Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"இந்த சுதந்திர தினத்தன்று (04/02/2025)"

 

காலைக் கதிரவன் பொற் கதிரில் 
உண்மைச் சுதந்திரம் தேடிச் சென்றேன்
வெளிச்சத்தில் மிளிரும் இலங்கை மண்ணில்  
விடுதலையின் முகம் நான் கண்டேனா? 


உண்மைச் சுதந்திரம் நியாயமாக இல்லையே 
தன்னாட்சி தன்னிறைவு கொண்ட நாட்டில் 
விடுதலை ஓங்கும் சுதந்திரம் மலருமென்று
அமைதியான காற்றில் எதிரொலி கேட்கிறதே? 


காலனித்துவ சங்கிலிகளை அறுத்து எறிந்து   
எழுபத்தேழு நீண்ட ஆண்டுகள் இன்று
நீதியின் வெளிச்சம் சமமாக வீசுகிறதா
பெண்கள் தலைநிமிர்ந்து வாழ்வது எப்போ? 


மழலைகள் சிரித்து ஓடி விளையாட 
ஆபத்து நிழல்கள் மறைய வேண்டுமே
அறிவியல் சிறகுகளால் எதிர்காலம் உறுதியாக 
சமத்துவ கல்விவாய்ப்பு என்று வருமோ? 


சாதியும் மதமும் பிரித்து ஆழ 
ஊழல் நச்சு மழையாய் பொழிய 
அதிகார ஆட்சியின் அயோக்கிய கரங்களில்
நம் எதிர்காலம் இருளாகி மங்கிற்றோ?
 

அடிமட்ட ஊழியர்முதல் உயர்மட்ட ஊழியர் வரை
வழமையான உரிமைக்கே போராட்டம் இங்கே 
எரிவாயுவுக்கும் கையூட்டு வெதுப்பிக்கும் கையூட்டு
நீதிக்கும் கையூட்டு சுதந்திரத்தின் விலையெதுவோ? 


தலைநிமிர்ந்து வாழ்ந்த ஈழ மண்ணில் 
அரசியலின் சிப்பாய்கள் திரண்டு அணிவகுக்க 
பேராசையும் வெறுப்பும் தூவி விதைக்க  
சிறுபான்மை சமமாக நிமிர்வது எப்போது?


வெறுப்பின் நஞ்சு சிந்தும் போதனைகளும்  
உண்மையை நொறுக்கும் திரிக்கப்பட்ட வரலாறும் 
ஊடக கண்ணாடியும் உண்மையைப் பொய்யாக்க 
அரசியல் கருங்கூட்டத்தில் விடுதலை எப்போது?


ஆலயங்கள் இடிபட்டால் நம்பிக்கை நழுவுமா 
காணிகள் பறிபட்டால் வாழ்வு குலையுமா 
குரல்கள் நசுக்கினால் உண்மைகள் முடங்குமா  
கயவர்களின் சங்கிலிகள் விழிப்பைத் தராதா? 


முடிவற்ற வாழ்வின் இரவை விடியலாக்க
கனவு காண்கிறேன் இன்னும் போராடுகிறேன்
வலிக்கு அப்பாற்பட்ட ஒரு ஒற்றுமைக்காக
கைகள் இணைந்து உள்ளங்கள் சேராதா?    
 

வெறுப்பு தணிந்து காயங்கள் குணமாகும்போது
நீதி நிலைத்து உண்மை முத்திரையிடப்படும் போது
இதயங்களில் அது தினம் வாழுமே
சுதந்திரம் வாழ்த்த ஒருநாள் போதுமா?


சாதி மதம் மனிதனை பிணைக்காதபோது 
அனைவரும் மன்றாடாமல் வாழும் போது 
சமதர்ம சேவை வழங்கும் போது 
விடுதலை இதுவே என்று அழைப்போமா?   


நீங்களும் நானும் உணர்வுடன் எழுவோம்
எங்கள் நாட்டை மகிழ்வாக வடிவமைப்போம் 
சுதந்திரம் என்பது ஒருநாள் கொண்டாடமல்ல   
நாம் நம்விதியை மாற்றிக் கொள்வோமா?


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்]  

  


சுதந்திர தினத்தன்று, நான் இணையத்தில் சுதந்திரம் என்ற வார்த்தையின் நேரடி அர்த்தத்தைத் தேடினேன், இதுதான் நான் அங்கு அறிந்துகொண்டது. 


'தன்னாட்சி', 

‘தன்னிறைவு’, 

தடை அல்லது கட்டுப்பாடு இல்லாமல் ஒருவர் விரும்பியபடி செயல்பட, பேச அல்லது சிந்திக்க வழிவிடும் ஒன்று ', 

'அதிகாரத்தால் விதிக்கப்படும் அடக்குமுறைக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்ட நிலை', 

அப்படியென்றால், இலங்கைவாழ் நாம், குறிப்பாக தமிழ் பேசும் நாம், உண்மையில் சுதந்திரமானவர்களா?’


அரசியலமைப்பில் சுதந்திர நாடாக இருந்தால் போதுமா? 


நாம் முழு சுதந்திரத்துடன் வாழ்கிறோமா, உண்மையில் விடுதலை பெற்றோமா? 


நாம் சிந்திக்க வேண்டிய சில கேள்விகள் இவை ...


இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் பிடியில் இருந்து நாம் விடுபட்டு இன்றுடன் 77 ஆண்டுகள் ஆகின்றன. 77 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்று எங்கே நிற்கிறோம்?


நம் பெண்கள் தங்களுக்கு எதிரான அட்டூழியங்களில் இருந்து சுதந்திரத்தை, விடுதலையை உணர்கிறார்களா? 


இன்று நம் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?


எங்கள் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் தொழிலைத் தேர்ந்தெடுக்க சுதந்திரம் உள்ளதா? 


நமது மாணவர்கள் தகுதியின் அடிப்படையில் உயர்கல்வி பெறுகிறார்களா?  


சாதிப் பாகுபாட்டிலிருந்து நமக்கு விடுதலை உண்டா? 


நம் நாட்டில் இனவாத பதற்றத்தில் இருந்து விடுதலை கிடைத்து விட்டதா? 


ஊழலில் இருந்து விடுதலை கிடைத்து விட்டதா? 


நியாயமான மற்றும் இணக்கமான சமூகங்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக வெறுப்பு வன்முறை மற்றும் பாகுபாட்டை ஊக்குவிக்கும் ஊழல், குற்றவியல் அரசியல்வாதிகள் அல்லது ஊழல்வாதிகள்,  குற்றவியல் [கிரிமினல்] மதத் தலைவர்கள் / ஆன்மீகத் தலைவர்கள் ஆகியோரிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்றிருக்கிறோமா? 


வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற அடிப்படைப் பிரச்சனைகளில் இருந்து குறைந்தபட்சம் விடுதலை கிடைத்திருக்கிறதா?  


உங்கள் பதில் இல்லை என்றால், அடிமைப்படாத சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எங்கள் நம்பிக்கையை, மறுபரிசீலனை செய்ய வேண்டுமா?


ஊழல் என்பது இலங்கையர்களை ஆட்டிப் படைக்கும் மற்றும் இலங்கையின் பொருளாதார அமைப்பை மோசமாக பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும். நாம் சுதந்திர நாடாக அரசியல் அமைப்பில் இருந்தாலும், பெரும்பாலான அரசு அலுவலகங்கள்  ஊழலில் இருந்து விடுபட முடியவில்லை. சிறிய பியூன்கள் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வரை ஊழலில் ஈடுபடும் சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். 


சுதந்திரம் என்றால் தன்னாட்சி [சுயராஜ்யம்] என்று பொருள் 


இலங்கையில் உள்ள மக்களாகிய நாம் அடிப்படை ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும், போக்குவரத்து காவல்துறைக்கு, அரசாங்கத்தில் கடமையாற்றும் எழுத்தர் / பியூனுக்கும் கூட கையூட்டு [லஞ்சம்] கொடுக்க வேண்டும். எரிவாயு இணைப்பு பெறக்  கூட அதே நிலைமை தான். அப்படி என்றால், இது சுதந்திரமா, நாம் உண்மையில் தனித்துவமாக இயங்குகிறோமா?


சாதி, மத மற்றும் இனப் பாகுபாடு இலங்கை சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் மற்றொரு பெரிய சமூகத் தீமையாகும்.


கல்வி மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் முன்னேறிச் சென்றாலும், அரசியல்வாதிகள் மற்றும் உயர் நிர்வாக அதிகாரிகளின் ஆதரவுடன் வன்முறைகள் நம் நாட்டின் மூலை முடுக்குகளில் இன்னும் நிகழ்ந்து வருகின்றன. 


அப்படியானால் நாம் உண்மையில் சுதந்திரமா?


சமூக-கலாச்சார, மத, மொழியியல் மற்றும் புவியியல் வேறுபாடுகளைக் கொண்ட எந்தவொரு தேசத்திற்கும் தேசிய ஒருங்கிணைப்பு இன்றியமையாதது மற்றும் நம்மைப் போன்ற ஒரு நாட்டிற்கு அது இன்னும் அவசியமானது.  


அதுமட்டும் அல்ல, இலங்கையில் நடக்கும் மத, இனவாத வன்முறைகள் நமக்கு பல கேள்விகளை எழுப்புகிறது. 


சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன பிறகும், இலங்கையில் இனவாத வன்முறையை நிறுத்தவும், அனைத்து குடிமக்களையும் சமமாக மதிக்கவும், நடத்தவும் வேண்டி, நாங்கள் இன்னும் போராடி வருகிறோம். 


நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக பெருமளவிலான இலங்கையர்கள் பாடுபடுகின்ற போதிலும், இலங்கையில் சில குழுக்கள், கட்சிகள், மத அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும்  அரசியல்வாதிகள் நாட்டைப் பிரித்து ஆட்சி செய்ய இலங்கையில் செயற்படுகின்றனர்.


அரசியல் கட்சிகள் தங்கள் நலனுக்காக சமூகங்கள் மத்தியில் வகுப்புவாத வெறுப்பை உருவாக்கி வருகின்றன. நமது கல்விப் பாடத்திட்டத்தில் வகுப்புவாதம் புகுத்தப்பட்டுள்ளது, வரலாறு மாற்றப்பட்டுள்ளது, அரசியல் கட்சிகள் மற்றும் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் இவை அனைத்திலும் தன் குற்றவியல் பங்கை ஆற்றி வருகின்றன. 


தவறான மனநிலை கொண்ட சிலரின் வலையில் அல்லது ஊடகங்களின் தந்திரங்களில் நாம் சிக்கக்கூடாது. 


சுதந்திரமான சிந்தனையை உருவாக்குவோம் 

மத சகிப்புத்தன்மை, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளுவோம் 

இலங்கையின் ஒவ்வொரு குடிமகனின் கலாச்சாரம், மொழி, மதம் போன்றவற்றைப் போற்றுவோம்.


நான் நம் நாட்டைப் பற்றிய எதிர்மறைகளை மட்டும் இங்கு சுட்டிக் காட்டுவது என் நோக்கம் இல்லை, சுதந்திரத்திற்குப் பிறகு நாம் பல நேர்மறையான மாற்றங்களைச் சந்தித்துள்ளோம். நான் ஒரு பெருமைமிக்க இலங்கையனாக இருப்பதால், இலங்கையர்களாகிய நாம் ஒன்றுகூடி, நமது வலயங்களிலிருந்து வெளியேறி, நமது பெரிய நாடான இலங்கையை, வாழ்வதற்கு மிகச் சிறந்த அமைதியான இடமாக மாற்றப் பாடுபட வேண்டிய சில விடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


"உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல் 
ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் 
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ; 
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு . 
உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால் 
ஓடி மறைந்திடும் மடமை " 


இந்த சுதந்திர தினத்தன்று, நமது வேறுபாடுகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த பிரச்சனைகளுக்கு எதிராக போராடி, அனைத்து வகையான அடிமைத்தனத்திலிருந்தும் நமது இலங்கையை சுதந்திரமாக்குவோம்.


"சுதந்திர தினம், ஒரு தேசத்தின் பிறப்பைக் கொண்டாடும் நாள். 
 அதை சுதந்திரமாக வைத்திருக்க போராடிய, போராடிக்கொண்டு இருப்பவர்களை நினைவூட்டும் நாள்   


இது எனக்கு மேலான, பெருமையான ஒன்று. பிப்ரவரி நான்காம் தேதிக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல, 
எந்நாளும் சுதந்திர தினமாகட்டும்!


மது அல்லது போதைப்பொருளுக்கு எதிராக வெற்றி பெற்றால், அது சுதந்திர தினமாகும்

துஷ்பிரயோகத்தில் இருந்து யாராவது விடுபட்டால், அது சுதந்திர தினமாகும்

பாகுபாடுகளில் இருந்து ஒருவர் விடுபட்டால், அது சுதந்திர தினமாகும்

வெறுப்பு வன்முறையிலிருந்து விடுபட்டால், அது சுதந்திர தினமாகும்

சமத்துவமின்மையிலிருந்து விடுபட்டால், அது சுதந்திர தினமாகும்

ஊழலில் இருந்து விடுபட்டால், அது சுதந்திர தினமாகும்

வகுப்புவாத பதட்டங்களில் இருந்து விடுபட்டால், அது சுதந்திர தினமாகும்

திரிக்கப்பட்ட புராண வரலாறு அல்லது வரலாறு தொடர்பான பொய்யான கதைகளில் இருந்து விடுபட்டால், அது சுதந்திர தினமாகும் 

மதத் தலைவர்களின் பொய்ப் பிரச்சாரங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளிலிருந்து விடுபட்டால், அது ஒரு சுதந்திர தினமாகும் 

தவறான தொல்பொருள் அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களின் நிலம் கைப்பற்றப்படுவதிலிருந்து விடுபடும்போது, அவர்களின் மத மற்றும் கலாச்சார இடங்களை படைகளால் ஆக்கிரமிப்பதில் இருந்து விடுபடும்போது, அது ஒரு சுதந்திர தினமாகும். 

எந்த சட்ட நீதி அல்லது வழக்குகள் இன்றி கைது செய்யப்பட்டு காலவரையின்றி சிறையில் அடைக்கப்படுவதிலிருந்து விடுபடும்போது, அது சுதந்திர தினமாகும். 


எல்லா இனங்கள் மற்றும் மத மக்களும் தங்களை தேசிய அடிமை என்ற  சங்கிலிகளிலிருந்து தங்களை விடுவிக்க; 

"இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே 
உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம் 
எங்கே பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும்
இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ, 
அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!


[இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர்  வங்காள மொழியில் எழுதிய “Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;"  கவிதைத் தொகுப்பு / கீதாஞ்சலியில் இருந்து] 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்]

476350221_10227901105055792_6562960263149517254_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=1LI8vWbPwTkQ7kNvgEBcHfs&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AH6C_iO4qJoTOH4zvQBL1Xb&oh=00_AYCE2WRo2c6MOhMKg7kZLuKkyrKbg1joM0c8jhcPSLxIxQ&oe=67A7994E  475889228_10227901105575805_204929288779367859_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=TBfKkDXvZocQ7kNvgFxELka&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AH6C_iO4qJoTOH4zvQBL1Xb&oh=00_AYAx3ryq32vr-kBQMxnoDX4IARuPGttqWijZl-RwQGtjfw&oe=67A77E3E

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.