Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊடகப் பணியும் ஊடகப் பயங்கரவாதமும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகப் பணியும் ஊடகப் பயங்கரவாதமும்?

-சண். தவராஜா-

ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரி ஒருவரைச் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு ஒன்று அண்மையில் கிட்டியது. கதைக்கும் போது கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யா பற்றியும் அங்கு தற்போது இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பிலான சர்வதேச சமூகத்தின் அக்கறை பற்றியும் விவாதித்தோம்.

'மூன்று தசாப்த காலமாக தமிழர் தாயகத்தில் நடக்கும் யுத்தம், அதில் சுமார் ஒரு இலட்சம் வரையான மக்கள் கொல்லப்பட்டமை, தமிழ் இனத்தின் மொத்தச் சனத்தொகையில் மூன்றிலொரு வீதத்தினர் அகதிகளாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருப்பது, இந்நிலையில், ஈழத்தமிழர் விவகாரத்தில் காட்டாத கரிசனையை சர்வதேச சமூகம் கென்யா விவகாரத்தில் காட்டுகின்றது. அங்கு இதுவரை சுமார் 700 வரையான பொதுமக்களே கொல்லப்பட்டிருக்கின்றனர். தமிழர்களோடு ஒப்பிடும்போது அது 100 மடங்கு குறைவானது. ஐ.நா. சவையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அன்னான் சென்று தலையிடும் அளவிற்கு சர்வதேச சமூகத்தின் கவனம் அங்கு குவிக்கப்பட்டிருக்கின்றது. அது ஏன்?" என்று கேட்டோம்.

சலிப்புடன் கூடிய குரலில் அவருடைய பதில் ஒரு வரியில் அமைந்திருந்தது. 'அது ஊடகங்களின் மிகைப்படுத்தல்."

இப் பதில் சுட்டி நிற்கும் கசப்பான யதார்த்தம் யாது? யதார்த்தபூர்வமாகப் பார்க்கையில் உலகில் நடக்கும் விடயங்கள் இவ்வாறுதான் இருக்க வேண்டும், இவ்வாறுதான் அணுகப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி ஊடகங்களிடையே இருப்பது போல் தெரிகின்றது.

தொடர்பாடல் யுகம் எனக் கருதப்படும் இன்றைய உலகில் சாதாரண தினசரிப் பத்திரிகை முதல் வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் வரையான பல்லாயிரக் கணக்கான ஊடகங்கள் பல்வேறு மொழிகளில் இயங்கி வருகின்றன. அவற்றுள் எத்தகைய ஊடகங்களால் ஈழப் பிரச்சினை போன்ற ஒரு பாரதூரமான பிரச்சினையை மூடிமறைக்கவும், கென்யா போன்ற ஒரு சாதாரண பிரச்சினையை பூதாகாரமாக்கவும் முடிகின்றது. இந்தக் கேள்விக்கான விடை நிச்சயம் ஆய்ந்து அறியப்பட வேண்டிய ஒன்று.

ஏனெனில், ஈழத்தமிழர் போன்று தமது அடிப்படை உரிமைக்காக, உயிர் வாழுதலுக்காக உயிரைப் பணயம் வைத்து போராட்டம் நடாத்துகின்ற எத்தனையோ தேசங்கள் உள்ளன. அவர்கள் அனைவருமே தமது போராட்டங்களின் நியாயத்தன்மை உலகின் முன் சொல்லப்பட்டு அதற்கூடாக தமது போராட்டத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும், சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

இந்நிலையில், சர்வதேச அரங்கில் எதையும் தீர்மானிப்பது ஊடகங்கள் தான் என்றால் அவை எத்தகைய ஊடகங்கள் என அறிந்து அவற்றைக் கையாளுவதற்கான வழிமுறைகளையும் தெரிந்து கொண்டாலேயே தமது போராட்டத்தை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல அவர்களால் முடியும்.

இந்த இடத்தில் அண்மையில் அமெரிக்க ஊடக நிறுவனங்கள் செய்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாய் இருக்கும். ஈராக்கில் யுத்தத்தை மேற்கொள்வதை நியாயப்;படுத்த புஷ் நிர்வாகம் எவ்வாறு பொய்களை அடுக்கியது. இதில் ஊடகங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதே ஆய்வுப் பொருளாக இருந்தது.

ஆய்வு அறிக்கையின் பிரகாரம் 2001 செப்ரெம்பர் 11 இல் அமெரிக்காவில் இடம்பெற்ற தாக்குதல் நாள் முதல் 2003 மார்ச் 19 இல் ஈராக் மீது ஆக்கிரமிப்புத் தாக்குதல் தொடங்கப்பட்ட நாள் முதலாக புஷ்ஷ_ம் அவரது சகாக்களும் மிகவும் திட்டமிட்ட முறையில் 935 தடவைகள் பொய்களை, அதுவும் பச்சைப் பொய்களைக் கூறியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோர்ச் புஷ் மாத்திரம் சதாம் ஹ_சைன் பற்றியும், அங்கு நாசகார ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அல்-கைதா தொடர்பாகவும் 260 தடவைகள் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளார்.

இவருக்கு அடுத்த இடத்தில் வருபவர் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல். இவர் ஈராக் தொடர்பாக 254 தடவையும் அல்-கைதா தொடர்பாக 10 தடவையும் புழுகியுள்ளார்.

மூன்றாம், நான்காம் இடங்களை முன்னாள் பாதுகாப்புத்துறைச் செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்டும், ஊடகப் பேச்சாளர் அரி பிளைஷரும் பெறுகின்றனர். இவர்கள் இருவரும் சளைக்காமல் 109 முறைகள் சரடு விட்டுள்ளனர்.

இது தவிர உப ஜனாதிபதி டிக் செனி, தற்போதைய வெளியுறவுத்துறைச் செயலாளர் கொண்டலிசா றைஸ், புஷ்ஷின் பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆகியோரும் பொய்களை அவிழ்த்து விட்டுள்ளனர்.

இந்த அறிக்கை ஊடகங்களையும் வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்த ஊடகங்கள், புஷ் நிர்வாகத்தால் கூறப்படுபவை அப்பட்டமான பொய்கள் எனத் தெரிந்தும்கூட அவற்றுக்கு மிகவும் முக்கியத்துவம் தந்து மக்கள்முன் கொண்டு சென்றுள்ளன. அது தவிர, ஊடக தர்மத்தின் பிரகாரம் செய்தியின், தகவல்களின் நம்பகத் தன்மையைக் கேள்விக்கு உட்படுத்தவும் இல்லை. இதற்கூடாக புஷ்ஷின் நாசகார நோக்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கியதுடன் ஈராக் நாட்டின் இறைமையில் அத்துமீறித் தலையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படக் காரணமாயும் இருந்துள்ளன. இவை சர்வதேச போர்க்குற்ற விதிகளுக்கு அமைய தண்டிக்கப்படக் கூடியவையே.

ஈராக் யுத்தத்தின் போது ஊடகங்கள் அதிலும் ராய்ட்டர்ஸ், சி.என்.என், பி.பி.சி, ஏ.எப்.பி, ஏ.பி போன்ற ஊடகங்கள் செயற்பட்ட முறைமையைக் கணக்கில் எடுத்துப் பார்க்கும்போது உண்மையில் செய்திகளை, நடப்பு நிகழ்வுகளின் செல்நெறியைத் தீர்மானிக்கும் ஊடகங்கள் எவை என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது.

ஈராக் விவகாரமாகட்டும், இவ்வருட ஆரம்பத்தில் பெரிதும் கவனத்தை ஈர்த்த கென்ய விவகாரமாகட்டும், கடந்த வருடத்தின் பிற்பகுதியில் உலகில் பெரிதும் விவாதிக்கப்பட்ட மியன்மார் விவகாரமாகட்டும், இவை அனைத்துமே இந்த ஊடகங்களின் தகிடுதத்த வேலைத்திட்டத்தின் விளைவுகளே அன்றி வேறில்லை.

அமெரிக்காவின் கரோலினா மாநிலத்தில் கத்தரீனா சூறாவளியின்போது பாதிக்கப்பட்ட கறுப்பின மக்கள் பாரபட்சமாக நடாத்தப்பட்டமை பற்றியோ, அமெரிக்கா பூராகவும் அன்றாடம் பட்டினியால் வாடும் மக்கள் பற்றியோ, அமெரிக்க மக்கள் தொகையில் அதிகமாக உள்ள கறுப்பினத்தவர் ஒருவர் அங்கு ஜனாதிபதியாக வரமுடியாமை பற்றியோ, முஸ்லிம்களைக் கடத்திச் சென்று குவான்டனாமோ சிறையில் அடைத்து வைத்து சர்வதேச போர்க்குற்றத்துக்குச் சமனான குற்றங்களில் ஈடுபடுவது பற்றியோ, பூகோளம் உஷ்ணமாதல் விவகாரத்தில் இன்றுவரை ஒத்துழைக்க மறுக்கும் நாடாக அமெரிக்கா இருப்பதைப் பற்றியோ இந்த ஊடகங்கள் வாய் திறப்பதில்லை.

கியூபா என்ற சின்னஞ்சிறு நாட்டைச் சுற்றி வளைத்து முற்றுகைக்கு உட்படுத்தி அந்நாட்டு மக்கள் முன்னேறுவதற்குத் தடைவிதித்து வருவது பற்றியோ, பிடல் காஸ்ரோவைக் கொன்றுவிட 50 தடவைகளுக்கு மேல் அமெரிக்கா முயற்சி செய்தது பற்றியோ, கரிபியன் நாடான கிரனடாவில் தனது கடற்படையை அனுப்பி அங்கு பொதுமக்களுக்கு விரோதமானவர்களைப் பதவியில் அமர்த்தி வைத்திருப்பது பற்றியோ, பாலஸ்தீன மண்ணில் தினம் தினம் மனித உயிர்கள் பலியாகக் காரணமான இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிவரும் கண்மூடித்தனமான ஆதரவே காரணம் என்பது பற்றியோ, உலக நாடுகளின் நிறுவனமாகத் தோற்றம் பெற்ற ஐ.நா. சபையைத் தனது விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா ஆட்டி வைப்பது பற்றியோ இந்த ஊடகங்கள் மூச்சே விடுவதில்லை.

ஏனெனில், இத்தகைய ஊடகங்களுக்கு அல்லது அவற்றின் எசமானர்களுக்கு எனத் தனியான, வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் உள்ளன.

ஆக, இங்கே ஊடகங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்து கொள்கின்றன என்பது ஒளிவு மறைவின்றித் தெரிவாகின்றது. குற்றவியல் சட்டக் கோவையின் பிரகாரம், குற்றம் புரிபவர் மட்டுமன்றி உடந்தையாக இருப்பவரும் தண்டனைக்கு உரித்துடையவராகுதல் போன்று, உலகில் அமைதியின்மை உருவாக, பொதுமக்களின் உயிரிழப்புக்கள் அதிகரிக்க காரணமாக அமையும் ஊடகங்களும் தண்டிக்கப்பட வேண்டியவையே.

இவ்வாறு கூறுவதால், ஊடகங்கள் யாவையுமே எப்போதும் மக்கள் விரோதச் செயற்பாட்டில், மனித விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றன என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அவை ஏற்படுத்தும் பாதிப்புக்களை மாத்திரமே இதுவரை பார்த்தோம்.

ஊடகங்களுக்கு இன்னொரு பரிமாணமும் உள்ளது. ~சமூகத்தின் காவல் நாய்கள்| என வர்ணிக்கப்படும் ஊடகங்கள் ஒரு ஜனநாயக சமூகத்தில் உண்மையான சமூகப் பணியை ஆற்றி வருவதை மறுதலித்துவிட முடியாது. இது தவிர, பல ஊடகர்கள் சமூகத்துக்குத் தலைமை தாங்குபவர்களாக, ஏன் அரசுத் தலைவர்களாகக் கூட உயர்ந்துள்ளார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலும், பிற்பகுதியிலும் ஆசிய, ஆபிரிக்க, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற காலனித்துவ விடுதலைப் போராட்டங்களின் நியாயங்களை, ஆட்சியாளர்களால் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சர்வதேசத்தின், மனச்சாட்சியுள்ள மனிதர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு கணிசமானது.

மக்கள் சீனக் குடியரசின் தந்தையான மாவோ சே துங் தனது மக்களின் அபிலாஷைகளை வெளியுலகி;ற்கு எடுத்துச் சொல்ல, அமையப் போகும் அரசின் எதிர்காலச் செயற்பாடுகளை விளக்க, யப்பானிய ஆக்கிரமிப்புப் படைகளின் அட்டூழியங்களை எடுத்துச் சொல்ல வாய்ப்பு வழங்கினார் ஒரு ஊடகவியலாளர். அவர் அமெரிக்க ஊடகவியலாளரான எட்கர் ஸ்னோ.

அதே போன்று, அமெரிக்காவின் தென்கோடியில் உருவான கம்யூனிச கியூபாவை முதன்முதலாக அங்கீகரித்த நாடாக அமெரிக்கா விளங்கியதென்றால் அதற்குக் காரணமும் ஊடகவியலாளர்களே. ஊடகவியலாளர் ஹெர்பர்ட் மத்தியூஸ் உட்படப் பலருக்கு கியூப விடுதலைப் போராட்ட அமைப்பின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ வழங்கிய செவ்விகளே கியூபா தொடர்பில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்தியது என்றால் மிகையில்லை.

ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திலும் கூட, ஆரம்பத்தில் பல்வேறு விடுதலை அமைப்புக்களின் சார்பில் பல்வேறு தலைவர்கள் இருந்த போதிலும், 1985 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஊடகவியலாளர் அனிதா பிரதாப்புக்கு வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க செவ்வி போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகளின் கை ஓங்கவும், தலைவர் பிரபாகரனின் சிறப்பு ஆளுமையும் தலைமைத்துவப் பண்பும் வெளிப்படவும் காரணமாகியமை அனைவரும் அறிந்ததே.

ஊடகங்கள் யதார்த்தத்தில் கத்தியைப் போன்றவை. யார் கையில் இருக்கின்றதோ அதைப் பொறுத்தே அதன் பயன்பாடும் இருக்கப் போகின்றது. மருத்துவர் கையில் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படும் அதே கத்திதான் கொலைகாரன் கையில் கொலைக்கருவியாக மாறுகின்றது.

இந்நிலையில், ஊடகங்கள் யார் கையில் இருக்கின்றனவோ, யார் அவை மீது செல்வாக்குச் செலுத்துகின்றார்களோ அதைப் பொறுத்தே ஊடகங்களின் பெறுமானமும் இருக்கும் என்பதை ஈராக் மீதான ஆக்கிரமிப்பு யுத்தம் முதல் இன்றைய கென்ய விவகாரம் வரையான விடயங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

நன்றி: நிலவரம் வார ஏடு

http://www.tamilnaatham.com/articles/2008/...jah20080217.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.