Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மரியாதைக்குரிய சீமான்...

Featured Replies

எனக்கு சீமான் மீது மிக அதிக ஈடுபடும் ப்ரியமும் உண்டு. காரணம் அவரது மிக வாஞ்சையான நட்பு. இன்றைக்கு சிறந்த பேச்சாளாராக சீமான் அறியப்படுவதற்கு முன்னால் சாலிக்கிராமத்தில் இருந்த அவரது இல்லத்திற்கு நானும் ஒளிப்பதிவாளர் செழியனும் எப்போதாவது செல்வோம். செழியன் தினம்தோறும் அங்கு செல்வார். நான் எப்போதாவது செல்வேன். மாலை நேரங்களில் சென்றால் அந்த வீட்டுக்கு வலப்பக்கமாக இருக்கும் திடலில் வலைகட்டி வாலிபால் விளையாடிக் கொண்டிருப்பார் சீமான். அதுவே மதிய நேரம் சென்றால் பல நேரங்களில் நல்ல உணவு அவரது இல்லத்தில் கிடைக்கும். ஆனால் சீமானைச் சந்தித்து சிறிது நேரம் பேசினாலே உற்சாகமாக இருக்கும். பெரிதாக எதற்கும் அலட்டிக் கொள்ளாத அவரது குணம் எல்லோரையுமே வசீகரிக்கக் கூடியது. சாதாரண கிராமத்தான், கருப்பன், பேசுகிற வழக்குத் தொனியில் இன்னும் எளிய பேச்சு வழக்கைச் சுமந்திருக்கிறார். அப்போதே சினிமாக்காரனுக்குள்ள பந்தா எதுவும் இல்லாமல் சிம்பிள் அப்ரோச்தான் சீமானின் ஸ்டைல். இதுதான் நான் சீமான் பற்றி என் மனதில் வரைந்து வைத்திருந்த சித்திரம்.

முதன் முதலாக எம்.ஜி.ஆர் நகரில் அவரது பேச்சை நேரில் சென்று கேட்ட போது என்ன கொதிப்பும் ஆத்திரமும் இருந்ததோ அதே கொதிப்பையும் ஆத்திரத்தையும் பாளையங்கோட்டைப் பேச்சை தொலைபேசியில் கேட்டபோதும் உணரமுடிந்தது. ஆனால் அவரது இந்தப் பேச்சு அதிகாரவர்க்கத்துக்கு எதிரானது. முக்கியமாக காங்கிரஸ் கம்பெனிக்காரர்களும் தினமலர் கூட்டத்தினரும் சீமான் பெயரைக் கேட்டாலே பூணூல் அறுபட்ட மாதிரி கொதிப்படைகிறார்கள். சீமான் பேசத் துவங்கிய பிறகு அவருக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து அவரது எதிரிகள் மட்டுமல்லாமல் நண்பர்கள் என்று சீமானை மேடை ஏற்றிய தேர்தல் கட்சிகள் கூட சீமான் விஷயத்தில் உஷாராகிவிட்டார்கள். பொதுமக்களிடம் தங்களின் முக்கியத்துவம் குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் சீமானை மிகக் குறுகிய காலத்தில் ஓரம் கட்டினார்கள். ஆனால் பெரியார் திராவிடர் கழகம் அவரை மேடையில் ஏற்றி பேச வைத்தார்கள். (அதனால் எழுந்த பிரச்சனைகளின் போது சீமானுக்காக களத்தில் நிற்பதும் பெரியார் திராவிடர் கழகம் தான். அது போல மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மருதையன், சீமான் விடுதலைக்காக பணி செய்யத் தயாராக இருப்பதாக வே.மதிமாறன் சீமானிடம் எடுத்துக் கூறினார். அது போல தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தியாகு, தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் பெ.மணியரசன் உள்ளிட்ட பல தோழர்கள் சீமானுக்காக அக்கறைப்படுகிறார்கள்)

அவரின் பேச்சுக்களைக் கேட்டபோது சீமான் உடனடியாக ஏதாவது ஒரு அமைப்பில் சேர வேண்டும் அல்லது ஒரு அமைப்பைத் துவங்க வேண்டும், இல்லை என்றால் அரசின் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என நினைத்தேன். அதை அவரிடமும் சொன்னேன். இவ்விதமான அவாக்கள் அவரிடம் பல நண்பர்களாலும் சொல்லப்பட்டிருக்கிறது. அவரும் தமிழர் விடுதலையோடு திராவிட இயக்க சிந்தனைகளை கொண்ட ஓர் அமைப்பை துவங்கும் எண்ணத்தில் இருந்தார் என நினைக்கிறேன். ஆனால் புதுச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவர்களிடம் சீமான் பேசியபோது, காங்கிரஸ்காரன் சீமானை கைது செய்ய திட்டம் தீட்டி கடைசியில் கைது செய்து புதுவை சிறையில் அடைத்தபோது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமோ, பெரியவர் நெடுமாறன் அவர்களோ, ராமதாஸ், திருமா, வைகோ என யாருமோ அதைக் கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. நெடுமாறன் தவிர சீமானைச் சிறையில் போய் இவர்கள் யாரும் பார்க்கவும் இல்லை.

புதுச்சேரி அரசின் கைதுக்கு எதிர்வினைகள் இல்லாத சூழலைப் புரிந்து கொண்ட தமிழக அரசு சீமானை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது. இன்று வரை உடம்பு சரியில்லாத என்னை வந்து பார்க்கவில்லை என்று பொன்முடியை விட்டு கலைஞர் ஓர் அறிக்கை விட்டால் பதறிக் கொண்டு கண்ணப்பனை அனுப்புகிற வைகோ, மல்லை சத்யாவைக் கூட சீமானைப் பார்த்து வர அனுப்பவில்லை என்பது இவர்கள் சீமான் விஷயத்தில் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்பதை நமக்குக் காட்டுகிறது.

சரி சீமான் யாருக்காகப் பேசினார்? இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் இயக்கத்தினர் இலங்கைத் தமிழர்களுக்காக போராடிக் கொண்டிருந்தபோது சீமான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடினார். இலங்கைத் தமிழர் என்று ஈழத் தமிழர்களை அழைப்பதை வெளிப்படையாகக் கண்டித்தார். யார் மனமும் புண்படாமல் போராடுகிற அரசியல் அயோக்கியத்தனம் சீமானுக்குத் தெரியவில்லை. அவர் வெளிப்படையாகவே காங்கிரஸ்காரனைத் திட்டினார். போரை நடத்துகிற இந்தியாவின் செயலால் புண்பட்டுக் கிடக்கிற தமிழக மக்களின் மனநிலையை சீமான் மேடைகளில் பிரதிபலித்தார். அவர் உண்மைகளைப் பேசினார். பேசிய விஷயங்களுக்கு உண்மையாக இருந்தார்.

இப்போது எப்படி இருக்கிறார் சீமான்?

புதுவைச் சிறைக்குள் செல்வதற்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக் கொடுத்தபோது, அதில் நண்பரின் முகவரியைக் கொடுத்து ஆறு பேர் உள்ளே சென்றோம். அதில் சில தமிழ் மொழி பற்றாளர்களும், பெரியவர்களும் எங்களுடன் வந்தனர். என் பாக்கெட்டில் இருந்த சிகரெட் பாக்கெட் (ராமதாஸ் என்னை மன்னிக்க வேண்டாம்), தீப்பெட்டி, மொபைல் போன், மெமரி சிப் என சகலத்தையும் பெரியார் திக தோழர்களிடம் கொடுத்து விட்டு முதன் முதலாக சிறைக்குள் சென்றோம் நானும் நண்பர்களும். (லோகு அய்யப்பன் என்கிற புதுச்சேரி பெரியார் திக தோழர் சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தார். அவர் இல்லாவிட்டால் எங்களை ஏமாற்றி அல்வா கொடுத்து திருப்பி அனுப்பியிருப்பார்கள் சிறைப் பாதுகாவலர்கள். சிறைக்குள் இருக்கும் சீமானை மிக நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள் லோகு அய்யப்பன் தலைமையிலான பெரியார் திக தோழர்கள்.)

கருப்புச் சட்டை பேண்டில் சீமான் வந்தபோது கைகுலுக்கினோம்; ஆரத்தழுவிக் கொண்டோம். நிறையப் பேசினோம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் எதற்கும் கலங்காதீர்கள் என்றபோது சிரித்தார். எமக்கு நம்பிக்கை ஊட்டுகிற மாதிரியான உற்சாக வார்த்தைகளைச் சொன்னார். ‘போர்ப் பகுதியில் இருந்து மக்களைக் காப்பாற்று மக்களைக் காப்பாற்று என்று சொல்கிறார்கள். நானும் அதைத்தானே பேசினேன். ஆனால் மக்களைக் காப்பாற்றி விட்டு புலிகளை அப்படியே அழிந்து போக விட்டு விடுவதா? மக்களும் புலிகளும் வேறு வேறா? என்னப்பா இது அக்கிரமமாக இருக்கு? தமிழனோட நூற்றாண்டுகால கனவய்யா! புலிகளை எப்படி விட்டுற முடியும்? இந்தப் போரை நடத்துகிற எதிரிக்குக் கூட தெரியும் மக்களும் போராளிகளும் வேறு வேறல்ல என்று. அதனால்தான் மக்களைப் புலிகளாக நினைத்து குண்டு வீசிக் கொல்கிறான். ஆனால் எதிரிக்குத் தெரிவது இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அதுவும் தமிழீழம் தமிழுணர்வு என்று பேசும் தமிழகத் தமிழர்களுக்குப் புரியமாட்டேங்குது’ என்கிற தொனியில் அவர் நினைத்திருக்கக் கூடும்.

தன்னை வந்து தோழமைச் சக்திகள் சிறையில் சந்திக்காதது குறித்த கவலைகள் ஏதும் சீமானிடம் இல்லை. ஆனால் அந்த சந்திப்புகள் குறித்த சில அரசியல் கேள்விகள் அவரிடம் இருந்தது. ‘இவர்கள் யாரை எதிர்த்துப் போராடுகிறார்கள்? ஈழம் தொடர்பான நிலையற்ற கொள்கையை தேர்தல் அரசியல்வாதிகள் தோழமைச் சக்திகள் கொண்டிருப்பதாக’ வருத்தப்பட்டார். தான் சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிடப் போவதில்லை என்றும், தேர்தல் அமைப்பில் பங்கெடுப்பதற்காக மேடையையோ சிறையையோ பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் கூறிய சீமான், “உண்மையிலேயே காங்கிரஸ்காரனுக்கு தமிழகத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தால் என்னை வெளியில் வைத்து இந்தத் தேர்தலில் அவர்கள் வென்று காட்ட வேண்டும். தமிழகத்தில் எந்தத் தமிழனும் காங்கிரஸ்காரனுக்கு ஓட்டுப் போட மாட்டான் என்று தெரிந்த பிறகு என்னைத் தூக்கி சிறையிலடைத்து விட்டு தேர்தலைச் சந்திக்கிறான் காங்கிரஸ்காரன். அந்த வகையில் நான் எதைச் செய்ய நினைத்தேனோ அதை நேர்மையான முறையில் செய்திருக்கிறேன். இது எனக்குக் கிடைத்த வெற்றிதான்” என்றார்.

“உண்மையிலேயே காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் எங்கு இருக்கிறது? இங்குள்ள கட்சிகள் முதுகில் குதிரை ஏறி ஐம்பது வருடமாக காலத்தை ஒட்டும் காங்கிரஸ்காரன் மட்டுமல்ல அவர்களுக்கு பல்லக்குத் தூக்கியே பழகிவிட்ட தமிழக கட்சிகளும் அடையாளத்தை இழக்க நேரிடும். தேர்தல் வெற்றி என்பது அதிகாரப் பகிர்வு தொடர்பானது. அரசியலே பதவி, கூட்டணி, கேபினட் அந்தஸ்துள்ள மந்திரிப் பதவி என்றாகி விட்ட சூழலில் ஒட்டு மொத்தமாக தமிழ் மக்களின் ஆதரவையும் இழந்த பிறகு இவர்கள் மக்களிடம் என்ன சொல்லி ஓட்டுக் கேட்பார்கள்?” என்று வருத்தப்பட்டார். “காங்கிரஸை தூக்கிச் சுமக்கிற எவனும் தலைமுறைப் பிழையைச் செய்கிறான். தமிழக மக்கள் ஒரு போதும் இந்த துரோகத்தை மன்னிக்க மாட்டார்கள். கடைசிவரை மத்திய ஆட்சியில் இருந்து வெளிவராமல் ஆனால் போருக்கு எதிராக பேசுவதாக பாவனை செய்து கொண்டே ஈழத்தில் போரை நடத்தும் சிங்களப் பேரினவாத இராணுவத்துக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்படுவதையும்” அவர் கவனித்து ஆவேசப்பட்டார்.

என்னைப் பார்க்க என் தம்பிகள் வருகிறார்கள் என்று சந்தோசப்பட்டார். சீமானை சிறை மாற்றி விடவில்லை. ஈழ விடுதலைப் போர், காங்கிரஸ் கட்சியை ஓழித்துக் கட்டுவது என்ற கொள்கைகளில் மிக உறுதியாக முன்னை விட தீவிரமாக இருக்கிறார்.

சீமானைத் தனிமைப்படுத்தியவர்கள் குறித்து....

தியாகி முத்துக்குமாரை யார் உதாசீனப்படுத்தி புதைக்க நினைத்தார்களோ அந்த பண்ணை மனோபாவம் கொண்ட பிற்போக்குச் சக்திகளே சீமானையும் இன்று தனிமைப்படுத்தி உதாசீனப்படுத்துகிறார்கள். முத்துக்குமாரின் சிந்தனைகளை, தமிழக மக்களின் உணர்வுகளை தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒலித்ததுதான் சீமான் செய்த தவறு என்றால் அந்தத் தவறின் பக்கம் நான் இருக்கிறேன். என்னை மாதிரியே ஏராளமானோர் இருப்பார்கள் என்றும் நான் நம்புகிறேன்.

சீமான் நினைத்திருந்தால் சிறையில் இருந்த நாட்களிலும் இருந்து கொண்டிருக்கும் நாட்களிலும் ஐம்பது லட்ச ரூபாய் அட்வான்ஸ் வாங்கி இரண்டு படத்தை துவங்கியிருக்க முடியும். மாயாண்டி குடும்பத்தாரில் ஒப்பந்தம் செய்து கொண்டபடி அதை முடித்துக் கொடுத்த மறுநிமிடமே, வீதிக்கு வந்து போராடி சிறை சென்ற சீமானிடம் இருப்பது உண்மையான உணர்வு மட்டுமே! தமிழினத் தலைவர்கள், பாட்டாளி வர்க்கத்தின் அய்யாக்கள் என்று சொல்லிக் கொண்டவர்களுக்கு அரசியல் எப்படி தொழிலோ அது போல சீமானுக்கு சினிமா. ஆமாம் அதுதான் அவருக்குத் தொழில். ஆனால் தன் தொழிலை கெடுத்துக் கொண்டு பொதுப் பிரச்சனைக்காக வந்து சீமான் சிறையில் இருக்கும்போது இவர்களோ தங்கள் அரசியல் தொழில் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று தேர்தல் வேலையில் பிஸியாகிப் போய் விட்டார்கள்.

அது போல அவர் சார்ந்த சாதிக்குள் ஐக்கியமாகியிருந்தால் இந்நேரம் சீமானை சிறையில் வைத்திருக்கவே முடியாது. ஓட்டுப் பொறுக்கும் அனைவருமே சாதி ரீதியாக மக்களை அணி திரட்டும்போது சீமான் தன் சொந்த சாதி அடையாளத்தை வெறுத்தார். தன் சொந்த சாதியைத் தவிர மற்ற சாதி மக்களுக்கு துரோகம் செய்யும் மக்களுக்கிடையில் சீமான் தன் சொந்த சாதிக்கே துரோகம் செய்து, நம் மனதில் உயர்ந்து நிற்கிறார். எங்கள் குலத் தங்கம் என்று போஸ்டர் ஒட்டிய சீமானின் சொந்தக்காரன் எவனையும் இன்று காணவில்லை.

தோழர்களே!

நாம் இன்று நம் தலைமுறையில் சந்திக்கும் மிகப் பெரிய மனித அவலம்தான் ஈழம். அடக்குமுறைகளைத் தாண்டி இவ்வளவு எதிர்ப்புகளைக் காட்டியும், தீக்குளித்தும், மொத்த உணர்வுகளைக் காட்டியும் போர் நின்றபாடில்லை. சிங்களப் பேரினவாதம் ஈழ மக்கள் மீது தொடுத்திருக்கும் போரை முட்டுக் கொடுத்து நடத்துகிற இந்திய அரசோ தமிழக மக்களின் உணர்வுகளை எட்டி மிதித்து எள்ளி நகையாடி விட்டது. மத்திய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய மாநில அரசோ அதை மௌனமாக சகித்துக் கொண்டு ஈழ ஆதரவு நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. ஈழம் வேண்டும் போர் நிறுத்தப்பட வேண்டும் என நினைக்கிற தேர்தல் கட்சிகளோ ஏதோ ஒருவகையில் ஈழத் தமிழர்களின் எதிரிகளோடு கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தனை பலவீனங்களையும் புரிந்து கொண்ட கருணாநிதியின் காவல்துறையோ வழக்கறிஞர்களின் ஈழ ஆதரவுப் போராட்டங்களை நசுக்கியது போல கொளத்தூர் மாணியைக் கைது செய்கிறது; சீமானை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கிறது. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்களை கைது செய்கிறது. ஆர்ப்பாட்டம் நடத்தவோ, ஜனநாயக வழியில் தங்கள் எதிர்ப்பைக் காட்டவோ முடியாத அளவுக்கு தமிழகத்தில் காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறது. இந்த அடக்குமுறைகளுக்கு அஞ்சி நாம் பேச மறுத்தால் இனி எப்போதும் நம்மால் பேச முடியாமல் போகும். வழக்கறிஞர்களும். மாணவர்களும் சந்தித்த அதே ஓடுக்குமுறையை, பேசுவதற்கான போராடுவதற்கான உரிமை மறுப்பைத் தான் சீமானும் சந்தித்திருக்கிறார்.

சீமானுக்காக குரல் கொடுக்கவோ, கொளத்தூர் மணிக்காக பேசவோ வழக்கறிஞர்களை ஆதரிக்கவோ சிறைப்பட்ட மாணவர்களுக்காகப் பேசவோ நாம் புலிகளின் ஆதரவாளர்களாக இருக்க வேண்டியதில்லை; ஈழ விடுதலையை ஆதரித்து நிற்க வேண்டியதில்லை; மனிதர்களாக இருந்தால் போதும். ஏனென்றால் மனித குலத்துக்கு விரோதமான செயல்களைத்தான் இலங்கை ஈழத்தில் செய்து கொண்டிருக்கிறது. அதை இந்தியா ஆதரித்து நிற்கிறது.

ஆகவே நாம் பேசுவோம், பேச்சுரிமைக்காகவும்! எழுத்துச் சுதந்திரத்திற்காகவும் பேசுவோம்!

நம் கண்முன் நிகழும் அக்கிரமங்களுக்கு நமது எதிர்ப்பைத் தெரிவிப்போம். 09-03-2009 அன்று திங்கள் மாலை சென்னை தி நகர் முத்துரங்கம் சாலை (பேருந்து நிலையம் அருகில்) மாலை ஆறு மணிக்கு நடைபெற இருக்கும் கருத்துப் பகிர்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் ஆதரவைத் தெரிவியுங்கள்!

தொடர்புக்கு,

தோழர் விடுதலை ராஜேந்திரன்- 9444115133

தோழர் தியாகு- 9283110603

கருத்துரிமை மீட்பு உரை முழக்கம்!

# சீமானை விடுதலை செய்!

# கொளத்தூர் மணியை விடுதலை செய்!

# தமிழினக் கருத்துரிமையைப் பறிக்காதே!

உரை

# எச்.சுரேஷ் (மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி)

# பால் கனகராஜ் (வழக்கறிஞர்)

# பாரதிராஜா (இயக்குநர்)

# பெ.மணியரசன் (தமிழ்த் தேசப் பொது உடமைக் கட்சி)

# விடுதலை ராஜேந்திரன் (பெரியார் திராவிடர் கழகம்)

# தியாகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்)

# பாண்டிமாதேவி (வழக்கறிஞர்)

# தி.ல. சுதாகாந்தி (டாக்டர் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்)

- பொன்னிலா (judyponnila@gmail.com)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்

http://tamilthesiyam.blogspot.com/2009/03/...-post_7291.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.