Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் - 4 )

Featured Replies

மும்பையில் உயிரிழந்தர்கள் குறிப்பாக பாதுகாப்புப் படை வீரர்களுக்காக தமிழ் சினிமா நடிகர்கள் நடிகர் சங்க கட்டிடத்தில் மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினார்கள். சர்வதேசத் தீவிரவாதிகளை தனியொரு போலீசு அதிகாரியாக எதிர்த்து நின்று வீழ்த்தியதாக பல திரைப்படங்களைக் கொடுத்தவர்கள் நன்றிக் கடனாக இதைக்கூட செய்யவில்லையென்றால் எப்படி? அல்லது யாராவது ஒருவர் ஒருநாள் உண்ணாவிரதமென்று கொளுத்திப் போட்டால் ஒரு நாள் பிழைப்பு போய்விடுமென்பதாலும் அவசரமாக இந்தச் சடங்கை செய்து முடித்தார்கள்.

பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்ட பின்னர் பாதுகாப்பான ஞாயிற்றுக் கிழமையன்று மராட்டிய (முன்னாள்) முதல்வர் விலாஜிராவ் தேஷ்முக், தாஜ் ஓட்டலைப் பார்வையிடச் சென்றார். அவருடன் நடிகரும் மகனுமான ரித்தீஷ் தேஷ்முக்கும், இந்தித் திரைப்பட பிரபலம் ராம் கோபால் வர்மாவும் சென்றார்கள். தெறித்து விழுந்த இரத்தக்கறை இன்னமும் காயாத நிலையில் அதை சினிமாவாக்க லொகேஷன் பார்ப்பதற்கு ஒரு இயக்குநரை மாநில முதல்வர் அழைத்துச் செல்கிறார். அந்தப் படத்தில் அவர் மகன்தான் நாயகனென்றும் தகவல். சிவாஜ டெர்மினசில் கொல்லப்பட்ட மக்களின் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் கூட மும்பையின் அவலத்தை சினிமாவாக்கி காசாக்க முனைகிறார்கள் என்றால் என்னவென்று சொல்ல?

இதில் சினிமாக்காரர்களை குற்றம் சொல்லுவதை விட நாளை அந்த சினிமா வந்தால் அதை பரபரப்பாக வெற்றிபெறச் செய்யும் இரசிகர்கள்தான் நம் விமரிசினத்திற்குறியவர்கள். அந்த இரசனைதான் மும்பை தாக்குதலில் உயிரிழந்த கமாண்டோக்களை சினிமா ஹீரோக்களைப் போல புகழ்கிறது. நாடு முழுக்க பாராட்டும், வாழ்த்தும் குவிகிறது. கொல்லப்பட்ட மக்களுக்கு ஓரிரு இலட்சங்களை வழங்கும் அரசுகள் வீரர்களுக்கு மட்டும் பல இலட்சங்களை அள்ளி வழங்குகின்றன. பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியாராவோ அவர்களது குடும்பத்தாருக்கு கேஸ் உரிமம் அல்லது பெட்ரோல் ஏஜென்சி வழங்கப்படும் என்கிறார். உயிரிழக்கும் அபாயமுள்ள போர்த்தொழிலில் ஈடுபடுவதற்குத்தான் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்கள் கடமையைச் செய்வதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள்?

மும்பையில் உடன் பணியாற்றும் வீரரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட மேஜர் சந்தீப் தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார். பெங்களூரிலிருக்கும் அவரது இல்லத்தில் நடந்த இறுதிச் சடங்கில் உள்ளூர் அரசியல்வாதிகள் பலர் கலந்து கொள்கின்றனர். இந்த மேஜர் ஒரு மலையாளி என்பதால் கேரளப்பத்திரிகைகள் அம்மாநில முதல்வர் கலந்து கொள்ளாதது குறித்து தேசபக்தி சென்டிமெண்டைக் கிளறி விடுகின்றன. பொதுவாகவே மலையாளிகளுக்கு ‘இந்திய உணர்வும், தேசபக்தியும்’ கொஞ்சம் அதிகம்தான். இதனால் தேசபக்த நெருக்கடிக்காளான முதல்வர் அச்சுதானந்தன் பெங்களுரு செல்கிறார். ஆனால் மேஜர் சந்தீப்பின் தந்தை உன்னி கிருஷ்ணணோ வீட்டிற்கு வந்த முதல்வரை அவமரியாதை செய்து அனுப்புகிறார். தன் மகன் ஒருமலையாளி இல்லை, அவன் ஒரு இந்தியன் என்பதாகவும், பத்திரிகைகளின் நிர்ப்பந்தத்தால் வந்த முதல்வரின் ஆறுதல் தேவையில்லையென திமிராகப் பேசுகிறார்.

நாடு முழுக்க எழுப்பிவிடப்பட்ட ஹீரோயிச உணர்வின் மேட்டிமைத்தனத்தில் உன்னி கிருஷ்ணன் தன் மகன் மாபெரும் சாதனை செய்த மிகப்பெரிய தியாகி என்றெல்லாம் கற்பித்துக் கொள்கிறார். இந்த மேஜர் மட்டும் இங்கு பிறக்கவில்லையென்றால் ஒரு நாய் கூட இந்த வீட்டிற்கு செல்லாது என பொருத்தமாக பேசிய அச்சுதானந்தன் பின்னர் எதிர்க்கட்சிகள், பத்திரிகைகள் தந்த நெருக்குதலால் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அரசியல்வாதிகளின் மீது மக்களுக்குள்ள வெறுப்பு அதிகாரவர்கக்த்தின் ஒரு பிரிவாக இருக்கும் இராணுவத்தை தேசபக்தியின் சின்னமாக போற்றவைக்கிறது. உண்மையில் காவல் துறைக்கும், இராணுவத்திற்கும் உள்ள முக்கியமான வேலை என்ன?

போலீசும், இராணுவமும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளைக் காப்பாற்றுகிறது என்பதால்தான் அவர்கள் செல்லப்பிள்ளைகள் போல சீராட்டி வளர்க்கப்படுகிறார்கள். மும்பையில் கொல்லப்பட்ட கமாண்டோக்களின் பிரதான பணியைப் பார்த்தாலே இது விளங்கும்.

உள்நாட்டில் தீவிரவாதிகளின் கடத்தல், தீடீர் தாக்குதலை முறியடிப்பதற்காக 1984 ஆம் ஆண்டு என்.எஸ்.ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை உருவாக்கப்படுகிறது. இதில் எஸ்.ஏ.ஜி, எஸ்.ஆர்.ஜி என இரண்டு பிரிவுகள் முறையே இராணுவம் மற்றும் துணை இராணுவப்படையினரிடமிருந்து தெரிவுசெய்யப்பட்டு கமாண்டோ பயிற்சி அளிக்கப்படுகிறது. எஸ்.ஆர்.ஜி பிரிவில் பாதிப்பேர் முக்கியப் பிரமுகர் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளனர். இது போக எஸ்.பி.ஜி எனப்படும் விசேட பிரிவு இந்திரா காந்தி குடும்பத்தினர், பிரதமர், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியில் ஈடுபடுகிறது. சோனியா காந்தி குடும்பம், பிரதமர்கள் என விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கான பாதுகாப்பில் ஈடுபடும் இந்த எஸ்.பி.ஜியின் இவ்வாண்டு செலவு பட்ஜட் மட்டும் 180 கோடி. ஆனால் 100 கோடி மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து காக்கும் என்.எஸ்.ஜியின் இவ்வாண்டு செலவு பட்ஜட் 117 கோடி மட்டுமே.

பிரமுகர் பாதுகாப்பில் இசட் பிளஸ், இசட், ஒய், எக்ஸ், என பல பிரிவுகள் உள்ளன. இசட் பிளஸ் வகையில்தான் அத்வானி, மோடி, ஜெயலிலிதா, அமர்சிங், முரளி மனோகர் ஜோஷி போன்ற பாசிஸ்ட்டுகள் உள்ளனர். இவர்களை என்.எஸ்.ஜியின் கறுப்பு பூனைகள் பாதுகாக்கின்றனர். இசட் பிரிவில் 68 பிரமுகர்களும், ஒய் பிரிவில் 243 பேரும், எக்ஸ் பிரிவில் 81 அரசியல்வாதிகளும் இத்தகைய விசேடப் படைப் பிரிவுகளால் பாதுகாக்கப்படுகின்றனர். இது போக டெல்லயில் மட்டும் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கதின் பாதுகாப்பிற்காக 14,200 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாநிலங்களில் கொடுக்கப்படும் பாதுகாப்பு தனி. மத்திய அரசில் மட்டும் பிரமுகர் பாதுகாப்பிற்காக தோராயமாக ஆண்டுதோறும் 250 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இந்த டெல்லித் தலைவர்கள் விஜயம் செய்யும் போது பாதுகாப்பிற்காக மாநில அரசுகள் செலவழிக்கும் தொகை இக்கணக்கில் வராது என்றால் இதன் மொத்தத் தொகை எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். இந்த வி.ஐ.பி பாதுகாப்பில் டெல்லி சீக்கியர்களைக் கொன்ற வழக்கிலிருக்கும் காங்கிரசின் சஜ்ஜன் குமார், கார்ப்பரேட் முதலாளிகளின் புரோக்கர் அமர் சிங், சந்தர்ப்பவாதத்திற்கு இலக்கணம் படைத்திருக்கும் தேவகவுடா போன்றவர்களும் அடக்கம்.

டெல்லி கமாண்டோப் படையைப் பார்த்து உள்ளுரில் அதேபோல ஆரம்பித்தார் அல்லி ராணி ஜெயலலிதா. 1992ஆம் ஆண்டு கிராக் கமாண்டோ படை எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இப்பிரிவில் இன்று 292 பேர்கள் உள்ளனர். இந்த பதினாறு ஆண்டில் 1996ஆம் ஆண்டு ரவுடி கபிலனை என்கவுண்டர் செய்தில் இந்தப் படையைச் சேர்ந்த பதினைந்து பேர்கள் கலந்து கொண்டனர். இதைத்தவிர இவர்களுக்கு வேறெந்த வேலையும் இல்லை. ஜெயலலிதாவின் தமிழக விஜயத்தில் பந்தாவுக்காக நிற்பதுதான் இப்படையின் சாதனை.

தற்போது தீவிரவாதிகளின் தாக்குதல் அபாயத்தில் சென்னை உள்ளதால் இப்படைக்கு நவீன ஆயுதங்களை வாங்க போலீசு அதிகாரிகள் அமெரிக்கா, ஜெர்மனி, இசுரேல் நாடுகளுக்குச் செல்லப் போகிறார்களாம். இப்படித்தான் நாடு முழுவதும் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் ஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசு அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு மட்டும் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்கிறது. டெல்லியிலிருந்து ஒரு தலைவர் விஜயம் செய்தால் தனிவிமானம், புல்லட்புரூப் கார், நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சோதித்தல், எல்லாம் புயல் வேகத்தில் நடக்கும். ஆனால் மும்பைத் தாக்குதலில் இப்படையினரின் செயல்பாட்டைப் பார்த்தால் இப்படை யாருக்கானது என்பது புரியவரும்.

புதன்கிழமை இரவு சிவாஜி டெர்மினசுக்குள் தீவிரவாதிகள் நுழையும் போது மணி 9.25. அப்போது கேரளாவிலிருந்த முதல்வர் தேஷ்முக்கிடம் இத்தகவல் தெரிவிக்கப்படும்போது நேரம் 11.00. அவர் உடனே டெல்லியிலிருக்கும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் என்.எஸ்.ஜி படையினர் வேண்டுமெனக் கேட்டபோது நேரம் 11.30. அவர் எத்தனை வீரர்கள் வேண்டுமெனக் கேட்க முதல்வர் 200 எனப் பதிலளிக்கிறார். அடுத்து உள்துறை அமைச்சர் என்.எஸ்.ஜியின் தலைவர் ஜே.ஆர்.தத்தாவிடம் தொலைபேசியில் 200 வீரர்களை மும்பைக்கு அனுப்புமாறு உத்தரவிடுகிறார். தூக்கத்திலிருந்த கமாண்டோக்கள் எழுப்பப்பட்டு ஆயுதம், உடை தரித்து டெல்லி விமான நிலையம் செல்லும்போது நேரம் 1.00மணி. 200பேர்களை தாங்கிச் செல்லும் விமானம் அப்போது டெல்லியிலில்லை, சண்டீகரில் இருக்கிறது. அந்த நள்ளிரவில் ஐ.எல்.76 எனும் அந்த விமானத்தின் பைலட் எழுப்பப்பட்டு விமானத்தில் பெட்ரோல் நிரப்பி டெல்லி வந்து சேரும் போது நேரம் 2.00 மணி.

ஏர்பஸ், போயிங் போன்று இந்த விமானம் வேகமாக செல்லாதாம். டெல்லியிலிருந்து புறப்ப்பட்ட அந்த விமானம் மூன்று மணிநேரம் கழித்து அதிகாலை ஐந்து மணிக்கு மும்பை இறங்குகிறது. தூக்கக் கலக்கத்திலிருந்த கமாண்டோக்களை காத்திருந்த பேருந்துகள் ஏற்றிக் கொண்டு ஒரு இடத்திற்கு சென்று இறக்கியது. அங்கு ஆப்பரேஷன் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டு தீவிரவாதிகள் இருந்த இடத்திற்கு வீர்கள் செல்லும்போது மணி 7.30. அங்கு சாவகாசமாக உடைமைகளை இறக்கிய வீரர்கள் துப்பாக்கியை தூக்கியபடி நிலைகளுக்குச் செல்கின்றனர். ஹாலிவுட் ஆக்ஷன் படங்களைப் பார்க்கும் அறிவுஜீவிகளின் வாதப்படி தீவிரவாதிகள் தாக்கத் துவங்கிய அரை மணிநேரத்திற்குள் எதிர்த்தாக்குதலை ஆரம்பிக்க வேண்டுமாம். இல்லையேல் அவர்கள் தங்களது நிலையை பலப்படுத்திக் கொள்வார்களாம். இங்கு கிட்டத்தட்ட பதினொரு மணிநேரம் தரப்பட்டிருக்கிறது.

தீவிரவாதிகள் இருந்த கட்டிடங்கள் குறித்து வீரர்களுக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாததால் ஆரம்பத்தில ஒரே குழப்பம். ஆனால் கராச்சியிலிருந்து முதன்முறையாக மும்பை வந்திருக்கும் தீவிரவாதிகள் அந்த ஓட்டல்களின் புவியியலை மனப்பாடம் செய்திருந்தனர். காடு, கிராமம், விமான நிலையங்கள் போன்ற இடங்களில் மட்டும் போரிட பயிற்சி பெற்றிருக்கும் வீரர்களுக்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் எப்படி சண்டையிடுவது என்று தெரியவில்லையாம். இதுவும் தீவிரவாதிகளுக்கு மட்டும் எப்படி தெரிந்திருந்தது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். எல்லா இடங்களையும் சுற்றி வளைத்து, தாக்குதல் தொடுக்கும் ஒன்பது தீவிரவாதிகளைக் கொல்லுவதற்கு மொத்தம் 60 மணிநேரத்தை, சிலநூறு வீரர்கள் எடுத்துக் கொண்டனர். அதிலும் இவர்களால் பணயக்கைதிகள் கொல்லப்பட்டது பற்றி கணக்கில்லை. நாரிமன் இல்லத்தில் கொல்லப்பட்ட 6 யூதர்களில் ஒரு சிலர் கமாண்டோக்களால் கொல்லப்பட்டதாக சில இசுரேலியர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் ராஜ்ஜிய உறவு பாதிக்கூடாது என்பதற்காக இசுரேல் அரசு இதை மறுத்திருக்கிறது.

அடுத்து மும்பையில் தீவிரவாதிகள் தாக்கப்போவதாக வந்த தகவலை ‘ரா’வும், ஐ.பியும் கடற்படைக்கும், மராட்டிய காவல் துறைக்கும் அனுப்பியதாகச் சாதிக்கின்றன. ஆனால் கடற்படை அட்மிரலும், மராட்டிய முதல்வரும் அப்படி ஒரு எச்சரிக்கை வரவேயில்லையென அடித்துக் கூறுகின்றனர். இதுதான் இவர்கள் செயல்படும் லட்சணமென்றால் புதிதாக வரப்போகும் தேசிய பெடரல் புலனாய்வு நிறுவனம் எதைச் சாதிக்கப்போகிறது? மாநில உரிமைகளுக்கு அப்பாற்பட்டு இந்தியா முழுவதும் நேரடியாக தலையீடு செய்யவும், கைது செய்யவும் அதிகாரம் கொண்ட இப்புதிய அமைப்பு மத்திய அரசின் சர்வாதிகார பணிகளுக்கே உதவி செய்யும். அதுவும் பா.ஜ.க ஆட்சியில் வந்தால் இந்துத்வத்தை எதிர்ப்பவர் அனைவரும் இப்பிரிவால் அடக்குமுறைக்குள்ளாவது நிச்சயம்.

பாக்கிற்கு ஐ.எஸ்.ஐ போல இந்தியாவிற்கு இருக்கும் ரா வின் ஒராண்டு பட்ஜட் ஆயிரம் கோடி ரூபாயாம். அதிலும் இந்தப்பணம் எப்படி ஏன் செலவழிக்கப்படுகிறது என்பது தேவரகசியம். பல ரா அதிகாரிகள் பிரம்மாண்டமாக வீடுகளை கட்டிக்கொண்டு ரா விற்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார்களாம். மேலும் ரா வின் செயல்பாடுகள் என்பது ஐ.எஸ்.ஐயை விட சதித்தனமும் நரித்தனமும் நிறைந்தவை.

ஈழத்தில் போராளிக் குழுக்களை ஒன்றுக்கொன்று மோதவிட்டு அழித்தது, அதேபோல வடகிழக்கில் பல்வேறு தேசிய இனங்களுக்கான குழுக்களின் முரண்பாடுகளை வளர்த்து மோதவிட்டது, காஷ்மீரில் மதச்சார்பற்று இருந்த விடுதலைப் போராளிகளை மதச்சார்பாக மாற்றியது, கைக்கூலிக் குழுக்களை உருவாக்கியது, பாக்கிஸ்தானில் சன்னி பிரிவுக்கெதிரான ஷியா பிரிவுக்கு உதவி செய்தல், ஆப்கானில் வடக்குக்கூட்டணிக்கு ஆதராவாக வேலை செய்வது என அதன் கைங்கரியங்கள் பல. இதைத் தவிர மத்திய மாநில உளவுத் துறைகள் அனைத்தும் ஆளும் கட்சிக்கான அரசியல் உளவுப்பணிகளில் ஈடுபடுவதுதான் முக்கியமான பணி.

இந்திய ஆளும்வர்க்கங்களின் நலனுக்காக மட்டும் உருவாக்கப்படட இந்தப்படைப் பிரிவுகளும், புலனாய்வு அமைப்புக்களும் எந்தக் காலத்திலும் இந்திய மக்களைக் காப்பாற்ற முடியாது.

எவ்வித நியாயமுமின்றி அரசின் அலட்சியத்தால், அதிகார வர்க்கத்தின் திமிரால், ஏழையென்று ஒதுக்கும் இந்தச் சமூக அமைப்பால், நிஷா புயல் தாக்கப்போகிறது என்று முன்கூட்டியே தெரிந்தும் 130க்கும் மேற்பட்ட மக்கள் தமிழகத்தில் இறந்துள்ளனர். இவர்களைக் காப்பாற்ற வக்கில்லாத அரசு இதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்பதில்லை. ஆனால் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களை தடியடி மூலம் கலைக்கும் போலீசுக்கு ஒரு ஆபத்தென்றால் அரசின் அடி முதல் தலை வரை துடிக்கும். மும்பைக்கு வந்த பயங்கரவாதிகளைக் கொன்று பல மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த போலீசு, இராணுவ வீரர்களை இவ்வளவு அலட்சியமாகப் பார்க்கலாமா என சில ‘ தேச பக்தர்கள் ‘ கொதிக்கலாம். சினிமாவின் செல்வாக்கில் இராணுவ வீரர்களை ஹீரோக்களாக பாவிப்பவர்கள் எவரும் போலீசு, இராணுவத்தின் உண்மை முகத்தை தரிசித்திருக்க வாய்ப்பில்லை.

அமைதிப் படை என்ற பெயரில் இலங்கைக்குச் சென்ற இந்திய இராணுவம் கொன்ற கணக்கையும், கற்பழித்த கணக்கையும் ஈழத்தமிழர்களிடம் கேட்கவேண்டும். மனோரமா என்ற பெண்ணைக் கடத்திக் கொண்டு போய் பாலியல் பலாத்காரப்படுத்திச் சுட்டுக் கொன்ற அசாம் துப்பாக்கிப்படைப் பிரிவினரைக் கண்டித்து “இந்திய இராணுவமே எங்களையும் பாலியல் பலாத்காரம் செய்” என்ற பதாகையை ஏந்திக்கொண்டு நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் நடத்திய மணிப்பூர் தாய்மார்களிடம் கேட்டுப் பார்க்க வேண்டும். “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம்” என்ற சட்டத்தின் பாதுகாப்பில் வடகிழக்கு மாநிலங்கள் முழுக்க அட்டூழியம் செய்யும் இந்திய ராணுவத்தைப் பற்றி அப்பகுதி மக்களிடம் கேட்டால் உண்மை தெரியும். ஐந்து லட்சம் துருப்புக்களை குவித்து எல்லாவகை ஒடுக்குமுறைகளையும் செய்யும் இந்திய ராணுவம் மற்றும் துணை இராணுவத்தைப் பற்றி காஷ்மீர் மக்களிடம் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்.

போலீசுக்காரர்களைப் பற்றி அதிகம் விளக்கத்தேவையில்லை. ஒரு காவல் நிலையத்தின் அருகிலேயே மக்களைக் கேட்டால் காததூரம் ஓடுவார்கள். இந்தியா முழுவதும் போராடும் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரையும் தடியடி, துப்பாக்கிச்சூடு செய்து கொல்லுவதுதான் இத்துறையின் முதன்மைப்பணி. தாமிரபரணிப்படுகொலை முதல் நந்தி கிராம் படுகொலை வரை பல எடுத்துக்காட்டுகளை சமீப ஆண்டுகளில் பார்த்திருக்கிறோம்.

எனவே ஆட்சியாளர்களின் நலன்களைக் காப்பாற்றுவதற்காக இயங்கும் இந்தப் படைகள் புதிது புதிதாக பல பெயர்களில் பல நூறு கோடி மூலதனத்தில் ஆரம்பிக்கப்படுகிறது. இந்திய அரசின் பெரும்பான்மைச் செலவே பாதுகாப்புத் துறைக்குத்தான் என்றாகிவிட்டது. அரசியல்வாதிகள் மோசம் அதிகாரவர்க்கம் அதாவது ஐ.பி.எஸ், மற்றும் இராணுவ அதிகாரிகளின் கைகள் கட்டப்படவில்லை என்றால் அவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்களென தற்போது பலரும் பேசுகிறார்கள். தெகல்கா நடத்திய முதல் ஆபரேஷனே இராணுவ அதிகாரிகளின் ஊழலை அம்பலப்படுத்தியது நினைவிருக்கலாம். இதுபோக கார்கில் போருக்கு ஆயுதம் வாங்கியதில் மட்டுமல்ல விருது வாங்கியதிலும் ஊழல் சந்தி சிரித்தது இங்கே நினைவு கொள்ளவேண்டும். வீரப்பனைப் பிடிக்கிறேன் என்ற பெயரில் தேவாரத்தின் அதிரடைப்படை நடத்திய அட்டூழியங்களை சதாசிவம் கமிஷனே அம்பலப்படுத்தியிருக்கிறது. இயல்பாகவே மக்களுக்கெதிரான வெறியைக் கொண்டிருக்கும் போலீசு, இராணுவத்தைப் போற்றுவது தற்கொலைக்கு ஒப்பானது.

இறுதியாக மும்பைத் தாக்குதலினால் கண்ட பலன் என்ன? இதுவரை அத்வானி, மன்மோகன் சிங், சோனியா காந்தி, ஜெயலலிதா போன்ற அரசியல் வாதிகளுக்கு கிடைத்த அதி உயர் பாதுகாப்பு இனி அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, ராகுல் பஜாஜ், முத்தையா செட்டியார் போன்ற முதலாளிகளுக்கும் கிடைக்கும். மக்களைப் பொறுத்தவரை தீவிரவாதிகள் மற்றும் இராணுவம் இரண்டு பிரிவினரிடமிருந்தும் பாதுகாப்பில்லை என்பதுதான் யதார்த்தம்.

அடுத்ததாக நாம் அலசவேண்டிய கேள்வி மும்பைத் தாக்குதலை யார் செய்திருப்பார்கள்?

- தொடரும்

இந்த பதிவு வினவு தளத்தில் வெளியானது : http://vinavu.wordpress.com/2008/12/08/mumbai4/

இதன் மறுமொழிகளை வாசிக்க:http://vinavu.wordpress.com/2008/12/08/mumbai4/#comments

தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் விவாதங்கள்

அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் - 3 )

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் - 2 )

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் - 1 )

வெடித்த குண்டுகள்! புதையுண்ட உண்மைகள் !!

சுரணையற்ற இந்தியா !

நாங்கள், அவர்கள்....நீங்கள் ?

Edited by வினவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.