Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தாவை காப்பாற்ற கத்தோலிக்க சிங்கள மதகுருமார் கடுமையாக முயற்சித்தனர்

Featured Replies

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை அடுத்து திக்கற்று விக்கித்து பேதலித்து தவித்து நின்ற தமிழினத்திற்கு நம்பிக்கை தரும் வண்ணம் காத்திரமான செயற்பாடுகளை முடுக்கிவிட்டு முள்ளிவாய்க்காலுக்கு பின்னான ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு அத்திவாரம் இட்டவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் கலாநிதி இமம்மானுவேல் அடிகளார். இன்றுவரை அவர் தலைமையிலான உலகத்தமிழர் பேரவை வெளிப்படையாகவும் திரைமறைவிலும் முன்னெடுத்துவரும் இராஜதந்திர நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு புத்தெழுச்சி தருபவை.

முன்பு பிரித்தானியாவில் பிரித்தானியாவின் மிக முக்கிய அரசியற்தலைவர்கள் மட்டுமின்றி வேறுபல அரசியல் இராஜதந்திரிகளையும் அழைத்துவந்து சிங்கள அரசு தமிழர்கள்மீது நடத்திய இனப்படுகொலையை உலகறியசசெய்தது ஒரு நீதிக்கான அழைப்பை உலக அரங்கில் வெளிப்படையாக முன்வைத்த நிகழ்வு என்று வர்ணிக்கலாம்.

அதன் பின்னரும் வெறும் பேச்சுடன் நிற்காது, சிறீலங்கா அரச தலைவருக்கும், அவருக்கு உதவியாக இனப்படுகொலையை மேற்கொண்ட சிறீலங்கா படை அதிகாரிகளுக்கும் எதிராக பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழ் மக்களை ஒன்றுதிரட்டி உலகத்தமிழர் பேரவையும், பிரித்தானியா தமிழர் பேரவையும் மேற்கொண்ட போராட்டங்கள் போற்றத்தக்கவை.

இந்த போரட்டத்தின் நோக்கங்களில் இருந்து சிறீலங்கா அரசு மயிரிழையில் தப்பிப்பிழைத்தபோதும், அவர்களுக்கு தொடர் ஆபத்துக்கள் காத்திருக்கின்றன என்பதை புலம்பெயர் தமிழ் மக்கள் உறுதிபடத் தெரிவிக்கும் நிகழ்வாக அது அமைந்தது எனில் அது மிகையாகாது.

“சிறீலங்கா அரச தலைவருக்கு எதிராக பிரித்தானியாவில் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் சிறீலங்கா அரசுக்கும், சிங்கள மக்களுக்கும் மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பில் பலர் தமது ஆச்சரியத்தை தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் கத்தோலிக்க சிங்கள மதகுருமார் சிலர் எனக்கு தொலைபேசி அழைப்பை எடுத்திருந்தனர். என்மூலம் இந்த போராட்டத்தை நிறுத்த அல்லது தடுக்க அவர்கள் முயற்சி எடுத்திருந்தனர்.

ஆனால் நான் அவர்களுக்கு கூறினேன் முள்ளிவாய்க்காலில் அவலங்கள் நிகழந்தபோது, இலங்கை திருச்சபையும், நீங்களும் எங்கேபோய் இருந்தீர்கள் என்று. இன்று கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட மகிந்தாவை பாதுகாக்க நீங்கள் ஏன் இவ்வளவு முயற்சி எடுக்கிறீர்கள் என கேட்டேன்” என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் காலாநிதி இம்மானுவேல் அவர்கள் எமக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இந்த நீண்ட நேர்காணலை நட்பு ரீதியிலான உரையாடலாக எமக்காக பதிவு செய்த படைத்துறை ஆய்வாளர் அருஸ் அவர்களுக்கும், அதனை மேற்கொள்வதற்கு உதவிய உளவியல், பெண்ணிய ஆய்வாளர், ஊடகவியலாளர் திரு பரணி கிருஷ்ணரஜனி அவர்களுக்கும் ஈழம்ஈநியூஸ் இந்த இடத்தில் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

நேர்காணலின் முதலாவது பாகம் வருமாறு:

கேள்வி: அண்மையில் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட சிறீலங்கா அரச தலைவருக்கு எதிராக தமிழ் மக்கள் முன்வைத்த போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும் தமிழ் மக்களுக்கு ஒரு உளவியல் உறுதியை அளித்துள்ளது. இந்த நடவடிக்கைகளில் உலகத் தமிழர் பேரவையின் பங்கு முதன்மையானதும், போற்றத்தக்கதுமாகும். இந்த நிலையில் உலகத் தமிழர் பேரவையின் அடுத்த கட்ட நகர்வு என்ன? அதற்கு எத்தகைய ஆதரவுகளை புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் இருந்து எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: அண்மையில் லண்டனில் மகிந்த ராஜபக்சாவுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களையும், அவரை நீதிமன்றத்திற்கு இட்டுச்செல்லும் முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தோம். மிகவும் கடும் குளிரான காலநிலையிலும், பெருமளவான மக்கள் முன்வந்து போராட்டத்தில் பங்கொடுத்துக்கொண்டது போற்றத்தக்கது. எமது மக்களை அவர்களின் சோகத்தில் இருந்து மீட்டெடுத்து, அவர்களுக்கு உற்சாகமளித்து, உளவியல் உறுதியளித்து, மீண்டும் அவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தும் தேவையிருந்தது.

மறுபுறத்தில் அது மக்கள் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை என நாம் கருதுகின்றோம். அதற்கு காரணங்கள் பல, அதில் முக்கியமானவை, எங்களுக்கு தேவையான தகவல்களும், ஆதரவுகளும், பண உதவிகளும் வேண்டிய அளவு கிடைக்கவில்லை. எனவே நாம் மேற்கொண்ட கடுமையான முயற்சிகள் முழுமையாக வெற்றிபெறவில்லை.

இருந்தும் ஒக்ஸ்பேட் மேடையை பயன்படுத்தி சிறீலங்கா அரசு என்ன செய்ய விரும்பியதோ அதற்கு முற்றுப்புள்ளிவைத்து மகிந்தாவின் கொலைகாரக் கூட்டத்தை திரும்பி ஓடவைத்துள்ளோம்.

எமது நடவடிக்கைகள் சிறீலங்கா அரசுக்கும், சிங்கள மக்களுக்கும் மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பில் பலர் தமது ஆச்சரியத்தை தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் கத்தோலிக்க சிங்கள மதகுருமார் சிலர் எனக்கு தொலைபேசி அழைப்பை எடுத்திருந்தனர். என்மூலம் இந்த போராட்டத்தை நிறுத்த அல்லது தடுக்க அவர்கள் முயற்சி எடுத்திருந்தனர்.

ஆனால் நான் அவர்களுக்கு கூறினேன் முள்ளிவாய்க்காலில் அவலங்கள் நிகழந்தபோது, இலங்கை திருச்சபையும், நீங்களும் எங்கேபோய் இருந்தீர்கள் என்று. இன்று கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட மகிந்தாவை பாதுகாக்க நீங்கள் ஏன் இவ்வளவு முயற்சி எடுக்கிறீர்கள் என கேட்டேன்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற கொலைகளை மேற்கொண்ட கொலையாளிகளைத் தான் தமிழ் மக்கள் தற்போது எதிர்க்கின்றனர். அதில் நாம் எல்லோரும் தெளிவாக இருக்கிறோம். அந்த கொலைகளுக்கு காரணமானவர்களை நாம் நிட்சயமாக என்றைக்கும் எதிர்ப்போம்.

கேள்வி: பிரித்தானியா அனுபவத்தில் இருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் கற்றுக்கொண்டு செய்யவேண்டியவை என்ன?

பதில்: பிரித்தானியாவில் இடம்பெற்ற சம்பவங்களில் இருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். உலகத்தமிழர் பேரவையும், பிரித்தானியா தமிழர் பேரவையும் தம்மை உறுதியாக கட்டியமைத்தால் தான், வருங்கால நடவடிக்கைகளில் நாம் கூடிய வெற்றியடையலாம் என்ற ரீதியில் நாம் சில முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.

போராட்டத்தின் ஒரு பகுதி எழுச்சிகொண்ட மக்கள் கூட்டத்தினால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு போராட்டங்களாகும். மக்கள் முன்வந்து அந்த ஆதரவைக் கொடுக்கவேண்டும். போராட்டத்திற்கு தேவையான பண உதவியையும் மேற்கொள்ளவேண்டும். சிறு சிறு தொகையாக இருந்தாலும் அதனை நிரந்தரமாக செய்தால் தான் நாம் எமது முயற்சிகளை வெற்றிகரமாக மேற்கொள்ளமுடியும்.

அதேநேரத்தில் எமது தற்போதைய நடவடிக்கைகளுக்கு மக்களின் ஆதரவுபெற்ற, ஒழுக்கமான, பலமான அமைப்புக்களும், செயற்திறன்மிக்கவர்களைக் கொண்ட குழுக்களும் தேவை. உயர் மட்டங்களில் மேற்கொள்ளப்படும் முக்கிய பணிகளுக்கு சட்ட நிபுணர்கள், திறமைவாய்ந்த ஊடகவியலாளர்கள், அரசியல் அனுபவம் உள்ளவர்கள் போன்றோர் தேவை. மேலும் இவர்கள் ஒழுக்கத்துடனும், நேர்மையாகவும் எமது இலட்சியத்திற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களாக இருத்தல் வேண்டும்.

எனவே தமிழ் மக்கள் தமது அமைப்புக்களை பலப்படுத்தி, தமது முயற்சிகளில் உறுதியாகவும் தெளிவாகவும் இருத்தல்வேண்டும்.

மற்றுமொரு காரணி என்னவெனில், சிறீலங்கா அரசு எவ்வாறு தனது புலனாய்வுத்துறையை வலுப்படுத்தி எமது தகவல்களை பெற்றுவருகின்றார்களோ, அதேபோல நாமும், கொழும்பிலும், சிறீலங்கா தூதரகங்களிலும் ஊடுருவி அரசுக்குள் இருந்து முக்கிய தகவல்களை பெற்றெடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டவாறு இருத்தல் வேண்டும்.

இந்த பாடமானது பிரித்தானியாவில் மட்டும் கற்றுக்கொண்டதாக இல்லாது, எல்லா நாடுகளிலும் பின்பற்றப்பட வேண்டியவை. சிறீலங்கா அரசின் அதிகாரிகள் உலகில் எங்கு சென்றாலும், அங்குள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் அவர்களை எதிர்ப்பதற்கு அல்லது கைதுசெய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.

குறிப்பிட்ட நாடுகளின் சட்டங்களை ஆராய்ந்து, எவ்வாறு இந்தப் போர்க்குற்றவாளிகளை கைது செய்யலாம் என்பதை, சட்டவாளர்கள் மூலம் அறிந்து அதற்கு தேவையான தகவல்களையும், பணத்தையும் திரட்டி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி: சிறீலங்கா அரசு மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பில் சனல் போஃர் செய்தி நிறுவனம் வெளியிட்ட காணொளியில் காணப்படும் இசைப்பிரியா என்ற ஊடகவியலாளரின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் அடுத்து என்ன நகர்வை மேற்கொள்ள முடியும்?

பதில்:இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பான தகவல்களை நாம் மிக மிக முக்கியமாக கருத்தில் எடுத்து பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமாக உள்ளன. ஒன்று, அன்று யாழ்ப்பாணத்தில் கிருசாந்தி குமாரசுவாமி என்ற மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டபோது, மக்களும், பல மாணவிகளும், பெண்கள் அமைப்புக்களும் அனைத்துலக ரீதியில் பரந்த போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால் அதன் பின்னரும் பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.

இசைப்பிரியா என்பவர் ஒரு பெண் மட்டுமல்லாது, அவர் ஒரு ஊடகவியலாளரும் கூட. ஊடகவியலாளர்கள் எமது சர்வதேச போராட்டத்திற்கு முக்கியமானவர்கள் என்பதை நாம் உணரவேண்டும். ஏனெனில், எமது போராட்டத்தில் எம்மிடம் திறமையான ஊடகவியலாளர்கள் இல்லை. இருந்த சிலரும் கொல்லப்பட்டுவிட்டார்கள். சிறீலங்கா அரசை பொறுத்தவரையில், சிங்கள ஊடகவியலாளர்களை நன்றாகப் பயன்படுத்தி கடந்த காலங்களில் சர்வதேச மட்டத்தில் பல பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேச ஊடகங்களை பொறுத்தவரையில் சிலர் மட்டுமே எமக்கு உதவியாக இருந்திருக்கின்றனர். இன்றைக்கு எமக்கு உதவிவரும் அனைத்துலக மன்னிப்புச்சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றவை கூட, சில வருடங்களுக்கு முன்னர் எம்மீது சில பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்கள்.

அவர்கள் இன்று எமது பக்கம் திரும்பியிருப்பதற்கு வேறு காரணங்கள் உள்ளன. மகிந்தா ராஜபக்சா அரசு சீனா, ஈரான், ரஸ்யா, பாகிஸ்த்தான் போன்ற நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளதால், மேற்குலகம், குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் போன்றவை எமது பக்கம் பார்வையை திரும்பியுள்ளன. இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உலகத்தமிழர் பேரவையும் இந்த அமைப்புக்களை சந்தித்துள்ளது. அவர்களுடன் நாமும் நெருங்கிய ரீதியில் பணியாற்றி வருகின்றோம். எனவே இசைப்பிரியாவின் கொலை தொடர்பில், அவர் ஒரு ஊடகவியலாளர் என்பது மட்டுமல்லாது, அவர் ஒரு கலைத்துறையில் தேர்ச்சிபெற்ற பாடகர் மற்றும் நடிகர் என்பதால் நாம் அவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு மட்டங்களில் இருந்து, அதாவது கலை உலகத்தில் இருந்தும் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் அந்த துறைகளில் உள்ளவர்களையும் எங்களின் போராட்டத்தை புரிந்து உதவிகளை மேற்கொள்பவர்களாக மாற்ற வேண்டும். என நாம் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி: எதிர்வரும் 15 ஆம் நாளுடன் ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழுவிற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்கும் கால எல்லை நிறைவடையவுள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு போதுமான ஆதாரங்களை சமர்ப்பிப்பதன் மூலம், சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீனமான, முழுமையான விசாரணைகளுக்கான பரிந்துரை ஒன்றை ஆலோசனைக்குழு முன்வைப்பதற்குரிய சூழ்நிலைகளை ஏற்படுத்த முடியுமா?

பதில்: நாம் முழு அளவில் முயற்சிக்கின்றோம். இந்த ஆலோசனைக்குழுவுக்கு எவ்வளவு ஆதாரங்களை கொடுக்க முடியுமோ, அவ்வளவு ஆதாரங்களை கொடுப்பதற்கு பல நாடுகளில் இருந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

ஆனால் அவர்கள் நியமிக்கப்பட்டபோது அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியின் நோக்க எல்லைகளையும் நாம் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு எல்லையிடப்பட்ட பணிகளே குறிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு அவர்கள் ஆலோசனை வழங்கும் குழுவாகவே நியமிக்கப்பட்டுள்னர்.

இருந்தும் தன்னிச்சையாக அவர்கள் சாட்சியங்களை வரவேற்றபோது நாம் மகிழ்ச்சியடைந்தோம். எங்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று தென்பட்டுள்ளது. அதனால் நாம் இதனை தற்போது நம்பிக்கையுடன் செய்கின்றோம். எனினும் யதார்த்த நிலை எவ்வாறாகும்?

அவர்கள் வழங்கக்கூடிய ஆலோசனைகள் மிகவும் கூர்மையாகவும், தெளிவாகவும், சந்தேகமற்றதாகவும் இருத்தல் வேண்டும். ஏனெனில், சுயாதீன, சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இவர்கள் தெளிவாக, கூர்மையாக தெரிவிக்கவேண்டும்.

எவ்வளவு உறுதியாக கூறமுடியுமோ, அவ்வளவுக்கு தெளிவாக அவர்கள் கூறினால் தான் பான் கீ மூனினால் புறக்கணிக்கமுடியாது நடவடிக்கையை மேற்கொள்ளமுடியும். நியூயோர்க்கில் இருக்கும் ஐ.நா அலுவலகத்திற்கு நான் நேரில் சென்றிருந்தேன். பான் கீ மூனின் அலுவலகத்திற்கும் சென்று அங்குள்ள சிலருடன் உரையாடியும் இருந்தேன். ஆனால், அவர்களுக்குள் இடம்பெற்றுவரும் உள்விடயங்கள் மிகவும் கடினமானவை. எத்தனையோ அதிதிருப்தியை கொடுக்கும் விடயங்களாகவும் தோன்றுகின்றன.

எனினும் நாம் நம்பிக்கை இழக்கவில்லை, இந்த மூவரைக் கொண்ட அணி மிகவும் தெளிவான, காத்திரமான அறிக்கையை கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு செயற்படுவோம்.

நாளை முற்றுப்பெறும். http://www.eelamenews.com/?p=40623

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.