Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"நான் பிஸியோதெரபி படித்திருப்பதால் படிப்பதில் சிரமம் இருக்காது"

படக்குறிப்பு, மகளுடன் சேர்ந்து நீட் தேர்வு எழுதி மருத்துவம் படிக்கத் தேர்வான தாய் அமுதவள்ளி

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 1 ஆகஸ்ட் 2025, 13:05 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

"பிளஸ் 2 முடித்து 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆறு மாதங்களாக மகளுடன் சேர்ந்து நீட் தேர்வுக்குப் படித்து தேர்வு எழுதினேன். ஆனால், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என நினைக்கவில்லை" எனக் கூறுகிறார், தென்காசியை சேர்ந்த 49 வயதான அமுதவள்ளி.

பிஸியோதெரபிஸ்ட் ஆக பணிபுரிந்து வரும் அமுதவள்ளி, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேர்வாகியிருக்கிறார்.

அதேநேரம், 'நீட் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும்' என மருத்துவ சங்கங்கள் விமர்சித்துள்ளன. அதிக வயதில் மருத்துவம் படிப்பதற்கு எதிர்ப்பு கிளம்புவது ஏன்?

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமைன்று (ஜூலை 30) தொடங்கியது. முதல்நாளில் சிறப்பு பிரிவினருக்கான ((PwD category) கலந்தாய்வு புநடைபெற்றது.

இந்தக் கலந்தாய்வில் தென்காசியை சேர்ந்த மாற்றுத் திறனாளியான அமுதவள்ளி என்பவர் பங்கேற்றார். கலந்தாய்வு முடிவில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை அமுதவள்ளி எழுதியுள்ளார். கடந்த ஆண்டு பிளஸ் டூ படிப்பை முடித்த அமுதவள்ளியின் மகள் சம்யுக்தா கிருபாளணியும் நீட் தேர்வை எழுதியுள்ளார்.

இதில் 720 மதிப்பெண்ணுக்கு 147 மதிப்பெண்ணை அமுதவள்ளி பெற்றுள்ளார். அவரது மகள் சம்யுக்தா 441 மதிப்பெண் எடுத்துள்ளார்.

"பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வில் பங்கேற்க இருக்கிறேன். எனக்கும் அரசு மருத்துவக் கல்லூரி அல்லது சுயநிதி கல்லூரியில் இடம் கிடைக்குமென நம்புகிறேன்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சம்யுக்தா கிருபாளணி.

மகளுடன் சேர்ந்து மருத்துவம் படிக்கத் தேர்வான தாய்

படக்குறிப்பு, "நான் பிஸியோதெரபி படித்திருப்பதால் படிப்பதில் சிரமம் இருக்காது'' என்கிறார் அமுதவள்ளி

'மகளால் வந்த ஆர்வம்'

"1994 ஆம் ஆண்டு பிளஸ் டூ படித்தேன். அப்போது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் நுழைவுத் தேர்வும் பிளஸ் டூ மதிப்பெண்ணும் முக்கியமாக இருந்தன. அப்போது எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை" எனக் கூறுகிறார் அமுதவள்ளி.

ஆனால், பிஸியோதெரபிஸ்ட் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாக பிபிசி தமிழிடம் கூறிய அமுதவள்ளி, "கடந்த ஓராண்டாக என் மகள் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். யாரிடமாவது சொல்லிப் படித்தால் மனப்பாடம் ஆகும் என்பதால் என்னிடம் சொல்லிப் படித்தார். அதைப் பார்த்து நானும் தேர்வு எழுதும் முடிவுக்கு வந்தேன்" என்கிறார்.

இவரின் கணவர் மதிவாணன் வழக்கறிஞராக இருப்பதால், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக குடும்பத்தின் தேவைகளை அவர் கவனித்துக் கொண்டதாகக் கூறுகிறார்.

"கடந்த ஆண்டு நீட் தேர்வில் 380 மதிப்பெண் எடுத்ததால் மகளால் மருத்துவம் படிக்க முடியவில்லை. இந்தமுறை நானும் மகளும் இணைந்து படித்தோம். தினசரி ஆறு மணிநேரத்தை நீட் தேர்வுக்காக ஒதுக்கிப் படித்தேன்" என்கிறார், அமுதவள்ளி.

கடந்த ஆண்டு தனது மகளை நீட் பயிற்சி வகுப்பில் அமுதவள்ளி சேர்த்துள்ளார்.

'உயிரியல் பாடம் கைகொடுத்தது'

நீட் தேர்வு குறித்துப் பேசும் அமுதவள்ளி, " இயற்பியல் தேர்வு மிகக் கடினமாக இருந்தது. எல்லாம் கணக்குகளாக இருந்தால் ஒன்றும் புரியவில்லை. மத்திய பாடத்திட்டத்தில் (CBSE) இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. உயிரியல் பாடம் மட்டுமே கைகொடுத்தது" என்கிறார்.

இவர் தமிழ் வழியில் பிளஸ் டூ படிப்பை முடித்துள்ளார். "நீட் தேர்வையும் தமிழ் வழியில் எழுதினேன். ஒரு கேள்விக்கு கொடுக்கப்படும் நான்கு விடைகளும் ஒன்றுபோலவே இருக்கும். அதை கண்டறிவது தொடர்பாக மகள் கொடுத்த ஆலோசனைகள் உதவியாக இருந்தன" எனக் குறிப்பிட்டார்.

நடப்பு ஆண்டில் நீட் தேர்வு மிகக் கடினமானதாக இருந்ததாகக் கூறுகிறார், அமுதவள்ளியின் மகள் சம்யுக்தா கிருபாளணி.

"என்னுடன் சேர்ந்து படித்ததால் அம்மாவும் அதிக மதிப்பெண் பெறுவார் என நினைத்தேன். ஆனால் அவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துவிட்டது" என்கிறார்.

அதேநேரம், 49 வயதில் மருத்துவக் கல்லூரியில் இணைந்து படிப்பதை மருத்துவ சங்கங்கள் விமர்சித்துள்ளன.

"இவருக்கு தற்போது 49 வயதாகிறது. படித்து முடிக்கும்போது 55 வயதாகிவிடும்"

படக்குறிப்பு, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்

ஓய்வுபெறும் வயதில் படிக்க வரலாமா?

"மருத்துவப் படிப்பு என்பது ஐந்தரை வருடங்களாக உள்ளது. தற்போது தேர்வானவருக்கு 49 வயதாகிறது. அவர் படித்து முடிக்கும்போது 55 வயதாகிவிடும். அறுபது வயதில் ஓய்வு பெற்றவர்களும் மருத்துவம் படிக்க வருகின்றனர்" எனக் கூறுகிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலர் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஒருவரால் எத்தனை ஆண்டுகாலம் திறனுடன் உழைக்க முடியும் என்பதைக் கணக்கிட்டு ஓய்வுபெறும் வயதை தொழிலாளர் நலத்துறை நிர்ணயித்துள்ளது. அதற்கு மேல் திறனுடன் வேலை பார்க்க முடியாது என்பது தான் காரணம்" என்கிறார்.

'ஒரே அளவுகோலில் பார்க்க முடியாது'

"இவர்களால் சமூகத்துக்கு எந்தளவுக்கு பலன் கொடுக்க முடியும் என்பது முக்கியமானது" எனக் கூறும் சாந்தி ரவீந்திரநாத், "ஒருவர் தனது 49 வயதுக்குள் அதிக பட்டங்களைப் படித்து திறன்களை வளர்த்திருப்பார். அவரையும் பிளஸ் 2 படிப்பவரையும் ஒரே அளவுகோலில் நிறுத்திப் பார்க்க முடியாது" எனத் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக வங்கி அதிகாரிகள், உயிரியியல் ஆசிரியர்களும் நீட் தேர்வு எழுதுவதாகக் கூறும் சாந்தி ரவீந்திரநாத், "முன்பு மருத்துவப் படிப்புக்கு 25 என வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பட்டியல் சாதியினருக்கு 30 வயதாக உச்சவரம்பு இருந்தது" என்கிறார்.

வயது வரம்பை எதிர்த்து நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்ததாகக் கூறும் சாந்தி ரவீந்திரநாத், "வழக்கு நிலுவையில் உள்ளதால் வயது வரம்பைத் தளர்த்திவிட்டனர். இதனால் ஐந்து முறைக்கும் மேல் சிலர் தேர்வுகளை எழுதுகின்றனர். வயது வரம்பு நிர்ணயிக்கும்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பில்லை" என்கிறார்.

இந்தக் கருத்தை மறுக்கும் அமுதவள்ளி, " பிளஸ் 2 மட்டுமே முடித்துவிட்டு அதிக வயதில் ஒருவர் மருத்துவம் படிக்க வந்தால் அவருக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் எனக் கூறலாம். ஆனால், நான் பிஸியோதெரபி படித்திருப்பதால் படிப்பதில் சிரமம் இருக்காது" என்கிறார்.

பொது மருத்துவம், இதயம், நரம்பியல், எலும்பு மூட்டு ஆகியவை குறித்துப் படித்திருப்பதாகக் கூறும் அவர், "இதைத்தான் மருத்துவப் படிப்பிலும் படிக்க உள்ளேன். மருத்துவம் படிப்பதற்கு வயது வரம்பு நிர்ணயிக்காமல் இருப்பது வரவேற்கத்தக்கது" எனவும் தெரிவித்தார்.

49 வயதில் மருத்துவம் படிக்க தேர்வு: தென்காசி பெண்ணின் சாதனை சர்ச்சையாவது ஏன்?

பட மூலாதாரம், GETTY IMAGES

வயது உச்ச வரம்பு வழக்கில் கூறப்பட்டது என்ன?

'நீட் தேர்வில் வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை' என்ற தேசிய மருத்துவக் கல்வி ஆணையரகத்தின் அறிவிக்கைக்கு எதிராக கேரளாவை சேர்ந்த சிலர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கின் முடிவில் தேசிய மருத்துவக் கல்வி ஆணையரகத்தின் அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. 'பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது' என தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதலாம் என, 2018 ஆம் ஆண்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையேற்று, தேசிய மருத்துவக் கல்வி ஆணையரகமும், 'நீட் தேர்வு எழுதுவதற்கு வயது உச்ச வரம்பு இல்லை' என்று அறிவித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn92gnre55po

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.