Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி, நல்லிணக்கம், தியாகம், இரக்க குணம் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுக்கும் புனித நத்தார்! - ஜனாதிபதி 

25 Dec, 2025 | 12:48 AM

image

யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்து,  அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவற்றால் நிறைந்த இனிய  நத்தார் பண்டிகையாக இந்நாள் அமையவேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

உலக மக்களால் குறிப்பாக கிறிஸ்தவர்களால் இன்று (25) கொண்டாடப்படும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அச்செய்தியில் மேலும் அவர் கூறியிருப்பதாவது:

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை இன்று (25) கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 

இலங்கையர்களாகிய நாம், ஒரு நாடாக, மிகவும் வேதனையான இயற்கைப் பேரழிவை எதிர்கொண்ட பிறகு உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பது அனைவரும் அறிந்த விடயம். 

அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவையே நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தங்கள் ஆகும்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு சகோதர உணர்வுடன் ஆதரவு வழங்குதல் மற்றும் மனிதகுலத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு என்பன இவற்றில் முதன்மையானதாகும்.

கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களின் போதனையான, இக்கட்டான காலங்களில் அயல் வீட்டாரை கைவிடாமல் சகோதரத்துவத்துடன் அரவணைக்கும் உன்னதமான மனிதப் பண்பையும், அசைக்க முடியாத உறுதியையும் கடந்த அனர்த்த நிலைமையில் இந்நாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

அமைதி, நல்லிணக்கம், தியாகம் மற்றும் இரக்க குணம் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க அழைப்பு விடுக்கும் புனித நத்தாரின் அர்த்தத்தை உண்மையில் புரிந்துகொண்டதனாலேயே, ஒருபோதும் பயணிக்க எதிர்பார்க்காத வீதிகளில் கூட தமது சகோதர மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்களை மக்கள் சுமந்து சென்றார்கள் என்று நான் நம்புகிறேன்.

இருள் நீங்க வேண்டுமானால், ஒளியின் பிரகாசம் பரவவேண்டும். 

பெத்லகேமில் ஓர் ஏழை தொழுவத்தில் பிறந்து, கல்வாரி மலைப் பகுதியில் மனித சமூகத்தை பாவத்திலிருந்து மீட்க சிலுவையில் தன்னை அர்ப்பணித்த இயேசு, மிகுந்த உறுதியுடனும் நம்பிக்கையுடனும் ஞானத்துடனும் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவம் கூறுகிறது.

யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து மீண்டெழுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்து,  அமைதி, மகிழ்ச்சி, மனிதநேயம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவற்றால் நிறைந்த  இனிய  நத்தார் பண்டிகையாக இந்நாள் அமையவேண்டும் என்று அனைவரையும் வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/234321

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயேசு போதித்த 'மற்றவர்களை நேசித்தல்' என்ற நன்னெறியை நாட்டு மக்கள் உலகுக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றனர்! - பிரதமர் 

25 Dec, 2025 | 12:48 AM

image

நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை மனதிற்கொண்டு, இயேசுவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, எமது நாட்டு மக்கள், அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் ஒன்றுபட்டு, பாதிக்கப்பட்ட தங்கள் சக குடிமக்களுக்காக அன்பு, கருணை மற்றும் இயேசு போதித்த 'மற்றவர்களை நேசித்தல்' என்ற மகத்தான நன்னெறியினை உலகுக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றனர் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

உலக முழுவதும் இன்று (25) கொண்டாடப்படும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

டிசம்பர் மாத பிறப்புடன், கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடத் தயாராவார்கள். அமைதியின் செய்தியை ஏந்தியவராக பாலகர் இயேசுவின் பிறப்புச் செய்தி பெத்லகேம் நகரில் இருந்து உலகை வந்தடைந்த அந்த நத்தார் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதே கிறிஸ்தவ மக்களின் எதிர்பார்ப்பாகும்.

ஆனால் இந்தக் குளிர்கால டிசம்பர் மாதம் வழக்கமான மகிழ்ச்சி அல்லது உற்சாகத்துடன் விடியவில்லை. முழு நாட்டையும் உலுக்கிய இயற்கைப் பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான எமது சகோதர சகோதரிகளின் துன்பங்கள் மற்றும் பெருமூச்சுகளுக்கு மத்தியிலேயே அதனை நாம் அடைந்தோம்.

எனினும், நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை மனதிற்கொண்டு, இயேசுவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, எமது நாட்டு மக்கள், அனைத்து வேறுபாடுகளையும் மறந்து, ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் ஒன்றுபட்டு, பாதிக்கப்பட்ட தங்கள் சக குடிமக்களுக்காக அன்பு, கருணை மற்றும் இயேசு போதித்த 'மற்றவர்களை நேசித்தல்' என்ற மகத்தான நன்னெறியினை உலகுக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றனர்.

நாட்டை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் பணிக்காக அனைத்து இனங்களும் ஒரே குறிக்கோளுடனும் கூட்டுப் பொறுப்புடனும் தேசத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றுபட வேண்டிய ஒரு காலகட்டத்தை நாம் இப்போது அடைந்திருக்கின்றோம்.

உண்மையான மாற்றத்தினை எதிர்பார்த்த இலட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் எந்த வகையிலும் வீண் போகாத வகையில் அவர்கள் எதிர்பார்க்கும் "வளமான நாடு - அழகான வாழ்க்கை"யை உருவாக்கும் ஒரே நோக்கத்திற்காக நாம் தொடர்ந்தேர்ச்சையாக பாடுபட்டு வருகிறோம்.

சிறந்ததோர் எதிர்காலத்தை நோக்கிய எம் எல்லோருடைய அந்த கனவுக்காக, குடிமக்கள் என்ற வகையில் ஒற்றுமை, அன்பு மற்றும் பரிவுணர்வுடனும் பொறுப்புடனும் ஒன்றிணைந்து செயற்பட நாம் அனைவரும் இந்த நத்தார் தினத்தில் உறுதிபூணுவோம்.

இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்!

https://www.virakesari.lk/article/234328

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருளான யுகத்தை விலக்கி, நம்பிக்கையின் விளக்கால் உலகை ஒளிமயமாக்குவோம்! - நத்தார் வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 

25 Dec, 2025 | 12:49 AM

image

2025 நத்தார் நமக்கு நினைவூட்டுவது, இழந்தவற்றை மட்டுமல்ல, நம்மிடம் உள்ள இழக்காதவற்றையும்தான். அதாவது, ஒருவருக்கொருவர் கருணை காட்டுதல், ஒன்றாக இருத்தல், நாளைய நாள் பற்றிய நம்பிக்கையின் விசுவாசம் ஆகியவற்றையாகும். அந்த விசுவாசத்துடன், இலங்கையினால் மீண்டும் வலிமையான, நீதியான மற்றும் மனிதாபிமான தேசமாக எழுந்து நிற்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

உலக முழுவதும் இன்று (25) கொண்டாடப்படும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: 

இலங்கையை கடுமையாக பாதித்த டித்வா புயலுக்குப் பின் நம் தேசம் எதிர்கொண்ட வலி மிகுந்த அனுபவங்களை நினைவில் கொண்டு 2025 நத்தார் பண்டிகையை நாம் எதிர்நோக்குகின்றோம்.

அந்தப் புயலின் காரணமாக நமது சொந்த நாட்டில் நமது சொந்த மக்களின் உயிர்கள், சொத்துக்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் நம்பிக்கைகள் போன்ற பலவற்றை இழந்தோம். அவை எல்லாவற்றையும் விட, தங்களது அனைத்தையும் இழந்த மக்களின் கண்ணீரும் வேதனையும் நமது இதயங்களில் பதிந்துள்ளன. 

கடவுளின் மகனான இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நத்தார் பண்டிகை என்பது அழிவுகளுக்கிடையே நம்பிக்கை பிறக்கும் காலமாக குறிப்பிடப்படலாம். 

தீமையை விலக்கி நன்மை ஆட்சி செய்யும் யுகத்தின் விடியலாகும். இருளான இரவுகளில் கூட ஓர் ஒளி பிறக்கிறது. அது நம்பிக்கையின் ஒளி. 

டித்வா புயலுக்குப் பின் நாம் அனுபவித்த, நாம் கண்ட இனம், மதம், மொழி வேறுபாடுகளின்றி உயர்ந்து கைகோர்த்த இலங்கையர்களின் ஒற்றுமை, பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமான இதயத்தின் வழியாக நாம் ஒரு நாடாக மீண்டும் ஒரு முறை எழுந்து நிற்கவேண்டும். அந்த ஒற்றுமையை நமது வலிமையாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் நமக்கு தேவையானது பிளவுகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் அல்ல, மக்களின் வேதனைக்கு பதிலளிக்கும், நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும், நீதியான மற்றும் கருணை நிறைந்த நாட்டை உருவாக்குவதாகும். 

எதிர்காலத்தில் நாம் ஒரு நாடாக பெரிய சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். எனவே இந்த அழிவிலிருந்து பாடங்களை கற்று, உதவியற்றவர்களை பாதுகாக்கும், பேரழிவுகளின் முன்னால் மக்களை தனிமைப்படுத்தாத அரசை உருவாக்குவது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். 

2025 நத்தார் நமக்கு நினைவூட்டுவது, இழந்தவற்றை மட்டுமல்ல, நம்மிடம் உள்ள இழக்காதவற்றையும்தான். அதாவது, ஒருவருக்கொருவர் கருணை காட்டுதல், ஒன்றாக இருத்தல் மற்றும் நாளைய நாள் பற்றிய நம்பிக்கையின் விசுவாசம் ஆகும். அந்த விசுவாசத்துடன், இலங்கை மீண்டும் வலிமையான, நீதியான மற்றும் மனிதாபிமான தேசமாக எழுந்து நிற்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 

எனவே, இந்த நத்தார் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இலங்கை கிறிஸ்தவ பக்தர்களுக்கும் அனைத்து குடிமக்களுக்கும் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் புதிய நம்பிக்கை நிறைந்த நத்தார் பண்டிகையாக அமையவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்!

https://www.virakesari.lk/article/234333

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேரிடரின்போது மதம், இனம், கட்சியை பொருட்படுத்தாமல் அனைத்து இலங்கையர்களும் வெளிப்படுத்திய அன்பும் தியாகமுமே நத்தாரின் உண்மையான அர்த்தம்! - சபாநாயகர் 

25 Dec, 2025 | 11:27 AM

image

“இந்த ஆண்டு முழு தேசமும் ஒரு பெரிய பேரழிவை எதிர்கொண்ட பிறகு நாம் நத்தாரைக் கொண்டாடுகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எங்கள் அன்புக்குரியவர்களில் பலர் இந்த நேரத்தில் துன்பப்படுகிறார்கள். இந்தப் பேரழிவு, ‘ஒரே நாட்டு மக்கள்’ என்ற வகையில் நம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தாலும், மதம், இனம் அல்லது கட்சியைப் பொருட்படுத்தாமல், அனைத்து இலங்கையர்களும் ஒருவருக்கொருவர் காட்டிய தியாகமும் மனித அன்பும் போற்றத்தக்கது. இது நத்தாரின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தும் மனித அன்பின் வெளிப்பாடு என்று நான் நம்புகிறேன்” என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 

நத்தார் தினத்தை முன்னிட்டு சபாநாயகர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அச்செய்தியில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது:

"தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படி தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பியதால் தேவன் நம் மீது வைத்த அன்பு வெளிப்பட்டது.

அதன்படி, அன்பு, தியாகம் மற்றும் கருணை ஆகியவற்றின் அர்த்தங்களை அடையாளப்படுத்தும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான நத்தார் காலம், இலங்கை கிறிஸ்தவர்களுக்கு ஆசீர்வாதங்கள் நிறைந்த ஒரு அழகான சந்தர்ப்பமாகும். 

நத்தாரின் உண்மையான அர்த்தம் மனிதநேயம் மற்றும் அன்பான தியாகத்தை வலியுறுத்துவதும், அத்தகைய வாழ்க்கைக்குத் தேவையான ஆன்மிக பாதைகளைத் திறப்பதுமாகும். 

இருப்பினும், இந்த ஆண்டு முழு தேசமும் ஒரு பெரிய பேரழிவை எதிர்கொண்ட பிறகு நாம் நத்தாரைக் கொண்டாடுகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எங்கள் அன்புக்குரியவர்களில் பலர் இந்த நேரத்தில் துன்பப்படுகிறார்கள். 

இந்தப் பேரழிவு, ‘ஒரே நாட்டு மக்கள்’ என்ற வகையில் நம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தாலும், மதம், இனம் அல்லது கட்சியைப் பொருட்படுத்தாமல், அனைத்து இலங்கையர்களும் ஒருவருக்கொருவர் காட்டிய தியாகமும் மனித அன்பும் போற்றத்தக்கது. இது நத்தாரின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தும் மனித அன்பின் வெளிப்பாடு என்று நான் நம்புகிறேன். 

அதன்படி, உங்கள் அனைவருக்கும் இந்த நத்தார் காலம் அனைத்து சவால்களையும் கடந்து, ஒரு நாடாகவும் தேசமாகவும் மீண்டும் எழுச்சி பெற, இயேசு கிறிஸ்துவால் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்ட மனிதகுல அன்பை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளவும், அமைதியை அடையவும் குறிக்கோளாகக் கொண்ட மகிழ்ச்சியான, வளமான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட நத்தார் நல்வாழ்த்துக்கள்!” என்றுள்ளது. 

https://www.virakesari.lk/article/233874

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நத்தார் திருநாள் அன்பு, சமாதானம், தேசிய ஒற்றுமையின் உயரிய செய்தியை எடுத்துச் செல்கிறது - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

25 Dec, 2025 | 12:50 AM

image

கிறிஸ்மஸ் திருநாள் அன்பு, சமாதானம், கருணை மற்றும் நம்பிக்கையின் உலகளாவிய செய்தியுடன் மனித குலத்தின் இதயங்களை ஒன்றிணைக்கும் புனிதமான நாளாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது நத்தார் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, மனித சமூகத்திற்கு அன்பு, தியாகம், மன்னிப்பு மற்றும் ஒற்றுமையின் உயரிய பண்புகளை எடுத்துக்காட்டியதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

அந்த தெய்வீகப் பிறப்பு, மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்புடன் வாழவும், வேறுபாடுகளை மதித்து சமாதானமாக இணைந்து செயல்படவும் வழிகாட்டும் ஒரு நிரந்தர ஒளிவிளக்காகத் திகழ்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த மகத்தான திருநாளை முன்னிட்டு, இலங்கை மக்களுக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கும் தனது இதயம் கனிந்த கிறிஸ்மஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அமைச்சர், கிறிஸ்மஸ் திருநாள் ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை விதைக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்றைய சமூக மற்றும் பொருளாதார சவால்கள் நிறைந்த சூழலில், கிறிஸ்மஸ் எடுத்துச் சொல்லும் மனிதநேய மதிப்புகள் மிகவும் அவசியமானவை என அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

பரஸ்பர புரிதல், சகோதரத்துவ உணர்வு மற்றும் சமூக பொறுப்பு ஆகியவை வலுப்பெறும்போது மட்டுமே நிலையான தேசிய முன்னேற்றத்தை அடைய முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், இன, மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து இலங்கை மக்களும் ஒரே தேசமாக ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பதே கிறிஸ்மஸ் திருநாள் வழங்கும் பிரதான செய்தி எனக் குறிப்பிட்ட அமைச்சர், அந்த ஒற்றுமை உணர்வே நாட்டின் அமைதி, அபிவிருத்தி மற்றும் எதிர்கால வளத்திற்கான அடித்தளமாக அமையும் என்றும் தெரிவித்தார்.

இந்த கிறிஸ்மஸ் பண்டிகை, புதிய நம்பிக்கையுடனும், புதுப்பித்த உற்சாகத்துடனும் அனைவரையும் ஒன்றிணைத்து, சமூகத்தில் மனிதநேயமும் கருணையும் வேரூன்ற உதவ வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்த அமைச்சர், ஒற்றுமை, சமாதானம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய மதிப்புகளுடன் புதிய ஆண்டை எதிர்கொள்ள அனைவரையும் அழைத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/234348

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.