Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நல்லகண்ணு: சுதந்திர போராட்டம் முதல் ஆயுதப் போராட்டம் வரை - 100 வயதிலும் கொண்டாடப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,HANDOUT

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணுவுக்கு இன்று (டிசம்பர் 26) நூறாவது பிறந்தநாள்.

அவர் சார்ந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இது நூற்றாண்டு தொடக்க விழா. 'இப்படியொரு பொருத்தம் யாருக்கும் கிடைக்காது' என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தன்னுடைய பிறந்தநாள் குறித்து எதுவும் பேசாமல் கட்சி மற்றும் அதன் எதிர்காலம் குறித்தே அவர் அதிகம் பேசியதாகக் கூறுகிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லெனின்.

யார் இந்த நல்லகண்ணு? கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி மற்றும் போராட்டங்களில் அவரின் பங்களிப்பு என்ன?

 

சிறையும், போராட்டங்களும் நிறைந்த வாழ்க்கை

இந்திய சுதந்திர போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் எனத் தனது வாழ்நாளில் குறிப்பிட்ட பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர் நல்லகண்ணு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமன்றி இதர கட்சிகளின் தலைவர்களும் 'தோழர் ஆர்.என்.கே' என்ற அடைமொழியோடு அவரை அழைக்கின்றனர்.

அவரது நூற்றாண்டு விழாவை சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் வியாழன் அன்று அக்கட்சியினர் கொண்டாடியுள்ளனர்.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ராமசாமி-கருப்பாயி தம்பதியின் மூன்றாவது மகனாக நல்லகண்ணு பிறந்தார்.

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்த நல்லகண்ணுவுக்கு பொதுவுடைமைக் கருத்துகளை பள்ளி ஆசிரியராக இருந்த பலவேசம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

நல்லகண்ணு: சுதந்திர போராட்டம் முதல் ஆயுதப் போராட்டம் வரை - 100 வயதிலும் கொண்டாடப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,HANDOUT

பாரதியார், திரு.வி.கல்யாணசுந்தரம், விவேகானந்தர் ஆகியோரது படைப்புகளும் ஆசிரியர் பலவேசம் மூலமாகவே நல்லகண்ணுவுக்கு அறிமுகம் ஆகியுள்ளது.

பாரதியாரின் பாடல்களும் திரு.வி.கவின் எழுத்துகளும் தன்னை மாற்றியதாகக் கடந்த 2016ஆம் ஆண்டில் அவருடன் நான் கலந்துரையாடியபோது கூறினார். "சாதிக் கட்டமைப்பை உடைப்பதும் சுரண்டல் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதுவும்தான் தன்னுடைய லட்சியமாக இருந்தது" என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

கடந்த 1943ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நல்லகண்ணு, இன்றுவரை அதே கட்சியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறார்.

அதுகுறித்து நினைவுகூர்ந்த நல்லகண்ணு, "என்னுடைய 16 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர முயன்றேன். அவர்கள் என்னைச் சேர்க்கவில்லை. '18 வயது ஆகட்டும், சேர்த்துக் கொள்கிறோம்' என்றனர். 18 வயது வந்ததும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தேன்" என்றார்.

"பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக நல்லகண்ணு இருந்தார். அதன்பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறினார். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். திருநெல்வேலியில் நடந்த சுதந்திர போராட்டங்களில் அவர் பங்கெடுத்தார்" என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் லெனின்.

நெல்லை சதி வழக்கு

நல்லகண்ணு: சுதந்திர போராட்டம் முதல் ஆயுதப் போராட்டம் வரை - 100 வயதிலும் கொண்டாடப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,HANDOUT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சில ஆண்டுகளில் நல்லகண்ணுவுக்கு கிளைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 1948ஆம் ஆண்டில் 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது.

ஆயுதம் தாங்கிய போராட்டமாக இது இருந்ததாகக் கூறும் லெனின், "இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தொடரப்பட்ட நெல்லை சதி வழக்கில் நல்லகண்ணு சேர்க்கப்பட்டார். அவரது மீசையை போலீஸ்காரர்கள் சுருட்டை வைத்துப் பொசுக்கினர். ஆனாலும், சக தோழர்களை அவர் காட்டிக் கொடுக்கவில்லை" என்றார்.

இந்த வழக்கில் ஏழு ஆண்டுகள் நல்லகண்ணு சிறையில் இருந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு அன்னசாமி என்பவர், தனது மகள் ரஞ்சிதத்தை திருமணம் செய்து கொடுத்தார். இந்தத் திருமணம் 1958ஆம் ஆண்டு நடந்தது.

இதே காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் நிலச்சுவான்தார்களின் கைகளில் நிலம் இருந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் தலித் மக்கள் வீடுகளையோ நிலங்களையோ வைத்துக்கொள்ள முடியாத நிலை இருந்துள்ளது.

"நிலையான வீடு இல்லாததால் தலித் மக்களை 'ஓடும் குடிகள்' என அழைத்தனர். இதற்கு எதிராக தலித் மக்களைத் திரட்டிப் போராடி அவர்கள் குடியிருப்பதற்கான மனை உரிமையை நல்லகண்ணு பெற்றுத் தந்தார்" என்கிறார் லெனின்.

நல்லகண்ணுவின் அரசியல் பயணத்தில் விவசாய சங்கத்தின் பணிகளே பிரதானமாக இருந்துள்ளது. 1970 ஆம் ஆண்டில் நடந்த நில மீட்சிப் போராட்டத்தில் ஒரு சிலரின் கைகளில் இருந்த நிலங்களை மீட்பதற்காக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்தது.

அப்போது தமிழ்நாட்டில் மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் தொடர்பான விவரங்களைத் தொகுத்து சிறிய நூல் ஒன்றை நல்லகண்ணு வெளியிட்டார்.

சாதிக் கலவரத்தைத் தடுத்த நல்லகண்ணு

நல்லகண்ணு: சுதந்திர போராட்டம் முதல் ஆயுதப் போராட்டம் வரை - 100 வயதிலும் கொண்டாடப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,HANDOUT

"நல்லகண்ணுவின் பிரதான காலகட்டம் என்பது விடுதலைப் போராட்டமும் அதற்குப் பிந்தைய காலகட்டமும்தான்" எனக் கூறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், 1996ஆம் ஆண்டு நடந்த சாதிக் கலவரத்தைக் குறிப்பிட்டு பிபிசி தமிழிடம் சில தகவல்களைத் தெரிவித்தார்.

தென் மாவட்டங்களில் 1996ஆம் ஆண்டு முக்குலத்தோர் மற்றும் தலித் மக்களுக்கு இடையே சாதிக் கலவரம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நல்லகண்ணுவின் மாமனார் அன்னசாமி கொல்லப்பட்டார்.

"அது கொந்தளிப்பான நேரம். சற்று பிசகினாலும் அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால் அமைதியை ஏற்படுத்தும் பணியில் நல்லகண்ணு ஈடுபட்டார். 'சிலர் செய்த தவறுக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முடியாது' என்பதை அவர் நிலை நிறுத்தினார்" என்கிறார் கனகராஜ்.

மதுரையில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தலித் ஊராட்சித் தலைவர்கள் பதவியேற்க முடியாத சூழல் நிலவியது. இதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த நல்லகண்ணு, சுமார் நான்காயிரம் பேரைத் திரட்டி மாபெரும் உண்ணாவிரதம் இருந்தார்.

"இந்தப் போராட்டம் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. 2006ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான அரசு, தேர்தலை நடத்தியே தீருவது என முடிவெடுத்து தேர்தலை நடத்தியது" என்று விவரித்தார் லெனின்.

நீதிமன்றத்தில் வாதாடிய நல்லகண்ணு

நல்லகண்ணு: சுதந்திர போராட்டம் முதல் ஆயுதப் போராட்டம் வரை - 100 வயதிலும் கொண்டாடப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,KANAGARAJ KARUPPAIAH/FB

தன்னுடைய 86 வயதிலும் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக நல்லகண்ணு போராடிய சம்பவம் ஒன்றை பிபிசி தமிழிடம் கனகராஜ் நினைவு கூர்ந்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் அரசு மற்றும் தனியார் மணல் அள்ளுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நீதிபதிகள் பானுமதி, நாகமுத்து அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நேரடியாக ஆஜராகி நல்லகண்ணு வாதாடியதாகக் கூறுகிறார் கனகராஜ்.

"அப்போது அவருக்கு 86 வயது. இந்த வழக்கில் சட்டரீதியான வாதங்களைவிட அவர் முன்வைத்த உணர்வுபூர்வமான வாதங்கள் எடுபட்டன. தாமிரபரணி ஆற்றுக்கும் ஊருக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் தனது இளமைக் காலத்துடன் ஆற்றுக்கு உள்ள தொடர்பைப் பற்றியும் அவர் நீதிமன்றத்தில் பேசியதாக" கூறுகிறார் கனகராஜ்.

தாமிரபரணி ஆறு செல்லும் இடத்தின் மணல் திட்டில் கொங்கராயன் குறிச்சி, ஆறாம் பண்ணை ஆகிய கிராமங்கள் உள்ளதாகக் கூறி அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நல்லகண்ணு வாதிட்டதாகக் கூறினார் கனகராஜ்.

மேலும், "இதன்பிறகு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிலவியல் தொழில்நுட்பத்துறையின் தலைவர் முனைவர் சந்திரசேகர், அதே பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் அருணாச்சலம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் பதிவாளர் சேஷஷாயி ஆகியோர் கொண்ட சட்ட ஆணையத்தை நீதிமன்றம் நியமித்தது.

அந்த ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு மணல் அள்ளுவது தடுக்கப்பட்டது" என்றார் அவர்.

இந்த மணலின் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என நிபுணர் குழு அப்போது அறிக்கை அளித்ததாகவும் கனகராஜ் குறிப்பிட்டார்.

தேர்தல் அரசியலில் நல்லகண்ணு

நல்லகண்ணு: சுதந்திர போராட்டம் முதல் ஆயுதப் போராட்டம் வரை - 100 வயதிலும் கொண்டாடப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,LENIN DAKSHINAMURTHI/FB

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கிளைச் செயலாளர், இடைக் கமிட்டி செயலாளர், விவசாய சங்கத்தின் மாநில செயலாளர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர், நிர்வாகக் குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், மாநில செயலாளர் எனப் பல பொறுப்புகளை நல்லகண்ணு வகித்துள்ளார்.

தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டுள்ளார். 1980ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டு நல்லகண்ணு தோல்வியைத் தழுவினார்.

"அந்தத் தேர்தலில் அதிமுக-வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்தது. எம்.ஜி.ஆர் நேரடியாகப் பிரசாரம் செய்தார்" என்கிறார் லெனின்.

கடந்த 1999ஆம் ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் நல்லகண்ணு தோல்வியடைந்தார்.

அப்போது கோவையில் குண்டுவெடிப்பு சம்பவம் பிரதானமாகப் பேசப்பட்டதால், 'முஸ்லிம்களுக்கு ஆதரவானவர் நல்லகண்ணு' என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. "இதை மறுக்காத நல்லகண்ணு, 'வாக்கு வங்கிக்காக மாற மாட்டோம். சிறுபான்மையினர் நலனில் எப்போதும் அக்கறையுடன் இருப்போம்' என பிரசாரம் செய்தார்" என்கிறார் லெனின்.

மழை கொடுத்த சோகம்

நல்லகண்ணு: சுதந்திர போராட்டம் முதல் ஆயுதப் போராட்டம் வரை - 100 வயதிலும் கொண்டாடப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,HANDOUT

மாற்றுக் கட்சியினரும் மதிக்கும் நல்லகண்ணுவின் வாழ்வில் ஆறாத சோகத்தை 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளம் ஏற்படுத்தியது.

சென்னை சி.ஐ.டி காலனியில் நல்லகண்ணு வசித்த வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்தபோது அவரைக் காப்பாற்ற படகு ஒன்று வந்துள்ளது. "மற்றவர்களையும் காப்பாற்றிவிட்டு என் அருகே வாருங்கள்" என அவர் கூறியதை இன்றளவும் நினைவு கூர்கின்றனர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள்.

அந்த வெள்ளத்தில், தான் சேர்த்து வைத்திருந்த 2,000க்கும் மேற்பட்ட அரசியல், தத்துவம், சங்க இலக்கியங்கள் தொடர்பான புத்தகங்கள் நீரில் கரைந்து தூளாகிவிட்டதாக என்னிடம் வேதனையை வெளிப்படுத்தினார். "மழை எனக்குக் கொடுத்த சோகம் இதுதான்" என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

'நூற்றாண்டு' - நல்லகண்ணு சொன்னது என்ன?

தமிழ்நாட்டுக்கும் தமிழின் வளர்ச்சிக்கும் பாடுபட்டதாகக் கூறி கடந்த 2022ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருதை, முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

இதற்காகத் தனக்குக் கொடுக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் தன்னுடைய பணமான 5,000 ரூபாயையும் சேர்த்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கே நல்லகண்ணு வழங்கினார்.

தன்னுடைய பிறந்தநாளுடன், தான் அங்கம் வகிக்கும் கட்சிக்கும் நூற்றாண்டு என்பதால் அதுகுறித்து நல்லகண்ணு பேசியுள்ளார்.

"நூறாண்டு என்பது அரசியல் கட்சிக்கு ஒரு வயதல்ல. வைரம் பாய்ந்த அனுபவம் செறிந்த ஓர் அமைப்பு இது. ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும். வகுப்புவாத அபாயத்தை உணர்ந்து கவனமாகச் செயலாற்ற வேண்டும்" என்றார் நல்லகண்ணு.

"தனது 100வது பிறந்தநாள் குறித்து எதுவும் பேசாமல் கட்சி மற்றும் அதன் எதிர்காலம் குறித்தே அவர் அதிகம் பேசியதாக" லெனின் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.