எனினும் இறுதியாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் கலப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு குறித்த ஒரு மன்றத்துக்கு 60% உறுப்பினர்கள் வட்டாரத்தில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெறுபவர் என்ற முறையிலும் 40% உறுப்பினர்கள் விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இலங்கையில் 1978 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பில் விகிதாசார தேர்தல் முறை உள்ளடக்கப்பட்டதன் பிரதான நோக்கங்கள்;

1. வாக்காளர்களின் ஆதரவு எண்ணிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் அமைய வேண்டுமென்பது. அதாவது அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதத்துக்கு சமனான வகையில் பிரதிநிதித்துவம் அமையவேண்டும். தொகுதியில் முதலாமவர் தெரிவு முறை என்பது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெரும்பாலானோரின் விருப்பமாக அமையாத நிலைமையே காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு தேர்தல் தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை 10, 000 எனவும் அதில் A,B, C என்ற மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டு பெற்ற வாக்குகள் முறையே 4000,3500, 2500 எனக்கொண்டால், இம்முறையின கீழ் 4000 வாக்குகள் பெற்ற ‘A’ என்பவர் மட்டுமே இங்கு தெரிவு செய்யப்படுவர். அதனால் மீதி 6000 வாக்காளருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காது போய்விடுகிறது. இவ்வாறு பத்து தொகுதிகள் உள்ளன என்று கற்பனை செய்து பாருங்கள். 40000 வாக்காளருக்கு 10 பிரதிநிதிகள். ஆனால் 60000 வாக்காளருக்கு ஒரு பிரதிநிதியும் இல்லை. இவ்வாறான குறைபாடு இலங்கையில் 1978 இல் விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்துவதற்கு முன் இருந்து வந்தது. எடுத்துக்காட்டாக 1970 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடு முழுவதும் பெற்ற வாக்குகளின் சதவீதம் 36.9. அக்கட்சி பெற்றுக்கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 96. அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி அதைவிட1% கூடுதலாக, 37.9. சதவீத வாக்குகளைப் பெற்றபோதும் அக்கட்சி 17 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. இன்று இவ்வகையான தேர்தல் முறை உலகில் இந்தியா உட்பட ஒரு சில நாடுகளில் மட்டுமே நடைமுறையிலுள்ளது.

2. சிறுபான்மை மக்களினதும் சிறிய கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்தை உறுதுப்படுத்துதல். தொகுதியடிப்படையில் முதலாவது ஆளைத் தெரிவு செய்யும் முறையில் நாட்டில் பரந்து வாழும் சிறுபான்மை மக்கள் தமக்கான பிரதிநிதியொருவரை பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகும். அதேபோலவே சிறிய கட்சிகளுக்கும் இம்முறையின் கீழ் பிரதிநிதிகள் கிடைப்பது அரிது. ஆனால் விகிதாசார தேர்தல் முறையின்கீழ் மாவட்ட மற்றும் தேசிய அடிப்படையில் இவர்கள் பெறும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேற்காட்டிய நோக்கங்களுக்காகவே விகிதாசார தேர்தல் முறை இலங்கையில் 1978 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு அப்பால் 1970 பொதுத் தேர்தலைப் போலவே முன்னைய எல்லாத் தேர்தல்களிலும் ஐக்கிய தேசிக் கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சியைவிடக் கூடிய சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த போதும் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே பெரும்பான்மை உறுப்பினர்களை பெற்று ஆட்சியமைக்க முடிந்தது. இதனால் விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியே தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைக்கமுடியும் என்று ஜே.ஆர். ஜெயவர்த்தனா எண்ணியே விகிதாசார தேர்தல் முறையைக் கொண்டு வந்தார் என்று அக்காலத்தில் சுட்டிக்காட்டப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறைகளிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட விகிதாசார தேர்தல் முறை கடந்த காலங்களில் புதிய பல சிக்கல்களை அல்லது குறைபாடுகளை எதிர்நோக்கியதை அவதானிக்க முடியும். முக்கியமாக;

1. உண்மையான விகிதாசாரப் பிரதிநிதித்துவம் கிடைக்காத சந்தர்ப்பங்கள் உருவாதல்.

2. வேட்பாளர்களின் பரப்புரைச் செலவுகள் அதிகரிப்புடன் தொடர்புடைய குறைபாடுகள்.

3. விருப்பு வாக்குகளினால் தோன்றும் பிரச்சினைகள்.

4. நிராகரிக்கப்படும் வாக்குகள் அதிகரித்தல்

5. தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவம் தொடர்பான குறைபாடு

6. மக்கள் தமது பிரதிநிதிகள் மூலம் பெறக்கூடிய நன்மைகளின் மட்டுப்பாடு

தொகுதிவாரி முறையிலான தேர்தல் முறையின் முக்கிய குறைபாடாகச் சுட்டிக்காட்டப்படுவது வாக்காளரின் ஆதரவுக்கு ஏற்ப அவர்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் போகிறது என்பது. ஆனால் அதைப் போக்குவதற்காக இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விகிதாசார முறை அக்குறைபாட்டை முழுமையாக போக்குகிறதா என்பது ஐயத்துக்குரியது. இதனை அணமையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.

அளிக்கப்பட்ட வாக்குகள் — 358079

தேசிய மக்கள் சக்தி —80830 — 3 உறுப்பினர்கள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி —63327 — 1 உறுப்பினர்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் —27986 — 1 உறுப்பினர்

சுயேட்சை. —27855 — 1 உறுப்பினர்

மொத்தம் —199998

இந்த புள்ளி விபரங்களிலிருந்து பெறக்கூடிய மூன்று விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. ஒன்று முதலிரு கட்சிகளுக்கிடையில் கிட்டத்தட்ட 17500 வாக்குகளே வித்தியாசம். ஆனால் உறுப்பினர்கள் எண்ணிக்கை வேறுபாடோ இரண்டு. இரண்டாவது கிட்டத்தட்ட 63000 வாக்குகளுக்கும் 28000 வாக்குகளுக்கும் (வித்தியாசம் 45000) ஒவ்வொரு உறுப்பினர் மட்டுமே. மூன்றாவது அளிக்கப்பட்ட வாக்குகளில் கிட்டத்தட்ட 150000 க்கு (358079 – 199998) எந்தப் பிரதிநிதித்துவமும் இல்லை. இங்கு உண்மையான விகிதாசாரம் காணப்படுகிறது எனக் கொள்ளமுடியாது.

மாவட்ட அடிப்படையில் இந்த தேர்தல் முறை அமைவதால் ஒவ்வொரு வேட்பாளருக்குமான பரப்புரைச் செலவுகள் பன்மடங்கு உயர்வாக இருப்பது மட்டுமல்லாமல் அதனைத் திருப்திகரமாகச் செய்யவும் முடிவதில்லை. எடுத்துக்காட்டாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் நெடுந்தீவு தொடக்கம் முளங்காவில் வரையும் தனது பரப்புகளைத் திருப்திகரமாக மேற்கொள்வதென்பது கடினமானது. அதுமட்டுமன்றி சாதாரணமான ஒருவரால் இதற்கான செலவுகளை செய்வதும் கடினமானது. இம்முறை பணம் படைத்தவர்களுக்கே அதிக வாய்ப்பாக உள்ளது. இதன்மூலம் உண்மையான மக்கள் பணியாளர்களைவிட பணக்காரர்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பே அதிகமுள்ளது. அதுமட்டுமல்ல இவ்வாறு வெற்றிபெறும் பலர் அதனை ஒரு முதலீடாகக் கருதி தமது பதவிகளைக் கொண்டு பணத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட முனைவதால் ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் வழிவகுப்பதாகவும் அமைகின்றது. மேலும் இந்நிலைமையை நிதிவழங்குனர்கள் தம்க்குச் சாதகமாகப் பயன்படுத்துவதன் மூலம் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களை தமது அரசியல், பொருளாதார நோக்கங்களுக்காக கையாளும் நிலைமையும் உருவாக்கப்படுவதையும் காணமுடிகிறது. முன்னைய முறையில் ஒரு தொகுதியில் வாழும் மக்களுக்கு தமது பாராளுமன்ற உறுப்பினர் யார் என்பதில் சிக்கல் இருக்கவில்லை. ஆனால் தற்போதைய முறையில் ஒரு தொகுதி மக்கள் தங்களுக்குரிய பிரதிநிதிகள் யார் என்று அறிய முடியாதுள்ளது. அதனால் தமது பிரச்சினைகளுக்கு யாரை அணுகுவது என்பதில் அவர்கள் இடர்பாடுகளையும் எதிர்நோக்குவதைக் காணமுடியும்.

இந்தத் தேர்தல் முறையிலுள்ள இன்னொரு பாதகமான விடயம் விருப்பத் தெரிவு. கட்சிகளுக்கிடையிலான போட்டியைவிட கட்சிக்குள்ளேயேயான குத்துவெட்டுகளுக்கும் குழிபறிப்புகளுக்கும் இது வழிவகுக்கிறது. இது ஒரு கட்சியின் வேட்பாளர்களுக்கிடையில் மட்டுமன்றி அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கிடையேயும் முரண்பாடுகளையும் வெறுப்புகளையும் வளர்க்கின்றது. அது மட்டுமன்றி இந்த முறை நிராகரிக்கப்படும் வாக்குகளின் அளவையும் அதிகரிக்கச் செய்கிறது. இத்தேர்தல் முறையில் வழங்கப்படும் தேசியப்பட்டியல் மூலமான உறுப்பினர் நியமனங்களும் அதன் நோக்கத்துக்கு மாறாகவே பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றன. தேசியப்பட்டியலின் நோக்கம் விகிதாசாரப் பங்கீடு என்பதற்கு மேலாக ஆட்சித்துறைக்கு தேவையான துறைசார் நிபுணர்களை உள்வாங்குவதற்கும் வேறு எந்தவகையிலும் பிரதிநிதித்துவம் பெறமுடியாத தரப்புகளுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கானதாகும். நடைமுறையில் இவை கருத்திற் கொள்ளப்படாது வேறு வேறு நோக்கங்களுக்காகவே கட்சிகளால் கையாளப்படுகின்றன. தேர்தலுக்குமுன் தேசியப்பட்டியலில் பெயர் வழங்கப்பட்டவர்களை விடுத்து பின்னர் வேறு நபர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் இது வாக்காளர்களை ஏமாற்றும் ஒரு தந்திரமாக உள்ளது.

தொகுதிவாரித் தேர்தல் முறையிலுள்ள குறைபாடுகளைக் களைவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறையிலுள்ள விகிதாசார தேர்தல் முறை மேற்காட்டியவாறு வேறுவகையான குறைபாடுகளையும் சிக்கல்களையும் கொண்டிருப்பதன் காரணமாக அம்முறை அறிமுகமான காலத்திலிருந்தே விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இதனைக் கருத்திற் கொண்டு 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கலப்பு முறையை தான் கொண்டுவருவேன் என உறுதியளித்திருந்தார். எனினும் அத்தேர்தல் மூலம் அவர் ஆட்சியதிகாரத்தை பெற்றிருந்தபோதும் அதனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை ஆட்சியின் இறுதிக்காலத்திலேயே முன்னெடுத்திருந்தார். அதன்படி 60% தொகுதிவாரியாகவும் 40% விகிதாசார முறையிலுமான கலப்பு முறை தேர்தலுக்கு அமைச்சரவை அனுமதியை வழங்கியிருந்தது. எனினும் அக்காலத்தில் அரசியல் உறுதியின்மை ஏற்படத் தொடங்கிவிட்டதால் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியில் ஆட்சிக்கலைவுடன் அது கைகூடாமலும் போய்விட்டது.

அனுர தலைமையிலான தற்போதைய புதிய அரசாங்கம் எடுத்துவரும் பல முன்னேற்றகரமான மாற்றங்கள் மக்கள் வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளன. அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பு உட்பட பல மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. மக்களும் அவர்களின் கோரிக்கையை ஏற்று மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிமான உறுப்பினர்களை அவர்களுக்கு வாரி வழங்கியுள்ளனர். அவர்களும் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கொண்டுவரப்படவுள்ள புதிய அவ்வரசியலமைப்பில் விகிதாசார தேர்தல் முறைக்குப் பதிலாக கலப்புத் தேர்தல் முறை அறிமுகப்படுத்துவது அவசியம் என்பதுடன் இக்கலப்பு முறையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் கவனத்திற் கொண்டு அதற்கேற்ற வகையில் உருவாக்கப்படுதலும் அவசியமாகும். அத்துடன் அதில் பெண்களுக்கான பங்கினை உறுதிப்படுத்தல், விருப்புத் தெரிவு முறை அகற்றப்படல், தேசியப்பட்டியல் நியமனங்களை ஏலவே வழங்கப்பட்ட பெயர்களிலிருந்து தெரிதல் போன்ற முக்கிய விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவும் வேண்டும்.

https://thinakkural.lk/article/312558

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் போல கலப்புத் தேர்தல் முறை ஒன்று கட்டாயம் தேவை.
தேசியப்பட்டியலில் கட்டாயம் 25பேர் (மாவட்டத்திற்கு ஒருவர்) பெண்களுக்கு வாய்ப்பும் 9பேர் (மாகாணத்திற்கு ஒருவர்) மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பும் வழங்கப்படவேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.