Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம்:  பிழையான கேள்வியும் சரியான பதிலும்….! 

யாழ்ப்பாணம்:  பிழையான கேள்வியும் சரியான பதிலும்….! (வெளிச்சம்: 041)

 — அழகு குணசீலன் —

  28 அமைப்புக்களின் கூட்டணியான என்.பி.பி.யும் அதன் பிரதான பங்காளியான ஜே.வி.பி.யும், அதன் தலைவர்களும், ஜனாதிபதியும்  அள்ளி வீசிய  தேர்தல் வாக்குறுதிகளை -கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள். “இந்த வாக்குறுதிகளை உங்களால் நிறைவேற்ற முடியாது அப்படியானால் அவற்றை எப்படிச் செய்யப் போகிறீர்கள்?  என்பதை விவாதிப்பதற்கு ஒரு பொருளாதார விவாதத்திற்கு வாருங்கள்” என்று எதிரணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு சரியான பதில் அளிக்கப்படவில்லை. அரசியல் செயற்பாடுகளுக்கான வீதிவரைபடம் அவர்களிடம் இருக்க வில்லை என்பதால்  விவாதத்திற்கும்  செல்லவில்லை. மாறாக மெயின் ரோட்டில் பயணிக்காது, பைரோட்டில் பயணித்ததாகவே அவர்களின் பதில்கள் அமைந்திருந்தன. 

யாழ்ப்பாணம் உட்பட இடம்பெற்ற மக்கள் சந்திப்புக்களில் அநுர தனது வழமையான பாணியில் “மூடப்பட்ட கேள்விகளை” (CLOSED QUESTINS) அவரைக் காணக்கூடும்  மக்களிடம் கேட்டு ( கொந்தாய்த ?, ஓணத? ) மக்களை பிரதான விடயத்தில் இருந்து திசை திருப்புவதை வழமையாகக் கொண்டுள்ளார். மூடப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இரு வகையாக மட்டுமே இருக்க முடியும். ஒன்று ஆம் அல்லது இல்லை என்பது. மற்றையது  ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட சில விடைகளை கொடுத்து அதில் சரியானதை அல்லது கிட்டத்தட்ட சரியானதை (MULTIPLE CHOICE) தேர்வு செய்யச் சொல்வது.

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியின் கேள்விகள் இந்த பாணியிலானவை. காங்கேசன்துறையில் ஜனாதிபதி மாளிகை தேவையா? என்று கேட்ட அவர், அங்கு கேட்கவேண்டிய பிரதான பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடம் கேட்க வில்லை.  இதன்மூலம் இலங்கையர்களாக தெற்கின் பிரச்சினைதான் வடக்கிலும், கிழக்கிலும்  என்று  ஜனாதிபதி  கூற வருகின்றார். இது தென்னிலங்கை பொருளாதார பிரச்சினையை முதன்மைப்படுத்தி சிறுபான்மையினர் இனப்பிரச்சினையை மழுங்கடித்தல். ஜனரஞ்சக சினிமா அரசியலை பேசி திசைதிருப்புதல்.  அநுரவை காண ரிக்கட்  என்றால், அந்த நடன -நடிகையை காண ஏறியதுபோல் பலர் பனைமரத்தில் ஏறிச்சாகவும் தயாராக இருந்திருப்பார்கள். இதுதான் இன்றைய யாழ்ப்பாணத்தின் அவதாரம்.

பொருளாதார நெருக்கடியுள்ள ஒரு நாட்டில், சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமைகளும், அடையாளங்களும் அங்கீகரிக்கப்படாத நிலையில்  பொதுக்கொண்டாட்டம் யார் கேட்டார்கள்.  அந்தந்த சமூகம் அவர்களுக்கு உரிய கொண்டாட்டங்களை  கொண்டாட முடியாதவாறு மத்தளமாக  அடி வாங்குகிறார்கள். பொருளாதார சுமையினால் திண்டாடுகிறார்கள்.  உரிமைகள் மறுக்கப்படுகிறார்கள். ஆனால் பொதுக்கொண்டாட்டம் என்ற பெயரில் தனது ஒக்டோபர் வெற்றியை கொண்டாட போகிறது என்.பி.பி.  பிற்போக்கு பாராளுமன்ற கட்சி அரசியலுக்கு  ஒக்டோபர் புரட்சி முலாம் (?). 

 ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தனது தேவைக்கு ஏற்ப கேள்விகளை கேட்டு மக்களை  திசை மாற்றியுள்ளார்.  அவர்  மக்களை கேள்வி கேட்க சொல்லி அதற்கான பதிலை வழங்கியிருக்கவேண்டியதே முறையானது. சரி, மாறாக அவர் கேள்வி கேட்டிருந்தாலும்  அந்த கேள்விகள் எப்படி அமைந்திருக்க வேண்டும்?  அந்த மக்களின் முக்கிய பிரச்சினைகள் சம்பந்தமாக அல்லவா அமைந்திருக்க வேண்டும்.

 உங்களுக்கு சமஷ்டி வேண்டுமா? அல்லது 13 வது திருத்தத்தை -மாகாணசபையை முழுமையான அதிகாரங்களுடன் அமுல்படுத்தவா? 

 வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதை விரும்புகிறீர்களா? இல்லையா?

வடக்கு கிழக்கில் அரசாங்கம் மேற்கொள்ளும் குடியேற்றங்கள், தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள்,  அமைக்கப்படும் விகாரைகள் உங்களுக்கு விருப்பமா?  

இராணுவ முகாம்கள் வேண்டுமா? அல்லது அவற்றை மூடிவிடவா?

 வடக்கு, கிழக்கில் தமிழ்மொழியில் நிர்வாகத்தை விரும்புகிறீர்களா?

சகல தமிழ்மொழி மூல மாணவர்கள் சிங்களம் கற்கவும்,  சிங்கள மொழிமூல  மாணவர்கள் தமிழ் கற்கவும் ஏற்பாடு செய்தால் உங்களுக்கு சிங்களம் கற்க விருப்பமா..?

…………………?

அப்போது மக்கள்  “எப்பா” / “ஓணந ” , அல்லது  “ஓவ்”/ “ஓண” என்று மனம் திறந்து பதிலளித்திருப்பார்கள்.

இறுதியாக…..

இந்த யுத்தத்திற்கு பின்னணியில் இருந்து  ஆட்சி இயந்திரத்திற்கு  முட்டு கொடுத்து உங்கள் உறவுகளை கொன்றதற்கும், காணாமல் ஆக்கப்பட்டதற்கும் …,

வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரித்ததற்கும்….

  சுனாமி நிர்வாக கட்டமைப்புக்கு எதிராக  நான் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தது உண்மையில் அரசாங்கத்திற்கு எதிராக அல்ல தமிழ் மக்களுக்கு எதிரானது என்பதை இப்போதாவது  உணர்கிறேன் என்றும்….

ஒட்டு மொத்தமாக இனப்பிரச்சினை தீர்வுக்கான இந்திய -இலங்கை சமானதான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல் தடுத்ததில்  விடுதலைப்புலிகளுக்கு சமமான பங்கு ஜே.வி.பி.க்கும் உண்டு என்பதற்கு  பொறுப்பேற்று….

 உங்களிடம் மன்னிப்புக்குக்கோரவே வல்வெட்டித்துறைக்கு வந்தேன் என்று அவர் கட்டியணைத்த அந்த தாயின் காலடியில் வீழ்ந்திருக்க வேண்டும். பிராயச்சித்தம் தேடியிருக்கவேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 1983 இனக்கலவரத்திற்கு மன்னிப்பு கோரினார். அந்த முன்மாதிரியில் அல்லது புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பாணியில் ராஜீவ் கொலை, முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு கூறியது போன்று அது ஒரு “துன்பியல் நிகழ்வு ” என்றாவது கூறியிருக்கலாம்.

இதற்கு பெயர்தான் மக்கள் சந்திப்பு. மக்களின் கருத்தை அறிந்து அதை நடைமுறைப்படுத்துவது. அதை விடுத்து தான் தெற்கில் இருந்து கொண்டு போன ராஜபக்சாக்களுக்கு எதிரான அரசியலை விற்பனை செய்வதல்ல. அதுவும் வல்வெட்டித்துறை அரசியல் சந்தையில்….!

கமலஹாசனின் தசாவதாரம் பற்றி பேசிய ஜனாதிபதி அதில் கடந்த நான்கு மாதங்களில் தானும் சில அவதாரங்களுக்கு சொந்தக்காரன் ஆகிவருவதை மறந்து விட்டார். ஆகக்குறைந்தது ஜனாதிபதி தேர்தல் மேடை, பாராளுமன்ற தேர்தல் மேடை, பாராளுமன்ற உரைகளில் அவர்  போட்ட “வேடங்களையாவது” நினைத்து பார்த்திருக்க வேண்டும்.

 அநுரகுமார திசாநாயக்க தலைசிறந்த அரசியல் பேச்சாளர். சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான ஆய்வுகள், கொள்கைகளில் அல்ல. மாறாக சின்னச்சின்ன வசனங்களை,   சிரித்து, சிரித்து பேசி, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மக்களுக்கு ஏற்றுவதில், வல்லவர். பேச்சு முடியும் வரை மக்களை தன் உரையோடு கட்டிப்போடுபவர். 

“மூடப்பட்ட கேள்விகள்” என்று சர்வதேச  ஆய்வுகள் கூறுகின்ற “ஆம்”, “இல்லை” என்று பதிலளிக்க மட்டும் வாய்ப்பளிக்கின்ற கேள்விகள் ஜனாதிபதியின் கேள்விகள்.  ஒரு வகையில் மக்கள் முழுமையான பதிலை அளிப்பதை தடுக்கின்ற கேள்விகள் இவை. இதன் மூலம் கேள்வி கேட்பவர் மிக இலகுவாக தனது பக்கம் -தனக்கு வேண்டிய பதிலை மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். வியாபார- விளம்பரப்பாணி  வித்தை.

யாழ்ப்பாணத்தில்  ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், அதிகாரிகளுடனான உத்தியோகபூர்வ சந்திப்பில்  ஜனாதிபதி “மாற்று நொடியே” போட்டார். அவர்தான் அநுர. அதுதான் அவரின் அரசியல் பாணி.

 யாழ்.மாவட்டத்திற்கு  அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல்  கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டது  என்றால் அதற்கான ஆதாரத்தை அவர் முன்வைக்கவில்லை. அருகில் அரசாங்க அதிபர், ஆளுநர் இருக்கிறார்கள் அந்த விபரங்களை அவர் அவர்களிடம் கேட்டிருக்க வேண்டும் அல்லது  அவர்கள் அந்த விபரங்களை தெரிவித்திருக்கவேண்டும். ஏனெனில் ஒட்டு மொத்த விபரம் அவர்களுக்குத்தான் தெரிந்திருக்கும். 

பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டதா? இல்லை யென்றால் எவ்வளவு திருப்பி அனுப்பப்பட்டது? என்ன காரணம் என்பதை அன்று அல்ல இந்த ஆண்டின் ஆரம்பத்தில் முதலாவது ஒருங்கிணைப்பு கூட்டத்தில்  விபரங்களை பெற்றிருக்க வேண்டும்.  அதில்  ஒருங்கிணைப்பு குழு தலைவராக, ஜே.வி.பி அமைப்பாளராக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் பொறுப்பில்லாமல் இல்லை. கடந்த ஆண்டின் கால்வாசிக்கு  இந்த ஆட்சியே பொறுப்பு. 

அடுத்தடுத்த தேர்தல்கள், ஆட்சிமாற்றம்  கூட இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம். வடக்கு கிழக்கில் நிலவிய அசாதாரண காலநிலை கூட சில திட்டங்களுக்கு தடையாக இருந்திருக்க முடியும். விகாரை காணிப்பிரச்சினையில் அரசாங்கத்தின் -ஜனாதிபதியின்  உண்மையான  நம்பிக்கைக்குரிய முகவராக தன்னை காட்டமுயற்சித்த ஆளுநர் நிதி விடயத்தில் நிலைமையை என்ன நடந்தது பற்றி சொல்லவில்லை. தன்னை அரசுக்கு விசுவாசமாக காட்டுவதில் செலுத்திய கவனத்தை அதிகாரிகளுக்கு ஆதரவாக அல்லது கண்டனமாக காட்டவில்லை.

தமிழ்த்தேசிய கட்சிகளின் கொள்கை அடிப்படையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கோரிக்கை சரியானதே. ஆளுநரின் பதில் அதில் ஒரு சமரசத்தை காண்கிறது. ஒரு வகையில் இது ஒரு பிழையான முன்மாதிரி. மக்களின் காணிகளை அடாத்தாகப்பிடித்துக்கொண்டு பின்னர், அதற்கு பதிலாக வேறுகாணி உங்களுக்கு தருகிறோம் என்ற கருத்தியல் மேலாண்மை அரசியல். இது வடக்கு மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தி திட்டம் அல்ல. விகாரைக்கு பிடிக்கப்பட்ட காணி. இது போன்ற சமரச முயற்சிகளும், முன்மாதிரிகளும் எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்த முன்மாதிரி மிகவும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

வீதி அபிவிருத்தி பற்றிய அதிகாரிகளின் முன்மொழிவுக்கோரிக்கைக்கு ஜனாதிபதியின் பதில் இன்னும் வேடிக்கையானது. அபிவிருத்தி திட்டம் ஒன்றுக்கான செலவு, மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சரியான மதிப்பீட்டை செய்வதற்கு முதலில் பிரதேச செயலகம், மாவட்ட மட்டத்தில் அத்திட்டத்திற்கான அங்கீகாரம் பெற்று, களநிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபின்னரே சரியான நிதித்தேவையை மதிப்பீடு செய்யமுடியும். இந்த முடிவு இல்லாமல் திட்டவரைபு ஒன்றை செய்வதற்கு அதற்கான அதிகாரிகளுக்கு திணைக்களத்தலைவர்கள் கட்டளையிடுவது தவறான நிர்வாக முன்மாதிரி. இதை அதிகாரிகள் சிரமதானமாக, எழுந்தமானமாக செய்யமுடியாது.

அப்படி ஒரு திட்டம் இல்லாத நிலையில் இல்லாத திட்டத்திற்கு அதுவும் ஜனாதிபதி விரும்புகின்ற சரியான மதிப்பீட்டு செலவுத் தொகையை  ஏறக்குறைய என்று சொல்லாமல் சரியாக ரூபா, சதத்தில் எப்படி ஒரு அதிகாரி சொல்லமுடியும். அப்படி, இப்படி எல்லாம் இல்லை சரியான மதிப்பீடு வேண்டும் என்று திசைதிருப்பி அதிகாரிகள் மீது அதிகாரத்தை பிரயோகிக்கும் அவர், அதே கூட்டத்தில் , பொருளாதார நெருக்கடி, நிதி தட்டுப்பாடு, அபிவிருத்திக்கு நிதியில்லாமை பற்றியும் பேசுகிறார் என்பது ஒன்றுக்கொன்று முரணானது. இதன் படி பார்த்தால் சரியான செலவு மதிப்பீட்டை சொல்வியிருந்தால் காசு இல்லை என்று சொல்லியிருப்பார் என்றே கொள்ளவேண்டி உள்ளது.

 இது  பட்டதாரிகளின் வேலையில்லா பிரச்சினைக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புக்களை தேடுங்கள் என்பது போன்றது. பட்டதாரிகள் தனியார் துறை வேலைவாய்ப்புக்களை விரும்பாததற்கு காரணம் அங்கு ஓய்வூதியம் இன்மை என்ற காரணமும் அமைச்சருக்கு தெரிகிறது. அப்படியானால் முதலில் செய்யவேண்டியது இந்த இரு அரச, தனியார் துறைகளில் நிலவும் வேறுபாடுகளை நீக்கவேண்டியது இல்லையா?  அரச, தனியார் வேலைவாய்ப்பில் உள்ள கவர்ச்சி வேறுபாட்டை போக்காமல் தனியார் துறைக்கு போங்கள் என்பது உண்மையில் அரசாங்கத்தின் பொறுப்பற்ற பதில். 

தனியார் துறை சமூகநலன் அடிப்படையில் வேலை வழங்குவதில்லை. அளவுக்கு அதிகமாகவும் வேலை வழங்குவதில்லை. அதை கடந்த காலங்களில் அரசாங்கமே பல்வேறு திட்டங்கள் ஊடாக செயற்படுத்தி வந்துள்ளது.  தேர்தல் மேடைகளில் தனியார் துறையை இழுத்து மூடுவோம் என்றவர்கள் இப்போது அங்கு தான் வேலைவாய்ப்பு இருக்கிறது போங்கள் என்று கூறுகிறார்கள். இது தவறான உயர்கல்விக்கொள்கையின் விளைவு என்பதால் இதனால் கிராமப்புற வறிய பட்டதாரிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதற்கான மாற்று திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

இவ்வாறு ஒன்றுக்கு  ஒன்று முன்னுக்கு பின் முரணான கேள்விகளையும், பதில்களையும் வழங்கி “பராக்கு காட்டும்” அரசியலை செய்கிறது என்.பி.பி.  இதில் இருந்து வடக்கு கிழக்கின் மற்றைய மாவட்டங்கள் சில விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை  கவனத்தில் எடுத்து வடக்கு, கிழக்கு மற்றைய மாவட்டங்களில் மக்களும், சிவில் அமைப்புக்களும், அதிகாரிகளும் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்புக்களில் அவரின் அரசியல் தேவைக்கு பதிலளிப்பதை தவிர்த்து அந்தந்ந மாவட்டங்களின் மக்களின், சமூக பொருளாதார அரசியல் தேவைகளை முதன்மை படுத்தி கேள்வி எழுப்ப வேண்டும். ஜனாதிபதியை பதிலளிக்க தூண்ட வேண்டும்.

159 உறுப்பினர்களை கொண்ட ஒரு பாராளுமன்றம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்காமல் இழுத்தடிப்பது காலம் போகப்போக நிலைமையை இன்னும் மோசமாக்கும். தென்னிலங்கையில் அநுர ஆட்சி ஆதரவை இழந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அதிகாரத்திற்காக  இனவாதத்திற்கு எதிராக இனவாதம் செய்யாது ஆட்சி அதிகாரத்தை  அரசியல் தியாகம் செய்ய இவர்கள் ஒன்றும் கௌதம புத்தர்கள் அல்ல.

வடக்கு, கிழக்கில் மக்கள் அரசியல் தீர்வு குறித்து கேள்வி எழுப்பும்போது, அரசாங்கம் தென்னிலங்கை மக்கள் சந்திப்புக்களில் வடக்கு, கிழக்கு மக்களின்  அரசியல் அபிலாஷைகளை  தெரிவித்து  சிங்கள மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் அரசாங்கம் கேட்டறிய முடியும்..

இப்படி நடந்தால் தான் அது மக்கள் சந்திப்பு. அரசாங்கம் பன்மைத்துவ சமூகங்களிடையே ஒரு தொடர்பாளராக செயற்பட முடியும். 

இல்லையேல் மக்கள் சந்திப்பு என்பது ஆளும் கட்சியின் தேர்தல் வெற்றிக்கான செயற்திட்டம். குருநாகல் மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன் என்று கூறியிருக்கிறார். அந்த பிரச்சினைகள் எவை? எவ்வாறு தீர்க்கப்போகிறார்? என்பது குறித்து பேசவில்லை. இது வடக்கு கிழக்கில் தனக்கு ஆதரவு இருக்கிறது என்று தெற்கில் காட்டி  அரசியல் அதிகாரம் பெறுவதற்கான முயற்சியாக இருக்கக்கூடாது.

 

https://arangamnews.com/?p=11771

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.