Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றின் குற்றக் கிடங்கு

November 29, 2025

வரலாற்றின் குற்றக் கிடங்கு

— கருணாகரன் —

‘உலகின் சொர்க்கத்தீவு‘ (The paradise island of the world) என்று வர்ணிக்கப்படும் இலங்கையில், பொன்னும் மணியும் விளைவதற்குப் பதிலாக, மனிதப் புதைகுழிகளே விளைந்துள்ளன.  இந்தப் புதைகுழிகளை விளைத்தவர்கள் (விதைத்தவர்கள்) அநேகமாக ஆட்சியாளர்களே. (இப்படியான காரியங்களைச் செய்வதில்தான் இவர்கள் கெட்டிக்காரர்கள்.                                                                                                                                                                                                                                                                 இப்பொழுது யாழ்ப்பாண நகரத்தில் உள்ள செம்மணியில் ஒரு புதைகுழி அகழப்படுகிறது.  இதில் இதுவரையில் 225 க்கு மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.  மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் பெண்கள், குழந்தைகளுடையவையும் உண்டு என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை 1990களில் இலங்கைப் படையினரால் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

1996 இல் இதே இடத்தில், இப்படியொரு புதைகுழியில்தான் கிருசாந்தி குமாரசாமி என்ற பள்ளிக்கூட மாணவி, படையினரால்  வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொன்று புதைக்கப்பட்டாள். அவளைத் தேடிச்சென்ற அவளுடைய தாயும் தம்பியும் அயலவரும் கூடக்கொன்று புதைக்கப்பட்டனர். இந்தக் கொலை ஏற்படுத்திய அதிர்ச்சியும், இதை எதிர்த்துச் சட்டப் போராட்டம் நடத்திய சூழலும் வரலாற்று முக்கியவத்துக்குரியது. இந்தக் கொலைகளில் சம்மந்தப்பட்டவரான இலங்கை இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச, 1998 இல் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், செம்மணி புதைகுழியின் இருப்பிடத்தை வெளிப்படுத்தினார்.  இது மனிதப் புதைகுழியாக அடையாளம் காணப்பட்டது. இச்சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து இராணுவ வீரர்களில் இவரும் ஒருவர். இதையெல்லாம் குறித்து முன்பொரு கவிதை நூல் ‘செம்மணி’ என வந்தது. இப்பொழுது ‘வாசலிலே கிரிசாந்தி’ என இன்னொன்று வந்துள்ளது.

இதற்கு முன் 1990 ஓகஸ்ட் – செப்டெம்பர் மாதங்களில்,  யாழ்ப்பாண நகரத்திற்கு கிட்டவாக உள்ள – இன்னொரு பக்கத்தில் இருக்கும் தீவுப்பகுதியில் (லைடன் தீவிலும் மண்டைதீவிலும்) இலங்கை அரச படைகளின் ‘திரிவித பலய’ கூட்டுப்படை நடவடிக்கையின்போது 163 பொதுமக்கள் அழிக்கப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கைக்கும் படுகொலைக்கும் தலைமை தாங்கியவர் இலங்கை இராணுவத்தின் தளபதிகளில் ஒருவராகிய மேஜர் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவ. (இவர் பின்னாளில் (1992.08.02)  கண்ணிவெடித் தாக்குதலொன்றில் இதே தீவுப்பகுதியில் இறந்தார்). இந்தப் படுபாதகச் செயலைக் குறித்த ஒரு நூல் ‘1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும்’ என எழுத்தாளர் ஷோபாசக்தியினால் வெளியிடப்பட்டுள்ளது. ஷோபாசக்தி, இந்தக் கொலைகள் நடந்த கிராமங்களில் ஒன்றான அல்லைப்பிட்டியில் பிறந்து வளர்ந்தவர். ஆனால், இந்தப் படுகொலை நடந்தபோது ஷோபாசக்தி, இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். (அந்த நாட்களில் அல்லைப்பிட்டியில் இருந்திருந்தால் அந்தப் படுகொலையில் அவரும் சிக்கியிருக்கக் கூடும்). அதில் தப்பிப்பிழைத்ததால் இப்பொழுது, இந்தப் படுகொலைகள் நடந்து 35ஆண்டுகளுக்குப் பின் அந்தப் படுகொலைகளை அதற்கான  சாட்சியங்களோடும் விவரங்களோடும் தொகுத்து ‘1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும்’ என வெளியிட்டிருக்கிறார். இந்த நூல்  அநீதியிழைப்பொன்றின்  சான்றாதாரமாகவும் நீதி கோரும் மக்களின் ஆன்மாவாகவும் இருநிலைகளில் தொழிற்படுகிறது.

இந்த நூலில், ‘இந்தப் பேரழிப்பின்போது இராணுவத்தினரால் உண்டாக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் மண்டைதீவில் உள்ளன’ எனப் பாதிக்கப்பட்ட ஊர் மக்கள் பகிரங்கச் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். ‘இந்தக் கொலைகளையும் புதைகுழிகளையும் குறித்து வெவேறு இடங்களிலும் வெளிவந்த ஆவணங்களையும் அறிக்கைகளையும் ஆய்வு செய்தும், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேரடிச் சாட்சியங்கள் பெறப்பட்டும்’ இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஷோபாசக்தி தெரிவித்திருக்கிறார். அவர் சொல்லியிருப்பதைப்போலவே, இந்த நூலின் அனைத்து விவரங்களும் தெளிவாகவும் சான்றுகளோடும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை ஒழுங்குபடுத்தப்பட்டு வரிசைப்படுத்தி இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. படுகொலைகளின் பின்னணி, பணயக்கைதிகள், படுகொலைக்களம், காணாமலாக்கப்பட்டவர்கள்,    லைடன் தீவில் படுகொலையான பொதுமக்கள், மண்டைதீவில் படுகொலையான பொதுமக்கள், உண்மையைப் புதைத்த குழிகள் என்ற ஏழு அத்தியாயங்களின் தலைப்புகளே போதும் இந்தப் படுகொலைகளின் சித்திரத்தை உங்களுடைய மனதில் எழுப்புவதற்கு. இவற்றுக்கு அப்பால், இவற்றைச் சான்றாதாரப்படுத்தும் வகையிலான ஆவணங்களும் நிழற்படத் திரட்டும் இணைக்கப்பட்டுள்ளன. கூடவே, நீதி மிகத் தொலைவில் என்ற முற்பகுதியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. மொத்தமாக ஒன்பது தலைப்புகள்.

இது நீதிகோரும் ஒரு முதன்மையான வெளிப்பாடு. சமனிலையில் நீதியின்மைக்கான எதிர்ப்புக் குரல். இலங்கை அரசினதும் அதனுடைய படைகளினதும் மானுட விரோத, அரசியல் விரோதச் செயலை உலகின் முன்வைக்கும் வலுவான ஆவணம்.

இந்தப் படுகொலைச் சம்பவத்தில் பலியானோரின் உறவினர்களும் மனித உரிமைகள் ஆர்வலர்களும் இந்தக் கொலைகளைப்பற்றி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு, இலங்கை மனித உரிமைகள் அமைப்பு போன்ற பல்வேறு இடங்களிலும் முறைப்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். தங்களுக்கு நீதிகோரிப் பலரையும் சந்தித்திருக்கின்றனர். நடந்த சம்பவங்களைப்பற்றி விரிவான வாக்குமூலங்களை வழங்கியிருக்கின்றனர். ஆண்டுகள் பல கடந்தாலும் அவர்களுடைய மனதில் அந்தத் துயரமும் அங்கே சுவாலை விட்டு எரிந்த நெருப்பும் அவர்களுடைய மனதிலும் நினைவுக் கண்களிலும் அப்படியே ஆறாச் சூட்டோடுதான் உள்ளன. ஆனால், ‘இந்தக் கொலைகள் எதற்குமே நீதி வழங்கப்படவில்லை. கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை. அரச படைகள் செய்த இந்தப் படுகொலைகளுக்கு இலங்கை அரசு இதுவரையில் பொறுப்புக் கூறவில்லை’. ஷோபாசக்தியே இந்த நூலில் கூறியிருப்பதைப்போல, இந்தப் படுகொலைகள் வரலாற்றின் இருண்ட கிணறுகளுக்குள் புதைக்கப்பட்டு விடக் கூடாது. அப்படியொரு எண்ணத்தோடுதான் இவை அந்தக் கொலைகளுக்கு எதிரான சாட்சியமாக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நீதியைக் கோரும்போது தமக்கேற்பட்ட பாதிப்புகளையும் தமக்கிழைக்கப்பட்ட அநீதியின் சான்றுகளையும் வலுவாகத் திரட்டி முன்வைக்க வேண்டும். அறத்துக்குப் பதிலாக நலன்களே முதன்மை நோக்கமாகக் கொண்டியங்கும் உலகில், உலோகத்தையும் விடக் கனத்துத் தடித்திருக்கும் இதயத்தின் சுவர்களை உடைகக் கூடிய கூரிய ஆயுதங்களாக இருப்பவை பாதிப்புகளின் – அநீதிகளின் சான்றுகளே! ஆகவே அவற்றை நீதியைக் கோரும் மக்கள் தமக்கான வலிய கருவிகளாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், ஈழத்தமிழ்ச் சூழலில் இது மந்தநிலையில் (மந்தைத் தனமாக) உள்ளது. இந்த மந்தைத் தனத்தையே கொலையாளிகளும் அரசும் அதையே விரும்புகின்றன. இதற்கு எதிராக இயங்குவதே, எதிர்ப்புச் செயற்பாட்டை எந்த நிலையிலும் மேற்கொள்வதே கொலை அரசுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான ஒரே நீதிச்செயற்பாடாகும். ஷோபாசக்தி இவற்றை அந்த நீதியுணர்வோடும் அது எதிர்நோக்கும் அறிவியல் – அற வினாக்களோடும் இங்கே திரட்டி முன்வைத்திருக்கிறார்.

இதற்கு முன்பு இந்தக் கொலைகளைப் பின்னணியை கொரில்லா நாவலில் ஒரு அத்தியாயத்திலும் தேசத்துரோகி என்ற கதையிலும் பதிவு செய்திருக்கிறார் ஷோபாசக்தி. இதைவிட இந்தக் கொலை ஷோபாசக்தியினால் வலுவான இலக்கியப் பிரதியாக்கப்பட்டிருப்பது மிக உள்ளக விசாரணை என்ற சிறுகதையில். அந்தக் கதை தமிழில் மட்மல்லாமல், சிங்களம், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. படுகொலை நடந்த ஊர்வாசியாகவும் படுகொலைக்கு எதிரான மனித உரிமைப்போராளியாகவும் அநீதிக்கு எதிரான இலக்கியப் படைப்பாளியாகவும் என வெவ்வெறு நிலைகளில் நின்று இந்தப் பாத்திரத்தை வகித்துத் தன்னுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறார் ஷோபா. முந்தியவை புனைவின் வழியானவை. இது நேரடியான சான்றுகள், சாட்சியங்களோடானவை. ஆக ஷோபாசக்தியினுள்ளே அந்தக் கொலைகள் தணலாகவே கனன்று கொண்டிருக்கின்றன. இப்படி வேறு சில எழுத்தாளர்களும் தங்களுடைய காலத்திலும் சூழலிலும் எதிர்கொள்ள நேரிட்ட இத்தகைய கொலைகளையும் அநீதிச் செயல்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். வரதரின் கற்பு கதை தொடக்கம், நிலாந்தனின் கடலம்மா கவிதை உள்ளடங்கலாக  இதற்கான ஒரு நெடும் பாரம்பரியமே ஈழத்திலக்கியத்தில் உண்டு. அவை வெறுமனே பதிவுகளல்ல. நீதிக்கான குரல்கள். சிங்கள ஆட்சியாளர்களையும் அதிகார வர்க்கத்தையும் வரலாற்றின் முன்னே நிறுத்தி விசாரணை செய்யும் கலகப்பிரதிகள். ஆனால் இவை புனைவும் நிஜமும் கலந்த இலக்கியப் பிரதிகள். இங்கே இப்பொழுது ஷோபாசக்தி திரட்டி அளித்திருப்பது நடத்தப்பட்ட கொலைகளைப் பற்றிய நிஜமான ஆவணம்.

இப்படி ஒரு ஆவணத்தை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு திரட்டி முன்வைக்க முயற்சிக்கும்போது ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒன்று, இவை அல்லது இந்த மாதிரியான கொலைகள் நடத்தப்பட்ட சூழல் என்பது ஒன்றில் போர் நிகழ்ந்த பகுதியாக இருக்கும். அல்லது ஒடுக்குமுறைத்தரப்புகளான அரச படைகளும் அவற்றின் துணை இராணுவக்குழுக்களும் ஆதிக்கம் செலுத்துகின்ற பகுதிகளாக இருக்கும். இதனால் முறையான தகவல்களை – விவரங்களை – ப் பெறுவதில் (சேகரிப்பதில்) சிரமங்கள் உண்டு. அடுத்தது, இந்தச் சம்பவங்களின்போது உடனிருந்து தப்பியவர்கள், இவற்றை அறிந்தவர்கள், இவை பற்றிய விவரங்களைத் திரட்டிய ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எல்லாம் கால நீட்சியில் மரணித்தும் வேறு இடங்களுக்குச் சென்றும் விட்டதாகும். மட்டுமல்ல, இந்தக் கொலைகளைப் பற்றியும் இவை போன்று ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட பல நூறு படுகொலைகளைப் பற்றியும் பதிவு செய்யப்பட்டும் பகிரப்பட்டும் உள்ள தகவல் – விவர – ஆணமாக்கல்களில் குழப்பங்களும் குறைபாடுகளும் உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆகவே இவ்வாறான ஒரு அவலச் சூழலில் இருந்து கொண்டே இந்த மாதிரியான சான்றாதாரப் பிரதிகளை நாம் உருவாக்க வேண்டியுள்ளது.

போரினாலும் மிக மோசமான ஒடுக்குமுறையினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ்ச் சமூகம் தனக்கான தீர்வையும் நீதியையும் கோரும் போராட்டத்தில் – அரசியல் முன்னெடுப்பில் தீவிரமாக உள்ளது. ஆனால், அதைப் பெறுவதற்கு ஒரு வலுவான ஆதாரமாக முன்வைக்கக் கூடிய இவ்வாறான படுகொலைகள், இனவழிப்புச் செயற்பாடுகள், ஒடுக்குறைச் சான்றுகள் போன்றவற்றைச் சரியாக உருவாக்குவதில் பின்னடைந்தே இருக்கிறது. இதைச் செய்வதற்குத் தாராளமான – ஏராளமான வாய்ப்புகள் உண்டு. அந்த வாய்ப்புகளோடு ஈழத் தமிழ்ச் சமூகம் உலகம் முழுவதிலும் பரந்திருக்கிறது. ஆனால், செயற்பாட்டில் மிகப் பிந்தங்கிப் பலவீனமான நிலையில் இருக்கிறது. இதனை நடைமுறையில் இந்தப் பிரதியின் உருவாக்கத்தின்போது ஷோபாசக்தியும் உணர்ந்திருக்கிறார். ‘வரலாற்றை ஆவணமாக்கி வைத்திருப்பதில் ஈழத்தமிழ்ச் சமூகம் பெருமளவு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது…. இந்தப் படுகொலைகளைக் குறித்து அறிவதற்காக அல்லது ஆய்வு செய்வதற்காக தமிழ் இணையச் செய்தி ஊடகங்களை நாடிச் செல்லும் ஒருவர் ஏராளமான தவறான மற்றும் குழப்பமான தகவல்களைக் கண்டடைய முடியும்..’ எனக் கவலையோடு அவர் சொல்வதைப்போல, வடக்குக் கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (NESOHR) திரட்டி தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ள ஆவணமாக்கல் – வெளிப்படுத்தல் மூலங்களிலும் தகவல் பிழைகள் உள்ளன. ஆனாலும் இவற்றைப் புறந்தள்ளவும் முடியாது. இவற்றிலிருந்தும் நேரடியான வாய்மொழிச் சாட்சியங்கள், பிற அறிக்கைகள், பத்திரிகைச் செய்திகள், மனித உரிமை அமைப்புகள், நிர்வாக ரீதியான அரசாங்கப் பதிவேடுகள் எனப் பலவற்றிலிருந்தும் பெறக் கூடிய தகவல்களை வைத்துக் கொண்டே இதுபோன்ற சான்றாதாரப் பிரதிகளை நாம் உருவாக்க முடியும். அதற்கு காலத் தாமதம் கூடாது. அப்படியே இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூலைப் படிக்கும்போது இதை உணர்கிறோம். அத்துடன், இவற்றின் ஊடாக நாம் மிக மோசமான முறையில் நம்முடைய காலடியின் வழியே கடந்து சென்ற காலத்தை மீளத் திறந்து பார்க்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

ஆதிக்க அரசியலுக்காகப் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவுச் சின்னங்களும் புதைகுழிகளும் இலங்கையில் ஏராளம் – தாராளம். இந்தப் புதைகுழிகள் வடக்கு, கிழக்கு,மேற்கு, தெற்கு, மத்தி என்று எந்த வேறுபாடுமில்லால் எல்லா இடங்களிலும் உண்டு. தமிழர்கள், சிங்களர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் என எல்லாத்தரப்பிலிருந்தும் கொன்று புதைக்கப்பட்டனர்; ஆற்றில் வீசப்பட்டனர்; தீயிட்டு எரிக்கப்பட்டனர். பலர் காணாமலாக்கப்பட்டனர். சுதந்திர இலங்கையின் ஆட்சிச் சிறப்பு  இது. ஏறக்குறைய ஐநூறு ஆண்டுகாலம் நீடித்த அந்நியரின் (ஐரோப்பியரின்) ஆட்சியில் கொல்லப்பட்டோரை விடவும் சுதேச ஆட்சியில் – சுதந்திர இலங்கையில் கொல்லப்பட்டோர் அதிகம். இவ்வாறு கொல்லப்பட்டோருக்கான நினைவுச் சின்னங்கள் நாடு முழுவதிலும் உண்டு.

எல்லாக்கொலைகளும் ஒன்றல்ல. மரணம் வேறு. கொலை வேறு. மரணம் தரும் துக்கம் வேறு. கொலை உண்டாக்கும் துக்கம் வேறு. கொலையினால் ஏற்படும் துக்கம்  கோபத்தையும் தன்னுள் கொண்டெரிவது. அந்தக் கோபம் அநீதியினால் உருவாகியது. அநீதிக்கு எதிரானது.

ஈழத்தில் அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட பல நூறு கூட்டுக் கொலைகளின் நினைவாகவும் அவற்றுக்கு எதிரான அடையாளமாகவும் பல்வேறு இடங்களிலும் நினைவுத்தூபிகளும் கல்வெட்டுகளும் மக்களால் உருவாக்கப்பட்டுள்ளன. 1974இல் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது படுகொலைக்குள்ளான பதினொரு பேரின் நினைவுச் சின்னம் யாழ்ப்பாண நகரத்தில் வீரசிங்கம் மண்டபதற்கு முன்பாக, முற்றவெளியில், கோட்டைக்கு எதிர்த்திசையில் உள்ளது. இப்படியே மட்டக்களப்பு மகிழடித்தீவில், முல்லைத்தீவு மாத்தளனில், முள்ளிவாய்க்காலில், நாகர்கோயிலில், நவாலியில், மன்னார் – முருங்கனில் வல்வெட்டித்துறையில்.. எனப் பல இடங்களிலும் உள்ளன. இன்னொரு நிலையில் எழுத்தாவணங்களும் வீடியோப் பதிவுகளும் ஒளிப்படங்களும் ஏராளமாக உண்டு. வல்வை ந.  அனந்தராஜ் தொகுத்துப் பதித்த ‘வல்லைப் படுகொலைகள்’ கலாநிதி முருகர் குணசிங்கத்தின் “தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம்: அரச பயங்கரவாதமும் இன அழிப்பும்” மற்றும் நிஜத்தடன் நிலவன் எழுதிய “ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 (பாகம் -1)”போன்றவை குறிப்பிடத்தக்கவை. பல கொலைகளைப் பற்றிய ஆவணப்படங்களை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆவணப்பிரிவும், நிதரம்சனமும் அரங்கம் நிறுவனமும் தயாரித்து வெளியிட்டிருந்தன. யாழ்ப்பாண நூலக எரிப்பை சோமீதரன் ‘எரியும் நினைவுகள்’ (Burning memories) ஆவணப்படுத்தியிருக்கிறார். இவையெல்லாம் இலங்கை அரசின் மீதும் அது மேற்கொண்டுவரும் இனவாத அரசியலின் மீதும் அதற்கு எந்தக் கேள்வியுமற்று ஆதரவைக் கொடுத்து நிற்போரின் மீதும் தங்களின் எதிர்ப்பு அடையாளத்தைப் பதிவு செய்கின்றன. நீதியற்ற ஆட்சியே நீடித்தது என்பதற்கான சாட்சியங்களே அவை. அத்தகைய சாட்சியங்களில் ஒன்றே 1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும் ஆகும்.

இது புதைகுழிகள் தோண்டப்படும் காலம். நிகழ்த்தப்பட்ட படுகொலைகளும் காணாமலாக்கப்பட்டோர் விவகாரமும் பேசப்படும் நாட்களிவை. நீதியைக் கோரும் மக்களுக்கு – பாதிக்கப்பட்டோருக்கு –  இவை, இந்தச் சான்றாதாரங்கள் வலுவானவை; மிக மிக அவசியமானவை.

ஈழத்தில் யுத்தம் முடிந்து விட்டது என்றே பொதுவெளியில் அடையாளப்படுத்தப்படுகிறது. மக்கள் மீண்டும் தங்களுடைய ஊர்களில் மீளக் குடியேறி விட்டார்கள். (எல்லோரும் அல்ல. எல்லா இடங்களும் மீள் குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டவையும் அல்ல). ‘மாற்றத்துக்கான ஆட்சி’யை நடத்துவதற்குப் புதிய அரசாங்கம் (NPP) வந்து விட்டது என்று பலரும் கருதவும் கூடும். வெளித்தோற்றத்துக்கு இப்படித் தெரியலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அதே நிலையில்தான் உள்ளனர். அவ்வாறுதான் நடத்தப்படுகின்றனர். ஒடுக்குமுறையின் வடிவங்கள் மாற்றப்பட்டுள்ளன. குண்டுச் சத்தங்களும் சுற்றிவளைப்புகளும் கொலையும் இடப்பெயர்வும் இப்போதில்லைத்தான். ஆனால், ஏனைய அனைத்து நெருக்குவாரங்களும் சுமைகளும் ஒடுக்குமுறைகளும் அந்நியமாக்கலும் அப்படியேதான் உள்ளன. புத்தர் சிலைகளை முன்னிறுத்தி நில ஆக்கிரமிப்பு நடக்கிறது. படைகள் எல்லாம் ஊர்களில் சாவகாசமாகவே இருக்கின்றன.  என்பதால்தான் இவற்றையெல்லாம் –  தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையெல்லாம் – நாம்  வலுவோடு பேச வேண்டியுள்ளது. அந்த வகையில்தான் ஷோபாசக்தியும் இந்த நூலை மிகக் கடுமையாக உழைத்து, மிகுந்த சவால்களின் மத்தியில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இது எளிய பணியல்ல.

இந்தக் கொலை நாடகம் நடந்த நாட்களில் நான் யாழ்ப்பாண நகரத்திற்கு அண்மையில் (ஐந்து ஆறு கிலோ மீற்றர் தொலைவில்)  பதறும் நெஞ்சோடிருந்தேன். சிறைப்பிடிக்கப்பட்ட மக்களைப் பற்றி எதுவுமே தெரியாத நிலை அன்றிருந்தது. புங்குடுதீவிலிருக்கும் தன்னுடைய வீட்டுக்குப் போக முடியாமல் யாழ்ப்பாண நகரில் தவித்தலைந்து கொண்டிருந்தார் கவிஞர் சு. வில்வரெத்தினம். வீட்டுக்குப் போக முடியாமல் மட்டுமல்ல, அங்கே உள்ள தன்னுடைய குடும்பத்தின் நிலை என்ன என்பதையே அறிய முடியாமல் தவித்தார். அந்தத் தவிப்பில் இரவெல்லாம் அவர் எழுதிய கவிதைகளைச் சைக்கிள் மிதித்து வந்து படிப்பார். அவருடைய கண்களும் நெஞ்சும் மட்டும் கலங்கவில்லை. எங்களுடைய கண்களும் நெஞ்சும் கலங்கியது. அந்தக் கவிதைகள்தான் பின்னாளில்  ‘காற்றுவழிக்கிராமம்‘, ‘காலத்துயர்‘ என்ற கவிதை நூல்களாகின. அதில் ஒரு கவிதை இப்படியிருந்தது –

உடைந்து கிடக்கிறது கொள்ளிக் குடம்

உமியின் கரிச்சட்டி ஒருபுறம்

ஒரு நெல்லுப்பொரியும் விடாமல் பேய்கள்

கொறித்து முடிக்க கிடந்ததொரு வெற்றுப்பெட்டி.

வாழ்வின் கொள்கலங்களும் இவ்வாறு

சுடலைக்கே பாத்திரமாய்ப் போக

நானிங்கு எதனுடைய முதிசம் காக்க?

யாரும் பிச்சையிடமாட்டாததொரு மலட்டுத் தெருவில்

எல்லாவழிகளும் மயானத்திற்கே

இட்டுச் செல்வதாய ஒரு சந்தியில்

உயிர்வழிந்தோடும் பாத்திரமொன்றைக் கையளித்துவிட்டு

காலம் நகர்கிறது ஊன்றுகோலையும் பறித்துக்கொண்டு…

இதையே – இந்த அவல நாடகத்தையே – ஷோபாசக்தி, தன்னுடைய பல கதைகளில் புனைவாக்கினார். இன்னும் அவை இலக்கியமாக வரலாம், வரும். அந்தப் புனைவுகளில் பேசியவற்றுக்கும் அப்பால் இந்த உண்மைகள் இன்னொரு வகையில் உலகோடு பேச விளைகின்றன. அதற்கு உலகம் தயாராக உள்ளதா?

இந்த நூலைப்படிக்கும்போது அந்த நாட்கள் பதற்றத்தோடு நினைவில் எழுகின்றன.  அப்பொழுது (1994 இன் முற்பகுதியில்) யாழ்ப்பாணக் குடாநாட்டைப் படைகள் முற்றுகையிட்டுச் சிறைப்பிடிக்க முயன்றன. இதனால் குடாநாட்டைச் சுற்றி முற்றுகைப்போர் மூண்டது.  அதை முறியடிக்கும் முனைப்போடிருந்தனர் புலிகள். இரண்டு தரப்புக்குமிடையில் பெரும்மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது. 

இந்த மோதல்களில் படையினரும் புலிகளும் மட்டும் பலியாகவில்லை.  பொதுமக்களும் கொல்லப்பட்டனர். படைகள் திட்டமிட்டே பொதுமக்களைப் படுகொலை செய்தன.

“ஆயுதமேந்திய தரப்புகள் மோதிக் கொள்வதற்குப் பதிலாக ஏன் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்? போராளிகளை இலக்கு வைப்பதற்குப் பதிலாக எதற்காக மக்கள் இலக்கு வைக்கப்பட்டனர்?“  என்று இன்றைய வாசகர்களும் இளைய தலைமுறையினரும் கேட்கக் கூடும். காஸாவில் மக்களின்மீதும் அவர்களுடைய வாழிடங்களின் மீதும் இஸ்ரேல் என்ன செய்து கொண்டிருக்கிறதோ அதையேதான் இலங்கையில் – இந்தத் தீவுகளில் – இலங்கைப் படையினர் செய்தனர். உள்நாட்டுப்போரில் எப்போதும் மக்களே இலக்கு வைக்கப்படுகிறார்கள். உள்நாட்டுப்போரில்தான் அதிகமாக மக்கள் கொல்லப்படுவதுமுண்டு. மக்களுடைய ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு தரப்பும், அந்த ஆதரவை இல்லொதொழிப்பதற்காக இன்னொரு தரப்பும் இலக்கு வைப்பது மக்களேயே. ஆகவேதான் மக்கள் எப்போதும் தங்களுடைய தலைகளை இழக்க வேண்டியேற்படுகிறது.

இந்த எண்ணிக்கை ஒன்றும் வெறும் புள்ளி விவரக் கணக்கல்ல. அல்லது இந்த மாதிரிப் படுகொலைகள், புதைகுழிகளைப் பற்றிய கதைகள் வெறும் செய்திகளோ தகவல்களோ அல்ல. அதற்குமப்பால், இந்த நவீன உலகில் நாமெல்லாம் நீதி, அறம், விழுமியம், வாழ்க்கை குறித்த பல்வித நோக்குகள், மனித மாண்பு பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் காலத்தில் நமக்கு முன்னே நிகழ்ந்தப்பட்ட இரத்தமும் கண்ணீரும் பெருக்கெடுக்க நிகழ்த்தப்பட்ட மனித அழிப்பு நடவடிக்கைகளாகும். அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்காக அப்பாவிச் சனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலைகள், காணாமலாக்கப்படுதல்களாகும். அதாவது கீழ்மை அரசியலின் வெளிப்பாடுகள். 

இந்த அநீதியை – கொடூரத்தை – மானுட அழிப்பை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் யாரும் மறந்து விட முடியாது; மறந்துவிடக் கூடாது. இதைப் பேசியே ஆக வேண்டும். அநீதியை, கொடூரத்தை, மானுட அழிப்பை, மனித விரோதத்தைப்  பேசாமல் விட்டால் அது அநீதிக்கும் கொடூரத்துக்கும் மனிதகுல விரோதத்துக்கும் உடன்பட்டுப்போவதாகவே இருக்கும்.

என்பதால்தான் ஷோபாசக்தி இதைப்பேசுகிறார். புனைவிலும் இவ்வாறான ஆவணப்படுத்திலும் என இரு தளங்களிலும் இவற்றைப் பேசியுள்ளார். இது அவருள் அடங்காதிருக்கும் தாகமும் அணையாதிருக்கும் நெருப்புமாகும்.  இரண்டினுடைய முக்கியத்துவமும் பெறுமதியும் வேறு.

இந்த நூலில் குறிப்பிட்டுள்ளதைப்போல, “இலங்கை அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகளுக்கும் காணாமலாக்கப்பட்ட பொதுமக்களுக்கும் இலங்கை அரசு பொறுப்புக் கூறவேண்டும். அத்தோடு, காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்துச் சுதந்திரமான, பாரபட்சம் இல்லாத நீதி விசாரணைகளை விரைந்து நடத்த வேண்டும். காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் காலம் கடந்து இப்போதாவது நியாயமான இழப்பீட்டுத் தொகையை வழங்க முன்வர வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களின் முறையீடுகள் மீதான மவுனமும் புறக்கணிப்பும் மூடி மறைத்தலும் தட்டிக் கழித்தலும் உண்மையான சமாதானத்தை உண்டாக்கிவிடாது. கடந்த காலங்களில் போர்கள் நிகழ்ந்து இன்று அமைதி நிலவும் உலகிலுள்ள பல்வேறு நிலங்களில் பொறுப்புக் கூறலும் நீதி வழங்கலுமே நீடித்த சமாதானத்தையும் பகை மறப்பையும் உண்டாக்கியிருக்கின்றன. இலங்கையிலும் அது நிகழ வேண்டும்.” என்ற நோக்கில் இதனுடைய வரலாற்று முக்கியத்துவமும் பெறுமானமும் அமைகிறது.

ஆம், நீதியைப் பெறுவதற்காக நாம் நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. நீதி நமக்குக் கிடைப்பதற்காக – நாம் நீதியைப் பெற வேண்டும் என்பதற்காக – நாம் பல காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நடந்த உண்மைகளை, ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தனக்குச் சாத்தியமான வழிகளில் ஷோபாசக்தி அதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். அவரைப்போல சாத்தியமான அனைவரும் தொழிற்படுவது அவசியம். விடுதலை என்பதும் போராட்டம் என்பதும் கூட்டுச் செயற்பாட்டின் விளைவாலானவை. கூட்டுச் செயற்பாடு, கூட்டுக் குரல் போன்றனவே உலகத்தின் கவனத்தைப் பாதிக்கப்பட்டோரின் பக்கமாகத் திருப்புவதற்கான அழைப்பு அடையாளமாகும்.

இந்த நூல் மேலும் பல குரல்களை – உண்மைகளை – மேலுர்த்திப் பேச வைக்கும் என நம்புகிறேன். அதற்கான தூண்டல்களை, முன்மாதிரிகளை உருவாக்குகிறது. இதனைச் சரியான முறையில் வெளியிட்டிருக்கும் ‘கருப்புப் பிரதிகள்‘ பதிப்பகத்துக்கு பாராட்டுகள். ஷோபாசக்திக்கு நன்றி. நீதிக்கான பயணத்தில் இப்படிப் பல தரப்புகளும் இணைந்திருப்பது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

 ‘1990 லைடன் தீவு – மண்டைதீவு – படுகொலைகளும் புதைகுழிகளும்‘

(பக்கங்கள்: 144).

நூல் கிடைக்குமிடம்: கருப்புப் பிரதிகள் பதிப்பகம் – சென்னை (WhatsApp : +91 9444272500).

https://arangamnews.com/?p=12464

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.