Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுயநிர்ணய உரிமையும்-வைக்கல் பட்டடை மனிதர்களும்

ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

tna.jpg

அமெரிக்கா ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு முறை கூறியுள்ளதை எமது வார்த்தையில் இங்கு குறிப்பிட விரும்புகிறேன் – “எல்லா நேரங்களில் சிலரையும், சில நேரங்களில் எல்லாரையும் மடையர் ஆக்க முடியும். ஆனால் எல்லா நேரங்களில் எல்லாரையும் மடையர் ஆக்க முடியாது”

இக்கூற்று, இன்றைய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி)/தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அவர்களது அங்கத்தவர்கள், விசேடமாக தமிழ் அங்கத்தவர்களிற்கு மிக அருமையாக பொருந்தும் கூற்று. காரணம், உண்மை, நடைமுறைச் சாத்தியங்கள், சரித்திரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட சில ஆய்வையும் ஆலோசனையையும் இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.

இலங்கையின் தற்போதைய ஜே.வி.பி/தே.ம.ச அரசாங்கம், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றது மட்டுமல்லாமல், தமிழ் மக்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கில் விசேடமாக தமிழர்களது கலாசார பட்டினமான, யாழ்.மாவட்டத்தில் மூன்று ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுள்ளார்கள் என்பதை இங்கு யாரும் மறுக்கவில்லை.

யாழ்.மாவட்டத்தில் ஜே.வி.பி/தே.ம.ச இம்முறை பெற்ற வெற்றியை உலகம் புதிதாக பார்த்தாலும், முன்பும் தெற்கின் தேசிய கட்சிகள், யாழ்.மாவட்டத்தில் வெற்றி பெற்றது மாத்திரமல்ல, தெற்கின் தேசிய கட்சிகளுக்கு ஆதரவான தமிழ் கட்சியென கூறப்படும் கட்சியும், இங்கு வெற்றி பெற்றுள்ளன. சுருக்கமாக கூறுவதானால் அறிவுபூர்வமாக நாம் இவற்றை ஆராய்வோமானால் இந்த வெற்றிகளுக்கு வெற்றிகளிற்கு பல விளக்கங்கள் கொடுக்க முடியும்.

ஆனால் வெற்றிகளை பெற்றதற்காக ஜே.வி.பி/தே.ம.ச. அரசாங்கமோ அவரது அங்கத்தவர்கள், விசேடமாக தமிழ் அங்கத்தவர்கள், தாம் எண்ணியவாறு கருத்துக்களை முன் வைப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

உதாரணத்திற்கு, வடக்கு, கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள் பற்றி கதைக்கும் பொழுது, சர்வாதிகார போக்கில், தமது மனதில் உதித்தவற்றை கூறி, இவர்களிற்கு வாக்களித்த தமிழ் மக்களின் வெறுப்பை தேட முயற்சிப்பது,  இவை ஜே.வி.பி/தே.ம.சக்தியின் கொள்கையா என எண்ணத் தோன்றுகிறது.

தமிழ் மக்கள் குறிப்பிடும் வடக்கு, கிழக்கின் சிங்கள குடியேற்றங்கள் என்பன அவ்வப்பொழுதில் பதவியிலுள்ள சிங்கள பௌத்த அரசுகளின் – தயவு, ஆதவு, ஆயுத பலத்துடன், முற்றுமுழுதாக, வடக்கு – கிழக்கில் பூவியியல் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கங்களுடன் மேற்கொள்ளப்படுபவற்றையே.இவை 1948ம் ஆண்டில் கல்லோயாவில் ஆரம்பிக்கப்பட்டு இன்று, வடக்கு, கிழக்கின் பல பிராந்தியங்களிற்கு வியாபித்துள்ளது. அது மட்டுமல்ல, வடக்கு, கிழக்கில் மூலை முடுக்குகளில் உள்ள பழம்பெரும் சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டு, பௌத்த ஆலயங்கள், சிறிலங்காவின் ஆயுத படைகள், பௌத்த குருமார்களுடைய உதவியுடன் முன்னெடுக்கப்படுகின்றன.

சரித்திரம் தெரியாத ஜே.வி.பி/தே.ம.ச

இதற்காக சரித்திரம் அறவே தெரியாத ஜே.வி.பி/தே.ம.சக்தியின் தமிழ் அங்கத்தவர்கள், தமது அரசாங்கத்திற்கு தமது விசுவாசத்தை காட்டுவதற்காக, சரித்திரத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களை கதைப்பது என்பது இது ஓர் சர்வாதிகார அரசாங்கமாக மாறுமா என்ற எண்ணம்  மக்களிடையே உருவாக்கப்படுகிறது.

தற்போதைய அரசும், அவர்களது அங்கத்தவர்களும், நீதியின் அடிப்படையில் தமிழ் மக்கள் வேறு இடங்களில் வாழ்வது பற்றி அறிந்து – புரிந்து கொள்ள வேண்டுமானால், இவர்கள் இலங்கைத் தீவின் சரித்திரம் மட்டுமல்லாது, 1948ம் ஆண்டிற்கு முன்பிருந்து இலங்கைத் தீவின் இன ரீதியான சனத்தொகையை மனதில் கொள்ள வேண்டும். அத்துடன் வடக்கு, கிழக்கு, மலையகம் தவிர்ந்த பிரதேசங்களில் எந்தனை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்றிலிருந்து இன்றுவரை தெரிவாகியுள்ளார்கள் என்பதையும் அறிய வேண்டும்.

யுத்தம் முடிவடைந்த நாளிலிருந்து ராஜபக்சக்கள் கூறிவந்துள்ள கருத்துக்களையே இன்றைய ஆட்சியாளர்களும் கூறி வருகிறார்கள்.ஒன்று, இலங்கையில்   தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் என்ற பேதமின்றி, யாவரும் “இலங்கையை சார்ந்தவர்களாம்” என கூறுகிறார்கள்.
இலங்கைத் தீவிற்கு முன்பு இருந்த பெயர்கள் யாவற்றிற்கும், தமிழிற்கும் நிறைய தொடர்புகள் இருந்துள்ளன. ஆனால், சிறிலங்கா எனும் பொழுது, “லங்காவின்” அர்த்தம் தெரியாத தமிழர்களே இதை ஏற்றுக்கொள்வார்கள்.

சரித்திரத்தை புரட்டி பாருங்கள்! இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்த பொழுது, தமிழ் தலைவர்களின் சுதந்திரத்திற்கான பங்களிப்பையும், நாம் “இலங்கையர்கள்” என்று வாழ்வதற்கு தமிழ் தலைவர்கள் அன்று கொடுத்த ஒத்தாசையை சிங்கள பௌத்தர்கள் மறந்து விட்டார்கள். ஆனால் பௌத்த – சிங்கள தலைவர்கள், முழு இலங்கைத் தீவையும் முற்றுமுழுதாக சிங்கள – பௌத்த தீவாக மாற்ற திட்டங்கள் வகுத்த காரணத்தினாலேயே, தமிழ்த் தலைவர்கள் தமக்குள் எந்த ஆலோசனை – ஒற்றுமையின்றி ஐம்பதிற்கு ஐம்பது, சமஸ்டி, சுயாட்சி, மாநில சுயாட்சி, மாவட்டம் என மாறிமாறி பேரம் பேசி, இறுதியில் தனி நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து, ஜனநாயக தேர்தலில் வெற்றியும் கண்டார்கள்.

இரண்டாவதாக, சிறிலங்காவில் எந்த இடமானாலும் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ உரியதல்ல யாவரும் தாம் விரும்பிய இடங்களில் வாழ உரிமை உடையவர்கள்” என ராஜபக்சக்கள் கூறினார்கள்.  ஜே.வி.பி./தே.ம.ச அரசாங்கமும் அவர்களது அங்கத்தவர்களும் கூறிவருகிறார்கள்.

அப்படியானால், தமிழர் முன்பு வாழ்ந்த தெற்கு பகுதிகளான – கதிர்காமம், அம்பாறை, மலைநாடு, மட்டக்களப்பு, திருகோணமலை, நீர்கொழும்பு, புத்தளம், உடப்பு போன்ற பல பகுதிகளிலிருந்து தமிழர்கள், இனக் கலவரம் என்ற போர்வையில், அன்றைய சிங்கள – பௌத்த அரசுகளின் உதவியுடன் விரட்டி கலைக்கப்பட்ட தமிழர்களை, இன்றைய அரசாங்கம் மீள் குடியேற்றம் செய்ய முன் வருமா?

கதிர்காமத்தின் ஸ்தாபகர்கள்

வழிபாட்டு தலமான கதிர்காமத்தின் ஆதி குடிமக்கள், ஆதி ஸ்தாபகர்கள் யார் என்பது ஜே.வி.பி/தே.ம.சக்தியினருக்கு தெரியுமா? இன்றைய கதிர்காமத்தில் தமிழரின் பங்கு என்ன என்பதை இவர்களால் கூற முடியுமா?

கீரிமலையை அண்டிய பகுதிகளில், சிங்களக் குடியேற்றங்கள் மிக அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பாரிய புத்த கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் உள்ள “ஈஸ்வரங்கள்” யாவும் நாளுக்கு நாள் அவற்றின் முக்கியத்துவங்களை இழந்து வருகின்றன. இவை யாவும் இலங்கைத் தீவில் தமிழர்களின் சரித்திரத்தின் உறுதியான சாட்சிகள் என்பதை தற்போதைய அரசு புரிந்து செயற்பட வேண்டும்.

இலங்கைத் தீவில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னைய ஐந்து பாடல் பெற்ற தலங்களான “ஈஸ்வரங்கள்” உள்ளன. திருகோணமலையில் “திருக்கோணேஸ்வரம்”, சிலாபத்தில் “முன்னேஸ்வரம்”, மன்னார்-பாலாவியில் “திருக்கேதீஸ்வரம்” ஆகியவையும் – நான்காவதாக காலியிலிருந்த “தொண்டேஸ்வரம்”, போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் முற்றாக அழிக்கப்பட்டு, அதே இடத்தில் இன்று பௌத்த விதிமுறைகளுக்கு அமைய, ஓர் விஷ்ணு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது “ஈஸ்வரம்”, காங்கேசன்துறையில் உள்ள கீரிமலையில் “நகுலேஸ்வரம்” உள்ளது. இவை யாவும் பௌத்த – சிங்களம் இலங்கைத் தீவில் உருவாகுவதற்கு முன்பு அங்கு காணப்பட்டவை.

நாம் 60, 70களில் திருகோணமலை பட்டினத்திற்கு சென்ற வேளையில், திருகோணமலை பட்டினத்தில் சிங்களவர் யாரும் வாழவில்லை. திருக்கோணேஸ்வரத்தை அண்டிய பிரேட்ரிக் கோட்டையினுள் சில சிங்களவர்கள் வேலை செய்வதைக் கண்டோம். ஆனால், நாம் 2004ம் ஆண்டு அங்கு சென்ற சமயம் திருகோணமலை பட்டினம் மட்டுமல்ல, அதன் விவசாயக் கிராமங்களான தம்பலகாமம், சுடுநீர் கிணறுகள் உள்ள கன்னியா போன்ற இடங்களில் சிங்களவர்கள் குடியேறியுள்ளது மட்டுமல்லாது, இந்துக் கோயில் அழிக்கப்பட்டு அங்கு புத்த கோயில்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் நிம்மதியாக – நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம், உடப்பு, வவுனியா போன்ற பகுதிகளில் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று அங்கு வாழும் தமிழர்களின் எண்ணிக்கை என்ன? மன்னார், பாலாவி, திருக்கேதீஸ்வர பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் – சிங்கள இராணுவத்தின் தொல்லையாலும், உயர் பாதுகாப்பு பிரதேசம் என்ற காரணங்களினாலும் வெளியேற்றப்பட்டனர்.

சுயநிர்ணய உரிமை

இலங்கைத் தீவில், வடக்கு – கிழக்கை தமிழர் தாயகமாக கொண்ட மக்களின் அரசியல், சமூக, கலை கலாசார வாழ்க்கை என்பது எழுபது தசாப்தங்களிற்கு மேல் இரத்தக்களரி கொண்ட இருண்ட காலமாகும்.
பிரித்தானியர் இலங்கைத் தீவிற்கு சுதந்திரம் கொடுக்கும் பொழுது செய்த தவறினால், இன்று எமது சந்ததியினர் காலம் காலமாக, சிங்கள – பௌத்தர்களிடம் எமது அரசியல் உரிமைக்கு கையேந்தி நிற்பதுடன், எமக்கு இன்றுவரை கிடைத்தவை யாவும், இன அழிப்பும், பொருளாதார வீழ்ச்சியும், எமது பிரதேசங்களை நாளுக்கு நாள் பறி கொடுத்து வருவதும் மாத்திரமே.

கம்யூனிசம், சோசலீசம் பேசிய சிங்கள – பௌத்தர்களினால், 1972ம் ஆண்டு உருவாக்கப்பட்ட, குடியரசு அரசியல் யாப்பு, தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தி எமது அரசியல் உரிமைக்கு போராடத் தூண்டியது. இதை அடுத்து கொண்டுவரப்பட்ட 1978ம் ஆண்டு யாப்பு, இராணுவ அடக்கு முறை, பயங்கரவாத சட்டம், ஆறாம் திருத்த சட்டம் யாவும், வடக்கு – கிழக்கு வாழ் இளைஞர்களுக்கு பாரிய ஆயுத போராட்டம் மூலமே எமது அரசியல் இலட்சியத்தை அடைய முடியுமென்ற வைராக்கியத்தை கொடுத்துள்ளது.
சிங்கள – பௌத்த அரசிற்கு எதிராக ஆயுதம் ஏந்திய தமிழ் குழுக்களில் பல, சிங்கள அரசுடன் இணைந்து, வடக்கு கிழக்கில் சகல கட்டமைப்புகளுடன் உருவாகி வந்த நடைமுறை அரசை அழிப்பதற்கு துணை போனார்கள். இவர்கள் வெற்றிகரமாக நடந்த ஆயுத போராட்டத்தையும் நடைமுறை அரசையும், சிங்கள – பௌத்த இராணுவத்துடன் தோழிற்கு தோழ் துணை நின்று அழித்தார்கள் என்பது சரித்திரம்.

நடைமுறை அரசு

இன்று போர் முடிந்து பதினைந்து வருடங்களாகியும், தமிழர்களின் நடைமுறை அரசிற்கு எதிராக அரசுடன் இணைந்து போராடிய தமிழ் குழுக்கள், தமிழ் மக்களிற்கும், அவர்களது தாயக பூமிக்கும் எவற்றை வெற்றியாக வென்று கொடுத்தார்கள்?

உண்மையை ஒழிப்புமறைப்பின்றி கூறுவதானால், ஆயுத போராட்டத்தில் பங்கு கொண்டு, இறுதியில் சிங்கள – பௌத்த அரசுடன் இணைந்த அத்தனை தமிழ் குழுக்களும், சில புலிகளின் முக்கியஸ்தர்களும் உட்பட, தமிழ் மக்களின் ஆயுத வெற்றிகளை நிர்மூலமாக்க பாவிக்கப்பட்டார்கள். அதாவது இவர்கள் யாவரும் “எமக்கு மூக்கு போனாலும் பறவாயில்லை, இராணுவத்திற்கு அல்ல, எதிரியான புலிகளிற்கு, சகுனம் பிழைத்தால் போதும்”  என்ற அடிப்படையிலேயே இயங்கினார்கள்.

இவர்கள் யாரும் ஒரு பொழுதும், சிங்கள – பௌத்த அரசிடம், நீங்கள் எங்களை தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்கு பாவிக்கிறீர்கள், அவர்களை அழித்த பின்னர், எமது தமிழீழ மக்களிற்கு என்ன அரசியல் தீர்வு தருவீர்களென்ற கேள்வியையோ, ஒப்பந்தமோ, பேச்சுவார்த்தையையோ எந்த சிங்கள – பௌத்த அரசுடனும்  அறவே நடத்தியவர்கள் அல்ல. இது இவர்களது தமிழின பற்றையும் நிலபற்றையும் இலக்கையும் தெளிவாக காட்டுகிறது.வேறு விதமாக கூறுவதானால், இவர்கள் யாவரும், ‘வைக்கல் பட்டடை மனிதர்களானார்கள்’ என்பதே உண்மை.

இன்று என்ன நடக்கிறது என பார்ப்போமானால், அரசியல்வாதிகள் எனும் தேர்தல்வாதிகள், “கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரத்திற்கு” தயாராகிறார்கள். தமிழர் கூட்டமைப்பை எந்த முன் – பின் யோசனை- ஆலோசனையின்றி குழப்பிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதே கூட்டமைப்பிலிருந்த, தமிழரசு கட்சி சிறிதரன், ரெலோ அடைக்கலநாதனுடன் மீண்டும் இணைவது பற்றி மந்திர ஆலோசனை நடத்த போகிறார்களாம்! உண்மையை கூறுகிறேன், தமிழரசு கட்சி பல பிரிவுகளாக இன்று உள்ள நிலையில் இவர்களால் என்ன செய்ய முடியும்?

 மீண்டும் கூட்டமைப்பா?

இவற்றை தமிழர் கூட்டமைப்பை குட்டிச்சுவராக்க பிள்ளையார் சுழி போட்ட பொழுதே முடிவெடுத்திருக்க வேண்டும். அடுத்த வேடிக்கை என்னவெனில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் புலவர், பேச்சாளர், மீண்டும் ஒற்றுமையாவதற்கு வாக்குறுதிகள் கேட்கிறார். இதைத்தான் சொல்வது, ‘விழுந்தாலும் மீசையில் மண் படவில்லையென’. கடந்த பாராளுமன்ற தேர்தலில் குறைந்தது பத்து பாராளுமன்ற ஆசனத்தை எதிர்பார்த்தவர்கள், இன்று அருந்தப்பில் ஒரு ஆசனம் பெற்றவர், மீண்டும் கூட்டமைப்பாம். இவ்  முன்னெடுப்பால் தமிழரசு கட்சியிலிருந்து வெளியேற்றப்படாமல் தப்பியுள்ள கிளிநொச்சி அதிபரும், கோட்டை விடப்போகிறார்.
வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் பேரம் பேசும் அரசியல் என்பது, ஆயுத போராட்டத்தின் வெற்றிக்  காலத்தில் மட்டுமே காணப்பட்டது. இது தவிர்ந்த காலங்களில், எந்த சிங்கள- பௌத்த அரசும், தமிழ் மக்களை ஒரு இனமாக, மனிதர்களாக பார்க்கவில்லை என்பதே உண்மை. இன்று ஜே.வி.பி/தே.ம.சக்தி பதவிக்கு வந்து இவ்வளவு காலத்தில், தமிழர் அரசியல் உரிமை பற்றி ஏதை கதைத்தார்கள், ஆலோசித்தார்கள், உரையாடினார்கள். யாவும் பிரசார மேடைகளில் தான்.

உதாரணத்திற்கு, தமிழரசு கட்சியின் ஓர் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய பிரதிநிதி ஒருவர் கூறியதை, அறிந்து சிரித்தோம். காரணம் – தமிழ் அரசில் கைதிகள், காணிகள் யாவும் தமது முன்னெடுப்பினால் விடுவிக்கப்பட்டவையாம். அருமையான தேர்தல் பிரசாரம். இதனால் தான், இப்பெயர்வழி தோற்கடிக்கப்பட்டாரோ தெரியவில்லை.

இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற போர்வையில் சந்திக்கும் பல சர்வதேச பிரதிநிதிகளை நாங்களும் சந்தித்து கொண்டு தான் இருக்கிறோம். ஆகையால், தமிழ் அரசில் கைதிகளின் விடுதலைக்கும், காணிகள் விடுவிக்கப்படுவதற்கும் – ஐ.நா.விசேட பிரதிநிதிகளின் வேண்டுகோள்கள், ஐ.நா.மனித உரிமை சபை தீர்மானங்கள், இந்தியா உட்பட, முக்கிய நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளின் அழுத்தங்களும், சர்வதேச மனித உரிமை மனிதாபிமான அமைப்புகளின் அழுத்தங்களுமே முக்கிய காரணி என்பதே உண்மை.

அன்று இந்தியாவின் துணை, பாதுகாப்பு ஆகியவற்றுடன், வடக்கு – கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக கடமையாற்றிய வரதராஜ பெருமாள் கூறுகிறார், “ஈழத் தமிழர் விடயத்தில் தலையிட வேண்டிய கட்டாயம் தற்பொழுது இந்தியாவிற்கு இல்லையாம்”. இந்தியாவிற்கு மிக நெருக்கமாக இருந்த வரதராஜ பெருமாள், தமிழீழ பிரகடணம் செய்ததை மறந்துவிட்டாரோ தெரியவில்லை. வடக்கு – கிழக்கு வாழ் மக்களின் அரசியல் உரிமைக்கு உறுதி கொடுத்த இந்தியா, தமிழர்களிற்கு ஓர் நிரந்தர அரசியல் தீர்வை பெற்று கொடுக்கும் வரை, பின்னிற்க முடியாது என்ற கருத்தே  பெரும்பான்மையான தமிழ் மக்களின் அபிப்பிராயம்.இன்று தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வில் உறுதி ஆரோக்கியமற்ற நிலையில், எமது தமிழ் இளைஞர்கள், 1972ம் ஆண்டின் நிலைக்கு தள்ளப்பட்டால், எந்த ஆச்சரியமும் இல்லை.

அனுபவ ரீதியாக நாம் கண்ட உண்மை என்னவெனில், உலகில் பல அரச குடும்பத்தினர், ஜனாதிபதிகள், பிரதமர் போன்றோர் – விஞ்ஞானி ஐசாக் நியூட்டனின், “இசைவாக்க சட்டத்திற்கு” ஆளாகியுள்ளனர். இசைவாக்க சட்டம் என்ன கூறுகிறதெனில், “ஒவ்வொரு தாக்கத்திற்கும் எப்பொழுது சமனான அல்லது எதிர்மாறான தாக்கம் உண்டு” என்பதுடன், புவியின் ஈர்ப்பு சக்தி காரணமாக, “மேலே போகும் ஒவ்வொரு பொருளும், கீழே வந்தாகவே வேண்டும்” என்பதே.

ஆகையால் முன்னைய சகல சிறிலங்கா ஜனாதிபதிகளையும், அவர்களது அரசாங்கங்களது அகங்காரம் கொண்ட ஆட்சிக் காலத்தை பார்த்தோம். இப்பொழுது அவர்களிடம் ஆட்சியில்லாத வேளையில் எவ்வளவு பரிசுத்தமானவராக நடிக்கிறார்கள் என்பதை பார்க்கிறோம். இதேபோல் ஜே.வி.பி/தே.ம.ச ஆட்சிக்  காலத்தையும், எதிர்காலத்தையும்  பார்க்கத்தான் போகிறோம்.
 

 

https://thinakkural.lk/article/314775

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.