நாம் மனிதர்களிடம் பேசுகிறோமா அல்லது ஏஐயிடம் பேசுகிறோமா என்பதை உண்மையிலேயே கூற முடியுமா? பட மூலாதாரம்,Jesussanz/Getty Images கட்டுரை தகவல் டெய்சி ஸ்டீபன்ஸ் பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாம் ஒரு மனிதருடன் பேசுகிறோமா அல்லது ஏஐயிடம் (செயற்கை நுண்ணறிவிடம்) பேசுகிறோமா என்பதை நம்மால் கண்டறிய முடியுமா? நீண்ட காலமாக, கணினிகள் எந்தளவு புத்திசாலித்தனமானவை என்பதை மதிப்பிடும்போது மக்கள் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று. இது டூரிங் சோதனை (Turing test) என்பதிலிருந்து உருவானது. இதனை 1950-ஆம் ஆண்டு ஆங்கிலேய கணிதவியலாளரும் கணினி விஞ்ஞானியுமான ஆலன் டூரிங் வடிவமைத்தார். இயந்திர நுண்ணறிவு குறித்த தத்துவார்த்த சிந்தனையை முதன்முறையாக ஒரு அனுபவப்பூர்வமான சோதனையாக அவர் மாற்றினார். இந்தச் சோதனையின்படி, ஒரு கணினியின் நடத்தை மனிதனின் நடத்தையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாதவாறு இருந்தால், அது "புத்திசாலித்தனமான" நடத்தையை வெளிப்படுத்துவதாகக் கருதப்பட்டது. பட மூலாதாரம்,Pictures from History/Universal Images Group via Getty Images படக்குறிப்பு,ஆலன் டூரிங், இயந்திரங்கள் மனிதர்களிடமிருந்து எவ்வளவு வேறுபடுத்திப் பார்க்க முடியாதவை என்பதை அளவிடுவதற்காக ஒரு சோதனையை வடிவமைத்தார். ஆனால் 2014-ஆம் ஆண்டில், ஒரு ஏஐ சாட்பாட் முதன்முறையாக இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்பட்டபோது, அது ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைவதற்குப் பதிலாக, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மனிதர்களை போலச் செய்தல் டூரிங் சோதனை என்பது மனிதர்களைப் போலவே செய்யும் ஒரு விளையாட்டைப் போன்றது. இதில் ஒரு நபர் மெசேஜ் மூலமாக மற்றொரு மனிதரிடமும் ஒரு கணினியிடமும் உரையாடுவார். அவர் எத்தகைய கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம். அதன் முடிவில், யார் மனிதன் மற்றும் எது இயந்திரம் என்பதை அவர் தீர்மானிக்க வேண்டும். "மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை மக்களால் நம்பகத்தன்மையுடன் கண்டறிய முடியவில்லை என்றால், மனிதன் சிந்திக்க முடியும், ஆனால் இயந்திரத்தால் முடியாது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என டூரிங் கூறினார்," என்கிறார் நியூயார்க்கின் ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தின் உளவியல் உதவிப் பேராசிரியர் முனைவர் கேமரூன் ஜோன்ஸ். ஐந்து நிமிடக் கேள்வி-பதில்களுக்குப் பிறகு, குறைந்தது 30% நேரங்களில் கணினிகள் தங்களை மனிதர்களாகக் காட்டி வெற்றி பெறும் நிலையை 2000-ஆம் ஆண்டுக்குள் எட்டிவிடும் என்று டூரிங் கணித்திருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டூரிங் சோதனை என்பது, ஒரு மனிதர் ஒரு இயந்திரத்திடமும் மற்றொரு மனிதரிடமும் உரை வழியாகக் கேள்விகளைக் கேட்ட பிறகு, அவர்களுக்கு இடையிலான வேறுபாட்டை அந்த மனிதரால் கண்டறிய முடிகிறதா என்பதைப் பார்க்கிறது. 'நியாயமாக விளையாடவில்லை' 2014-ஆம் ஆண்டில், யூஜின் கூஸ்ட்மேன் என்ற ஏஐ சாட்பாட், டூரிங் சோதனையில் 33% நடுவர்களை தான் ஒரு மனிதன் என்று நம்ப வைத்தது. இதன் மூலம் போட்டி அமைப்பாளர்கள் நிர்ணயித்த தகுதியை அது எட்டியது. ஆங்கிலத்தில் உரையாடிய அந்தச் செயலி, யுக்ரேனைச் சேர்ந்த 13 வயது சிறுவனைப் போன்ற ஆளுமையை கொண்டிருந்தது. ஜெர்மனியின் ஆர்டபிள்யூடிஹெச் ஆச்சென் பல்கலைக்கழகத்தின் தத்துவஞானியும் கௌரவ விரிவுரையாளருமான முனைவர் மார்கஸ் பான்ட்சர், இது "நேர்மையான முறையில் செயல்படவில்லை" என்று கூறினார். "அந்த சாட்பாட்டின் குறைகள், ஆங்கிலம் பேசும் ஒரு யுக்ரேனிய பதின் பருவச் சிறுவனின் மொழித் திறனில் இருக்கக்கூடிய குறைகளோடு ஒத்துப்போயின," என்று அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,VCG via Getty Images படக்குறிப்பு,ஜோன்ஸின் ஆய்வின்படி, 2025-ஆம் ஆண்டில் சாட்ஜிபிடி 4.5 டூரிங் சோதனையில் தேர்ச்சி பெற்றது. அதன் பிறகு, பல மேம்பட்ட கருவிகள் டூரிங் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், ஓபன்ஏஐ-இன் சாட்ஜிபிடி 4.5 மாடல் 73% நேரங்களில் மனிதனாகக் கருதப்பட்டதாக ஜோன்ஸ் கண்டறிந்தார். இது உண்மையான மனிதர்களைக் காட்டிலும் அதிகப்படியான விகிதமாகும். மெட்டாவின் லாமா 3.1 மாடல் 56% நேரங்களில் மனிதனாகக் கருதப்பட்டது. "உண்மையான மனிதர்களை விடவும் மிக அதிகப்படியான நேரங்களில் இந்த மாடல்கள் மனிதர்களாகக் கருதப்படும்போது, அவை அந்தச் சோதனையில் (டூரிங் சோதனை) தேர்ச்சி பெறவில்லை என்று வாதிடுவது கடினம் என நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். இருப்பினும், கணினிகளால் உண்மையில் சிந்திக்க முடியும் என்பதற்கு இது ஒரு சான்றா என்பதில் சிலருக்கு இன்னும் சந்தேகம் உள்ளது. 'சீன அறை வாதம்' எனும் பரிசோதனை முறை 1980-ஆம் ஆண்டில், தத்துவஞானி ஜான் சீர்ல் 'சைனீஸ் ரூம் ஆர்குமெண்ட்' (Chinese room argument) எனப்படும் ஒரு பரிசோதனையை முன்வைத்தார். சீன மொழி தெரியாத ஒரு ஆங்கிலேயர், சில சீன எழுத்துக்கள் மற்றும் அந்த எழுத்துக்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற ஆங்கில வழிமுறைகளுடன் ஓர் அறைக்குள் பூட்டப்படுகிறார் என்று தொடங்குகிறது அந்த பரிசோதனை. அறைக்கு வெளியே இருப்பவர்கள் சீன மொழியில் எழுதப்பட்ட கேள்விகளைச் சீட்டுகளாக அவருக்கு உள்ளே அனுப்புகிறார்கள். அவர் தன்னிடம் உள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி, சீன மொழியிலேயே பதில்களைத் தயார் செய்து வெளியே அனுப்புகிறார். வெளியே இருப்பவர்களுக்கு, அந்த மனிதருக்குச் சீன மொழி தெரியும் என்பது போலத் தோன்றும். ஆனால், உண்மையில் தான் என்ன சொல்கிறோம் என்பது அவருக்குப் புரியாது. தகுந்த பதில்களைத் தருவதற்கு நிரலாக்கம் செய்யப்பட்ட கணினிகளுக்கும் இதுவே பொருந்தும் என்று சிலர் கூறுகின்றனர். பட மூலாதாரம்,Malte Mueller/Getty Images படக்குறிப்பு,இயந்திரங்கள் டூரிங் சோதனையில் தேர்ச்சி பெறுவது வெறும் மனிதர்களைப் போல பாவனை செய்வதால் மட்டும் தான். மாறாக அவற்றுக்கு உண்மையில் சுயமாக அறிவு இருப்பதனால் அல்ல என சிலர் வாதிடுகின்றனர். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஜார்ஜ் மாப்புராஸ், டூரிங் சோதனைக்கு மாற்றாக ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளார். அவர் கூறுகையில், "டூரிங் சோதனை நுண்ணறிவைக் கண்டறிய முயல்வதாகக் கூறினாலும், அது முக்கியமாக ஒரு இயந்திரத்தால் மனிதர்களைப் போலச் சரியாகப் பாவனை செய்ய முடிகிறதா என்பதையே சோதிக்கிறது," என்றார். இதனை விளக்க அவர் ஓர் உதாரணத்தைக் கூறினார். "நீங்கள் எந்த ஒரு ஏஐ சாட்பாட்டையும் திறந்து, ஒரு அனலாக் கடிகாரம் எவ்வாறு செயல்படுகிறது என்று கேட்டால், அது துல்லியமாக விளக்கும்," என்றார். ஆனால், ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் காட்டும் கடிகாரத்தின் படத்தை உருவாக்கச் சொன்னால், தற்போதைய ஏஐ மாடல்கள் அதில் தோல்வியடைய வாய்ப்புள்ளது. "அது உண்மையில் தகவலைப் புரிந்துகொள்ளவில்லை," என்று அவர் கூறினார். மறுபுறம், பான்ட்சர் போன்றவர்கள், டூரிங் சோதனையானது நடுவரை ஏமாற்றும் கணினியின் திறனுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகக் கருதுகின்றனர். மேலும், "உண்மையான புத்திசாலித்தனமான நடத்தையில் ஏமாற்றுவதும் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் அதுவே அதன் அடிப்படை அம்சம் கிடையாது," என்றும் அவர் குறிப்பிட்டார். மாற்று சோதனைகள் பல ஆண்டுகளாக முன்மொழியப்பட்ட மாற்றுச் சோதனைகளில் ஒன்றான சமூக அடிப்படையிலான நுண்ணறிவுச் சோதனை என்பதை பான்ட்சர் உருவாக்கியுள்ளார். ஆய்வக அடிப்படையிலான டூரிங் சோதனையைப் போன்று இல்லாமல், இவரது முறையில் ஒரு ஏஐ அமைப்பு ஏற்கெனவே இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்குள் (உதாரணமாக, கணிதவியலாளர்களின் ஆன்லைன் குழுமம்) அவர்களுக்குத் தெரியாமல் வைக்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, அந்த உறுப்பினர்களிடம் அது ஓர் இயந்திரம் என்பதைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்று சோதனை செய்யப்படும். இதில் ஓரளவுக்கு ஏமாற்றும் முறை இருந்தாலும், அந்த அமைப்பு மனிதர்களைப் போல 'நடிப்பதை' விட, 'மனிதத்தன்மையுடன் நடந்துகொள்வதையே' இந்தச் சோதனை முக்கியமாகக் கருதுவதாக பான்ட்சர் கருதுகிறார். இது ஒரு முக்கியமான வேறுபாடு என்று அவர் கூறுகிறார். "நுண்ணறிவு என்பது இயற்கையான சூழலில், நாம் உண்மையில் ஈடுபடும் சூழல்களில் மதிப்பிடப்பட வேண்டும்," என்றும் அந்தத் தத்துவஞானி குறிப்பிட்டார். இந்தச் சோதனையானது, ஒரு ஏஐ அமைப்பு ஏமாற்றும் அந்த சோதனையில் வெற்றி பெறுகிறதா என்பதில் கவனம் செலுத்தாமல், அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதில் மென்பொறியாளர்களை கவனம் செலுத்த ஊக்குவிப்பதாக அவர் கூறினார். மறுபுறம், மாப்போராஸ் ஒரு சோதனையை வடிவமைத்துள்ளார், அது நுண்ணறிவின் மிகவும் உறுதியான அளவுகோலைப் பார்க்கிறது என்று அவர் கூறினார். ஒரு இயந்திரம் தனக்கு ஏற்கெனவே தெரிந்த தகவல்களைக் கொண்டு, "ஏதேனும் புதிய அறிவியல் அறிவைக் கண்டறிந்து அதனை விளக்க" முடியுமானால், அது செயற்கை பொது நுண்ணறிவை எட்டிவிட்டதாகக் கருதலாம் என்று அவர் நம்புகிறார். செயற்கை பொது நுண்ணறிவு என்பது ஓர் இயந்திரம் மனிதனுக்கு இணையான அறிவுத்திறனைப் பெற்றிருக்கும் ஒரு கோட்பாட்டு ரீதியான கருத்தாக்கமாகும். பட மூலாதாரம்,Oscar Wong/Getty Images படக்குறிப்பு,திறந்த முடிவுகளைக் கொண்டதாகவும், கேள்விகள் தெளிவாக வரையறுக்கப்படாதவையாகவும் இருப்பதே, "ஒருவகையான ஆற்றல்மிக்க, நெகிழ்வான நுண்ணறிவை" சோதிக்க இதற்கு வாய்ப்பளிக்கிறது என்று ஜோன்ஸ் தெரிவித்தார். விமர்சனங்கள் இருந்தபோதிலும், நவீன ஏஐ ஆராய்ச்சியில் டூரிங் சோதனைக்கு இன்னும் ஓரிடம் இருப்பதாகச் சிலர் நம்புகின்றனர். திறந்த முடிவுகளைக் கொண்டதாகவும், கேள்விகள் தெளிவாக வரையறுக்கப்படாதவையாகவும் இருப்பதே, "ஒருவகையான ஆற்றல்மிக்க, நெகிழ்வான நுண்ணறிவை" சோதிக்க இதற்கு வாய்ப்பளிக்கிறது என்று ஜோன்ஸ் தெரிவித்தார். "இதனை மற்றொரு நிலையான அளவுகோலைக் கொண்டு நாம் மாற்றினால், டூரிங் எதைச் சொல்ல வந்தார் என்பதை நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம் என்றுதான் அர்த்தம்," என அவர் தெரிவித்தார். 'தோல்வியடையும் போர்' எந்தச் சோதனையைப் பயன்படுத்தினாலும், ஏஐ அமைப்புகள் தொடர்ந்து வளர்ச்சியடையும் போது, அவை மனிதர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு மாறிவிடும் என்று பான்ட்சர் நம்புகிறார். "இறுதியில், நாம் ஒரு தோல்வியடையக்கூடிய போரையே நடத்திக் கொண்டிருக்கிறோம்," என்று அவர் குறிப்பிட்டார். மேலும் இதனை நிரூபிக்க முடிந்தால், பொறுப்புணர்வு காரணங்களுக்காக, செயற்கை நுண்ணறிவு தன்னை ஏஐ என அறிவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் சட்ட வடிவமைப்புகள் தேவையென்பதை நியாயப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். "பிழையான தரவுகளைக் கொண்ட ஒரு ஆய்வறிக்கையை நான் வெளியிட்டால், அதற்கு நானே பொறுப்பு, ஆனால் அது ஏஐ எழுதிய கட்டுரையாக இருந்தால், யாரும் பொறுப்பேற்க முடியாது" என்கிறார் பான்ட்சர். பட மூலாதாரம்,10'000 Hours/Getty Images படக்குறிப்பு,செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிநவீனமாக மாறி வருவதால், அதனுடனான நமது தொடர்பு மற்றும் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு இயந்திரம் எந்த அளவுக்கு மனிதனைப் போலப் பாவனை செய்ய முடியும் என்பதை அளவிடுவது முக்கியம், இது டூரிங் சோதனையை இன்றும் பொருத்தமானதாக மாற்றுகிறது என்று ஜோன்ஸ் கருதுகிறார். "நாம் இணையத்தில் மற்றவர்களுடன் உரையாடுவதில் அதிக நேரத்தைச் செலவிடுகிறோம், தற்போது மக்களிடையே ஒரு அனுபவம் அதிகரித்து வருகிறது... அதாவது, எக்ஸ் தளத்தில் ஒரு பயனருடன் விவாதத்தில் ஈடுபடும்போது திடீரென, 'உண்மையில், நான் ஒரு மனிதனிடம் பேசவில்லை' என்பதை மக்கள் உணர்கிறார்கள்"என்று அவர் கூறினார். மேலும், "இத்தகைய நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் எவ்வளவு உள்ளன என்பதை டூரிங் சோதனை துல்லியமாகக் காட்டுகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgjp73gjkno
By
ஏராளன் · 14 minutes ago 14 min