Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்களப் பேரினவாதத்துக்குத் துணைபோகும் ஸ்ரீராம் நிறுவனத்தின் அகிலா ஸ்ரீனிவாசனுக்கு திறந்த மடல் – மனிதநேயன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களப் பேரினவாதத்துக்குத் துணைபோகும் ஸ்ரீராம் நிறுவனத்தின் அகிலா ஸ்ரீனிவாசனுக்கு திறந்த மடல் – மனிதநேயன்

மதிப்பிற்குரிய ஸ்ரீராம் லைஃப் நிறுவனத்தின் தலைவர் திருமதி.அகிலா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு, வணக்கம்.இந்தியாவின் தலைசிறந்த நிர்வாகிகளில் தாங்களும் ஒருவர். கடந்த 23 ஆண்டுகளாக நிதி மூலதனத்துடன் தாங்கள் கொண்டுள்ள உறவும், அதனால் தாங்கள் சார்ந்த ஸ்ரீராம் குழுமத்தில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சியும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது.

தற்சமயம், தென் ஆப்பிரிக்காவின் சன்லாம் நிறுவனத்துடன் சேர்ந்து ஸ்ரீராம் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை உருவாக்கி, அதன் தலைவராக சிறப்புடன் இயங்கி வருகிறீர்கள். நிதி நிர்வாகியாக மட்டும் முடங்கிப்போய் விடாமல், சென்ற 7 ஆண்டுகளாக சமூகப் பணியிலும் இடைவிடாது ஈடுபட்டு வருகிறீர்கள். தங்களின் தொடர்ச்சியான சமூகப் பணிகளைத் தொடர்ந்தே ஸ்ரீராம் குழும நிறுவனங்களுக்கு சமூக அக்கறையுள்ள நிறுவனங்கள் என்ற பெயர் கிடைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

கடந்த சில வருடங்களாகத் தாங்களும், திரு.கவின்கேர் ரங்கநாதன், திரு.டி.வி.எச்.ரவிச்சந்திரன், திரு.ஹாட் பிரெட்ஸ் மகாதேவன் ஆகியோரும் அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ் அவர்களுடன் இணைந்து “கிஃப் லைப்” என்ற அறக்கொடை அமைப்பை செம்மையாக நடத்தி வருகிறீர்கள். தொழில்நிறுவனங்களுக்கு இருக்க வேண்டிய சமூக அக்கறை குறித்து உங்கள் அமைப்பு உலகுக்கு செழுமையான கருத்துக்களையும், செயல்பாடுகளையும் முன் வைத்து வருகிறது.

2015 ஆம் ஆண்டிற்குள் இந்த அமைப்பினை உலக அளவில் இயங்கும் ஒரு அறக் கொடை நிறுவனமாக வளர்த்திட நீங்கள் நினைத்திருப்பது – செயல் வீரர்களும், நல்லவர்களும் இணைந்திருப்பதால் – நிச்சயம் நடக்கும். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கிஃப்லைப் அமைப்பானது சென்னை மாநகரின் முதல் “வெகுமக்கள் மராத்தன் ஓட்டத்தை” வெற்றிகரமாக நடத்திக் காட்டியது.

இதற்கு முன்பாக சென்னை மாநகரில் வேறு அமைப்புகளால் மராத்தன் ஓட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்திருந்தாலும் கூட, அவை யாவற்றிலுமே தொழில்ரீதியில் ஓட்ட வீரர்களாக இருப்போரால் மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது. ஆனால், தங்களின் கிஃப்லைப் அமைப்பால் நடத்தப்பட்ட “மார்க் சென்னை அரை மராத்தன் ஓட்டம்தான்” சென்னையின் அனைத்து மக்களும் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கும் முதல் மராத்தன் ஓட்டமாக அமைந்தது.

இந்த ஆண்டிற்கான சென்னை மராத்தன் ஓட்டத்தை செப்டம்பர் 27 ஆம் தேதியன்று அறிவித்துள்ளீர்கள். ஆகஸ்டு 22 ஆம் நாள் நடக்க வேண்டியிருந்த நிகழ்வினை, ஜூலை 30 ஆம் தேதியன்று செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு – பல்வேறு காரணங்கள் நிமித்தமாக – ஒத்திவைத்தீர்கள். இருப்பினும், இன்று செப்டம்பர் மராத்தனில் கலந்துகொள்ள சென்னை மாநகரமே தன்னைப் பரபரப்பாகத் தயார் செய்துகொண்டிருக்கிறது.

இப்பேற்பட்ட சூழ்நிலையில், இந்த மராத்தன் நிகழ்வினை நடத்துவதில் உள்ள அதி முக்கிய சிக்கல் ஒன்றினைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருவதுவும் , அந்த சிக்கலைத் தீர்க்கத் தேவையான வழிமுறைகளை ஆராய்வதவுும், சிக்கலைத் தீர்க்காமல் மராத்தனை நடத்தினால் ஏற்பட வாய்ப்புள்ள விளைவுகளை ஆய்ந்தறிவதும், சிக்கலைத் தீர்த்து இந்த மராத்தன் நிகழ்வினை எவ்வாறு வெற்றிகரமாக நடத்துவது என்பது குறித்த சில கருத்துக்களை முன்வைப்பதுவுமே இந்த மடலை எழுதுவதற்கான அடிப்படைக் காரணங்களாகும்.

1. “ஐடியா சென்னை மராத்தன்” நிகழ்வில் உள்ள சிக்கல் மராத்தன் நிகழ்வின் தலைப்புப் பெயரினை ஊக்குவிக்கும் பணியினை கிஃப்லைப் அமைப்பானது ஐடியா செல்லுலார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. ஆனால் அந்த நிறுவனமோ இனவாத நிறுவனமாக இயங்கிி வருகிறது என்ற உண்மையை ஆகஸ்டு மாத இறுதியில் வெளியான ஆய்வுக்கட்டுரை ஒன்று தக்க ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறது. மே மாத இறுதியில் முடிவுற்ற நான்காம் ஈழப்போரில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் தமிழ் மக்கள் காணாமல் போயுள்ளனர்.

2. லட்சத்து 80 ஆயிரம் தமிழ் மக்கள் முள் கம்பி வேலிகளுக்குள் மிருகங்களைப் போல சிங்கள இலங்கை அரசால் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் நேரத்திலேயே அவர்களின் பூர்வீக நிலத்தில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் சிங்கள அதிகாரிகளையும், அவர்தம் குடும்பத்தினரையும் குடியமர்த்தும் சதியில் சிங்கள இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்தச் செயலினை செவ்வனே செய்து முடிப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அது பல்வேறு கட்டுமான ஒப்பந்தங்களை அளித்து வருகிறது. இந்த நிறுவனங்கள் யாவும் அவற்றின் ஒப்பந்தத்தை வெளிப்படையான போட்டியின் அடிப்படையில் பெறவில்லை என்பதுவும், இந்த ஒப்பந்தங்கள் யாவும் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவாத இலங்கை அரசு உலக அளவில் மேற்கொண்டுவரும் அரசியல் நடவடிக்கையின் நீட்டிப்பாகவே வழங்கப்பட்டுள்ளன என்பதுவும் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.

ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்டுவரும் சர்வதேச அரசியல் நடவடிக்கையின் நீட்டிப்பாக வழங்கப்பட்ட முதல் ஒப்பந்தம் ஆக்சியாட்டா என்ற மலேசிய நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒப்பந்தமேயாகும். வன்னிப்பெருநிலத்தின் அலைபேசி சேவையை வழங்குவதற்கான அந்த ஒப்பந்தம், போர் முடிவடைந்த அடுத்த சில நாட்களிலேயே – அதாவது ஜூன் மாதத் தொடக்கத்தில் – வழங்கப்பட்டது. அந்த நிறுவனமும் அதற்கான முதல்கட்டப் பணியினை ஆகஸ்டு 12 ஆம் தேதியன்று முடித்துள்ளது.

வன்னிப் பகுதியில் மேலும் 1 கோடி டாலருக்கான புதியத் தொலைதொடர்புக் கட்டுமானங்களை நிறுவும் பணியில் அது இன்று ஈடுபட்டுள்ளது. வன்னித் தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தை அவர்களிடம் இருந்து அந்நியப் படுத்த விழைகின்ற சிங்கள இனவெறி அரசின் திட்டங்களில் இவ்வாறாக ஆக்சியாட்டா தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது.

போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.கே.பத்மநாபனை மலேசிய நாட்டின் ரகசியக் காவல் படை கைது செய்து, சர்வதேச குற்றவியல் சட்டங்களுக்குப் புறம்பாக இலங்கை அரசிடம் ஒப்படைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட கையூட்டுதான் ஆக்சியாட்டாவுக்கு வன்னி நிலத்தில் கொடுக்கப்பட்ட தொலைதொடர்புப் பணி என்ற வாதங்கள் இன்று எழுந்துள்ளன.

இவ்வாறான வாதங்களில் சிக்கியிருக்கும் ஆக்சியாட்டா நிறுவனமே இன்று சென்னை மராத்தனின் தலைப்புப் பெயரினை ஊக்குவிக்க கிஃப்லைப் அமைப்பால் ஆகஸ்டு மாதத் தொடக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் இரண்டாம் பெரிய பங்குதார நிறுவனமாக இருக்கிறது என்பதுதான் அனைவரையும் சங்கடப்படுத்தும் உண்மையாக உள்ளது.

இன்று, ஐடியா நிறுவனத்தில் அது சுமார்15% பங்குகளைக் கொண்டிருக்கிறது. அடுத்த சில மாதங்களில் இந்தப் பங்கு விகிதத்தினை அது 20% ஆக உயர்த்திடும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இனவாதக் குற்றம் பகிரங்கமாக சுமத்தப்பட்டுள்ள ஆக்சியாட்டா நிறுவனத்தினைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஐடியா செல்லுலார் நிறுவனத்தினை கிஃப்லைப் அறக்கொடை அமைப்பானது தன் மராத்தன் நிகழ்வினது முதன்மை ஊக்குவிப்பாள நிறுவனமாக அறிவித்திருப்பதென்பதுு தொழில்நிறுவனங்களின் சமூகப்பொறுப்பை வலியுறுத்திவரும் கிஃப்லைப் அமைப்பின் பெயருக்குத் தீராத களங்கம் ஏற்படுத்தும் சூழ்நிலையையே இன்று உருவாக்கியுள்ளது.

3. ஸ்ரீராம் நிறுவனத்திற்கு ஏற்பட சாத்தியமுள்ள பாதிப்புகள் 35 வருட பாரம்பரியம் மிக்கது ஸ்ரீராம் குழுமம். இந்தியாவின் முதன்மை சிட் பண்ட் நிறுவனமாகவும், ட்ரக் நிதி நிறுவனமாகவும் அது திகழ்கிறது. சுமார் 13 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை அது நிர்வகித்து வருகிறது. சுமார் 40 லட்சம் வாடிக்கையாளர்களை அது கொண்டிருக்கிறது. உலக அளவில் இயங்கிவரும் பல தனியார் பங்கு ( private equity) நிறுவனங்கள் ஸ்ரீராம் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் பஹரேன் ஆகிய நாடுகளிலும் ஸ்ரீராம் நிறுவனம் தன் கால்களைப் பதித்துள்ளது. இந்த நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொள்வதன்மூலம் தன் வியாபாரத்தை அங்கு விரித்துள்ளது. அதுபோலவே, இந்நிறுவனங்களை இந்திய சந்தையில் காலூன்றச் செய்வதற்கான உதவியையும் அத வழங்கிு வருகிறது.

3.1) ஸ்ரீராமின் வெளிநாட்டுப் பங்காளிகள்: இவ்வாறு ஸ்ரீராம் நிறுவனம் கூட்டுவைத்துக் கொண்ட நிறுவனங்களில் முதன்மையானது இலங்கையின் சிலங்கோ நிறுவனமாகும். 1995 ஆம் ஆண்டில் 40:60 என்ற விகிதத்தில் அது சிலங்கோவுடன் இணைந்து Ceylinco Shriram Capital Management Services என்ற நிதி நிறுவனத்தை இலங்கையில் துவக்கியது. 2000 ஆம் ஆண்டில் இலங்கை அரசின் நிதிப் பத்திரங்களை (government securities) இலங்கையின் கிராமங்களில் விற்பதற்காக Ceylinco Shriram Securities என்ற நிறுவனத்தை அது நிறுவியது.

இலங்கையின் ஏழு முன்னணி நகரங்களில் இருந்து அது செயல்படத் தொடங்கியது. எகிப்து, மடகாஸ்கர் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் ஆயுள் காப்பீட்டைத் தவிர்த்த காப்பீட்டு சேவையைத் துவக்க 2004 செப்டம்பரில் அது சிலங்கோ காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்தது. 2005 ஆம் ஆண்டு ஜனவரியில் பெங்களூர் மற்றும் சென்னையில் இரண்டு ஒருங்கிணைக்கப்பட்ட நகரங்களை உருவாக்குவதற்காகவும், இந்தியாவின் கட்டுமான வெளியை மாற்றி அமைப்பதற்காகவும் Sriram Properties நிறுவனமும் Ceylinco Consolidated நிறுவனமும் இணைந்தன. ஸ்ரீராம் நிறுவனத்தின் Armour Consultants நிறுவனத்தின் 15% பங்குகளை 2005 தொடக்கத்தில் சிலங்கோ தனதாக்கிக் கொண்டது. இதே காலகட்டத்தில் தாய்லாந்து, வங்காளதேசம், மாலத்தீவு, நேப்பாளம் மற்றும் மலேசியாவிலும் ஸ்ரீராம் நிறுவனமும் சிலங்கோ நிறுவனமும் இணைந்து செயலாற்றத் தொடங்கின. சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு சிலங்கோவும் ஸ்ரீராமும் இணைந்து பாரத் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற முதலீட்டு நிறுவனத்தை உருவாக்கி பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள “மொனார்க் இன்சூரன்ஸ்” நிறுவனத்தில் முதலீடு செய்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்.

1998 ஆம் ஆண்டில் மலேசியாவின் Melewarகுழுமத்துடன் இணைந்து AEC ( Asian Education Consortium ) வர்த்தகப் பள்ளி என்ற ஒரு பள்ளியை ஸ்ரீராம் குழுமம் சென்னையில் தொடங்கியது. அந்தப் பள்ளியில் இலங்கையின் Ceylinco நிறுவனமும் பங்கைக் கொண்டிருக்கிறது. Ceylinco Consolidated நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான திரு.ஜெகத் ஆல்விஸ் சென்னை AEC வர்த்தகப் பள்ளியின் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். 2006 ஆம் ஆண்டில் ஸ்ரீராம் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தென் ஆப்பிரிக்காவின் இரண்டாம் பெரிய காப்பீட்டு நிறுவனமான சன்லாம் ஸ்ரீராம் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 26% பங்குகளை வாங்கியது. 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதனை 49% ஆக உயர்த்திக்கொள்ள அது முன்வந்தது.

3.2) ஸ்ரீராமின் வெளிநாட்டுக் கூட்டாளிகளின் தன்மை

3.2.1) இலங்கையின் சிலங்கோ திவாலாகியது: ஸ்ரீராம் குழுமத்தின் வெளிநாட்டுப் பங்காளிகளில் முதன்மை நிறுவனமான இலங்கையின் சிலங்கோ நிறுவனத்தின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான Golden Key Credit Card Company 2008 ஆம் ஆண்டில் சுமார் 1100 கோடி இந்திய ரூபாயைக் கையாண்டு வந்தது. நிறுவனத்தின் நிதியைத் தான் முறைகேடாகக் கையாண்டதாக அதன் தலைவரான கவன் எம்.பெரேரா 2008 டிசம்பரில் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்குப் பிறகு அந்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டது.

இலங்கையின் பெரும் பணக்காரர்கள் அனைவரும் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார்கள். அவர்களது பணம் திவாலானது ஆனதுதான். முதலில் கவன் பெரேரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரோடு கூட சிலங்கோ காப்பீடு நிறுவனத்தின் தலைவரான சாமிந்தா ஜெயலத்தும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் சிலங்கோ குழுமத்தின் தலைவரும், இலங்கையின் பெரும் வள்ளல் என்று அறியப்பட்டவருமான தேசமாணி டாக்டர்.லலித் கோட்டேலவாலாவை காவல்துறை 2009 பிப்ரவரியில் கைது செய்து சிறையில் அடைத்தது. அவரது மனைவியான டாக்டர். சிசிலி கோடேலவாலாவின் மீதும் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கைது ஆவதைத் தவிர்க்க அவர் தற்சமயம் வெளிநாடுகளில் தங்கி இருக்கிறார்.

2009 ஜனவரி 11 ஆம் தேதியன்று “சிலங்கோ ஸ்ரீராம் கேப்பிட்டல் மேனேஜ்மென்ட் சர்வீசஸ்” நிறுவனத்திலும் நிதிமுறைகேடு நடந்து வருவதாக அதன் வாடிக்கையாளர்களில் ஒருவரான நிலாந்தி என்ற பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் “கொலோம்போ டைம்ஸ்” பத்திரிகையில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஜூன் 30 ஆம் தேதியன்று இலங்கை அரசாங்கத்தின் நிதி வாரியம் ( Monetary Board ) சிலங்கோ ஸ்ரீராம் கேப்பிட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம் தன் சொத்துக்களை எவரிடமும் கைமாறிக்கொடுக்கவோ அல்லது விற்கவோ கூடாது என்றும், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் தம் சொத்துக்களை விற்கக் கூடாது என்றும், ஜூலை 31 ஆம் தேதிக்குள் அந்த நிறுவனத்திற்குள்ள அனைத்து சொத்திற்கான மதிப்பையும் தன்னிடம் சமர்ப்பித்தாக வேண்டும் என்றும், நிறுவனத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய உயர் அதிகாரிகளும் இந்தத் தேதிக்குள் தம் சொத்து குறித்த விபரத்தைத் தெரிவித்தாக வேண்டும் என்றும் கட்டளையிட்டது. சிலங்கோ ஸ்ரீராம் கேப்பிட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் சுமார் 6000 நடுத்தர சிங்கள மக்கள் 290 கோடி (இந்திய) ரூபாயை முதலீடு செய்திருந்தனர். அந்தப்பணத்தை அந்த நிறுவனத்தால் திருப்பித்தர இயலவில்லை என்பதால் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளான ஹிரன் டி சில்வாவும், ராஜீவ் விஜெதுங்காவும் ஜூலை 16 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

நிறுவனத்தின் பிற இயக்குனர்களான அஜித் குனவர்த்தனே, நிஹால் பெய்ரிஸ், சங்கா விஜெசிங்கெ, H.K.D.சில்வா, K.P.ஜெயதிஸ்ஸா மற்றும் ருவான் சிறிசேனா ஆகியோர் ஒரு லட்ச ரூபாய் ஜாமீன் பணத்தையும், இரண்டு அரசாங்க உத்தியோகஸ்தர்களின் சாட்சியையும் முன்வைத்து ஜாமீனில் வெளியேறினர். கைது செய்யப்பட்டு இவர்கள் சிறையில் அடைக்கப்படவேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பைக் கேள்விப்பட்ட ராஜீவ் விஜெதுங்கா மயங்கி வீழ்ந்தார்.

செப்டெம்பர் 17 ஆம் தேதியன்று அஜித் குனவர்த்தனே, நிஹால் பெய்ரிஸ், சங்கா விஜெசிங்கெ மற்றும் ருவான் சிறிசேனா ஆகியோரை காவல்துறை மீண்டும் கைது செய்தது. இருப்பினும் பல்வேறு அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக அவர்கள் உடனேயே விடுவிக்கப்பட்டார்கள். “ “பெரியவரோ, சிறியவரோ – எவராக இருந்தாலும் – அனைவரையும் பாதுகாப்பதையே சிலங்கோ தன் கடமையாகக் கொண்டிருக்கிிறது” என்ற முழக்கத்தை முன் வைத்து இயங்கிக் கொண்டிருந்த அந்த நிறுவனம் இன்று மீழ முடியாத நெருக்கடியில் உள்ளது.

சிலங்கோவின் முக்கிய நிறுவனங்களில் 40% வரை பங்கைக் கொண்டிருந்த ஸ்ரீராம் நிறுவனத்திற்கு இந்த நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்தான் என்ன? சிலங்கோ ஸ்ரீராம் கேப்பிட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்து வரும் திரு.தியாகராஜன் அவர்களும், திருமதி.அகிலா ஸ்ரீனிவாசன் அவர்களும் இந்த நெருக்கடியில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எடுத்து வரும் முயற்சிகள் யாவை? இந்த நெருக்கடி குறித்து இந்திய ஊடகங்கள் ஏன் எந்த செய்தியையும் வெளியிடவில்லை?

3.2.2) நிற வெறி அரசுக்குத் துணைபோன சன்லாம்

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறியானது காட்டாட்சி நடத்தி வந்த காலகட்டத்தில் ஆப்பிரிக்க மொழியை மட்டுமே பேசும் முதலாளிகளால் 1913 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட காப்பீட்டு நிதி நிறுவனமே சன்லாம். அதன் நீண்ட வரலாற்றில் 1977 செப்டம்பர் 12 ஆம் தேதியானது மிக முக்கியமான நாளாகும். அன்றுதான் போர்ட் எலிசபெத் நகரில் இருந்த சன்லாம் நிறுவனத்துக்கு சொந்தமான ஆறு மாடிக் கட்டிடமே நிறவெறி அரசின் ரகசியப் போலீசாரால் நிறவெறியை எதிர்த்துப் போராடிய போராளிகளை சித்திரவதை செய்யப் பயன்படுத்தப்பட்ட கட்டிடம் என்பது வெளி உலகத்துக்குத் தெரிய வந்தது. சன்லாம் கட்டிடத்தின் 616 ஆம் அறையில் நிர்வாணப்படுத்தப்பட்டுி சித்திரவதை செய்யப்பட்ட கறுப்பினப் போராளியான டாக்டர்.ஸ்டீஃப் பிக்கோவிற்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது.

அவரை அப்படியே ஜீப் ஒன்றில் நிர்வாணமாகப் படுக்கவைத்து காவல்துறையினர் சுமார் 1200 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தலைநகருக்கு எடுத்துச்சென்றார்கள். தலைநகரை அடைந்த அடுத்த நாள் டாக்டர்.பிக்கோ இறந்து போனார். அவரின் மரணம் கறுப்பின மக்களிடம் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. செப்டம்பர் 18 ஆம் தேதியன்று நடந்த அவருக்கான இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டனர். இனவெறி அரசு வீழ்வதற்கான முதல் வித்தை எழுச்சிமிக்க அந்த ஊர்வலம் விதைத்தது. 1994 ஆம் ஆண்டில் இனவெறி அரசு தூக்கியெறியப்பட்டபோது இதுவரை அரசின் உதவியை அனுபவித்துவந்த சன்லாம் நிலைகுலைந்துபோனது. 1994 ஆம் ஆண்டிற்குப் பிறகு சன்லாம் கடுமையான முயற்சியால் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கடந்த கால வரலாற்றைக் கொண்ட நிறுவனத்துடன்தான் ஸ்ரீராம் நிறுவனம் தன் ஆயுள் காப்பீட்டுப் பிரிவில் உறவு கொண்டுள்ளது.

3.3) ஐடியா சென்னை மராத்தனுக்கும் மேற்கண்ட தகவல்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? ஸ்ரீராம் நிறுவனத்தை சமூகப் பொறுப்புள்ள ஒரு நிறுவனமாகவே தமிழ்நாட்டு மக்கள் பார்க்கப் பழகி உள்ளார்கள். அதில் திருமதி அகிலாவின் பங்கு அளப்பறியது. என்றாலும்கூட, ஸ்ரீராம் குழுமம் உறவு வைத்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் யாவுமே சமூகப் பொறுப்பற்ற நிறுவனங்கள் என்ற பெயரினையே பெற்றிருக்கின்றன. அந்த நிறுவனங்களின் வரலாற்றையும், சமீப காலச் செயல்பாடுகளையும் தமிழக, இந்திய மக்கள் அறியத் தொடங்கினால், ஸ்ரீராம் நிறுவனத்திற்கு அது மிகப்பெரும் தலைவலியாக மாறும் என்பதை சொல்லவும் வேண்டுமா? 2009 ஜூலை 13 ஆம் தேதியன்று திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களால் அறிவிக்கப்பட்ட கிஃப்லைப் மராத்தன் நிகழ்வினை ஜூலை 30 ஆம் தேதியன்று ஆகஸ்டு 22 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 27 க்கு மாற்றி வைத்ததற்கான உண்மைக் காரணம்தான் என்ன? ஜூலை 7 ஆம் தேதியன்று ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் சென்னை மாநகர சேவை தொடங்கியது.

தொடங்கிய இரண்டு வாரங்களுக்குப் பின்னரே அந்த நிறுவனத்திற்கு கிஃப்லைப் மராத்தன் என்ற மிகப்பெரும் நிகழ்வு ஆகஸ்டு 22 ஆம் தேதியன்று நடக்கப்போவது தெரிய வந்தது. ஜூலை 20 வாக்கில் மாராத்தனில் தன்னை முன்னணி ஸ்பான்சராக இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அது வைத்தது. திரு.கார்த்தி சிதம்பரத்தால் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்வு ஒன்றினை ஒத்திவைப்பது சரியாக இருக்காது என்ற கருத்து மேலோங்கியது. கிஃப்லைப் அமைப்பின் நிர்வாகத் திறனை மக்கள் சந்தேகப் பட இது வழி வகுக்கும் என்ற வாதங்களும் எழுந்தன. எனவே ஐடியாவின் கோரிக்கையை கிஃப் லைப் அமைப்பின் நிர்வாகிகள் ஏற்பதாக இல்லை. இருப்பினும், இவ்வளவு பெரிய நிகழ்வை ஐடியா நிறுவனம் விடுவதாக இல்லை.

ஐடியா நிறுவனத்தில் 49% பங்குகளை வைத்திருப்பது ஆதித்ய பிர்லாவின் பல்வேறு நிறுவனங்களே. ஆதித்ய பிர்லாவின் நிறுவனங்களுள் ஒன்றான அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனமானது இலங்கையின் சிலங்கோ நிறுவனத்தின் பங்காளியாகும். எனவே, சிலங்கோவின் மூலமாக திருமதி.அகிலா அவர்களுக்கு அழுத்தம் தரப்பட்டது. ஐடியாவின் இரண்டாவது பெரிய பங்குதாரரான ஆக்சியாட்டா நிறுவனம் சென்னையின் AEC Business School இல் ஸ்ரீராம் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிவரும் மலேசிய நிறுவனமான Melewar நிறுவனத்தின் தலைவரான டுங்கு டத்தோ செரி இஸ்கந்தர் மூலமாக திருமதி.அகிலாவுக்கு அழுத்தம் கொடுத்தது. இலங்கையில் சிலங்கோவுடன் ஸ்ரீராம் குழுமம் கொண்டுள்ள உறவானது அந்த நிறுவனத்திற்கு மிகப்பெரும் இன்னல்களை அளித்துள்ளது. அதில் இருந்து வெளியேற வேண்டும் என்றால் இலங்கை ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சாவின் கரிசனை இல்லாமல் முடியாது.

ராஜபக்சாவின் கரிசனத்தைப் பெறுவதற்கு எளிமையான வழியே ஐடியா செல்லுலார் நிறுவனத்திற்கும், இன்னபிற மலேசிய நிறுவனங்களுக்கும் இந்தியாவில் உதவும் செயல்பாடுகளாகும். இந்த நிறுவனங்களுக்கு ஸ்ரீராம் உதவும் என்றால் இலங்கையில் இருந்து எவ்விதப் பிரச்சினையும் இல்லாமல் வெளியேற மலேசிய அரசு ஸ்ரீராம் குழுமத்திற்கு உதவி புரியும். திருமதி.அகிலா அவர்கள் இதனைப் புரிந்து கொண்டபோது, ஆகஸ்டு 22 ஆம் தேதியன்று நடக்கவிருந்த கிஃப்லைப் சென்னை மராத்தனை ஐடியா சென்னை மராத்தன் என்று பெயர் மாற்றம் செய்து செப்டம்பர் 27 ஆம் தேதியன்று இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்படுகிறது என்ற அறிவிப்பினை வெளியிட எவ்வித சிரமமும் இருக்கவில்லை .

பலமுனைகளில் இருந்து வந்த அழுத்தங்களாலும், இலங்கையின் சிலங்கோ பிரச்சினையில் இருந்து ஸ்ரீராமை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தாலும் திருமதி.அகிலா அவர்கள் கிஃப்லைப் அமைப்பின் பிற அறங்காவலர்களை – மராத்தனைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை – ஏற்றுக்கொள்ளச் செய்திருக்கிறார். நிகழ்வின் முக்கிய ஸ்பான்சராக ஐடியா செல்லுலார் நிறுவனத்தை அவர் நியமித்திருக்கிறார். இந்த முடிவானது அவசரம் அவசரமாக எடுக்கப்பட்ட காரணத்தால் ஐடியா நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கான முயற்சியை கிஃப்லைப் நிறுவனத்தைச் சார்ந்த எவரும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமே, வன்னிப் பெருநிலத்தில் தமிழ் இன அழிப்பிற்குத் துணைபோய்க் கொண்டிருக்கின்ற ஆக்சியாட்டா என்ற மலேசிய நிறுவனத்தை கிஃப்லைப் அறக்கொடை நிறுவனத்தால் இனம் காண முடியவில்லை.

4. அடுத்து என்ன?

1)தன் சொந்த நலன்களுக்காக ஐடியா நிறுவனத்தை சென்னை மராத்தனில் சேர்த்து விட்டு – தமிழ் இனத்தையே தன்னை அறியாமல்- கேலிக்குள்ளாக்கியிருக்கும் ஸ்ரீராம் குழுமமும், திருமதி அகிலாவும் இதனை சரி செய்ய உடனடியாக செயல்பட வேண்டும்.

2)ஐடியாவை ஸ்பான்சராகக் கொண்டு மராத்தனை நடத்துவது என்பது கிஃப் லைப் அறக்கொடை நிறுவனத்தின் பெயரைக் கடுமையாகப் பாதிக்கும்.

3)இனிவரும் நாட்களில் கிஃப் லைப் நிறுவனம் நடத்தப்போகும் பிற நிகழ்வுகளும் கூட பொதுமக்களால் சந்தேகத்துடன் மட்டுமே பார்க்கப்படும் சூழ்நிலையை உருவாக்கும். கிஃப்லைப் நிறுவனத்தின் உண்மைத் தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும்.

4) மராத்தன் நிகழ்வினை மீண்டும் ஒருமுறை – வேறு ஒரு தேதிக்கு – மாற்றி வைப்பதே சாலச்சிறந்த முடிவாய் இருக்கும்.

5)இரண்டாம் முறையாகத் தள்ளி வைக்கப்படும் மராத்தனின்போது ஸ்பான்சர் நிறுவனத்தினைக் கண்டறியும் பணியினை வெகு சிரத்தையுடன் செய்தாக வேண்டும். இந்த முடிவுகளை உடனடியாக செயல்படுத்த அகிலா சீனிவாசனான தாங்கள் முன்வர வேண்டும். கிஃப்லைப் அமைப்பின் பிற உறுப்பினர்களிடமும் இதன் உடனடி முக்கியத்தை எடுத்துரைத்து, மராத்தனை வேறு ஒரு தேதிக்குத் தள்ளி வைக்கவும், பிரதான ஸ்பான்சரை மாற்றி அமைக்கவும் அவர்களைத் தாங்கள் சம்மதிக்கச் செய்திட வேண்டும். தாங்கள் மேற்கொள்ளப்போகும் செயல்பாடே தமிழ் இனத்தை அவமானத்தில் இருந்தும், தங்களின் ஸ்ரீராம் நிறுவனத்தையும், கிஃப்லைப் அறக்கொடை நிறுவனத்தையும் அவப்பெயரில் இருந்தும் மீட்கும் செயலாக அமையும்.

தங்கள் உண்மையுள்ள

மனிதநேயன்

http://www.meenagam.org/?p=11526

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.