Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் டீப்சீக் செயலியானது செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளை உருவாக்கும் செலவைக் கடுமையாகக் குறைத்து தொழில்நுட்பத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சாட்பாட்கள் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும் டீப்சீக்கைப் போல் இந்தியா அதன் சொந்த அடிப்படை மொழி மாதிரியை இன்னும் உருவாக்கவில்லை.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், நிகில் இனாம்தார்

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 20 பிப்ரவரி 2025

சாட்ஜிபிடி உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இப்போது சீனாவின் டீப்சீக், செயற்கை நுண்ணறிவு செயலிகளை உருவாக்குவதற்கான செலவைக் கடுமையாகக் குறைத்து தொழில்நுட்பத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான உலகளாவிய போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், குறிப்பாக சாட்பாட்களை இயக்குவதற்குத் தேவையான அதன் சொந்த அடிப்படை மொழி மாதிரியை உருவாக்குவதில் இந்தியா பின்தங்கியுள்ளதாக அறியப்படுகிறது.

டீப்சீக் செயலிக்குச் சமமான இந்திய மாதிரி விரைவில் தயாராகும் என்று அரசாங்கம் கூறுகிறது. எனவே 10 மாதங்களுக்குள் அதை உருவாக்கத் தேவையான ஆயிரக்கணக்கான உயர்தர கணினி சிப்களை தொடக்கநிலை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கி வருகிறது.

சமீபத்தில், உலகெங்கிலும் உள்ள சிறந்த செயற்கை நுண்ணறிவுத் தலைவர்கள் பலர், ஏஐ துறையில் இந்தியாவின் திறன்கள் குறித்துப் பேசி வருகின்றனர்.

தொடக்கத்தில், ஓபன் ஏஐயின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் திறனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், உலகளாவிய ஏஐ புரட்சியில் இந்தியா ஒரு முக்கியப் பங்காளியாக இருக்க வேண்டுமென்று இந்த மாதம் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.

தற்போது, பயனர்களின் அடிப்படையில் ஓபன்ஏஐ-இன் இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் போன்ற பிற நிறுவனங்கள், இந்தியாவில் கிளவுட் மற்றும் ஏஐ உள்கட்டமைப்பை மேம்படுத்த 3 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய உறுதியளித்துள்ளன.

மேலும் எதிர்காலத்தில் நாடு வளர்ச்சியடைய முக்கியக் காரணமாக இந்தியாவின் "நிகரற்ற" தொழில்நுட்பத் திறன்கள் இருப்பதாக என்விடியா நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஜென்சன் ஹுவாங் கூறினார்.

இந்தியாவில் 200 தொடக்கநிலை நிறுவனங்கள் ஜெனரேட்டிவ் ஏஐ தொடர்பாக வேலை செய்வதால், தொழில்முனைவோர் இதில் ஆர்வமாகச் செயல்படுவதையும் அறிய முடிகிறது.

வெற்றிக்குத் தேவையான முக்கியக் காரணிகள் இந்தியாவிடம் உள்ள போதிலும், கல்வி, ஆராய்ச்சி மற்றும் அரசாங்கக் கொள்கைகளில் அடிப்படை மேம்பாடுகளைச் செய்யாவிட்டால் பின்தங்க நேரிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னேற விரும்பும் இந்தியா, உலகளாவிய போட்டியில் பின்வாங்குகிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாரிஸில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் மோதி கலந்து கொண்டார்

ஏஐ வளர்ச்சியில் இந்தியாவைவிட சீனாவும் அமெரிக்காவும் "ஏற்கெனவே நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் முன்னிலையில் உள்ளன" என்கிறார் தொழில்நுட்ப ஆய்வாளர் பிரசாண்டோ ராய்.

ஏனென்றால், அவர்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் அதிகமாக முதலீடு செய்து, ராணுவப் பயன்பாடுகள், சட்ட அமலாக்கம் மற்றும் மொழி மாதிரிகள் ஆகியவற்றுக்காக ஏஐ தொழில்நுட்பத்தை இப்போது உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காப்புரிமைகள், நிதியுதவி, கொள்கைகள் மற்றும் ஆராய்ச்சி போன்ற காரணிகளை அளவிடும் ஸ்டான்ஃபோர்டின் ஏஐ வைப்ரன்சி இண்டெக்ஸில் (Stanford AI Vibrancy Index) உலக அளவில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

இருப்பினும், இன்னும் பல முக்கியமான பகுதிகளில் சீனா மற்றும் அமெரிக்காவைவிட இந்தியா பின்தங்கியுள்ளது. 2010 மற்றும் 2022க்கு இடையில் உலகின் மொத்த ஏஐ காப்புரிமைகளில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் முறையே 60 சதவீதம் மற்றும் 20 சதவீதம் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு அரை சதவீதத்திற்கும் குறைவாகவே கிடைத்தது.

மேலும் 2023இல் அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்கள் பெற்ற தனியார் முதலீட்டில் ஒரு பகுதியை இந்தியாவின் தொடக்கநிலை செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் பெற்றுள்ளன.

இந்தியாவின் அரசு நிதியுதவியுடன் கூடிய ஏஐ திட்டத்தின் பட்ஜெட் சுமார் ஒரு பில்லியன் டாலர்களாக உள்ளது.

இது அமெரிக்காவின் "ஸ்டார்கேட்" (Stargate) என்ற ஏஐ உள்கட்டமைப்பு உருவாக்கத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் டாலர் மற்றும் 2030க்குள் ஏஐ மையமாக மாறுவதற்காக சீனா அறிவித்த 137 பில்லியன் டாலர் நிதியுடன் ஒப்பிடும்போது மிகச் சொற்பமாகவே தெரிகிறது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னேற விரும்பும் இந்தியா, உலகளாவிய போட்டியில் பின்வாங்குகிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏஐ மாதிரிகளை பழைய, குறைந்த விலையுள்ள சிப்களை பயன்படுத்தி உருவாக்க முடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ள டீப்சீக்கின் வெற்றி இந்தியாவுக்கும் உறுதியளிக்கிறது.

ஆனால், தொழில்துறை மற்றும் அரசாங்கத்திடம் இருந்து "நீண்டகால மற்றும் நிலையான" முதலீடு கிடைக்காதது ஒரு பெரிய பிரச்னை என்பதை நிறுவனங்களில் ஏஐ கல்வியறிவை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் நிறுவனர் ஜஸ்ப்ரீத் பிந்த்ரா சுட்டிக்காட்டுகிறார்.

"டீப்சீக் மாதிரியை உருவாக்குவதற்காக 5.6 மில்லியன் டாலர்களே செலவிடப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், அதன் பின்னால் அதிக மூலதனம் இருந்தது" என்கிறார் ஜஸ்ப்ரீத் பிந்த்ரா.

ஹிந்தி, மராத்தி, தமிழ் போன்ற பிராந்திய மொழிகளில் ஏஐ மாதிரிகளைப் பயிற்றுவிக்கத் தேவையான உயர்தர தரவுத் தொகுப்புகள் இல்லாததால், குறிப்பாக இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையின் அடிப்படையில், இந்தியா சிக்கலை எதிர்கொள்கிறது.

அனைத்து சவால்களையும் மீறி, திறமையின் அடிப்படையில் இந்தியா சிறப்பாகச் செயல்படுகிறது. ஏனெனில் உலகின் ஏஐ பணியாளர்களில் 15 சதவீதத்தினர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.

ஆனாலும், பிரச்னை என்னவென்றால், ஏஐ திறமை உள்ளவர்களின் இடப்பெயர்வு குறித்த ஸ்டான்ஃபோர்டின் ஆராய்ச்சி, திறமையான வல்லுநர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதைக் காட்டுகிறது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னேற விரும்பும் இந்தியா, உலகளாவிய போட்டியில் பின்வாங்குகிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏனென்றால் "அடிப்படை ஏஐ கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் நிறுவன ஆய்வுகளின் ஆராய்ச்சியில் இருந்து உருவாகின்றன," என்கிறார் பிந்த்ரா.

மேலும் இந்தியாவில் ஆராய்ச்சிக்கு ஆதரவளிக்கும் சூழல் குறைவாக உள்ளது. இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து சில முன்னோடி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மட்டுமே உருவாகியுள்ளன.

இந்தியாவின் பணப்பரிவர்த்தனை புரட்சியின் மிகப்பெரிய வெற்றி, அரசு, தொழில்துறை, கல்வி நிறுவனங்கள் ஆகியவை இணைந்து செயல்பட்டதால்தான் நடந்தது. அதே மாதிரியான கூட்டணி முறை, ஏஐ வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறார் பிந்த்ரா.

யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) என்பது இந்தியாவில் ஒரு அரசு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைமை.

இது, வெகு எளிதாக ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்வவதன் மூலம், மில்லியன் கணக்கான மக்களைப் பணப் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கிறது.

பெங்களூருவின் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள அவுட்சோர்சிங் தொழில், லட்சக்கணக்கான குறியீட்டாளர்கள் (coders) வேலை செய்கின்ற இடமாக உள்ளது. இது, இயல்பாகவே, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களை முன்னணி இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

ஆனால், அங்கு செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இதுவரை தங்களின் கவனத்தை மலிவான சேவை அடிப்படையிலான வேலைகளில் இருந்து, நுகர்வோருக்கான அடிப்படை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உருவாக்கும் திசைக்கு மாற்றிக் கொள்ளவில்லை.

"அந்த நிறுவனங்கள் விட்டுச்சென்ற அந்த மிகப்பெரிய இடைவெளியை, தொடக்கநிலை நிறுவனங்கள் நிரப்ப வேண்டியுள்ளது" என்கிறார் ராய்.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னேற விரும்பும் இந்தியா, உலகளாவிய போட்டியில் பின்வாங்குகிறதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் தொடக்கநிலை நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத் திட்டங்கள் இந்தப் பெரும் பொறுப்பை விரைவாக மேற்கொள்ள முடியுமா என்பதில் சந்தேகம் இருப்பதாகக் கூறும் அவர், "இந்த 10 மாத காலக்கெடு அமைச்சரால் அறிவிக்கப்பட்டதற்குக் காரணம், டீப்சீக் திடீரென வெளியானதற்கான உடனடி எதிர்வினையாக இருக்கலாம்" என்றும் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "குறைந்தபட்சம் இன்னும் சில ஆண்டுகளுக்கு டீப்சீக் போன்ற ஒன்றை இந்தியாவால் உருவாக்க முடியும் என நான் நினைக்கவில்லை" என்றும் தெரிவித்தார்.

இதே கருத்தைப் பலரும் பகிர்ந்து கொள்கின்றனர்.

இருப்பினும், டீப்சீக் போன்ற வெளிப்படையான மூல தளங்களைப் பயன்படுத்தி, செயலிகளை உருவாக்கி, அதை மேம்படுத்துவதன் மூலம், "நமது சொந்த ஏஐ முன்னேற்றத்தை விரைவுபடுத்த முடியும்," என்று இந்தியாவின் முதல் ஏஐ தொடக்கநிலை நிறுவனங்களில் ஒன்றான க்ருட்ரிமின் நிறுவனர் பவிஷ் அகர்வால் சமீபத்தில் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் ஒரு அடிப்படை மாதிரியை உருவாக்குவது மிக முக்கியமாக இருக்கும்.

இது ஏஐ துறையில் தன்னாட்சி பெறவும், பிறநாட்டு இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், தடைகள் போன்ற அபாயங்களைத் தவிர்க்கவும் உதவும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அத்தகைய மாதிரிகளை இயக்க இந்தியா அதன் கணக்கீட்டு சக்தி அல்லது வன்பொருள் உள்கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும். இந்தச் செயல்முறை செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்வதை உள்ளடக்கியது. ஆனால் அந்தத் தொழில் இன்னும் நாட்டில் சரியாக வளர்ச்சி அடையவில்லை.

எனவே அமெரிக்கா, சீனாவுடனான இடைவெளியை இந்தியா குறைக்க வேண்டுமென்றால், இதுபோன்ற பல முக்கியக் கூறுகள் கவனிக்கப்பட வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3e4jdyz99eo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.