Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனித உடல் வாசனை மற்றும் நோய் பாதிப்பை கண்டறிதல்

பட மூலாதாரம், Serenity Strull/BBC/Getty Images

கட்டுரை தகவல்

  • ஜஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

நமது சருமத்தில் உள்ள நுண்துளைகள் மற்றும் மூச்சுக்காற்று மூலம் பல்வேறு வேதிப்பொருட்களை நாம் வெளியிடுகிறோம். இவற்றில் சில நாம் நோய்வாய்ப்படவிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். சில நோய்களை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியவும் இவை பயன்படுத்தப்படலாம்.

"இது முற்றிலும் முட்டாள்தனம்."

பார்கின்சன் நோயை முகர்ந்து கண்டறியும் திறன் தனக்கு இருப்பதாக ஒரு ஸ்காட்லாந்துப் பெண்மணி கூறியதைப் பற்றி உடன் பணிபுரியும் ஒருவர் கூறிய போது, பகுப்பாய்வு வேதியியலாளர் பெர்டிடா பாரன் இப்படித்தான் எதிர்வினையாற்றினார்.

"அவர் வயதானவர்களின் வாசனையை முகர்ந்து, பார்கின்சன் நோயின் அறிகுறிகளை அடையாளம் கண்டு, ஏதோ ஒன்றை தொடர்புபடுத்தியிருக்கலாம்" என்று நினைத்ததாக பாரன் நினைவு கூர்ந்தார். ஜாய் மில்னே என்ற 74 வயதான ஓய்வுபெற்ற செவிலியர், 2012-ல் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி திலோ குனாத் என்பவர் ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த போது அவரை அணுகினார்.

மில்னே, பல ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் லெஸ் உடலில் ஒரு புதிய வாசனை தோன்றியதை முதன் முதலில் கவனித்த பிறகு, தனது திறனைக் கண்டறிந்ததாகக் குனாத்திடம் தெரிவித்தார். பின்னர், நடுக்கம் மற்றும் பிற இயக்க அறிகுறிகளால் வகைப்படுத்தப்படும் ஒரு படிப்படியாக அதிகரிக்கும் நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன் நோயால் அவரது கணவர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஸ்காட்லாந்தில் உள்ள பெர்த் நகரில் பார்கின்சன் நோயாளிகளின் குழு கூட்டத்தில் மில்னே கலந்து கொண்ட போதுதான், அவரால் அந்தத் தொடர்பைக் கண்டறிய முடிந்தது: அனைத்து நோயாளிகளுக்கும் அதே வாசனை இருந்தது.

"அதனால், அவர் சொன்னது சரியா என்று சோதித்துப் பார்க்க நாங்கள் முடிவு செய்தோம்" என்று அந்த நேரத்தில் எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த பாரன் கூறுகிறார். தற்போது அவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.

மில்னே சொன்னது நேரத்தை வீணடிக்கும் விஷயம் இல்லை என்பது தெரியவந்தது. குனாத், பாரன் மற்றும் அவர்களது சகாக்கள் மில்னேவை 12 டி-ஷர்ட்களை முகர்ந்து பார்க்கச் சொன்னார்கள். அதில், ஆறு பார்கின்சன் நோயாளிகளால் அணியப்பட்டவை. மேலும் ஆறு அந்த நோய் இல்லாத மற்றவர்களால் அணியப்பட்டவை. அவர் ஆறு நோயாளிகளையும் சரியாக அடையாளம் கண்டார். அடுத்த ஒரு வருடத்திற்குள் பார்கின்சன் நோய் பாதிக்கப்படவிருந்த ஒருவரையும் அவர் அடையாளம் கண்டார்.

"இது ஆச்சரியமாக இருந்தது," என்று பாரன் கூறுகிறார். "அவர் தனது கணவரிடம் செய்தது போலவே, அந்த நிலையையும் முன்கூட்டியே கண்டறிந்தார்."

2015-ல், அவரது இந்த அற்புதமான திறன் குறித்த செய்திகள் உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளாகின.

மில்னேவின் கதை நீங்கள் நினைப்பது போல் விசித்திரமானது அல்ல. மக்களின் உடல்கள் பல்வேறு நாற்றங்களை வெளிப்படுத்துகின்றன. ஒரு புதிய வாசனை உடலில் ஏதோ மாற்றம் அல்லது தவறு நடந்திருப்பதைக் குறிக்கலாம்.

இப்போது, பார்கின்சன் நோய் மற்றும் மூளைக் காயங்கள் முதல் புற்றுநோய் வரை பல்வேறு நிலைகளைக் கண்டறிவதை விரைவுபடுத்தக் கூடிய வாசனைகளைக் கண்டறியும் நுட்பங்களில் விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர். அவற்றைக் கண்டறியும் திறன் நம் மூக்கின் அடியிலேயே மறைந்திருந்திருக்கலாம்.

மனித உடல் வாசனை மற்றும் நோய் பாதிப்பை கண்டறிதல்

பட மூலாதாரம், Serenity Strull/BBC/Getty Images

படக்குறிப்பு, நாற்றங்கள் நமது மூக்கில் உள்ள வாசனை வாங்கிகளுடன் தொடர்பு கொள்ளும் வேதிப்பொருட்களால் ஏற்படுகின்றன.

"ஒருவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய, அவர்களின் பின்புறத்தில் ஊசிகளைச் செருகுகிறோம். ஆனால், அதைக் காட்டும் சமிக்ஞை ஏற்கனவே வெளியே உள்ளது. அதை நாய்களால் கண்டறிய முடியும் என்கிற நிலையில் மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள் என்பது என்னைக் கோபப்படுத்துகிறது," என்கிறார் ஆண்ட்ரியாஸ் மெர்ஷின். இவர், வாசனை அடிப்படையில் நோய்களைக் கண்டறிய ஒரு ரோபோ மூக்கை உருவாக்கி வரும் ரியல்நோஸ்.ஏஐ (RealNose.ai) என்ற நிறுவனத்தின் இயற்பியலாளர் மற்றும் இணை நிறுவனர் ஆவார். ஒரு நோயின் ஆரம்ப கட்டங்களில் தோன்றும் இந்த உயிர் வேதியியல் பொருட்களைக் கண்டறிய போதுமான சக்திவாய்ந்த மூக்கு சிலரிடம் மட்டுமே இருப்பதால், இத்தகைய தொழில்நுட்பம் அவசியமானது.

ஜாய் மில்னே, அந்தச் சிலரில் ஒருவர் என்பது தெரியவந்தது. அவருக்கு மரபுவழி ஹைபரோஸ்மியா உள்ளது. இதனால் அவரது வாசனை உணர்வு சராசரி மனிதரை விட மிகவும் அதிக உணர்திறன் கொண்டது – அதாவது அவருக்கு ஒரு வகையான அதீத முகர்ந்து பார்க்கும் திறன் இருக்கிறது.

சில நோய்கள் மிகவும் வலுவான, தனித்துவமான வாசனையை வெளியிடுகின்றன. பெரும்பாலான மனிதர்களால் அவற்றின் வாசனையை முகர்ந்து பார்க்க முடியும். உதாரணமாக, நீரிழிவு நோயாளிகளின் மூச்சு அல்லது தோலில், ரத்த ஓட்டத்தில் கீட்டோன்கள் எனப்படும் பழ வாசனை கொண்ட அமில வேதிப்பொருட்கள் அதிகமாகச் சேர்வதால், ஒரு பழ வாசனை அல்லது "அழுகிய ஆப்பிள்" வாசனை வரலாம். உடல் குளுக்கோஸுக்குப் பதிலாகக் கொழுப்பை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தும்போது இவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு மூச்சு அல்லது சிறுநீரில் ஒருவித கந்தக வாசனை வெளிப்படலாம். அதே சமயம், உங்கள் மூச்சில் அமோனியா வாசனை வீசினால் அல்லது "மீன் போன்ற" அல்லது "சிறுநீர் போன்ற" வாசனை இருந்தால், இது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

சில தொற்று நோய்களும் தனித்துவமான வாசனையை வெளியிடுகின்றன. இனிப்பு மணம் கொண்ட மலம் காலரா அல்லது குளோஸ்ட்ரிடியோய்ட்ஸ் டிஃபிசில் பாக்டீரியாவால் ஏற்படும் நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். இது வயிற்றுப்போக்கிற்கு ஒரு பொதுவான காரணமாகும் - இருப்பினும், ஒரு ஆய்வில், ஒரு மருத்துவமனை செவிலியர்கள் குழுவால் மலத்தை முகர்ந்து நோயாளிகளின் நோய்களை சரியாகக் கண்டறிய முடியவில்லை என தெரியவந்தது. இதற்கிடையில், காசநோய் ஒரு நபரின் மூச்சில் பழைய பீர் போன்ற துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம் மற்றும் அவர்களின் தோல் ஈரமான பழுப்பு நிற அட்டை மற்றும் உப்புக் கரைசல் போன்ற வாசனையை வெளிப்படுத்தலாம்.

இருப்பினும், மற்ற நோய்களைக் கண்டறிய ஒரு சிறப்பு வகையான மூக்கு தேவைப்படுகிறது.

உதாரணமாக, நாய்களுக்கு மனிதர்களை விட 100,000 மடங்கு வலுவான வாசனை உணர்வு இருப்பதாகக் கூறப்படுகிறது. நுரையீரல், மார்பகம், கருப்பை, சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களை மக்களிடம் முகர்ந்து கண்டறிய நாய்களுக்கு விஞ்ஞானிகள் பயிற்சி அளித்துள்ளனர். உதாரணமாக, புரோஸ்டேட் புற்றுநோய் குறித்த ஒரு ஆய்வில், சிறுநீர் மாதிரிகளில் நோயைக் கண்டறிய நாய்களால் 99% வெற்றிகரமாகச் செயல்பட முடிந்தது. பார்கின்சன் நோய், நீரிழிவு நோய், வலிப்பு நோய்க்கான அறிகுறிகள் மற்றும் மலேரியா ஆகியவற்றின் ஆரம்ப அறிகுறிகளை வெறும் வாசனையை வைத்து கண்டறியவும் நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.

ஆனால், எல்லா நாய்களுக்கும் ஒரு நோய்க் கண்டறிதல் நாயாக மாறத் தேவையான திறமை இல்லை. அத்தகைய திறமை இருக்கும் நாய்களுக்குப் பயிற்சி அளிக்க நேரம் எடுக்கும். சில விஞ்ஞானிகள், நாய்கள் மற்றும் மில்னே போன்றவர்களின் அற்புதமான வாசனை திறன்களை ஆய்வகத்தில் உருவாக்கி, ஒரு எளிய துணியின் மூலம் நோயை கண்டறியும் வாய்ப்பை வழங்கலாம் என்று கூறுகிறார்கள்.

உதாரணமாக, பார்கின்சன் நோயாளிகளிடமிருந்து செபத்தை (மக்களின் தோலில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் போன்ற பொருள்) பகுப்பாய்வு செய்ய பாரன், வாயு நிற மூர்த்தம்-நிறை நிறமாலைமானியைப் (gas chromatography-mass spectrometry) பயன்படுத்துகிறார். வாயு நிறமூர்த்தம் சேர்மங்களைப் பிரிக்கிறது. நிறை நிறமாலைமானி அவற்றின் எடையை அளவிடுகிறது. அதில் உள்ள மூலக்கூறுகளின் தன்மையைத் துல்லியமான தீர்மானிக்க இது உதவுகிறது. உணவு, பானம் மற்றும் வாசனைத் திரவியத் தொழில்கள் ஏற்கனவே இந்த வாசனைப் பகுப்பாய்வு முறையை வழக்கமாகப் பயன்படுத்துகின்றன.

மனித தோலில் பொதுவாகக் காணப்படும் சுமார் 25,000 சேர்மங்களில், சுமார் 3,000 சேர்மங்கள் பார்கின்சன் நோய் உள்ளவர்களிடம் வித்தியாசமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன என்று பாரன் கூறுகிறார். "பார்கின்சன் நோய் உள்ள அனைவரிடமும் தொடர்ந்து வித்தியாசமாக இருக்கும் சுமார் 30 சேர்மங்களை நாங்கள் வகைப்படுத்தியுள்ளோம்."

பல சேர்மங்கள் கொழுப்புகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் என்று அவர் கூறுகிறார். உதாரணமாக, ஒரு ஆரம்ப ஆய்வு, இந்த நோயினால் ஏற்படும் வாசனைக்கு தொடர்புடைய மூன்று கொழுப்பு போன்ற மூலக்கூறுகளில் கவனம் செலுத்தியது. அவை, ஹிப்பியூரிக் அமிலம், ஈகோசேன் மற்றும் ஆக்டாடெகானல். முந்தைய ஆய்வுகள், அசாதாரண கொழுப்பு வளர்சிதை மாற்றம் பார்கின்சன் நோயின் ஒரு முக்கிய அம்சம் என்று கூறுவதால், இது சரியான முறையாக தோன்றுகிறது.

"பார்கின்சன் நோய் உள்ளவர்களிடம் கொழுப்பு அமிலங்களை மைட்டோகாண்ட்ரியாவுக்குள் கொண்டு செல்லும் செல்களின் திறன் குறைபாடுள்ளதைக் கண்டறிந்துள்ளோம்" என்று பாரன் கூறுகிறார். "எனவே, இந்த கொழுப்புகள் உடலில் அதிகமாக சுழன்று கொண்டிருக்கின்றன என்று எங்களுக்குத் தெரியும். அவற்றில் சில தோலின் வழியாக வெளியேற்றப்படுகின்றன, அதைத்தான் நாங்கள் அளவிடுகிறோம்."

இந்த குழு இப்போது பார்கின்சன் நோயை அதன் ஆரம்ப கட்டங்களில் கண்டறியக் கூடிய ஒரு எளிய பரிசோதனையை (skin swab test) உருவாக்கி வருகிறது. தற்போது, நடுக்கம் போன்ற அறிகுறிகளைக் காட்டும் நபர்கள் பொதுவாக ஒரு நரம்பியல் நிபுணரிடம் பரிந்துரைக்கப்படுகிறார்கள். அவர் பின்னர் ஒரு நோயறிதலைச் செய்வார். இதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம்.

"ஒருவரை திறம்பட பரிசோதிக்க உதவும் ஒரு மிக விரைவான, ஊடுருவல் இல்லாத பரிசோதனை முறையை நாங்கள் விரும்புகிறோம். இதன் மூலம் அவர்கள் ஒரு நரம்பியல் நிபுணரைச் சந்தித்து, அவர் ஆய்வு செய்து 'ஆம்' அல்லது 'இல்லை' என்று சொல்ல முடியும்" என்று பாரன் கூறுகிறார்.

ஆனால், நோய்கள் ஏன் நமது உடல் நாற்றத்தைப் பாதிக்கின்றன? இதற்கு காரணம், கொந்தளிப்பான கரிம சேர்மங்கள் (volatile organic compounds - VOCs) எனப்படும் மூலக்கூறுகளின் ஒரு குழுவாகும். உயிருடன் இருக்க, நமது உடல் தொடர்ந்து உணவு மற்றும் பானங்களை ஆற்றலாக மாற்ற வேண்டும். நமது உணவில் உள்ள சர்க்கரைகளை நமது உடல் பயன்படுத்தக்கூடிய ஆற்றலாக மாற்றும் சிறிய கட்டமைப்புகளான நமது செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியாவுக்கு உள்ளே நிகழும் வேதிவினைகளின் தொடர் மூலம் இது நடக்கிறது. இந்த வேதிவினைகள் வளர்சிதை மாற்றங்கள் எனப்படும் மூலக்கூறுகளை உற்பத்தி செய்கின்றன. அவற்றில் சில அறை வெப்பநிலையில் எளிதில் ஆவியாகி, நமது மூக்குகளால் கண்டறியப்படலாம். பின்னர், இந்த VOC-க்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன.

"உங்களுக்கு ஒரு நோய்த்தொற்று அல்லது ஒரு நோய், அல்லது ஒரு காயம் ஏற்பட்டால், அது உங்கள் வளர்சிதை மாற்றத்தில் ஒரு விளைவை ஏற்படுத்தும் என்பது தர்க்கரீதியானது" என்று அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனமான மோனல் கெமிக்கல் சென்சஸ் மையத்தின் ரசாயன சூழலியலாளர் புரூஸ் கிம்பால் கூறுகிறார்.

"வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் அந்த மாற்றம் உங்கள் உடலில் உள்ள வெவ்வேறு இடங்களில் உள்ள வளர்சிதை மாற்றப் பொருட்களின் விநியோகத்தில் உணரப்படும்."

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நோய் இருந்தால், அது உற்பத்தி செய்யப்படும் விஓசி-க்களை(ஆவியாகும் கரிம சேர்மங்கள்) மாற்றி, நமது உடல் நாற்றத்தில் ஒரு தனித்துவத்தை உருவாக்கும்.

மனித உடல் வாசனை மற்றும் நோய் பாதிப்பை கண்டறிதல்

பட மூலாதாரம், Serenity Strull/BBC/Getty Images

படக்குறிப்பு, எளிய பரிசோதனைகள் மூலம் நோய்களை முன்கூட்டியே கண்டறிவது, சில நிலைகளுக்கான சிகிச்சைகளை மாற்றியமைக்கக்கூடும்.

"நாங்கள் பல வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளைப் பார்த்துள்ளோம். கணைய புற்றுநோய், ரேபிஸ் ஆகியவற்றைப் பார்த்துள்ளோம். இது ஒரு நீண்ட பட்டியல்," என்கிறார் கிம்பால். "ஒரு ஆரோக்கியமான நிலையுடன் ஒப்பிடும்போது, நாம் பார்க்கும் எந்தவொரு நிலையையும் ஆரோக்கியமான நிலையில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கும் திறன் நமக்கு இல்லை என்பது மிகவும் அரிது என நான் சொல்வேன். இது மிகவும் பொதுவானது."

ஆனால், மிக முக்கியமாக, இந்த நோய்களுடன் தொடர்புடைய பல விஓசி (ஆவியாகும் கரிம சேர்மங்கள்)மாற்றங்கள் மனிதர்களால் கண்டறிய முடியாத அளவுக்கு நுட்பமானவை. அதனால்தான் நாய்கள் - அல்லது நாற்றத்தை முகர்ந்து பார்க்கும் மருத்துவ சாதனங்கள் - எதிர்காலத்தில் சில தீவிரமான ஆனால் கண்டறிய கடினமான நிலைகளைக் கண்டறிய நமக்கு உதவக்கூடும்.

உதாரணமாக, விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளிடையே மூளைக் காயங்களைக் கண்டறிய, அவர்களின் உடலால் வெளிப்படுத்தப்படும் விஓசி-களில் (ஆவியாகும் கரிம சேர்மங்கள்)ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பரிசோதனையை உருவாக்க கிம்பால் சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

2016-ல், எலிகளுக்கு ஏற்படும் மூளைக் காயங்கள் ஒரு தனித்துவமான வாசனையை ஏற்படுத்துவதாகவும், அதை முகர்ந்து பார்க்க மற்ற எலிகளுக்குப் பயிற்சி அளிக்க முடியும் என்றும் அவர்கள் ஒரு ஆய்வை வெளியிட்டனர். விரைவில் வெளியிடப்படவுள்ள புதிய ஆய்வில், மூளை அதிர்ச்சி ஏற்பட்ட முதல் சில மணிநேரங்களில் மனித சிறுநீரில் உள்ள குறிப்பிட்ட கீட்டோன்களை கிம்பால் கண்டறிந்தார். இத்தகைய காயங்களுக்குப் பிறகு ஏன் வாசனைப் பொருட்கள் வெளியிடப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், ஒரு கோட்பாட்டின்படி, மூளை தன்னைத்தானே சரிசெய்ய முயற்சிக்கும் போது, ஒரு துணைப் பொருளாக விஓசிக்களை வெளியிடுகிறது.

"நாம் காணும் கீட்டோன்களின் வகை, அது மூளைக்கு அதிக ஆற்றலைப் கொண்டு செல்ல முயற்சிப்பதை அல்லது ஒருவேளை காயத்தை எதிர்த்துப் போராடுவது அல்லது மீள்வதை ஆதரிப்பதை தொடர்புடையது" என்று கிம்பால் கூறுகிறார்.

அப்படி நினைக்க காரணம் உள்ளது. மூளைக் காயத்திற்குப் பிறகு கீட்டோன்கள் மாற்று ஆற்றல் ஆதாரங்களாகச் செயல்பட முடியும் என்றும், அவை நரம்புப் பாதுகாப்பிற்கான குணங்களைக் கொண்டிருப்பதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன.

உடல் துர்நாற்றம் ஒருவருக்கு மலேரியா இருப்பதையும் வெளிப்படுத்தலாம். 2018-ல், மலேரியா நோய்த்தொற்று உள்ள குழந்தைகள் தங்கள் தோல் வழியாக ஒரு தனித்துவமான வாசனையை வெளியிடுவதாகவும், இது கொசுக்களை மேலும் கவர்வதாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மேற்கு கென்யாவில் உள்ள 56 குழந்தைகளிடமிருந்து மாதிரிகளை ஆய்வு செய்ததன் மூலம் பறக்கும், கடிக்கும் பூச்சிகளை ஈர்க்கும் ஒருவித "பழ மற்றும் புல்" வாசனையை குழு அடையாளம் கண்டது.

இந்த மாதிரிகளின் கூடுதல் பகுப்பாய்வு, ஹெப்டானல், ஆக்டானல் மற்றும் நோனானல் எனப்படும் வேதிப்பொருட்கள் இருப்பதை கண்டறிந்தது. இவை தனித்துவமான வாசனைக்குக் காரணமாக இருந்தன. இந்த ஆராய்ச்சி மலேரியாவைக் கண்டறிய ஒரு புதிய பரிசோதனையை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம். இப்போதைக்கு, விஞ்ஞானிகள் இந்த வாசனையை மீண்டும் உருவாக்கி, அதை ஒரு கொசுக்களை கவர்ந்திழுக்க ஒரு பொறியாக பயன்படுத்தி சமூகங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து வெளியே இழுத்துச் செல்ல பயன்படும் என நம்புகிறார்கள்.

எம்ஐடி-யில் ஒரு முன்னாள் ஆராய்ச்சியாளரான மெர்ஷின், இப்போது ரியல்நோஸ்.ஏஐ-ல் பணிபுரிகிறார். அவர் மற்றும் அவரது குழு, புரோஸ்டேட் புற்றுநோயைக் கண்டறியக்கூடிய ஒரு வாசனை-கண்டறியும் சாதனத்தை உருவாக்க முடியும் என நம்புகிறார்கள். புரோஸ்டேட் புற்றுநோய், 44 ஆண்களில் ஒருவரை கொல்லும் ஒரு நோய்.

"டிஏஆர்பிஏ (டிபன்ஸ் அட்வான்ஸ்டு ரிசர்ச் புராஜெக்ட் ஏஜென்சி) கண்டறிதலின் உச்சத்தில் இருக்கும் நாயின் மூக்கைத் தோற்கடிக்க என்னிடம் சொன்னபோது, நான் எம்ஐடி-யில் 19 வருடம் நடத்திய ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த நிறுவனம் உருவானது," என்று மெர்ஷின் கூறுகிறார். " அடிப்படையில் உயிரியல்-சைபோர்குகளை உருவாக்க எங்களிடம் சொல்லப்பட்டது."

மனித உடல் வாசனை மற்றும் நோய் பாதிப்பை கண்டறிதல்

பட மூலாதாரம், Serenity Strull/BBC/Getty Images

படக்குறிப்பு, பல விதமான வாசனைப் பொருட்களை பரிசோதனை செய்யக்கூடிய ஆய்வக அடிப்படையிலான பரிசோதனையை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

ரியல்நோஸ்.ஏஐ தற்போது உருவாக்கி வரும் சாதனத்தில் உண்மையான மனித வாசனை வாங்கிகள் (olfactory receptors) உள்ளன. அவை ஆய்வகத்தில் ஸ்டெம் செல்களால் வளர்க்கப்படுகின்றன. புரோஸ்டேட் புற்றுநோயுடன் தொடர்புடைய ஏராளமான வாசனை மூலக்கூறுகளைக் கண்டறிய அவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இயந்திர கற்றல் (machine learning), ஒரு வகையான செயற்கை நுண்ணறிவு, பின்னர் வாங்கிகளின் செயல்பாட்டில் உள்ள வடிவங்களை தேடுகிறது.

"ஒரு மாதிரியின் உள்ளே உள்ள கூறுகளை அறிவது மட்டும் போதாது," என்று மெர்ஷின் கூறுகிறார். "ஒரு கேக்கை உருவாக்க பயன்படும் பொருட்கள் அதன் சுவை அல்லது வாசனையைப் பற்றி நமக்குக் குறைவாகவே கூறுகின்றன. அது உங்கள் சென்சார்கள் இந்த பொருட்களுடன் தொடர்பு கொண்ட பிறகுதான் நடக்க வேண்டும். உங்கள் மூளை அந்தத் தகவலைச் செயலாக்கி அதை ஒரு புலனுணர்வு அனுபவமாக மாற்றுகிறது.

"ஒரு மனம், ஒரு மூளை செய்வதைப் போலவே, உணர்ச்சி செயல்பாட்டில் உள்ள வடிவங்களை நாங்கள் தேடுகிறோம்," என்று மெர்ஷின் கூறுகிறார்.

இதற்கிடையில், ஜாய் இப்போது பாரனின் ஆராய்ச்சிக் குழுவில் பணிபுரிந்து வருகிறார். பார்கின்சன் மற்றும் பிற நிலைகளுக்கு ஒரு கண்டறிதல் சோதனையை உருவாக்க அவருக்கு உதவுகிறார்.

"நாங்கள் இப்போது அவரை வாசனை கண்டறிதலுக்கு அதிகம் பயன்படுத்துவதில்லை," என்று பாரன் கூறுகிறார். "அவரால் ஒரு நாளில் அதிகபட்சம் 10 மாதிரிகளைச் செய்ய முடியும், அது அவருக்கு உணர்வு ரீதியாக மிகவும் சோர்வளிக்கிறது. அவருக்கு 75 வயதாகிறது, அவர் மிகவும் மதிப்பு வாய்ந்தவர்."

இருப்பினும், பாரனின் நுட்பம் ஜாயின் திறனைப் பிரதிபலிக்க முடியுமானால், பார்கின்சன் நோயை அதன் ஆரம்ப கட்டங்களில் கண்டறிய முடியுமானால், அது ஜாய் மற்றும் லெஸ்ஸுக்கு ஒரு சிறந்த மரபுரிமையாக இருக்கும்.

"ஜாய் மற்றும் லெஸ் மருத்துவப் பயிற்சி பெற்றவர்கள் என்பதால், இந்த அவதானிப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது என்று நான் நினைக்கிறேன்" என்று பாரன் கூறுகிறார். "ஆனால், இங்குள்ள கதை என்னவென்றால், எல்லோரும் தங்கள் ஆரோக்கியம் அல்லது தங்கள் நண்பரின் ஆரோக்கியம் அல்லது தங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் குறித்து உறுதியாக தெரிந்தவர்களாக உணர்ந்து, ஏதாவது தவறு இருப்பதாக உணர்ந்தால் அதற்கேற்ப செயல்பட வேண்டும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gk60y523go

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.