Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழனும் ஈனத் தமிழனும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழனும் ஈனத் தமிழனும்!

தங்கர் பச்சான்

ஓர் இனம் அழிவதையும், அந்த இனத்தைச் சார்ந்தவர்களே அவர்கள் அழிவதற்குக் காரணமாக இருந்ததையும், பின் அவர்களே அனைத்தையும் வேடிக்கை பார்த்ததும், உலகில் வேறு எங்காவது கண்டது உண்டா?

ஒரு நிமிடம்கூட தன் மொழியைப் பிற மொழிக் கலப்பு இல்லாமல் பேசத் தெரியாத​வனும், அதை அவமானமாகக் கருதாமல், நாகரிகமாக நினைத்துப் பெருமைப்படும் பிழைப்புவாதக் கூட்டத்துக்கு இனப்பற்று மட்டும் எப்படி வரும்?

52 ஆண்டு கால விடுதலைப் போராட்டம்... சூழ்ச்சிகளாலும் துரோகங்களாலும் ஒடுக்கப்​பட்டு... அழித்தொழிக்கப்பட்டு, நம் எதிரிகளால் மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டபோது... என்ன செய்தோம் நாம்?

சொந்த இனம் அழிவதைத் தடுக்காமல், அதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கும், அதற்குத் துணை​போனவர்களுக்கும் வெட்கம் இல்லாமல் அடுத்து வந்த தேர்தலில் வாக்களித்​தோம்.

'தமிழ்நாட்டில் இருந்து பிழைக்கத்தானே போனான். அந்நியன் நிலத்தை சொந்தம் கொண்​டாடலாமா?’ என என்னிடம் கேட்கும் தமிழனும் இருக்கத்தான் செய்கிறான்.

'நம் இனத்துக்காரனே இவ்வளவு அறியாமையில் இருக்கிறானே? மற்ற இனத்துக்​காரர்களும், மற்ற நாட்டுக்காரர்களும் என்ன நினைப்பார்கள்?’ என்கிற எண்ணம் எனக்குள் ஓடியது. ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை, அகதிகளாகி உறவுகளையும், சொந்த மண்ணையும், வாழ்வையும் இழந்து அபலைகளாக அலையும் தமிழனின் கதையை ஒரு திரைப்படமாக உருவாக்கி, இந்த உலகத்துக்கு அளித்தால் உண்மை நிலை புரிய வரும் என, நானும் கடந்த 11 ஆண்டுகளாக அலைகிறேன்.

அந்தக் கதையைத் தயாரிக்கவோ, நடிக்கவோ யாரும் முன்வரவில்லை. எல்லோரும் கை விட்டு​விட்ட நிலையில், என் 'தாய் மண்’ திரைப்படம் உருவாகி வெளியாகி இருந்தால், தமிழ் மக்களின் மனசாட்சியோடும், உலகத்தின் மனசாட்சியோடும் பேசியிருக்கும்.

தொடர்ந்து, தமிழக அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும்தான் ஈழத் தமிழரையும், அவர்களது அரசியலையும், தங்களது சொந்த நலனுக்காகவும், தவறுகளை மறைப்பதற்காகவும், அரசியல் அதிகாரத்தை அடைவதற்காகவும், உள்ள அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். 'அந்த வேலையைத்தானே நம் திரைப்படத் துறையினரும் செய்கிறார்கள்’ என மனம் கசிந்தது. இதற்காகவே அலைந்து அவமானப்பட்ட எனது கதையின் துயரம், இப்போதைக்குத் தேவை இல்லை!

இதை மீறிய முக்கிய வருத்தத்தைத்தான் இப்போது நான் இறக்கி வைக்கிறேன்...

நேர்மையான முறையில் போரை நடத்தித் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், உலகப் போர் முறையின் விதிகளை மீறி எம் மக்களைக் கொன்று குவித்து, தமிழனின் நிலத்தை சுடுகாடாக்கிவிட்டபோதுகூட, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தொடர்ந்து நாடகங்களை நடத்துகிறார்கள்.

உண்மைத் தமிழ் உணர்வாளர்களின் முயற்சிகளும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் அமைப்புகளின் போராட்டங்களும், உயிர்த் தியாகங்களும் விழலுக்கிறைத்த நீராகிவிட்டது. அசலாக உருவெடுத்து மக்களிடம் எழுச்சியை உருவாக்கிய இளைய தலைமுறை அரசியல் கட்சித் தலைவர்கள்கூட, அதிகார ஆசையில் தடம் மாறிப் பலியாகி​விட்டனர்.

தொடக்கத்தில் விவரம் இல்லாமல் இருந்த தமிழ் மக்கள், ஈழ விடுதலை அவசியம் தேவை என உணரத் தொடங்கியபோது, கைதேர்ந்த அரசியல் பிழைப்பைத் தொடர்ந்து நடத்தி வரும் அரசியல்வாதிகள், எப்படி எல்லாம் செய்ய முடியுமோ, அப்படியெல்லாம் காரியங்கள் ஆற்றி உணர்வினை மழுங்கடித்தார்கள். முத்துக்குமாரின் கடிதமும், அவரின் உயிர்த் தியாகமும் புரட்சித் தீயை தமிழ் சமுதாயத்தில் பரப்பியபோது, ஈழ அரசியலை மூலதனமாக்கி காலங்காலமாகப் பிழைத்தவர்கள் கலங்கிப்போனார்கள். தமிழ்​நாட்டில் இருந்து நிச்சயம் ஒரு விடியலை முத்துக்குமார் ஏற்படுத்திவிட்டார் என நெகிழ்ந்தபோது, அந்த மகிழ்ச்சி சில மணி நேரம்கூட நிலைக்க​வில்லை

'ஒவ்வோர் ஈழத் தமிழனும், களத்தில் ஆயுதம் ஏந்திய மாதிரி ஈழம் கிடைக்காமல் ஓய்வது இல்லை’ எனும் உறுதியை தமிழகத்தின் இளைஞர்களும் மாணவர்களும் ஏந்தினார்கள். முத்துக்குமாரின் ஆணையும் ஆசையும் நிறைவேறவில்லை. அவர் எழுதிவைத்த மாதிரி, 'என் உடலை அடக்கம் செய்யாமல், ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி, தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊருக்கும் கொண்டுசெல்லுங்கள். விடுதலையை வென்றெடுக்க இன உணர்ச்சியை விதையுங்கள்’ என்பதைச் செய்து முடிக்காமல், அவசரம் அவசரமாகக் கொண்டுபோய் அடக்கம் செய்தது எதனால்? யார் அப்படி செய்யச் சொன்னார்கள்? இளைஞர்களிடம் தமிழனின் அரசியல் போய்ச் சேர்ந்துவிடும், நம் பிழைப்பு போய்விடுமே என்ற பதற்றம்தானே!

இன்றைக்கு வாழும் ஈழத் தமிழ​னின் ஆதரவற்ற நிலை​யையும், அவனின் வலி​களையும், துயரங்​களையும் என்னால் மட்டும் அல்ல... யாரா​லேயும் எழுதிவிட முடியாது. நம் இனத்​துக்கு நம்மால் இறுதி வரை உதவ முடியாமலேயே போய்விட்டது. கொடுங்கோலன் இன வெறியன் ராஜபக்ஷேவின் சிங்கள அரசு, ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க் குற்ற விசாரணைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தண்டனை பெறும் நிலை உருவாகி இருக்கிறது.

அதற்குக்கூட ராஜபக்ஷே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா நிச்சயம் தன்னைக் கைவிடாது, இந்த முறையும் காப்பாற்றும் எனத் திடமாக நம்புகிறது இலங்கை அரசு. காலம்காலமாகத் தமிழக அரசியல் கட்சிகள், இலங்கைத் தமிழர்களின் பிரச்னையை தங்களின் அட்சய பாத்திரமாக ஆக்கிக்கொண்டு அதிகாரத்தை ருசித்த மாதிரி, இம்முறையும் இருந்துவிட்டால், வரலாறு நம் தமிழ் இனத்தின் மீது காறித் துப்பும்.

ஆயிரக்கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்ததையும், சுட்டுக் கொல்லப்பட்டதையும் கண்டுகொள்ளாமல் இருந்த புதிய அரசியல் கட்சிகள்கூட, தமது பிழைப்பைத் தொடர, இந்த வாய்ப்பைப் பயன்​படுத்திக்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு ஈழத் தமிழர்கள் மேல் பாசமழை பொழிகிறார்கள். ஒன்றிணைந்து போராடித் தண்டனை பெற்றுத் தராமல், நாளரு அறிக்கையோடும், போலிப் போராட்டங்களோடும் நம்மை ஏமாற்றுகிறார்கள்.

ஒரு கட்சி மேல் இன்னொரு கட்சி குறை சொல்லி, தங்களுக்குள் ஈழத் தமிழர்கள் மேல் உள்ள பாசத்தைக் காட்டி சண்டையிடாமல், தங்களின் கடந்த கால ஈழ ஆதரவு நாடக நிகழ்வுகளைப் பட்டியலிட்டு காலத்தைக் கடத்தாமல், போட்டி, பொறாமை, பகை, பேரங்களின் இழப்புகளை நினைவில்கொள்ளாமல், ஒரே இடத்தில் ஒன்று கூடி நாடாளுமன்றத்தில் குரலை உயர்த்துங்கள். தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களின் உணர்வை இனியாவது, மதிக்கச் செய்து அமைதி காத்தால்தான், இந்தியாவின் அமைதிக்கும் நல்லது. இந்திய அரசு, இலங்கை அரசுடனான பொருளாதாரத் தடையையும், ராணுவ உறவையும் விலக்கிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துங்கள் ஐ.நா. சபைக்கு நம் குரலைச் சொல்லி, ராஜபக்ஷே அரசுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தாருங்கள்.

இதைச் செய்யாமல், அவரவர்களின் தன்னலத்தை மனதில்​வைத்து, இனியும் தமிழினத்​துக்குத் துரோகம் இழைத்து தமிழினத் துரோகி ஆகாதீர்கள். நம் உள் மாநிலப் பிரச்னைகளுக்குள் உங்களுக்குள் போட்டி, பகைகொண்டு அரசியல் செய்வது உங்கள் விருப்பம். ஆனால், இந்த இனத்துக்கும், வாழ்வு உரிமைக்கும் ஒரு பங்கம் வரும்போது, கட்சி மறந்து ஓர் அணியில் திரண்டு தமிழராக இருந்து, தமிழர்களின் கட்சிகளாக இருங்கள். தமிழ் இனத்தைக் காப்பாற்றுங்கள்.

இதைச் செய்யாமல், தமிழர்களின் நலனுக்காகவே தங்களின் அரசியல் கட்சி செயல்படுகிறது எனப் பேசுவது, தமிழ் இனத்தை மேலும் ஏமாற்றும் செயல்.

இல்லையேல்...

இத்தனை இழந்த பிறகும், இன்னும் என்றாவது ஒரு நாள் என் இனம் இழந்த தன் 'தாய் மண்ணை’ வென்றெடுக்கும் எனும் நம்பிக்கையில், விடுதலை வேட்கையோடு அலையும் ஈழத் தமிழர்கள்தான், தமிழினத்தின் பேர் சொல்லும் இன மானத் தமிழர்கள். 'இல்லை, இல்லை... என் இனம் அழிந்துபோனதோடு, மேலும் இருக்கிறவர்களும் அழிவதற்குத் துணையாக இருப்போம்’ என வேடிக்கை பார்க்கும் நாம், ஈனத் தமிழர்கள்தான் என்பதைக் காலம் எழுதிவைக்கும்!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.