Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2025: அனுர அலையில் தொடக்கி மனிதாபிமான அலையில் முடிந்த ஆண்டு - நிலாந்தன்

599682467_122221042040114056_90464635600

இந்த ஆண்டு பிறந்த போது நாட்டில்  “அனுர அலை” வீசியது. இந்த ஆண்டு முடியும் போது புயலுக்கு பின்னரான ஒரு மனிதாபிமான அலை நிலவுகிறது. இரண்டுமே அலைகள்தான். இரண்டுமே அரசாங்கத்தைப் பலப்படுத்தும் அலைகள்தான்.

அனுர அலை என்பது தமிழ் நோக்கு நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளியது. அது நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டது. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த அதீயளவு ஆசனங்கள்தான் அரசாங்கத்துக்கும் கிடைத்தன. யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது தெரியாமலேயே தமிழ்மக்கள் வாக்களித்திருந்தார்கள். இப்படிப் பார்த்தால் இந்த ஆண்டு தொடங்கும் பொழுது அது தமிழ்த்தேசிய அரசியலுக்குப் பாதகமான ஓர் ஆண்டாகத்தான் தொடங்கியது.

அந்தத் தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடித்து அவற்றைச் சரி செய்யும் விடயத்தில் தமிழ்த்தேசிய அரசியல் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது? உள்ளூராட்சி சபைகளில் பெற்ற வெற்றிகள் சற்று ஆறுதல் தரக்கூடும். ஆனால் கடந்த வாரம் கரைத்துறைப் பற்று பிரதேச சபையில் என்ன நடந்தது? வடக்கில் அரசாங்கம் முதலாவது உள்ளூராட்சி சபையை கைப்பற்றியிருக்கிறது. அதற்கு என்ன காரணம்? சந்தேகத்துக்கிடமின்றி தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஐக்கியமின்மைதான் முதலாவது காரணம். அந்த ஐக்கியமின்மையை சரிசெய்யத் தேவையான தலைமைத்துவம் தமிழரசுக் கட்சியிடம் இல்லை என்பதுதான் இரண்டாவது காரணம்.

சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசிய கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு கடந்த ஓராண்டுக்கு மேலான காலப்பகுதியில் அதாவது ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் மூன்று முயற்சிகள் எடுக்கப்பட்டன. முதலாவது,தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றாக்கும் முயற்சி. தமிழரசுக் கட்சி அதைத் தோற்கடித்தது. இரண்டாவது,தமிழ்த்தேசியப் பேரவை என்ற பெயரில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி. அதுவும் இப்பொழுது ஏறக்குறைய தோற்கும் நிலைக்கு வந்துவிட்டது. மூன்றாவது அண்மையில் தமிழரசுக் கட்சியும் டிரிஎன்ஏயும் சந்தித்து மாகாண சபைத் தேர்தல்களை ஒன்றாக எதிர்கொள்வைத்தற்கான பேச்சுவார்த்தை. ஆனால் அந்த ஒற்றுமை முயற்சிகள் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பதற்கு கரத் துறைப் பற்று பிரதேச சபை ஓர் ஆகப் பிந்திய உதாரணமாக அமையுமா? தேர்தலை நோக்கி உருவாக்கப்படும் கூட்டுக்கள் நிலைத்திருக்காது என்பதைத்தான் கடந்த 16 ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன.

எனவே தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் ஆண்டு தொடங்கும் போது இருந்த அதே கட்சி நிலைமைகள்தான் ஆண்டு முடியும் போதும் காணப்படுகின்றன. மே 18ஐ நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் கிராமம் அமைந்திருக்கும் கரத்துறைப் பற்று பிரதேச சபையைத் தக்கவைக்க முடியாத தமிழ் கட்சிகள் இனிமேல் மாகாண சபைத் தேர்தல் ஒன்று நடந்தால், அதில் ஒன்றாக நின்று அரசாங்கத்தை எதிர்கொள்ளும் என்று எப்படி நம்புவது?

இந்த ஆண்டு பிறந்த போது ஒருபுறம் அனுர அலையின் விளைவுகளால் தமிழ் தேசிய அரசியல் சேதத்துக்கு உள்ளாகியிருந்தது. அதேசமயம் இன்னொருபுறம் யாரும் எதிர்பாராமல் திறக்கப்பட்ட செம்மணிப் மனித புதை குழியானது தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு புதிய அனைத்துலக வாய்ப்புகளைத் திறந்துவிட்டது. மனிதப் புதைகுழி என்பது உணர்வு பூர்வமானது. அது உள்ளூரில் மக்களைத் திரட்ட உதவும். இன்னொரு புறம் பொறுப்புக் கூறும் விடயத்தில் உலக சமூகத்துக்கு எடுத்துக் காட்டத்தக்க ஆகப்பிந்திய உதாரணமாகவும் அது அமைந்தது. அதன் காரணமாகத்தான் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வர வேண்டியிருந்தது. ஆனால் ஐநா செம்மணிக்கூடாக பொறுப்புக்கூறலை அணுகவில்லை என்பதைத்தான் கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் உணர்த்துகின்றது. அதாவது தமிழ் மக்கள் ஐநாவில் பலமாக இல்லை என்பதைத்தான் அது உணர்த்தியது.

உள்நாட்டிலும் தமிழ் மக்கள் பலமாக இல்லை அனைத்துலக அளவிலும் தமிழ் மக்கள் பலமாக இல்லை. ஆண்டு பிறந்த போதும் பலமாக இல்லை. ஆண்டு முடியும்போதும் பலமாக இல்லை. இந்த ஆண்டின் ஆகப்பிந்திய தோல்வி கரைத்துரைப் பற்று பிரதேச சபை. ஒரு புயலுக்கு பின்னரான அரசியலில்,தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஆதீனத் தலைவரும் உட்பட பல போராட்டக்காரர்கள் மீது பலப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் அதிலும் குறிப்பாக, இந்திய வெளியுறவு அமைச்சர் கொழும்புக்கு வருகை தந்த அதே நாளில்,வடக்கில் முதலாவது பிரதேச சபையை தமிழ் தேசியத் தரப்பு அரசாங்கத்திடம் இழந்திருக்கிறது.

அரசாங்கம் புயலுக்கு பின் முன்னரைவிடப் பலமாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில் தமிழ்த் தேசியத் தரப்புக்கு ஏற்பட்ட தோல்வி இது. ஆண்டின் முடிவில் நாட்டைத் தாக்கிய புயலின் விளைவாக ஒரு மனிதாபிமானச் சூழல் உருவாகியது. அந்த மனிதாபிமானச் சூழலை ஜேவிபி உள்நாட்டில் கிராமங்கள் தோறும் நிவாரண அரசியலாக,தொண்டு அரசியலாக திட்டமிட்டுக் கட்டமைத்தது. அதன்மூலம் எதிர்க்கட்சிகளை பெருமளவுக்கு பலவீனப்படுத்தியது. ஆண்டு தொடங்கும்போது பலவீனமாக இருந்த எதிர்க்கட்சிகள்  இடையில் நுகேகொட பேரணிமூலம் தலையெடுக்க முயற்சித்தன. ஆனால் புயல் வந்து அரசாங்கத்தை மீண்டும் பலப்படுத்தி விட்டது.

அண்மையில் உலகளாவிய 120 நிபுணர்கள் அடங்கிய குழு வெளியிட்ட அறிக்கை அதைக் காட்டுகிறது. கடனை மீளக்கட்டமைக்கும் விடயத்தில்  அரசாங்கத்துக்குச் சாதகமாக முடிவெடுக்குமாறு அந்த அறிக்கை கேட்டிருக்கிறது. அதாவது புயலுக்கு பின்னரான மனிதாபிமான அலை என்பது உள்நாட்டில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை கடந்து போவதற்கு அரசாங்கத்துக்கு உதவுகிறது. அனைத்துலக அளவில் கடனை மீள கட்டமைக்கும் நெருக்கடியிலிருந்து விடுபட உதவியிருக்கிறது.

புயலின் பின்னரான மனிதாபிமானச் சூழலுக்குள் முதலில் இறங்கியது இந்தியா. அதிகமாக உதவியதும் இந்தியா. இயற்கை அழிவு ஒன்றுக்குப் பின்னரான இலங்கைத் தீவின் அரசியலில் இந்தியா தன்னுடைய பிடியை மேலும் பலப்படுத்தியிருக்கிறது.

இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தது அனுர அலை, அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை. இந்த ஆண்டின் முடிவில் இருப்பது மனிதாபிமான அலை. அது இலங்கை அரசாங்கத்தைப் பலப்படுத்தும் அலை. எதிர்க்கட்சிகளை மேலும் வாயடைக்கச் செய்யும் அலை. இந்த இரண்டு அலைகளுமே எதிர்கட்சிகளை மட்டுமல்ல தமிழ்த்தேசியக் கட்சிகளையும் பலவீனப்படுத்தியிருக்கின்றன.

G82jHPbbMAA5g1f-cccc-1024x548.jpg

புயலுக்குப் பின்னரான மனிதாபிமான அலையின் பின்னணியில், தமிழ்த் தேசியப் பேரவை தமிழகத்தை நோக்கிச் சென்றது. தமிழரசுக் கட்சியும் டிரிஎன் ஏயும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தை நோக்கிச் சென்றன. ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தியாவை நோக்கிச் சென்ற அதே காலகட்டத்தில், இந்தியா கொழும்பை நோக்கி அதன் வெளிவிவகார அமைச்சரை அனுப்பியது. தமிழ்க் கட்சிகள் இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்தபோது ஒருமித்த நிலைப்பாட்டோடு இருக்கவில்லை என்பதைத்தான் பின்னர் வெளிவந்த அறிக்கைகள் காட்டுகின்றன.

அதிலும் குறிப்பாக இந்திய வெளிவகார அமைச்சர் கொழும்புக்கு வந்த அதே நாளில்தான் கரைத்துறைப்பற்று பிரதேச சபையை தமிழ்க் கட்சிகள் அரசாங்கத்திடம் பறி கொடுத்தன. எனவே இந்த ஆண்டு முடியும்போது தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகளுக்கும் இந்த அரசாங்கம் தீர்வைத் தரவில்லை. உதாரணமாக,அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவில்லை அதற்குப் பதிலாக புதிய சட்டம் வருகிறது. சிங்கள பௌத்த மயமாக்கல்,நிலப்பறிப்பு போன்ற பெரும்பாலான உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை. திருமலையில் அண்மையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்திலேயே இருக்கிறது. அதாவது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கவில்லை. நிரந்தரப் பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை.

அதேசமயம் ஆண்டின் இறுதியில் வீசிய புயல் அரசாங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. அது எதிர்கொள்ளக் கடினமான பிரச்சினைகளையும் வாக்குறுதிகளையும் ஒத்திவைப்பதற்கு வேண்டிய அவகாசத்தை அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கிறது.

கடந்த மூன்று தசாப்த காலத்துக்குள் ஏற்பட்ட இரண்டாவது இயற்கைப் பேரிடர் ஒன்றுக்குப் பின்னரான மனிதாபிமான அலை இது. இந்த மனிதாபிமான அலையை,ஜேவிபியின் கிராமமட்ட வலையமைப்பு திட்டமிட்டு எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் அரசாங்கத்தை பலப்படுத்தும் நோக்கத்தோடும் கட்டமைத்து வருகிறது. ஜேவிபியின் கிராமமட்ட வலைப்பின்னலுக்கூடாக உள்ளூர் தொண்டர்களும் தன்னார்வலர்களும் இந்த மனிதாபிமான அலையைக் கட்டியெழுப்பினார்கள். இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி கூறுவதுபோல,இது ஓர் அசாதாரணமான சகோதரத்துவநிலைதான்.

ஆனால் இதே போன்றதொரு மனிதாபிமான அலை 2004ஆம் ஆண்டு சுனாமிப் பேரழிவின் பின்னரும் தோன்றியது. அப்பொழுது யுத்த நிறுத்தம் நிலவியது. எனவே அது நாடு முழுவதுமான ஒரு மனிதாபிமான அலையாகக் காணப்பட்டது. அந்த மனிதாபிமானச் சூழலை அரசியல் தீர்வு ஒன்றுக்கான சாதகமான நிலைமைகளைக் கனியவைப்பதற்கான ஒரு சூழலாக மாற்றலாமா என்று பரிசோதிப்பதற்கு அப்பொழுது சமாதானத்தை முன்னெடுத்த மேற்கு நாடுகள் முயற்சித்தன. அதன் விளைவாக உருவாக்கப்பட்ட மனிதாபிமானக் கட்டமைப்புத்தான் சுனாமிக்கு பின்னரான பொதுக் கட்டமைப்பாகும். அந்தக் கட்டமைப்பு வெற்றிகரமாக இயங்கி இருந்திருந்தால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு பரிசோதனைக் கட்டமைப்பாக அது அமைந்திருக்கக்கூடும். ஒரு மனிதாபிமானச் சூழலை அவ்வாறு அரசியல் உள்நோக்கத்தோடு பயன்படுத்த மேற்கு நாடுகள் முயற்சித்தன. முதற்கட்டமாக அதில் வெற்றியும் அடைந்தன. அரசாங்கமும் விடுதலைப்புலிகள் இயக்கமும் சுனாமி பொதுக் கட்டமைப்புக்கு இணங்கின.

ஆனால் அந்த மனிதாபிமானச் சூழலுக்குள் இனவாத அலையைத் தூண்டியா ஜேவிபி அதைத் தோற்கடித்தது. சுனாமிக்குப் பின்னரான ஒரு மனிதாபிமானச் சூழலை இனவாதத்தின் மூலம் தோற்கடித்த அதே இயக்கத்தை அடித்தளமாகக் கொண்ட இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, புயலுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழலை தன்னைப் பலப்படுத்துவதற்கும் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதற்கும் கெட்டித்தனமாகப் பயன்படுத்துகின்றது. ஆனால் இந்த அசாதாரண மனிதாபிமானச் சூழலை அரசாங்கம் இனவாதத்துக்கு எதிராக கட்டமைக்கவில்லை. அவ்வாறு கட்டமைக்கும் என்று நம்பத்தக்கதாக தேசிய மக்கள் சக்தியின் கடந்த ஓராண்டு காலம் அமையவில்லை.

https://www.nillanthan.com/8034/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.