Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளீன் தையிட்டி - நிலாந்தன்

GjqXHuhWkAA1TxT-1024x654.jpgகடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை விருந்தினர் விடுதியில் இலங்கைக்கான ஐநா அலுவலகம் ஓர் விருந்துபசாரத்தை ஒழுங்குபடுத்தியிருந்தது.இலங்கையில் ஐநாவின் பிரசன்னம் 70 ஆண்டுகளைப் பூர்த்தி செய்கின்றது. இந்த 70ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக அந்த விருந்துபசாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஐநாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் உட்பட ஐநாவின் கட்டமைப்புகளுக்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரிகளும் அந்த அலுவலகங்களில் வேலை செய்யும் உள்ளூர் அலுவலர்களும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

மேலும்  கட்சித் தலைவர்கள் முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,குடிமக்கள்சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அரச அதிகாரிகள் என்று பலவகைப்பட்டவர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்த நிகழ்வில் பேசிய இலங்கைக்கான ஐநாவின் வதிவிட ஒருங்கிணைப்பாளர்,சிவில் சமூகங்களை அரசியல் கட்சிகளும் அரசாங்கமும் எதிர் நிலையில் வைத்து பார்க்கக்கூடாது என்று பேசினார்.

இலங்கைத் தீவில் ஐநாவின் பிரசன்னம் 70 ஆண்டுகள்.ஆனால் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை 70ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது.தமிழ் மக்கள் ஐநாவுடன் நெருக்கமாக வேலை செய்ய தொடங்கியது 2009க்குப் பின்னிருந்து.அதாவது 15 ஆண்டுகள்.அதிலும் குறிப்பாக இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கத்தோடு நிலைமாறு கால நீதியை இலங்கை தீவில் ஸ்தாபிப்பதற்காக உழைத்தது கடந்த 9ஆண்டுகள்.இப்படிப் பார்த்தால் இலங்கைத் தீவில் ஐநாவின் 70ஆண்டுகால பிரசன்னத்தால் இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை.குறிப்பாக 2009க்குப் பின்னரான கடந்த 15ஆண்டு காலத் தமிழ் அரசியல் எனப்படுவது அதிகபட்சம் ஐநா மைய அரசியலாகவே இருந்துவருகிறது.அதிலும் குறிப்பாக 2015,செப்டம்பர் மாதம் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்குப் பின்னிருந்து தமிழ்க் கட்சிகளில் ஒரு பகுதியும் சிவில் சமூகங்களும் மனித உரிமைக் காவலர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களும் நிலை மாறுகால நீதிக்காக அதாவது போரில் ஈடுபட்ட தரப்புகளை பொறுப்புக்கூற வைப்பதற்காக உழைத்து வருகின்றன. ஆனால் அவ்வாறு உழைத்ததன் விளைவாக தமிழ் மக்கள் பெற்றவை என்ன?

கடந்த 2021ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவைக்கு ஒரு கூட்டுக் கடிதத்தை எழுதுவதற்காக சிவில் சமூகங்கள் கட்சிகளை ஒருங்கிணைத்தன. அதற்குரிய இரண்டாவது சந்திப்பு வவுனியாவில் இடம் பெற்றது. இச்சந்தப்பின்போது அதில் பங்குபற்றிய சுமந்திரன் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.” 6 ஆண்டுகளாக ஒரு பரிசோதனையைச் செய்தோம்,அதில் தோல்வியடைந்து விட்டோம்.” ஆறாண்டு காலப் பரிசோதனை என்பது என்ன?அதுதான் 2015ஆம் ஆண்டிலிருந்து நிலைமாறு கால நீதிக்காக உழைத்தமை. நிலைமாறு கால நீதியைப் பொறுத்தவரை கூட்டமைப்பு அதன் பங்காளியாகச் செயல் பட்டது.புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பில் உள்ள அமைப்புகளும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நிலைமாறு கால நீதி வேண்டாம், இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதிதான் வேண்டும் என்று கோரிய ஒர் அரசியல் சூழலில், கூட்டமைப்பு நிலைமாறு கால நீதியின் பக்கம் நின்றது.ஆனால் அந்தப் பரிசோதனையில் தாங்கள் தோல்வியடைந்து விட்டதாக சுமந்திரன்-அவர்தான் நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளில் தமிழ்த் தரப்பின் பிரதான பங்காளி-அவ்வாறு கூறினார்.நிலை மாறுகால நீதிச் செயற்பாடுகள் இலங்கைத் தீவில் எதிர்மறை விளைவுகளைத்தான் தந்தன.ஆங்கிலத்தில் அதனை “கவுண்டர்  ப்ரொடக்டிவ்”என்று கூறுவார்கள்.

GjW9zJsWUAANusd-1024x683.jpg

அதாவது நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகள் இலங்கைத் தீவில் தோல்வியடைந்து விட்டன.அதற்குப் பின்னரும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டன.ஐநாவை நோக்கிய தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை.2021 ஆம் ஆண்டு தமிழ்க் கட்சிகள் ஐநாவுக்கு எழுதிய கூட்டுக் கடிதத்தில் ஒரு சான்றுகளைத் திரட்டும் பொறிமுறையைக் கேட்டிருந்தார்கள்.குறிப்பாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது அந்தப் பொறிமுறையானது குறுகிய காலத்துக்குள் சாட்சியங்களைச் சேகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் அந்தக் கடிதத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட ஐநாவின் சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான பொறிமுறையானது மிகப் பலவீனமானதாகவே அமைந்தது.அது ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள் இயங்கும் ஓர் அலுவலகமாக சுருக்கப்பட்டுவிட்டது.இதுதான் கடந்த 15 ஆண்டுகால ஐநா மையத் தமிழ் அரசியலின் தொகுக்கப்பட்ட விளைவு.

இப்படிப்பட்டதோர் பூகோள அரசியற் சூழலில்,திண்ணையில் நடந்த விருந்துபசாரத்துக்கு முதல் நாள் மாலை அதே திண்ணையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும் ஐநாவின் வெவ்வேறு அலகுகளுக்குப்  பொறுப்பான அதிகாரிகளும் கலந்து கொண்ட மேற்படி சந்திப்பில்,தமிழ்மக்கள் மத்தியில் உள்ள குடிமக்கள் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.சந்திப்பில் நிலைமாறு கால நீதியின் தோல்வி குறித்து ஆழமாகப் பேசப்பட்டது.அந்தச் சந்திப்பின் முடிவில் இலங்கைக்குரிய ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளரான மார்க் அன்ட்ரே ஃபிரான்ச்சே  எல்லாவற்றையும் தொகுத்துப் பதில் சொன்னார்.

அவர் பழக இனிமையானவர்;எளிமையானவர்;வெளிப்படையான ஒரு ராஜதந்திரி. கதைப்போக்கில் சில விடயங்களை நறுக்கென்று சொல்லிவிட்டு போகக் கூடியவர்.அவர் தனது தொகுப்புரையில் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டினார்.அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகப் போவதாகத் தெரிகிறது.இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானங்களில் அமெரிக்கா பிரதான உந்துசக்தியாக இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் இனி வரக்கூடிய ஐநா தீர்மானங்களை இலங்கை அரசாங்கமும் ஐநாவும் இணைந்து நிறைவேற்றக்கூடிய தீர்மானங்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறையக்கூடும்.மேலும் இப்பொழுது நடைமுறையில் உள்ள சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தின் செயற்பாடுகளையும் அது பாதிக்கக்கூடும் என்ற பொருள் கொள்ளத்தக்க விதத்தில் அவரது உரை அமைந்திருந்தது.

அமெரிக்கா ஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலக நேர்ந்தாலும் சுவிட்சர்லாந்து அந்தப் பாத்திரத்தை வகிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு.

காசா, உக்ரைன் அழிவுகளின் பின்னணியில், பொதுவாகவே இலங்கை மீதான அதாவது தமிழர் விவகாரத்தின் மீதான ஐநாவின் கவனக்குவிப்பு குறையக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இவை மட்டுமல்ல உலகத்தின் கவனத்தையும் ஐநாவின் கவனத்தையும் ஏன் கொழும்பின் கவனத்தையும்கூட ஈர்க்கக்கூடிய விதத்தில் தமிழ் அரசியல் தொடர்ச்சியாக நொதிக்கும் ஒன்றதாக, கொந்தளிப்பானதாக இல்லை என்பதும் ஒரு காரணந்தான்.இதை இன்னும் கூரான வார்த்தைகளில் சொன்னால்,தமது அரசியலை கொந்தளிப்பானதாக உலகத்தின் கவனத்தை ஈர்க்கத் தக்கதாக கொதிநிலையில் வைத்திருக்கத் தமிழ் மக்களால் முடியவில்லை.

இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில்,கடந்த புதன்கிழமை தையிட்டியில் நடந்த போராட்டம் ஒப்பீட்டளவில் எழுச்சிகரமானது.தையிட்டியை மையமாகக் கொண்டு இப்பொழுது தமிழ் அரசியல் நொதிக்கத் தொடங்கியுள்ளது. சிறீலங்காவை கிளீன் செய்யப்போவதாகச் செல்லும் ஓர் அரசாங்கத்தை நோக்கி “கிளீன் தையிட்டி” என்று தமிழ்மக்கள் கேட்கிறார்கள்.facebook_1739346117447_72953463777942052நில ஆக்கிரமிப்புக்கு எதிரான அரசியல் தொடர்ந்து நொதிக்குமா? கொழும்பின் கவனத்தையும் உலகத்தின் கவனத்தையும் தன்னைநோக்கி ஈர்த்து வைத்திருக்க முடியுமா?

முடியுமா என்ற கேள்விக்கே இங்கு இடம் இல்லை.அதை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும்.நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் சிங்களபௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும் தீர்க்கப்படாத ஏனைய பிரச்சினைகளுக்கு எதிராகவும் தமிழ்மக்கள் தமது அரசியலில் நொதிக்கச் செய்ய வேண்டும்.உலகமும் கொழும்பும் திரும்பிப் பார்க்கத்தக்க எழுச்சிகளை ஒழுங்கமைக்க வேண்டும்.

தையிடியில் புதன்கிழமை திரண்ட மக்கள் ஒரு கட்சியின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல.அதில் முன்பு அரசாங்கத்தின் பக்கம் நின்ற கட்சிகள்,நிலைமாறு கால நீதியை ஆதரித்த கட்சிகள் என்று எல்லா வகைப்பட்ட கட்சிகளும் நின்றன.அது ஒரு திரட்சி.வரலாற்றில் எல்லாத் தேசத் திரட்சிகளும் அப்படிப்பட்டவைதான்.”நீ முன்பு அரசாங்கத்தோடு நின்றாய்”,”மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அரசாங்கம் காணியை அபகரித்த பொழுது உடந்தையாக நின்றாய்”,”நிலைமாறு கால நீதியின் பக்கம் நின்றாய்”… என்றெல்லாம் பழைய தோம்பை இழுத்துக் கொண்டிருந்தால் தேசத்தைத் திரட்ட முடியாது.தேசத் திரட்சிக்குள் எல்லாமும் அடங்கும்.அதற்குத் தலைமை தாங்கும் கட்டமைப்பு உறுதியானதாக கொள்கைப் பிடிப்புள்ளதாக இருந்தால் போதும்.

புதன்கிழமை ஏற்பட்ட திரட்சி எல்லா கட்சிகளுக்கும் ஒரு செய்தியை மீண்டும் உணர்த்துகிறது.அது புதிய செய்தி அல்ல. கடந்த 15 ஆண்டுகளாக கற்கத் தவறிய செய்தி.முள்ளிவாய்க்காலில் இருந்து கற்றுக்கொள்ளாத செய்தி.அது ஒரு தேர்தல் தோல்வியிலிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு செய்தியல்ல.

20230504_Point-Pedro_Protesting-removal-

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்கள் மத்தியில் ஏற்பட்ட எல்லாப் பெரிய எழுச்சிகளும் ஒரு கட்சிக்குரியவை அல்ல.அதில் பல கட்சிகள் இருந்தன.குடிமக்கள் சமூகங்கள்,மக்கள் அமைப்புக்கள் இணைந்தன.எனவே இனிமேலும் அப்படித்தான் இருக்கும்.தையிட்டி விவகாரத்தைத் தொடர்ந்து கவனக் குவிப்பில் வைத்திருந்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான்.சுமார் 20 மாதங்களுக்கு மேலாக அந்தப் போராட்டத்தை மக்கள் மயப்படுத்த அக்கட்சியால் முடியவில்லை.ஆனால் நடந்து முடிந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் விளைவாக அது சூடுபிடித்திருக்கிறது.விரைவில் நடக்கவிருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலை நோக்கியும் கட்சிகள் உழைக்கின்றன என்பது உண்மை.கட்சிகள் அப்படித்தான் சிந்திக்கும்.ஆனால் யார் எதற்காக உழைக்கிறார்கள் என்பது இங்கு பிரச்சனையில்லை.ஒரு ஆக்கிரமிப்புக்கு எதிராக தேசமாகத் திரள முடிந்தால் அது வெற்றியே.கடந்த 15 ஆண்டுகளில் நிகழ்ந்த “ஏழுக தமிழ்கள்” “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி” வரையிலுமான எழுச்சி, ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நோக்கிக் குவிந்த வாக்குகள்… எல்லாமும் பல கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் சேர்ந்து திரட்டியவைதான்.அவை யாவும் கூட்டுச் செயற்பாடுகள்தான்.எனவே தையிட்டிப் போராட்டம் தமிழ் கட்சிகளுக்கு மீண்டும் மீண்டும் உணர்த்தியிருப்பது அதனைத்தான்.கட்சிகளைக் கடந்து ஒரு திரட்சியை ஏற்படுத்துவது என்றால்,அதற்கு பல கட்சிகள் சம்பந்தப்பட வேண்டும்.

அப்படிப்பட்ட திரட்சிகள்தான் ஒப்பீட்டளவில் ஐநாவையும் உலகத்தையும் கொழும்பையும் தமிழ் மக்களை நோக்கித் திருப்பும். தமிழர்கள் தமது அரசியலை நொதிக்கச் செய்ய வேண்டும்.கொதிக்கச் செய்ய வேண்டும். கொந்தளிக்கச் செய்ய வேண்டும்.அப்பொழுதுதான் தேசத் திரட்சியைப் பலப்படுத்தலாம்.தமிழ்த்தேசிய வாக்குகள் தமிழ்த்தேசியப் பரப்புக்கு வெளியே சிந்தப்படுவதையும் தடுக்கலாம்.

https://www.nillanthan.com/7176/#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.