Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மையினரின் கொழும்புக் குடியேற்றமும் பெரும்பான்மையினரின் வடக்குக் குடியேற்றமும்

Featured Replies

வடக்கில் சிங்களவர்களின் குடியமர்வு சர்ச்சைக்குரிய முக்கிய விவகாரங்களில் ஒன்றாகியுள்ளது.

இதுபற்றி அடிக்கடி நாடாளுமன்றத்திலும் குரல்கள் ஒலிக்கின்றன. விவாதங்களின் போதும் இதுபற்றிய பேச்சு எடுபடுகிறது.

போர் முடிவுக்கு வந்து வன்னியில் மீள்குடியமர்வு ஆரம்பிக்கப்பட்ட போது சிங்களக் குடியேற்றங்கள் பற்றிய சர்ச்சைகளும் எழத் தொடங்கின.

அரசாங்கம் வன்னியில் இராணுவ முகாம்களுக்கு அருகிலேயே சிங்களக் குடும்பங்களைக் குடியமர்த்தப் போவதாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அப்படியான எந்தத் திட்டமும் தம்மிடம் இல்லை என்று அரசாங்கம் கூறியது.

அதேவேளை, முக்கிய நிரந்தரப் படைத்தளங்களுக்கு அருகிலேயே படையினர் மற்றும் அதிகாரிகளுக்கான தங்குமிடங்களை அமைத்துக் கொடுக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இப்போதும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

முறிகண்டிப் பிரதேசத்தில் இன்னமும் வெளியாரின் பார்வைக்கு அனுமதிக்கப்படாத பகுதியில் இராணுவக் குடியேற்றங்கள் இடம்பெறவுள்ளதாக சந்தேகம் நிலவுகிறது. அதுபற்றிய செய்திகள் இப்போதும் வந்து கொண்டிருக்கின்றன.

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கடந்த சனியன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, முறிகண்டியில் இஸ்ரேல் பாணியிலான இராணுவ குடியிருப்புகளை அமைப்பதற்கு ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். இது அபாயகரமான மற்றொரு ஈழப்போருக்கு வழி வகுக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ள கருத்தும் முக்கியமானது.

தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகள் சிங்களக் குடியேற்றங்கள் பற்றி அச்சத்தை வெளியிட்ட போது, கொழும்பில் தமிழரும் முஸ்லிம்களும் ஆதிக்கம் செலுத்தும் போது வடக்கில் சிங்களவர்கள் குடியேற்றப்படுவதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ. இது பொறுப்புவாய்ந்த ஒரு பதிலாகத் தெரியவில்லை.

சிங்களக் குடியேற்றங்களுக்கு அவரது ஆதரவு இருப்பதை தமிழ்க்கட்சிகளுக்கு நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளார். கொழும்பு மாநகரசபைப் பகுதி தமிழர், முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் இருப்பது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அடிக்கடி சுட்டிக்காட்டி வருகிறார்.

சிங்களவர்களிடம் இருந்து தமிழரும், முஸ்லிம்களும் கொழும்பைப் பறித்துக் கொண்டு விட்டது போன்ற ஆதங்கம் அவரது பல பேட்டிகளில் வெளிப்பட்டிருப்பதைக் காணலாம். அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது கூட இதைக் கூறியிருந்தார்.

கொழும்பு நகரில் தமிழர்கள், முஸ்லிம்கள் அதிகம் வாழ்வது உண்மையே. ஆனால் அது தவிர்க்கப்பட முடியாத ஒன்று. காரணம் கொழும்பு நாட்டின் தலைநகரம். அதுவே பிரதான வணிக மையம்.

பொதுவாக உலகெங்கிலும் உள்ள நாடுகளின் தலைநகரங்களிலும் இது போன்ற நிலை இருப்பது வழக்கமே.

ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவோ கொழும்பு விவகாரத்தையும் வடக்கில் சிங்களக் குடியேற்றங்களையும் ஒப்பிட்டுள்ளார். அதைவிட இன்னொருமுக்கிய விடயம், கொழும்பில் தமிழர்களோ, முஸ்லிம்களோ திட்டமிட்ட ரீதியில் குடியேறவில்லை. அதை ஊக்குவிப்பதற்கும் யாரும் இருக்கவில்லை.

வடக்கு கிழக்கில் இருந்து சென்ற தமிழர்களோ முஸ்லிம்களோ கொழும்பில் தமக்கு வீடு தர வேண்டும் என்றோ, காணி தரவேண்டும் என்றோ அடம் பிடிக்கவில்லை. அவர்கள் தமது சொந்த சம்பாத்தியத்தைக் கொண்டே அங்கு குடியேறினர். அதைக் கொண்டே அங்கு வாழ்கின்றனர்.

ஆனால், வடக்கில் நிலைமை அப்படியில்லை. வடக்கில் சிங்களவர்களின் குடியேற்றம் என்பது மிகவும் சிக்கலான ஒன்று.

ஏனென்றால் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தான் கடந்தகால கசப்பான அனுபவங்களுக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது. அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படுவதை யாரும் விரும்ப மாட்டார்கள்.

திட்டமிடப்படாத அடிப்படையில் சிங்களவர்கள் யாராவது வடக்கில் காணியை, வீட்டை வாங்கி குடியேறுவதை தடுக்க முடியாது. அதற்கு இலங்கையின் சட்டத்திலும் இடமில்லை.

இலங்கையில் யாரும் எங்கும் வாழும் அடிப்படை உரிமை அனைவருக்கும் உள்ளது.

இடம்பெயர்ந்து சென்ற சிங்களவர்களின் மீள்குடியமர்வையும் யாராலும் தடுக்க முடியாது. ஆனால், மீள்குடியமர்வு என்ற பெயரில் இடம்பெறுகின்ற சிங்களக் குடியேற்ற முயற்சிகள் தான் இப்போது சர்ச்சைக்குரியதொன்றாகியுள்ளது.

அரசாங்கம் முன்னர் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் வடக்கில் மேற்கொள்ளப்படாது என்று கூறியது. மீள்குடியமர்வு மட்டுமே இடம்பெறும் என்றும் அறிவித்தது.

ஆனால் இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கருத்தைப் பார்க்கும் போது , கொழும்பில் தமிழர்கள், முஸ்லிம்கள் இருக்கும் போது வடக்கில் சிங்களவர்களின் குடியமர்வைத் தடுக்க முடியாது என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

இது சிங்களக் குடியேற்றங்களுக்கான ஊக்குவிப்பாக அமையப் போகிறது. அரசாங்கத்தின் ஆதரவும், பின்புலமும் இதற்கு இருக்கிறதா என்ற கேள்வி தான் முன்னர் இருந்தது. இப்போது அது என்று பலரால் கருதப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற விவாதம் ஒன்றின் போது வடக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக சுரேஷ் பிரேமச்சந்திரன் குரல் எழுப்பினார். அதற்கு ஆளும்கட்சி சார்பில் பதிலளித்த அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, கொழும்பு, ஜா எல, ஹெந்தலயில் இந்து கோவில்கள் அமைக்கப்படும் போது வடக்கில் பௌத்த ஆலயங்கள் அமைக்கப்படுவது தவறா என்று கேட்டார்.

இப்போது என்னவென்றால், ஐதேக எம்.பி ஒருவர் சிங்களவர்களும் குடியேறும் வகையில் யாழ்ப்பாண தேச வழமைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

ஆக மொத்தத்தில், சிங்களக் குடியேற்றங்கள் என்ற விடயத்தில் பலரும் உறுதியான அடியை எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளனர் என்பதே உண்மை.

சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தெற்கிலிருந்து சென்ற சுமார் 200 சிங்களக் குடும்பங்கள் யாழ்.ரயில் நிலையத்தில் தங்கியிருந்து கொண்டு தம்மை மீளக்குடியேற்றுமாறு கோரின.

அந்த இழுபறி நீடித்துக் கொண்டிருக்க அவர்கள் தாமாகவே வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் குடியேறினர்.

அவர்களை வெளியேற்றவோ அவர்களின் குடியேற்றத்தைத் தடுக்கவோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை அரசாங்கம். தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் சார்பில் ஜனாதிபதியைச் சந்தித்தவர்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர்.

அவரே தான் சில நாட்களுக்கு முன்னர் நாவற்குழியில் குடியமர்ந்த சிங்களவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் கூறியதாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இப்போது ஜனாதிபதியே சிங்களக் குடியேற்றங்களை வடக்கில் தடுக்க முடியாது என்று கைவிரித்து விட்டார். இதன் காரணமாக நாவற்குழியில் சிங்களக் குடும்பங்களின் குடியமர்வு சட்டபூர்வமானதாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்து சென்ற சிங்களக் குடும்பங்கள் நிரந்தரக் குடியிருப்பாளர்களாக இருந்தால் அவர்கள் மீள்குடியமர்வதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது. ஆனால், வந்தவர்கள் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் என்பதற்கான போதிய சான்றுகளை அளிக்கவில்லை.

ஆனாலும், அவர்கள் வடக்கில் குடியேற முயன்றதற்கு அரசாங்க ஆதரவு இருப்பதே காரணம். இந்தப் போக்கு மேலும் அதிகளவிலான சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும். இந்த நிலையானது வடக்கில் புதியதொரு சூழலை உருவாக்கப் போகிறது.

இது தமிழரின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் முயற்சி என்று தமிழ்க் கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றன. அதையெல்லாம் அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. குடியேற்ற முயற்சியில் ஈடுபட்டிருப்போரும் கண்டுகொள்ளவில்லை.

இத்தகைய குடியேற்றங்கள் மூலமாகத் தனது பெயரை கெடுக்க சிலர் முனைவதாக முன்னர் கூறிய ஜனாதிபதியே இப்போது அவர்கள் வடக்கில் குடியேறுவதில் என்ன தவறு என்று கேட்கிறார்.

இவையெல்லாம் முக்கியமானதொரு நல்லிணக்க சூழலுக்குள் நாட்டைக் கொண்டு செல்லும் போலத் தெரியவில்லை.

போரின் முடிவுக்குப் பிறகு தமக்கு அநீதிகள் இழைக்கப்படுவதாக தமிழர்கள் அதிகளவில் நம்புகிறார்கள். அதில் சிங்களக் குடியேற்ற முயற்சிகள் முதன்மையானது.

தமிழர்கள் மீண்டும் தாம் ஏமாற்றப்படப் போகிறோம் என்று உறுதியாக நம்பத் தொடங்குவது ஆபத்தான அறிகுறி.

அது நிச்சயம் நல்லிணக்க நிலைக்கு இட்டுச் செல்லாது.

நல்லிணக்க சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு இப்போது முற்றிலும் அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிடமும் தான் உள்ளது. இந்தப் பொறுப்பை சரியாக கையாளத் தவறினால் வீண் விபரீதங்களுக்கு வித்திடப்படலாம்.

- கே.சஞ்சயன்

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-08-31-14-50-37/12043-2010-11-28-16-33-27.html

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் சேரிக் குடியிருப்புகளிலுள்ள தமிழர்களுக்கு வடக்கில் காணித்துண்டு

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2010 05:16

122நகரில் தற்காலிக வீடுகளில் வசிக்கும் தமிழ் குடும்பங்களுக்கு வடக்கில் காணித் துண்டுகளை வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு முன்வந்துள்ளது.கொழும்பு நகரில் அரச காணிகளில் வசித்து வரும் சுமார் 60 ஆயிரம் குடும்பங்களை வேறு இடங்களில் குடியேற்றும் நடவடிக்கைகளை நகர அபிவிருத்தி அதிகார சபை மேற்பார்வை செய்யவுள்ளது. இதனுடன் இணைந்த முயற்சியின் ஓரங்கமானதே பாதுகாப்பு அமைச்சின் முன்முயற்சியென "சன்டே லீடர்' பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள உள்ளூராட்சி அமைப்புகளின் உள்ளூராட்சி உறுப்பினர்களை, அரசாங்கம் வழங்க முன்வந்திருக்கும் விடயம் தொடர்பாகச் சேரிக் குடியிருப்புகளில் அரச காணிகளில் வசிக்கும் தமிழ் குடும்பங்களுக்கு அறிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் அறிவுறுத்தியிருப்பதாகவும் சன்டே லீடர் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது, வடக்கிலுள்ள தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்லவிரும்பும் தமிழ்க் குடும்பங்களின் பெயர்ப்பட்டியலைத் தயாரிக்குமாறு தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் தன்னை அடையாளம் காட்ட விரும்பவில்லை.

மோதலின் போது வடக்கிலிருந்து கொழும்புக்கு வந்த தமிழ் குடும்பங்களுக்கு அவர்கள் விரும்புவதால் வடக்கில் காணி வழங்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்பதை அறிவிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம் என்று உள்ளூராட்சி சபை உறுப்பினர் கூறியுள்ளார்.

அரசு தெரிவித்திருப்பது குறித்து ஊறுகொடவத்தைப் பகுதியிலுள்ள சதம் மாதிக் வத்தை, வடுல்லவத்தை பகுதியிலுள்ள தமிழ் குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்குமாறு கொலன்னாவ நகரசபை உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக அறிய வருவதாக சன்டே லீடர் கூறியுள்ளது. சுமார் 30004000 குடும்பங்கள் வரை நகர எல்லைக்குள் இருப்பதாகக் கொலன்னாவ நகரசபை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இக் குடும்பங்களில் அநேகமானவை 20 வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் இக் குடும்பங்களுக்கு 17,500 ரூபா கடன் உதவியும் வழங்கப்பட்டதாகவும் நகர சபையால் பொது வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறிய அவர் தன்னை இனங்காட்டவிரும்பவில்லை.

இதேவேளை, சுதுநெலும்புர என்ற வீடமைப்புத் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கொழும்பிலுள்ள சாலமுல்லப் பகுதியில் இந்த வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாற்று குடியிருப்புகளை வழங்க இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

தாங்கள் வடக்கிற்கு திரும்பிச் செல்ல விரும்புவதாக சில குடும்பங்கள் கூறியிருப்பதாக உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அரசு தெரிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள எத்தனை தமிழ்க் குடும்பங்கள் முன்வந்திருக்கின்றன என்று கேட்கப்பட்டபோது, மதிப்பீடு தற்போது முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதேவேளை, வேறு இடங்களுக்கு மாற்றப்படவுள்ள குடும்பங்கள் பற்றிய தகவல்களை நகர அபிவிருத்தி அதிகார சபை திரட்டி வருகிறது.

ஹோமாகம, கம்பஹா, களுத்துறைப் பகுதிகளில் காணிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் கொழும்பு நகரிலிருந்து குடும்பங்கள் அங்கு இடம்மாற்றப்படவுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

sankamam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.