Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூடப்படும் பாடசாலைகள் திறக்கப்படும் போதைப் பொருள் தடுப்பு மையங்கள்? - நிலாந்தன்

Kantharmadam.jpg

வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70க்கும் மேற்பட்ட  பாடசாலைகளை மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்  தெரிவித்துள்ளார். 10 பிள்ளைகள் கல்வி கற்கும் 35 பாடசாலைகள் காணப்படுவதாகவும் 11–20 பிள்ளைகள் கல்வி கற்கும் 64  பாடசாலைகளும்,  20–50 பிள்ளைகள் கற்கும் 171 பாடசாலைகளும் இருப்பதாகவும் 50–100 பிள்ளைகள் கற்கும் 174பாடசாலைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலைகள் ஏன் மூடப்படுகின்றன? எப்படிப்பட்ட  பாடசாலைகள் மூடப்படுகின்றன? பெரும்பாலும் உள்ளூரில் காணப்படும் சிறிய  பாடசாலைகள்தான் அதிகமாக மூடப்படுகின்றன. அவை மூடப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது காரணம், சனத்தொகை வீழ்ச்சி. இரண்டாவது காரணம், போட்டிப் பரீட்சை காரணமாக தேசிய மட்டப் பரீரசைகளில் உயர்ந்த அடைவைக் காட்டும் பாடசாலைகளை நோக்கி பிள்ளைகளை நகர்த்தும் ஒரு போக்கு.

எனினும் யுத்தம்தான் இதற்கு மூல காரணம் என்று ஒரு மூத்த கல்வி அதிகாரி தெரிவித்தார். போர் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வுகள் புலப்பெயர்வுகள் போன்றவற்றால் சனத்தொகை வீழ்ச்சி அடைந்தது. போரினால்  பாடசாலைகள் அழிக்கப்பட்டன. அல்லது சேதமடைந்தன. போர்க்காலத்தில் இடம்பெயர்ந்த ஒரு தொகுதி  பாடசாலைகள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவேயில்லை.

போட்டிப் பரீட்சை காரணமாக நகர்ப்புற பாடசாலைகளில் நோக்கிச் செல்லும் மோகம் அதிகரிக்கின்றது. தேசியமட்ட பரீட்சைகளில் உயர்ந்த பெறுபேறுகளை அடைவதற்காக பிள்ளைகளை பந்தயக் குதிரைகள் போல பழக்கி எடுக்கும் ஆசிரியர்களையும் பாடசாலைகளையும் நோக்கி அல்லது நகரங்களை நோக்கி பிள்ளைகள் நகர்கிறார்கள். இதனால் உள்ளூரில் காணப்படும் சிறிய பாடசாலைகள் கைவிடப்படுகின்றன.

வரையறைக்கப்பட்ட எண்ணிக்கையைவிடக் குறைந்தளவு பிள்ளைகளைக் கொண்ட ஒரு பாடசாலைக்கு வளங்களை விரயம் செய்ய முடியாது. எனவே சிறிய பாடசாலைகளை மூடுவது தவிர்க்கமுடியாதது என்று கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். யப்பானில்  ஒரு தொடருந்துப் பாதையில் ஒரே ஒரு பிள்ளை பாடசாலைக்குப் போக வேண்டும் என்பதற்காக ஒரு ரயில்வே ஸ்டேஷனை மூடாமல் வைத்திருப்பதாக ஒரு செய்தி உண்டு. அது யப்பானில். ஆனால் இலங்கையில் அதிலும் போரால் எல்லா விதத்திலும் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளில் மிகச்சில பிள்ளைகளுக்காக அளவுக்கு அதிகமான வளங்களைக் குவிப்பதற்கு கல்விக் கட்டமைப்பும் தயாரில்லை.

இவ்வாறு பாடசாலைகள் அதிகமாக மூடப்படக்கூடிய வாய்ப்புகளைக் கொண்ட பிரதேசங்களில் அதாவது பிள்ளைகளின் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் பிள்ளைகளை ஒரு மையத்தில் இணைத்து, வளங்களையும் ஒரு மையத்தில் இணைத்து,கொத்தணிப் பாடசாலைகளை உருவாக்கிய பின் அப்பாடசாலைகளை நோக்கி பிள்ளைகளை ஏற்றி இறக்குவதற்கு உரிய வாகன ஏற்பாடுகளை செய்யலாம் என்று ஓய்வுபெற்ற கல்வி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு வலயத்தில் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பு ஒன்றின் உதவியோடு வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீவுப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவப் பாடசாலையும் அவ்வாறு வாகனத்தை விட்டு ஊர் ஊராக பிள்ளைகளை ஏற்றி இறக்குகிறது. அதில் மதமாற்ற உள்நோக்கங்கள் இருப்பதாக ஒரு பகுதி இந்துக்கள் மத்தியில் சந்தேகங்கள் உண்டு. அதே சமயம் கோவில்களைப் புனரமைப்பதற்குக் கோடி கோடியாகச் செலவழிக்கும் பக்தர்களும் அறக்கட்டளைகளும் தமது ஊர்களில் உள்ள பிள்ளைகளை ஏற்றி இறக்குவதற்கு வாகன ஏற்பாடுகளைச் செய்யலாம்.

வடக்கில்  குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மட்டும் 50  பாடசாலைகள் இதுவரை மூடப்பட்டு விட்டன, அவற்றில் பெரும்பாலானவை ஒரு காலகட்டத்தில் நவீன யாழ்ப்பாணத்தைச் செதுக்கிய கல்விச்சூழலைக் கட்டமைத்தவை.

கடந்த இரு நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட  மிஷன் பாடசாலைகளுக்கு போட்டியாகவும் எதிராகவும் இந்து மறுமலர்ச்சியாளர்களும் அறக்கட்டளைகளும் கட்டியெழுப்பிய பாடசாலைகள் யாழ்பாணத்தின் மூலை முடுக்கெல்லாம் காணப்பட்டன.

ஊரின் ஒரு பகுதியில் ஓர் அமெரிக்க மிஷன் பாடசாலை அல்லது ரோமன் கத்தோலிக்க பாடசாலை காணப்படுமாக இருந்தால் அதற்குப் போட்டியாக  சற்றுத் தள்ளி ஒரு சுதேச பாடசாலை கட்டப்படும். அதற்கு சரஸ்வதி, சன்மார்க்கா, சைவப்பிரகாசா… என்று ஏதாவது ஒரு இந்து மதம் சார்ந்த பெயர் வைக்கப்படும். ஊருக்குள் குறுகிய தூரத்தில் இவ்வாறு பாடசாலைகள் கட்டப்படுகையில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அங்கே போய்ப் படிக்குமாறு உந்தித் தள்ளினார்கள். இவ்வாறு போட்டிக்குப் பள்ளிக்கூடம் கட்டும் ஒரு போக்கின் விளைவாகவும்தான் நவீன யாழ்ப்பாணம் மேலெழுந்தது.

இனப்பிரச்சினைக்கு அமெரிக்க மிஷனும் ஒருவிதத்தில் காரணம் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி கூறியிருக்கிறார். அரசாங்கம் தரப்படுதலை அறிமுகப்படுத்திய பொழுது அதனைத் தமிழர்கள் இன ஒடுக்குமுறையாக வியாக்கியானப்படுத்தினார்கள் என்ற பொருள்பட அவருடைய விளக்கம் அமைந்திருந்தது. மிஷன் பாடசாலைகளின் உழைப்பினால் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்றவர்களின் தொகை அளவுப் பிரமாணத்தைவிட அதிகமாக இருந்தது என்று அவர் விளங்கி வைத்திருந்திருக்கக் கூடும்.

இவ்வாறு போட்டிக்கு கட்டப்பட்ட பாடசாலைகளில் ஒருபகுதி இப்பொழுது மூடப்பட்டு வருகின்றது. கந்தர்மடத்தில் ஒரு பாடசாலை. கந்தர்மடம் சைவப் பிரகாச வித்தியாலயம். ஆறுமுகநாவலரால் கட்டப்பட்ட இந்தப் பாடசாலைக்கு  ஈழப்போர் வரலாற்றில் முக்கியத்துவம் உண்டு. 1983ஆம் ஆண்டு நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த பாடசாலை ஒரு வாக்களிப்பு நிலையமாக இருந்தது. அங்கே காவலுக்கு நின்ற படை வீரர்கள் மீது விடுதலைப் புலிகள் இயக்கம் தாக்குதல் நடத்தியது. அதில் சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள். ஈழப் போரில் முதல்முதலாக ஒரு  ரைஃபிள் கைப்பற்றப்பட்ட தாக்குதல் அது. அந்தப் பாடசாலையின் கழிப்பறைச் சுவரில் அந்தச் சுவரைத் தாண்டிக் குதித்துத்  தப்ப முயன்ற ஒரு சிப்பாயின்  ரத்தத்தில் தோய்ந்த கை அடையாளங்கள் பதிந்திருந்தன. அந்தப் பாடசாலை சில ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டு விட்டது.

21-6010c1fa29616-copy.jpg

தமிழ் மக்கள் தமது ஜனத்தொகை தொடர்பாக சிந்திக்க வேண்டிய காலகட்டம் எப்பொழுதோ வந்து விட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பெறுமாறு குடும்பங்களை ஊக்குவிக்க வேண்டிய காலம் எப்பொழுதோ வந்துவிட்டது. அவ்வாறு அதிகம் பிள்ளைகளைப் பெறும் குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையைக் கொடுக்கத் தேவையான கட்டமைப்புகளை தமிழ் மக்கள்  உருவாக்க வேண்டும். அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் இந்த விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களை எவ்வாறு ஒருங்கிணைக்கலாம் என்றும் சிந்திக்கலாம்.

கல்வித்துறையில் புலம்பெயர்ந்த தமிழ்ச்  தாராளமாக உதவி வருகிறது. தனி நபர்களும் தன்னார்வ நிறுவனங்களும் பரவலாகத் தொண்டு செய்து வருகிறார்கள். தாம் படித்த பாடசாலையை மேம்படுத்த வேண்டும் என்று தாகத்தோடு பழைய மாணவர்கள் பல பாடசாலைகளுக்கு காசை அள்ளி வழங்குகிறார்கள். தமது கிராமத்தின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்காக தமது முகத்தைக் காட்டாமலேயே அமைதியாக உதவிகளை செய்து கொண்டிருக்கும் பலரை நான் அறிவேன்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலர் பாடசாலைகளில் பழைய மாணவர் சங்கங்களின் மீது அளவுக்கு மிஞ்சி செல்வாக்கு செலுத்துவதும் அங்கே குழப்பங்களை ஏற்படுத்துவதும் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்டுதான். ஆனால் போர்க்காலத்திலும் 2009க்குப் பின்னரும் ஈழத் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக கல்வித்துறையில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் உதவி மகத்தானது.

அதேசமயம் புலப் பெயர்ச்சி தொடர்ந்து நிகழ்திறது. தமது முதல் பட்டப்படிப்பை முடித்த பலருக்கும் புலப்பெயர்ச்சிதான்  அடுத்த கவர்ச்சியான  தெரிவாகக் காணப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை ஒரு பகுதி இளையோருக்கு கவர்ச்சியான முன் உதாரணமாக மாறிவிட்டது. இதனால்  தொடர்ச்சியாக புலப்பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இதுவும் தமிழ்ச் சனத்தொகையைக்  குறைக்கின்றது.

தமது நாட்டிலேயே  வாழ வேண்டும்;தமது தாய் நிலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்; தனது அறிவையும் அனுபவத்தையும் தனது தாய் நிலத்துக்காக அர்ப்பணிக்க வேண்டும்; தமது வேரிலே நிலைத்திருந்து தமது சமூகத்துக்குப் பூத்துக் காய்க்க வேண்டும் என்ற இலட்சியப் பற்றை இளைய தலைமுறைக்கு ஊட்டக் கூடிய எத்தனை தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு? இதனால் சனத்தொகை மேலும் குறைந்துகொண்டே போகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஆசனம் குறைந்துவிட்டது. இவ்வாறாக சனத்தொகை வீழ்ச்சியின் பின்னணியில், ஒரு காலம்   போட்டிக்கு  பாடசாலைகளைக் கட்டிய ஒரு சமூகம் இப்பொழுது பாடசாலைகளை மூடிக்கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தேசிய அபாயகரமான ஒளடதங்கள் சபை அதிகாரிகளுடனான சந்திப்பின்போது வட மாகாண ஆளுநர் ஒரு விடயத்தைப்  பரிந்துரைத்திருந்தார்.வடக்கில் போதைப்பொருள் புனர்வாழ்வு மையங்களை உருவாக்குவதற்கு போதிய இடவசதிகள் இல்லையென்றால்  அவசரத் தேவைக்கு ஏற்கனவே மூடப்பட்டுள்ள  பாடசாலைகளில் பொருத்தமானவற்றை பயன்படுத்தலாமா  என்ற பொருள்பட அப்பரிந்துரை அமைந்திருந்தது. ஒரு காலம் போட்டிக்குப்  பபாடசாலைகளைக் கட்டிய ஒரு சமூகத்தில் இப்பொழுது போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை பராமரிப்பதற்கு கைவிடப்பட்ட பாடசாலைகள் பரிந்துரைக்கப்படும்  ஒரு நிலை?

https://www.nillanthan.com/7625/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.