Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய கூட்டுக்கள் பழைய பகைமைகள் ? - நிலாந்தன்

25-67bf0a00e0642-cccc.jpg

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கித் தமிழ்க்கட்சிகள் புதிய ஒருங்கிணைப்புகளுக்குப் போகத் தொடங்கியுள்ளன. அதை வரவேற்க வேண்டும். கடந்த 15ஆண்டுகளில் முன்னெந்தத் தேர்தலையும்விட தென்னிலங்கைமையக் கட்சிகளுக்கும் சுயேச்சைகளுக்கும் எதிராக அணி திரள வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் ஒரு தேர்தல் இது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது பெருமளவுக்கு உள்ளூர் நிலைமைகளை; உள்ளூர் சாதி,சமய,வட்டார உணர்வுகளைப் பிரதிபலிப்பவை.உள்ளூர்த் தலைமைகளைக் கட்டி எழுப்புவதற்கான ஒரு களம். ஆனால் அவை உள்ளூர்த் தலைமைகள் மட்டுமல்ல. ஒரு தேசியவாத அரசியலுக்கான அடிக்கட்டுமாணம் என்ற விளக்கத்தோடு மக்கள்மட்டக் கட்டமைப்புகளை அங்கிருந்துதான் பலப்படுத்த வேண்டும். அதாவது உள்ளூர் உணர்வுகளை அவற்றின் அசமத்துவங்களை நீக்கி தேசியக் கூட்டுணர்வாகத் திரட்ட வேண்டும். கீழிருந்து மேல் நோக்கி.

அந்த அடிப்படையில் பார்த்தால்,உள்ளூர்த் தலைமைகளை எப்படித் தமிழ் தேசியப் பண்புமிக்கவர்களாக வார்த்தெடுப்பது என்பதற்கான ஒரு பயில் களம்தான் உள்ளூராட்சி மன்றங்கள். ஆனால் தமிழ்க்கட்சிகளிடம் அது தொடர்பாக தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து ஆழமான நீண்டகால நோக்கிலான விளக்கங்களும் பார்வைகளும் உண்டா ?

கடந்த வாரம் ஜனநாயகத் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட கூட்டு எனப்படுவது தேர்தல்கூட்டு அல்ல என்று கூறப்பட்டாலும் அது நடைமுறையில் ஒரு தேர்தல் கூட்டாகத்தான் காணப்படுகின்றது. அக்கூட்டுக்குள் முதலில் காணப்பட்ட இரண்டு கட்சிகளும் ஒரு சுயேச்சைக் குழுவும் வெளியேறக்கூடிய ஆபத்துக்களை இக்கட்டுரை எழுதப்படுகையில் உணரக்கூடியதாக இருந்தது.

தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுவதைத் தடுக்கும் நோக்கிலான கூட்டு அது என்று எடுத்துக்கொண்டால்,தமிழ்த்தேசிய வாக்குகளைத் திரட்டுவதற்கான ஒரு கூட்டு என்றும் அதை வியாக்கியானப்படுத்தலாம். ஆயின் அக்கூட்டானது தமிழ்த்தேசிய வாக்குகளை கொத்தாகத் திரட்டும் சக்தி மிக்கதா ?

தமிழ்த் தேசியப் பரப்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் இரண்டு விதமான ஒருங்கிணைப்பு முயற்சிகள் உண்டு. ஒன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்படுகின்ற யாப்புருவாக்க முயற்சிகளை நோக்கிய  ஒருங்கிணைவு. அதில்  சிறீதரன் முன்னணியோடு இணக்கமாகக் காணப்படுகின்றார். ஆனால் தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணியும் அந்த அணியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மத்திய குழுவும் அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு எதிராக இருக்கின்றன. இந்த விடயத்தில் சிறீதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான தலைமைத்துவப் போட்டி முன்னணியின் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துகிறது.

இது ஏறக்குறைய பொது வேட்பாளரின்போது காணப்பட்ட ஒரு நிலை. அங்கேயும் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் உட்பகையானது பொது வேட்பாளர் தொடர்பான நிலைப்பாடுகளில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் இந்த இரண்டு விடயங்களிலும் சிறிதரன் தேசத்திரட்சிக்கு ஆதரவாக நின்றார்; நிற்கின்றார். அவரைப் பொறுத்தவரை அது தவிர்க்க முடியாதது. கட்சிக்குள் அவருடைய நிலையை பலப்படுத்துவதற்கு அவருக்கு வெளிக்கூட்டுகள் அவசியம்.

சிறீதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான பகை கஜேந்திரகுமாரின் ஒருங்கிணைப்பு முயற்சிகளில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துவதைப் போலத்தான் சந்திரகுமாருக்கும் சிறீதரனுக்கும் இடையிலான பகை, புதிய கூட்டு முயற்சிகளிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும். அப்படித்தான் மணிவண்ணனுக்கும் கஜேந்திரக்குமாருக்கும் இடையிலான பகையுணர்வும், தவறாசாவுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான பகையுணர்வும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும்.

சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான பகை எனப்படுவது பொது எதிரிக்கு எதிரான பகையுணர்வை விடவும் ஆழமானதாகவும் கூர்மையானதாகவும் வளர்ந்துவருகிறது. அதுபோலவே சிறீதரனுக்கும் சந்திரகுமாருக்கும் இடையிலான பகை என்பது பெருமளவுக்கு மாவட்டமட்டப் பண்பை கொண்டது. அதிகம் உள்ளூர் நிலைமைகளால் தீர்மானிக்கப்படுவது.

புதியகூட்டை அறிவிக்கும் முதலாவது சந்திப்பின்போது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இக்கூட்டுக்குள் சந்திரகுமார் இருக்கும்வரை சிறீதரனைக் கொண்டு வருவது கடினம் என்று சுட்டிக்காட்டப்பட்ட பொழுது, சந்திரகுமார் கூறியிருக்கிறார், பிரச்சினையில்லை சிறீதரன் இந்த அணிக்குள் வருவார் என்றால் நாங்கள் தமிழரசுக் கட்சியோடு போகிறோம் என்று. கிளிநொச்சியில் சந்திரகுமாருக்கும் சிறீதரனுக்கும் இடையிலான பகையும் சிரீதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான பகையும் அங்கே புதிய சேர்க்கைகளைத் தீர்மானிக்கின்றன. சுமந்திரனுக்கு ஆதரவான அணி அங்கு சந்திரகுமாருக்கு நெருக்கமாகக் காணப்படுகின்றது

அப்படித்தான் மணிவண்ணனின் விடயத்திலும்.மணிவண்ணன் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்மக்கள் கூட்டணியும், ஐங்கரநேசனும் புதிய கூட்டுக்குள் சந்திரகுமார் இணைக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறிய தவறாசா அணியும் அக்கூட்டுக்குள் முரண்படுவதாகத் தெரிகிறது. அதற்காக இவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு ஏதும் புதிய உடன்படிக்கைக்கு போகக்கூடுமா? தவராசா அணிக்கும் சுமந்திரன் அணிக்கும் இடையிலான இடைவெளியும்; மணிவண்ணனுக்கும் முன்னணிக்கும் இடையிலான பகையும் இக்கூட்டுக்களைத் தீர்மானிக்கும் காரணிகளாகும்.

மணிவண்ணன், ஐங்கரநேசன், தவறாசா அணி போன்றவற்றைச் சுதாகரிப்பதற்காக புதியகூட்டானது சந்திரகுமாரை வெளியே விடுமா? இல்லை. அதற்கான வாய்ப்புக்கள் இப்போதைக்குக் குறைவு. ஏனென்றால் புதிய கூட்டை உருவாக்கும் முன்முயற்சிகளை எடுத்த ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஒரு சினேக சக்தியாக கருதவில்லை. தவிர ஏற்கனவே யாப்புருவாக்க முயற்சிகளுக்காக செல்வம் அடைக்கலநாதனை கஜேந்திரக்குமார் சந்தித்திருக்கும் ஒரு பின்னணியில்தான் மேற்படி கூட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் விக்னேஸ்வரனின் பிரதிநிதியாக மணிவண்ணனும் கலந்து கொண்டார். விக்னேஸ்வரனின் கட்சிக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான இடைவெளியை தீர்மானிக்கும் அம்சங்களில் மணிவண்ணனும் ஒருவர். எனவே கூட்டிக்கழித்து பார்த்தால் புதிய கூட்டுக்குள் பழைய பகைமைகள் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.

25-67bbdcda81acb.jpg

தமிழ்மக்கள் உருகிப் பிணைந்த ஒரு தேசத் திரட்சியாக இல்லை. தமிழ்த் தேசியப் பரப்பில் எத்தனை துருவ நிலைகள்? ஆயுதப் போராட்டத்தில் இயக்கங்களுக்குள் ஏற்பட்ட பகைமையின் தொடர்ச்சியாகக் காணப்படும் தியாகி-துரோகி என்ற பகைநிலை. கட்சிகளுக்கு இடையிலான பகை;கட்சிகளுக்குள் காணப்படும் குழுக்களுக்கு இடையிலான பகை;கட்சிகளில் இருந்து வெளியேறியவர்களுக்கும் தாய்க்கட்சிக்கும் இடையிலான பகை… என்றிவ்வாறாக  பல்வேறு பகைநிலைகள் உண்டு. இந்தப் பகைமைகள் அனைத்தும் பழையவை. இவை புதிய கூட்டுக்களை எவ்வாறு தீர்மானிக்கப் போகின்றன?

இப்பொழுது தமிழ்த்தேசியப் பரப்பில் நான்கு தரப்புக்கள் துலக்கமாக தெரிகின்றன. முதலாவது தமிழரசுக் கட்சி. இரண்டாவது முன்னணி. மூன்றாவது புதிய கூட்டணி. நாலாவது இவற்றுக்குள் வராத சிறிய கட்சிகளும் சுயேச்சைகளும்.

தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி தேர்தலை தனியாகவே எதிர்கொள்ளப் போவதாக தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களை வென்ற கட்சி என்ற அடிப்படையில் தாமே உள்ளதில் பெரிய கட்சி,பிரதான கட்சி, தலைமைதாங்கும் கட்சி என்ற பொருள்பட சுமந்திரன் கருத்துக்கூறி வருகிறார். தேர்தலுக்கு முன் கூட்டுக்களை உருவாக்காமல் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கூட்டுக்களை வைத்துக்கொள்ளலாம் என்றும் அவர்கள் சிந்திப்பதாகத் தெரிகிறது.

இது தாங்களே பெரிய கட்சி என்ற அடிப்படையில் அவர்கள் வகுத்துள்ள தந்திரம்.தேர்தலுக்குப் பின் கூட்டுக்களை வைக்கும்பொழுது தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஏனைய கட்சிகளின் உயரம் எதுவென்று தெரிந்துவிடும். அந்த அடிப்படையில்தான் அவர்கள் பேரம்பேச முடியும். மாறாக தேர்தலுக்கு முன் கூட்டை வைத்தால்,கட்சிகளின் உயரம் இதுவென்று தெரியாமல் அவற்றின் தகுதிக்கு மீறி இடங்கொடுக்க வேண்டிவரும். இது தாமே தீர்மானிக்கும் கட்சி என்ற அடிப்படையில் கட்சி நோக்குநிலையில் இருந்து எடுத்த முடிவு. நிச்சயமாக தேசத்திரட்சி என்ற நோக்குநிலையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு முடிவு அல்ல.

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு இறந்த காலத்திலிருந்து எதையும் படித்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. உள்ளதில் பெரிய கட்சி;தலைமை தாங்கும் கட்சி என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு கட்சியானது தேசியவாத அரசியலுக்குத் தலைமை தாங்கும் கட்சி தாங்கள்தான் என்ற பொறுப்பை உணர்ந்து முடிவெடுக்கவில்லை. தேசத் திரட்சியை நோக்கித்தான் கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும். தேர்தலை நோக்கி அல்ல. அது மிக முக்கியம். அந்த ஒருங்கிணைப்பு 2009க்கு பின்னரான புதிய பண்புருமாற்ற அரசியலாகவும் இருக்க வேண்டும். அது மிக முக்கியம். மாறாக அவரவர் பலத்தின் அடிப்படையில் கூட்டுக்களை வைத்துக் கொள்ளலாம் என்பது முழுக்க முழுக்க தேர்தல் நோக்கு நிலையிலானது. சில சமயங்களில் தேர்தல் நோக்கு நிலையானது தேசத் திரட்சிக்கு எதிராக இருக்க முடியும்.

தேசியவாத அரசியல் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசியக் கூட்டுணர்வின் அடிப்படையில் பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. தன்னைத் தலைமை தாங்கும் சக்தியாகக் கருதும் தமிழரசுக் கட்சி அதற்குத் தேவையான வழி வரைபடத்தைக் கொண்டிருக்கின்றதா?இல்லை. முதலில் அவர்கள் தங்களை ஒரு உருகிப்பிணைந்த அமைப்பாகக் கட்டியெழுப்ப வேண்டும். தன்னை ஒரு கட்டிறுக்கமான கட்சியாகத் திரட்டமுடியாத ஒரு கட்சியானது எப்படி அரசற்ற, நாடற்ற ஒரு மக்களைத் தேசமாகக் கட்டியெழுப்ப முடியும்? இதுதானே கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது?

தமிழரசுக் கட்சி,முன்னணி,புதிய கூட்டணி தவிர ஆங்காங்கே சுயேச்சைகளும் களமிறங்கும் வாய்ப்புக்கள் தெரிகின்றன. நாடாளுமன்றத் தேர்தலைப் போலன்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயேச்சைகளுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருக்கலாம். தென்மாராட்சியில் ஒரு சுயேச்சைக் குழு அவ்வாறு களமிறங்கும் வாய்ப்புகள் தெரிகின்றன. வலிகாமத்திலும் சுயேச்சைக் குழுக்கள் இறங்க முடியும். இதில் சுயேச்சையாக நிற்கக்கூடிய சில அரசியல்வாதிகளோடு  சுமந்திரன் உரையாட முற்படுவதாக ஊர்ஜிதமற்ற ஒரு தகவல் உண்டு.

இப்படிப்பட்டதோர் பின்னணியில்,உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நோக்கி உருவாகிவரும் புதிய கூட்டுக்கள் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் நோக்கத்தோடு உருவாக்கப்பட வேண்டும். ஆனால், அதைக் கட்சிகள் செய்ய முடியாது என்பதுதான் தமிழ்த்தேசிய அரசியலில் உள்ள கொடுமையான யதார்த்தம். ஏனென்றால் தமிழ்மக்களை வாக்காளர்களாக;விசுவாசிகளாக; பகைக் குழுக்களாக;துரோகிகளாக தியாகிகளாக;ஆயுதக் குழுக்களாக; மிதவாதிகளாக;இன்னபிறவாகப் பிரித்து வைத்திருப்பதே கட்சிகள் தான். தாங்களே சிதறடிக்கும் ஒரு மக்கள் கூட்டத்தை தாங்களே திரட்டுவது எப்படி?வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது ஒரு தேசமாகத் திரண்டு முடிவெடுக்காத கட்சிகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எப்படித் தமிழ் வாக்குகளைத் திரட்டப் போகின்றன?

அவர்கள் ஒன்றாக நின்று தேர்தலை எதிர்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. ஆகக்குறைந்தபட்சம் அந்தந்த உள்ளூராட்சிப் பிரதேசங்களில் பகை தவிர்ப்பு அல்லது போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கை எதற்காவது போவார்களா? அதாவது ஒரு உள்ளூராட்சிப் பிரதேசத்தில் வெல்லக்கூடிய வேட்பாளருக்குப் போட்டியாக மற்றொரு தமிழ்த் தேசியக் கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் விடுவதன்மூலம் ஒரு தமிழ்த் தேசியக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்துவது.செய்வார்களா? அதாவது கட்சி கடந்து தேசமாகச் சிந்திப்பார்களா?

https://www.nillanthan.com/7195/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.