Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாவது அணி: போலி கம்யூனிஸ்டுகளின் பதவிப் பித்து !

Featured Replies

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கொள்கைக்கான கூட்டணி என்பதெல்லாம் காலாவதியாகி, இத்தனை தொகுதிகள் கொடுத்தால் இந்தக் கூட்டணி; இல்லையேல் அந்தக் கூட்டணி என்பதாக ஓட்டுக் கட்சிகளின் பிழைப்புவாதம் நாடெங்கும் நாறுகிறது. கூட்டணிக் குழப்பமே நாட்டின் மையமான அரசியலாக மாற்றப்பட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் இக்கட்சிகளும் ஆட்சிகளும் அடித்த கொள்ளைகள், அடக்குமுறைகள், துரோகங்கள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு வருகின்றன.

ஈழத் தமிழ் மக்கள் மீது சிங்களஇந்திய அரசுகள் நடத்திவரும் கொடூரமான போரை எதிர்த்து சவடால் அடித்துவந்த திருமாவளவன் 2 சீட்டுக்காக கருணாநிதியிடம் பம்மிப் பதுங்கிவிட்டார். மருத்துவர் அண்ணன் ராமதாசு, அன்புச் சகோதரி பாசிச ஜெயலலிதாவின் காலடியில் விழுந்து கிடக்கிறார். தமிழினவாதக் குழுக்களோ, காங்கிரசு துரோகிகளை தேர்தலில் வீழ்த்துவது என்ற பெயரில் பாசிச ஜெயா, பா.ஜ.க.வுக்கு மறைமுகமாகச் சேவை செய்யக் கிளம்பிவிட்டனர். இப்பிழைப்புவாதிகளின் துரோகங்கள் மூடிமறைக்கப்பட்டு, ஈழவிவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஓட்டுச்சீட்டு சந்தர்ப்பவாதக் கூட்டணியை தமிழகத்தின் மையமான அரசியலாக்கப்பட்டு வருகிறது.

காங்கிரசும், பா.ஜ.கவும் கடந்த தேர்தலில் வென்ற தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற முடியுமா என்பதே கேள்விக்குறியாகி விட்டது. தமிழகத்தில் முன்பு காங்கிரசு தி.மு.க. கூட்டணியிலிருந்த பச்சோந்தி ராமதாசின் பா.ம.க.வும் இடதுவலது போலி கம்யூனிஸ்டுகளும் கூட்டணியிலிருந்து வெளியேறி ஜெயலலிதாவுடன் கூட்டணி கட்டிக் கொண்டுள்ளனர். ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவியின் கட்சி காங்கிரசின் வாக்கு வங்கிகளைச் சிதறடித்து விடும் என்று கூறப்படுகிறது. உ.பி.யில் முலயம்சிங், பீகாரில் லல்லுபிரசாத் யாதவ் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் காங்கிரசுக்கு அற்பமான இடங்களை மட்டுமே ஒதுக்கியுள்ளனர். மகாராஷ்டிராவில், சரத்பவார் கட்சியும் காங்கிரசும் கூட்டணி கட்டிக் கொண்டுள்ள போதிலும், இன்னமும் தொகுதிப் பங்கீட்டில் கழுத்தறுப்புகள் நீடிக்கின்றன. இதேபோல, மே.வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுடன் காங்கிரசு கட்சி கூட்டணி கட்டிக் கொண்டுள்ள போதிலும், தொகுதிப் பங்கீட்டில் நாய்ச் சண்டை தொடர்கிறது.

காங்கிரசின் நிலைமை இப்படியிருக்க, பா.ஜ.க.வின் நிலைமையோ அதைவிடக் கேவலமாக உள்ளது. பா.ஜ.க.வில் நாற்காலியைப் பிடிப்பதற்கான கோஷ்டிச் சண்டை புழுத்து நாறுவது ஒருபுறமிருக்க, ஒரிசாவில் பா.ஜ.க.வுடன் கூட்டணி கட்டிக் கொண்டிருந்த பிஜு ஜனதா தளம் இப்போது பா.ஜ.க.வைக் கை கழுவி விட்டது. மகாராஷ்டிராவில் சிவசேனாவும், பா.ஜ.க.வும் கூட்டணிக் கட்டிக் கொண்டாலும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறிகள் நீடிக்கின்றன. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் மக்களிடம் நிலவும் அதிருப்தி காரணமாகவும், கட்சியில் புழுத்து நாறும் கோஷ்டி சண்டைகள் காரணமாகவும் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் சுருங்கிவிட்டன.

இப்படி பா.ஜ.க.வும் காங்கிரசும் பலவீனப்பட்டுப் போயுள்ள நிலையில், அவற்றுக்கு மாற்று என்ற பெயரில் காங்கிரசு பா.ஜ.க.வுடன் கூட்டணி சேராத பிழைப்புவாதக் கட்சிகளைக் கொண்ட மூன்றாவது அணியை இடது வலது போலி கம்யூனிஸ்டுகள் உருவாக்கியுள்ளனர். ‘இந்த மூன்றாவது அணியிலுள்ள கட்சிகள் மொத்தத்தில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டால், நாடாளுமன்ற தொங்கு நிலை ஏற்பட்டு, இந்த அணியின் ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படும். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு உருவாகும் புதிய கூட்டணியால் இந்த அணியே ஆட்சியில் அமரும்’ என்று போலி கம்யூனிஸ்டுகள் வாக்கு சதவீத கணக்கு போடுகின்றனர்.

இதனால் தற்போதைய, தேர்தல் கூட்டணியை விட, தேர்தலுக்குப் பிறகு உருவாகும் கூட்டணிதான் பெருத்த எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்துள்ளது. ஒன்று, போலி கம்யூனிஸ்டுகள் மற்றும் மூன்றாவது அணியிலுள்ள கட்சிகளின் ஆதரவோடு காங்கிரசு ஆட்சி அமைவது; இரண்டு, காங்கிரசின் ஆதரவோடு போலி கம்யூனிஸ்டுகள் மற்றும் மூன்றாவது அணியிலுள்ள கட்சிகளின் ஆட்சி அமைவது; மூன்று, பா.ஜ.க.வுக்குக் கூடுதல் இடங்கள் கிடைத்தால் மூன்றாவது அணியிலுள்ள கட்சிகள் அதனுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி கட்டிக் கொண்டு ஆட்சியமைப்பது என்கிற வாய்ப்புகளே நிலவுகின்றன.

இதிலே, பா.ஜ.க., காங்கிரசு மட்டுமின்றி, மூன்றாவது அணியுடனும் கூட்டணி சேராமல், தனி ஆவர்த்தனம் செய்கிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி. அதேசமயம், மூன்றாவது அணியுடன் நட்பும் பாராட்டுகிறார். பா.ஜ.க. காங்கிரசு அல்லாத மூன்றாவது அணி ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைத்தால், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் தன்னையே பிரதமராக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். அவர் மட்டுமல்ல; போலி கம்யூனிஸ்டுகளும் மூன்றாவது அணியிலுள்ள கட்சிகளின் தலைவர்களும் தேர்தலுக்கப் பிந்தைய இழுபறியில் தாமும் பிரதமராகி விடலாம் என்று நப்பாசையுடன் கணக்கு போடுகின்றனர்.

மூன்றாவது அணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைப்பது கடினம்தான் என்றாலும், ஒருவேளை காங்கிரசு ஆதரவு ஆட்சிமைக்க வாய்ப்பு கிடைத்தால், அல்லது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் காங்கிரசுக்கு ஆதரவளிக்க நேர்ந்தால், இடதுசாரிகள் இம்முறை மைய அரசில் பங்கேற்க வேண்டும் என்று உபதேசித்திருக்கிறார், பழம் பெரும் சி.பி.எம். தலைவரான ஜோதிபாசு. இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் எந்த ஆட்சி அமைந்தாலும் அந்த ஆட்சியை வெளியிலிருந்து கண்காணித்து நெறிப்படுத்தும் வேலையை மட்டும் செய்து கொண்டிராமல், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில், அந்த ஆட்சியில் பங்கேற்கும் கூடுதல் பொறுப்பையும் இடதுசாரிகள் ஏற்க வேண்டும் என்றும், 1996இல் நடந்ததைப் போல ‘வரலாற்றுத் தவறை’ச் செய்து விடக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

1996இல் சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவரும் மே.வங்க முதல்வருமான ஜோதிபாசுவைப் பிரதமராக்க மூன்றாவது அணியின் கட்சிகள் பரிந்துரைத்த போது, சி.பி.எம். கட்சித் தலைமை அதை ஏற்காமல் ‘வரலாற்றுத் தவறு’ என்று சாடி, தடுத்து நிறுத்தி விட்டது. அப்போதைய சி.பி.எம். கட்சித் திட்டத்தில், மாநில அரசில் சி.பி.எம். கட்சி பங்கேற்கலாம் என்ற விதி இருந்தபோதிலும், மைய அரசில் பங்கேற்பது பற்றி குறிப்பாக எந்த விதியும் வகுக்கப்படவில்லை என்று அப்போது கட்சித் தலைமை தனது நிலையை நியாயப்படுத்தியது. பின்னர் 2000வது ஆண்டில் நடந்த கட்சியின் சிறப்புப் பேராயத்தில் இந்த விதி திருத்தப்பட்டு, மைய அரசிலும் பங்கேற்கலாம் என்று மாற்றப்பட்டது. அதைக் காட்டியே இப்போது ஜோதிபாசுவும் மீண்டும் அந்த வரலாற்றுத் தவறைச் செய்து விடக் கூடாது என்று கட்சிக்கு வழிகாட்டுகிறார். இதை வரவேற்று பக்கமேளம் வாசிக்கத் தொடங்கிவிட்டார், சி.பி.எம்.மின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான யெச்சூரி. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டங்களை நடத்தி புரட்சி செய்யப் போவதாக நாடகமாடி வந்த சி.பி.எம். கட்சி, கடைசியில் மைய அரசிலும் பங்கேற்று நாற்காலி சுகம் தேடும் இழிந்த நிலைக்குச் சென்று விட்டது.

எந்தக் கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றும், மீண்டும் நாடாளுமன்ற தொங்குநிலைதான் ஏற்படும் என்றும், தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய கூட்டணி உருவாகி நிலையான ஆட்சி அமையும் என்றும் முதலாளித்துவ அரசியல் நோக்கர்களும் போலி கம்யூனிஸ்டுகளும் மதிப்பீடு செய்கின்றனர். ஆனால் தொங்கு நிலையானாலும் தொங்கா நிலையானாலும் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக மூடுதிரையின் பின்னே, அதிகாரவர்க்க போலீசு இராணுவ நீதித்துறை அடங்கிய அரசு எந்திரம் இருந்து கொண்டு நிரந்தரமாக நிர்வாகத்தை நடத்தி வருகிறது. அதைக்கொண்டு ஆளும் வர்க்கங்கள் சட்ட ரீதியாகத் தமது அடக்குமுறை சுரண்டலை நடத்தி வருகின்றனர். இத்தகைய அரசியலமைப்பு முறை தொடர்வதற்குத் தடையாகி நாடாளுமன்ற அராஜகம் முற்றினால், ஆளும் வர்க்கங்கள் பாசிச அல்லது இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவவும் தயங்காது. உலகெங்கும் முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியின் தர்க்க ரீதியான தவிர்க்க முடியாத அங்கமாகவே இது தொடர்கிறது. ஆகவே, தொங்கு நிலையில் இருப்பது நாடாளுமன்ற அமைப்பு முறை மட்டுமல்ல; முதலாளித்துவ ஜனநாயக அரசியலமைப்பு முறை முழுவதும்தான்.

இத்தகைய கேடுகெட்ட முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையைத்தான் இப்போலி கம்யூனிஸ்டுகள் முட்டுக் கொடுத்து தூக்கிப் பிடிக்கின்றனர். அழுகி நாறும் முதலாளித்துவ அமைப்பு முறைக்குள்ளேயே தீர்வுகளைத் தேடி, நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பது, வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவது என்ற பெயரில் காங்கிரசுக்கு வால் பிடித்துச் செல்கின்றனர்.

தேர்தலுக்குப் பின்னரும் வகுப்புவாத சக்திகள் அதிகாரத்துக்கு வருவதைத் தடுப்பது என்ற பெயரில் காங்கிரசை உள்ளிருந்தோ, வெளியிலிருந்தோ ஆதரிக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர்.

இப்@பாலி கம்யூனிஸ்டுகள் காங்கிரசுடன் முரண்பட்டு நிற்பதாகக் காட்டிக் கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமல்ல; அந்நிய நாடுகளுடனான எந்தவொரு ஒப்பந்தத்தையும் விவாதித்து, வாக்கெடுப்பு நடத்தி நாடாளுமன்ற ஒப்புதல் பெற்ற பிறகுதான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறுவதற்கு இந்திய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. அமெரிக்காவுடனான இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமல்ல; உலக வங்கிஐ.எம்.எஃப் மற்றும் உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றுடனான ஒப்பந்தங்களும் இப்படித்தான் இந்நிய நாடாளுமன்றத்துக்கு மேலானதாக, அதன் வாக்கெடுப்பு விவாதத்துக்கு வராமலேயே நடைமுறைப்படுத்தப் படுகின்றன. அந்நிய நாடுகளுடனான துரோகத்தனமான ஒப்பந்தங்களை எதிர்த்து முறியடிக்கும் அதிகாரமே இல்லாத நாடாளுமன்றம், நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகமிழைத்து வரும் ஓட்டுக் கட்சிகள் இவை பற்றிய உண்மைகளை மக்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே தேர்தல் நாடகம் முதல் நம்பிக்கை வாக்கெடுப்பு, வெளிநடப்பு முதலான கூத்துக்கள் நடக்கின்றன.

காங்கிரசுடனான தேர்தல் அரசியல் கூட்டு வைத்துக் கொள்வதற்காகவும் மதச்சார்பின்மை போலி நாடகமாடுவதற்காகவும் மட்டுமே ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதாக இப்போலி கம்யூனிஸ்டுகள் பித்தலாட்டம் செய்து வருகின்றனர். மற்றபடி, பாபர் ம‹தி இடிப்பு முதல் சேது சமுத்திர திட்ட எதிர்ப்பு வரை எல்லா விவகாரங்களிலும் இந்துத்துவா கும்பலுடன் சமரசப் போக்கைக் கடைபிடிப்பதே இப்போலி கம்யூனிஸ்டுகளின் கொள்கையாக உள்ளது. மும்பை, குஜராத், ஒரிசா என மதச் சிறுபான்மையினருக்கு எதிராக இந்துவெறி பயங்கரவாதிகள் நடத்திய படுகொலைஅட்டூழியங்களுக்கு எதிராக அறிக்கைகள்அடையாள எதிர்ப்புக்கு மேல் இப்போலிகள் வேறெதுவும் செய்யவில்லை. அதேபோல, மதச்சார்பின்மை நாடகமாடி முஸ்லிம் ஆதரவாளர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டு, ஓட்டுக்காக இஸ்லாமிய மதவெறியர்களின் நிலையைச் சந்தர்ப்பவாதமாக ஆதரிக்கும் இப்போலி கம்யூனிஸ்டுகளும் அதன் இடது சாரி அரசும் வங்கதேச மருத்துவரும் எழுத்தாளருமான தஸ்லிமா நசுரீனை நாடு கடத்தின.

தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் எனும் ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கத்துக்கு மனிதமுகம் கொடுப்பது என்கிற தோரணையோடு, மாற்றுக் கொள்கை என்ற பெயரில் மறைமுக ஆதரவளிப்பது; மாநிலத்தைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரில் சிங்கூர், நந்திகிராம விவசாயிகளிடமிருந்து விலைநிலங்களைப் பிடுங்கி அவர்களை ஒடுக்கி, பன்னாட்டு உள்நாட்டுத் தரகு முதலாளிக்குத் தாரை வார்ப்பது; சிறு வணிகர்களை ஒழிக்கும் ரிலையன்ஸ், வால்மார்ட் முதலான ஏகபோகங்களுக்கு நடைபாவாடை விரிப்பது என்று பலநூறு வழிகளில் இப்போலி கம்யூனிஸ்டுகள் மக்கள் விரோதநாட்டு விரோத நடைமுறையைக் கொண்டுள்ளனர். மொத்தத்தில், போலி கம்யூனிஸ்டுகளுக்கும் ஆளும் வர்க்க கூட்டணிக் கட்சிகளுக்குமிடையே அடிப்படையில் வேறுபாடு ஏதுமில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, மதச்சார்பற்ற மூன்றாவது அணி, இடது சாரி கூட்டணி என்ற வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டு விரோதமக்கள் விரோத மறுகாலனியாதிக்க கூட்டணி ஒன்று மட்டுமே ஓட்டுக் கட்சிகளிடம் உள்ளது.

இதனால்தான் எந்தவொரு ஓட்டுக் கட்சிக்கும் அவற்றின் கூட்டணிக்கும் ஆதரவு அலை வீசவில்லை. எதிர்ப்பு அலையுமில்லை. ஓட்டுக் கட்சிகளும் முன்னிறுத்திப் பேச முக்கியமான விசயமோ, கொள்கையோ இல்லை.

போலி கம்யூனிஸ்டுகளின் மூன்றாவது அணியில் பங்கேற்கும் கட்சிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தவெறி பா.ஜ.க. வுடன் மாறிமாறி கூட்டுச் சேர்ந்தவைதான். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் ஏகாதிபத்திய மறுகாலனியாக்கத்துக்கு விசுவாசமாகச் சேவை செய்பவைதான். சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக் ஆகியோர் அப்பட்டமான ஏகாதிபத்திய அடியாட்களாகச் செயல்பட்டு, மக்கள் போராட்டங்களை மிருகத்தனமாக ஒடுக்கியவர்கள். பாசிச ஜெயலலிதாவோ பார்ப்பன பாசிசத்தையும் தமிழின எதிர்ப்பையும் தனது சித்தாந்தமாகவே கொண்டுள்ளார். மக்களால் வெறுத்தொதுக்கப்படும் இத்தகைய கழிசடை அரசியல் சக்திகளுக்கு மதச்சார்பற்ற முற்போக்கு அலங்காரம் செய்து மீண்டும் இச்சக்திகள் அரசியல் அரங்கில் வேரூன்ற மூன்றாவது அணியின் மூலம் போலி கம்யூனிஸ்டுகள் ஏற்பாடு செய்து தருகின்றனர். அதன் மூலம் இம்மக்கள் விரோத பாசிச சக்திகளை மக்கள் நலனில் அக்கறை கொண்ட முற்போக்கு சக்திகளாகக் காட்டி மக்களை ஏ#த்து வருகின்றனர்.

அனைத்துலக முதலாளித்துவத்தின் பெருந்தோல்விபொருளாதாரச் சரிவின் காரணமாக எழும் நெருக்கடிகளின் சுமைகளை ஏகாதிபத்தியவாதிகள் உழைக்கும் மக்கள் மீது சுமத்திவருவதை எதிர்த்து ஏகாதிபத்திய நாடுகளிலேயே மக்கள் போராட்டங்கள் வெடித்துப் பரவுகின்றன. முதலாளித்துவத்தை எதிர்த்து சோசலிசமே ஒரே தீர்வு என்று மக்கள் போராடி வரும் நிலையில், இந்தியாவிலும் அத்தகைய போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டிய சூழலில், மனித முகம் கொண்ட மாற்றுப் பொருளாதாரத் திட்டம் என்ற பெயரில், ஏகாதிபத்திய மறுகாலனியாக்கத்துக்கு விசுவாசமாக இப்போலி கம்யூனிஸ்டுகள் செயல்பட்டு வருகின்றனர். மைய அரசில் தாமும் பங்கேற்பதன் மூலம், மக்கள் போராட்டங்களைத் திசை திருப்பி நாடாளுமன்றத் தேர்தல் மூலம் இன்றைய முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே தீர்வுகாண முடியும் என பிரமையூட்டி மக்களை மோசடி செய்து வருகின்றனர்.

இப்படி நாடாளுமன்ற மோசடி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையூட்டி, பாசிசபிழைப்புவாத சக்திகளுக்கு முற்போக்கு அலங்காரம் செய்து சந்தர்ப்பவாத கூட்டணி கட்டி மக்களை ஏய்த்து வரும் இப்போலி கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தாமல், மறுகாலனியாக்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவே முடியாது. எந்த அதிகாரமோ, உரிமையோ இல்லாத உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சிக்கு”ரப்பர் ஸ்டாம்ப்”பாகச் சீரழிந்து விட்ட நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தில், மறுகாலனியாதிக்கத் தாக்குதலுக்குத் தீர்வு காணவும் முடியாது. போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்து, நாடாளுமன்ற அரசியலமைப்பு முறைக்கு வெளியே மக்கள் போராட்டங்களின் வழியே ஓர் அரசியல் புரட்சியைச் சாதிப்பதன் மூலம் மட்டுமே இம் மறுகாலனியாதிக்கத்தை முறியடிக்க முடியும். பதவிப்பித்து கொண்ட இப்போலி கம்யூனிசத் துரோகிகளாகத் திரைகிழித்து தனிமைப்படுத்துவதன் மூலம் மட்டுமே இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் முடியும்.

வினவு தளத்திலிருந்து: http://vinavu.wordpress.com/2009/04/17/elec0907/

இதன் மறுமொழிகள் : http://vinavu.wordpress.com/2009/04/17/elec0907/#comments

தொடர்புடைய பதிவுகள்:

ஈழமும் இந்திய தேர்தலும் - என்ன செய்ய வேண்டும் ?

ஈழம்: தலைவர்களின் ‘தியாகம்’ - தமிழருவி மணியன் !

இந்திய அரசியலின் இழிநிலை: ஆ.விகடனில் தோழர் மருதையன் !

புரட்சிக்கு ‘சே’குவேராவும் பொறுக்கி தின்ன ‘ஜெ’யலலிதாவும் !

தேர்தல் 2009 - சி.பி.ஐ.க்கு மாமியும், சி.பி.எம்.க்கு சாமியும் !

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !

அமர்நாத் - சோம்நாத்

Edited by வினவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.