பாகம் பதின்மூன்று
அம்பலவன்-பொக்கணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பக்கத்தில் தான் எங்களின் மருத்துவ முகாம்.
நான் அந்த முகாமுக்கு வந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டன.
இராணுவ முன்னேற்றமும், எங்கள் தோழர்களின் இழப்பும், மக்களின் தொடர்ச்சியான இடபெயர்வுகளும் செய்திகளாக காதை அடையும்போதும், காயபட்ட ஏனைய போராளிகளின் அவல குரல்களும், எங்கள் மருத்துவ முகாமின் நிலையும்..ஏனடா காயபட்டோம் என்று இருக்கிறது.
அப்படி இருந்தது.. எங்கள் மருத்துவ முகாம்.
காயபட்ட போராளிகளை கவனிக்க சொற்ப மருந்துகளுடனும், மிக சொற்ப ஆட்களுடனும் போராடி கொண்டிருந்தது விடுதலை புலிகளின் மருத்துவ பிரிவு.
எங்கு பார்த்தாலும் ஒரே அவல குரல்களும், நோ தாங்க முடியாத வலிகளின் கதறல்களும் எதிரொலித்து கொண்டிருந்தன.
எங்கும் இரத்த வாடையும், சொட்டிய இரத்தத்தை மொய்க்கும் இலையான்களும் அந்த இடத்தை நரகமாக்கி காட்சி அளித்தது.
காயங்களில் மொய்க்கும் இலையான்களை கூட துரத்த முடியாத நிலையில்... மக்களுக்காக போராடிய போராளிகள்..
படுக்கை புண்களும், காயங்களில் நெளியும் புழுக்களும், சிறு சிறு காயங்களுக்கே மருந்து இல்லாமல் கால்கள், கைகள் எடுக்கபட்ட நிலையிலும் அவர்கள் மக்கள் மீது கொண்ட பாசம் மட்டும் மாறவே இல்லை.
சொல்லுங்கள் உறவுகளே ..கனவிலே கூட எழும்பி அவங்களை உள்ளே விடக்கூடாது என்றும் கத்தும் போராளிகள் உங்கள் இனத்தை தவிர வேற இனத்தில் பிறந்திருகிறார்களா..??
ஒரு கை, ஒரு காலை இழந்து, கண்களிலே கட்டு போட்ட நிலையிலும் என்னை கெதியாக குணபடுத்துங்கள் சண்டைக்கு போகவேண்டும் என்ற போராளிகள்..உங்கள் சகோதரங்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா..??
காயங்கள் என்பது போராட்டத்தில் சாதாரணமானது தான்..ஆனால் எங்களிடம் எந்த வித மருத்துவ வசதிகளும் இல்லாத நிலையில் காயபடுவது என்பது நரகத்துக்கு சமன்.
புளியமரங்களிலே தொங்கும் சேலன் குழாய்களும், வெறும் மண்ணிலே தலைவைத்து அண்ணாந்து பார்த்தபடி, கொட்டும் மழையிலும், வடியும் சீழ்களுக்கும் மத்தியில், இரண்டு நாளைக்கு ஒரு முறைதான் சாப்பிட்டு கொண்டு , தங்கள் வலியை கூட மறந்து மக்களை நினைக்க வேறு யாரால் முடியும்..
அந்த மருத்துவ முகாமுக்கு வந்த ஒவ்வொரு போராளியும் ஒன்றை மட்டும் திரும்ப திரும்ப சொல்லுவார்கள்.
"மச்சான் அடுத்த முறை காயபட்டால் அங்கேயே சைனயிட் அடிச்சிடனும்"..
இப்போதாவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறன் அந்த முகாமின் நிலைமை.
என்னை கடைசியாக வந்து பார்த்த அந்த மருத்துவ போராளி, இனிமையான அந்த செய்தியை சொல்லிட்டு போனான்.
"ராணி இன்னும் ஒரு வாரத்தில் நீங்கள் இங்கிருந்து போயிடலாம்"
நான் அந்த முகாமில் இருந்து புறப்படுவதற்கு முதல் நாள்.
அதிகாலை நேரம்.
எங்கள் முகாமுக்கு அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் முண்டியடித்து கொண்டு வரிசையில் நின்றார்கள்.
கைகளிலே தங்கள் குழந்தைகளுடன் தாய்மார்கள் தான் அந்த வரிசையில் மிக அதிகம்.
விசாரித்த போது இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான அங்கர் 1 + பால்மாவுக்கான வரிசை தான் அது.
பசியாலும், அந்த அதிகாலை குளிராலும் பெரும்பாலான குழந்தைகள் வீரிட்டு கத்தியபடியே இருந்தன.
மெலிந்த தேகமும், பால் வற்றி போன தாய்மார்களும், குழந்தையின் பசியை அடக்கமுடியாத கையாலான நிலையை உணர்ந்து வேதனையுடன் சுகாதார நிலைய வாசலையே பார்த்து கொண்டிருந்தனர்.
குழந்தைகளுக்கான பால்மாவை கூட புலிகள் குடித்து விடுவார்கள் என்று அந்த பச்சிளம் குழந்தைகளை பட்டினி போட்ட சிங்கள அரசிடம் கெஞ்சி மூன்று மாதங்களுக்கு பிறகு ஒரு சொற்ப பால்மாக்களை பெற்றிருந்தார் அந்த மேலதிக அரச அதிபர்.
காலை எட்டு மணிக்கு தான் வழங்குவதாக குறிப்பிட்டிருந்தும், எங்கே தங்களுக்கு கிடக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் காலை நான்கு மணிக்கே குழந்தைகளுடன் வந்து வீதியில் படுத்திருந்த அந்த தாய்மார்களின் வரிசை தான் அது.
பாவம் அவர்களும் தான் என்ன செய்வார்கள். அவர்கள் சாப்பிட்டால் தானே குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியும். அவர்களே சாப்பிட்டு எத்தனை நாட்களோ..இதுக்கு எல்லாம் எப்ப தான் விடிவோ..?
அந்த குழந்தைகளின் பசி குரல் என் நெஞ்சுக்குள் பிசைந்தது. இந்த மக்களை காக்க வேண்டிய நாங்கள் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறோம்.
இல்லை ..இல்லை விட கூடாது இண்டைக்கே களத்துக்கு போய்விட வேண்டும். என்னுள் உறுதி எடுத்து கொண்டேன்.
காலை ஏழரை மணி இருக்கும், கொடிய சிங்கள இராணுவம் ஏவிய ஐந்துக்கும் மேற்பட்ட ஐஞ்சிஞ்சி மோட்டர்கள் அந்த தாய்மார்களின் வரிசையை தாக்கியது.
கையிலே குழந்தைகளுடன் எங்கே ஓடுவது என்று தெரியாமல், விழுந்து படுக்க கூட முடியாமல் தவித்த அந்த அம்மாக்களின் மன நிலையை கொஞ்சமாவது உணர்ந்து பாருங்கள் உறவுகளே.
ஒரு நிமிட நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.
இப்போதும் குழந்தைகள் ஓலங்கள்..
இது பசி அழுகை இல்லை..மரண ஓலங்கள்..
காயபட்டவர்களை தூக்க எங்கள் முகாமில் இருந்து நாங்களும் ஓடினோம்.
பிஞ்சு குழந்தைகள் சிதறி கிடந்தன.
குழந்தைகளை காப்பாற்ற தங்கள் உயிர்களை பலி கொடுத்திருந்தார்கள் பாச அம்மாக்கள்..
இரத்தமும்,சிதறிய உடற்பாகங்களும்,ஓலங்களும் அம்மா இறந்து விட்டா என்று தெரியாமல் தாயின் முகத்திலே அடித்து அழும் குழந்தைகளும், அந்த இடத்தை பார்த்த எந்த ஒரு மனிதனாலும் வாழ் நாள் முழுவதும் நித்திரை கொள்ள முடியாது.
அங்கெ ஒரு ஓரத்தில்..தலையில் இருந்து இரத்தம் வடிந்தபடி இறந்து கிடந்த தாயின் முலைகளை சப்பியபடி ஒரு குழந்தை..
(தொடரும்)
பாகம் பதினான்கு இங்கே அழுத்துங்கள்