பாகம் ஆறு
மன்னார் எல்லை களம் பெரிய பண்டிவிரிச்சான் வரை வந்திருந்தது.
உக்கிரமான சண்டைக்களம் அது. காடு சார்ந்த பிரதேசத்தில் முன்னேறிவரும் ராணுவத்தை புலிகளின் படையணி வழிமறித்து கடுமையாக சண்டை பிடித்து கொண்டிருந்தது.
தளபதி பானுவின் நெறிப்படுத்தலில் தீரமாக போராடின புலிகள் அணிகள்.
நாயகனுக்கு நேரடி சண்டையில் அனுபவம் குறைவு. பல்குழல் எறிகணைகள் என்றால் குலப்பன் நடுங்கும்.
பானு அண்ணாவிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு மாதிரி, எல்லை கோட்டுக்கு பின்னால் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைக்கபடிருந்த குட்டிசிறி மோட்டார் மகளிர் அணியின் ,ஒரு ஐந்து இஞ்சி மோட்டாருக்கு, காவல் பணியில் சேர்ந்து கொண்டான்.
கடுமையாக சீறி பாய்ந்து கொண்டிருந்தன மோட்டார்கள். பெண்களும் சளைக்காமல் சொல்லும் குறிக்கு மோட்டார்களை ஏவி கொண்டிருந்தார்கள். அந்த இடத்தை ஆழ ஊடுருவும் இராணுவ அணி தாக்கலாம் என்று காவல் பணியில் நாயகனும் மூன்று தோழர்களும் இருந்தார்கள்.
திடீர் என்று ஒரு சலசலப்புடன், சன்னங்கள் சீறி வரத்தொடங்கின.
ஆமாம், ஒரு பத்து பேர் கொண்ட ராணுவ அணி அவர்களின் நிலையை தாக்க தொடங்கியது. நிலை தடுமாறிய அவர்கள் அப்படியே போட்டது போட்டபடி பின்வாங்கி ஓட தொடங்கினார்கள். நாயகனுக்கு தலை கால் புரியவில்லை.
மற்றவர்களுக்கு அந்த காடு பரிச்சயமானபடியால் பின்னணி நிலை நோக்கி ஓட தொடங்கினார்கள். யாருமே அற்ற நிலையில் நாயகன் மட்டும் மோட்டரை ஒட்டி இருந்த ஒரு மரத்துக்கு பின்னால், கடவுளை வேண்டியபடி ஒளிந்து கொண்டான்.
இராணுவம் மோட்டரை நெருங்கியபடி இருந்தது. நாயகனுக்கு மிக அருகிலையே சிங்கள குரல்கள் ஒலிக்க தொடங்கின. இனி மறைந்தும் சாவுதான் என்று எண்ணிய நாயகன், மரத்திலிருந்து வெளிப்பட்டு சரமாரியாக சுட தொடங்கினான்.
திடீரென தொடங்கிய இந்த எதிர்பாராத தாக்குதலில் ராணுவம் திகைத்தது. புலிகளின் வழமையான தந்திரோபாயமாக (உள்ளே வரவிட்டு தாக்கும்) கருதி பின்வாங்கி ஓடினர். மகிழ்ச்சியுடன் நாயகன் துரத்தி துரத்தி சுட்டான். அவர்களது அச்சுறுத்தல் நீங்கியபிறகு போக இடம் தெரியாமல், மோட்டாருக்கு அமைக்கபட்ட குழியினுள் வந்து உட்கார்ந்து கொண்டான்.
அதே நேரம், மோட்டரை விட்டு பின்வாங்கிய போராளிகளுக்கு, அவர்களின் குழு பொறுபாளரிடமிருந்து கடுமையான உத்தரவு பிறப்பிக்கபட்டது. ஆயுததுக்காக உயிரையே கொடுப்பது தான் புலிப்படை. எப்பாடு பட்டாலும் சரி, மோட்டரை இராணுவத்திடம் பிடிபடவிடக்கூடாது என்று கடுமையான கட்டளை.
அவர்கள் மோட்டர் இருந்த இடத்தை அடைந்த போது வெற்றி பெருமிதத்தில் நாயகன் தனியனாக நின்றான். அவனுக்கு உள்ளுக்குளே இருந்த பயம் அவனுக்கு மட்டும் தான் தெரியும்.(இப்போ உங்களுக்கும் தெரியும்)
அன்றைக்கு ஏறியது நாயகனுக்கு காத்து. அந்த சம்பவம் பானு அண்ணாவரை போய், தலைவர் வரை போய்விட்டது. "தனியாளாக மோட்டரை காத்தவனை நான் பார்க்கணும்" என்றார் தலைவர்.
பிறகு என்ன ஆளையே பிடிக்கமுடியவில்லை. சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை நாயகனுக்கு. முகாமுக்கு வந்து சேகர் அண்ணாவுக்கு தான் முதன் முதலில் சொன்னான்.
"சேகர் அண்ணா நான் அண்ணையை பார்க்க போறேன். வர சொல்லி இருக்கிறார்" என்றான் வாயெல்லாம் பல்லாக. எல்லாம் உங்களால வந்தது அண்ணா, நீங்க மட்டும் என்னை சண்டைக்கு அனுப்பி இருக்காவிட்டால் நான் அண்ணையை பார்த்திருக்க முடியுமோ தெரியாது என்று சேகர் அண்ணைக்கு ஐஸ் வைச்சான்.
இரண்டு ஒரு நாளில் அண்ணையை பார்த்து அவருடன் புகைப்படம் எடுத்துகொண்டு மீண்டும் முகாம் வந்தான். அண்ணையுடன் சாப்பிட்டது, படம் எடுத்தது என்று எல்லாருக்கும் இரவு இரவாக வகுப்பெடுத்தான். உற்ற நண்பன் ராணிமைந்தனும் அவன் மகிழ்ச்சியில் பங்கெடுத்தான்.
"மச்சான் அண்ணையிடம் என்னடா கேட்டணீ" என்றான் ராணிமைந்தன் ஆவலுடன்.
"அது ஒண்டும் இல்லை மச்சான். அண்ணே எங்களுக்கு தமிழீழம் கிடைச்சால், நீங்க தானே ஜனாதிபதி, என்னை உங்கட கால்நடை அமைச்சராக போடுவீங்களோ என்று கேட்டேன் மச்சான்" என்றான் குறும்பாக நாயகன்.
"அதுக்கு அண்ணை சிரிச்சு போட்டு உனக்கு இப்பவும் கோழி வளர்கிற எண்ணம் தான் என்றார் நக்கலாக. அந்தாளுக்கு நான் கோழி வளர்த்ததில் இருந்து எல்லாம் தெரியும் மச்சான்" என்றான் பெருமையாக.
"வேற என்ன மச்சான் சொன்னவர்"
"உங்கட சண்டையை பற்றி சொன்னவங்கள். அது மாதிரி எண்டைக்கும் மண்ணிலையும், எங்கட மக்களை காக்கிற ஆயுதத்திளையும் பற்று வைச்சிருக்கணும் என்றும் சொன்னார்"
"அது மட்டும் இல்லை மச்சான். எனக்கு அண்ணையை சந்திச்ச பிறகு மனசிலே ஒரு தைரியமும், மக்களை காக்கணும் என்ற உத்வேகமும் வந்திருக்கு மச்சான். அவனை ஒருக்காலும் உள்ளே வர விடக்கூடாது" என்று சொன்னவன் தான் நாயகன்.
அண்ணையின் சந்திப்பு முடிந்து ஐந்தாம் நாள்.
பண்டிவிரிச்சானில் முன்னேறிவந்த ராணுவத்துடன் தீரமாக சண்டையிட்டு கப்டன் நாயகனாக..ராணிமைந்தனின் அறையில் படமாக..
நீங்காத அந்த உயிர் நண்பனின் நினைவுகள்....
உண்மையிலேயே பெயருக்கு ஏற்ற நாயகனாக, ராணிமைந்தனின் மனசில் மட்டுமல்ல.. உங்கள் மனசிலும் என்றும் வாழ்வான்.
(தொடரும்)
பாகம் ஏழு இங்கே அழுத்துங்கள்