Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டு நினைவு நாட்கள் - நிலாந்தன்

590766592_824918727098699_52485070505619

வெள்ளம்,மழை,புயல் எச்சரிக்கை… எல்லாவற்றையும் மீறி மாவீரர் நாள் பரந்த அளவில்,பெரியளவில் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான 17ஆவது மாவீரர் நாள் இது. நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டாவது தியாகிகளின் நினைவு நாள் இது.

இம்மாதம் 13ஆம் திகதி,ஜேவிபி அதனுடைய  தியாகிகளின் நாளை அனுஷ்டித்தது. அதே மாதத்தில் மாவீரர் நாளும் அனுஷ்டிக்கப்படுவது ஒரு நூதனமான ஒற்றுமை. இச்சிறிய தீவில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த இரண்டு பெரிய அமைப்புகளின் தியாகிகள் தினம் இவ்வாறு ஒரே மாதத்தில் வருவது ஒரு நூதனமான ஒற்றுமைதான்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மாவீரர் தன் உயிரைத்  தியாகம் செய்த நாள் மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஜேவிபியின் தலைவர் ரோகண விஜயவீர அரச படைகளால் கைது செய்யப்பட்டு, குரூரமாகக் கொல்லப்பட்ட நாள் அந்த அமைப்பின் தியாகிகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

ஜேவிபியின் நினைவு நாள் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவின் வெளியரங்கில் நடந்தது. இலங்கைத் தீவில் இரண்டு ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்து, இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட, இரண்டு தடவைகள் நசுக்கப்பட்ட, ஓர் அரசியல் இயக்கம் ஜேவிபி. ஆனால் தன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழ முடியும் என்பதற்கு இந்தப் பிராந்தியத்தில்  மட்டுமல்ல முழு உலகத்திலும் மிக அரிதான முன்னுதாரணங்களில் ஒன்று.

அன்றைய நிகழ்வில் விகாரமகாதேவி பூங்காவின் வெளியரங்கம் சிவப்பு நிறச் சட்டைகளாலும் முதிய பெண்களின் கண்ணீராலும் பிரகடனங்களாலும் நிறைந்திருந்தது. பெரும்பாலானவர்கள் சிவப்பு நிற மேலாடைகளோடு வந்திருந்தார்கள். அரங்கின் முன்வரிசையில் வயதான முதிய பெண்கள் சிலர் காணப்பட்டார்கள். மெலிந்த சதைப்பிடிப்பில்லாத முகங்கள். எடுப்பில்லாத உடுப்புகள். மென்மையான சோக இசையின் பின்னணியில் அவர்களில் சிலர் அழுதார்கள். அவர்களுடைய கண்ணீர் உண்மையானது. அன்னையரின் கண்ணீர் பொய்யானது அல்ல. அன்னையரின் கண்ணீர் எல்லா நினைவு நாட்களிலும் ஒன்றுதான். அதில் உள்ள உப்புச் சுவையும் ஒன்றுதான்.

அந்த நிகழ்வின் ஒளிப்படங்களை என்னோடு பகிர்ந்த ஒரு நண்பர், என்னிடம் கேட்டார், “நீங்கள் சொல்வது போல ஜேவிபி அதன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழுந்த ஓர் இயக்கம். இப்பொழுது அரசாங்கமாக அந்த நிகழ்வை பெருமெடுப்பில் ஒழுங்குப்படுத்தியிருக்கிறது” என்று.

நான் அவரிடம் கேட்டேன் “அது ஒரு அரச நிகழ்வா அல்லது ஒரு இயக்கத்தின் அல்லது கட்சியின் நினைவு நிகழ்வா?” என்று. அதில் நாட்டின் அரசுத் தலைவரும் உட்பட பிரதான அமைச்சர்கள் பங்குபற்றினார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் அது ஒரு அரசு நிகழ்வு போலத் தோன்றும். ஆனால் அது பெருமளவுக்கு ஓர் இயக்க நிகழ்வுதான்; ஒரு கட்சி நிகழ்வுதான். அங்கே அரசுத் தலைவருக்கும் அமைச்சருக்கும் பாதுகாப்பாக படையினர் ஆங்காங்கே காணப்பட்டார்கள். எனினும் வழமையான அரசு நிகழ்வுகளைப்போல சீருடை அணிந்த படையினரின் பிரசன்னம் தூக்கலாக வெளித்தெரியவில்லை. அந்தப் படையினரின் சீருடைக்கும் அங்கு வந்திருந்த பெரும்பாலானவர்களின் சிவப்பு உடுப்புகளுக்கும் பொருந்தவேயில்லை. விறைப்பாக நின்ற அந்தப் படையினரின் துப்பாக்கிகளும் அழுது கொண்டிருந்த முதிய பெண்களின் கண்ணீரும் ஒன்றுக்கொன்று எதிரானவை.

AKD-JVP-commemoration.jpg

இப்பொழுது ஜேவிபி ஆளுங்கட்சி.அதுதான் அரசாங்கம். அப்படிப் பார்த்தால் அரசாங்கத்தின் தியாகிகள் நாட்டுக்கும் தியாகிகள்தானே?அந்த அடிப்படையில் அது ஓர் அரச நிகழ்வாகத்தான் அமைய வேண்டும். ஆனால் அப்படியல்ல.

அங்கே இறந்தவர்களுக்காக மலர்கள் வைக்கப்பட்டன. பாடல்கள் இசைக்கப்பட்டன. உரைகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் படையினரின் ராணுவ அணிவகுப்போ,மரியாதை வேட்டுக்களோ தீர்க்கப்படவில்லை. அரசாங்கத்தின் தேசிய தியாகிகளின் நாளில் படையினரின் அணிவகுப்பு இருக்கும்; பீரங்கிகளில் முழங்கும்; முப்படை தளபதிகளும் பிரசன்னமாகியிருப்பர்.

ஆனால் 13-ஆம் தேதி விகார மகாதேவி பூங்காவின் வெளியரங்கில் நடந்தது ஒரு அரச நிகழ்வு அல்ல. நாட்டை ஆளுங்கட்சி அதன் தியாகிகள் நாளை தேசிய விழாவாகக் கொண்டாடவில்லை. அது தனக்கென்று தனியாக ஒரு தியாகிகள் நாளை அனுஷ்டிக்கின்றது. அதிலும் குறிப்பாக, ஜேவிபியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தனித்தனியாக நினைவு நாட்களை அனுஷ்டிக்கிறார்கள். ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டம் நடந்த ஏப்ரல் ஐந்தாம் திகதியை ஒரு பகுதியினர் அனுஷ்டிக்கிறார்கள். நவம்பர் 13 ஐ ஜேவிபியிடமிருந்து பிரிந்து  சென்றவர்கள் தனியாக அனுஷ்டிக்கிறார்கள். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கு என்று தனித்தனியாக தியாகிகள் நாளை அனுஷ்டிப்பது போல.

ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டிய வேறுபாடு என்னவென்றால், ஆளுங்கட்சியாக உள்ள ஜேவிபியின் நினைவு நாள் ஒர் அரசு நிகழ்வாக கொண்டாடப்படவில்லை என்பதுதான். சிங்களபௌத்த அரசின் தேசியத் தியாகிகள் நினைவு நாள் வேறாகவும் ஜேவிபி அரசாங்கத்தின் தியாகிகள் நினைவு நாள் வேறாகவும் இருக்கின்றன என்பதுதான்.

சிறிய இலங்கை தீவு தன்னகத்தே பல தியாகிகளின் நாட்களைக் கொண்டிருக்கிறது. படையினரின் தியாகிகள் நாள்,ஜேவிபியின் தியாகிகள் நாள்,விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் நாள், ஏனைய தமிழ் இயக்கங்களின் தியாகிகள் நாள், என்று பல தியாகிகளின் நாட்கள் இச்சிறிய தீவில் உண்டு.

589343022_1305779798257307_1048150586159

ஜேவிபி இப்பொழுது அரசாங்கமாக இருந்த போதிலும், அதன் தியாகிகள் தினம் தனியே கொண்டாடப்படுகிறது. ஜேவிபியின் பிரதானியான அனுர ஒரு ஜனாதிபதியாக, முப்படைகளின் தளபதியாக இருக்கிறார். ஆனால் அவருடைய தோழர்களை நினைவு கூரும் நாளில் முப்படைகளின் அணிவகுப்பு இல்லை. அது இப்பொழுதும் ஓர் அரச நிகழ்வு அல்ல.

விகாரமாதேவி பூங்காவில் கூடிய ஜேவிபியினர் சிவப்புச்சட்டை அணிந்திருந்தார்கள். விகார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நினைவுச் சின்னத்திலும்  சிவப்பு நிறம் இருந்தது. ஆனால் அந்த சிவப்பு கம்யூனிச சிவப்பு அல்ல. நாட்டில் தற்பொழுது நடப்பது கம்யூனிச ஆட்சியும் அல்ல. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்ட ஓர் ஆட்சி.

ஆனால் லண்டனில் உரை நிகழ்த்திய ரில்வின் சில்வா, “வீரர்கள் சிந்திய குருதியை ஏற்று சிவப்பு மலர்கள் மலரட்டும்” என்று கூறினார். அந்தச் சிவப்பு மலர்கள்  நிச்சயமாக மார்க்சிய சித்தாந்தத்தை பிரதிபலிக்கவில்லை. அவ்வாறு ஜேவிபி ஒரு மெய்யான மார்க்சிஸ்ட் அமைப்பாக இருந்திருந்தால் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொண்டிருந்திருக்கும்.

ரில்வின் உரை நிகழ்த்திய அதே கூட்டத்தில் ஜேவிபியின் பிரதித் தலைவராக இருந்த உபதிச கமநாயக்கவின் மனைவி உரை நிகழ்த்தும்போது, மூன்றாவது தலைமுறை ஜேவிபியினர் நாட்டை ஆளும் வளர்ச்சிக்கு வந்திருப்பதை பெருமையோடு சுட்டிக்காட்டினார். சிறு ஓடையாக இருந்த இயக்கம் இப்பொழுது பெரும் நதியாக மாறிவிட்டது என்றும் சொன்னார்.

ரில்வின் சில்வா லண்டனில் சிவப்பு மலர்களைப்பற்றி பேசிய அதே காலப்பகுதியில் கொழும்பில் அவர்களுடைய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் புதிதாக வந்திருக்கும் கனேடிய தூதுவருக்கு என்ன சொன்னார்? கனடாவில் உள்ள தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் இலங்கையில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் கருத்துக்களை முன்னெடுப்பதற்கு எதிராகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னம் போன்றவற்றை பகிரங்கமாக பயன்படுத்துவதற்கு எதிராகவும் கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கனடாவில் வாழும் சில செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள்,இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்குப் பாதகமாக அமைந்துள்ளன என்றும் அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.

அதாவது நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சின்னங்களை கனடாவில் உள்ள தமிழர்கள் உயர்த்திப் பிடிப்பதை அவர் கனேடியத் தூதுவருக்குச் சுட்டிக்காட்டுகிறார். கனடாவிலும் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற அடிப்படையில் மேற்சொன்ன செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆனால்  கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் ஜேவிபி நாட்டில் இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்டது. அவ்வாறு இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம் கனடாவில் தடை செய்யப்பட்ட சின்னங்களை தமிழ் மக்கள் முன்னிறுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று கேட்கின்றது.

தனது இயக்கத்தின் தியாகிகளின் நாளும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் தியாகிகளின் நாளும் ஒன்று அல்ல என்பது தெளிவாகத் தெரியும் ஒர் அரசியல் சூழலில், அமைச்சர் விஜித ஹேரத் கனேடிய தூதுவரிடம் அவ்வாறு கூறியுள்ளார். கார்த்திகை மாதத்தில் நாட்டில் இனரீதியாக இரு வேறு நினைவு தினங்கள் அனுஷ்டிக்கப்படும் ஓர் அரசியல் யதார்த்தத்தை தடைகளின் மூலம் மாற்ற முடியாது.

இந்த நாட்டில் ஏன் இனரீதியாக இரு வேறு நினைவு நாட்கள்? எல்லாத் தடைகளையும் மீறி தமிழ் மக்கள் கடந்த 17 ஆண்டுகளாக ஏன்  மாவீரர் நாளை தொடர்ந்து அனுஷ்டித்து வருகிறார்கள்? இனரீதியாக இரண்டு வேறு தியாகிகள் தினங்களைக் கொண்ட ஒரு  நாட்டின் வெளி விவகார அமைச்சராகிய விஜித ஹேரத்   கனேடிய  தூதுவருக்கு கூறுகிறார், அரசாங்கம் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதாக. விகாரமகாதேவி பூங்காவில் தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தில் பூசப்பட்டிருந்த சிவப்பு நிறம் வெளிறும் இடம் இதுதான்.

https://www.nillanthan.com/7959/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.