Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 15


 "மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள  நிமித்தங்களின் இரண்டாம் பகுதி"

"திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு
எழு கலத்து ஏந்தினும் சிறிது – என் தோழி
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே." 

(குறுந்தொகை , 210 )

“பலம் மிகுந்த தேரை உடைய நள்ளியின் காட்டில், இடையர்களின் பல பசுக்கள் கொடுத்த நெய்யுடன், தொண்டி என்னும் ஊரில் விளைந்த வெண்மையான நெல்லின் சூடான சோற்றைக் கலந்து, காக்கைக்கு ஏழு கிண்ணங்களில் கொடுத்தாலும் அது சிறிய கைம்மாறே. ஏனென்றால், என் தோழியின் பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்திற்கு ஒரு நல்ல மாற்றாக, விருந்தாளி வருவான் என்று அறிவித்துக் கரைந்த காக்கைக்கு இந்த உணவாகிய பலி மிகச் சிறிய கைம்மாறே ஆகும்” என்கிறாள் இன்னும் ஒரு சங்கத் தோழி.

சங்க பாடல்களான ஐங்குறுநூறு 391, குறுந்தொகை 210 இன் படி காகம் விருந்தினர் வருவதை முன் கூட்டியே சொல்லும் திறன் உடையதாகும். அதாவது ஒருவர் வீட்டில் காகம் கரைந்தால், கட்டாயம் அங்கு விருந்தினர் வருவர் என எதிர் பார்ப்பார். அதாவது காக்கை கரைவதை விருந்தினர் வருவதற்கு நிமித்தமாகக் கொள்ளுவர் என்கிறது. 


யாழ்ப்பாணத்தை பொறுத்த மட்டில் அங்கு இரு வகையான காகங்கள் உண்டு. ஒன்று சிறியது. இது காலையில் கரைந்ததால் நீங்கள் ஒரு நல்ல செய்தியை எதிர் பார்க்கலாம். அதாவது கடிதமோ விருந்தினரோ வரலாம். அடுத்தது பெரிய காகம். அது சத்தம் போட்டால், அது கேடு, பொல்லாங்கு, நோய் போன்றவற்றை குறிக்கும். ஒரு பயணத்தின் போது ஒரு மயிலை காண்பது நல்ல சகுனம். ஆனால் அதன் கீச்சுக் குரலை கேட்பது வழிப்பறி நடக்கப்போவதை முன் கூட்டியே அறிவிப்பதாக இருக்கும். ஒரு வருத்தக்காரன் இருக்கும் கூடத்திற்கு முன்னால் ஒரு நாய் ஊளையிட்டால், அவரின் மரணத்தை அறிவிப்பதாக இருக்கலாம். ஒரு புது வீட்டில் சிட்டுக்குருவி கூடு கட்டுவதை ஊக்கமூட்டு கிறார்கள். காரணம் அது நல்ல எதிர்கால நிலையை / செல்வ வளத்தை தரும் என்பதால். ஆண் மயில்கள் தோகை விரித்தாடினால் மழை வரும் என்பார்கள். உண்மையில் அது ஏன் ஆடுகிறது? விஞ்ஞானிகளின் ஆய்வு ஒன்றின் படி அது பெண் மயிலை கவருவதற்காகவே என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

எப்படியாயினும் பல்லியே பல மூட நம்பிக்கைகளுக்கு தானே காரணமாக உள்ளதாக அது தனக்கு தானே பெருமிதங் கொள்ளத்தக்கதாக உள்ளது. பல்லி சோதிடம் [Gowli Shastra ] என்று ஒரு தனி பிரிவே உண்டு. அது மட்டும் அல்ல நாட்காட்டிகள், பஞ்சாங்கங்கள் ஆகியவற்றில் பல்லி விழும் பலன் பொதுவாக இருக்கும். பெரும்பாலானோர்களும் அதைத் தவறாது பார்த்து தம் மனதை குழப்புவது இன்னும் நிகழ்கிறது. 

குறுந்தொகை 218, கொற்றனார், பாலை திணை – தலைவி சொன்னது

"விடர்முகை அடுக்கத்து விறல்கெழு சூலிக்குக் 
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம் 
புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம் 
உள்ளலும் உள்ளாம் அன்றே தோழி 
உயிர்க்குயிர் அன்னர் ஆகலின் தம்மின்று 
இமைப்புவரை அமையா நம்வயின் 
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே."

தோழி! அவர் என் உயிருக்கு உயிரானவர். இமைப்பொழுதும் அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது. என்னை நினையாது மறந்து விட்டு இவ்வாறு அவர் சென்றதால், நான் பிளவுகளும் குகைகளும் உடைய தொடர் மலையில் உள்ள சூலிக்கு பலிக்கடன் செய்ய மாட்டேன், என் கையில் காப்பு நூல் கட்ட மாட்டேன், பறவைகளின் நிமித்தங்களைக் கேட்க மாட்டேன், நல்ல சொல்லுக்காக காத்துக்கொண்டு இருக்க மாட்டேன். அவரைப்பற்றி நினைக்கவும் மாட்டேன். என்று தனது வருத்தத்தை தெரிவிக்கிறாள். இது பல சங்க கால மூட நம்பிக்கைகளை கூறிச் செல்கிறது. மேலும் சில நம்பிக்கைகளை சுருக்கமாக கிழே தருகிறேன். 


 
"காகம் இடப் பக்கமிருந்து வலப் பக்கம் பறந்து செல்வதைப் பார்த்தால் நல்லது."

"வௌவால் வீட்டில் பறந்தால் தீமை வரும்."

"பல்லி தலையில் விழுந்தால் மரணம் நிகழும்."

"பல்லி உடலில் விழுந்தால் ஆயுள் கூடும்."

"பல்லி மேற்குத் திசையிலிருந்து ஒலி எழுப்பினால் நல்லது நடக்கும்." 

"தவக்கை கத்தினால் மழை வரும்"

"கோழி சிறகை விரித்து மண்ணில் பதுங்கினால் மழை வரும்"

"தட்டான் [தும்பி / dragonfly?] தாழப் [கிழே] பறந்தால் மழை வரும்"

"ஆடு கூடி கூடி அலந்தால் மழை வரும்"


நான் எப்பவோ கேட்ட, வாசித்த ஒரு நிகழ்வு இப்ப ஞாபகம் வருகிறது.
 
 
"ஒரு அரசன் காலையில் தன் மாளிகையிலிருந்து கீழே பார்த்தான். அப்ப ஒரு ஏழை அந்தப் பக்கம் சென்று கொண்டிருந்தான். அதன் பிறகு அரசனுக்கு அன்று முழுதும் நடந்த நிகழ்வுகள் சரியில்லைமல் போயிற்று. ஏன் என்று யோசித்து பார்த்தான். அப்பொழுது தான் காலையில் முழித்த அந்த ஏழை முகம் ஞாபகம் வந்தது. அது, அந்த சகுனம் சரியில்லை என்ற எண்ணம் தோன்றியது. ஆத்திரம் அடைந்த அரசன், தன் வீரர்களை அழைத்து தான் காலையில் விழித்த அந்த ஏழை எங்கிருந்தாலும் அழைத்து வாருங்கள் என்ற கட்டளையிட்டான். 
ஏழை அழைத்துவரப்பட்டான். தனது கெட்ட, துக்க நிகழ்வுகளுக்கு காரணமான அந்த ஏழைக்கு மரணதண்டனை விதி்த்தான். ஆனால் அந்த ஏழையோ எந்த கவலையோ, துக்கமோ இன்றி சிரித்தான்!சாவின் விளிம்பில் நிற்பவன் சிரிக்கிறானே என்று குழம்பினான் அரசன். அரசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. 

ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டான். அந்த ஏழை மிக அமைதியாக சொன்னான். 

'என்னைப் பார்த்த தங்களுக்காவது சிறு சிறு துன்பங்கள் தான் நேர்ந்தது. நான் காலையில் தங்கள் முகத்தில் தான் விழித்தேன். எனக்கோ என் உயிரே போகப் போகிறது. யார் ராசியில்லாதவர் என்று எண்ணிப்பார்த்தேன் அது தான் சிரித்தேன்' என்று கூறினான்." 

இப்ப சொல்லுங்கள் "எது நல்ல சகுனம் ? எது கெட்ட சகுனம்?"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்]  


பகுதி 16: "சாவும் பேயும்" தொடரும்  

476251740_10227923751181931_5658485718109562265_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=AJds65INTscQ7kNvgHImy-_&_nc_oc=AdhnvFJxMjsJRGkYmx_vfAv4bZ6ezu7lYXZgvlMm8rB_yfW5xpoPJpmjx0Ktip4jNZ4&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AjJA1Y14y3jlqPL0nYbjEGi&oh=00_AYAAN4TqRBIWtILKVSo4bfL2fxtwdbyT6QVQx34sPbKF6w&oe=67AD07DE    475479704_10227923750581916_8550800849281732005_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=FSdztlhVhSwQ7kNvgHbGzcy&_nc_oc=Adg35PYTj41y5DEMJR_h0T0CEc0u1NWwwx0Nb7vgJVY13vNbKwVCa-BCn97yNCZqV6o&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AjJA1Y14y3jlqPL0nYbjEGi&oh=00_AYDkgULkwIUquhN2HEl3Jpewv0tnKuxfwcMp2Whx2q0cXw&oe=67AD04F5

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 16

 

ஒவ்வொரு சமுதாயத்திலும் பேய், கூளி, பிசாசு, ஆவி, முனி என்பன ஒரு பங்கு வகிக்கின்றன. இறந்தவர், சுடலை, இருண்ட இரவு, தெரு நாயின் ஊளை என்பனவற்றின் பயம் நாட்டுப்புறத்தில் எம்மை கட்டுப்படுத்துகிறது. 

அங்கு பேயோட்டுதல் இன்னும் ஒரு சாதாரண சங்கதியாக உள்ளது. ஆலயக்குருக்கள், மரபுப் படியான பேய் ஓட்டிகள், ஆன்மீக குருக்கள் [Temple priests, traditional ghost busters, spiritual gurus ] என்பவர்கள் இதில்  வல்லுனராக இருக்கிறார்கள்    

இயற்கைக்கு புறம்பாக, தற்கொலை, கொலை, அல்லது விபத்து மூலம் திடிரென மரணிக்கும், முக்கியமாக இளம் வயதினர் ஆவியாக உலாவுவதாக நம்புகின்றனர். அவர்கள் நிறைவேறப்பெறாத அவாக்களை கொண்ட பேயாக உலாவுகின்றன எனவும் நம்புகின்றனர். அது மட்டும் அல்ல, இந்த பேய்களை பேயாட்டிகள் [ghost charmer] கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையவர்கள் என்றும், தனது எதிரியை தாக்க, இப்படியான பேய்களை இவர்கள் மூலம் பெறலாம் எனவும் நம்புகிறார்கள்.  

ஒவ்வொரு தமிழனும் அவன் எங்கு இருந்தாலும் கல்விக்கு [படிப்பிக்கு] முதல் இடம் கொடுக்கிறான். இதனால் தமிழன் பல மருத்துவர்களையும் பொறியியலாளர்களையும் தனது சமுதாயத்தில் உண்டாக்கிறான். ஆனால்  ஒரு தெளிந்த இரு கவர்ப்பிரிவு முறையை [dichotomy: division into two mutually exclusive, opposed, or contradictory groups: a dichotomy between thought and action.]  உள்ளத்தில் கொண்டுள்ளார்கள். இவர்கள் விஞ்ஞானத்தை படிக்கிறார்கள் அனால் அதில் அறிவியல் மனநிலை [scientific temper] இல்லாமல். ஆகவே தான் இன்னும்  பல மூட நம்பிக்கைகள் அவர்களிடம் நிறைந்து உள்ளன. ஆகவே அதில்  இருந்து விடுபட குறள் 355 இன் தேவை அவர்களுக்கு  ஏற்படுகிறது.

"எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு."- 355

எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத் தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய் யுணர்வாகும் என்கிறார் வள்ளுவர். அது போல தத்துவமேதை சோக்கிரட்டீஸ் சொன்னார் எதிலும் சந்தேகம் கொள். ஏன் எப்படி எதற்காக என்று பல கேள்விகள் உன்னுக்குள் வரட்டும் என்றார்.

மேலும் பேய் பற்றிய நம்பிக்கைகள் ஈராயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றன. சுடுகாட்டில் பேய் மகள் இருப்பாள் என்றும் சுடுகாட்டிற்குப் போனால், அதைத் திரும்பிப் பார்க்காமல் வர வேண்டும் என்றும், போர்க்களத்தில் காயமடைந்து உயிர் நீக்கப் போகும் வீரர்களைச் சுற்றிப் பேய்கள் நிற்கும் என்றும் தமிழர்கள் நம்பினார்கள். பண்டைய தமிழன், பேய் மகள் கொண்டிருந்த தோற்றத்தையும், அவளது கொடிய செயலையும் கண்டு அஞ்சினர் என்பதும், அவை பற்றி சில நம்பிக்கைகள் கொண்டிருந்தனர் என்பதும் சங்கப் பாடல்களினின்றும் [புறநானுறு 356,359,371 ....], சிலப்பதிகார கனாத்திறம் உரைத்த காதையில் இருந்தும் திருமுறைகளினின்றும் [முதல் திருமுறை / 045 திருவாலங்காடு / பாடல் 01, பதினொன்றாம் திருமுறை /002 மூத்த திருப்பதிகம் / பாடல் 12, ... . ], மற்றும் விவேக சிந்தாமணி — பாடல் 30 இல் இருந்தும் நன்கு புலனாகிறது. இதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

"களிற்றுக்கோட்ட டன்ன வாலெயிறு அழுத்தி
விழுக்கொடு விரைஇய வெள்நிணச் சுவையினள்            
குடர்த்தலை மாலை சூடி உணத்தின
ஆனாப் பெருவளம் செய்தோன் வானத்து 25
வயங்குபன் மீனினும் வாழியர் பலஎன
உருகெழு பேய்மகள் அயரக்
குருதித்துக ளாடிய களம்கிழ வோயே! "  

புறநானுறு  [371:22-26)

அதாவது பன்றியின் கொம்பு போன்ற வெண்ணிறமான பற்களால் கடித்து இழுத்து, கொழுப்புக் கலந்த வெண்மையான தசையைத் தின்று சுவைப்பவளாய்க், குடல்களைத் தலையில் மாலையாக அணிந்து கொண்டு, உண்ணுதற்குக் குறையாதவாறு பெரிய வளமாகிய பிணங்களைத் தந்த இவ்வேந்தன் [பண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்], வானத்தில் விளங்கும் பல விண்மீன்களைவிடப் பல்லாண்டுகள் வாழ்வானாக என்று, அச்சம் பொருந்திய பேய்மகள் பாடிக் கூத்தாடும் குருதி கலந்த செந்தூள் பறக்கும் போர்க்களத்திற்கு உரிமையுடையவனே!  என்கிறது 

"படுபிணம்தா என்று பறித்துஅவள்கைக் கொண்டு
சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்குஇருளில் சென்றுஆங்கு 20
இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி
மடியகத்து இட்டாள் மகவை, இடியுண்ட
மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு அச்சாத்தன்"

[9. கனாத்திறம் உரைத்த காதை/சிலப்பதிகாரம்]

அதாவது  அப்புகாரிலுள்ள சுடுகாட்டுக் கோட்டம் என்னும் நன்காட்டிலே மாந்தர் வாளாது போகட்டுப் போகின்ற பிணங்களைத் [பிணத்தை எரிக்காமலும் புதைக்காமலும் அங்கே  கிடத்திப் போகும் பிணங்களைத் / இவ்வாறு வாளாது இட்டுப் போதலும் அக்காலத்து ஒருவகைச் சமய வொழுக்கமாக இருந்தது] தின்று ஆங்குறைகின்ற இடாகினி [பெண் பேய்] என்னும் ஒரு பேயானது; தூங்கு இருளில் ஆங்கு ஏசும்படி [இகழ்ந்து அறிவுறுத்துவாள் போன்று] ஓர் இளங்கொடியாய்ச் சென்று .. என்கிறது.

"துஞ்சவருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய்
நெஞ்சம்புகுந்தென்னை நினைவிப்பாரு முனைநட்பாய்
வஞ்சப்படுத்தொருத்தி வாணாள்கொள்ளும் வகைகேட்
டஞ்சும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே"

[முதல் திருமுறை / 045 திருவாலங்காடு / பாடல் 01] 

அதாவது முற்பிறவியில் நட்பாய் இருப்பது போலக் காட்டித் தன்னை வஞ்சனை செய்து கொன்ற கணவனை மறுபிறப்பில் அடைந்து அவனது வாழ்நாளைக் கவர்ந்த பெண்ணின் செயலுக்குத் துணைபோன வேளாளர்கள் அஞ்சி உயிர்த்தியாகம் செய்த திருவாலங்காட்டில் உறையும் எம் அடிகளாவார் என்கிறது. இந்த பாட்டில் தமிழ்நாட்டை உலுக்கிய பயங்கரப் பேய் நீலியின் கதை நினைவுட்டப்படுகிறது.  இந்த கதையில் இருந்து தான் "நீலிக் கண்ணீர் வடிக்காதே" என்ற பழமொழி வந்தது. 

நவக்ஞானி என்ற பார்ப்பனி காசியில் தந்தையுடன் வசித்துவந்தார். அவரை ஒரு வணிகர் பொய் சொல்லி மணம் புரிந்தார். ஊருக்குத் திரும்பிய அவர் வீட்டுக்கு வரும் முன்னரே ஆலங்காட்டில் நவக்ஞானியக் கொலை செய்து விடுகிறார். அவளுடைய மறு அவதாரம்தான் நீலி. அவள் அவனைப் பழிவாங்க எண்ணி மறுபிறவியில் புரிசைகிழார் என்னும் வேளாளர்க்குப் புத்திரியாகப் பிறந்திருந்தாள். தோற்றத்தைக் கண்டு அவளைப் பேயென்று ஊரார் புறக்கணித்தனர், முற்பிறப்பின் கணவனாகிய பார்ப்பான் தரிசனச் செட்டி என்னும் பெயரோடு பிறந்திருந்தான். அவனைக் கண்டதும் இவள் அவன் மனைவிபோல நடித்துப் பழிவாங்கத் தலைப்பட்டபோது அவன் அஞ்சியோடி அவ்வூர் வேளாளர் எழுபதுபேரிடம் அடைக்கலம் புகுந்தான். ஆனால் அவள், ஊர் மக்கள் அனைவரையும் கூட்டி தரிசன செட்டி தன் கணவர் என்று கதறி அனுதாபத்தைப் பெற்றாள். (இதுதான் நீலிக் கண்ணீர் [பொய்க்கண்ணீர்] !!)  அவர்கள் பிணை கொடுத்தனர். இருந்தும் இவள் செட்டியை வஞ்சித்துக் கொன்றாள். பிணைகொடுத்த அந்த எழுபது வேளாளரும் தீப்புகுந்து உயிர்துறந்தனர். 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி 17 : "சாவும் பேயும்" இரண்டாம் பாகம் தொடரும்.

476340010_10227935984487756_4565191046417532394_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=JYtNuQ-7X_UQ7kNvgFgVX2q&_nc_oc=AdiSJadojJV9rxrENboVfWMaCR0wd6oZ7kROYOKHMxwYTyw4pLyVPQffMp0n3CmoAwQ&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=A3GzkKiXBmyQK04drOY7lI8&oh=00_AYBBoyqOF3H78SO0cSxjKB19uEDju7w8mfudPbcHeFwASw&oe=67AFC67D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 17 

 

நீலியின் கதைமட்டும் அல்ல,மேலும் பேயும் தீய சக்திகளும் தாக்காமல் தடுக்க ஐயவி எனப்படும் வெண்கடுகை நெருப்பில் இட வேண்டும், மணி அடிக்க வேண்டும், வேப்பிலையைப் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற தகவல்களையும்  சங்க இலக்கியம் தருகிறது. 

அது மட்டும் அல்ல, சதுப்பு நிறைந்த வயல் நிலங்களில் நடக்கும் ஒருவரை கொள்ளிவாயுப் பேய்  அல்லது கொல்லி வாய் பிசாசு நெருப்பாகப் பின்தொடரும் எனவும் ஓட முற்பட்டால் இதுவும் ஓடும் எனவும் கூறப்படுகிறது. அறிவியல் ரீதியில் அணுகுபவர்கள் இதைச் சதுப்பு நிலத்தின் கீழ் அழுகும் தாவரப் பாகங்களிலிருந்து உயிரிவாயு எனப்படும் மெதேன்[Methane  CH4 ] வாயு கசிவதாகவும் சதுப்பில் புதையும் கால் வெளியில் எடுக்கப்படும் போது வாயு வெளியேறி காற்றில் தீப்பற்றிக் கொள்ளுவதாகவும் விளக்குகின்றனர்.

இறப்பை பற்றி  பல மூட நம்பிக்கைகள் பரவலாக உண்டு. குறிப்பாக மரணம் ஏற்பட்ட வீட்டில் சாப்பாடு சமைக்க மாட்டார்கள்.துடக்கு[தீட்டு/ unclean ] என்று கருதி சமையல் அறைப்பக்கம் போகமாட்டார்கள்.  அயலவர்கள் சமைத்து உணவு கொடுப்பார்கள்.ஒரு குடும்பத்தில் மரணம் நிகழும் போது அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்து இருப்பதாலும் சமைப்பதில் ஒரு விருப்பமோ அல்லது நேரமோ இல்லாததால் அன்றைய கூட்டு குடும்ப வாழ்வில் இப்படி ஒரு பழக்கம் தோன்றியது என நம்புகிறேன்.அது மட்டும் அல்ல இது,ஒரு பிரச்சனையான நேரத்தில், சமுகத்தின் உணர்வை[sense of community] பலப்படுத்துகிறது.

காகம் கரைதல்,ஆந்தை அலறல்,  பூனையின் கரைவு என்பன நிமித்தம்[சகுனம்] ஆக கருதப்படுகிறது  அது போல வால் நட்சத்திரம் ஆகாயத்தில் தோன்றுவது அரசனின் சாவை குறிப்பதாக ஷேக்ஸ்பியரும்[ஜூலியஸ் சீசர்] புறநானுறும் கூறுகிறது. 

In the play  'Julius Ceasar' where Shakespeare  says 
" When beggars die there are no comets  seen,
The heavens themselves blaze forth the death of princes." [Julius Caesar (II, ii, 30-31)]

புறநானூறு 117 -  கபிலர் 
மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும், தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
...................................,
அதாவது சனிமீன் புகைகளோடு கூடிப் புகையினும்; எல்லாத் திசையினும் புகை தோன்றினும்; தென்றிசைக்கண்ணே வெள்ளி போக்குறினும்...என்கிறது.இப்படியான பாடல் வரியை சிலப்பதி காரத்திலும் காணலாம். "கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்,விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்" (சிலப்.10:102: 3)

வால் நட்சத்திரம் போல, ஒரு வீட்டருகே ஆந்தை அலறினாலோ அல்லது கோட்டான் (அது ஒரு வகை ஆந்தை) கூவினாலோ அந்த வீட்டில் ஒரு மரணம் சம்பவிக்கும் என்பது சிலர் எண்ணம். ஏனென்றால் அது 'powwa powwa',அதாவது  "போவா போவா" என்று கத்துவதால். 

பெரும்பாலான தமிழர்கள் இன்னும் தம் முனோர்கள் காகத்தின் தோற்றத்தில் வருகிறார்கள் என நம்புகிறார்கள்.அதனால் தான் காகத்திற்கு படைக்கிறார்கள்.  

பிண ஊர்வலம் எதிர்ப்பட்டால் எடுத்த காரியம் நல்ல முறையில் முடியும் என்றும் நீண்ட நாள் நோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு அமாவாசை ஒரு கண்டமாகக் கருதப்படும் என்றும் நம்புகிறார்கள். ஏனெனில் எமன் அந்நாளில் கூடுதலான வேலை செய்யும் நாளாக மக்கள் நம்புகின்றனர் "அண்டம் காக்கா கரைந்தால், நாய் தொடர்ந்து ஊளையிட்டால் யாரோ சாகப்போகினம் என்றும் அது போல சாகக் கிடப்பவன் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள சுடர் ஆடினால் இறந்துபோவான் என்றும் நம்புகிறார்கள்.

"என்னை மார்பிற் புண்ணும் வெய்ய
நடு நாள் வந்து தும்பியும் துவைக்கும்;
நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா;
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்;
அஞ்சு வரு குராஅல் குரலும் தூற்றும்;"
[புறநானூறு 280] 

அதாவது என் கணவனின் மார்பில் உள்ள புண் மிகவும் கொடியது. நடுப்பகலில் வண்டுகள் வந்து ஒலிக்கின்றன; என்னுடைய பெரிய அரண்மனையில் ஏற்றிவைத்த விளக்குகள் நின்று நிலைத்து எரியாமல் அவிந்துவிடுகின்றன; என் கணவன் துன்பத்திலிருக்கும் பொழுது நான் உறங்க விரும்பாவிட்டாலும் என் கண்கள் உறக்கத்தை விரும்புகின்றன; அச்சத்தைத் தரும் கூகை தன் குரலால் அலறுகிறது,,என்கிறது.

இந்த நூற்றாண்டு பாரதி,தன் நெஞ்சு பொறுக்காமல் “அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்களென்பர்; துஞ்சுது முகட்டிலென்பார்; அந்த மரத்திலென்பார்; இந்தக் குளத்திலென்பார்"  என்று குமுறினான்.இப்படி  சில பேர் குமுறினாலும் சில சுயமரியாதையுள்ள பெரியார்கள் பேய்களுக்கெதிராக கடும் பிரச்சாரம் செய்தாலும் பேய் விசுவாசிகளின் நம்பிக்கையை இன்றுவரை அசைக்க முடியவில்லை.இது அவர்களின் இடையில் சாதாரணமாக இன்றுவரை காணப்படும் பழமொழியில் இருந்தும் உணரலாம்.இதோ அந்த பழமொழிகள்:  

"பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்"
"பெண் என்றால் பேயும் இரங்கும்"
"நோய்க்கும் பார்க்க வேண்டும்; பேய்க்கும் பார்க்க வேண்டும்."

இவை தமிழர்களின் உள்ளங்களில் பேய்களுக்கு இருக்கும் இடத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.அது மட்டும் அல்ல பிசாசுகள், மோகினி, இரத்தக் காட்டேரி...... என பேய்களுக்கு  இருக்கும் செல்வாக்கு மேலும் சான்றுகள் ஆகின்றன.இவை மட்டும் அல்ல,நாட்டுப்புற மக்களின் உணர்ச்சியின் வெளிப்பாடாக அமையும் ஆடல், பாடல் அடங்கிய  நாட்டுப்புறக் கலைகளிலும்  "பேய் ஆட்டம்" இடம் பெறுகிறது என்றால் பாருங்களேன்!  

பேய் பிடிப்பதும், சாமி ஆடுவதும் ஒன்றோடொன்று தொடர்புடையதே. தற்போது இந்த வழக்கங்கள் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இருப்பினும் ஒரு சிலரிடம்,குறிப்பாக கிராமங்களில் இந்த வழக்கம் இருக்கத்தான் செய்கிறது.சமுதாயக் கட்டுப்பாடுகளால், உள் மனதில் சில அடக்கி வைக்கப்பட்ட ஆசைகள் இருக்கும். இவையே பின்னர் அடக்க இயலாமல் வெளிக் கிளம்பும் போது ஹிஸ்டீரியா[hysteria நரம்புத் தளர்ச்சி நோய்/உள வெறுப்பு நோய்] எனும் மனஅதிர்ச்சி நோயாக மாறுகிறது. இந்த நோயுடையவர்கள்தான் பேய் பிடிப்பதும், சாமி ஆடுவதும் போன்ற செயல்களில் இறங்குகின்றனர் என நம்புகிறேன் மேலும் இந்த நோய் பெரும்பாலும் மத உணர்வு மற்றும் கடவுள் நம்பிக்கை அதிகமுடையவர்களுக்குத்தான் பொதுவாக வருகிறது. 

இறுதியாக தமிழர்களின் நாகரிகம் என கருதப்படும் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து வெளி நாகரிகத்தில் கண்டு எடுக்கப்பட்ட இரண்டு பக்க மொகெஞ்சதார முத்திரை ஒன்று பேய் அல்லது பிசாசு போன்ற உருவத்தை காட்டுகிறது. இதைப்பற்றிய சரியான விளக்கம் இன்னும் இல்லை.ஆனால் பேய்,பிசாசு நம்பிக்கைகள் இதன் மூலம்,அன்றே இருந்திருக்கலாம் என நம்பலாம்.


கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்


பகுதி 18: "பெண்கள்" தொடரும்  

476367140_10227969768452334_3138259764105838817_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=6XPNdotncyEQ7kNvgHLYIhZ&_nc_oc=AdiAtG-HrjLQ5tI7Wjclvkp5QGIYkxjVJFHcZiDs3LrqzeDNQQrIg-U18uoz8s9ylSs&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=ApPO47qWdRBPQE2YzA3l7iB&oh=00_AYAtWjjOBdJYvbRtFpposQKjs24Da5aYr56lvfRiCDsCIQ&oe=67B4FA3B

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 18

"பெண்கள்"

பெண் பிள்ளை பிறப்பு:

"யாயே, கண்ணினும் கடுங் காதலளே

எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப,

எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’

யாமே,......"

[அகநானூறு 12,]

எம் தாய் தன் கண்ணினும் இவள்பால் மிக்க காதலுடையாள். எம் தந்தையும் (இவள் எங்கேனும் செல்வது காணின்) நிலத்தே இவள் அடி பொருந்தி நடக்கப் பொறாதவனாகி, ஏடி! இளைய மகளே!, நின் சிறிய அடி சிவப்புற என் செயச் சொல்கின்றாய் என்று கூறும் - இப்படித்தான் சங்க காலத்தில் பெண் பிள்ளையின் நிலை இருந்தது.

ஆனால் வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்துவிட்டால் கவலை.ஏக்கப் பெருமூச்சு. இதுதான் இன்றுள்ள நிலை. இந்த அவலம் ஏன் நமக்கு ஏற்பட்டது? தமிழன் வரலாற்றில் கிறிஸ்துவுக்கு முன், சங்க கால தொடக்கத்தில் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் ஆரியர் வஞ்சகமாக ஆன்மீக தத்துவங்களை புகுத்தி தமிழ் நாடுகளை அடிபணிய வைத்தார்கள். அதுதான் தமிழ்மக்களின் தமிழ்ப் பெண்களின் வாழ்வுக்கு வீழ்ச்சியாக [அஸ்தமனமாக] இருந்தது எனலாம்.

தாய்வழி மரபு, திராவிடர்களின் அல்லது ஆரியர் அல்லாதவர்களின் சிறப்பியல்பாக / விசேஷ அம்சமாக முன்பு இருந்தது. அது இன்னும் நடைமுறை வழக்காக சில தெற்கு இந்தியா பகுதிகளில் காணப்படுகிறது. திராவிடர்கள் பெண்களுக்கு நன் மதிப்பு கொடுத்தார்கள். இதனால் தான் இன்னும் கிராமிய / நாட்டுப்புற மக்கள் அம்மன் வழிபாட்டில் அடிக்கடி ஈடுபடுகிறார்கள். இது சங்க பாடல்களில் காணக் கூடியதாகவும் இருக்கிறது. பண்டைய தமிழர்களுக்கு மகள் / பெண் தொல்லையாக இருக்கவில்லை. ஆணின் உயிராதாரமான, இன்றியமையாத பாதியாகவே பெண் கருதப்பட்டது. எப்படியாயினும், சங்க காலத்திற்கு பின் இந்த நிலை, ஆரியர் கொண்டுவந்த பல மூட நம்பிக்கைகளாலும் கோட்பாடுகளாலும், மெல்ல மெல்ல சாய / சரிய தொடங்கியது. மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் பெண் பிள்ளை பிறப்பையிட்டு பெற்றோர் புலம்புவதை காணக்கூடியதாக உள்ளது.

பெண் பிள்ளை / மகள், பிறக்கும் வரிசைமுறையில், ஒற்றை எண்ணில் பிறந்தால் நல்லது என்ற நம்பிக்கை உண்டு. அதாவது முதலாவது, மூன்றாவது, ஐந்தாவது, இப்படி பிறந்தால் சிறப்பு என்பார்கள்.நாலாவதாக பிறந்த பெண் பிள்ளை வீட்டை பாழாக்கும் என்பார்கள். அது போல ஐந்தாவதாக பிறந்த பெண் பிள்ளை வீட்டிற்கு தங்கம் கொண்டு வரும் என்பார்கள். ஆனால் ஐந்தாவது ஆண் பிள்ளையோ ஊதாரியாய் எல்லா செல்வத்தையும் அழித்திடுவான் என்பார்கள். ஆறாவது பெண் பிள்ளையோ செழிப்பை அல்லது வறுமையை கொண்டுவரும் என்பார்கள். எட்டாவது பெண் பிள்ளையோ எல்லாவற்றையும் அழித்து விடும் என்பார்கள். "எட்டாவது பெண் எட்டி பார்த்த இடம் குட்டிச்சுவரு" என பழ மொழியும் கூறிச் சென்றுள்ளார்கள்.

மேலும் ஒரு குழந்தை நண்பகலோ நள்ளிரவோ பிறக்கக் கூடாது. அது மட்டும் அல்ல சித்திரை நட்சத்திரத்துடனும் பிறக்கக் கூடாது. ஏன் என்றால் யமனின் நன்றி உள்ள ஏவலர், "சித்திர குப்தன்" பிறந்த நட்சத்திரம் அது. இப்படி பல பல எமது வாழ்வில் வந்து சேர்ந்து விட்டன.

"பல் போனால் சொல் போகும்"

குழந்தையின் முதல் பல் விழும் போது, அதை கவனமாக செழுமை அல்லது வளத்திற்கு இடுகுறியான சாணத்தில் வைத்து வீட்டு கூரையின் மேலாக எறிவார்கள். அப்படி செய்வது விரைவாக பல் வளர வழி வகுக்கும் என்ற நம்பிக்கையால் ஆகும்.

மேலும் குழந்தைக்கு கண்ணாடி காட்டக் கூடாது என்பார்கள். அது குழந்தையை ஊமை ஆக்கிவிடும் என்ற ஒரு நம்பிக்கை அவர்களிடம் இருப்பதால்.

கல்யாணம்:

ஒருவரின் வாழ்க்கையில் கல்யாணம் ஒரு முக்கிய சம்பவம் ஆகும். இங்கும் பல மூட நம்பிக்கைகள் இணைந்து இருக்கின்றன. புது மணப் பெண், அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவருவாள் என நம்பப்படுகிறது. முதல் ஒரு வருடத்தில் நடைபெறும் சம்பவங்களை பொறுத்து மணப்பெண் மங்களகரமானவள் அல்லது அமங்கலமானவள் என கருதப்படுகிறது. என்றாலும் பொதுவாக புது மணப்பெண் மங்களகரமானவள் என்றே கருதப்படுகிறது.

இதற்கு முரண்பாடாக கைம்பெண்ணை [விதவையை] அமங்கலமானவள் என்றே குறிப்பாக கருதப்படுகிறது. இவர்களை எந்த நல் காரியங்களுக்கும் முன் நிற்க அனுமதிப்பதில்லை. அந்த காரியத்தின் வெற்றியை அது குறைக்கும் என்ற நம்பிக்கையாகும். அது மட்டும் அல்ல பிள்ளை பெறாத மலடிகளை [barren woman] தடை செயா விட்டாலும், முடிந்தவரை தவிர்த்து கொள்கிறார்கள். கல்யாணம் சம்பந்தமான நிகழ்வுகளில் சுமங்கலி பெண்களையே [married girl ] முன் நின்று நடத்த அனுமதிக்கிறார்கள். பொதுவாக மணமக்கள் கிழக்கு நோக்கியே மணமேடையில் இருப்பார்கள்.

மேலும் திருமணம் பற்றிய கனவு நல்லதன்று என்றும், இரண்டு திருமணங்கள் ஒரே வீட்டில் ஒரே இடத்தில் நடந்தால் ஒன்று சிறக்கும் மற்றது கெடும் என்றும். மணமான பெண் மாப்பிள்ளை வீட்டில் நுழையும் போது வலது காலை எடுத்து வைத்து நடக்க வேண்டும் என்றும் புது மணத் தம்பதியினர் புது வீட்டில் குடி ஏறக் கூடாது என்றும் கருதப்படுகிறது. அது போல காலையில் சுமங்கலிப் பெண்கள் முகத்தில் விழிப்பது நல்லது என்பார்கள்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி 19: "கர்ப்பிணி [புள்ளதாய்ச்சி]" அடுத்த வாரம்தொடரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 19

"கர்ப்பிணி [புள்ளதாய்ச்சி]"

"அம்ம வாழி தோழி காதலர்

இன்னே கண்டுந் துறக்குவர் கொல்லோ

மு நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ

ஒதுங்கல் செல்லாப் ,பசும்புளி வேட்கைக்

கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு

விசும்பி இவர் கல்லாது தாங்குபு புணரிச்

செழும்பல் குன்றம் நோக்கிப்

பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே."

[குறுந்தொகை287]

இந்த பாடல் வழியே நாம் அறிவது கருவுற்ற மகளிரை நீர் கொண்ட மேகத்துடன் ஒப்பிடுவதையும், கருவுற்ற மகளிர் புளிச்சுவையை மிகவும் விரும்புவர் என்பதையும், மேலும் மகளிர் கருவுறும் காலம் 12 மாதம்? என இப்பாடல் சுட்டும் கருத்து புதுமையாகவும் உள்ளது. [மு நால் திங்கள்-three times four,months, பசும் புளி வேட்கைக் -desire green tamarind ]

கருவுற்ற காலத்தில் முதல் ஒன்பது மாதமும் இந்த குழந்தை எப்படிபட்டது, அதாவது இது கம்பீரமாக இருக்குமா?, பெருந்தன்மையுள்ளதாக இருக்குமா? செல்வச் செழிப்பாக இருக்குமா?, அழகாக இருக்குமா?, பலசாலியாக இருக்குமா? பொறுமையாளியாக இருக்குமா? இப்படியெல்லாம் ஆராய்ந்து கொண்டிருப்பார். இவைகள் சில முட நம்பிக்கைகளை நம்ப வழிவகுக்கிறது.

சூரிய, சந்திர கிரகணத்தின் பாதிப்புக் கருதி, கருவுற்ற பெண்கள் குழந்தைகளுக்குத் தீங்கு ஏற்படாதிருக்க வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அந்நேரங்களில் காய்கறி நறுக்குதல், வெற்றிலை போடுதல், பிற உயிர்களைத் துன்புறுத்துதல் போன்ற செயல்களைச் செய்யக்கூடாது என்றும், கிரகணம் முடியும் வரை எவ்வித உணவும் உண்ணுதல் கூடாது என்றும் நாட்டுப்புற மக்களிடையே நம்பிக்கை காணப்படுகிறது. கருவுற்றிருக்கும் பெண்கள் நாய், பூனை போன்ற விலங்குகளைத் தாண்டிச் செல்லுதல், ஊசி, நூல் இவைகளைக் கொண்டு துணிகளைத் தைத்தல் போன்ற செயல்களைச் செய்யக்கூடாது. மேலும் கருவுற்றிருக்கும் பெண்கள் விரும்பிக் கேட்கும் அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை இன்றளவும் காணப்படுகிறது. மேலும் கர்ப்பனியில் தேரை (toad) பாய்ந்தால் கால் சொத்தியாய் தேய்ஞ்சு பிறக்கும் எனவும் நம்புகிறார்கள். சில மூட நம்பிக்கைகள் அவர்களின் ஒரு பாதுகாப்பிற்காக அந்த காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்படியனவைகளில் ஒன்று கர்ப்பிணி பெண், இரவில் தனிய அலைந்து திரியக் கூடாது அல்லது வெறுமையான வீட்டிற்குள் நுழையக் கூடாது என்பதாகும். அது மட்டும் அல்ல சன நெரிச்சல் கூடிய இடங்கள் அல்லது ஆலயம் போன்றவற்றிற்கும், குறிப்பாக இருட்டில், பிள்ளை பெறுவதற்கு ஒரு சில மாதங்களே இருக்கும் தருவாயில் போவது தடை செயப்படுகிறது. இதற்கு கூறும் காரணம் கெட்ட ஆவிகள் பரவித் தாக்கும் அல்லது அவளுக்கு துயரளிக்கும் என்பது. ஆனால் உண்மையில் அப்படி இல்லை. அந்த கால சூழ்நிலைக்கு ஏற்ப, தனிமையில் அல்லது இருட்டில் போகும் போது, ஒரு அவசரத்திற்கு ஆள் உதவி தேவை என்பதால். அது போலவே அவளின் கணவன் அந்த நேரத்தில் வீடு கட்டக்கூடாது என்பார்கள். அப்படி கட்டிக் கொண்டு இருந்தால் அவனின் முழு கவனமும் கர்ப்பிணியான அவனது மனைவியின் மேல் இருக்காது என்பதே. அது மட்டும் அல்ல ஒரு பெண் கர்ப்பம் தரித்து இருக்கும் போது, கணவனின் இருப்பு, ஒரு தார்மீக கடமையும் கூட. இது அவளுக்கு ஒரு தெம்பு, ஊக்கம் கொடுக்கிறது. இதனால் தான் இந்த தடைகள், ஆவிகள், பேய்கள் எல்லாம். இதனால் தான் கணவனின் தேவையற்ற நீண்ட பயணங்கள் அல்லது ஏதாவது செய்பணி ஒன்றில் ஆழ்ந்த ஈடுபாடு தவிர்க்கப்படுகிறது அல்லது பின்போடப்படுகிறது.

மேலும் கர்ப்பிணி பெண்ணை படம் பிடிக்கக் கூடாது என்றும், அவள் கேட்கும் உணவு பொருட்களை, பயன்படு பொருள்களை [edibles and consumer articles] வாங்க்கிக் கொடுக்க வேண்டும் என்பார்கள். அழகான பெண்ணொருவர் குழந்தை உண்டானால் கர்ப்ப காலம் முன்னோக்கி நகர, அவரது அழகு பின்னோக்கி நகரும். வனப்பும், பொலிவும் குறையும். இயற்கையான தன்மையிது. கர்ப்ப காலம் கடந்து குழந்தைப்பேறு முடியும் வரை அழகு குறித்து மனைவியிடம் வெறுப்பு காட்டக்கூடாது. அன்பு காட்டிப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளணும். அதனால் தான் இப்படியான கட்டலைகள் போலும். இதை உறுதிபடுத்துவது போல விவேகச் சிந்தாமணி பாடல் 16

‘‘கெற்பத்தான் மங்கையருக்கு அழகு குன்றும்.. கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம்.. நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார்... .. "

இப்படி அமைந்துள்ளதோ?

கர்ப்பிணி பெண் வாழும் வீட்டிலோ அல்லது அதை சுற்றியோ உள்ள குளவி அல்லது குருவி [பறவை] களின் கூடுகளை அகற்றவோ அல்லது குழப்பவோ கூடாது என்றும் கூறுவார்கள்.

என்னதான் நாம் மேலே கூறியிருந்தாலும், இன்னும் பெண்ணை சிலர் கேவலமாக அல்லது ஒரு குறைபாடாகத்தான் கருதுகிறார்கள். ஏன் பேயை, பேய் மகன் என்று கூட கூறமாட்டார்கள். அதை பேய் மகள் என்றே பாடல்களில் அழைக்கிறார்கள். அது மட்டும் அல்ல பெண்களை குறிக்கும் சொற்களை பாருங்கள். அதாவது பேதை, மடந்தை, மடவார் ... ஆகியவை முட்டாள்தனமான ஒரு ஆளை குறிக்கிறது என்பது தெரிய வரும். அதே நேரத்தில் ஆண் என்ற சொல்லை பாருங்கள். இது ஆண்மை என்ற சொல்லுடன் தொடர்புடையது. மேலும் கணவன் என்பது "கண் + அவன்" என பிரித்து உணரலாம்? இது மட்டுமா?"ஆசைக்கு ஒரு பெண் .. ஆஸ்திக்கு ஒரு பிள்ளை .", "கோணல் பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை" என்று வேறு சொல்லி விட்டு போயுள்ளார்கள். "பெண் புத்தி பின் புத்தி", "தையல் சொல் கேளேல் /ஆத்திசூடி63" ... இப்படி அடிக்கிக் கொண்டு போகலாம். ஆகவே அதை விட்டுவிட்டு, இறுதியாக விவேக சிந்தாமணி — பாடல் 30 யை கிழே தருகிறேன். பெண்ணின் நிலை சிலர் மத்தியில் என்ன பாடு படுகிறது என்பது புரியும்.

"படியினப் பொழுதே வதைத்திடும் பச்சை நாவியை நம்பலாம்

பழி நமக்கென வழி மறித்திடும் பழைய நீலியை நம்பலாம்

கொடுமதக்குவ டெனவளர்த்திடு குஞ்சரத்தையும் நம்பலாம்

………………

நடை குலுக்கி முகம் மினுக்கி நகை நகைத்திடு மாதரை

நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே"

“உடனே கொல்லும் விஷத்தை நம்பலாம், பழியைக் கருதாத ஒரு வணிகனை வழிமறித்துக் கொலை செய்த பழையனூர் நீலியை நம்பலாம், கொடிய மும்மதங்களை உடைய மலை போன்று வளர்ந்த யானையையும் நம்பலாம் …………….. என்று சொல்லிக்கொண்டே போய்

“நடை குலுக்கி முகம் மினுக்கி நகை நகைத்திடு மாதரை நம்பொணாது மெய் நம்பொணாது மெய் நம்பொணாது மெய் காணுமே” என்று முடிகிறது கவிதை.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி 20: "மற்றவைகளும் முடிவுரையும்" தொடரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டைய தமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி 20

"மற்றவைகளும் முடிவும்"

ஆண்டவன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கைம்மாறு செய்வான் [சரிசமமாகத் திருப்பிக்கொடுபான்] என்ற நம்பிக்கை மக்களை சபதம் செய்ய வைத்து, அதை நிறைவேற்ற வைக்கிறது. அதாவது ஏதாவது ஒன்றை வேண்டி நேர்த்திக்கடன் செய்கிறார்கள். உதாரணமாக பிள்ளை பாக்கியம் வேண்டுபவர்கள், அப்படி ஒரு பாக்கியம் பெற்றால், இதை தருவோம் அல்லது இது செய்வோம் என வேண்டுகிறார்கள். பின் அதை ஒரு நேர்த்திக் கடனாக செய்து வழிபடுகிறார்கள்.

ஒருவர் புது கார் / வாகனம் /வண்டி வாங்கினால் முதல் பயணத்தை ஆலயத்திற்கு செலுத்துகிறார்கள். இவை எல்லாம் ஒரு நம்பிக்கையின் அடிப்படையே.

"தென்னையிளம் நீருக்குள்ளே தேங்கி நிற்கும் ஓட்டுக்குள்ளே

தேங்காயை போலிருப்பான் ஒருவன் - அவனை

தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்"

என்றான் கவியரசு கண்ணதாசன். அதனால் தானோ, என்னவோ தேங்காய் தமிழர்களுடன் ஒட்டிவிட்டது. மேலும் ஒரு தேங்காய் ஆலயத்தில் உடைக்கும் போது, தேங்காயின் கண்ணுக்கு குறுக்காக உடையாமைல் இரண்டு ஒழுங்கான சரிசமமான பாதிகளாக உடைவதையே விரும்புகிறார்கள். அழுகிய அல்லது சிதைந்த தேங்காய் ஆனால் அது பக்தருக்கு விபத்து அல்லது எதிர்பாரா இடையூறு நடைபெறுவதற்கான முன்கூட்டிய அறிவிப்பாக நம்புகிறார்கள். இந்த தேங்காய் உடைத்தல் மிகவும் ஒரு பொதுவான நிகழ்ச்சி. வீட்டிற்கு அத்திவாரம் போடும் போதும் உடைப்பார்கள். வீடு கட்டி முடிந்து, குடி புகும் போதும் உடைப்பார்கள். இப்படியே எல்லா நிகழ்வுகளிலும் உடைப்பார்கள்.

சிதறிய தேங்காய் !

[thanks-eluthu.com/kavithai]

"இருக்கா இல்லையா என்று

தெரியாத சிலைக்கு பால்

அபிசேகமும் நெய்வேத்தியமும்

உயிரோடு இருக்கும் மனிதபிறவிகளுக்கு

பிச்சை காசும் வேண்டுதலுக்கு

உடைக்கும் சிதறிய தேங்காயும்

என்று புரிந்துகொள்ள போகிறது

மனித இனம் அன்பே கடவுள் என்று"

[சைவ சித்தாந்தம் கூறியவாறு ]

அது போல ஆலய தேரின் அச்சு உடையுமாயின், அது அந்த கிராமத்திற்கே துன்பம் நிகழப்போவதாக நம்புகிறார்கள். முதலாவது அறுவடையை ஆலய சமையல் அறைக்கு காணிக்கையாக கொடுக்கிறார்கள். கண்ணாடி உடைவதை தீயசகுனமாக நம்புகிறார்கள். இதனால் எளிதில் உடைகிற பொருட்களாகிய கண்ணாடி போன்ற வற்றை கவனமாக கையாளவைக்கிறார்கள். அந்த காலத்தில் பொதுவாக பெரும்பாலோர் வெறும் காலால்தான் வீட்டிற்குள் உலாவினார்கள் என்பதும் இப்படியான பொருட்கள் காயங்களை ஏற்படுத்தக் கூடியன என்பதும் குறிப்பிடத்தக்கது. இடது கையால் ஏற்பதோ கொடுப்பதோ முன்யோசனையில்லாத செயலாக கருதுகிறார்கள். இது ஏன் என்றால் இடது கை தான் பொதுவாக துப்பரவு செய்யும் வேலைகளுக்கு பாவிப்பதால். அந்த காலத்தில் கையுறையோ கழிப்பறை ரோல் போன்றவையோ இல்லை என்பதால், இந்த முன் ஏற்பாடு. ஏதாவது ஒரு சந்தேகம் ஏற்படும் போது ஆலயத்திற்கு போய், அங்கு கடவுள் காலடியில் இரண்டு சிறு பொதியில் இரண்டு மாறுபட்ட நிறம் உள்ள பூவை வைத்து அர்ச்சனைக்கு பின் ஏதாவது ஒன்றை குறிப்பிலாமல் எதேச்சையாக [தன்னிகழ்வாக] எடுப்பார்கள். அதை கடவுள் கட்டளையாக ஏற்று அதன் படி நடப்பார்கள். புது வருடப்பிறப்பு அன்று கை விசேசம் வாங்கும் / கொடுக்கும் பழக்கம் தமிழர்களிடையில் உண்டு.

பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை என்ன சொல்லுகிறது என்று பாருங்கள். (கடைச்சங்க காலத்தை சேர்ந்த பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று ஆசாரக்கோவை)

30. உறங்கும் முறை (இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

"கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுது

வடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள்

உடற்கொடுத்துச் சேர்தல் வழி."

படுக்கும்பொழுது கடவுளை வணங்கி, வடதிசையில் தலை வைக்காமல், மேலே போர்த்துக் கொள்ளப் போர்வையை போர்த்திப் படுத்தல் ஒழுக்கமாகும் என்கிறது.

என்ன தான் நாம் 21வது நூற்றாண்டில் வாழ்ந்தாலும் கணினி யுகமாக இருந்தாலும் மனிதன் மூட நம்பிக்கைகளை விடுவதாக இல்லை. எத்தனை பகுத்தறிவு பகலவன் வந்தாலும் மக்கள் மூட நம்பிக்கைகளை மட்டும் விட மாட்டார்கள் என்பது மட்டும் எனக்கு புரிகிறது.

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது"

இது எல்லோருக்கும் தெரிந்த பழமொழி. வளரும் வயதிலேயே நல்ல விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் அது எக் காலத்துக்கும் நின்று நிலைக்கும் என்பதே அதன் பொருள். ஆகவே மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மை குறித்த விளக்கங்கள் அல்லது பிரச்சாரம் இடைவிடாது இளம் வயதினருக்கு நடத்தப்பட வேண்டும் என நம்புகிறேன்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி 21 : "முடிவுரை" தொடரும்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.