Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது

01 Mar, 2026 | 07:39 AM

image

ஆயத்துல்லா அலி காமேனி உயிரிழந்துள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்கா– இஸ்ரேல் இணைந்து நடத்திய மிகப்பெரிய தாக்குதலுக்கு பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்த இராணுவ நடவடிக்கை வாரம் முழுவதும் கடும் குண்டுவீச்சுகளுடன் தொடரும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த நடவடிக்கை தெஹ்ரான் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட நிலையில், ஈரானில் 40 நாட்கள் பொது துக்கம் அனுஷ்டிக்கப்படுவதுடன் 7 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்களில் ஒன்றாக தெற்கு ஈரான் பகுதியில் உள்ள ஒரு ஆரம்பப் பாடசாலை குறிவைக்கப்பட்டதாகவும், அதில் பல மாணவர்கள் உயிரிழந்ததாகவும் ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக, ஈரான் அமெரிக்க இராணுவத் தளங்கள், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பல்வேறு இலக்குகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் நெரிசலான நகரப்பகுதிகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியதுடன், விமானப் போக்குவரத்து மற்றும் எண்ணெய் கப்பல் அனுப்புகைகளிலும் கடுமையான இடையூறுகளை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, அமெரிக்க இராணுவம் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, இதுவரை எந்த அமெரிக்க இராணுவ வீரர்களும் போர்சார்ந்த உயிரிழப்புக்கு உள்ளாகவில்லை என கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் இந்த தாக்குதல்களை “மத்திய கிழக்கின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம்” என விவரித்ததுடன், உலகத் தலைவர்கள் பிராந்தியத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்யத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

மத்திய கிழக்கு முழுவதும் பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சமூகம் தணிக்கை முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'இரான் அதிஉயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்டார்' - உறுதிப்படுத்திய அரசு ஊடகம்

காமனெயி கொல்லப்பட்டார், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இரானின் அதிஉயர் அயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதாக இரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

1 மார்ச் 2026, 01:08 GMT

புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)

இரானின் அதிஉயர் அயதுல்லா அலி காமனெயி இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து தற்போது அயதுல்லா அலி காமனெயி மரணத்தை இரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

காமனெயி மரணத்திற்கு இரான் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என, அரசு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் கண்ணீருடன் தெரிவித்தார்.

இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையுடன், இரானில் உள்ள பல அரசு ஊடகங்கள் அயதுல்லா காமனெயி மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளன.

அதன் அறிக்கையில் 86 வயது அயதுல்லா எப்படி இறந்தார் என்பது குறித்தோ அல்லது அடுத்த தலைவர் யார் என்பது குறித்த தகவல்களோ இல்லை.

தற்போது இரானின் அரசு தொலைக்காட்சி சேனலான IRINN, காமனெயி புகைப்படங்களுடன் பின்னணியில் குரான் ஓதப்படுகிறது.

முன்னதாக, அத்தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் காமனெயி மரணத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை குற்றம் சாட்டிய இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரபூர்வ அறிக்கையை வாசித்தார். காமனெயியின் "தியாகம்" "அடக்குமுறையாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு எழுச்சியின்" தொடக்கமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சனிக்கிழமை, அமெரிக்காவும் இஸ்ரேலும் பல இரானிய நகரங்களைத் தாக்கின, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அமெரிக்க அதிபர் தன்னுடைய ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில் காமனெயி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அலி காமனெயி மரணம் குறித்த செய்தி தவறானது என்றும், அது அமெரிக்க உளவியல் போரின் விளைவு என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக, இரானின் செய்தி நிறுவனமான ஃபார்ஸ் கூறுகிறது.

புரட்சிகர காவல்படைக்கு நெருக்கமானதாகக் கருதப்படும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், டிரம்பின் தகவலை மறுத்து, "டிரம்ப் தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட செய்திகளைப் பரப்புவதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளார். இதுபோன்ற நடத்தைக்கான முந்தைய எடுத்துக்காட்டுகளில் ஒன்று, மஷாத் நகரத்தின் வீழ்ச்சி குறித்த அவரது கூற்று ஆகும், இது பின்னர் ஆதாரமற்றது மற்றும் வெறும் பரபரப்பான ஊடக பிரசாரம் என்று நிரூபிக்கப்பட்டது." என தெரிவித்துள்ளது.

"வரலாற்றில் மிக மோசமான மனிதர்களில் ஒருவரான காமனெயி இப்போது இறந்துவிட்டார்" என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் கூறியது என்ன?

காமனெயி கொல்லப்பட்டார், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,காமனெயி மரணம் இரான் மக்களுக்கு நீதி என்று டிரம்ப் கூறியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான காமனெயி இப்போது இறந்துவிட்டார். இது இரான் மக்களுக்கு மட்டுமல்ல, காமனெயி மற்றும் அவரது ரத்தவெறி பிடித்த கும்பலால் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் சிறந்த அமெரிக்கர்கள் மற்றும் மக்களுக்குமான நீதி." என பதிவிட்டுள்ளார்.

"அவரால் எங்கள் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிலிருந்து தப்ப முடியவில்லை, மேலும் இஸ்ரேலுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், அவரோ அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ எதுவும் செய்ய முடியாது."

"இரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கு இதுவரை கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. அவர்களது ஐ.ஆர்.ஜி.சி (புரட்சிகர காவல் படை), ராணுவ அதிகாரிகள் மற்றும் பிற பாதுகாப்பு மற்றும் காவல்துறையினர் பலரும் இனி சண்டையிட விரும்பவில்லை என்றும், எங்களிடம் பாதுகாப்பு கேட்கிறார்கள் என்றும் நாங்கள் கேள்விப்படுகிறோம். நேற்று இரவு நான் சொன்னது போல், 'அவர்களுக்கு இப்போது பாதுகாப்பு கிடைக்கலாம், ஆனால் பின்னர் அவர்களுக்கு மரணம் மட்டுமே கிடைக்கும்.'"

"ஐ.ஆர்.ஜி.சி மற்றும் காவல்துறை இரானின் தேசபக்தர்களுடன் அமைதியாக ஒன்றிணைந்து, ஒரு பிரிவாக, நாட்டை அதற்கு தகுதியான மகத்துவத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன். இந்த செயல்முறை விரைவில் தொடங்க வேண்டும், ஏனென்றால் காமனெயி இறந்தது மட்டுமல்லாமல், நாடு பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட ஒரே நாளில் அழிக்கப்பட்டுள்ளது."

"இருப்பினும், மத்திய கிழக்கு மற்றும் உண்மையில் உலகம் முழுவதும் அமைதிக்கான நமது இலக்கை அடைய, வாரம் முழுவதும் அல்லது தேவைப்படும் வரை கடுமையான மற்றும் துல்லியமான குண்டுவெடிப்பு தொடரும்."

இதற்கிடையில், காமனெயி மரணம் குறித்த கூற்றுகளைத் தொடர்ந்து, இரானிய நகரமான கராஜில் கொண்டாட்டங்கள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பகிரப்பட்டு பிபிசி பாரசீக மொழி சேவையால் சரிபார்க்கப்பட்ட ஒரு காணொளியில், இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி மரணம் குறித்த செய்திகளுக்குப் பிறகு, கராஜில் சில இரானியர்கள் கொண்டாடுவதைக் காண முடிகிறது. இருப்பினும், டொனால்ட் டிரம்ப் பதிவிடுவதற்கு முன்பே இது நிகழ்ந்தது.

காமனெயி கொல்லப்பட்டார், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,Reuters

'இரானிய அதிகாரிகள் 40 பேர் உயிரிழப்பு'

பிபிசி கூட்டு ஊடக நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் பேசிய உளவு மற்றும் ராணுவ வட்டாரங்கள், தாக்குதல்களில் இரானிய அதிகாரிகள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளன.

இந்த அதிகாரிகள் ஒரே இடத்தில் இருந்தார்களா அல்லது பல்வேறு இடங்களில் இருந்தார்களா என்பது தெரியவில்லை.

இறந்தவர்களுள் இரானின் அதிஉயர் தலைவர் காமனெயி, இஸ்லாமிய புரட்சிகர காவல் படை மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரும் அடங்குவர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

'இரான் அதிஉயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்டார்' - உறுதிப்படுத்திய அரசு ஊடகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார் - நெதன்யாகு

Mar 1, 2026 - 12:58 AM

சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார் - நெதன்யாகு

ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் தெஹ்ரான் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து வௌியிட்டுள்ளார்.

இந்த சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார் என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.

எனினும், அவர் எதனைக் குறிப்பிடுகிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இன்றைய தினம் உயர்மட்டத் தலைவரிடமிருந்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தேவையான காலம் வரை தொடரும் என்று குறிப்பிட்ட இஸ்ரேலியப் பிரதமர், இஸ்ரேலின் முன்னணி கட்டளைப்பிரிவு வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இஸ்ரேலிய குடிமக்களைக் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரான் மக்களுக்கு உரையாற்றிய நெதன்யாகு, இந்தத் தாக்குதல்கள் அவர்கள் தாம் அனுபவித்து வரும் கொடுங்கோன்மையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள உதவும் என்று கூறினார்.

ஈரான் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அவர்களுக்கு ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பாக இது அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பெருந்திரளாகத் வீதிகளில் இறங்கி இந்தப் பணியை முடித்துவிடுங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் நீங்கள் ஒன்றிணைவதற்கு இதுவே சரியான நேரம் என்றும், ஒரு வரலாற்றுப் பணிக்காக ஒன்றுபடுங்கள் என்றும் அவர் தமது உரையில் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தலைவர் உயிருடன் இருப்பதாக ஈரான் வௌிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார் - நெதன்யாகு

ஈரான் அதி உயர் தலைவரின் மகள், மருமகன் கொலை!

Mar 1, 2026 - 06:24 AM

ஈரான்  அதி உயர்  தலைவரின் மகள், மருமகன் கொலை!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, ஈரானில் நடத்திய தாக்குதலில் ஈரானின் அதி உச்ச தலைவரின் மகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் ஊடகம் ஒன்று இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த தாக்குதலில் ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போரில் காமேனியும் கொல்லப்பட்டதாக ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் உரிமை கோரியதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஈரானிய அதிகாரிகள் இத்தகைய தகவல்களை உளவியல் போர் எனக் கூறி மறுப்பு வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதி உயர் தலைவரின் மகள், மருமகன் கொலை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த அயதுல்லா அலி கமேனி?

Mar 1, 2026 - 07:50 AM

யார் இந்த அயதுல்லா அலி கமேனி?

1939 ஆம் ஆண்டு வடகிழக்கு நகரமான மஷ்ஹாத்தில் ஒரு மத அறிஞரின் மகனாக அலி கமேனி பிறந்தார்.

1962 இல் ஷா மொஹமட் ரேசா பஹ்லவிக்கு எதிராக அயதுல்லா கொமேனியின் மத எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்தார்.

1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, அலி கமேனி துணை பாதுகாப்பு அமைச்சரானார் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையை ஒழுங்கமைக்க உதவினார்.

1989 ஜூன் மாதம் கொமேனியின் மறைவுக்குப் பிறகு, நிபுணர்கள் பேரவை அலி கமேனியை புதிய அதி உயர் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.

அரசியலமைப்பு விதிகளின்படி ஷியா மத குருமார்களிடையே தேவையான தகுதியான 'மர்ஜா-ஏ தக்லித்' அல்லது 'கிராண்ட் அயதுல்லா' நிலையை அவர் அடைந்திருக்கவில்லை என்றாலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தச் சூழலைச் சரிசெய்யும் வகையில், அதி உயர் தலைவர் இஸ்லாமிய புலமையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு திருத்தப்பட்டது.

இதன் மூலம் அலி கமேனி அயதுல்லாவாக மாறவும், அதி உயர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டது.

அவர் ஈரானின் அரசியல் மற்றும் அதன் ஆயுதப்படைகளின் மீது ஒரு வலுவான பிடியைப் பேணி வந்தார்.

மேலும் ஆளும் முறைக்கு எதிரான சவால்களை சில நேரங்களில் வன்முறை மூலம் கடுமையாக ஒடுக்கினார்.

அயதுல்லா கமேனி, அமெரிக்காவுடனான தற்போதைய மோதல் உட்பட வெளிவிவகாரங்களில் தொடர்ந்து கடும்போக்கு நிலைப்பாடுகளை கையாண்டார்.

அவர் மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்காவுடனான உறவுகள் குறித்து சந்தேகம் கொண்டவராகவே இருந்தார்.

மேலும் இஸ்ரேல் அரசு அழிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்திருந்தார்.

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என பகிரங்கமாக அறிவித்தார்.

இறுதியில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு இராணுவ நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டார்.

ஆறு குழந்தைகளைக் கொண்ட கமேனியின் ஆட்சியின் போது, ஈரானில் ஏழு ஜனாதிபதிகள் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யார் இந்த அயதுல்லா அலி கமேனி?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.