Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.சுபகுணம்
  • பதவி, பிபிசி தமிழ்

சென்னை அருகே எண்ணூரை அடுத்துள்ள காட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோகுல், அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர். வழக்கறிஞர் ஆக வேண்டுமென்று கனவு காண்கிறார் அவர்.

"நான் வழக்கறிஞர் ஆகி எங்கள் ஊரில் எண்ணூர் அனல்மின் நிலையம் போன்ற தொழிற்சாலைகளால் ஏற்படும் பிரச்னைகளை வரவிடாமல் தடுப்பேன். எங்கள் ஊருக்காகப் போராடுவேன்," என்று கூறுகிறார் கோகுல்.

எண்ணூரில் கடந்த 2017ஆம் ஆண்டு முழு ஆயுட்காலத்தை எட்டியதால் மூடப்பட்ட 450 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தை, 660 மெகாவாட் திறன் கொண்ட வகையில் விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முன்மொழிந்துள்ளது.

இந்தத் திட்டம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "மக்கள் கருத்துகளின் அடிப்படையிலேயே திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும்," என்று தெரிவித்தார்.

 

இந்தத் திட்டத்திற்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் டிசம்பர் 20ஆம் தேதியன்று நடக்கவிருக்கிறது. இதையொட்டி, வட சென்னையில் இந்தத் திட்டம் குறித்த விவாதங்கள் பல்வேறு பகுதிகளில் பரவலாக நடந்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக டிசம்பர் 15ஆம் தேதி காட்டுக்குப்பம் கிராமத்தில் நடந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட பள்ளி மாணவர்கள், 'இதயத்தால் யோசித்து எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை ரத்து செய்யுங்கள், ஸ்டாலின் தாத்தா' என்று தங்கள் ஓவியங்களின் வாயிலாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

எண்ணூர் குழந்தைகளின் ஏக்கம்

மீனவ சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதியாக முன்பு இருந்த பகுதி, கடந்த 50 ஆண்டுகளில் தொழிற்சாலைகளின் மையமாக மாறிவிட்டது.

"இது எங்களுக்கு நல்லது செய்ததைவிட, பிரச்னைகளையும் நோய்களையும் கொண்டு வந்ததே அதிகம். அப்படியிருக்கும் சூழலில் நாங்கள் மீண்டும் இன்னொரு அபாயத்தை இங்கு அனுமதிக்க மாட்டோம்," என்கிறார் காட்டுக்குப்பம் கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் பிரகாஷ்.

பெரியவர்கள் மட்டுமில்லை, எண்ணூரின் சூழல் குறித்து வருங்காலத் தலைமுறை மனதிலும் கவலை இருப்பது தெரிகிறது.

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம்

"நாங்கள் விளையாடும் போது, மண்ணில் ஒருவித நாற்றம் வீசும். ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெந்நீர் கலப்பது, கழிவு வாடை வீசுவது என்றிருக்கும் என்பதால், எங்கள் வீட்டில் அங்கெல்லாம் அனுப்பவே மாட்டார்கள்," என்று கூறுகிறார் கோகுல்.

கோகுலுக்கு எண்ணூர் அனல்மின் நிலையம் குறித்து எதுவும் தெரியவில்லை. ஆனால், ஒருவேளை அது அமல்படுத்தப்பட்டால் "தாங்கள் ஏற்கெனவே எதிர்கொள்ளும் மாசுபாடுகள் தீவிரமடையும் என்றால் தயவுசெய்து அதை அனுமதிக்காதீர்கள்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார்.

கோகுல் மட்டுமல்ல, எண்ணூரில் நான் சந்தித்த சிறுவர், சிறுமியர் பலரிடத்திலும், அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் குறித்து நடக்கும் விவாதங்களின் தாக்கத்தைக் காண முடிந்தது.

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம்
படக்குறிப்பு, காட்டுக்குப்பம் கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் பிரகாஷ்

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

சுமார் 40 ஆண்டுகள் எண்ணூர் எர்ணாவூர் பகுதியில் இயங்கி வந்த 450 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் கடந்த 2017-ஆம் ஆண்டில் முழு ஆயுள் காலத்தை எட்டியதால் செயல்பாட்டை நிறுத்தியது.

அதை 660 மெகாவாட் திறன் கொண்ட வகையில் விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் திட்டமிட்டுள்ளது.

அதற்கான மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம், டிசம்பர் 20ஆம் தேதியன்று எண்ணூரில் நடக்கவிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு எண்ணூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எண்ணூரைச் சேர்ந்த வனிதா, மூச்சுவிட முடியாமல் தமது மூன்று குழந்தைகளும் ஏற்கெனவே திணறிக் கொண்டிருப்பதாகவும், மீண்டும் அனல்மின் நிலையம் வந்தால் "இதை வாழவே தகுதியற்ற பகுதி என அறிவித்துவிட வேண்டியதுதான்" என்றும் காட்டமாகப் பதிலளித்தார்.

வனிதாவுக்கு 10 வயதுக்கு உட்பட்ட மூன்று குழந்தைகள் உள்ளனர். "நான் என் குழந்தைகளை தெருக்களிலோ, ஆற்றங்கரையிலோ விளையாட அனுமதிப்பதே இல்லை. ஆற்றுக்கு மீன்பிடிக்கச் சென்று வரும் என் கணவரின் கால்களின் படிந்திருக்கும் சாம்பல் கழிவு எவ்வளவு கழுவினாலும் போகாது. அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியான புகையால் மூக்கு எரிச்சல் தாங்க முடியாது.

அங்கிருந்து புகை வெளியாகும் போதெல்லாம், வீட்டின் கதவு, ஜன்னல் என அனைத்தையும் பூட்டிவிட்டு வீட்டிற்குள் இருந்துவிடுவோம். இப்படிப்பட்ட சூழலில் வாழும் நாங்கள் எப்படி இதே விளைவுகளை இன்னும் கூடுதலாக அளிக்க வல்ல மற்றுமொரு திட்டத்தை அனுமதிப்போம்," என்கிறார் வனிதா.

குழந்தைகள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்னைகள்

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம்
படக்குறிப்பு, எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 'இதயத்தால் யோசிக்குமாறு' முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கும் எண்ணூர் மாணவர்கள்

கடந்த 13ஆம் தேதியன்று, இந்தியன் அகாடெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் என்ற குழந்தைநல மருத்துவர்கள் கூட்டமைப்பின் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் குழந்தைநலம் என்ற பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனல்மின் நிலைய திட்டங்களுக்கான வல்லுநர் குழுவுக்கும் ஒரு கடிதம் எழுதினர்.

அந்தக் கடிதத்தின்படி, தீவிர காற்று மாசுபாட்டால் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, மாசுபாடுகளின் மையமாகத் திகழும் பகுதிகளில் வாழும் குழந்தைகள் இதன் விளைவுகளை அதிகம் எதிர்கொள்கின்றனர்.

மேலும், "எண்ணூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால் காற்று ஏற்கெனவே அதிக அளவில் மாசுபட்டுள்ளது. தற்போது அனல் மின் நிலையத்தை விரிவாக்கினால் காற்று மாசுபாட்டை அது மேலும் தீவிரப்படுத்தும். ஆகவே, எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது" என்று அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம்

மின்சாரத் தேவை என்பது தவிர்க்க முடியாதது என்றாலும், அதன் உற்பத்தி வழிமுறைகளை, காற்று, சூரிய மின்சாரம் போன்ற பாதுகாப்பான அணுகுமுறைகளில் உற்பத்தி செய்வதே காலநிலை நெருக்கடியின் விளைவுகளைக் குறைக்க உதவும் என்று வலியுறுத்துகிறார் அகாடெமி ஆஃப் இந்தியன் பீடியாட்ரிக்ஸ் எனப்படும் குழந்தைநல மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் மருத்துவர் டி.எம்.ஆனந்தகேசவன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், காற்று மாசுபாட்டில் தீவிர பங்காற்றக் கூடிய அனல்மின் நிலையங்கள் காலநிலை நெருக்கடியை விரைவுபடுத்துவதாகவும், அதன் விளைவாக ஏற்படும் காற்று மாசு பெரியவர்களைவிட குழந்தைகள் மீதே அதிக தாக்கம் செலுத்துவதாகவும் கூறினார்.

"காற்று மாசுபாட்டால் கருவிலுள்ள குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. குழந்தைகள் அதிக நேரம் வெளியில் விளையாடுவதாலும், அவர்களின் செயல்பாடு அதிகம் என்பதாலும் அவர்களின் நுரையீரலை மாசுபட்ட காற்று அதிகம் பாதிக்கிறது," என்றும் அவர் தெரிவித்தார்.

"அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் சிந்திக்கும் திறன் குறைவதோடு, ஆஸ்துமா போன்ற நாள்பட்ட பிரச்னைகளும் ஏற்படலாம். அதுமட்டுமின்றி, நாளடைவில் புற்றுநோய் போன்ற நீண்டகால பாதிப்புகளையும் மாசடைந்த காற்று ஏற்படுத்துகின்றன," என்று எச்சரித்தார் ஆனந்தகேசவன்.

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம்

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, கர்ப்பிணிகள் மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் போது, குழந்தையின் ஆரோக்கியத்தை அது பாதிக்கிறது. மேலும், மாசடைந்த காற்றைச் சுவாசிக்கும் குழந்தைகளின் நரம்பியல் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

சமீபத்தில், ஹெல்தி எனர்ஜி இனிஷியேட்டிவ் மற்றும் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய ஆய்வு ஒன்றில், எண்ணூரை சேர்ந்த 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மத்தியில் சென்னையின் மற்ற பகுதிகளில் காணப்படுவதைவிட 63 மடங்கு அதிகமான சுவாசப் பிரச்னைகள் இருப்பதாகத் தெரிய வந்தது.

இந்த ஆய்வில் பங்கு வகித்த குழந்தைகள் சிலரின் பெற்றோரைச் சந்தித்துப் பேசினேன். அவர்கள் தங்கள் குழந்தைகள் ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் ஒரு வாரமாவது சுவாசப் பிரச்னை, சளி, இருமல், காய்ச்சல் போன்ற ஏதேனும் ஒரு பாதிப்புகளை எதிர்கொள்வதாகக் கூறினர்.

வனிதாவை போலவே பிபிசி தமிழிடம் பேசிய, இந்த ஆய்வில் பங்கெடுத்த ஜெயாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது குழந்தைகளின் உடல்நிலை குறித்தும் அதில் எண்ணூரின் காற்று மற்றும் நீர் மாசுபாட்டின் விளைவுகள் குறித்தும் கவலை கொண்டுள்ளார்.

ஐந்து வயதுக்கு உட்பட்ட இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஜெயா, தனது இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, புதிதாக மற்றுமோர் அனல்மின் நிலையம் வருவதை எதிர்ப்பதாகக் குறிப்பிட்டார்.

அனல்மின் நிலையம் ஏற்படுத்தும் சூழலியல் பாதிப்புகள் என்ன?

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம்

கிழக்கே வடசென்னை அனல்மின் நிலையம், காமராஜர் துறைமுகம், மேற்கே வல்லூர் அனல்மின் நிலையம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், தெற்கே எண்ணூர் அனல்மின் நிலையம் ஆகியவை எண்ணூரில் அமைந்துள்ளன. இவைபோக, மணலியில் தொழிற்பேட்டை, கோரமண்டல் உரத் தொழிற்சாலை, கோத்தாரி உரத் தொழிற்சாலை ஆகியவை அமைந்துள்ளன.

"அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்திச் செயல்முறையில் இருந்து சாம்பல் கழிவுகள், நுண்துகள்கள் எனப்படும் மாசுக் காரணிகள் கழிவுகளாக வெளியேற்றப்படும். கந்தக டைஆக்சைட், நைட்ரஸ் ஆக்சைட் போன்ற நச்சு வாயுக்களும் காற்றில் வெளியேற்றப்படும்" என்று பிபிசி தமிழிடம் விவரித்தார் சுற்றுச்சூழல் பொறியாளரான துர்கா.

ஏற்கெனவே இந்தப் பகுதியில் செயல்படும் அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் இத்தகைய கழிவுகளும் நச்சு வாயுக்களும் முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை எனக் குற்றம் சாட்டும் துர்கா, இந்தப் புதிய திட்டம் ஏற்கெனவே மோசமடைந்து வரும் அப்பகுதியின் நிலைமையை அதிதீவிர அபாயத்தில் தள்ளும் என்று எச்சரிக்கிறார்.

கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுநர் குழு அறிக்கைப்படி, கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் 8 அடி வரை சாம்பல் கழிவுகள் படிந்துள்ளன. அந்த அறிக்கைப்படி, எண்ணூரில் நிர்ணயிக்கப்பட்ட தரத்தைவிட அதிகளவில் காற்று மாசடைந்து இருப்பதாகவும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

"எண்ணூரும் கொசஸ்தலை ஆறும் ஏற்கெனவே இந்த அளவுக்கு மாசுபட்டிருக்கும் நிலையில், எதற்காக இதே பகுதியில் மற்றுமோர் அனல்மின் நிலையம்?" என விமர்சிக்கிறார் துர்கா.

குடியிருப்புக்கு அருகிலேயே அனல்மின் நிலையமா?

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம்
படக்குறிப்பு, விரிவாக்கம் செய்யப்படவுள்ள அனல்மின் நிலையத்தின் பின்புறத்தில், வெகு அருகில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்புகள்

தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் 2024-25 ஆண்டுக்கான கொள்கை அறிக்கைப்படி, தமிழ்நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்கள் அவற்றின் மொத்த உற்பத்தி அளவில் இதுவரை 67 சதவீதத்தையே எட்டியுள்ளன.

"தற்போது மாநிலத்தில் இயங்கிவரும் அனல்மின் நிலையங்களே முழு திறனை எட்டாத நிலையில், அரசு ஏன் புதிதாக இன்னொன்றைக் கட்டமைக்க வேண்டும்," என்று கேள்வியெழுப்புகிறார் சுற்றுச்சூழல் பொறியாளர் துர்கா.

அனல்மின் நிலையம் வரவுள்ள பகுதிக்கு மிகவும் அருகிலேயே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பாக, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 6,877 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

அந்தக் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் முழுமையடைந்து மக்கள் வாழத் தொடங்கும் நேரத்தில் அதற்கு வெகு அருகிலேயே திட்டமிடப்படும் இந்த அனல் மின் நிலைய விரிவாக்கத்தால், அங்குக் குடியேறும் மக்களுடைய உடல்நிலைக்குத் தீங்கு ஏற்படும்" என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் எச்சரித்தது. இதுகுறித்து கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதியன்றே மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தொழில்நுட்பக் கமிட்டியில் விவாதிக்கப்பட்டது.

"குடியிருப்புகளுக்கு மிக அருகிலேயே அனல்மின் நிலையம் போன்ற கட்டமைப்புகளைக் கொண்டு வருவது, முன்னமே பாதிக்கப்பட்டுள்ள பகுதியின் மீதான விளைவுகளின் தீவிரத்தை விரைவுபடுத்தும். அந்தக் குடியிருப்புகளில் வாழப் போகும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்" என்று மருத்துவர் ஆனந்தகேசவன் எச்சரித்தார்.

எண்ணூர் குழந்தைகளின் அச்சம்

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம்
படக்குறிப்பு, "எங்களுக்கு புற்றுநோய் வேண்டாம் தாத்தா. எங்களுக்கு நோய்நொடிகள் பிரச்னை உள்ளது," என்று தனது சூழ்நிலையை விவரிக்கும் எண்ணூர் மாணவர் ஒருவரின் கோரிக்கை.

இந்தத் திட்டத்திற்கு எழுந்து வரும் எதிர்ப்புகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "மக்களுடைய கருத்துகளின் அடிப்படையிலேயே இந்தத் திட்டம் குறித்து அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே நிலவும் சூழலியல் பாதிப்புகள் குறித்துக் கேள்வியெழுப்பிய போது, "எண்ணூர் மட்டுமன்றி மொத்த வடசென்னையின் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் வகையில் சில திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும், முதலமைச்சரின் அறிவுரைப்படி கூடுதலாக சில திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும்," பதிலளித்தார்.

அப்பகுதியில் தற்போது செயல்பட்டு வரும் அனல்மின் நிலையங்கள் குறித்த மக்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சரையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவரையும் தொடர்புகொள்ள முயன்றபோது அவர்கள் பதிலளிக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.