டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!
December 31, 2025
— அழகு குணசீலன் —
ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பின் பேரில் விசாரணைக்கு சென்றபோது குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 26.12. 2025 அன்று கைது செய்யப்பட்ட அவர் 72 மணித்தியால தடுத்து வைப்புக்கு பின்னர், தொடர்ந்தும் விசாரணைகளுக்காக 2026 ஜனவரி 9 ம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு இடையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் விடுத்த கோரிக்கையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நிராகரித்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் டக்ளஸ் கைதுக்கு பின்னால் உள்ள அரசியல் என்ன…?
1990 முதல் இன்று வரை ஈ.பி.டி.பி. மீதும் அதன் தலைமை மீதும் மிகக்கடுமையான குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் ஒரு பகுதியினரால் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கும், விமர்சனங்களுக்கும் விதிவிலக்கான மாற்று இயக்கங்களும் இல்லை, தலைமைகளும் இல்லை. பொதுவாக அனைத்து தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும், தலைமைகளும் தங்கள் நலன் சார்ந்து இந்த இயக்கங்களுக்கு பின்னால் நின்று அவர்களை ஊக்குவித்தும் உள்ளன. தவறுகளை சுட்டிக் காட்டுவதை விடவும் இயக்கங்களோடு ஒத்து ஓடுதல் தமிழ்த்தேசிய கட்சிகளுக்கு உயிர்ப்பிச்சையாக இருந்திருக்கிறது.
தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்ட அமைப்பொன்றின் படைத்துறைத்தளபதியாக இருந்து ஸ்ரீலங்கா மத்திய அரசின் அமைச்சரவை அமைச்சர் வரை பல பதவிகளை டக்ளஸ் வகித்து இருக்கிறார். தமிழ்த்தேசிய அரசியல் விடுதலைப்போராட்ட நிலையில் இருந்து பயங்கரவாத வடிவத்தை படிப்படியாக உள்வாங்கி கொண்டபோது தமிழ்த் தேசியத்தின் பெயரிலான பயங்கரவாத செயற்பாடுகளை எதிர்த்து நின்றவர் டக்ளஸ். ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கியதுடன் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்திற்கும் எதிராக எந்த சமரசமும் இன்றி போராடிய ஒருவர்.
கடந்த 35 ஆண்டுகளாக வடக்கு கிழக்கு தமிழர் அரசியலில் அவர் எதைச் சொன்னாரோ அதுவே நடந்திருக்கிறது. நடந்து கொண்டும் இருக்கிறது.இந்த எதிர்வு கூறலில் உள்ள உண்மையை ஈழத்தமிழர்கள் இலகுவாக கடந்து செல்லமுடியாத அரசியல் தீர்க்கதரிசனம்.
ஸ்ரீ லங்கா அரசியலமைப்பின் ஆறாவது சரத்தை ஏற்றும், ஒட்டுமொத்த 1978 அரசியலமைப்பையும், தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட சுமார் 20 அரசியலமைப்பு மாற்றங்களையும் ஏற்றுக் கொண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு, மக்கள் மத்தியில் போலி தமிழ்த்தேசிய – சமஸ்டி, ஒற்றையாட்சி நிராகரிப்பு, இன்னும் தனித் தமிழ் ஈழம் என்ற முரண்பாட்டு அரசியலை டக்ளஸ் தேவானந்தா செய்யவில்லை. அரசியல் அமைப்பு நடைமுறைகளுக்கு உட்பட்ட அரசியலே அவரது அரசியலாக இருக்கிறது.
இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கை ஊடான மாகாணசபை அதிகாரப்பகிர்வை மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று அசைக்க முடியாத உறுதியுடன் இன்றுவரை வெளிப்படையாக இடித்துரைப்பவர். இது விடயத்தில் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை , அவர்கள் முப்படைகளோடும் பலமாக இருந்த காலத்திலும், தனது மக்களுக்கான அரசியல் நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் விடுதலைப்புலிகளின் 13 பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்டார்.
ஈழத்தமிழர் பிரச்சினைக்கு மாகாணசபை முறை தீர்வு அல்ல என்று கூறிக்கொண்டு, புலிகள் இருக்கும் வரை மாகாணசபையை பகிஷ்கரித்தும், புலிகள் தோற்கடிக்கடிக்கப்பட்ட பின்னர்,…. ஆரம்பம், அடிப்படை, அந்த புள்ளி, இந்த புள்ளி என்று ஏமாற்று அரசியலை டக்ளஸ் செய்யவில்லை.
ஏன்? இன்றும் “ஏக்கய ராஜ்சிய” வார்த்தையாடலின் போதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூட மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றாமல் இருக்க தயாரில்லை.
இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கையை இந்திய மேலாதிக்கம் என்றும், இராணுவ ஆக்கிரமிப்பு என்றும் பயங்கரவாதத்தை கையில் எடுத்து கிளர்ச்சி செய்த ஜே.வி.பி.யினர் கூட இறுதியில் மாகாணசபை தேர்தலில் பங்கு பற்றினர். ராஜீவ்காந்தி மீது தாக்குதல் நடாத்திய ஜே.வி.பி. உறுப்பினர்/ ஆதரவாளரான கடற்படை வீரரை ஜே.வி.பி. மாகாணசபை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தினர்.
புலிகள் இயக்கமும், புலிகளால் இந்திய கைக்கூலிகள் என்று தடைசெய்யப்பட்ட இயக்கங்களும், புலிகளை அராஜகவாதிகள் என்று கூறிய இந்த இயக்கங்களும் உண்மையில் இந்திய வெளியுறவில் இரு துருவங்களைச் சேர்ந்தவை. தமிழ்தேசிய கூட்டமைப்பு அமைக்கப்பட்ட போது புலிக்கு பின்னால் போனவர்கள் இப்போது புலி இல்லாத நிலையில் இந்தியாவுக்கு பின்னால் போகின்றார்கள்.
இந்த தளம்பல், சந்தர்ப்பவாதம் டக்ளஸ் இடத்தில் இருந்ததில்லை. அன்று முதல் இன்றுவரை அவர் இந்தியாவை பிராந்தியத்தின் ஒரு அரசியல் நிர்ணய சக்தியாகவே பார்க்கிறார். தேவையான நெருக்கத்துடனும், தேவையான தூரத்திலும் வைத்து அரசியல் செய்கிறார். இதை ஜே.வி.பி.கூட அதிகாரத்தை கைப்பற்றிய பின்னரே கற்றுக்கொண்டது.
பயங்கரவாதத்தை பயங்கரவாதமாக பார்த்தவர் -பார்க்கிறவர் டக்ளஸ். அதனால் புலிப் பயங்கரவாதத்தையும், அரசபயங்கரவாதத்தையும் அவர் பயங்கரவாதமாகவே பார்த்தார். புலிகளின் மக்கள் மீது அக்கறையற்ற வெறும் அதிகாரப்பசிக்கான அரசியல் இலங்கை அரசையும், இந்திய அரசையும் தூண்டி மக்களை அழிக்கும் என்பது டக்ளஸின் அரசியல் நோக்கு. புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கம் என்று அவர் கூறினார். இதை புலிகள் இல்லாத போது சொன்ன சுமந்திரன் பிராதான தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர். செல் நெறியை நிர்ணயிப்பவர். ஆனால் இந்த உண்மையை புலிகள் இருக்கும் போதே சொன்னவர் டக்ளஸ்.
மற்றைய அமைப்புக்கள், கட்சிகள் போன்று புலிக்கு பசுத்தோலை அவர் போர்க்கவில்லை. டக்ளஸின் கருத்தையே சர்வதேசமும், இந்தியாவும் கொண்டிருந்தன. தமிழ்க் கட்சிகள் தூதரகங்களின் பூட்டிய கதவுக்குள்ளும், வெளிநாட்டு சந்திப்புக்களிலும் ஒன்றையும், மக்கள் மத்தியில் வேறொன்றையும் சொல்லி செய்யும் ‘தெப்பிராட்டிய அரசியலை’ டக்ளஸ் தேவானந்தா செய்யவில்லை.
தற்போது 2001 இல் தனக்கும், தனது அமைப்புக்குமான தற்பாதுகாப்புக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி தென்னிலங்கை குற்றவாளி ஒருவரின் கரங்களுக்கு எப்படி போனது என்பதே கேள்வி/ விசாரணை.
இத்துப்பாக்கி 18 ஆண்டுகளுக்கு பின்னர் 2019 இல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கான விசாரணை கண்டுபிடிக்கப்பட்டு 6 வருடங்களுக்கு பிறகு நடைபெறுகிறது.
அதை டக்ளஸிடம் இருந்து, தான் பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்ட குற்றவாளி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இராணுவத்தரப்பு பதிவேட்டின் படி 13 – T56 ரக துப்பாக்கிகளையும், 6 ரிவோல்வர் களையும் டக்ளஸ் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற முன் நிபந்தனைகளுடன் சுயமாக கையொப்பமிட்டடு பெற்றுள்ளார் என்கிறது புலனாய்வுப் பிரிவு.
புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கத் தலைமைகளும், உறுப்பினர்களும் புலிகளால் வேட்டையாடப்பட்ட சூழலில் டக்ளஸ் தேவானந்தா மட்டும் அல்ல மற்றைய அமைப்புக்களும், தலைமைகளும் இலங்கை, இந்திய அரசாங்கங்களின் இராணுவ/ ஆயுத உதவிகளை பெற்றுள்ளன.
என்பதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.
இன்றைய கேள்வி அந்த துப்பாக்கி மற்றைய தரப்புக்கு எப்படி போனது என்பதுதான்? பார்க்கவும், கேட்கவும் இது நியாயமான கேள்விதான். இல்லை என்பதல்ல. அதுவும் சட்ட ரீதியில் மிக முக்கியமான கேள்வியும் கூட. ஆனால் ஒரு இயக்கத்தின், அரசாங்க இயந்திரத்தின் யுத்தகால செயற்பாடுகளை தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் புதிரல்ல. ஜே.வி.பி.யும், ஜனாதிபதியும் இந்த சூழ்நிலைக்கூடாகவை பயணித்துள்ளனர்.
ஈ.பி.டி.யில் இருந்து விலகிச்சென்றவர்களால். கையாடப்பட்டு தென்னிலங்கையில் விற்கப்பட்டிருக்கலாம்,
அல்லது, யுத்தத்திற்கு பின்னர் மீள ஒப்படைக்கப்பட்டும் துப்பாக்கிகள் வழங்கப்பட்ட/ மீள ஒப்படைக்கப்பட்ட பதிவுகளை மீளப்பெறாத வகையில், ஆயத களஞ்சியத்தில் இருந்து களவாடப்பட்டிருக்கலாம்..
அல்லது, இராணுவத்திடம் இருந்து கூட இந்த துப்பாக்கி கைமாறியிருக்கலாம்,
அல்லது துப்பாக்கியோடு சென்றவர் இறந்திருக்கலாம்,.
என்பது போன்ற பல கேள்விகளே ஈ.பி.டி.பி. தரப்பில் உறுதியாக கூற முடியாத ஒரு பதிலாக அடிபடுகிறது.
படையில் இருந்து தப்பியோடிய பல சிப்பாய்களிடம் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தென்னிலங்கை குற்றச்செயல்களில் இந்த படையினரும், அவர்கள் கொண்டு சென்ற ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் இந்த வாதங்கள் டக்ளஸை இந்த குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்ய போதுமானதா? என்றால் இல்லை. மாறாக சூழலை மேலும் விளங்கிக்கொள்வதற்கான மேலதிக தகவல்கள் மட்டுமே.
தற்போது, டக்ளஸ் கைது செய்யப்பட்டது அரசாங்கம் பிள்ளையார் பிடிக்கப்போன…. கதையை நினைவூட்டுகிறது. புலனாய்வு பிரிவினர் கடந்த காலங்களில் மறுதலித்து வந்த ஒரு உண்மையை அவர்களே சர்வதேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்தியுள்ளனர். அதுதான் இராணுவத்தின் ஆதரவுடன் தமிழ்க்குழுக்கள் இணைந்து செயற்பட்டன என்பதும், அக்குழுக்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது என்பதும் வெளிப்பட்டிருக்கிறது. இது இலங்கை மக்களுக்கு ஒன்றும் இரகசியம் அல்ல. இதற்கு ஈ.பி.டி.பி. மட்டும் அல்ல புலிகளால் தடைசெய்யப்பட்ட மற்றைய குழுக்களும் விலக்கல்ல.
பிரேமதாச -ரஞ்சன் விஜயரெட்ண காலத்தில் புலிகளுக்கும் அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியது. பணமும் வழங்கப்பட்டது.
இந்திய இராணுவத்தை வெளியேற்றவும், ஈ.பி.ஆர்.எல்.எப். ஈ.என்.டி.எல்.எப். கூட்டு தமிழ்த்தேசிய இராணுவத்தை செயலிழக்கச் செய்யவும் என்று கூறி புலிகள் இந்த ஆயுதங்களை பெற்றுக்கொண்டனர்.
இந்த ஆயுதங்களை புலிகள் அரசாங்கத்திடம் மீள ஒப்படைத்ததற்கு வரலாறு இல்லை.
ஈரோஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை ஈரோஸ் பொறுப்பேற்று அதற்கான ஆயுதங்களையும், சம்பளங்களையும், வாகனங்களையும் பெற்றுக்கொண்டது.
இந்த ஆயுதங்களில் ஒரு பகுதியையும், வாகனங்களையும் ஈரோஸ் முகாம்களை தாக்கி புலிகள் எடுத்துச்சென்றனர். இவற்றிற்கான பட்டியலை எங்கு தேடுவது.?
முதலமைச்சர் வரதராஜ பெருமாள் காலத்தில் மாகாணசபை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அது இலங்கை படையினர் முகாமுக்குள் இருந்த காலம். ஆனால் மாகாணசபை உறுப்பினர்களின் சம்பளம், அவர்களின் பாதுகாப்பு செலவுகளை கொழும்பு அரசாங்கமே செய்தது. பஜீரோ ஜீப் வாகனங்களும். வழங்கப்பட்டன.
இவை எல்லாம் எப்போது? எங்கே வைத்து ஒப்படைக்கப்பட்டன. ஆயுதங்களை இந்தியாவும், இலங்கையும் வழங்கியதாக கூறப்படுகிறது.. இப்படி உள்நாட்டு யுத்தம் ஒன்றின் போது முறையற்ற, ஒழுங்கமைக்கப்படாத நிர்வாகம் என்பது எல்லா நாடுகளிலும் பொதுவான ஒரு போக்கு.
இது டக்ளஸ் தேவானந்தாவை பிணையெடுப்பதற்கான பதிவல்ல. ஜதார்த்தம். சட்டம், ஒழுங்கு, நீதி, நிர்வாகம் சீர்குலைந்து, செயலிழந்து இருக்கின்ற நிலையில் பொதுவான தன்மை.
ஜே.வி.பி. கிராமிய மட்டத்தில் தனது அமைப்பை ஸ்திரப்படுத்த ஓய்வு பெற்ற படையினருக்கான அமைப்புக்களை உருவாக்கியது. இவர்களில் பெரும்பாலானோர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள். இராணுவத்தில் இருந்து, ஆயுதங்களோடு தப்பியோடியவர்கள். இவர்களை பாதுகாக்கவே டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால் அரசாங்கம் ஒழித்து பிடித்து விளையாடுகிறது. டக்ளஸ் தேவானந்தாவை நீதிமன்றத்தில் நிறுத்துவதைவிடவும் சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களில் இருந்து படைத்தரப்பு போர்க்குற்றவாளிகளை பாதுகாக்க படாதபாடு படுகிறது அரசாங்கம்.
இறுதியாக, இன்று கர்மா….., தெய்வம் நின்றறுக்கும்….., மன்னருக்கு செங்கம்பள வரவேற்பு…. என்றெல்லாம் பேசுபவர்களுக்கு.
அந்த கர்மாவின் பங்காளிகளான நீங்கள் கர்மாவை முள்ளிவாய்க்காலுக்கு பின்னரும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். என்றால் கர்மா பற்றிய உங்களின் புரிந்துணர்வு தான் என்ன…?
பத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்களில் தப்பிய ஒருவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் .
அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியவர்களை கர்மா கொலை செய்தது என்று சொல்லலாமா?
இங்கு எது கர்மா…..? கைது செய்யப்படுவர்களுக்கு கர்மாதான் காரணம் என்றால்,
காணாமல் போனவர்கள்….
சிறையில் வாடும் அரசியல் கைதிகள்…..,
போரில் அங்கவீனம் அடைந்தோர்…
நிற்கதியாக்கப்பட்ட. தாய்மார்கள்….
பிள்ளைகள்…. எல்லாம் கர்மாவைச் சுமக்கிறார்களா …?
உங்கள் குடும்பங்களில் ஏற்பட்ட போர்க்கால இழப்புக்களுக்கு என்ன பெயர்..?
கர்மாவா …?
மூளைக்கும் வாய்க்கும் சம்பந்தம் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல்.
https://arangamnews.com/?p=12565
By
கிருபன் ·