Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜப்பான்...

Featured Replies

ஜப்பான் ஆசியக் கண்டத்தில் 6,852 தீவுகளை கொண்ட வளர்ச்சியடைந்த நாடு. இது பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. தற்போது நிலநடுக்கம், சுனாமி தாக்கிய ஒன்சூதீவு (Honshu ) ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவு. உலக பரப்பளவின்படி ஏழாவது மிகப்பெரிய தீவு. இந்த தீவின் கடலில்தான் மார்ச் 11- ஆம் தேதி வெள்ளிக்கிழமை பகல் 3 மணிக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டார் ஸ்கேல் அளவில் 8.9. ஆக பதிவானது. 1900 ஆண்டிலிருந்து ஏற்பட்ட நிலநடுக்கத்திலேயே இது மிக பெரியது. இதனை அமெரிக்க ஜியாலிஜிகள் சர்வே ரிக்டார் ஸ்கேலில் 9 என அளவிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கீழ் அமிழ்கிற எல்லை பகுதி (Subduction Zone) வகையை சேர்ந்ததாகும். கீழ் அமிழ்கிற எல்லை பகுதி என்பது இரண்டு நில பலகைகள் மோதிக்கொள்ளும் போது, ஒரு நில பலகையின் மீது இன்னொரு நில பலகை மிதந்து செல்லலாம் அல்லது ஒரு நில பலகை மற்ற நில பலகையை கீழே அழுத்திவிடலாம். அப்படி அழுத்தப்படுகிற நில பலகை கருவ அடுக்கிற்குள் தள்ளப்பட்டு உருகிவிடுகிறது. இந்த வகையான நிலநடுக்கம்தான் ஜப்பானில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் போது பசிபிக் நில பலகை ஜப்பானின் நில பலகையின் மிது வேகமாக மோதி அதன் அடியில் சொறுகியது. இதனால் பெரிய அளவில் முறிவு பசிபிக்கடலில் ஏற்பட்டது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, பசிபிக் நில பலகையானது வடமேற்கு திசையை நோக்கி ஒவ்வொரு வருடம்தோறும் 12 செ.மீ நகர்ந்து செல்கிறது. அதன்படி பார்த்தால் பசிபிக் நில பலகை முழுவதும் ஒவ்வொரு நூறு வருடத்திற்கும் 12 மீட்டர் நகர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் தற்போதைய நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ஜப்பான் நாட்டின் வடக்கு ஒன்சூ தீவின் கிழக்கு கரையிலிருந்து 130 கி.மீ (81 மைல்) தொலைவில் பசிபிக் கடலில் 24.4 கி.மீ பூமியின் ஆழத்தில் ஏற்பட்டது. அதுதான் இந்த நிலநடுக்கத்தின் “"உலுக்குமையம்' (Epicenter). இதனால் ஒன்சூ தீவில் உள்ள செண்டாய் நகரில் மிகப்பெரிய நில அதிர்வுகள் ஐந்து நிமிடங்கள் ஏற்பட்டது. இதில் 4 பெரிய முன்னதிர்ச்சியும் (Foreshocks) ஏற்பட்டது. பின்னர் நிலநடுக்கத்தின் அளவு குறைந்து 104 பின்னதிர்ச்சியும் (Aftershocks) ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தின் மூலம் ஒன்சூ 2.4 மீட்டர் நகர்ந்தது. நில பலகை அடுத்த நில பலகையின் அடியில் நகர்ந்ததால், கடல் தரைதளம் உருகுலைந்து மேல் நோக்கி தள்ளப்பட்டது. இதனால் உண்டான நிலநடுக்க அலையானது மிக மிக அதிக அளவிலான கடல் நீரை மேல் எழுப்ப தூண்டியது. இதனால்தான் கடலில் சுனாமி ஏற்பட்டது.

பொதுவாக நிலநடுக்கம் கடலில் நடந்தால் சுனாமி ஏற்படும். இது பெரிய நிலநடுக்கம் என்பதால் சுனாமி அலைகள் மிகப்பெரிய அளவில் 77அடி உயரம் எழுந்தன. இது 2004 -ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி போன்றதுதான். இந்த ஜப்பான் சுனாமி மணிக்கு 800 கி.மீ வேகத்தில் செண்டாய் கடற்கரையை நோக்கி சென்றது. உடனே பசிபிக் சுனாமி மையம் (Pacific Tsunami Centre) சுனாமி ஏற்படுவதற்கு பத்து நிமிடத்திற்கு முன்னரே செண்டாய் நகர மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்தது. இருந்தும் பயனில்லை. பத்தே நிமிடத்தில் ராட்ஷச சுனாமி ஒன்சூ தீவு கடற்கரையை தாக்கியது. ஒன்சூ தீவின் 300 கி.மீ நீளத்திற்கும் சுனாமி அலை மோதியது. செண்டாய் நகரில் வேகமாக புகுந்த சுனாமி ஆக்ரோஷமாக அனைத்தையும் வாரி சுருட்டியது. இந்த கட்டுரை எழுதும் வரை, இந்த கோரத்தாண்டவத்தில் சிக்கி 12,000 பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேலானோர் காணாமல் போயினர். கிட்டதட்ட 3,50,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். விமான தளம், விமானங்கள், இரயில் தண்டவாளங்கள், வீடுகள், ஏராளமான கார்கள், கப்பல்கள் போன்றவை பெருமளவில் சேதமடைந்தன. பெட்ரோல் சுத்தகரிப்பு ஆலை தீப்பிடித்து எரிந்தது.

மோசமான சேதத்தை ஜப்பான் சந்தித்திருந்தாலும், இந்த 8.9 அளவிலான நிலநடுக்கத்திலிருந்து பெரியளவில் தப்பிவிட்டதாகவே கருதலாம். சென்ற மாதத்தில் நியூசிலாந்து நாட்டில் கிறிஸ்ட்சர்ச்சில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.5 ரிக்டார் ஸ்கேல் அளவுதான். ஆனால் பாதிப்பு ஜப்பானைவிட மிக அதிகமாகும். காரணம் நிலநடுக்கத்தின் உலுக்கு மையம்தான். ஜப்பானில் தற்சமயம் ஏற்பட்ட நிலநடுக்கம் கடற்கரையிலிருந்து 130 கி.மீ தூரத்தில் இருந்தது. இதனால் நிலநடுக்கமும் சுனாமியின் நேரடியான பாதிப்பும் குறைவு. பதிலாக, செண்டாய் நகரின் மிக அருகில் நிலநடுக்கத்தின் உலுக்கு மையம் அமைந்திருந்தால் பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும். ஆக நேரடியான பாதிப்பு எந்த அளவில் உள்ளதோ அதற்கு ஏற்ப அழிவும் மிக அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு 1923- இல் ஏற்பட்ட ஜப்பான் நிலநடுக்கத்தை கூறலாம். அது ரிக்டார் ஸ்கேலில் 7.9 தான். ஆனால் இலட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். ஜப்பானின் தலைநகரான டோக்கியோ நகரை சுற்றி பேரழிவு ஏற்பட்டது. இதற்கு காரணம் அந்த நிலநடுக்கத்தின் உலுக்கு மையம் டோக்கியோவில் அமைந்திருந்தது. அதனால் தற்போதைய நிலநடுக்கம் கரையிலிருந்து விலகி ஆழ்கடலில் ஏற்பட்டது ஒரு ஆறுதலாகும்.

இதே கருத்தைதான் பிரிட்டீஷ் ஜியாலஜிக்கல் சர்வேயில் பணிபுரியும் நிலநடுக்க ஆய்வாளர் (Seismologist) அஸ் வாக்கர், “ ""சுனாமியை பொருத்த வரை அதிகமாக பயப்பட தேவையில்லை. கடற்கரையையொட்டியுள்ள நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால், அதன் அதிர்வுகள் பலமுறை ஏற்படுகிறது. இந்த அதிர்வுகள் ஒவ்வொரு முறையும் நம்மை எச்சரிக்கை செய்கிறது. நிலநடுக்கத்தின் அலையானது ஒரு வினாடிக்கு மூன்று மைல் பயனிக்கும். ஆனால் சுனாமி ஒரு மணி நேரத்தில் 500 மைல் பயணிக்கும். அதனால் நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே சுனாமியை எதிர்கொள்ள தயாராகிவிடலாம். இதனால் அழிவு குறைவாக இருக்கும். ஜப்பானிலிருந்து சுனாமி அலைகள் கிளம்பினால் 15 மணி நேரத்தில் சிலியை வந்தடையும். இந்த கால அவகாசத்தில் மக்களை எளிதாக அப்புறப்படுத்திவிடலாம். அதுபோலதான் தற்போதும் நடந்தது. ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே பசிபிக் சுனாமி ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை உடனே அனுப்பியது. அதனால்தான் கடற்கரை பகுதிகளை கொண்ட சிலி, பெரு, அமெரிக்கா ஆகிய நாடுகள் சுனாமி எச்சரிக்கையை பரப்ப முடிந்தது.'' என்றார்.

இது போன்ற நிலநடுக்கம், சுனாமியிலிருந்து தப்பிப்பது மக்களின் விழிப்புணர்வு சார்ந்தே உள்ளது. அந்த வகையில் ஜப்பானியர்களும் சீனர்களும் விழிப்புணர்வு அதிகம் கொண்டவர்கள். ஏனெனில் அந்த நாடுகள் பல நூற்றாண்டுகளாக இத்தகைய இயற்கை சீற்றங்களை சந்தித்தே வந்துள்ளன. இந்தகைய பேரிடர்களை சந்திக்கும் எவருக்கும் எச்சரிக்கை உணர்வு அவசியம். இதை பற்றி ஜெர்மனி நாட்டின் நில நடுக்க ஆய்வாளரும் ஹெலம்ஹோல்ட்ஸ் ரிசர்ச் சென்டர் பார் ஜியோ- சயின்ஸ் (Helmholtz Research Centre for Geo#sciences) டைரக்டருமான டியாட்சிவெல்லி கூறும்போது, “ ""தற்போதைய ஜியாலஜிகள் ஆய்வுபடி நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியாது. ஆனால் சுனாமி ஏற்பட போவதை கண்டுபிடித்து விடலாம். பூமி நில அடுக்கை புரிந்துக்கொண்டால், அதற்கேற்ப கணிப்புகளை உருவாக்கலாம். ஜீயாலஜிஸ்ட்கள் உலகம் முழுவதும் கடந்த நூறு வருடங்களாக முயன்று வருகின்றனர். பயனேதுமில்லை. ஆனால் புவியின் மாற்றங்களை முழுமையாக புரிந்து கொள்வதன் மூலமும் முன்னெச்சரிக்கை மையங்களை அமைப்பதனாலும் இத்தகைய பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்'' “என்றார்.

சுனாமியும் அணுக்கரு உலை வெடிப்பும்

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஃபுகுஷீமா அணுக்கரு உலைகள் வெடித்தன. இது உலகின் மூன்றாவது அணு விபத்தாகும். இதற்கு முன் 1979 -ஆம் ஆண்டில் த்ரி மைல் தீவிலும் (Three mile Island), 1986-இல் உக்ரைன் நாட்டிலுள்ள செர்னோபில் அணுஉலை விபத்தும் நடந்துள்ளன. நில நடுக்கத்தைவிடவும் சுனாமியை விடவும் மிக பயங்கரமானது அணுக்கரு உலை வெடிப்பு. சமீபத்தில் ஜப்பானில் அணுக்கரு உலை வெடித்ததை பற்றி பார்க்கும் முன்னர் அணு உலையை பற்றி மேலோட்டமாக பார்ப்போம்.

அணு என்பது ஒரு தனிமத்தின் மிக நுண்ணிய பிரிவு. உயிரினங்களுக்கு செல் எப்படியோ அதுபோல தனிமங்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. இந்த அணுவினுள் மூன்று வகையான அணுக்கூறுகள் உள்ளன. அவை புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான். எலக்ட்ரான் அணுக்கருவைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும் எதிர் மின்சுமை கொண்ட துகள். புரோட்டான் உட்கருவினுள் அமைந்திருக்கும் நேர்மின்சுமை கொண்ட துகள். நியுட்ரான் மின்சுமை அற்று உட்கருவினுள் உள்ள துகள். அணுவில் எலக்ட்ரானும் புரோட்டானும் சம அளவில் இருக்கிறது. இதன் சக்திகள் ஒன்றையொன்று கவர்வதால் அணுவின் அமைப்பு நிலையானதாக உள்ளது. இந்த அணுவை உடைப்பதால் அதன் ஆற்றல் வெளிபடும்.

அதுபோலவே தனிமங்களில் சிலது கதிரியக்க தனிமங்களாகும். அந்த குறிப்பிட்ட கதிரியக்க தனிமங்களின் அணுவை பிளக்கும்போது கதிரியக்கம் வெளிபடும். இதை 1939 -இல் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆட்டோஹானும் எப்.ஸ்ட்ராஸ்மானும் நிரூபனம் செய்தனர். அவர்கள் யுரேனியம் தனிமத்தை நியூட்ரான் கொண்டு தாக்கினர். அது பேரியம், கிரிப்டான் என்ற இரண்டு சமமான துண்டுகளாக வெடித்து வெளிவந்ததுடன் பேரளவு ஆற்றலும் வெளிபட்டதை கண்டுபிடித்தனர். அது முதல்தான் அணுவை பிளந்தால் ஆற்றல் வெளிப்படும் என்பது அறியப்பட்டது. ஆக கனமான அணுக்கருவை பிளந்தால், இரு துண்டுகளாக உடைவதுடன் மிக அதிகமான ஆற்றலும் நியூட்ரான்களும் வெளிப்படும். இந்த நிகழ்வு அணுக்கரு பிளவு (Nuclear Fission) எனப்படுகிறது.

அணுக்கரு பிளவின் போது, எப்படி ஆற்றலும் எலக்ட்ரான்களும் வெளிபடுகின்றது என்பதை உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நிரூபித்து காட்டினார். ’’அணுக்கரு பிளவின்போது அளவற்ற ஆற்றல் வெளிபடுகிறது. பிளவுக்கு முன் உள்ள அணுக்கருவின் நிறை பிளவுக்கு பின் கிடைக்கும் வினைவிளை பொருட்களின் கூடுதல் நிறையைவிட அதிகம். இந்த நிறை வேறுபாடு E = mc நிறை ஆற்றல் சமன்பாட்டின்படி ஆற்றலாக தோன்றும், என்று தனது அணு கோட்பாட்டை நிரூபித்தார். அதேசமயம் அணுவில் ஏற்படும் அணுக்கரு பிளவு நிகழ்வு மற்றோர் அணுவில் பிளவை தூண்டுகிறது. அப்போது வெளிப்படும் நியூட்ரான்கள் மீண்டும் அடுத்துள்ள அணுக்களில் அதே உட்கருப் பிளவை தூண்டுகிறது. இந்நிகழ்வு அடுத்தடுத்த உட்கருக்களில் தொடர்ச்சியாக நிகழ்ந்துக்கொண்டே இருக்கும். இப்படி அடுத்தடுத்து உருவாகும் அணுக்கரு பிளவில் நியூட்ரான்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால் மிகக் குறைந்த கால இடைவெளியிலேயே கட்டுக்கு மீறிய வெடிப்பு ஏற்பட்டு அளவற்ற ஆற்றல் வெளிப்படும். இதுவே அணுகுண்டு வெடிப்பதின் அடிப்படைத் தத்துவம் ஆகும்.

அணுகுண்டு என்பது கட்டுப்பாடற்ற தொடர்வினையை அடிப்படையாக கொண்டது. இதனால்தான் அணுகுண்டு வெடித்துச் சிதறும்போது ஏராளமான ஆற்றல், வெப்பம், ஒளி, கதிர்வீச்சு ஆகியவை வெளிப்படுகின்றது. இந்த நிகழ்வை அணுக்கரு உலையில் முழுமையான கட்டுபாட்டுடன் கூடிய அணுக்கரு பிளவு தொடர்வினையாக நிகழ்த்தப்படுகிறது. இதன் மூலமாகதான் அணுக்கரு உலைகள் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. அணுக்கரு பிளவில் அதிக அளவு ஆற்றல் வெளிப்படுவதால் அணுக்கரு ஆற்றல் மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.

அணுக்கரு உலைகளை அவை பயன்படுத்தப்படும் தேவைகளைப் பொருத்து, ஆராய்ச்சி உலைகள், உற்பத்தி உலைகள் மற்றும் திறன் உலைகள் என வகைப்படுத்தலாம். ஆராய்ச்சி உலைகள் முக்கியமாக ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் நியூட்ரான்களையும், கதிரியக்க ஐசோடோப்புகளையும் உருவாக்கப் பயன்படுகின்றன. உற்பத்தி உலைகள் பிளவைக்கு உட்படாத அதிகமாகக் கிடைக்கும் பொருள்களை பிளவைக்கு உட்படும் பொருள்களாக மாற்றுகின்றன. திறன் உலைகள் அணுக்கருப் பிளவையினால் உருவாகும் ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகின்றன. பயன்படுத்தப்படும் தணிப்பான் மற்றும் குளிர்விப்பான் இவற்றின் அடிப்படையில் திறன் உலைகளை மேலும் கொதிநீர் அணுக்கரு உலை, உயர் அழுத்த நீர் அணுக்கரு உலை, உயர் அழுத்த கனநீர் அணுக்கரு உலை மற்றும் வேக அணுக்கரு ஈனுலை (உற்பத்தி) என வகைப்படுத்தலாம். உலகம் முழுவதிலும் வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு அமைப்புகளில் அணுக்கரு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் செறிவூட்டப்பட்டு, 92U235 அணுக்கரு உலைகளில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த யுரேனியத்தை பிளவுபடுத்துவதன் மூலம் வெப்ப ஆற்றல் வெளிப்படுகிறது. அதனால் நீர் கொதித்து நீராவியாக மாறுகிறது. இந்த நீராவியினை டர்பன்கள் வழியாக ஜெனரேட்டர்கள் சுழலவைத்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த அணுக்கரு உலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் சிறு உருளைகளாக (Pellets) இருக்கும். இவை சிர்கோனியம் என்ற (Zirconium) உலோகக்கலவையால் ஆன மெல்லிய குழாய்களில் அடைக்கப்படுகின்றன. இது பிளவைக்கு உட்படும் தண்டு ஆகும். இவை போன்ற 19 தண்டுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு எரிபொருள் கற்றை (Fuel rods) உருவாக்கப்படுகிறது. கேலண்ட்ரியா (Calandria) என்ற அணுக்கரு கலத்தினுள் 300 குழாய்கள் உள்ளன. இக்குழாய்களினுள் எரிபொருள் கற்றைகள் வைக்கப்படுகின்றன. எரிபொருள் தண்டுகளைக் கொண்ட அணுக்கரு உலையின் பகுதி அணுக்கரு உலை மையம் (Reactor core) எனப்படும். இதில் நடக்கும் தொடர்வினையைக் கட்டுப்படுத்த, கட்டுப்படுத்தும் தண்டுகள் (Control Rods) பயன்படுகின்றன. இவை நியூட்ரான்களை அதிக அளவில் உட்கவரக் கூடியவை. பொதுவாக போரான் அல்லது காட்மியம் போன்ற தனிமங்களாலான கட்டுப்படுத்தும் தண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

கட்டுப்படுத்தும் தண்டுகள் எரிபொருள் கற்றைகள் மற்றும் தணிப்பானுக்கு இடைப்பட்ட இடைவெளிகளின் வழியே செல்லுமாறு அணுக்கரு உலையின் மையத்தில் செருகப்பட்டுள்ளன. இவற்றை உள்நோக்கி தள்ளியோ அல்லது வெளியே இழுத்தோ வினை வீதத்தைக் கட்டுப்படுத்தலாம். கட்டுப்படுத்தும் தண்டுகளை உள்நோக்கி தள்ளினால் யுரேனியம் மிக குறைவான வெப்பத்தை வெளியிடும். கட்டுப்படுத்தும் தண்டுகளை வெளியே இழுத்தால் அதிகளவிலான வெப்பம் உற்பத்தியாகும். ஒரு 100 வாட்ஸ் பல்ப் வெப்பத்தை நாம் உணர்கிறோம். அதேபோல தோராயமாக 1,000,000,000, வாட்ஸ் பல்ப் எரிந்தால் எவ்வளவு வெப்பம் கிடைக்குமோ அதுதான் அணுக்கரு உலையில் கிடைக்கிறது.

இப்படிபட்ட அணுக்கரு உலைதான் அண்மையில் ஜப்பானில் நிலநடுக்கத்திலும் சுனாமியிலும் மாட்டிக்கொண்டது 40 வயதாகும் ஃபுகுஷீமா அணுக்கரு உலை. இந்த அணுக்கரு உலை ஒரு கொதிநீர் உலையாகும் (BWR-Boiling Water reactor). மார்ச் 11-ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டதும், அணுக்கரு உலைகள் தானே நின்றுவிட்டன. அதாவது அணுக்கரு உலை மையத்தினுள் உள்ள கட்டுப்படுத்தும் தண்டுகள் முழுமையாக உள்நோக்கி தள்ளி மின்சார உற்பத்தியை நிறுத்திவிட்டது. இது ஏற்கனவே தன்னிசையாக செயல்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இப்போது குளிர்விப்பான் (Coolant) தேவை (அணுக்கரு உலையினுள் உருவாகும் வெப்பத்தை நீக்க குளிர்விக்கும் அமைப்பு பயன்படுகிறது. சாதாரண நீர், கனநீர், திரவ சோடியம் போன்றவை பொதுவாக பயன்படுத்தப்படும் குளிர்விப்பானாகும்). நிலநடுக்கத்திற்கு முன் அணு உலை மின்சாரம் உற்பத்தி செய்தது. அதனால் குளிர்விப்பன்கள் இயங்கின. இப்போது மின்சாரம் உற்பத்தி நின்றதும், குளிர்விப்பான்கள் இயங்கவில்லை. அதனால் அணுக்கரு உலையின் வெப்பத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இருப்பினும் தற்காலிக மின்சாரத் தேவைக்காக டீசல் ஜெனரேட்டர்கள் இருந்தன. அவற்றை உடனடியாக இயக்க முயற்சித்தனர். அந்த சமயத்தில் சுனாமி வந்து தாக்கியது. எதிர்பாராத விதமாக சுனாமி மிகப்பெரிய அளவில் வந்ததால், டீசல் ஜெனரேட்டர்களில் கடல்நீர் புகுந்தது. இதனால் ஜெனரேட்டர்கள் செயலிழந்தன. குளிர்விப்பான்களையும் இயக்க முடியவில்லை. ஆகையால் அணுக்கரு உலையின் வெப்பம் தணியவில்லை. இதற்கிடையே யுரேனிய கலத்தில் வெப்பம் அதிகரித்து வெடிப்பு ஏற்பட்டு, இந்த வெடிப்பின் வழியே கடல்நீர் புகுந்தது. எரிபொருள் உருகுலைந்தது. உலை 1- இல் 70 % எரிபொருளும், உலை 2 - இல் 33 % எரிபொருளும் உருகுழைந்தன. உலை 3- இல் பாதுகாப்பு கான்கிரீட் கட்டிடம் உடைந்தது. உலை 4 வெடித்து பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் எரிப்பொருள் கலத்தில் நீர் நிரம்பி ஹைட்ரஜன் வாயு உருவாகியது. இந்த நிகழ்வு ற்ட்ங்ழ்ம்ர்ப்ஹ்ள்ண்ள் எனப்படும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஹைட்ரஜன் வெடிக்கும் பண்புக் கொண்ட ஒரு வாயு. இதனால் ஏற்பட்ட ஹைட்ரஜன் வாயுவின் அழுத்தம் உலையின் கட்டிடத்தை வெடிக்க வைத்தது. இதனை தொடர்ந்து சங்கலித் தொடர்போல் அடுத்தடுத்த உலைகள் வெடித்தன. அதனால் கதிரியக்கம் வெளியானது. காற்று மண்டலத்தில் கதிரியக்க அளவு அதிகரித்தது. சீசியம் ஐசோடோப்பு காற்றில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுப்போன்றதொரு நிகழ்வுதான் 1937- இல் ஹிண்டென்பர்க் விபத்தில் ஏற்பட்டது. ஆனாலும் இது ஹைட்ரஜன் வெடிப்புத்தானே தவிர அணுகுண்டு வெடிப்பு அல்ல. இந்த வெடிப்பால் கான்கிரீட் கட்டிடம், இரும்பு கட்டிடம், போன்றவை சேதமானது. வெளியேறும் கதிரியக்கத்தை கட்டுப்படுத்தவும் வெப்பத்தை குறைக்கவும் இருந்த ஒரேவழி அதே கடல்நீர்தான். அந்த கடல்நீரைத்தான் அணுக்கரு உலைகளின் மீது பீய்ச்சி அடித்தனர். ஏனெனில் கடல்நீரில் போரான் கலந்துள்ளது. இந்த போரான் கதிரியக்கத்திலிருந்து வெளிப்படும் நியூட்ரான்களை உறிஞ்சும் தன்மை கொண்டது. அதோடு சிறந்த திரவ சோடியம் குளோரைடான கடல்நீர் சிறந்த குளிர்விப்பானும் கூட.

இந்த அணுக்கரு உலை வெடிப்பின் மூலம் வெளியேறும் கதிரியக்கத்தை விரைந்து கட்டுப்படுத்தாவிட்டால் மிகப்பெரிய சுகாதார ஆபத்தை ஜப்பானியர்கள் சந்திக்க வேண்டிவரும். கதிரியக்க ஐயோடின் மிகவும் ஆபத்தானது. 1986- இல் செர்னாபில் அணு விபத்தின் போது இது பரவி தைராய்டு புற்றுநோயை ஏற்படுத்தியது. இதனை ஐயோடின் மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். சீசியம் கதிரியக்கத்தால் தோல் புற்று நோயும், புளுட்டோனியம் கதிர்வீச்சால் எலும்பு மற்றும் கல்லீரல் பாதிப்பும் ஏற்படும். தற்போது ஜப்பான் சென்றுள்ள உலக அணு விஞ்ஞானிகள் குழு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

nakkheeeran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.