Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 டிசம்பர், 1987 அதிகாலை.... எம்.ஜி.ஆர். வீட்டில் நடந்தது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

24 டிசம்பர், 1987 அதிகாலை....

எம்.ஜி.ஆர். வீட்டில் நடந்தது என்ன?

'எம்.ஜி.ஆர்..!' -இந்த மூன்றெழுத்தில் தமிழகம் தன் மூச்சையே வைத்திருந்த காலம் உண்டு! மறைந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அந்தத் தங்க மகனின் நினைவும் புகழும் தமிழகத்தில் துளியும் மங்கவில்லை! அவர் பேரைச் சொன்னால், 'மவராசன்' என்று கையெடுத்து வான் நோக்கிக் கும்பிடும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள்.

பூவாக, பொன்னாக அவரை நெஞ்சில் சுமப்பவர்கள், டிசம்பர் 24-ம் தேதியன்று அவரது 20-வது வருட நினைவு நாளுக்கு அரசாங்கமும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் என்ன மரியாதை செய்யப் போகிறார்கள் என்று காத்திருக்க...

''இத்தனை நாளும் இதயத்தில் பூட்டியிருந்த குமுறல்களை இனியும் உள்ளே

வைத்திருக்க முடியாது!'' என்றபடி நம்முடன் பேச வந்தார் எம்.சி.சுகுமார்.

எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகனான சுகுமார், சிறுவயது தொட்டே எம்.ஜி.ஆருக்குச் செல்லம்.

''கடைசிக் காலத்தில் என் சித்தப்பா நிறைய கஷ்டங்களை அனுபவித்தார். அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் அவரை சுதந்திரமாக இயங்கவிடாமல் செய்தார்கள். மாநிலத்துக்கே முதல்வராக, மக்களுக்குத் தெய்வமாக இருந்த அதேசமயம் ராமாவரம் தோட்ட இல்லத்தினுள் அவர் ஒரு அடிமை போல நடத்தப்பட்டார்!'' என்று சொல்லி அதிரவைக்கிறார் எம்.சி.சுகுமார்.

எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களின் தொகுப்பை குறிப்புகளாகச் சேகரித்துக் கொண்டிருக்கும் இவர், விரைவில் அதனை வைத்து ஒரு புத்தகம் எழுதவும் தீர்மானித்திருக்கிறார். அந்தப் புத்தகத்தில் எம்.ஜி.ஆரின் கடைசிக் காலத்தை 'அது அவரின் இருண்ட காலம்' என்றே வர்ணிக்கத் தயாராகிறார்!

சென்னை அண்ணாநகரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் சுகுமாரைச் சந்தித்தோம்-

''1984-ம் ஆண்டு மே மாதம்... 4-ம் தேதி... சித்தப்பா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 'அவர் உடம்புக்கு என்ன?' என்கிற விஷயம், அவருடைய ரத்த சொந்தமான எனக்கோ என் சகோதர - சகோதரிகளுக்கோ ராமாவரம் தோட்டத் திலிருந்து தெரிவிக்கப்படவில்லை. 'அவருக்கு நரம்புத் தளர்ச்சி' என்று மட்டும் மேம்போக்காகச் சொன்னார்கள். அதன்பிறகு, சித்தப்பா நல்லபடியாக இல்லம் திரும்பினார்.

மீண்டும் செப்டம்பர் மாதத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாகச் சொன்னார்கள். அம்மாதம் 20-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரையில் அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். பிரபலமான அரசியல் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு மருத்துவ சிகிச்சையளித்த டாக்டர் மணி என்பவர்தான் சித்தப்பாவை பரிசோதித்து விட்டு, அவருக்கு 'சிறுநீரகக் கோளாறு இருப்பதாக' முதலில் சொன்னார்.

செப்டம்பர் முப்பதாம் தேதியன்று அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி... சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்தது. முதல்வர் என்ற முறையில் அந்த அரசு விழாவில் கலந்துகொள்ள சித்தப்பா கிளம்பிக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவரைச் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது அடையாளமான அந்தத் துள்ளல் மறைந்து, உடல் சோர்ந்து போயிருந்தார். தன் உடல்நிலை குறித்து எப்போதுமே பலவீனமான இமேஜ் வராதபடி கவனமாக இருக்கும் அவரே, என்னிடம் கவலையோடு பேசினார்.

நான் டாக்டரிடம் பேசினேன். அப்போ 'சித்தப்பாவுக்கு (எம்.ஜி.ஆருக்கு) சிறுநீரகத்தைக் கட்டாயம் மாற்றியாக வேண்டும்' என்று டாக்டர் என்னிடம் சொன்னார். அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த எங்கள் குடும்பம், கடும் பிரார்த்தனையில் ஈடுபட்டது. அடிக்கடி சித்தப்பாவை நாங்கள் அவருடைய வீட்டுக்குப் போய்ப் பார்த்து, உடல்நலம் விசாரித்து வந்தோம். அப்போது எங்களுக்கு அங்கிருந்தவர் களால் ஏற்பட்ட கெடுபிடிகளும், அவமானங்களும் இன்றைக்கு நினைத்தாலும் வேதனையாகத்தான் இருக்கிறது...'' என்று சொல்லி நிறுத்தியவர்... தன் சகோதரி லீலாவதி சித்தப்பாவுக்கு சிறுநீரகத் தானம் கொடுத்தபோது அனுபவித்த கஷ்டங்களை விவரித்தார்-

''சித்தப்பா உடல்நிலை ரொம்பவே பாதிக்கப்பட்டு, அமெரிக்க மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 'சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கட்டாயம் செய்தாக வேண்டும்' என்று சொன்னார்கள்.

இங்கிருக்கும் மருத்துவர்கள் சிலர் அமெரிக்காவில் இருந்த மருத்துவர்களோடு பேசியதில், 'ரத்த சொந்தம் உள்ள ஒருவரிடமிருந்துதான் சிறுநீரகம் பெற வேண்டும். அப்போதுதான் அவரது உடம்பில் இணைந்து அது செயல்பட ஆரம்பிக்கும்' என்று சொன் னார்கள். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே, நாடே போற்ற வாழ்ந்து கொண்டிருந்த எங்கள் சித்தப்பாவுக்கு சிறுநீரகத் தானம் கொடுக்கத் தயாராக நின்றோம். பல்வேறு டெஸ்ட்களின் அடிப் படையில், 'சகோதரி லீலாவதியின் சிறுநீரகம் தான் சித்தப்பாவுக்குப் பொருந்தும்' என முடி வானது.

அதற்காக என் சகோதரி லீலாவதி எந்த நிமிடமும் அமெரிக்காவுக்குக் கிளம்பத் தயா ராக இருந்தார். ஆனால், அவரைப் பலமுறை அலைக்கழித்தே அமெரிக்காவுக்குக் கூட்டிச் சென்றார்கள்.

அங்கு சித்தப்பா அவ்வளவாக நினைவு இல்லாத நிலையில் இருந்தார். அந்தச் சூழ்நிலையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வெற்றிகரமாக அது இயங்கத் தொடங்கியது. சித்தப்பா படிப்படியாக முழு நினைவுக்குத் திரும்பினார். அந்தச் சூழ்நிலையில்கூட 'என் சகோதரிதான் அவருக்கு சிறுநீரகத் தானம் வழங்கினார்' என்பதை சித்தப்பாவிடம் சொல் லாமலேயே மறைத்துவிட்டார்கள்.

என் சகோதரியும் அமெரிக்காவிலிருந்து தமிழகம் திரும்பிவிட்டார்.

உடல்நிலை நன்கு தேறி, சித்தப்பாவும் சென்னைக்கு வந்தார். சென்னையில் அவருக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள்கூடி, உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போதுகூட லீலாவதியைக் கிட்டே அனுமதிக்கவில்லை அவர்கள்.

பிற்பாடு, சித்தப்பாவை வாழ்த்தி அண்ணா பத்திரிகையில் 'வார்த்தை சித்தர்' வலம்புரிஜான் ஒரு கவிதை எழுதி இருந்தார். அதில், சகோதரி லீலாவதியின் பெருந்தன்மையையும் புகழ்ந்து குறிப்பிட்டிருந்தார். அதைப் பார்த்துத் திகைத்துப்போன என் சித்தப்பா எம்.ஜி.ஆர், தன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சீனியரான பண்ருட்டி ராமச்சந்திரனை அழைத்து விசாரித்திருக்கிறார். அவரும், 'ஆமாம், லீலாவதிதான் உங்களுக்கு சிறுநீரகம் தந்தார்' என்று சொல்லி, சித்தப்பா அமெரிக்காவில் இருந்தபோது தமிழகத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும் விளக்கியிருக்கிறார். உடனே என் சகோதரியை அழைத்து, நெகிழ்ச்சியோடு தன் நன்றியைப் பகிர்ந்துகொண்டார் சித்தப்பா.

''அதற்கு முன்பு சித்தப்பா சென்னை மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு ரத்தம் தேவை என்றார்கள். நான் பதறியடித்துக்கொண்டு ரத்தம் கொடுக்க ஓடினேன். அப்போது என்னை ரத்தம் கொடுக்கும் இடத்துக்கு அழைத்துப்போன சித்தப்பாவின் மருத்துவர், தேவையே இல்லாமல் என்னை அந்த ஐந்து மாடி கட்டடத்துக்கு மேலும் கீழுமாகக் அலைக்கழித்தார். இறுதியில் ரத்தம் கொடுப்பதற்கு முன்பாக ரத்த அழுத்த சோதனை நடத்தி, 'உங்களுக்கு பிரஷர் இருக்கிறது' என்று சொல்லி, என்னைத் திருப்பி அனுப்பினார்கள். அதன்பிறகும் 'எனக்கு ரத்த அழுத்தம் இல்லை' என்று நிரூபித்து, ரத்தம் கொடுத்தேன். ஆனால், 'அந்த ரத்தம் மேட்ச் ஆகவில்லை' என்று சொல்லி, மூன்று தடவைகளுக்கு மேல் திரும்பத் திரும்ப என்னிடம் ரத்தம் வாங்கினார்கள். இதேபோலவே என் குடும்பத்தினரிடமும் ரத்தம் வாங்கினார்கள். அதாவது, 'சித்தப்பாவுக்கு ஆபத்தான காலகட்டத்தில் ரத்தம் கொடுத்தவர்கள் நாங்கள்தான்' என்று தெரியவந்தால், அவர் எங்கள் மீதான பாசத்தை அதிகப்படுத்திவிடக் கூடாது என்ற எண்ணத்திலேயே எங்களை அலைக்கழித்தார்கள் என்பது பிற்பாடுதான் எங்களுக்குத் தெரியவந்தது'' என்று வேதனையோடு நிறுத்திய எம்.சி.சுகுமார்,

''கடைசிக் காலத்தில் தன் தம்பிக்கு நேர்ந்த சோதனைகளை அறிந்த என் அப்பா சக்கரபாணி துடித்த துடிப்பு, இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. 'நான் நெருப்பு வளையத்துக்குள் இருக்கிறேன்...' என்று சித்தப்பா, என் அப்பாவிடம் சொல்லி வருந்தியிருக்கிறார்...'' என்று சொல்லும்போதே கண் கலங்குகிறார்.

''சித்தப்பாவுக்கு என் அப்பாதான் கவலைகளைப் பகிர்ந்துகொள்ளும் சுமைதாங்கியாக இருந்திருக்கிறார். என் அப்பாவை ஆலோசித்தே முக்கிய முடிவுகளை எடுத்தார். 'சொத்து விஷயத்திலும் அப்படி நடந்துவிடக் கூடாது' என்று என் சித்தி ஜானகி அம்மாளை வழிநடத்திய சிலர் நினைத்திருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் குடும்பத்தை சித்தப்பாவிடம் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்.

அப்போலோ மருத்துவமனையில் சித்தப்பா இருந்தபோது, உடல்நலம் விசாரிப்பதற்காக என் அப்பா அங்கே சென்றார். அப்போது அவரைக் கட்டிக்கொண்ட சித்தப்பா, தான் எப்படி ஒரு இக்கட்டான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை வருத்தமான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார். 'என்னை சுற்றி நானே ஒரு வளையம் போட்டு வாழ்ந்து கொண்டிருந்தேன். அந்த வளையத்துக்குள் யார் வரவேண்டும், வரக்கூடாது என்பதையெல்லாம்கூட வரையறுத்து வைத்திருந்தேன். ஆனால், அந்த வளையமே இன்றைக்கு என்னை நெருக்கி இழுக்கிறது' என்று சொல்லி இருக்கிறார்!

அப்படியென்றால், அதற்கு அர்த்தம் என்ன? 'யாரை நம்பி நான் வளையத்துக்குள் வாழ்ந்து வந்தேனோ, அவர்களே என்னை நிம்மதியாக வாழவிடவில்லை' என்பதுதானே'' என்றவர்,

''என் சித்தப்பாவின் மறைவு தினத்தன்று ராமாவரம் தோட்டத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி விதம்விதமான பேச்சுக்கள் இருக்கின்றன. அன்றைக்கு அங்கே நடந்த அந்தக் கொடுமையான விஷயங்களை நாடு இப்போதாவது தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்...'' என்று சொல்லி, பெருமூச்சோடு பேச ஆரம்பித்தார்-

''டிசம்பர் 24, 1987... அதிகாலை... 'சித்தப்பா இறந்துவிட்டார்' என்று எங்களுக்குத் தகவல் வந்தது. குடும்பத்தோடு நாங்களெல்லாம் உடனே புறப் பட்டு ராமாவரம் தோட்டத்துக்கு ஓடினோம். சித்தப்பாவின் படுக்கையறை இருந்த இரண்டாவது தளத்தில் அவருடைய உடல் இருப்பதாகத் தகவல் சொன்னார்கள். இரண்டாவது தளத்துக்குப் போக முயன்றோம். எங்களைத் தடுத்து, கீழ்த்தளத்திலேயே இருக்க வைத்துவிட்டார்கள். இறப்புச் செய்தி கேள்விப்பட்டு திமுதிமுவென கூட்டம் கூடிவிட்டது. கதறல் குரல்கள் ராமாவரம் தோட்டம் முழுவதும் நிரம்பியிருக்க, அதிகாலை மூன்று மணியளவில் அ.தி.மு.க-வின் தற்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா அங்கே வந்துவிட்டார். அடுத்த சிறிது நேரத்தில், தன் நாற்பதாண்டு கால உயிர்நண்பரின் முகத்தை கடைசியாக ஒருதடவை பார்க்கக் கலைஞரும் வந்து சேர்ந்தார். அவர்களையும் சித்தப்பாவின் உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை. உடல் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக 'எம்பாம்' வேலைகள் நடப்பதாகச் சொல்லி, யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை!

நிலைமையை ரசாபாசம் ஆக்க வேண்டாம் என்று எண்ணி கலைஞர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனால், ஜெயலலிதா விடாப்பிடியாகப் போராடிக் கொண்டிருந்தார். திரைமறைவு வேலை உள்ளே நடக்கிறது என்பதை மட்டும் எங்களாலும் ஜெயலலிதாவாலும் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால், தடுப்புகளையெல்லாம் மீறி இரண்டாவது தளத்துக்குச் செல்ல மாடிப்படி அருகே நின்றுகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அதிகாலை ஆரம்பித்த இந்தப் போராட்டம் பொழுது விடிந்த பிறகும் நடந்துகொண்டே இருக்க, தோட்டத்தின் பின்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வண்டியில் சித்தப்பாவின் உடலை ஏற்றி, அவசரஅவசரமாக ராஜாஜி ஹாலுக்குக் கொண்டுசென்று விட்டார்கள்.

தேசம் போற்ற வாழ்ந்த அந்த மாமனிதரின் உடலை ஏதோ 'கடத்தல் சரக்கு' போல அங்கிருந்தவர்கள் கையாண்டதற்கு இதோ இந்த போட் டோவே ஆதாரம் (அந்தப் படம்... அட்டையிலும்...).

ராமாவரம் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த லிஃப்ட் மூலம், இறந்துபோன சித்தப்பாவின் உடலை ஸ்ட்ரெச்சர் பலகையில் இறுக்க மாகக் கட்டி, நிற்கிற வாட்டில் வைத்து, அடித்துப் பிடித்துக் கீழே இறக்கி விட்டார்கள்! இதற்காக சித்தப்பாவின் உடலை மாடியில் வைத்து- அவரது கால், கைகளைக் கயிற்றால் கட்டி இருக்கிறார்கள். கோடிக்கணக்கான உள்ளங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து, என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் பொன்மனச் செம்மலின் உடலை சித்ரவதை செய்வதுபோல கட்டி, வெளியே அவசரஅவசரமாக எடுத்துச் செல்லவேண்டியதன் அவசியம் என்ன?

இத்தனைக்கும் சித்தப்பாவின் உடல் ராஜாஜி ஹாலுக்குக் கொண்டுசெல்லப்படும் வரையில், அவர் உடலைப் பொதுமக்கள் பார்வைக்காக அங்கே வைப்பதற்குரிய எந்த முன்னேற்பாடுகளையுமே செய்யவில்லை! காரணம், அங்கிருந்தவர்களின் கவனமெல்லாம் வேறு ஏதோ விஷயங்களில்தான் இருந்திருக்கிறது!

அதுமட்டுமல்ல, அவரது உடல் ராஜாஜி ஹாலுக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு, 24-ம் தேதி முழுவதும் ஜானகியம்மாள், சித்தப்பாவின் உடல் அருகில் போகாமலேயே இருந்தார்.

25-ம் தேதி உடல் அடக்கம் செய்யப் பட்டபோதுதான் அவர், சித்தப்பாவின் உடல் அருகே வந்தார். அதுமட்டுமல்ல, அவசர மாக ராமாவரம் தோட்டத்தில் இருந்து சித்தப்பாவின் உடலை ராஜாஜி ஹாலுக்கு அனுப்பிவைத்த பிறகு, வீட்டில் இருந்த ஜானகி அம்மாள் 'வழக்கறிஞரும் அங்கே போய்விட்டாரா?' என்று திரும்பத்திரும்பக் கேட்டிருக்கிறார். இதை அருகில் இருந்த என் அம்மா மீனாட்சி கவனித்திருக்கிறார். அப்படியென்றால், சித்தப்பா இறந்ததும் வழக்கறிஞரை வைத்து ஜானகி அம்மாளின் ஆலோசகர்களாக இருந்த சிலர் அவசரமாக ஏதோ செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்று தோன்றுகிறதே..! அது என்ன?

சித்தி ஜானகி அம்மாளும் இன்று மறைந்து போய்விட்டார். அவருடைய புகழுக்குக் களங்கம் உண்டாவதுபோல் பேசுவது என் நோக்கமல்ல... அவரை இயக்கியவர்கள் மீதுதான் என் கோபமெல்லாம்!

'சித்தப்பா இறந்துபோவதற்கு முதல்நாள் அவரிடம், ஜானகி அம்மாள் மிகக் கடுமையாக வாக்குவாதம் செய்தார்' என்றும் என்னிடம் தகவல் இருக்கிறது.

சித்தப்பா இறந்தது மாரடைப்பால் என்று சொல்லப்பட்டது. அவருக்கு 69-வது வயது வரையில் இதயநோய் இல்லவே இல்லை. திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகச் சொல்வது எப்படி என்றுதான் எனக்குப் புரியவில்லை!'' என்று சொல்லிச் சற்று நிறுத்தியவர், சிறு யோசனைக்குப் பின், ''கடைசிக் காலகட்டங்களில் சித்தப்பா பல நேரங்கள் சிந்தனை தப்பி இருந்ததாகவும், சில ஏற்பாடுகளுக்கு அவர் ஒத்துழைக்க மறுத்த கோபத்தில் அப்போது அவரை எத்தகைய பாராமுகத்தோடு நடத்தினார்கள் என்பதையும் அவருக்குப் பாதுகாப்பாக இருந்த போலீஸார் சொல்லக் கேட்டுக் கண்ணீர் வடித்திருக்கிறேன்!'' என்று சோகமான

எம்.சி.சுகுமார், மேலும் பகிர்ந்து கொண்டவை...

- அடுத்த இதழில்...

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.