Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடும் ஈழ ஆதரவாளர்களுக்கு சில கேள்விகளும் !

Featured Replies

பழ.நெடுமாறன் அவர்களைத் தலைவராகக் கொண்ட உலகத் தமிழர் பேரமைப்பின் 7 வது ஆண்டு நிறைவு விழாவும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் மாநாடும் இரண்டு நாள் நிகழ்ச்சியாக டிசம்பர் 26, 27 தேதிகளில் தஞ்சையில் நடைபெற்றது. நடராசன் (சசிகலா), வைகோ, ம.தி.மு.க, ராமதாசு, பா.ம.க, மகேந்திரன், வ.கம்யூ, திண்டிவனம் இராமமூர்த்தி, தேசியவாத காங்கிரசு கட்சி, அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி, பெ.மணியரசன், த.தே.பொ.க, வைத்திலிங்கம், இந்து தமிழர் இயக்கம், நகைமுகன் தனித்தமிழர் சேனை, இராசேந்திர சோழன், சூரியதீபன், பசுபதிபாண்டியன், வீர.சந்தானம், மறவன்புலவு சச்சிதானந்தன், காசி.ஆனந்தன், முதலானோர் முக்கியப் பங்கேற்பாளர்கள். இவர்களன்றி டத்தோ சாமிவேல் உள்ளிட்ட வெளிநாட்டுத் தமிழறிஞர்களும் உள்நாட்டுத் தமிழறிஞர்களுமாகச் சேர்த்து சுமார் 80 பேச்சாளர்கள் இரண்டு நாள் நிகழ்சசிகளிலும் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு மிகக் கொடிய இனப்படுகொலையையும், புலிகள் இயக்கம் சந்தித்திருக்கும் பாரிய பின்னடைவையும் தொடர்ந்து நடைபெறும் பெரியதொரு நிகழ்ச்சி என்பதனால், தமிழகத்தில் உள்ள புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் மத்தியிலும் ஈழத்தமிழர்கள் மற்றும் புலம் பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் நிலவும் பலவிதமான கேள்விகள் மற்றும் குழப்பங்களுக்கு இம்மாநாட்டில் விடை கிடைக்கக் கூடும் என்ற ஒரு இலேசான எதிர்பார்ப்பு எங்களுக்கும் இருக்கத்தான் செய்தது.

தமிழகத்தைப் பொருத்தவரை, சமீபத்திய மாவீரர் தினத்தன்று பிரபாகரனின் குரலையோ அறிக்கையையோ எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் பலர். பிரபாகரன் இருக்கிறாரோ இல்லையோ, கேள்விகள் பல இருக்கின்றன. இனி ஆயுதப் போராட்டமா, அரசியல் போராட்டமா, அதிபர் தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் என்ன செய்யவேண்டும்? தேர்தலைப் புறக்கணிப்பதா, அல்லது வாக்களிப்பதாயின் யாருக்கு வாக்களிப்பது? புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதி யார்?..என்பன போன்ற கேள்விகளுக்கு புலி ஆதரவாளர்களே ஆளுக்கொரு விதமாகப் பதில் சொல்லி வரும் சூழ்நிலையே நிலவுகிறது. இந்நிலையில் இத்தகைய கேள்விகளுக்கு இந்த மாநாட்டில் பதிலை எதிர்பார்ப்பது குற்றமோ துரோகமோ ஆகாது என்பதால் இந்த எதிர்பார்ப்புடன் உள்ளே நுழைந்தோம்.

மேடையில் உருவிய வாளுடன் நின்று கொண்டிருந்தார் மாமன்னன் இராசேந்திர சோழன். மொத்த இலங்கையையும் வென்று ஆட்சி செய்த அந்தத் தமிழ் மன்னனுக்கு அருகில் துப்பாக்கியுடன் பிரபாகரன். பக்கத்தில் உலகத்தமிழர் பேரமைப்பின் சின்னம். அதன் பக்கத்தில் கையில் குழந்தையுடன் கதறும் தாய் - இதுதான் மேடையின் பின்புலமாய் அமைந்திருந்த சித்திரம். இது உலகத்தமிழர் ஒற்றுமையின் குறியீடா, அல்லது இந்திய மேலாதிக்கத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமா? உருவிய வாளுடன் நிற்கும் இராசேந்திர சோழனின் வாரிசு கருணாநிதியா அல்லது பிரபாகரனா? இவை நமக்குத் தோன்றிய கேள்விகள். தமிழ் உணர்வாளர்கள் எனப்படுவோருக்குத் தோன்றக் கூடாத கேள்விகள்.

25 ஆம் தேதி காலை முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்ற தலைப்பிலான அமர்வு. தலைமை வகித்த முனைவர் த.ஜெயராமன் “4000 புலிகள் ஆயுதங்களுடன் தயாராக இருக்கிறார்கள். ஆதனால்தான் இலங்கை அரசு இராணுவத்துக்கு ஆள் எடுக்கிறது. எனவே இது தோல்வியே அல்ல’’ என்றார். அந்த அமர்வில் பேசிய அனைவரும் இதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.

அடுத்து மாநாட்டு மலரை வெளியிட்டுப் பேசினார் நடராசன் (சசிகலா). “நெடுமாறனும் நானும் ஒன்றாக இருப்பதை தமிழர்கள் விரும்பவில்லை என்று குமுதம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. விசாரித்தபோது அது போலீசின் ஏற்பாடு என்று தெரிந்தது. தமிழ் ஈழத்துக்காகத்தான் நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா இல்லையா?’’ என்று கூட்டத்தைப் பார்த்து கேள்வி எழுப்பினார். விரும்புகிறோம் விரும்புகிறோம் என்று பதிலளித்தது கூட்டம்.

அன்று நெடுமாறனை பொடாவில் உள்ளே வைத்தபோதும் அம்மாவுடன் ஒன்றாக இருந்தாரே நடராசன் அதுவும் தமிழ் ஈழத்துக்காகத்தானோ என்று யாரும் கேட்கவில்லை. “தமிழகத்தைப் பெறுவதற்காக’’ அம்மாவுடன் ஒன்றாக இருக்கிறார் சசிகலா. “தமிழீழத்தைப் பெறுவதற்காக’’ அய்யாவுடன் ஒன்றாக இருக்கிறார் நடராசன் என்று அவர்களுக்குப் புரிந்திருக்கக் கூடும்.

ஈழம் - நிமிரும் காலம் என்ற தலைப்பில் நடைபெற்ற அடுத்த அமர்வில் பேசத்தொடங்கிய திமுக முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன், “பிரபாகரன் அவர்களே’’ என்று விளித்து பேசத் தொடங்கினார். இங்கே நான் பேசுவது அவருக்கு கேட்கும் என்று அவர் கூறியவுடன் கைதட்டல் கூரையைப் பிளந்தது. அடுத்துப் பேசிய பேராசிரியர் அய்யாசாமி, “இது பின்னடைவே அல்ல. புலிகள் திட்டமிட்டுப் பின்வாங்கியிருக்கிறார்கள். தமிழ் ஈழப்போராட்டத்தின் வேர் உலகம் முழுவதும் பரவிவிட்டது’’ என்று கூறி, இன்றைய நிலைமையை மாபெரும் முன்னேற்றமாகச் சித்தரித்தார்.

தற்போது ஏற்பட்டிருப்பது பின்னடைவுதான் என்று நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் அடுத்துப் பேச வந்த இராசேந்திர சோழன். “ஏற்கெனவே ஈழம் மலரும் என்றோம். இன்று நிமிரும் காலம் என்று தலைப்பிட்டிருக்கிறோம். வீழ்ந்ததனால்தான் நிமிர வேண்டியிருக்கிறது. இதிலிருந்தே பின்னடைவு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். கடந்து வந்த பாதையை சுயவிமரிசனமாகப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும்’’ என்றார். எதை சுய விமரிசனமாகப் பார்க்கவேண்டும் என்ற விவரத்துக்குள் போகாமல் கவனமாகத் தவிர்த்துக் கொண்டார்.

அடுத்து நடைபெற்ற பொது அரங்கிற்கு பா.ம.க தலைவர் ராமதாசு, இந்திய கம்யூனிஸ்டு தலைவர் மகேந்திரன் ஆகிய இருவருமே வரவில்லை. இரண்டு பேருக்கும் உடல்நிலை சரியில்லையாம். என்ன நோய் என்பது ஒருவேளை பிற்காலத்தில் நமக்குத் தெரியவரலாம். ஆனால், தேர்தலுக்கு முன் ஐயாவுடன் இருந்த தியாகு, சீமான், பெரியார் தி.க போன்றோரையும் இங்கே காணமுடியவில்லை. அதற்கான விளக்கமும் சொல்லப்படவில்லை.

பொது அரங்கின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன்.

முதலில் பேசிய வடிவேல் இராவணன், பாமக, கருணாநிதியை தாக்கிப் பேசவே நிலை கொள்ளாமல் தவித்த சச்சிதானந்தன், “”எங்களுக்கு எல்லோரும் வேண்டும். ஈழத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் பேசுங்கள். உங்கள் உள்ளூர் பிரச்சினையை வேறு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார். அடுத்துப் பேசவந்த மணியரசன், இதனைக் கணக்கில் கொண்டார் போலும். “இந்தியாவிலும் தமிழகம் அடிமையாகத்தான் இருக்கிறது, எனவே ஈழத்துக்காக மட்டுமின்றி தமிழகத்தின் விடுதலைக்காகவும் போராடவேண்டும். எது முன்னால், எது பின்னால் என்று சொல்ல முடியாது’’ என்றார். பேச வந்த அத்தனை பேரும் பிரபாகரன் புகழ் பாடுவதையும், பிரபாகரன் என்ற சொல்லைக் கேட்டவுடனே அரங்கம் ஆர்ப்பரிப்பதையும் மணியரசனாலேயே சீரணிக்க முடியவில்லை போலும்! “பிரபாகரன் புகழுக்குரியவர்தான் எனினும் புகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் என்பதில்லை’’ என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்றார்.

யாரையும் புண்படுத்தாமல் பேசிய மணியரசனை வெகுவாகப் பாராட்டினார் சச்சிதானந்தன். தனித்தமிழ்நாடு கேட்பதைப் பற்றி அவருக்கு கவலை இல்லை. அவர் கவலை எல்லாம் கருணாநிதியைத் திட்டுவது பற்றியதுதான். அடுத்துப் பேச வந்த ஆவடி மனோகரன் மறுபடியும் கருணாநிதியை சாடத்தொடங்கவே, சச்சிதானந்தன் குறுக்கிட்டார். அப்படித்தான் பேசுவேன் என்றார் ஆவடி மனோகர். அவர் பேசி முடித்தவுடன் “ஈழத்துக்காக எம்.ஜி.ஆர் 5 கோடி கொடுத்தார், ராஜீவ் 50 இலட்சம் கொடுத்தார். தமிழ்நாட்டிலிருந்து யார் என்ன கொடுத்தீர்கள். நாங்கள் எங்கள் சொந்தக் காலில் நின்றுதான் போராடினோம். உணர்ச்சி வசப்படுவதெல்லாம் காரியத்துக்கு ஆகாது’’ என்று புத்திமதி கூறினார் மறவன் புலவு.

“நம்பக்கூடாத இந்தியாவை நம்பி நீங்கள் கெட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்வது? என்னைப் பொருத்தவரை எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் தமிழர்கள் சீனாவை ஆதரிக்க வேண்டும்’’ என்று இன்னொரு காமெடி பிட்டை வீசினார் அடுத்துப் பேசிய நகைமுகன். இவர் உளவுத்துறையுடன் தொடர்பு கொண்டிருந்தவர், சந்தேகத்துக்குரிய நபர் என்பது தமிழகம் முழுதும் உலவிய ஒரு செய்தி.

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை உடைத்த கட்சியும், தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் பக்தர்கள் தேவாரம் பாடுவதற்கு எதிராக தீட்சிதப் பார்ப்பனர்களுக்கு அடியாள் வேலை பார்க்கும் கட்சியுமான இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அடுத்த பேச்சாளர்.

“இலங்கைப் பிரச்சினை என்பது தமிழரின் இனப்பிரச்சினையோ, மொழிப்பிரச்சினையோ அல்ல. அது காஷ்மீர் முதல் இலங்கை வரை உள்ள 110 கோடி இந்துக்களுக்கு எதிராக ஒரு கோடி பவுத்தர்கள் தொடுக்கும் போர். அதேபோல சைவம் வேறு தமிழ் வேறு அல்ல. களப்பிரர் காலத்தில் தமிழகத்தை ஆக்கிரமித்த சமண, பவுத்தங்களை வீழ்த்தி சைவத்தை மீட்டார்கள் சமயக் குரவர்கள். இந்தப் பிரச்சினையை இப்படி சரியான கோணத்தில் புரிந்து கொண்டிருப்பதனால்தான், எங்கள் தலைவர்கள் பால் தாக்கரேயும், முத்தாலிக்கும் (கர்நாடக இந்து சேனா) புலிகளை ஆதரிக்கிறார்கள்’’ என்றார். நாத்திகர்களை ஏளனம் செய்து அர்ஜூன் சம்பத் பேசிய போது மட்டும் கீழேயிருந்து சிறிய தொரு சலசலப்பு வந்தது. அதை அர்ஜூன் சம்பத் சட்டை செய்யக்கூட இல்லை. மற்றப்படி அவரது பேச்சை மேடையிலிருந்த யாரும் ஆட்சேபித்தோ மறுத்தோ பேசவில்லை.

அப்புறம் ஓவியர் வீர சந்தானம். “பிரபாகரன் இருக்கிறார் என்று நெடுமாறன் சொன்னார். எனக்கு 99% நம்பிக்கை வந்தது. அப்புறம் மலேசியா போயிருந்த போது அங்கேயும் இருக்கிறார் என்றார்கள். 100% நம்பிக்கை வந்துவிட்டது’’ என்றார். “அம்மா தேர்தல் நேரத்தில் ஈழத்துக்காக குரல் கொடுத்தவுடன் ரொம்ப சந்தோசப்பட்டேன். அப்புறம் ஏனோ அதை கைவிட்டு விட்டார்கள். கலைஞரும் ஜெயலலிதாவும் சேர்ந்து ஈழத்துக்காக நின்றால் நாம் அனைவரும் அவர்கள் பின்னால் நிற்போம்’’ என்றார். “இப்போதைக்கு நெடுமாறன் சொல்கிற இடத்தில் நிற்கணும்’’ என்பதுதான் அவர் உலகத்தமிழர்களுக்குக் கூறிய அறிவுரை.

26 ஆம் தேதி காலை முதல் அமர்வு - முள்வேலிக்குள் நெறிபடும் மனித உரிமைகள் . பேசியவர்கள் வதை முகாமின் கொடுமைகளை விவரித்தனர். இன்றைய சூழ்நிலையில் இந்தியாவைச் சூழ்ந்து வரும் சீன அபாயத்தை விளக்கினார் பேரா. சுப்பிரமணியன். இலங்கையில் மட்டுமல்ல, நேபாளத்திலும் மாவோயிஸ்டுகள் மூலம் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக தென்தமிழகத்தின் கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களுக்கு ஆபத்து என்றும் எச்சரித்தார். இந்த உண்மைகளை மத்திய அரசு உணரவில்லை என்றும் அதனை அவர்களுக்கு உரைப்பது போல நாம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.

அடுத்துப் பேசவந்தவர் மார்க்சிய லெனினியப் பார்வையில் இந்திய தேசியத்தையும் தமிழ்த்தேசியத்தையும் அணுகும் எழுத்தாளர் சூரியதீபன். இந்தியக் கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் தமிழ் உணர்வாளர்களின் மேற்படி தந்திரம், ஒரு காலாவதியாகிப்போன காமெடி என்பதையோ, சீன அபாயம் என்பதே அமெரிக்க இந்தியக் கூட்டணி தனது தெற்காசிய மேலாதிக்கத்தை நியாயப் படுத்துவதற்காக உருவாக்கியிருக்கும் புதிய கொள்கைப்பாடல் என்பதையோ சூரியதீபன் சுட்டிக்காட்டவில்லை. “மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகளையெல்லாம் அனுமதிக்காத ராஜபக்சே இந்திய எம்.பிக்களை அனுமதிக்க காரணம், இவர்கள் இலங்கை அரசின் கூட்டாளிகள் என்பதுதான்’’ என்று ஊரறிந்த ஒரு உண்மையை உலகத்தமிழர்களுக்காக இன்னொருமுறை கண்டுபிடித்து வெளியிட்டார். இலங்கை சென்றிருந்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு, எட்டு கோடி உலகத் தமிழர்களின் தலைவர் கலைஞர்தான் என்று அங்கே பேசியதைச் சாடி, உலகத்தமிழர்களின் தலைவன் பிரபாகரனே என்று பிரகடனம் செய்தார். பிறகு கருணாநிதி நடத்தவிருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளவரும் சிவத்தம்பியையும், ஆள்பவர்களை அண்டிப்பிழைக்கும் தமிழறிஞர்களையும் சாடினார்.

அடுத்துப் பேசிய ஈழப்பத்திரிகையாளர் அய்யநாதன், தான் ஆண்டுக்கு 6 இலட்சம் ரூபாய் சம்பாதிக்கும் பத்திரிகையாளன் என்பதை போகிற போக்கில் சொல்லிவிட்டு, புலிகள் சரணடையக் காரணம் அவர்கள் போரிடும் ஆற்றலை இழந்தது அல்ல, மக்களைக் காப்பாற்றும் நோக்கத்துக்காகத்தான் என்று “தெளிவு’’படுத்தினார். எனினும் இன்று தலைவர் இல்லாததால் நாம் நிர்க்கதியாக நிற்கிறோம். “போராட்டத்தை தொடர்வதற்கு ஆயுதம் ஏந்தவேண்டுமென்று அவசியமில்லை. இனி, நெடுமாறன் வழிகாட்டுதலில் செயல்படுவதுதான் உலகத்தமிழர்களின் கடமை’’ என்றார். எம்.ஜி.ஆர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இன்று நிலைமையே வேறு என்பதையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

அடுத்துப் பேசவந்த அருட்தந்தை பாலு, “இனி மனித வரலாற்றை கி.மு, கி.பி என்று குறிப்பிடக்கூடாது. தமிழனுக்கு முன், தமிழனுக்குப் பின் என்றுதான் குறிப்பிட வேண்டும்’’ என்றார். கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவன் தமிழன் என்பதால் தமிழனுக்கு முன் என்ன வரலாறு இருந்திருக்கும் என்று நமக்குப் புரியவில்லை. தமிழனுக்குப் பின் என்று வேறு அவர் கூறிவிட்டதால், உலகத்தமிழினம் முழுவதும் ஒழித்துக் கட்டப்படும் நாளை எண்ணி அச்சம் மேலிட்டது.

“தமிழனுக்கு மட்டுமல்ல, எல்லா இனத்துக்கும் தலைவன் பிரபாகரன்தான். ஈழம் ஏற்கெனவே பிறந்து விட்டது. சற்று நோய்வாய்ப்பட்டுள்ளது. அவ்வளவுதான்’’ என்று அடுத்த அதிர்ச்சிப் பிரகடனத்தையும் வெளியிட்டார். பிறகு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றவேண்டும் என்றார். கடைசியாக சோனியாவைப் பழிவாங்கியே தீருவேன் என்று சூளுரைத்துவிட்டு, விவிலியத்தில் ஏரோதுக்கு நேர்ந்த கதிதான் சோனியாவுக்கு நேரும் என்று சாபமிட்டார்.

முள்வேலிக்குள் நெறிபடும் மனித உரிமைகள் என்ற இந்த அமர்வுக்கு பிரபல தன்னார்வத் தொண்டு நிறுவனத் தலைவர் ஹென்றி திபேன் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரைக் காணோம்.

தோள் கொடுப்போம், துணை நிற்போம் என்ற தலைப்பிலான அடுத்த அமர்வில் மும்பை, கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து 8 தமிழறிஞர்கள் பேசினர். புதிதாக ஒன்றும் விசயம் இல்லை. வெளிநாட்டு தமிழறிஞர்கள் பங்கு பெறும் அடுத்த அமர்வுக்கு டத்தோ சாமிவேல் வரவில்லை. மலேசியத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஒருவர் பேசினார்.

பிறகு உலகப் பெருந்தமிழர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் நெடுமாறன். உலகப்பெருந்தமிழர் என்ற விருதினைப் பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் நல்லகண்ணு, இந்திய அரசின் மீது மிகவும் மென்மையாகத் தனது விமரினத்தைத் தெரிவித்தார். பேராசிரியர் விருத்தாசலம், சங்க இலக்கியங்களிலிருந்து தமிழரின் மேன்மையை நினைவுபடுத்திப் பேசினார். விருது வழங்கி விழாப்பேருரையாற்றினார் நெடுமாறன். அவரது பேச்சு முழுவதும் சச்சிதானந்தனுக்கு பதிலாகவே அமைந்திருந்தது. 1983 முதல் ஈழத்தமிழர் போராட்டத்துக்காக தமிழகத்திலிருந்து செய்யப்பட்ட உதவிகளைப்பட்டியலிட்டார். எம்.ஜி.ஆர் செய்த உதவிகளை விவரித்தார். பாரதிய ஜனதா மதவாதக் கட்சியாக இருந்தபோதும், ஈழப்பிரச்சினையில் ஆதரவாக இருந்ததாகக் கூறினார். இறுதியாக ஈழப்போராட்டத்தை பிரபாகரன் தொடர்ந்து நடத்துவார். இப்போதே நடத்திக் கொண்டுதான் இருக்கிறார் என்று கூறி முடித்தார்.

மாலை பொது அரங்கிற்கு தலைமை தாங்கிய காசி ஆனந்தன், “பிரபாகரன் இருக்கிறார் என்று நெடுமாறன் கூறுகிறார். இல்லேன்னா சொல்வாரா? அதனால் தலைவர் இருக்கிறார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்’’ என்றார். “இன்று சந்தித்திருப்பது பின்னடைவு என்று கூறுவதே தவறு. விடுதலைப் போராட்டத்துக்குத் தோல்வியே கிடையாது, ஈழம் ஒன்றுதான் தீர்வு’’ என்றார்.

அடுத்துப் பேசியவர் இந்து தமிழர் இயக்கத்தின் தலைவர் வைத்தியலிங்கம். தஞ்சையைச் சேர்ந்த வழக்குரைஞரான இவர் ஏற்கெனவே இருந்த இடம் பாரதிய ஜனதா கட்சி. “எல்லா அனைத்திந்தியக் கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும், எல்லோரு வீட்டிலும் பிரபாகரன் படத்தை மாட்டுவதுடன், ஒரு உண்டியல் வைத்து காசு சேர்த்து அதனை நெடுமாறனிடம் கொடுக்கவேண்டும்’’ என்றார் வைத்தியலிங்கம்.

கடைசியாகப் பேசிய வைகோ, இறுதிப் போரின் கொடுமைகளை விவரித்தார். “போரில் படுகாயமுற்று இரண்டு கால்களையும் இழந்த சோழமன்னன் விஜயாலயச் சோழன், என்னைத் தூக்கிக் கொண்டு போய் போர்க்களத்தில் விடுங்கள் என்று கூறிய மண் இது. எனவே தலைவர் பிரபாகரன் இருக்கிறார். வழிநடத்துவார்’’ என்றார். பிறகு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வரலாறு, அதற்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் வாக்கெடுப்புகள் பற்றிக் கூறி தமிழகத்திலும் வாக்கெடுப்பு நடக்கும் என்றார். எதற்கு வாக்கெடுப்பு, தனி ஈழத்துக்கா, தனித் தமிழ்நாட்டுக்கா என்று கூறாமல் நைசாக அவர் நழுவிய போதிலும் கூட்டம் ஆரவாரித்தது. பிறகு 33 ஆண்டுகளுக்கு முன் ஈழத்துக்கு ஆதரவாக அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கதையை விலாவரியாக சொன்னார். ஈழத்தமிழர்க்கு நடந்த கொடுமைகளை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு சென்று ஆதரவு திரட்டவேண்டும் என்றும், பிரபாகரன் புதிய எழுச்சியுடன் வருவார் என்றும் பிரகடனம் செய்தார்.

தனி ஈழம்தான் தீர்வு, வட்டுக்கோட்டை தீர்மானம்தான் இறுதி. அதுதான் இலக்கு என்பதே இந்த மாநாட்டின் தீர்மானம்.

மாநாடு நடைபெற்ற இடம் நடராசனுக்கு (சசிகலா) சொந்தமான தஞ்சை தமிழரசி திருமண மண்டபம். கூட்டம் சுமார் 2000 பேர். மண்டபம் கொடுத்தது மட்டுமின்றி வந்திருந்தவர்களுக்கு சாப்பாடும் அங்கே போடப்பட்டது. வெளிநாட்டில் இருந்தபடியே விழாவிற்கான ஏற்பாடுகளை செய்த நடராசனுக்கு வெகுவாக நன்றி தெரிவித்தார் நெடுமாறன். பிரபாகரன் படங்கள், பனியன்கள் ஆகியவற்றுடன் தமிழ் தேசிய சீருடையும் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. சந்தன நிற சட்டை, அரக்கு நிற பார்டருடன் சரிகை போட்ட நீண்ட மேல்துண்டு - துண்டை பழைய தமிழ்ப்பட ஜமீன்தார் பாணியிலும், சுப்பிரமணியசாமி பாணியிலும் பலர் அணிந்திருந்தார்கள். பெண்களுக்கான தமிழ்த் தேசியச் சீருடை என்று எதையும் காணோம்.

கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் பெரும்பான்மையினர் 80 களில் ஈழப்போராட்டம் துவங்கியபோது இளைஞர்களாக இருந்து தற்போது நடுத்தர வயதைத் தாண்டியவர்கள், முதியவர்கள். சுமார் 30 சதவீதம் பேர் இளைஞர்கள்.

பேச்சாளர்கள் அனைவரும் சிங்கள இராணுவத்தின் கொடுமைகள், இந்திய அரசின் சதி, கருணாநிதியின் துரோகம் ஆகியவற்றையும் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டையும் தாக்கிப் பேசினர். பிரபாகரன் என்ற சொல்லைக் கேட்டவுடன் மகிழ்ச்சிக் கூச்சல், அவர் உயிருடன் இருக்கிறார் என்று கூறியவுடன் ஆர்ப்பரிப்பு, கருணாநிதியைத் திட்டினால் கைதட்டல்.

இந்த மூன்றும்தான் கூட்டத்தைக் கவரும் பாயிண்டுகள் என்று பேச்சாளர்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது. எனவே இதே விசயங்களை ஒருவரை ஒருவர் விஞ்சும் விதத்தில் பில்டப் கொடுத்துப் பேசத்தொடங்கினார்கள் பேச்சாளர்கள். இதன் விளைவாக அடுத்தடுத்தப் பேச வந்த பேச்சாளர்கள் முந்தைய பேச்சாளர்களின் ரிக்கார்டை முறியடிக்க முடியாமல் மூச்சு வாங்கினார்கள்.

“தலைவர் இருக்கிறார், இது பின்னடைவே அல்ல, தலைவரின் தந்திரம், 4000 புலிகள் தயாராக இருக்கிறார்கள், முன்னிலும் வேகமாகத் தாக்குதல் தொடுப்பார்கள்.. ” என்று பலவிதமாகப் பேசி, பார்வையாளர்களின்

நரம்புகளை முறுக்கேற்றி, இதற்கு மேல் முறுக்கினால் அறுந்துவிடும் என்ற நிலையில் கடைசி பேச்சாளராக வழக்கம்போல வைகோ இறக்கப்பட்டார். வைகோவைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பல்சார் பைக்கைப் போல ஸ்டார்ட் செய்து சில நொடிகளில் டாப் கியருக்குப் போய்விடுகிறார். அப்புறம் அவ்ளோதான்.

வைகோ பேச்சைக் கேட்கும்போது தஞ்சை ரெட்டிப் பாளையம் தப்பாட்டக்குழுதான் நினைவுக்கு வருகிறது. அந்தக் குழுவிரின் முறுக்கேறிய அடியும் ஆட்டமும், தூங்குகிறவனைக் கூட கிளப்பி முறுக்கேற்றி விண்ணென்று நிறுத்திவிடும். அந்தத் தாளம் எந்தக் கருத்தையும் கூறுவதில்லை. வைகோ வின் பேச்சைப் போலவே அதுவும் வெறும் ஓசைதான். என்றாலும் இன்னதென்று தெரியாத ஒரு முறுக்கேறிய நிலையை மட்டும் அந்தத் தாளமும் ஆட்டமும் கேட்பவர்களின் உடலில் உருவாக்கிவிடும். ஆட்டம் முடிந்த பின் ஆடியவர்கள் மட்டுமல்ல, கேட்டவர்களும் அறுந்து போன ஸ்பிரிங் கம்பியைப் போல துவண்டு விடுவார்கள்.

வைகோவின் பேச்சும் அப்படித்தான். அவரை எப்போதுமே கடைசிப் பேச்சாளராகப் போடுவதன் நோக்கம், பார்வையாளர்களின் முறுக்கை மேலும் ஏற்றுவதா, அல்லது ஏறிய முறுக்கை இறக்குவதா என்ற புதிருக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

கடைசியாக வைகோ தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தந்திருக்கும் வேலைத்திட்டம் இதுதான். இறுதிப்போர் துயரத்தின் புகைப்படங்களை வீடுவீடாகத் தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். வாக்கு கேட்கவேண்டும். இதே காரியத்தைத்தான் மே மாதம் செய்து, முடிவும் தெரிந்து விட்டது. மக்கள் கிடக்கட்டும், போட்டோக்களை போயஸ் தோட்டத்துக்கு எடுத்துச்சென்று காட்டி அம்மாவைப் பேசச்சொல்வாரா வைகோ? அதற்குப் பதில் இல்லை. அத்வானியை வைத்து அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினாரே, இன்று அத்வானி ஏன் பேசமறுக்கிறார்? அதற்கும் பதில் இல்லை. கூடியிருந்த கூட்டத்திடம் இப்படிப்பட்ட கேள்விகளும் இல்லை.

மாநாட்டில் இன்னொரு விசயம் பளிச்சென்று தெரிந்தது. “எல்லாப்பயலும் திருடனுங்க. ஐயா நெடுமாறன்தான் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்’’ என்று பலர் பேசினார்கள். எளிமையானவர், நேர்மையானவர் என்று ஹமாம் சோப்பு விளம்பரம் போல நெடுமாறன் உயர்த்தப் பட்டார். வீரம், தியாகம் என்பனவற்றை முன்னிறுத்தி புலிகளை உயர்த்திப் பிடித்ததற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. எளிமையான, நேர்மையான தலைவரான நெடுமாறனின் கொள்கை முடிவுகள் பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியவுடனே ஈழ ஆதரவு அவதாரம் எடுத்தவர் சசிகலாவின் கணவர் நடராசன். இந்த அரசியல் தரகனை தமிழ்நாட்டு சுப்பிரமணியசாமி என்றும் கூறலாம். ஜெயலலிதாவால் தூர நிறுத்தப்பட்டாலும், அம்மாவின் வெற்றிக்காக அயராது உழைத்து அதன் மூலம் அதிகாரத் தாழ்வாரங்களில் தனது செல்வாக்கைப் பேணிக்கொள்ளும் இந்த நபரை ஒரு பெருநோயாளியைப் போல அரசியல் உலகமே ஒதுக்கி வைத்திருக்கிறது. ஈழத்தமிழரின் விடுதலை இப்படிப்பட்ட ஒரு நபரால் ஸ்பான்சர் செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வியையும் யாரும் எழுப்பவில்லை.

இத்துத்துவக் கொள்கைகளை அமல்படுத்துவதில் பார்ப்பனக் கும்பலைக் காட்டிலும் தீவிரமான சூத்திர ஆழ்வார் நான்தான் என்று நிரூபிப்பதற்காகவே கட்சி தொடங்கியிருப்பவர் அர்ஜுன் சம்பத். ஈழப்பிரச்சினை தமிழர் பிரச்சினையே அல்ல, இந்துப் பிரச்சினை என்று பேசிவரும் இப்பேர்ப்பட்ட ஒரு நபரை அழைத்து வந்து மேடையேற்றுகிறார் நெடுமாறன் என்றால் அது அறியாமை அல்ல. இத்தகைய நபரை மேடையேற்றுவதன் மூலம் முஸ்லிம் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் வெறுப்பு கொள்வார்கள் என்பதும் நெடுமாறன் அறியாதது அல்ல. நெடுமாறனின் தமிழ்ப் போர்வை போர்த்திய ஆர்.எஸ்.எஸ் கொள்கை அப்பட்டமாக அரங்கேறுவதைத்தான் இது காட்டியது.

யோசித்துப் பாருங்கள்! ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைப் போராட்டத்தை ஆதரிக்கிறோம். ஆனால் புலிகளை விமரிசிக்கிறோம் என்று கூறும் யாராவது இந்த மேடையில் ஏறியிருக்க முடியுமா? ஆனால் ஈழப்பிரச்சினை இனப்பிரச்சினையே அல்ல இந்து பிரச்சினை என்று பேசும் அர்ஜுன் சம்பத் ஏற முடிகிறது. இந்த அருவெறுக்கத்தக்க நபருடன் மேடையைப் பகிர்ந்து கொள்வதில் மணியரசனுக்கோ, இராசேந்திர சோழனுக்கோ, சூரியதீபனுக்கோ எவ்விதப் பிரச்சினையும் இல்லை போலும்! இப்பேர்ப்பட்ட ஐயாவின் கையினால் விருது வாங்குவதில் தோழர் நல்லகண்ணுவுக்கும் எவ்விதக் கூச்சமும் இல்லை. மாநாட்டில் பேசிய சிலர், மூன்றாவது அணியொன்றை ஐயா நெடுமாறன் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். எதற்கு மூன்றாவது அணி? ஐயா பாரதிய ஜனதா, ஜெயலலிதாவுடனான இரண்டாவது அணியின் தூணாக நின்று கொண்டிருப்பது இன்னும் அவர்களுக்குப் புரியவில்லை போலும்!

இறுதியாக, இம்மாநாட்டை ஒட்டி, தமிழகத்தில் உள்ள புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களிடமும், புலம் பெயர்ந்த புலி ஆதரவாளர்களிடமும் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம்.

30 ஆண்டு காலப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பாரிய பின்னடைவு, கொடூரமானதொரு இனப்படுகொலையை நடத்தி முடித்து விட்டு குற்றவாளிகள் கடுகளவும் அச்சமின்றி நடமாடும் சூழல், தமிழக மக்கள் மத்தியில் வடிந்து விட்ட ஈழப்பிரச்சினை குறித்த அக்கறை, இலங்கையில் இந்திய மேலாதிக்கத்தின் புதிய காய்நகர்த்தல்கள், கடந்த தேர்தலுக்கு முன் ஈழத்துக்காகக் குரல் கொடுத்த தமிழகத்துக் கட்சிகள் இப்போது சாதித்து வரும் மர்மமான மவுனம்... என பேசுவதற்கும் பரிசீலிப்பதற்கும் பல விடயங்கள் உள்ளன. இவையெதுவும் இந்த மாநாட்டில் பேசப்படவே இல்லை என்பதைக் கவனித்தீர்களா?

இது தோல்வியே அல்ல என்று பேசுகிறார்கள் சிலர், தோல்விதான் என்று அரைமனதுடன் ஒப்புக் கொள்கிறார்கள் சிலர். இது குறித்த மாநாட்டின் முடிவு என்ன? ஐரோப்பா முழுவதும் நாள் கணக்கில் தெருவில் நின்று கதறியபோதும் முள்ளிவாய்க்கால் படுகொலையை நிறுத்த முடியவில்லையே, இலங்கையின் மீது ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கூட நிறைவேற்ற முடியவில்லையே, அவலமான இந்த உண்மை நிலையைக் கூட அங்கீகரிக்காமல் சவடால் அடிப்பவர்களை ஈழ மக்களின் நண்பர்கள் என்றா கருதுகிறீர்கள்?

பிரபாகரன் இருக்கிறார் என்று உறுதிபடப் பிரகடனம் செய்கிறார்கள் பலர். இதே தஞ்சையில் இதற்கு முன் நடைபெற்ற கூட்டமொன்றில் கீழ்க்கண்டவாறு பேசினார் நெடுமாறன். “பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொல்கிறீர்களே, என்ன ஆதாரம் என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். என் ஆழ்மனது சொல்கிறது. அவர் இருக்கிறார். இதுதான் என்னுடைய பதில்’’ என்றார் நெடுமாறன். “ஐயா சொல்வதால் நானும் நம்புகிறேன்’’ என்கிறார் காசி ஆனந்தன்.

பிரபாகரன் இருக்கிறார் என்பதே உண்மையாக இருக்கட்டும். இந்த உண்மையை மட்டுமே திரும்பத் திரும்ப அடித்துப் பேசி, அதற்குக் கைதட்டி ஆர்ப்பரித்து மகிழ்ந்து கொள்வதன் பொருள் என்ன? அதன் மூலம் சம்மந்தப் பட்டவர்கள் பெறுகின்ற நம்பிக்கை எந்த விதத்தில் அவர்களுடைய செயலுக்கு வழிகாட்டப் போகிறது?

தந்தையை இழந்து நிர்க்கதியாய் விடப்பட்ட குடும்பத்தில், அதுவரை உலகம் அறியாத பெண்ணாக வீட்டுக்குள் அடைபட்டிருந்த மனைவியோ அல்லது பருவம் வராத சிறுவனோ கூட, எதார்த்தத்தைத் துணிவுடன் எதிர்கொண்டு, குடும்ப பாரத்தைச் சுமப்பதையும் கரைசேர்ப்பதையும் அன்றாட வாழ்க்கையில் நாம் காணத்தான் செய்கிறோம். இருக்கிறார், வருவார் என்பதை மட்டுமே நற்செய்திகளாக வழங்கியிருக்கிறது இந்த மாநாடு. இதனை ஜெபக்கூட்டம் என்று அழைப்பதா அல்லது மாநாடு என்று அழைப்பதா?

புலிகள் நூற்றுக்கு நூற்றுப்பத்து வீதம் சரியானவர்களாகவே இருக்கட்டும், இன்று புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகள் யார், இன்றைய சூழலில் புலிகள் இயக்கத்தின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விகளுக்கு முரண்பட்ட பதில்கள் வருகின்றனவே, இதற்கு எப்படித் தீர்வு காண்பது? எது சரியான தீர்வு என்பதை எப்படிக் கண்டடைவது?

இந்த மாநாட்டு மேடையில் இந்தியாதான் குற்றவாளி என்கிறார்கள் பலர்; இந்திய அரசுக்குப்புரியவைத்து வென்றெடுக்க வேண்டும் என்று சிலர். தனித்தமிழ்நாடுதான் தீர்வு என்கிறார்கள் சிலர்; காங்கிரசையும் திமுகவையும் முறியடிப்பதுதான் தீர்வு என்று சிலர். பின்னடைவுதான் என்று சிலர், பின்னடைவு என்று சொல்வதே குற்றம் என்று சிலர். பிரபாகரன் இருக்கிறார் என்று பலர், இல்லை என்று சிலர். இது இந்து பவுத்த பிரச்சினை என்று சிலர், ஆரியர் தமிழர் பிரச்சினை என்று சிலர். எல்லாம் முடிந்தபின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அமல் படுத்துவோம் என்பது மாநாடு போட்ட தீர்மானம். ஐயா சொல்படி நடப்போம் என்பது மாநாடு போடாத தீர்மானம்.

எதைப்பற்றியும் பரிசீலிக்காமல் முரண்பட்ட கருத்துகளை விவாதத்துக்கும் உட்படுத்தாமல், ஐயா சொல்படி நடப்போம் என்று முடிவு எடுக்கும் மாநாட்டுக்கும், அம்மா சொல்படி நடப்போம் என்று முடிவு எடுக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கும் என்ன வேறுபாடு?

சேர்ந்திருப்பதா பிரிந்து போவதா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஈழத்தமிழ் மக்களுடையதுதான் என்பதில் ஐயமில்லை. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என்று இவர்கள் தஞ்சையிலிருந்து பிரகடனம் செய்கிறார்கள். ஐரோப்பாவெங்கும் இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் வாக்களித்திருக்கிறார் என்கிறார் வைகோ. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றி வட்டுக்கோட்டையில் (இலங்கை மண்ணில்) வாழும் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்? கேட்கத் தேவையில்லையா? வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்குப் பின்னர் பிறந்த தமிழர்களிடம் அது பற்றிக் கேட்கத் தேவையில்லையா? அன்று முதல் இன்று வரை நடைபெற்ற போராட்டத்தின் சரி பிழைகளை ஆராயத் தேவையில்லையா? புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு, பிரபாகரன்தான் ஒரே தலைவர் என்று நீங்கள் நம்பிக்கையுடன் முழங்கிய காலம் ஒன்று இருந்தது. தஞ்சை மாநாட்டில் கூடியிருந்தோரிடம் அத்தகைய நம்பிக்கையைக் காணமுடியவில்லை. மாறாக தம் நம்பிக்கையை மறு உறுதி செய்து கொள்வதற்காகவும், தலையெடுக்கும் சந்தேகங்களைத் தம் சொந்த மனதில் ஆழப்புதைத்து மூடுவதற்காகவும், ஒத்த உணர்வுள்ளவர்கள் ஏற்பாடு செய்து கொண்ட சந்திப்பாகவே இது இருந்தது. தோற்றத்தில் வீரம் காட்டினாலும், இது பரிதாபத்துக்குரிய ஒரு அவலம்.

உளனோ அன்றி இலனோ என்று தனது ஐயத்தைப் பாடலில் பதிவு செய்ய மாணிக்க வாசகருக்கு இருந்த தைரியம் கூட அங்கே யாருக்கும் இல்லை. “ஐயர் சொல்வதனால் கடவுள் இருக்கிறார்’’ என்று நம்பி வளர்ந்த சமூகம், “”ஐயா சொல்வதனால் பிரபாகரன் இருக்கிறார்’’ என்று நம்புகிறது. பெரியார் பிறந்த மண்ணுக்கு இது ஒரு பேரவலம்தான்.

ஆனால் கடவுள் இருக்கிறார் என்று நம்பும் தீவிர பக்தனும் கூட தனது அடுத்த வேளைச் சோற்றுக்கு கடவுள் வழி சொல்வார் என்று காத்திருப்பதில்லை. தன் சொந்த முயற்சியையும் உழைப்பையுமே அவன் நம்புகிறான். இறை நம்பிக்கையை இழந்து விடவில்லையென்றாலும், தன் சொந்தத் தவறுகளைப் பரிசீலிக்கவும் செய்கிறான். அதன் ஊடாக, தன் சொந்த எதிர்காலத்தைத் தானே உருவாக்கிக் கொள்ளும் ஆற்றலையும் பெறுகிறான். பின்னொரு நாளில், அவன் இறை நம்பிக்கையைத் துறந்து விட்டான் என்ற உண்மையை நாம் அவனுக்கு நினைவூட்ட வேண்டியதாகி விடுகிறது. “அப்படியா, மறந்து விட்டேன்’’ என்பது அவனது பதிலாக இருக்கிறது.

நாம் பிரபாகரனை மறக்கச் சொல்லவில்லை. இந்தப் போராட்டத்தின் சரி பிழைகளை நினைக்கச் சொல்கிறோம். அவ்வளவே.

வினவு தளத்திலிருந்து - http://www.vinavu.com/2009/12/29/the-eelam-question-continues/

தொடர்புடைய பதிவுகள்

* ஈழம் – இந்தியா முதுகில் குத்துவது ஏன்?

* ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !

* ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?

* புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.

* ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் ! – வெளியீடு – PDF டவுன்லோட்

* ஈழம்: சென்னையில் ம.க.இ.க ஆர்பாட்டம் ! படங்கள், வீடியோ !!

* ஈழம்: இலண்டன் வானொலியில் தோழர் மருதையன் உரையாடல் – ஆடியோ

* இந்திய அரசியலின் இழிநிலை: ஆ.விகடனில் தோழர் மருதையன் !

* புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்

* புலி அபிமானிகள் அனைவரும் பாசிஸ்டுகளா? தோழர் இரயாகரனுக்கு ஒரு பதில்!

* ஈழம்-ரதி-இரயா-வினவு: வறட்டுவாதம் மார்க்சியமல்ல !!

* வீழ்ந்தது ஈழம்! ‘மார்க்சிஸ்டு’ மனமகிழ் மன்றம் கொண்டாட்டம்!!

* தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பழ.நெடுமாறன் – கககபோ!

* எங்கே தமிழன்? எங்கே எட்டாவது சீட்டு? ராமதாசு சீற்றம் !

* அழியும் ஈழத் தமிழினம்…அதிகாரத்திற்கு அலையும் கருணாநிதி !

* ஜெ மாறிவிட்டார் ! விரக்தி ->பிரமை ->நம்பிக்கை ->சந்தர்ப்பவாதம்

* ஈழத்தின் எதிரி ஜெ – ஆதாரங்கள்!

* ஈழம்: தலைவர்களின் ‘தியாகம்’ – தமிழருவி மணியன் !

* ஈழம்: கருணாநிதியின் கோழைத்தனம் ஜெயாவிட் புலிப் பூச்சாண்டி!

* ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !

* ஈழப் பிரச்சினை : வைகோ விடுதலை!

* பிற ஈழம் தொடர்பான கருத்துப்படங்கள், கட்டுரைகள், காணொளிகள், போராட்ட செய்திகள்

இந்தப் போராட்டத்தின் சரி பிழைகளை நினைக்கச் சொல்கிறோம். அவ்வளவே.

சரி பிழை பிடித்து என்னத்தை செய்யமுடியும்,

புலி செய்த்தது பிழை என்று சொல்லித்தான் கருனா,பிள்ளையான் இன்னும் பல புலம்பெயர் புலிஆதரவாளர்கள் பல செயல்பாடுகளில் இறங்கியுள்ளனர்.

75வீதமான ஈழத்தமிழருக்கு புலிகள் தோல்வியை தழுவியுள்ளனர் என்பது நன்றாகவே தெரியும்,

Edited by Jil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிழைகளை மட்டும் எண்ணிக்கொண்டு இருப்பதால் யருக்கு என்ன லாபம்.

நடந்து முடிந்தவைகளை பற்றி பேசுவது எளிதான ஒன்று ஆனால் நாளைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பேச தான் ஆள் யரும் இல்லை.

எப்படி பேசினால் தமிழனை கை தட்ட வைக்கலாம் என்று யோசித்தவர்கள் அவர்களை கை நீட்டி தூக்கி விட ஏன் முன்வரவில்லை.

தமிழகம் கொஞ்சம் கரம் நீட்டினால் ஈழத்தில் உள்ளவர்களை வாழவைக்கலாம்.

அவர்களை வைத்து அரசியல் செய்து பிழைத்துக்கொண்டு இருக்கும் கட்சிகளுக்கு இதில் எந்த அக்கரையும் இல்லை.

மக்களுக்கும் மனதிலும் மதியிலும் கொஞ்சமும் இரக்கம் இல்லை.

அக்கரை உள்ளவர்களும் அதை வெளிப்படுத்த வழி இல்லாமல் இருக்கிறார்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.