Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவோயிஸ்ட்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்!

ராணுவத்தை அனுப்பி, சொந்த தேசத்து மக்கள்மீதே கொலைவெறித் தாக்குதல் நடத்தும் கொடூரம் ஈழத்தில் நடந்தபோது அதைக் கண்டித்த, கொதித்தெழுந்த மனிதாபிமானிகள் பலர் இப்போது மேற்கு வங்காளத்தில் நடப்பது என்ன என்பதை குறைந்தபட்சம் தெரிந்துகொள்ளக்கூட விரும்பவில்லை.

‘அது மாவோயிஸ்ட் வன்முறை...’ அவ்வளவுதான்! வழக்கம்போல் இந்த இங்கிலீஷ் மீடியா, போர்க்களத்தில் நின்று செய்தி சேகரிப்பது போல சாகசத்தனங்களில் ஈடுபட்டிருக்கிறது. ஏதோ எல்லையில் இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவமும்

சண்டையிடுவதை வர்ணிப்பது போல் இருக்கிறது அவர்களின் செய்கைகள். லால்கர் என்ற நடுத்தரமான நகரில் இருக்கும் ஆள்நடமாட்டமில்லாத ஒரு போலீஸ் ஸ்டேஷனைப் பிடித்ததும், பரபரப்பான ஃபிளாஷ் நியூஸ்! ஏதோ போரில் சீன வீரர்களை துரத்திவிட்டு சீனப் பெரும்சுவரைக் கைப்பற்றியது போன்ற கூக்குரல்கள்! மாநில முதல்வர் உடனடியாக போலீசுக்கும் துணை ராணுவப் படைக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார். இந்த ஆரவாரங்களுக்கு நடுவே சந்தாலி பழங்குடியினரின் கூக்குரல்கள் யார் காதுகளிலும் விழவில்லை...

இந்தியாவிலேயே நியாயமான ஏழைப் பங்காளனாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி 32 ஆண்டுகளாக நடக்கும் ஒரு மாநிலத்தில், ‘உங்கள் தயவே எங்களுக்கு வேண்டாம்’ என 50 கிராமங்கள் இந்தியாவின் ஆதிக்கத்திலிருந்து தங்களை துண்டித்துக் கொள்ளவேண்டிய அவசியம் ஏன் எழுந்தது? அரசு அதிகாரிகளையும் போலீசாரையும் அவர்கள் ஏன் தங்கள் கிராமங்களிலிருந்து துரத்தினர்? போலீஸ் ஸ்டேஷன்களை ஏன் பூட்டினர்? மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்களை ஏன் கொளுத்தினர்? பதினோரு மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர்களை ஏன் கொலை செய்தனர்?

இந்தக் கேள்விகளுக்கான பதிலோடு, மாவோயிஸ்ட்கள் எப்படி, யாரால் உருவாக்கப்படுகிறார்கள் என்பதற்கான பதிலும் லால்கர் சம்பவங்களிலிருந்து கிடைக்கிறது!

மேற்கு வங்காளத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் இருக்கும் லால்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஐம்பது கிராமங்கள்தான் இந்த சர்ச்சைகளின் மையப்புள்ளி! பொதுவாக மேற்கு வங்காளத்தில் நிலவும் அவலங்கள், இது பழங்குடியினர் வாழும் பகுதி என்பதால் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ரோடு என்ற பெயரில் ஏதோ ஒன்று இருக்கும்; மழை பெய்தால் அது சகதிக்குட்டை ஆகிவிடும்; யாரும் நடக்கவோ, கிராமத்தை விட்டு வெளியில் போகவோ முடியாது.

தண்ணீர் என்ற பெயரில் பழுப்பாக ஏதோ ஒரு திரவம் வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே வரும்; மற்ற நாட்களில் குளம், குட்டையைத் தேடிப் போகவேண்டும். பல கிராமங்களில் மின்சாரம் கிடையாது. குழந்தைகள் படிக்க பள்ளிகள் சரியாகக் கிடையாது; மழைக்காலத்தில் ஒரு போகம் விவசாயம்; அப்போது கிடைக்கும் கொஞ்சம் கூலியை வைத்து வருஷம் முழுக்க சாப்பிட வேண்டும். தொழிற்சாலைகள் போன்ற வேறுவிதமான வேலைவாய்ப்புகள் கிடையாது. ஒரு குடும்பத்தின் தினசரி சராசரி வருமானம் வெறும் பன்னிரண்டு ரூபாய்... மூன்று டீயின் விலை இதைவிட அதிகம்!

இவ்வளவு பிரச்னைகளோடு வாழ்கிறவர்களுக்கு எப்போதாவது ஒருமுறை கோபம் வருமல்லவா..? அப்படி கோபம் வந்து, இவர்கள் போராட்டம் நடத்தி, மனு கொடுத்து பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள முயன்றதுதான் பிரச்னை ஆனது! எம்.பி., லோக்கல் எம்.எல்.ஏ, பஞ்சாயத்து தலைவர், ஜில்லா பரிஷத் தலைவர் என எல்லோருமே மார்க்சிஸ்ட் கட்சிக்காரர்கள்.

அதிகாரிகளை அவர்களிடமிருந்து பிரித்துப் பார்க்கமுடியாது! இவர்கள் எல்லோருமே, பழங்குடியினர் அடிப்படை வசதிகள் கேட்டு நடத்திய போராட்டத்தை, தங்கள் அதிகாரத்துக்கு எதிரான போராட்டமாக புரிந்துகொண்டனர். பிரச்னையே அதன்பிறகுதான்!

நம்ம ஊரில் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தி, உண்டியல் குலுக்குகிற மார்க்சிஸ்ட் கட்சி மேற்கு வங்கத்தில் வேறு முகம் காட்டுகிறது. கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக அவர்களைத் தவிர வேறு யாரும் அதிகாரத்துக்கு வந்தது கிடையாது என்பதால், கட்சியும் அரசாங்கமும் பிரிக்கமுடியாமல் இணைந்துவிட்டன. ‘ஹர்மத் வாஹினி’ என்ற குண்டர் படை மேற்கு வங்காளத்தில் ரொம்ப பாப்புலர். மார்க்சிஸ்ட் கட்சியின் அடியாள் பட்டாளம் இது! கட்சிக்கோ, ஆட்சிக்கோ எதிராக யாராவது போராட்டம் நடத்தினால், நூறு, இருநூறு பைக்குகளில் இந்த இளைஞர் படை கிளம்பிப்போகும்.

கண்மூடித்தனமாக தாக்கும். சமயத்தில் தாக்குதல் மோசமாகி, அடிபட்டவர் செத்தே போனாலும் இந்த இளைஞர்கள் கவலைப்பட மாட்டார்கள். அடிபட்டவர்கள் போலீஸில் புகார் செய்தால், ‘எங்கயாவது குடிச்சிட்டு போய் விழுந்தியா? உன்னைப் போய் யாருய்யா அடிச்சிருப்பா... போதையில உளறாதே’ என அதட்டி அனுப்பிவிடுவார்கள்.

சமயங்களில் தங்களிடம் போதுமான பைக்குகள் ஸ்டாக் இல்லை என்றால், போலீஸ் ஜீப்பை எடுத்துக்கொண்டுதான் இந்த ‘ஹர்மத் வாஹினி’ படை தாக்குதலுக்குக் கிளம்பும். போலீஸாரும் துணைக்குக் கூடப்போய் தங்கள் பங்குக்கு கொஞ்சம் பேரை அடிப்பார்கள். வீடுகளை சூறையாடுவதும் இவர்களது அரசியல் வாழ்க்கையில் சகஜமான விஷயம்!

இப்படியான ஒரு தாக்குதலுக்குப் பிறகு, ஜார்கண்ட், ஒரிசா என பக்கத்து மாநிலங்களில் செல்வாக்கோடு இருக்கும் மாவோயிஸ்ட் அமைப்பு, மிட்னாபூர் பகுதியில் தங்களுக்கு ‘தளம்’ அமையும் சூழல் ஏற்படுவதை உணர்ந்தது. கடந்த 99ம் ஆண்டிலிருந்தே மாவோயிஸ்ட்களின் ‘தேர்தல் புறக்கணிப்பு’ போஸ்டர்கள் இந்தப் பகுதியில் தென்பட ஆரம்பித்தன.

லோக்கல் மார்க்சிஸ்ட் தலைவர்கள் உடனே உஷாரானார்கள். ‘ரோடு சரியில்லை... குடிநீர் வசதி வேண்டும்’ என ரெகுலராக புகார்கள் எழுதிக்கொண்டு அரசாங்க ஆபீஸ்களுக்கு அலையும் இளைஞர்கள் சிலரது பெயர்ப் பட்டியலை போலீஸில் கொடுத்து, ‘இவர்கள் எல்லோரும் நக்சலைட்டுகள்’ என அடையாளம் காட்டினார்கள்.

அடுத்த நாளே அந்த இளைஞர்கள் சிறைக்குப் போக, ‘மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கைது’ என பேப்பரில் நியூஸ் வந்தது. இப்படியாக அடுத்தடுத்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் வேலை பார்த்தவர்கள்கூட நக்சலைட்டுகளாக முத்திரை குத்தப்பட்டு உள்ளே போனார்கள். லோக்கல் மார்க்சிஸ்ட் பிரமுகரை பகைத்துக்கொள்ளும் யாரும் நக்சலைட்தான்!

சிறைக்குப் போன பலரும், ஏற்கனவே கைதாகி சிறையிலிருந்த நிஜமான மாவோயிஸ்ட்களை சந்தித்து தீட்சை பெற்றுத் திரும்பினார்கள். ‘மாவோயிஸ்ட்’ என தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளும் ஒரு இளைஞன் அடுத்ததாக அரசாங்கத்தையும் போலீசையும் எதிர்ப்பதுதானே உலக நியதி? அடுத்தடுத்து இவர்கள் போஸ்டர்களாக அடித்து சுவர்களில் ஒட்டிக்கொண்டே போக, ஏரியா கலவர பூமியானது.

அடிக்கடி போலீஸார் கிராமங்களில் புகுந்து தேடுதல் வேட்டை நடத்துவார்கள். நள்ளிரவுகளிலும் அதிகாலைகளிலும்தான் இந்த வேட்டை நடக்கும். ஏழைப் பழங்குடியினர் வீடுகளில் என்ன இருக்கும்? சில மண்பாண்டங்களில் தானியங்கள், ஆடு, மாடு என ஏதாவது கால்நடைகள், கொஞ்சம் துணிமணி, மிஞ்சினால் ஒரு சைக்கிள்... அதிகம் போனால் இவை மட்டும்தான் இருக்கும்.

அந்த ஏழைகளின் பார்வையில் விலைமதிக்க முடியாத சொத்தாகத் தெரியும் மண்பாண்டங்களைத்தான் போலீஸ் முதலில் நொறுக்கி, தானியங்களை பாழ்படுத்தும். பெண்கள், குழந்தைகள் என வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் அடிக்கும். பள்ளிக்கூடம் போகும் சிறுமிகளை வழியில் மடக்கி, ‘ஆயுத சோதனை’ நடத்துகிறோம் என உடம்பு முழுக்க தடவிப் பார்க்கும்.

சிலரை ஆடைகளை அவிழ்க்கச்சொல்லி கட்டாயப்படுத்தும். பொது இடத்தில், பல ஆண்களின் முன்னிலையில் இந்த வக்கிரங்கள் நடக்கும்! நள்ளிரவில் வீடுகளில் சோதனை நடத்தும்போது, ‘நீ பொம்பளைதானான்னு சந்தேகமா இருக்கு... டிரஸ்ஸை அவிழ்த்துக்காட்டு!’ என பெண்களை கட்டாயப்படுத்தி துகிலுரித்த சம்பவங்கள் ஏராளம்.

இதை எதிர்க்கும் ஆண்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மறுநாள் நியூஸில் ‘மாவோயிஸ்ட் கைது’ என செய்தியாகிவிடுவார்கள். எதிர்க்கும் பெண்கள் லத்திகளின் முரட்டு வேகத்துக்கு படுகாயப்படுவார்கள். தேசபந்து கிராமத்தைச் சேர்ந்த மைகு மர்மு என்ற 90 வயது மூதாட்டி, துகிலுரிதலை எதிர்த்த குற்றத்துக்காக போலீஸாரால் அடித்தே கொல்லப்பட்டார்.

பொதுவாக இரவு நேரத்தில் இந்த கிராமத்தினர் வெளியில் நடமாடவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டுசெல்லவும் தடை! காடுகளுக்குப் போய் விறகு சேகரிக்கவோ, மூலிகைகள் பறிக்கவோ முடியாது! இவற்றில் ஏதோ ஒரு செயல்தான், அவர்களுக்கு ஒருவேளை உணவையாவது உத்தரவாதம் செய்யும்... அதைக்கூட செய்யாமல் பட்டினி கிடந்து சாகவா முடியும்?

இப்படி பழங்குடியினரின் கோபம் நீறுபூத்த நெருப்பாக தகித்திருந்த நேரத்தில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது... ஒரு தனியார் இரும்பு ஆலை துவக்க விழாவில் பங்கேற்க மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானும் வந்த காரை, மாவோயிஸ்ட்கள் கண்ணிவெடி தாக்குதலில் தகர்க்க முயற்சித்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி லால்கர் அருகேயுள்ள சல்போனி என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது.

முதல்வரும் மத்திய அமைச்சரும் நூலிழையில் உயிர் தப்பினர். அதன்பிறகு தப்பமுடியாத தாக்குதல்களுக்கு மத்தியில் பழங்குடி மக்கள் சிக்கிக்கொண்டனர். ஒவ்வொரு கிராமத்தையும் குறிவைத்து போலீஸும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஹர்மத் வாஹினி படையும் தாக்கியது.

சோட்டோபேலியா என்ற கிராமத்தில், ஊரைச் சேர்ந்த எல்லா பெண்களையும் ஒரு மைதானத்தில் திரட்டி, கொடூரமாக போலீஸ் தாக்கியதில் சித்தமாணி என்ற பெண்ணுக்கு பார்வை பறிபோனது. போதாக்குறைக்கு ஹர்மத் வாஹினி படையினர் அடிக்கடி துப்பாக்கிகளோடு வந்து தாக்கினார்கள். கஷ் ஜாங்கோல் கிராமத்தில் இந்தப்படையினர் சுட்டதில் மூன்று பழங்குடியினர் இறந்தனர். திரும்பத் திரும்ப தாக்கினால், புழுவுக்குக்கூட திருப்பி அடிக்கிற அளவுக்குக் கோபம் வரக்கூடும்! ஆறறிவுள்ள மனிதர்கள் சும்மா இருக்கமுடியுமா?

‘போலீஸ் சித்திரவதைக்கு எதிரான மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை ஆரம்பித்து திரண்டனர். ‘‘எங்களுக்கு அரசு நிர்வாகமும் போலீஸும் தேவையில்லை... எல்லோரும் போய்விடுங்கள்’’ என அறைகூவல் விடுத்தனர். அரசின் எல்லா துறைகளையும் புறக்கணித்தனர்; வரி கட்ட மறுத்தனர். அரசு அலுவலகங்களையும் போலீஸ் ஸ்டேஷன்களையும் இழுத்துப் பூட்டினர். எல்லாமே சில நாட்களில் நடந்துமுடிந்துவிட்டது.

லால்கரை மையமாக வைத்து, 50 கிராமங்கள் விடுதலை பெற்ற ஆட்சிப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட இந்த சூழல், கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம்! வழக்கமாக மாவோயிஸ்ட்கள் எங்கு தங்கள் கை ஓங்கினாலும், உடனே போலீஸாரைத் தாக்கிக் கொல்வார்கள். ஆனால் ஏராளமான சித்திரவதைகளுக்கு ஆளான பிறகும்கூட, போலீஸாரை தங்கள் கிராமங்களை விட்டு துரத்தினார்களே தவிர, கொலை செய்யவில்லை.

எங்களுக்கு அரசாங்கம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு இந்தக் கமிட்டி சும்மா இருக்கவில்லை... தங்கள் கிராமங்களை நிர்வகிப்பதற்காக கமிட்டி ஒன்றை உருவாக்கினர். அதில் 5 ஆண்கள்; 5 பெண்கள். அடிக்கடி கூட்டம் நடத்தி, தங்கள் பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய வளர்ச்சிப் பணிகள் பற்றி இவர்கள் விவாதிப்பார்கள். கடந்த 8 மாதங்களில் மக்களின் பங்கேற்புடன் 50 கிலோமீட்டர் தூரத்துக்கு ரோடு போட்டிருக்கிறார்கள்.

செம்மண் கிராவல் அடித்து போடப்படும் சாதாரண கிராமச்சாலைகள்தான்! அரசாங்கம் போடும்போது காட்டும் செலவுக்கணக்கு லட்சங்களில் இருக்கும். இவர்களுக்கு ஒரு கிலோமீட்டர் ரோடு போட வெறும் 2 ஆயிரத்து 350 ரூபாய்தான் செலவானது. மழை குறைவாகப் பெய்யும் இந்தப் பகுதியில் மழைநீரை சேமிக்க ஒரு அணை கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். போஹர்டங்கா என்ற பகுதியில் 50 அடி ஆழ அணையாக அது உருவாகிவருகிறது. பல ஆண்டுகளாக பழுதாகிக் கிடந்த கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் பலவற்றை சீரமைத்திருக்கிறார்கள்.

சில கிராமங்களில் அரசாங்க மருத்துவமனைகளை மூடிவிட்டு, அவற்றை தற்காலிக போலீஸ் முகாம்களாக்கி இருந்தது அரசு. அந்த நிலையை மாற்றி, மீண்டும் மக்கள் மருத்துவமனைகளை நடத்தியது இந்தக் கமிட்டி. கொல்கத்தாவிலிருந்து மனித நேயமுள்ள டாக்டர்கள் சிலர் வந்து சிகிச்சை அளித்தார்கள். ஆஸ்பத்திரிக்கு போகும்வழியிலேயே செத்துப்போவதே இந்தப் பகுதி மக்களின் தலையெழுத்தாக ஆண்டாண்டு காலமாக இருந்தது. அதை மக்களே மாற்றிக்காட்டினார்கள்.

காடுகளை ஒட்டிய விளைச்சல் நிலங்களை, நிலமற்ற பழங்குடியினருக்கு பட்டா போட்டுத் தருவதற்கு மேற்கு வங்க அரசு சட்டமே போட்டிருந்தும், அதை யாரும் நிறைவேற்றவில்லை. மக்கள் கமிட்டி, கிராம மக்களிடம் பேசி, யார் யாருக்கு எவ்வளவு நிலம் தருவது என்பதை முடிவுசெய்து, அவர்களே பட்டா போட்டுக் கொடுத்தும் விட்டனர். இப்போது அந்த 50 கிராமங்களில் நிலமற்றவர்கள் என யாரும் இல்லை!

‘போலீஸ் சித்திரவதைக்கு எதிரான மக்கள் இயக்க’த்தின் தலைவர் சத்ரதார் மகாதோ சொன்ன ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ‘‘நாங்கள் எட்டு மாதங்களில் செய்த வளர்ச்சிப் பணிகளில் வெறும் பத்தே பத்து சதவிகிதம் பணிகளை கடந்த 32 ஆண்டுகளில் அரசாங்கம் செய்திருந்தால், நாங்கள் தெருவுக்கு வந்து போராடி இருக்கவேண்டிய அவசியமே எழுந்திருக்காது!’’

கேவலங்களையும் மோசடிகளையுமே தலைப்புச் செய்திகளாக்கும் இங்கிலீஷ் மீடியாக்கள் கண்ணில் இந்த நல்ல விஷயங்கள் எதுவுமே படவில்லை; அந்த மக்கள் அனுபவித்த சித்திரவதைகள் படவில்லை; அவர்கள் கைகளில் இருக்கும் ஆயுதங்கள் மட்டும்தான் தெரிகிறது. அந்தப் போராட்டம் 11 மார்க்சிஸ்ட் பிரமுகர்களை காவு வாங்கியது தவறுதான்; யாரையும் துடிக்கத் துடிக்கக் கொல்வதை யாரும் நியாயப்படுத்த முடியாது! ஆனால் அந்தக் கொலைகளுக்குக் காரணமான கோபத்தை கவனிக்காமல் விடுவது நல்லதல்ல!

இப்போது என்ன நடக்கும்? லால்கரை மீண்டும் பிடித்த போலீஸாரும், துணை ராணுவப் படையினரும், மாவோயிஸ்ட்களை ஒழிப்பதற்காகவே தனியாக உருவாக்கப்பட்ட ‘கோப்ரா’ படையினரும் மீண்டும் மீண்டும் கிராமங்களில் புகுந்து பழங்குடியினரைத் தாக்குகிறார்கள். மாவோயிஸ்ட் அமைப்பினர் காடுகளுக்குள் சென்று பதுங்கிவிட்டார்கள்.

அப்பாவி பழங்குடியினரின் கைகளில் இருந்த வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்கள், நமது போலீஸிடமும் ராணுவத்திடமும் நிறைந்திருக்கும் ஆயுதங்களோடு எந்தவகையிலும் போட்டியிடத் தகுதியற்றவை. ஆனால் அவர்கள் மனசில் இருந்த கோபம் என்ற ஆயுதத்தை அரசாங்கம் கவனிக்க வேண்டும்.

பசியிலும் கோபத்திலும் உருவான ஒரு மக்கள் இயக்கத்தை, மீண்டும் சித்திரவதை செய்து, அவர்களை பசியில் தள்ளி நசுக்கமுடியுமா என புத்திசாலிகள் நிறைந்த இடதுசாரி அரசு யோசிக்கவேண்டும்! அடிப்படை வசதிகளை உருவாக்கி, வளர்ச்சியை நோக்கி அந்த கிராமங்களை நகர்த்துவதுதான் பிரச்னைக்கு ஒரே தீர்வாக அமையும்!

முதுமையின் தள்ளாட்டத்தோடு தனிமையில் நாட்களைக் கழிக்கும் ஜோதிபாசுவுக்கு ஒருவேளை நினைவிருக்கலாம்... கடந்த 1964ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்க தேசம்) உருவான மதக் கலவரம் மேற்கு வங்கத்துக்கும் பரவியது. கலவரக்காரர்கள் முஸ்லிம்களை குறிவைத்து தாக்க வந்தனர். மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் கொல்கத்தா நகரத் தெருக்களில் மனிதக் கேடயமாக நின்று முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளைப் பாதுகாத்தனர்.

அவர்களது அரணைத் தாண்டி ஒரே ஒரு மதவெறியர்கூட போகமுடியவில்லை. மனிதநேயம்தான் ஒரு மார்க்சிஸ்ட் தொண்டனின் அடிப்படைத் தகுதி என்றிருந்த காலம் அது!

இதுபோன்ற நற்செயல்கள் மார்க்சிஸ்ட் கட்சியை ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டுவந்தன. ஜோதிபாசு முதல்வர் ஆக, ஹரேகிருஷ்ண கொனார், பிரமோத் தாஸ்குப்தா போன்ற தலைவர்கள் இணைந்து மேற்கு வங்காளத்தில் நிலச் சீரமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தினர்.

ஏழை விவசாயிகள் யாரும் பசியால் சாகக்கூடாது என்ற அக்கறையில் உருவான அந்தத் திட்டம்தான் நக்சல்பாரி இயக்கத்தை தனிமைப்படுத்தியது. பசியும் கோபமும் இருந்தால்தானே ஒருவன் நக்சலைட் ஆகிறான். அந்த இரண்டையும் அரசாங்கம் தீர்த்துவிட்டால் தீவிரவாதிகளுக்கு வேலை ஏது?

ஒரு தலைமுறை தாண்டியபிறகு இப்போது மனித கேடயங்களாக நிற்கும் மக்களை மார்க்சிஸ்ட் அரசின் உத்தரவுப்படி போலீஸ் அடிக்கிறது. மக்களிடமிருந்து நிலங்களைப் பிடுங்கி தொழிற்சாலை முதலாளிகளுக்குக் கொடுக்கிறது மார்க்சிஸ்ட் அரசு... காலச்சக்கரம் இவ்வளவு மோசமாகவா சுழல வேண்டும்?

--நாடோடி ---

நன்றி:தெனாலி இணையம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.