Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அரசின் மெளனமும் அதன் மறுதலையான செயற்பாடுகளும்: தாயகத்திலிருந்து கா.வே. கரிகாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசின் மெளனமும் அதன் மறுதலையான செயற்பாடுகளும்: தாயகத்திலிருந்து கா.வே. கரிகாலன்

[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2009, 10:11.14 AM GMT +05:30 ]

ஈழத்தமிழர்கள் திட்டமிட்டு இந்திய, ஸ்ரீலங்கா கூட்டுப்படைகளால் இனப்படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துமாறு தமிழ்நாட்டு மக்களும், புலம்பெயர் ஈழத்து உறவுகளும் இரவு பகலாகப் போராட்டங்களை முன்னெடுத்து விடுத்த கோரிக்கைகளுக்கு இந்திய அரசின் மெளனமும் அதன் மறுதலையான செயற்பாடுகளும் அவர்களின் உண்மையான முகத்தினை இன்னும் வெளிப்படையாகக் காட்டியிருக்கின்றது.

கடந்த வாரம் சிறிலங்காவிற்கு விஜயம் செய்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கே.என்.நாராயணன், வெளிவிவகாரச் செயலர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் சிறிலங்கா அதிபரையும், அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்கள். ஆனால் போர்நிறுத்தத்தைப் பற்றி எதுவுமே பேசவில்லையென சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச நேற்றைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்க்கு இன்னும் வலுச்சேர்க்கும் வகையில் முந்தைய வாரத்தில் இராணுவப் பேச்சாளர், உதய நாணயக்காரவின் அறிக்கையும் அமைந்திருந்தது. அவர் கூறியதாவது "இந்தியா எமக்கு இந்தப் பயங்கரவாதத்திற்கெதிரான போரில் பெரிதும் உதவுகின்றது, நவீன தொழிநுட்பத்தில் உதவி வருகிறது, எமது படைகளுக்குப் பயிற்சியளித்து வருகிறது, நானும் இந்தியாவில் மூன்று பயிற்சி நெறிகளை முடித்திருக்கிறேன், அதன் பின் பாகிஸ்தானிலும் சில பயிற்சி நெறிகளை முடித்திருக்கிறேன்.."

இந்த மலையாளக் கூட்டம் சிறிலங்காவுக்கு சென்றதன் நோக்கம், போர் நிறுத்துவதற்கல்ல. எதிர்வரும் 17ம் திகதியுடன் நடப்பு அரசாங்கத்தின் அதிகாரங்கள் காலாவதியாகின்றது. அதன் பின்பு எந்தக்கட்சி ஆட்சியமைக்கும், எந்தக்கட்சி எதிர்கட்சியாகும் என்பதெல்லாம் கூறமுடியாது. (அவர்களுக்கே தெரிந்திருக்கும் அடுத்த தடவை காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்காதென்று)

ஆகவே இந்தப் பத்துப் பதினைந்து நாட்களுக்குள் புலிகளை ஒழிக்கும் போரைத் தீவிரப் படுத்தி, எல்லாத் தமிழர்களையும் அழித்து, முடியுமானால் தமிழர்களின் தலைவர் பிரபாகரனையும் பிடித்தோ பிணமாகவோ எங்களிடம் தாருங்கள், அதற்காக உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்கள், நாம் தருவதற்குத் தயாராவிருக்கிறோம். குறிப்பிட்ட இந்த நாளுக்குள் இதையெல்லாம் முடித்துவிடுங்கள், இதற்காக எந்த ஆயுதத்தையும் பயன்படுத்துங்கள். எனறே மகிந்த சகோதரர்களிடம் கூறியிருக்கிறார்கள் அவர்கள். ஆக அவர்களின் விஜயம் இத்தோடு முடிந்துவிட்டது, போர்நிறுத்தத்தைப் பற்றி எதுவுமே பேசவில்லை என்பது உண்மைதான்.

இதற்க்கு எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் இந்திய மத்திய அமைச்சர் சிதம்பரம் சென்னையில் நடந்த கூட்டமொன்றில் பேசியதை இங்கே நினைவுபடுத்த நான் விரும்புகின்றேன். “இலங்கை இந்தியாவின் அடிமை நாடல்ல, நம் காலனியாதிக்க நாடும் அல்ல, அது ஒரு இறையாண்மை மிக்க தனி சுதந்திர நாடு. எனவே ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மீக உரிமை இந்தியாவிற்கு இல்லை” என்று மத்திய அமைச்சர் சிதம்பரம் விளக்கமளித்துள்ளார். இவ்விளக்கத்தால் தமிழினம் அழுவதா? இல்லை சிரிப்பதா? ஏனெனில் இந்திய மத்திய மந்திரியின் திருவாயிலிருந்து வந்த இந்தத்திவ்விய பிரபஞ்சத்திலே தேனினுமினிய வார்த்தைதான் இறையாண்மை...

தனது வாதத்திற்கு வலு சேர்க்க காஷ்மீர், அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் பிரிவினை கோரி போராடும் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு மறுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதில் கூட ஒரு உண்மையை மறைத்துள்ளார் சிதம்பரம். நாகா தேசிய விடுதலை முன்னணியுடன் ஒரு போர் நிறுத்தம் செய்து கொண்டுதான் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

அமைச்சர் சிதம்பரம் கூறியதில் உண்மையும், அடிப்படையும் எந்த அளவிற்கு உள்ளது என்பது விபரமறிந்த எவருக்கும் தெரியும். ஒரு பிரச்சினையில் கடைசி பத்தாண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகள் கூட மக்கள் மனதில் இருக்காது என்று உறுதியாக நினைத்தால் மட்டுமே ஒரு அமைச்சரால் இவ்வாறு பேச முடியும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், ஸ்ரீலங்கா அரசிற்கும் இடையே 2002ஆம் ஆண்டு பெப்ரவரியில் போர் நிறுத்தம் ஏற்பட்டதும், அதனைத் தொடர்ந்து நோர்வே நாட்டின் அனுசரணையுடனும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஜப்பான் ஆகியன மட்டுமின்றி, இந்தியாவின் மெளன ஆதரவுடனும் அமைதி பேச்சு நடைபெற்றது அனைவருக்கும் நினைவிருக்கும்.

முதலில் தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் அந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது, அதன்பிறகு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது, பிறகு சிங்கப்பூரிலும், கடைசியாக ஜெ‌‌னீவா நகரிலும் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் முதலில் இருந்து இறுதிவரை தான் ஒப்புக்கொண்ட எதையும் ஸ்ரீலங்கா அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பதும், அதன் காரணமாகவே எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லையென்பதும் தமிழர் இனப் பிரச்சனை குறித்து அறிந்த, ஆர்வத்துடன் அவதானித்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.

இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ‘ஆயுதத்தை கீழே போட்டுவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு வா’ என்றா ஸ்ரீலங்கா அரசு நிபந்தனை விதித்தது? இல்லையே. அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்த நோர்வேயோ அல்லது ஆதரவளித்த (பேச்சுவார்த்தையை ஆதரித்த இந்தியா உட்பட) எந்த நாடாவது அப்படிப்பட்ட நிபந்தனையை விதித்தனவா? இல்லையே. பிறகு எந்த அடிப்படையில் அமைச்சர் சிதம்பரம், ‘புலிகள் ஆயுதத்தை கைவிடும்வரை' பேச்சுவார்த்தைக்கு வற்புறுத்த முடியாது என்று கூறுகிறார்?

ஆக, ஈழத்தமிழருக்கும் தமிழகத் தமிழருக்கும் இதெல்லாம் மறந்துவிட்டிருக்கும் என்றோ அல்லது அதைப்பற்றியெல்லாம் தான் மறந்த நிலையிலோதான் இவ்வாறு அன்று சிதம்பரம் பேசியிருக்க முடியும். பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியா தமிழக சட்டப்பேரவையிலும், வெளியிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதா? பேரணிகளும், பொதுக் கூட்டங்களும், கடையடைப்பும், மனித சங்கிலிப் போராட்டங்களும் நடத்தப்பட்டதா? கோரிக்கையை பேசாமல், கேட்காததை எதற்குப் பேசுகிறார் சிதம்பரம்?

போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் ஒருமுறையல்ல மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், தமிழக முதலமைச்சர் கருணாநிதி பேசியதென்ன? முதலில் அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். பிறகு அவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை (சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் - அதுவும் நோர்வே என்று குறிப்பிட்டே) நடத்தப்பட வேண்டும், அதன்மூலம் ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும். இங்கிருந்து தீ்ர்வு என்று எதையும் (1987ம் ஆண்டின் ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என்பதை நினைவில் கொள்க) திணிக்கக் கூடாது என்றுதானே கூறினார்? உண்மை இப்படியிருக்க பேச்சுவார்த்தை நடத்து என்று வற்புறுத்த முடியாது என்று கூறுவது எதற்கு?

இறையாண்மை என்பதென்ன?

“இலங்கை இந்தியாவின் அடிமை நாடல்ல, அது இறையாண்மைமிக்க தனி சுதந்திர நாடு” என்று கூறுகிற அமைச்சர் சிதம்பரம், ஒரு நாட்டின் இறையாண்மை என்பது, அந்நாடு உரிமை கேட்டுப் போராடும் தனது நாட்டு மக்களாக உள்ள ஒரு தேசிய இனத்தை முற்றிலுமாக அழிப்பதற்குக் கூட உரிமையளிப்பதா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும்.

ஒரு நாட்டின் இறையாண்மை என்பது என்ன? தனது சுதந்திரத்தை காத்துக்கொள்ளவும், தனது மக்களின் நலனை பேணவும், தனது எல்லைகளைக் காத்துக் கொள்ளவும் அதற்கு உள்ள உரிமைதானே இறையாண்மை என்பது. அந்த உறுதியான, அசைக்க முடியாத தன்னுரிமை அதற்கு எங்கிருந்து கிடைக்கிறது? அல்லது பெறுகிறது? எந்த மக்களைக் காக்கவும், அவர்களின் நலனைப் பேணவும், அந்நிய தாக்குதலில் இருந்த தன்னை காத்துக் கொள்ளவும் அரசமைப்பு ரீதியாக பெற்ற உரிமைதானே அது? அதனை உரிமை கேட்டு போராடிய - தனது நாட்டின் அங்கமாக, தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் ஒரு இனத்தை அழிப்பதற்கா? ஒரு பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த, ஒரு சிறுபான்மை இனத்தை முற்றிலுமாக அழித்திடவா அதற்கு இறையாண்மை உதவும்? நமது நாட்டின் குறிப்பிடத்தக்க சட்ட நிபுணர்களில் ஒருவரான அமைச்சர் சிதம்பரம் கூறும் விளக்கம், இராஜபக்ச அரசு மேற்கொண்டுவரும் இன அழித்தலை இறையாண்மையின் பெயரில் நியாயப்படுத்துவதாக அல்லவா உள்ளது?

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்று அமைச்சர் சிதம்பரமோ அல்லது காங்கிரஸ் கட்சியோ தமிழக மக்களிடம் கூறிடத் தயாரா? அதிபர் ராஜபக்சயின் சகோதரரும், ஸ்ரீலங்கா அரசின் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச, ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் இனப் படுகொலை குற்றம் சாற்றப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளதே? இதை அறிவாரா சிதம்பரம்? சொந்த நாட்டு மக்கள் மீது வெள்ளை பார்பரஸ் குண்டுகளைத் தாக்கி எரித்துக் கொல்லும் அரக்க நெஞ்சு கொண்ட அதிபர் ராஜபக்சவுடன், நல்லுறவு பற்றிப் பேசியதாக அறிக்கைவிடும் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கும் இறையாண்மை என்பதற்கு இதுதான் பொருளோ?

ராஜபக்ச, ஜெயவர்த்தனே உள்ளிட்ட ஸ்ரீலங்கா தலைவர்கள் கொண்டுள்ள இனவெறி மனப்பாங்கை காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்து கொள்கிறதோ? அதனால்தான், அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரை சுட்டுக் கொன்றவர்கள் இரண்டு சீக்கியர்கள் என்பதற்காக, டெல்லிப் பட்டணத்தில் 3,000 அப்பாவி சீக்கியர்களைக் கொன்று குவித்தனரோ? அந்தச் செயல் இறையாண்மைக்கு கட்டியம் கூறுகின்றதோ? காங்கிரஸ் கட்சியும், அமைச்சர் சிதம்பரமும்தான் விளக்கிட வேண்டும்.

இந்தியாவின் இறையாண்மை ஸ்ரீலங்காவால் மீறப்படவில்லையா? இறையாண்மை குறித்து இவ்வளவு ஆழமாக பேசிய அமைச்சர் சிதம்பரம், தமிழக மீனவர்கள் 400க்கும் அதிகமானவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஸ்ரீலங்கா கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனரே, அப்போது இந்தியாவின் இறையாண்மை என்ன செய்து கொண்டிருந்தது என்று விளக்கியிருக்கலாம். அதனைச் செய்யவில்லை. அப்படி ஒரு நிகழ்வு வேறு எந்த ஒரு மாநில மீனவருக்கும், ஏன் இந்தியாவின் வரலாற்று எதிரியான பாகிஸ்தான் மீனவருக்கும் கூட நேராதது ஏன் அமைச்சரே?

இந்திய நாட்டின் மீனவர்கள் மீது, பலமுறை இந்திய கடற்பகுதிக்குள்ளேயே அத்துமீறி வந்து சிறிலங்க கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டுக் கொன்றனரே, அப்போதெல்லாம் இந்த இறையாண்மை ஏன் மத்திய அரசிற்கு நினைவிற்கு வரவில்லை? இந்திய கடற்படைக்கு ஏன் அந்த எண்ணம் பிறக்கவில்லை? இந்திய கடலோர காவற்படை இந்திய மீனவர்களைக் காப்பாற்ற ஏன் முன்வரவில்லை? இது தமிழ்நாட்டின் மீனவர்கள் மனதில் மட்டுமல்ல, எல்லாத்தமிழ்மக்கள் மனதிலும் ஏற்பட்டுள்ள கேள்வி என்பதை அமைச்சர் சிதம்பரம் புரிந்துகொள்ள வேண்டும்.

சிறிலங்காவிற்கு யார் துணிச்சலைக் கொடுத்தது? இப்படிப்பட்ட துணிச்சல் உங்கள் எதிரிநாடான பாகிஸ்தானிற்கு இல்லையே ஏன்? தமிழக மீனவர்களின் உரிமை, ஈழத் தமிழர்களின் நலன் ஆகிய இரண்டையும் விட்டுத் தந்துவிட்டு, சிங்கள மேலாதிக்க அரசுடன் ஒரு நட்பை உறுதி செய்கிறது மத்திய அரசு என்பதை, கடந்த வாரம் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்த கே.என்.நாராயணன் விடுத்த அறிக்கையில் இருந்தே தெளிவாகத் தெரிந்ததே.

அந்த அறிக்கையில் எங்குமே போர் நிறுத்தம் பற்றி பேசவில்லை. மத்திய அரசை, காங்கிரஸை தமிழக மக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள், அவர்களை இல்லாத காரணங்களைக் கூறி குழப்பிவிட முனைவது பயனைத் தராது. தமிழக மக்களை விட்டு எங்கோ சென்றுவிட்டது காங்கிரஸ் கட்சி. அது எந்த இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை அவர்களின் வாக்குப் பலம் காட்டும்.

அதுவே நாளைய தீர்ப்பும், ஈழத்தமிழராகிய எங்களின் எதிர்பார்ப்பும்.

நன்றி - தமிழ்வின்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.