Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரச பாதீடு: மாற்றமா, ஏமாற்றமா?

March 1, 2025

அரச பாதீடு: மாற்றமா, ஏமாற்றமா?

 —  கருணாகரன் —

அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியில் சமூக, அரசியல்  மட்டத்திலும் பொருளாதார வட்டாரங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. “இது ஒரு மாறுதலான வரவு செலவுதிட்டம். மக்கள் நலன், தேசியப் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை முன்னிலைப்படுத்தியதாக இந்த வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது” என்கிறது அரசாங்கம். அரசாங்கத்தை ஆதரிப்போரின் கருத்தும் இதுவே. 

ஆனால், “இதில் எந்தப் புதுமையும் இல்லை. ஐ.எம். எவ்யையும் ரணில் விக்கிரமசிங்கவையும் கடந்து எந்தப் புதுமையையும் காணமுடியவில்லை. ஐ.எம்.எவ் – ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டு வடிவத்தின் இன்னொரு பிரதிமையே இந்த வரவு செலவுத் திட்டம்” என்கின்றன எதிர்க்கட்சிகள்.

“வரவு செலவுதிட்டத்தில் வடக்கிற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை அரசாங்கம், கிழக்கிற்கு வழங்கத் தவறியது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள்.

“வடக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி யாழ்ப்பாணத்துக்குள் மட்டும் செலவழிக்கப்படாமல், வன்னிக்கும் பகிரப்பட வேண்டும். குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என்கின்றனர்  வன்னித் தரப்பு மக்கள் பிரதிநிதிகளும் மக்கள் அமைப்பினரும். 

“தேசிய பொருளாதார வளர்ச்சியை எட்டுவதாக இருந்தால் அல்லது அதை நோக்கி முயற்சிப்பதாக இருந்தால் அதற்குரிய  வகையில் தேசியப் பொருளாதாரக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். அதைச் செய்யாமல் இந்த மாதிரியான சிறு சீரமைப்பு முயற்சிகள், பொருளாதார வளர்ச்சி என்ற கற்பனையான உலகத்தையே உருவாக்கும். அது மக்களுக்கோ நாட்டுக்கோ பெரிய நன்மைகளைத் தராது” என்கிறார்கள் பொருளாதாரத் துறையினர். 

“ஒப்பீட்டளவில் முன்னேற்றமான பாதீடாக இருந்தாலும் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட செலவீனம் நாடு, பொருளாதாரத் துறையில் முன்னோக்கிச் செல்வதைப் பற்றிச் சீரியஸாகச் சிந்திக்கவில்லை என்பதைக்காட்டுகின்றது.  இந்த அரசாங்கத்துக்கும் தடுமாற்றங்கள் உள்ளன என்பதைக் காட்டுகிறது” என்று கூறுகிறார்கள் இன்னொரு தரப்பினர். 

இப்படிப் பல விதமான அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கும் இந்தப் பாதீட்டு விவாதத்தின்போது நாம் சில விடயங்களைக் கவனப்படுத்த வேண்டும். 

வரவு செலவுத்திட்டத்தில் இப்போதே துண்டுவிழும் தொகையாக 2,200 பில்லியன் உள்ளது. எதிர்பார்க்கப்படும் வருமானத்தின் மதிப்பீடு, 4,990 பில்லியன் ரூபாய். செலவு 7,190 பில்லியன் ரூபாய். என்றால் வரவுக்கு மீறிய செலவே. ஆக வரவைக் கூட்டுவதைப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டும். அதாவது அதற்கான ஏற்பாடுகளை. 

இதற்கு கிராமியப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை 3 – 4 வீதமாக அதிகரிக்க முடியும் – வலுப்படுத்த முடியும் என்று ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். இதற்காக அரசாங்கம் 1400 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த அடிப்படையிலான எண்ணக் கருவைப் பகிரவும் திட்டமிடவும் மாவட்டச் செயலாளர்கள் அழைக்கப்பட்டு, அவர்களுடன் உரையாடலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

ஆனால், ஜனாதிபதியோ அரசாங்கமோ எதிர்பார்க்கின்றபடி – நம்புகின்றபடி – இதில் எந்தளவுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்பது கேள்வியே! ஏனென்றால், கடந்த காலத்தில் அரச நிர்வாகம் மிகப் பலவீனமானமுறையிலேயே செயற்பட்டுள்ளது. மாவட்டச் செயலகங்களின் திட்டமிடலும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் பெருங்குறைபாடாகவே இருந்தது. குறைந்த பட்சம் தமது திட்டங்களின் பெறுபேறு என்ன? அவை உருவாக்கிய சமூக விளைவுகள் என்ன என்பதைக் கூட அவை திரும்பிப் பார்த்ததும் இல்லை. மதிப்பீடு செய்ததும் இல்லை. வேண்டுமானால், இதைக்குறித்து மாவட்டச் செயலாளர்களிடத்திலும் திட்டமிடற் பணிப்பாளர்களிடத்திலும் ஜனாதிபதி விளக்கம் கேட்கலாம். அப்படிக் கேட்டால் அதற்குக் கதை சொல்லக் கூடிய (கதை விடக்கூடிய) அளவுக்கு நிபுணத்துவத்திறனைக் கொண்டிருக்கிறார்கள் அத்தனை அதிகாரிகளும். 

பதிலாக குறைபாடுகளை நிவர்த்தி செய்வதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. இதில் அபூர்வமாக ஒரு சிலர் விலக்காக இருக்கலாம். மற்றும்படி பலருடைய நிலை இதுதான். 

இதற்குக் காரணம், கடந்த ஆட்சிகளில் நடந்த தவறுகளும் பழக்கங்களும்தான். போதாக்குறைக்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவித்திட்டங்கள். கருத்திட்டங்கள், பயிலரங்குகள், பயிற்சித்திட்டங்கள், உதவிகள், கலந்துரையாடல்கள், கள ஆய்வுகள் என்றெல்லாம் பெரும் செலவிலும் பெரும் எடுப்பிலும் மேற்கொள்ளப்பட்ட பல  திட்டங்களும் பல நடவடிக்கைகளும் தோல்வியடைந்ததே வரலாறு. 

இதை மறுத்தால், ‘அவை எத்தகைய பெறுபேறுகளை உருவாக்கின?‘ என்ற புள்ளி விவரத்தைச் சான்றாதாரங்களுடன் எந்த மாவட்டச் செயலகமாவது வெளியிடத் தயாரா?  

எனவேதான் மாவட்டச் செயலக அதிகாரிகளை நம்பி அரசாங்கம் கிராமியப் பொருளாதார அபிவிருத்தியைப் பற்றிப் பேசுவது பொருத்தமானதல்ல. ஆனால், அவர்களைக் கொண்டுதான் இதைச் செயற்படுத்தவும் வேண்டும். அவர்கள் மாவட்டத்துக்கான அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள். அவர்கள்தான் அரசின் நேரடிப் பணிப்புக்கும் செயலாக்கத்துக்கும் பொறுப்பானவர்கள். 

ஆகவே என்னதானிருந்தாலும் அவர்களுக்கூடாகத்தான் எதையும் செய்ய முடியும். அப்படியென்றால், அவர்களை குணமாற்றம் செய்ய வேண்டும். பொறிமுறைகளை முற்றாக மாற்றியமைக்க வேண்டும். திட்டமிடற் செயலகங்களின் மூளையையும் மனதையும் புதிதாக்க வேண்டும். முழுமொத்தமாக புத்தாக்கத்துக்குரிய வகையில் நிர்வாகத்தையும் அதை இயக்கும் தரப்பினரையும் மாற்றியமைக்க வேண்டும்.

இதனால்தான் முறைமை மாற்றம் (Systrm change) வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதை அரசாங்கமும் ஏற்றுள்ளது. ஆனால், அதைச் செய்வதற்குத் தயக்கம் காட்டப்படுகிறது? இது  ஏன்?

நாட்டுக்குத் தேவையாக இருப்பது அறுவைச் சிகிச்சையே. அதையே மக்களும் எதிர்பார்க்கிறார்கள். என்பதால்தான் வழமைகளுக்கு மாறாக அவர்கள் NPP யை ஆதரித்தனர். அநுர குமார திசநாயக்கவை – விரும்பினர் – நம்பினர், நம்பிக் கொண்டிருக்கின்றனர். 

பதிலாக பழைய புண்ணுக்கு மேலே களிம்பைப் பூசுவதால் பயனில்லை. இதொன்றும் கடினமான விமர்சனமல்ல. அரசாங்கத்தை உற்சாகப்படுத்துவதற்கான சொற்களேயாகும். கடந்த ஆட்சிகளின்போது நடந்த தவறுகளைப் பட்டியலிடுவது, அதற்கான புள்ளிவிவரங்களை வெளிப்படுத்துவது எல்லாம் அரசியல் நடவடிக்கைகள். இவையெல்லாம் தேர்தல்கால நிகழ்ச்சிகளைப்போலவே உள்ளன. ஒரு சிறிய மாற்றம் என்றால், தேர்தல் மேடைகளுக்குப் பதிலாக பாராளுமன்றத்தில் அவை பட்டியற்படுத்தப்படுகின்றன – வெளிப்படுத்தப்படுகின்றன.

ஆகவே  அவை காற்றில் கரைந்து விடாமல் வரலாற்றில் இறக்கம் செய்யப்படுகின்றன. என்பதால் அடுத்த கட்டமாக அவை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளன என உணரலாம். இதையே மக்களும் எதிர்பார்க்கிறார்கள். சட்டத்தின் முன் குற்றவாளிகள், தவறானவர்கள், நாட்டைக் கெடுத்தவர்கள் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு முன் அவர்களை நிர்வாணப்படுத்துவது நல்லதே. 

அதேவேளை வரவு செலவுத்திட்டத்தில் மக்களைக் குறித்து, உற்பத்திப் பொருளாதாரம் குறித்து மேலும் சிந்திக்கலாம். உதாரணமாக, அரசாங்கம் வாகனங்களுக்கான வரியை உச்சமாக்கியிருக்கிறது. இதில் ஒரு சிறிய நெகிழ்ச்சியை பொருளாதார வளர்ச்சி கருதி ஏற்படுத்த வேண்டும். விவசாயம்,மீன்பிடி மற்றும் கைத்தொழில் முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் சுமைகாவி வாகனங்களுக்கும் உழவு மற்றும் அறுவடை, பதனிடல் அல்லது இறுதிசெய் இயந்திரங்களுக்கும் வரிக் குறைப்புச் செய்யப்படுவது அவசியமாகும். இங்கே வரி விலக்குக் கேட்கப்படவில்லை. வரிக்குறைப்பே கோரப்படுகிறது. 

அப்படி அமையும்போதுதான் உற்பத்திசார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு அது உற்சாகத்தையும் சிரமக்குறைவையும் ஏற்படுத்தும். 

இதைப்போல எளிய மக்களின் போக்குவரத்துக்கு உதவும் முச்சக்கர வண்டிகள், 150  CC க்கு உட்பட்ட மோட்டார்ச் சைக்கிள்கள் போன்றவற்றுக்கும் வரிக்குறைப்புச் செய்ய வேண்டும். இவை நாளாதாந்த உழைப்பு, வருவாயீட்டல், பணிக்குச் செல்லுதல்  போன்றவற்றுக்கு ஏற்புடையதாக இருக்கும். மட்டுமல்ல, இவையெல்லாம் சாதாரண மக்களுக்குரியவை.

ஆகவே மக்கள் நலன் அரசு – ஆட்சி என்ற வகையில் இவ்வாறான விடயங்களைக் குறித்துப் பொருத்தமாகச் சிந்திப்பது அவசியமாகும். கூடவே இளையோருக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது முக்கியமானது.அதற்கு முதலீடுகள் அவசியம். 

முதலீட்டாளர்கள் பலரும் அதைச் செய்வதற்கு ஆர்வமாக உள்ளனர். உள்நாட்டிலும் உள்ளனர். புலம்பெயர்ந்தோரும் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவர்கள் தங்களுடைய முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நடைமுறைப் பிரச்சினைகள், நிர்வாக இழுபறிகள், அரசியற் பேரங்கள் எல்லாம் தடையாக உள்ளன. இவற்றைச் சீராக்கம் செய்வதற்கான பொறிமுறை ஒன்றை அரசாங்கம் உருவாக்கினால் புதிய தொழிற்துறைகள் பெருகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக இதற்காக சிறப்பு அலகு ஒன்று (A special Unit) உருவாக்கப்படுவது கட்டாயமானது. 

முதலீட்டாளர் ஒருவர் அல்லது ஒரு கொம்பனி அதற்கான கோவையைச் சமர்ப்பித்தால், அதைப் பொறுப்பேற்று, பரிசீலித்தபின் தேவையான  திணைக்களங்களோடு தொடர்பு கொண்டு உரிய அனுமதிகளை விரைவாகப் பெற்றுக் கொடுக்க வேண்டும் அந்தப் பிரிவு. இப்போதுள்ள நிலைமை அப்படியானதல்ல. ஏராளமான இழுபறிகள்,தாமதப்படுத்தல்கள், தட்டிக் கழிப்புகள் நிர்வாக ரீதியாக உள்ளது. இதை மாற்றியமைக்க வேண்டும். 

இப்படிப் பல விடயங்களில் அரசாங்கம் கவனத்தைச் செலுத்தும்போதுதான் பொருளாதார வளர்ச்சியும் மீட்சியும் ஏற்படும். அடுத்த ஆண்டுப் பாதீட்டுக்கு முன் அரசாங்கம் ஒரு மறுசீரமைப்பு நடவடிக்கையில் (Restructuring action) னில் ஈடுபட வேண்டும்.அது கட்டாயமானது. 

அரசாங்கத்திற்குள்ள பொறுப்புகள் அதிகம். கடந்த 75 ஆண்டு காலக் குப்பையை அகற்றுவதென்பது எளிதல்ல. ஆனாலும் அதைச் செய்வதாகவே அது தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ளது. உறுதியின் முன்னே நிறுத்தியிருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்  அதன் மீதே கட்டப்பட்டுள்ளது.

கடந்த (ரணில்) அரசாங்கம் வரியிறுக்கம், தொழிலின்மை, புதிய வாய்ப்புகளைத் தேடுவதில் சிரத்தின்மை போன்றவற்றினால் அழுத்தங்களை உருவாக்கியது.இதனால் பலரும் நாட்டை விட்டு வெளியேறினர். அப்படி வெளியேறுவதையே ரணிலும் விரும்பினார். இது மிகப் பெரிய தவறாகும். ஒரு நாட்டின் வளங்களில் முக்கியமானது மனித வளம். அதிலும் உழைப்பாளர்கள், இளையோர், திறனாளர்கள், துறைசார் வல்லுனர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதும் வெளியேற்றப்படுவதும் மிகத் தவறானது. பாதகமானது.

ஆனால், அதையே அன்றைய அரசாங்கம் ஊக்குவித்தது. கால் நூற்றாண்டுக்கு மேலாக ஒருவரை வளர்த்து, ஆளாக்கி, துறைசார் – தொழில்சார் வல்லுநராக உருவாக்கியபின்  அவரை வெளியே விடுவதும் அவர் இன்னொரு நாட்டில் சென்று அந்த நாட்டுக்காக உழைப்பதும் எவ்வளவு இழப்பாகும். அதேவேளை எந்தச் செலவுமே இல்லாமல் பிற நாடுகள் அந்தத் திறனாளரை – உழைப்பாளரை தமக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன. 

இதை புதிய அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும். இந்த நாட்டை விட்டுச் சென்றவர்களும் இந்த மண்ணுக்கு வரும் வகையில் ஆட்சியை – பொருளாதாரத்தை – வாழும் சூழலை மாற்ற வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படையானது பாதீடாகும். அந்தப் பாதீட்டை விவாதித்து, வளப்படுத்துவதே ஆயிரமாயிரம் வாசல்களைத் திறக்கும். ஆம், சரியான ஒரு பாதீடு, நாட்டின் நெருக்கடியைத் திறக்கும் சிறப்பானதொரு திறவு கோலாகும். 

அநுர குமாரவின் (NPP) யின் கைகளில் அந்தத் திறவுகோலை வரலாறு ஒப்படைத்துள்ளது. அந்தத் திறவுகோலை திறப்பதற்குப் பயன்படுத்துவதா இல்லை பூட்டுவதற்கு உபயோகிப்பதா என்பதை  அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.வரலாறு அந்தப் பொறுப்பை அவர்களுக்கு அளித்துள்ளது. வரலாற்றுக்கு அவர்கள், தமது கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும்.

https://arangamnews.com/?p=11856

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.