Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம்- 3 )

Featured Replies

குண்டு வெடிக்கும் ஒவ்வொரு முறையும் தெற்கே ஜெயலலிதா தொடங்கி வடக்கே அத்வானி வரை பொடா சட்டம் திரும்ப வேண்டுமென பல்லவி பாடுவது வாடிக்கை. ஜெயலலிதா இதற்கென ரெடிமேடாக ஒரு அறிக்கை தயாராக வைத்திருக்கிறார். துக்ளக் சோவோ பொடாவை விட கடுமையான பிரிவுகள் கொண்ட அடக்குமுறைச் சட்டம் தேவையென வாதிடுகிறார்.

அன்புச் சகோதரி அவரது கூட்டணியிலிருக்கும் அன்புச் சகோதரர் புரட்சிப் புயல் வைகோவை உள்ளே தள்ளியது, நக்கீரன் கோபாலை எந்தக் காரணமுமின்றி சிறை வைத்தது, ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த குற்றத்திற்காக பழநெடுமாறன், சுப.வீரபாண்டியனை கைது செய்தது போன்றவையெல்லாம் பொடாவின் யோக்கியதைக்கு சான்று பகரும். தமிழகம் மட்டுமல் நாடு முழுவதும் அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்கென்றே பொடா சட்டம் பயன்பட்டதென்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

2004இல் நடந்த பாரளுமன்றத் தாக்குதலுக்காக குற்றம் சுமத்தப்பட்ட ஜவகர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிலானி கூட பொடாவில்தான் கைது செய்யப்பட்டார். அவசர அவசரமாக பொடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கிலானிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதி மன்றத்தில் அவர் நிரபராதியென விடுவிக்கப்பட்டார். இனி பொடா நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது என்று சட்டத்தை மாற்றினால் இவரைப்போன்ற அப்பாவிகளைத் தூக்கில் போட வசதியாக இருக்கும்.

இந்தச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் 3 சதவீதம் கூட குற்றமென நிரூபிக்கப்படவில்லை. குஜராத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் முசுலீம்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. பா.ஜ.க அரசுகள் இந்துமதவெறியைத் தக்கவைக்கும் முகமாக முசுலீம்களை அடக்கிவிட்டதாக காண்பிப்பதற்கு இச்சட்டம் பயன்பட்டபோது மற்ற மாநிலங்களில் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம், போலீசு அதிகாரிகள் தங்களது எதிரிகளைத் தண்டிப்பதற்கு பயன்படுத்தினார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இச்சட்டம் அமுலிலிருந்த காலத்தில் தீவிரவாதிகளின் குண்டுகள் வெடிக்காமலில்லை. தீவிரவாதமும் வளராமலில்லை. குண்டு வெடிப்பினாலும், அதற்கென அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்களினாலும் என இருவிதத்திலும் இசுலாமிய மக்கள்தான் பாதிக்கப்பட்டார்கள். எல்லா குண்டுகளும் முசுலீம்களுக்கு மட்டும் விலக்கு கொடுக்கிறதா என்ன? மும்பைத் தாக்குதலின் முதல் இடமான சிவாஜி டெர்மினசில் கொல்லப்பட்ட 58 பேரில் 22 பேர் முசுலீம்கள் என்றும் காயம் பட்டவர்களில் இதைவிட அதிகமானோர் உள்ளதாகவும் தினசரிகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் குண்டுவெடிப்பிற்காக அப்பாவி இசுலாமிய மக்கள் பலரும் கைது செய்யப்பட்டுத்தான் வருகின்றனர். தீவிரவாதிகளும், தீவிரவாதிகளல்லாதாரும் என்கவுண்டரில் கொல்லப்படுவதும் குறையவில்லை. மோடியின் குஜராத் போலீசார் சோராபுதீன் என்ற அப்பாவியையும் அவரது மனைவியையும் தீவிரவாதிகளென்று சுட்டுக் கொல்லப்பட்டதை உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்திய சில விதிவிலக்குகளைத் தவிர யாரெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இருக்கிறதா என்ன? இமாம் அலி குழுவில் உள்ள பெண்தீவிரவாதி ஆயிஷா தமிழகத்தையே கலக்கி வருவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிகைகள் கட்டம் கட்டி செய்தி வெளியிட்டன. உண்மையில் அந்தப் பெண்ணுக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லையென நீரூபணம் ஆகியும் சமூக அங்கீகாரமில்லாமல் அந்தப் பெண் இன்றும் வாழ்வதற்கே சிரமப்படுகிறார். பொடா சட்டம் அமுலில்லை என்பதால் இவையெல்லாம் நடைபெறாமல் போய்விட்டதா என்ன? தற்போது கூட 9 தீவிரவாதிகள் சுட்டுத்தானே கொல்லப்பட்டனர்? ஆக சுடுவதற்கே இவ்வளவு அதிகாரம் இருக்கும் போது பொடா சட்டமோ அதை விட கடுமையான சட்டமோ தேவைப்படுவதன் காரணமென்ன?

இந்தச் சட்டங்கள் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமல்படுத்தப்படுவதில்லை. உண்மையான மதச்சார்பற்ற, ஜனநாயக, புரட்சிகர, சிறுபான்மை இன அமைப்புக்களை ஒடுக்குவதற்குத்தான் பொடா சட்டம் பயன்பட்டது. பல்வேறு மதங்களும், மொழிகளும், தேசிய இனங்களும் வாழும் இந்தியாவில் தனது உரிமைகள் மறுக்கப்படுவதாக குரலெழுப்பும் ஒரு பிரிவை நசுக்குவதற்குத்தான் அடக்குமுறைச் சட்டங்கள் தேவைப்படுகின்றன.

ஜெர்மனியில் யூதர்களுக்கெதிரான எல்லா அடக்குமுறைச் சட்டங்களும், நடவடிக்கைகளும் ஹிட்லரின் நாஸிக் கட்சியால் செயல்படுத்தப்பட்டதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. இன்றும் ஆஸ்திரேலியா, பிரான்சு, ரசியா, இங்கிலாந்து முதலான நாடுகளில் இனவெறியை அடிப்படையாகக் கொண்ட பாசிசக் கட்சிகள் குறிப்பிடத்தக்க செல்வாக்கோடுதான் இயங்கி வருகின்றன. மற்ற இனத்தவர்களை தமது நாட்டிலிருந்தே விரட்டவேண்டுமென இக்கட்சிகள் கோரும் சட்டங்களுக்கும், சங்க பரிவாரங்கள் விரும்பும் சட்டங்களுக்கும், அங்கே இனவெறி, இங்கே மதவெறி என்பதைத் தவிர எந்த வேறுபாடுமில்லை. இலங்கையில் கூட சிங்கள இனவெறி அரசு இந்தச்சட்டங்களை வைத்து புலிகளை ஒடுக்குகிறேன் என கொழும்பிலிருக்கும் அப்பாவி தமிழ் மக்களை கேள்வி முறையின்றி கைது செய்து வதைக்கவில்லையா? தீடீரென்று ஒருநாள் காலையில் எல்லா தமிழ் மக்களையும் பிடித்து நகருக்கு வெளியே தள்ளி வெளியேறுங்கள் என்று ஆணையிடவில்லையா?

இந்த இனவெறிக்கட்சிகளின் ஆட்சியில்லாமலே 9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் நம்மூர் ஜார்ஜ் பெர்னாண்டசு தொட்டு ஆசிய இனத்தவர் பலரும் அவர்கள் டாக்டர்களாகவோ, பணக்காரர்களாகவோ இருந்தாலும் அவமதிக்கப்படுவதும், பலர் சிலநாட்கள் சிறைபடுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆகவேதான் அடக்குமுறைச் சட்டங்கள் குறிப்பிட்ட பிரிவு மக்களை ஒடுக்குவதற்கான பாசிச ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும் என்பதையே இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் ஈழம் என்று பேசினால் பொடா, காஷ்மீரில் சுதந்திரம் என்று உச்சரித்தால் பொடா, வடகிழக்கில் இந்தியா ஒடுக்குகிறது என உண்மையை உரைத்தால் பொடா, மோடியின் குஜராத்தில் முசுலீம் என்று சொன்னாலே பொடா…இவைதானே நடந்தது, நடக்கவும் போகிறது? இப்போது குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை எதிர்த்து சட்டரீதியான போராட்டத்தை நடத்தும் சமூக ஆர்வலர் தீஸ்தா சேதல்வாத், காஷ்மீருக்கு விடுதலை தரவேண்டுமென வலியுறுத்தும் அருந்ததி ராய் போன்ற நடுநிலைமைக் குரல்களைக் கூட ஒடுக்கவேண்டும் என்பதுதான் இந்து மதவெறியர்களின் நோக்கம். பொடா சட்டமிருந்தால் அருந்ததிராயை உள்ளே தள்ளலாம். அவரையே ஒடுக்கிவிட்டால் அப்புறம் எந்த அறிவுஜீவி குரல் கொடுக்க முடியும்?

அடக்குமுறைச் சட்டங்கள் எல்லா ஜனநாயகக் குரல்களையும் நெரித்து பாசிச ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும் என்பதற்கு மலேகான் குண்டு வெடிப்பு வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாண்டு செப்டம்பரில் மராட்டியத்தின் மலேகான் நகரில் இசுலாமிய மக்கள் வாழும் பகுதியில் மசூதிக்கு அருகில் இரு குண்டுகள் வெடித்து ஏழுபேர் கொல்லப்பட்டனர். வழக்கம் போல இசுலாமியத் தீவிரவாதம், ஜிகாத், ஐ.எஸ்.ஐ என பா.ஜ.க பரிவாரங்கள் லாவணி பாடின. இறுதியில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து மூலம் இந்த பயங்கரத்தை நடத்தியவர்கள் இந்து பயங்கரவாதிகள் என கண்டுபிடிக்கப்பட்டது. இதை மராட்டியத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீசின் அதிகாரி ஹேமந்த் கார்கரே புலனாய்வு செய்து வெளியே கொண்டுவந்தார். துரதிர்ஷடவசமாக தற்போதைய மும்பைத் தாக்குதலில் தீவிரவாதிகளால் இவர் கொல்லப்பட்டது சங்க பரிவாரங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளித்திருக்கும். இசுலாமியத் தீவிரவாதம் இந்துமதவெறியர்களுக்கு அளித்திருக்கும் பரிசு! இதைக் கொண்டாடும் விதமாக கார்கரே குடும்பத்திற்கு நிதியுதவி என்ற பெயரில் பிச்சையிட முன்வந்த மோடியின் செயலை கார்கரேயின் மனைவி மறுத்திருக்கிறார்.

பிரக்யா சிங் தாக்கூர் என்ற 37 வயது பெண் சாமியார், சில முன்னாள் இன்னாள் இராணுவ அதிகாரிகள் என ஏழுபேர் மலேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த பெண் சாமியார் அனல் கக்கும் பேச்சிற்கு அதாவது இசுலாமியர்கள் மீது துவேசத்தைக் கிளப்பிவிடுவதில் வட மாநிலங்களில் பிரபலமானவர். ஆரம்பத்தில் இவர் யார் என்றே தெரியாது என்றவர்கள் ம.பி முதல்வர் சவுகான், பா.ஜ.க தலைவர் ராஜநாத் சிங்குடன் இருக்கும் புகைப்படம் வெளியானதும் தலைவர்களை பலர் பார்ப்பார்கள் எனறு சமாளித்தார்கள். அடுத்து உமாபாரதியும், பால்தாக்கரேயும் இந்தப் பெண்சாமியாரை இந்துக்களின் தியாகி என்று போற்றத் துவங்கியதும் இப்போது அத்வானியே இவருக்காக குரல் கொடுக்கிறார். இவரது வழக்கிற்காக இந்துமதவெறியர்கள் வெளிப்படையாக வசூல் செய்வதும் வழக்கறிஞரை நியமிப்பதும் அவ்வளவு ஏன் ம.பி சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட தொகுதி தருவதாக உமாபாரதி அறிவித்திருக்கிறார்.

ஆக தங்களுக்காக குண்டுவெடிக்கச் செய்து முசுலீம்கள் பலரை கொன்ற ஒரு பயங்கரவாதிக்கு மட்டும் இந்துமதவெறியர்கள் பட்டுக் கம்பளம் விரிப்பார்கள். இந்த வழக்கில் மட்டும் பொடா சட்டம் வேண்டுமென அவர்கள் தந்திரமாக கோரவில்லை. இந்த அழுகுணி ஆட்டத்தில் துக்ளக் சோவும் உண்டு என்பது முக்கியம். தற்போது இந்த குண்டுவெடிப்புக்கு பணம் தந்தவர் தொகாடியா என்பதும், ராஜநாத் சிங்கின் தம்பி குற்றவாளிகளோடு தொடர்புள்ளவர் என்பதும் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கூடுதலாக சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் வண்டியில் குண்டு வெடித்து ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வழக்கிலும் மலேகான் குற்றவாளிகளுக்கு தொடர்பு உள்ளதாகத் தெரியவந்திருக்கிறது. இந்த முக்கியமான கட்டத்தில் கார்கரே கொல்லப்பட்டிருப்பது நமக்கு வேறொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இராணுவத்திடம் உள்ள ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து கூட இந்துமதவெறியர்களின் கைகளுக்கு கிடைத்திருப்பது அதிர்ச்சிக்குறிய ஒன்றாகும். இதை வெளிப்படையாக விசாரிப்பதற்கு காங்கிரசு அரசே மறைமுகமாக தடை செய்திருப்பதாகவும் தெரிகிறது. என்ன இருந்தாலும் இராணுவத்தின் பெயர் பழுதடையக்கூடாது அல்லவா!

சாராம்சத்தில் மலேகான் வழக்கிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் எல்லா அடக்குமுறைச் சட்டங்களும், போலீசு, இராணுவமும் பாதிக்கப்படும் சிறுபான்மையினரை அடக்குவதற்குத்தான் பயன்படுமே தவிர அதை கொண்டுவரும் பாசிச சக்திகளுக்கு அந்த சட்டம் செல்லுபடியாகது என்பதுதான். அகமதாபாத் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட தன்மகன் அந்தக் கொடூரச் செயலை செய்திருக்கும பட்சத்தில் அவனைத் தூக்கில் போடவேண்டுமென்றார் ஒரு இசுலாமியத் தாய். ஆனால் இந்தப் பெண்சாமியாரின் தந்தை, ஆர்.எஸ்.எஸ் இல் உறுப்பினராக இருப்பவர் தனது மகளின் செயலுக்காக பெருமைப்படுவதாக பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இதையே அந்த இசுலாமியத் தாய் கூறியிருந்தால் ஒரு என்கவுண்டரில் போட்டுத் தள்ளியிருப்பார்கள். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு கடுமையான சட்டம் வேண்டும், அவர்களை என்கவுண்டரில் கொல்லும்போது மனித உரிமை என்று கூக்குரலிடுபவர்களைச் சட்டை செய்யவேண்டியதில்லை என முழங்கும் துக்ளக் சோ, பயங்கரவாதியான இந்தப் பெண் சாமியாரை என்கவுண்டரில் கொன்றால் என்ன சொல்வார்?

புதன்கிழமை இரவில் மும்பை வந்த பயங்கரவாதிகள் கராச்சியிலிருந்து வந்ததாகக் கூறும் இந்திய அரசின் வாக்குமூலத்தை உண்மையென்றே வைத்துக் கொள்வோம். படகில் ஏறுவதற்கு முன்னரே வாய்க்கரிசி பொட்டுக் கொண்டு வந்திறங்கி வெறியுடன் மக்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு தாங்களும் மரித்துக் கொண்டவர்கள் ஒரு வேளை இங்கு பொடா சட்டம் இருந்தால் வரமாட்டார்கள் என்று கருதுவது முட்டாள்தனமில்லையா? இந்தியாவில் போடப்படும் பொடாச் சட்டம் பாக்கிஸ்தானிலும் செல்லுபடியாக வேண்டுமென எப்படி எதிர்பார்க்க முடியும்? அமெரிக்காவின் சட்டத்திற்கு அஞ்சியா அல்கய்தாவும், பின்லேடனும் செயல்படுகிறார்கள்? இந்த சர்வதேச பயங்கரவாதத்தை தோற்றுவித்திருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை வர இருக்கும் தொடர்களில் பார்க்கலாம். இங்கே நாம் வலியுறுத்துவது பொடா சட்டம் உண்மையில் யாரை பதம் பார்க்கும் என்பதுதான்.

இதுவரை சாதாரண மக்களை குறிவைத்த பயங்கரவாதம் முதன்முறையாக முதலாளிகளைக் குறிவைத்திருப்பதால் பொடா மட்டுமல்ல அதற்கு மேல் உள்ள சட்டங்களும் வரத்தான் போகிறது. அதன் மூலம் போராடும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இயக்கங்கள் அடக்குமுறையைச் சந்திக்கத்தான் போகிறது. தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் ஒவ்வொரு முறையும் நடக்கப்போகும் விளைவு இதுதான். நடுநிலமையையும் கூட பலவீனமாக்குவதுதான் தீவிரவாதத்தால் நாடு கண்ட பலன். இந்துமதவெறியால் பாதிக்கப்படும் சிறுபாண்மை மக்களோ, சிங்கள இனவெறியால் நசுக்கப்படும் ஈழத் தமிழர்களோ தங்களுக்கென குரல் கொடுக்கும் ஆதரவு சக்திகளை இழக்க வேண்டிவரலாம். ஆக பயங்கரவாதிகளை முகாந்திரமாக வைத்து ஆளும் வர்க்கங்கள் மக்களுக்கு எந்த உரிமையையும் இல்லாமல் செய்யும் நிலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. அதே சமயம் பயங்கரவாதங்களும் இதனால் அழிவதற்குப் பதில் புதிது புதிதாய் பிறந்து கொண்டுதான் இருக்கும்.

அதனால்தான் போலீசுத் துறையை நவீனப் படுத்துவதோடு, புதிய படைப் பிரிவுகளையும், தேசிய அளவிலான உளவுத் துறையையும் உருவாக்க வேண்டுமென கோருகிறார்கள். நவீனமயமாக்கப்பட்ட இந்த ஆயுத பலம் பயங்கரவாதத்தை தடுக்குமா? இந்த அல்ட்ரா மாடர்ன் போலீசு யாரைக் காப்பாற்றும்?

- தொடரும்

இந்த பதிவு வினவு தளத்தில் வெளியானது : http://vinavu.wordpress.com/2008/12/05/mumbai3/

இதன் மறுமொழிகளை வாசிக்க: http://vinavu.wordpress.com/2008/12/05/mumbai3/#comments

தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் விவாதங்கள்

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் - 2 )

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் - 1 )

வெடித்த குண்டுகள்! புதையுண்ட உண்மைகள் !!

சுரணையற்ற இந்தியா !

நாங்கள், அவர்கள்....நீங்கள் ?

Edited by வினவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.