Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
பாடகர் இசைவாணி

பட மூலாதாரம்,INSTAGRAM: ISAIVANI

படக்குறிப்பு, பாடகி இசைவாணி
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

பாடகி இசைவாணியால் பாடப்பட்ட 'ஐயாம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா' பாடல் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக்கூறி புகார்களை அளித்து வருகின்றன இந்து அமைப்புகள். சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பாக பாடப்பட்ட இந்தப் பாடல் இப்போது சர்ச்சையாவது ஏன்?

பாடகி இசைவாணியால் பாடப்பட்டு, தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவால் உருவாக்கப்பட்ட 'ஐ யாம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா' என்ற பாடல் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் இந்தப் பாடலை உருவாக்கி, பாடியவர்களைக் கைதுசெய்ய வேண்டுமெனவும் தமிழ்நாட்டில் பல காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்தப் பாடல், பெண்கள் உரிமை தொடர்பான கருத்துகளை மையமாகக் கொண்டிருந்தது.

 

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட இந்தப் பாடல், ஒரு வாரத்திற்கு முன்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.

இந்தப் பாடல் ஐயப்பனுக்கு எதிரான பாடல் என்றும் அந்தப் பாடல் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் சிலர் கண்டனம் தெரிவித்தனர். இதற்குப் பிறகு, சில பிரபல யூ டியூபர்களும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, இசைவாணியைக் கைதுசெய்ய வேண்டுமெனக் கோரினர்.

 
திரைப்பட இயக்குநர் மோகன். ஜி.

பட மூலாதாரம்,X : MOHAN G KSHATRIYAN

திரைப்பட இயக்குநர் மோகன். ஜி. இசைவாணியைக் கைதுசெய்ய வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

ஐயப்ப பக்தர்கள் உணர்வை காயப்படுத்தியதாக இயக்குநர் பா.ரஞ்சித், பாடகி இசைவாணி ஆகியோர் மீது உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. சென்னையிலும் ஒரு சிலர் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையில், தமிழ்நாடு பா.ஜ.கவின் மூத்த தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன், இசைவாணியைக் கைதுசெய்ய வேண்டுமெனக் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "ஐயப்பனைப் பற்றி மிக மோசமான கருத்துகளைக் கொண்ட பாடலை இசைவாணி பாடியிருக்கிறார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.கவைப் பொறுத்தவரை அவர்களுக்கு எதிராக ஒரு கருத்தைப் பதிவுசெய்தால், உடனே கைதுசெய்கிறார்கள். இந்து மதத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தால் கொண்டாடுகிறார்கள். உடனடியாக இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அனைவரின் மனதையும் புண்படுத்துவதாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

பாடகர் இசைவாணி

பட மூலாதாரம்,INSTAGRAM: ISAIVANI

படக்குறிப்பு, தனக்கு ஆபாச செய்திகளை அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளார் இசைவாணி

புகார் அளித்த இசைவாணி

இந்தப் பாடல் தொடர்பான சர்ச்சை கடந்த வாரம் உருவானதிலிருந்தே, இசைவாணிக்கு அவரது மொபைல் போன் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் ஆபாச செய்திகளும் படங்களும் அனுப்பப்பட்டதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தனக்குப் பாதுகாப்புக் கோரி மனு அளித்திருப்பதோடு, தனக்கு ஆபாச செய்திகளை அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகார் அளித்துள்ளார் இசைவாணி.

இந்நிலையில் இந்தப் பாடல் உருவான பின்னணி குறித்து, நீலம் பண்பாட்டு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

"2018-ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள சபரிமலைக்குப் பெண்கள் செல்வது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாலினப் பாகுபாட்டை முன்வைத்து பெண்களுக்கு உரிமை மறுக்கப்படக்கூடாது என்று தீர்ப்பளித்தது. அதை ஆதாரமாகக் கொண்டு மிகப் பெரிய விவாதமும் நடந்தது. இதே காலகட்டத்தில்தான் நீலம் பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பில் The Casteless Collective என்ற இசைக்குழு உருவானது. சமூகப் படிநிலையில் நிலவும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, சமூக உரிமைகளைக் கோரும் பாடல் வரிகளோடு The Casteless Collective பல்வேறு பாடல்களை உருவாக்கியது.'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
நீலம் பண்பாட்டு மையம்

பட மூலாதாரம்,INSTAGRAM :NEELAM

படக்குறிப்பு, இந்தப் பாடல் உருவான பின்னணி குறித்து, நீலம் பண்பாட்டு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், ''I am Sorry Iyyappa' என்ற பாடலும் ஆண்டாண்டு காலமாக இங்கு பேசப்பட்டுவரும் கோவில் நுழைவு உரிமையைக் கோருகிற வரிகளோடு துவங்கி பின் பெண்களின் உரிமைகளைப் பறிக்கும், பொதுவான உரிமைகளைக் கோரும் பாடலாக அமையப்பெற்றது. இந்தப் பாடலைப் பாடியது இசைவாணி. எழுதி இசையமைத்தது The Casteless Collective''என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டு, இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடப்பட்ட பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டு கடந்த ஒரு வார காலமாக சமூக வலைதளங்களில் ஒரு குழு அவதூறு பரப்பி வருகிறது என்கிறது நீலம் பண்பாட்டு மையத்தின் அறிக்கை.

அந்த அறிக்கையில் மேலும் ''அடிப்படையில் அது ஐயப்பன் சம்பந்தப்பட்ட பாடலே அல்ல. பெண்களின் பல்வேறு உரிமைகளைக் கோரும் வரிகளில், கோவில் நுழைவைக் கோரும் வரிகளும் இருந்தன. இந்த முழு உண்மையை மறைத்து, மொத்தப் பாடலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிராக இருக்கிறது என சமூகவலைதளத்தில் பொய் செய்தியைப் பரப்ப நினைப்பதன் மூலம் சமூகப் பதற்றத்தை உருவாக்கிவிட முடியுமென நினைக்கிறது ஒரு கூட்டம்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

 
பாடகர் இசைவாணி

பட மூலாதாரம்,INSTAGRAM: ISAIVANI

படக்குறிப்பு, பாடகி இசைவாணி, இது தொடர்பாக யாரிடமும் பேச விரும்பவில்லையென அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

''பாடகி இசைவாணியை கடந்த ஒரு வாரகாலமாக ஆபாசமாக சித்தரித்தும் தொலைபேசியில் மிரட்டியும் சமூக வலைதளங்களில் அவதூறுகளைப் பரப்பியும் வருகின்றனர். ஒரு கலைஞர் மீது வைக்கப்படும் குறி என்பது தனிநபர் சம்பந்தப்பட்டது கிடையாது. அந்த மிரட்டல் இனி உருவாகிவரும் கலைஞர்களுக்கும் சேர்த்தே என்பதுதான் இதில் உள்ள பேராபத்து" என நீலம் பண்பாட்டு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாடகி இசைவாணி, இது தொடர்பாக யாரிடமும் பேச விரும்பவில்லையென அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். அவரது போனும் 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒரு பாட்டு, இப்போது திட்டமிட்டு சர்ச்சையாக்கப்படுகிறது என்கிறார் நீலம் பதிப்பகத்தின் எடிட்டரான வாசுகி பாஸ்கர்.

"அந்தப் பாடல் ஒரு கூட்டு முயற்சி. தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவைப் பொறுத்தவரை, ஒரு பாடலை யார் எழுதி, யார் பாடினாலும் அதைக் கூட்டு முயற்சியாகத்தான் கருதுவோம். இசைவாணி அந்தப் பாடலை பாட மட்டுமே செய்தார். ஆனால், இப்போது இந்தப் பாடல் தொடர்பாக அவரை மட்டுமே குறிவைக்கிறார்கள்.

சபரிமலை கோவிலுக்கு பெண்களை நுழைய அனுமதிப்பது தொடர்பாக தீர்ப்பு வந்தபோது, அந்தத் தீர்ப்பை மையமாக வைத்து, பெண்களுக்கு சமூகத்தில் உள்ள பிரச்னைகளைப் பேசும்விதமாக அந்தப் பாடல் உருவாக்கப்பட்டது'' என்கிறார் வாசுகி பாஸ்கர்.

இப்போது பல ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் சபரிமலை சீஸனாகப் பார்த்து, அந்தப் பாட்டை வைத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என குற்றஞ்சாட்டுகிறார் அவர்.

மேலும், ''அவர் எங்கோ பாடிய ஒரு கிறிஸ்தவப் பாடலை எடுத்துப் போட்டு, அவர் ஒரு கிறிஸ்தவர் என்றும் இந்து மதத்தைப் பற்றித் தவறாகப் பாடுகிறார் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆகவே, இந்தப் பிரச்னையை ஏற்படுத்துபவர்களுக்கு ஒரு மதப் பதற்றத்தை உருவாக்கும் நோக்கம் இருக்கிறது ''என கூறுகிறார் வாசுகி பாஸ்கர்.

 
வாசுகி பாஸ்கர்
படக்குறிப்பு, வாசுகி பாஸ்கர்

''இந்து அமைப்புகள், ஏதாவது ஒரு விஷயத்தில் பின்னடைவைச் சந்திக்கும்போது அவர்கள் தரப்பை நிரூபிக்க அல்லது பழிதீர்க்க இதுபோலச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இப்போதும் அதையே செய்கிறார்கள்" என்கிறார் வாசுகி பாஸ்கர்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இசைவாணி, தன் தந்தையின் மூலமாக இசையைக் கற்றுக்கொண்டு பாட ஆரம்பித்தவர்.

2017-ஆம் ஆண்டில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் முயற்சியில், இசைக் கலைஞர் டென்மா உள்ளிட்டோரால் உருவாக்கப்பட்ட தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்வில் இசைவாணி இணைந்தார். தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவின் பல்வேறு மேடைகளில் பங்கேற்றார்.

பிபிசியின் உலகெங்கிலும் நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கக்கூடிய '100 பெண்கள் 2020'-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இசைவாணியின் பெயரும் இடம்பெற்றது. 2021-ஆம் ஆண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீஸனில் இசைவாணி பங்கேற்று, 49வது நாளில் வெளியேறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.