Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
தீப்பெட்டி தொழிற்சாலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டில் பட்டாசு தொழிற்சாலைகள் போல, தீப்பெட்டி தொழிற்சாலைகளும் தென் தமிழகத்தின் சில இடங்களில் இயங்கி வருகின்றன.

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய லைட்டர்களின் விற்பனையால் தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்திருந்தது. இதனால் தீப்பெட்டி தொழிலை நம்பி இயங்கி வந்த பல ஆலைகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாக அந்த ஆலைகளின் உரிமையாளர்கள் கூறிவந்த நிலையில், லைட்டர்களுக்கான உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது.

இதனால் விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி உற்பத்தி மீண்டும் புத்துயிர் பெற்று இந்தியா முழுவதும் தீப்பெட்டிகள் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் அதை நம்பியுள்ள தொழிலாளர்களின் தற்போதைய நிலை என்ன?

விருதுநகர் மாவட்டத்திற்கு தீப்பெட்டி தொழிற்சாலை வந்த கதை

இந்தியாவிலேயே கொல்கத்தாவில் 1910-ஆம் ஆண்டு முதன் முதலாக தீப்பெட்டி தொழிற்சாலை தொடங்கப்பட்டது. அங்கிருந்து சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு தீப்பெட்டி தொழில் நுழைந்த வரலாற்றை, நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம் பின்வருமாறு விவரித்தார்.

“தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் வானம் பார்த்த பூமி என்பதால் வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே விவசாயம் சார்ந்த பணிகள் கிடைத்த நிலையில், எஞ்சிய நாட்களில் மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்தனர்"

"மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 1916ல், சிவகாசி பகுதியை சேர்ந்த அய்ய நாடார் மற்றும் சண்முக நாடார் இருவரும், புதிய தொழில் ஒன்றை கற்றுக் கொள்வதற்காக, கொல்கத்தாவுக்கு சென்றனர்.”

“அங்கு பெருவாரியாக நடைபெற்று வந்த தீக்குச்சி மற்றும் தீப்பெட்டிகள் தயாரிக்கும் தொழிலைப் பார்த்தனர். அதில் ஆர்வம் ஏற்பட்டு, அங்கேயே சில ஆண்டுகள் தங்கி, தீப்பெட்டி தொழிலை கற்றுத் தேர்ந்தனர்.” என்கிறார் பரமசிவம்.

“கொல்கத்தாவிலிருந்து சிவகாசிக்கு திரும்பிய இருவரும், 1923ல், தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்தனர். சிவகாசியின் முதல் தீப்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான, 'நேஷனல் தீப்பெட்டி' 1923ல் ஆரம்பிக்கப்பட்டது. சிவகாசியில் தயாரான தீப்பெட்டிகள், தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், நல்ல வரவேற்பை பெற்றது.” என்று கூறினார் பரமசிவம்.

சிவகாசியில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலை, குடிசைத் தொழிலாக உருவாகி, சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகள், சாத்தூர், கோவில்பட்டி, குடியாத்தம் வரை விரிவடைந்தது. இன்று, தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூலம், லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக லைட்டர் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து வந்த நிலையில், 20 ரூபாய்க்குக் குறைவான பிளாஸ்டிக் லைட்டர்களுக்குக் கடந்த ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது.

இந்தநிலையில் லைட்டர்களின் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கும் அக்டோபர் மாதம் மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டதால் விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி தொழில் மீண்டும் புத்துயிர் பெறும் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

 
தீப்பெட்டி ஆலைகள், சீன லைட்டர்கள், மத்திய அரசு, தொழில்துறை, தமிழ்நாடு
படக்குறிப்பு, சந்தையில் சீன லைட்டர் விற்பனைக்கு வந்த பிறகு தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டது என்கிறார் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் செல்வி

‘பெண்கள் வாழ்வு புத்துயிர் பெறும்’

“வானம் பார்த்த பூமியில் தீப்பெட்டி தொழிலை விட்டால் வேறு தொழில் தெரியாது” என்கிறார் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் செல்வி.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், “தீப்பெட்டி தொழிற்சாலையில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தினமும் ரூ.375 சம்பளத்திற்கு என்னை போன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் பல ஆண்டுகளாக தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர்.”

சந்தையில் சீன லைட்டர் விற்பனைக்கு வந்த பிறகு தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டது என்றார் அவர்.

“தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் பலர் தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்த முடியாமல், அவற்றை மூடிவிட்டு மாற்று தொழில் தேடி செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையை நம்பி சுமார் 25 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்'' என்கிறார் அவர்

தீப்பெட்டி ஆலைகள், சீன லைட்டர்கள், மத்திய அரசு, தொழில்துறை, தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய லைட்டர்களின் விற்பனையால் தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்தது

மத்திய அரசு தடை ஏன்?

லைட்டர் உதிரி பாகங்கள் இறக்குமதி தடைக்கு பின் 20 நாட்களில் இந்தியா முழுவதும் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி ஆர்டர் கிடைத்துள்ளதாக கூறுகிறார் நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம்.

இது குறித்து பேசிய அவர், ”கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, 2022-ஆம் ஆண்டில், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய சீன லைட்டர்களை பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் 40 சதவீதம் தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டது.” என்றார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நேரில் சந்தித்து, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் சீன லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை கோரியுள்ளனர்.

இந்தநிலையில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய, 20 ரூபாய்க்குக் குறைவான பிளாஸ்டிக் லைட்டர்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இருப்பினும், சீன லைட்டர்களின் உதிரி பாகங்கள் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டு லைட்டர்கள் தயாரிப்படுவதாக குற்றஞ்சாட்டிய தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் இது தொடர்பாக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து மனு அளித்தனர்.

சீன லைட்டர்கள் விற்பனை செய்யப்படுவதால் சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி, வேலூர் குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாகவும், மறைமுகமாவும் எட்டு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்

கடந்த அக்டோபர் மாதம் லைட்டர்களுக்கான உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.

 
தீப்பெட்டி ஆலைகள், சீன லைட்டர்கள், மத்திய அரசு, தொழில்துறை, தமிழ்நாடு
படக்குறிப்பு, லைட்டர்கள் குறித்த அரசின் உத்தரவுக்கு பிறகு ரூ.100 கோடி ரூபாய்க்கு ஆர்டர் கிடைத்துள்ளது

"சீன லைட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் தீப்பெட்டிகளுக்கு மீண்டும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன. எனினும் சீன லைட்டர்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்க இந்தியாவுக்குள் சீன நிறுவனம் வர வாய்ப்புள்ளதால் ஒரு முறை பயன்படுத்தும் சீன லைட்டர்கள் விற்பனை செய்ய தமிழகத்தில் முழுமையாக தடை விதிக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

தீக்குச்சிகள் எந்த மரத்தில் இருந்து கிடைக்கிறது?

தீப்பெட்டி ஆலைகள், சீன லைட்டர்கள், மத்திய அரசு, தொழில்துறை, தமிழ்நாடு

தொடர்ந்து பேசிய, நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம், “தீப்பெட்டியில் உள்ள தீக்குச்சிகள் தயாரிக்க மரக் குச்சிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த குச்சிகள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து சிவகாசி, கோவில்பட்டி பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது. தீக்குச்சிகள் மட்டி மரம், அல்பிஸியா, பெரு மரம் உள்ளிட்ட மூன்று வகையான மரங்களில் இருந்து கிடைக்கின்றன.” என்றார்.

இந்த மரங்கள் ஐந்து வருடங்கள் மட்டுமே வளரக்கூடிய மரங்கள், இவை முதிர்ச்சி அடைந்தால் அழிக்கப்படும் என்று கூறிய அவர், “கர்நாடகா மாநிலத்தில் காபி தோட்டத்தில் ஊடு பயிராக இந்த மரங்கள் பயிரிடப்படுகிறது. இவ்வகையான மரங்கள் அழியும் தருவாயில் இல்லை என்பதால் வனத்துறையினர் இந்த வகை மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்ததில்லை. தீக்குச்சிகள் கிடைப்பதற்கு எந்த சிக்கலும் இதுவரை ஏற்பட்டதில்லை.” என்கிறார்.

“அதேபோல் தீப்பெட்டியில் 20 சதவீதம் மெழுகு குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பேப்பர் மற்றும் மெழுகு தேவைப்படும். அதுவும் போதுமானளவு கிடைக்கிறது. இந்த மெழுகு தீப்பெட்டிகள் அளவில் சிறிய அளவாக இருப்பதால் பெருநகரங்களான கோவை, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் மெழுகு குச்சி தீப்பெட்டிகள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன” என்கிறார் எம்.பரமசிவம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.