Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஜனாதிபதியின் உரை : கொட்டை நீக்கப்பட்ட கோது……..!

November 27, 2024   — அழகு குணசீலன் —
spacer.png

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வை ஆரம்பித்து வைத்து கொள்கை விளக்க பிரசங்கத்தை செய்திருக்கிறார். இலங்கையின் இன்றைய நிலையில் என்.பி.பி.என்ற போர்வையில், ஜே.வி.பி யின் முழுமையான கட்சி கட்டுப்பாட்டு  ஆட்சி அவரது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த ஆட்சியில்  சிறுபான்மை தேசிய இனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கான அதிகாரப்பகிர்வு, மற்றும் பொருளாதார மந்தம் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கான பொருளாதாரதீர்வு திட்டங்கள் குறித்து கனத்த எதிர்பார்ப்பு தேசிய, பிராந்திய, சர்வதேச மட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அநுரவின் கொள்கை விளக்க சிம்மாசன பிரசங்கமானது “உள்ளடக்கத்தை” தேடவேண்டிய வழமையான அரசியல் பிரசங்கமாகவே அமைந்திருக்கிறது.

ஜனாதிபதி தனது உரையில் “அதைச் செய்ய வேண்டும், இதைச்செய்யவேண்டும் ” என்று பொருளாதார மேம்பாடு குறித்து பேசினார். ஆனால் திட்ட வட்டமான கொள்கை வெளிப்பாடுகள் எதையும் அங்கு காணமுடியவில்லை. ஆகக்குறைந்தது  சமகால பிராந்திய, சர்வதேச பூகோள அரசியலில் இலங்கையின் முன்னுரிமை தேவைகளை முதன்மைப் படுத்தி, மரபு ரீதியான முதலாளித்துவ , சோஷலிச கோட்பாட்டு வரையறைகளை கடந்து “மாற்று” கொள்கை அடிப்படையில் செயற்படத் தயார் என்பதையும் கூட வெளிப்படையாக அடித்துச் சொல்லவும் இல்லை, அல்லது  மரபுவழி சோஷலிச கோட்பாடு சார்ந்த ஆட்சியை அமுல் செய்வோம் என்றும் கூறவில்லை.  கோட்பாட்டு அரசியலில் மெதுவாக  மார்க்கம் ஒன்றை தேர்வு செய்யாத நழுவல்போக்கு மௌனம் அவரால்  கைக்கொள்ளப்பட்டுள்ளது . இது பூகோள அரசியல் தந்திரோபாய “தப்பித்தல்” என்று விட்டுவிடலாம்.

மறுபக்கத்தில்  இலங்கையின் எரியும் பிரச்சினையாக உள்ள இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்ன? அதை எவ்வாறு அவர் அடையப்போகிறார் என்பது பற்றியும் எந்த கருத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை. இந்த நாட்டை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் சீர்குலைத்த போருக்கு காரணமான சிறுபான்மை தேசிய இனப்பிரச்சினை ஒன்று இருக்கிறது என்பதை  தனது உரையின் எந்த இடத்திலும் அவர் கோடிட்டுக் காட்டா விட்டாலும் சாடை, மாடையாகவும் பேசவில்லை. மாறாக “இந்த நாட்டில் இனி இனவாதத்திற்கு இடமில்லை”  என்ற வார்த்தைகளை  ஒன்றுக்கு பல தடவைகள்  அவர்  பேசியுள்ளார். “இனவாதம்” என்ற வார்த்தை அந்த உரையில்  மீள மீள  உச்சரிக்கப்படுகிறது . இந்த “வார்த்தைக் கொழுக்கட்டை க்குள்” அவர் மறைத்து வைத்துள்ள உள்ளடக்கம் என்ன?

“இனவாதத்திற்கு இனி இடமில்லை” என்றால் அதை அவர் எப்படி இல்லாமல் செய்யப் போகிறார். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்காமல்  அதை எப்படி இல்லாமல் செய்ய முடியும்?என்.பி.பி.க்கு  சிறுபான்மை தேசிய இனங்கள் வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் வழங்கிய ஆதரவை புரிந்து கொண்டுள்ள விதம் அந்த மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு முரண்பட்டதாகவே தெரிகிறது. ஜே.வி.பி.யின்  முக்கிய புள்ளிகளான  கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, விஜயகேரத் போன்றோர் வெளியிட்ட கருத்துக்களையே ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் மறைமுகமாகப் பேசுகிறது. அநுரகுமார திசாநாயக்க ஒரு ஜனாதிபதி வேட்பாளராக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதியாக  அதிகார பூர்வமாக ஆணித்தரமாக மீள் அறிவிப்பு செய்யவேண்டிய தார்மீக கடமையை அவர் இனப்பிரச்சினைக்கான தீர்வில் காட்டவில்லை.

இதன் மூலம்  “இனப்பிரச்சினைக்கான தீர்வு”  என்பதை தவிர்த்து “இனவாதம்” பற்றி பேசுகிறார் அவர். சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமை கோரிக்கையை/போராட்டத்தை “இனவாதம்” என்று முத்திரை குத்தும்  இதுவரை யான சிங்கள பௌத்த பேரினவாத அரசியலில் இருந்து இது வேறுபட்டதல்ல.  இதை கடந்த கால அரசியல் வரலாற்றில் ஜே.வி.பி. செய்யவில்லை என்பதும் அல்ல. அவரது கட்சிக்குள்ளே அது ஒழிக்கப்பட்டு விட்டது என்று நம்புவதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை  கிடைக்கவில்லை.  

“இனவாதத்திற்கு இனி இடமில்லை” என்ற கனவு காணுதலை “இனப்பிரச்சினைக்கான தீர்வு” இன்றி எப்படி இல்லாமல் செய்யமுடியும். ? “இலங்கையர்” என்ற கோஷத்தை எவ்வாறு நடைமுறைச்சாத்தியமான, ஜதார்த்தமான கொள்கையாக்க முடியும்? என்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கான பதிலை ஜனாதிபதியின் உரை கொண்டிருக்காதது பெரும் ஏமாற்றமாக அமைகிறது. தேர்தல் காலத்தில் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி விட்டு அந்த எதிர்பார்ப்புக்களை அடைவதற்கான திசையை அதிகாரத்திற்கு வந்த பின் காட்டாது விட்டால் ஏமாற்றம் அதிகமாக இருப்பது தவிர்க்க முடியாதது. இந்த விடயத்தில் மாற்றம் அல்ல வழமையே தெரிகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் தொடர்பான பல சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் பொறுப்பானவர்களால் அளிக்கப்பட்ட பதில்கள் “உரிமை” என்ற வார்த்தையை தவிர்த்து அளிக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. பன்மைத்துவ சமூக, பொருளாதார, அரசியல், புவியியல் கட்டமைப்பில் இன,மத விகிதாசாரமும்,  சமத்துவமான கலாச்சார, பண்பாட்டு பேணலும் அடிப்படையானவை. இவற்றிற்கு ” நாங்கள்” இனவாரியாக, மொழி,மதவாரியாக செயற்படவில்லை என்று கூறுவது இருபத்தியோராம் நூற்றாண்டில் “சுதேசிய பெரும்பான்மை காலனித்துவ” அணுகுமுறையன்றி வேறில்லை. இதனால்தான் அமைச்சரவை, பிரதி அமைச்சர்கள், அமைச்சு செயலாளர்கள் நியமனத்தில் அரசாங்கம் கடும் விமர்சனங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. இது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு , எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திவிட்டு அவற்றை நிறைவேற்றாமல் சறுக்கியதன் விளைவு. 

பன்மைத்துவ இலங்கை தேசியத்தில் இன,மத விகிதாச்சாரம் பேணப்படாமல் இனரீதியான, பிரதேச ரீதியான அரசியல் அங்கீகாரம் மறுக்கப்பட்டாமல் இனவாதத்தை எப்படி இல்லாமல் செய்யமுடியும்? பெரும்பான்மை, சிறுபான்மை தேசிய இனங்களுக்கு இடையே ஒரு சமத்துவமான உளவியல் சார்ந்த “நாங்களும் அவர்களுக்கு நிகரானவர்கள், அவர்களும் எங்களுக்கு நிகரானவர்கள்”  என்ற மனநிலையை எப்படி ஏற்படுத்தமுடியும். இனரீதியான நியமனம் இல்லை என்பது உண்மையில் உரிமை மறுப்பு. தருவதை எடுத்துக்கொள்ளுங்கள் என்ற பெரும்பான்மை அழுத்தம். இன விகிதாசார நியமனங்கள் இல்லை என்றால்  பெரும்பான்மை முற்றுமுழுதாக நூறுவீத நியமனங்களையும் அல்லது சிறுபான்மைக்கு உரிய விகிதாசாரத்தையும் விடவும் குறைவாக வழங்கிவிட்டு , மிகுதி சிறுபான்மையினர் பங்கையும் பெரும்பான்மை அபகரித்து கொண்டால் இங்கு பேசப்படும் “இனரீதியாக அல்ல” என்பது சமூக அநீதியன்றி வேறென்ன? இது சமூக நீதிக்கு மாறான ஒரு அதிகார பங்கீட்டு முறைமை.

இந்த அணுகுமுறை சோஷலிசம் பேசி சிறுபான்மை தேசிய இனங்களை நசுக்குகின்ற ரஷ்ய,சீன அடக்குமுறை மாதிரி. முதலாளித்துவ மேற்குல நாடுகளில் வாழும் பன்மைத்துவ சிறுபான்மை தேசிய இனங்களும், குடியேறிகளும் ரஷ்யா, சீனாவை விடவும் ஒப்பீட்டளவில் அதிக அடிப்படை ஜனநாயக உரிமைகளை அனுபவிக்கிறார்கள். பொருளாதாரத்தை மட்டும் முதன்மைப்படுத்தி, மனித உரிமைகளை மறுதலிப்பது சமூகநலன் சார்ந்த அரசியலாக இருக்க முடியாது. சலுகைகளிலும், மேலெழுந்தவாரியான சீர்திருத்த செயற்பாடுகளிலும் இருந்து சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமை அரசியல் முற்றிலும் வேறுபட்டது என்பதை அநுர அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

அபிவிருத்தியை அதிகாரப்பகிர்வுக்கு அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு பதிலீடாக முன் வைக்கின்ற வழக்கமான போக்கே அநுரகுமார குமார அன் கோ அரசியலிலும் வெளிப்படுகிறது. இது பன்மைத்துவ சிறுபான்மை தேசிய இனங்களின் பிரச்சினைகளை அணுகுவதற்கான சரியான, பொருத்தமான அணுகுமுறையல்ல. அபிவிருத்தி, அரசியல் தீர்வு என்பவை ஒன்றிற்கு ஒன்று பதிலீடு அல்ல. மாறாக ஒன்றுக்கு ஒன்று நிரப்பிகள். ஒன்றுக்கு ஒன்று ஆதாரமாக இருக்கவேண்டியவை. இணைந்தும், சமாந்தரமாகவும் பயணிக்கவேண்டியவை. 

மாகாணசபைகளை  தற்காலிகமாக தொடர்ந்து பேணுவோம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் , நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற தேர்தல் வாக்குறுதிகளை ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் குறிப்பிடுவார் என்று எதிர்பார்த்த மக்களுக்கும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கும், பிராந்தியத்திற்கும், சர்வதேசத்திற்கும் ஜனாதிபதி  “கொட்டை நீக்கப்பட்ட வெறும் கோதுகளையே ” விட்டுச் சென்றிருக்கிறார்.

 

https://arangamnews.com/?p=11483

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.