பாகம் பதினான்கு
அந்த கடல்நீரேரியின் மறுபுறத்தில் அமைக்கபட்டிருந்த கிடுகு வேலியையே பார்த்து கொண்டிருந்தேன்.
புதுமாத்தளன் வைத்தியசாலையில் இருந்தது ஒரு முந்நூறு மீற்றர் தொலைவில்..
ஒரு இடிந்த கல் வீட்டுக்கு நடுவில்..
பச்சை குழைகளால் உருமறைப்பு செய்தபடி எங்கள் நிலை இருந்தது.
ஆனந்தபுரம் வரலாற்று சமருக்கு பின்னர், எங்கள் தானை தளபதிகளை எதிர்கொள்ள திராணியற்று இரசாயன ஆயுதங்கள் கொண்டு அழித்து, கடல் நீரேரியின் மறுபுறத்தை கைப்பற்றியிருந்தான் எதிரி.
அங்கிருந்து கொண்டு மக்கள் வாழிடங்களை நோக்கி சரமாரியான எறிகணை,குறிசூட்டு,விமான தாக்குதல்களை நடத்தி கொண்டிருந்தான்.
கடல்நீரேரியை கடக்க விடாமல் காக்கும் பொறுப்பு எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
மருத்துவ ஓய்வு காலபகுதியில் வழங்கபட்ட குறிசூட்டு பயிற்சியின் பின்னர், ஒரு குறிசூட்டு (சினைப்பர்) ஆயுதத்துடன் நான் காத்திருந்தேன் எதிரின் வரவுக்காக.
ஒவ்வொரு நாள் அதிகாலை வேளையிலும் ஒரு இருபது முப்பது பொதுமக்கள் நீரேரியை கடந்து இராணுவத்திடம் செல்வது வழக்கமாகிவிட்டது. எனக்கு அதை தடுத்து நிறுத்த சொல்லி கட்டளை இருந்தாலும், அவர்களின் நிலையை பார்த்து நான் போக அனுமதிப்பதுண்டு.
அங்கிருந்த எல்லா மக்களுக்கும் புலிகளும் அவர்களின் நடவடிக்கைகளும் பிடித்திருக்கவோ அல்லது புரிந்து கொண்டிருக்கவோ அவசியம் இல்லைதானே.
அதைவிடவும் எவ்வளவோ மக்கள் புலிகளுக்காக தங்கள் உயிரையும் கொடுக்க இருக்கும்போது, ஒரு பத்திருபது மக்கள் இராணுவத்திடம் ஓடுகிறார்கள் என்றால், அவர்கள் எப்படிபட்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் எங்கட பக்கம் இருப்பதை விட இராணுவத்தின் பக்கம் இருப்பது தான் சிறந்தது என்று எண்ணி, அவர்களை நான் கண்டும் காணாமலும் ஓட விடுவதுண்டு.
இரவிரவாக கழுத்தளவு தண்ணீரில் எங்கள் நிலை கடந்து எதிரியிடம் போன மக்களை விடியும் வரை தண்ணீரிலேயே நிறுத்தி வைத்திருப்பான் எதிரி.
நன்றாக விடிந்தபின்னர் ஆண் பெண் பேதமின்றி அனைவரையும் அனைத்து ஆடைகளையும் களைந்து தான் தனது நிலைக்குள் எடுப்பான். இதெல்லாம் மக்கள் சொல்லி தான் கேள்விபடிருந்தேன்.
ஆனால் அன்று அதிகாலை என் குறிசூடு கருவியின் தொலைநோக்கியூடாக பார்த்த போது தான், எங்கள் மக்கள் எதிரியிடம் படும் அவலத்தை நேரடியாக கண்டேன்.
தந்தைக்கு முன்னால் வயது வந்த மகளின் உடையெல்லாம் களைந்து நிர்வாணமாக, கணவனுக்கு முன்னால் மனைவியின் உடைகளைந்து நிர்வாணமாக , எங்கள் மக்கள் எதிரியிடம் சரணடைவதை நேரிலே கண்டேன். கட்டிய கணவனுக்கு முன்னால் கூட உடை மாற்றாத இனத்தில் பிறந்து, கண்டவனுக்கு முன்னால் நிர்வாணமாக எங்கள் மக்கள் நிற்பதை பார்க்க எல்லாரையும் சுட்டு கொன்றுவிடலாம் என்று கூட தோணியது.
எங்கே ஒரு இராணுவ வீரன் தலை காட்டி இருந்தாலும் என் ஆத்திரம் அவன் தலையில் தெரிந்திருக்கும். என்ன செய்வது எல்லாம் எங்கள் மக்கள் என்று, ஆயுதத்தை மடித்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டேன்.
இதை போய் எங்கள் மக்களிடம் சொன்னாலும் சிலர் நம்ப மாட்டார்கள். எங்களை இராணுவத்திடம் போகவிடாமல் தடுப்பதற்கான ஒரு யுக்தி என்றே சொல்லுவார்கள்.
வேண்டாம்..என் சகோதரியின் நிர்வாண உடலை பார்த்ததை ஊரெல்லாம் சொல்லி, அவளை மேலும் நிர்வாணமாக்க நான் விரும்பவில்லை.
உயிரை விட மானம் தான் பெரிது என்று வாழ்ந்தவர்கள் எங்கட பக்கம் இருக்க , மானம் என்ன மானம் இண்டைக்கு வரும் நாளைக்கு போகும் என்று, உயிரை காக்க எதிரியின் பக்கம் போனவர்களை , தனது காமபசிக்கும், கூலி வேலைகளுக்கும் பயன்படுத்தினான் எதிரி.
அன்றும் அப்படிதான்...
பொக்கணையை அண்டிய நீரேரிபகுதியில்..
அதிகாலையில் பசியாலும், இரண்டு மூன்று நாள் இடைவிடாமல் கண்விழித்து காவல் இருந்ததாலும் சற்று கண்ணயர்ந்த போராளிகளின் நிலையை உளவு பார்த்து ஒரு மக்கள் கூட்டம் இராணுவத்திடம் சென்றடைந்தது.
அத்துடன் முடிந்திருந்தால் பரவாயில்லை.ஒரு இராணுவ அணி அவர்களை வந்த பாதையை காட்டுவதற்காக கூட்டிவந்திருந்தது . பாதை காட்ட மறுத்த மக்களை சுட்டு அடிபணிய வைத்தது . வந்த எதிரி அணி அந்த நிலையில் கண்ணயர்ந்திருந்த போராளிகளை கழுத்தை வெட்டி கொன்றுவிட்டு, எங்கள் நிலைகளை ஊடறுத்து ஒரு பெரிய படை நடவடிக்கையை செய்தான்.
வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதியும், சாலை பொக்கணை மாத்தளன் பகுதியும் துண்டாடப்பட்டது. அம்பலவன் பொக்கணை ஊடக இராணுவம் கடற்கரை வரை சென்று மக்களை துண்டாடியது.
தொடர்பு அறுபட்ட நிலையிலும் போராளிகள் தீரமாக போராடினார்கள். இராணுவம் இடைவிடாத செல் மழை பொழிந்தது. ஒரு கோர தாண்டவமாடியது. இராணுவம் வந்துவிட்டதை உணர்த்த மக்கள் புலிகளின் பகுதிக்கு ஓட முற்படுவதை தடுக்க இரசாயன ஆயுதங்கள், கொத்து குண்டுகள் கொண்டு மக்களை கொன்று குவித்தது ராணுவம்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உயிரை விடிருந்தார்கள். தெருவெங்கும் பிணக்கோலங்கள். உடம்பில் பட்ட இரசாயன (பொஸ்பரஸ்) குண்டின் எரிவு தாங்காமல் கடலுக்கு ஓடி வந்து பாய்ந்தார்கள். முகங்கள் எரிந்த நிலையில் வழி தெரியாமல் பிஞ்சு குழந்தைகள், கடற்கரை மண்ணில் முகம் புதைச்சு தேய்த்தார்கள்.
எங்கும் மரண ஓலமும், புகை மூட்டங்களும், காணமல் போன தங்கள் உறவுகளின் பெயரை கூவி கத்தியபடி பித்து பிடித்தது போல மக்கள், அங்கும் இங்கும் அலைந்து ஓடினார்கள்.
நாங்களும் எங்கள் நிலையும் பிரதான எங்கள் தளத்திலிருந்து துண்டாடப்பட்டிருந்தது. தரைவழி தொடர்பறுந்த நிலையில் நாங்கள் மாத்தளன் துண்டுக்குள் மாட்டுபட்டிருந்தோம்.
எங்களுக்கான கட்டளைகள் தொடர்ந்து கிடைத்து கொண்டிருந்தது. தப்பிபோக வழி இல்லாமல் ராணுவத்திடம் சரணடையும் பொதுமக்களை தடுத்து நிறுத்தி நிலைமை சொல்லி, கடல் வழியாக அவர்களை முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அனுப்புமாறு பணிக்கபடிருந்தோம்.
சாரை சாரையாக ராணுவத்திடம் சென்று கொண்டிருந்த மக்களிடம் ஒரு சொற்ப போராளிகளுடன் நானும் கெஞ்சி கொண்டிருந்தேன்.
"அண்ணே நில்லுங்கோ போகாதேங்கோ.."
"அக்கா.. அக்கா.. தயவு செய்து நில்லுங்கோ ஆமியிடம் போகாதேங்கோ..."
"பொறுமையா இருங்கள்..இன்னும் கொஞ்ச நாளில் எங்களுக்கு விடிவு கிடைச்சிடும்.."
என்று ஆண் பெண் போராளிகள் பேதமின்றி மக்களின் கால்களை பிடித்து கெஞ்சி கொண்டிருந்தார்கள்.
அனைவரும் முடிவு செய்து கைகோர்த்து மக்களை மறித்தோம். எங்களை தள்ளி விழுத்தி எங்களுக்கு மேலால் மக்கள் ஏறி சென்றார்கள்.
நான் ஒரு ஐயாவை மறித்தேன். இரண்டு குழந்தைகளை தூக்கி கொண்டு வந்திருந்தார்.
பசியால் மெலிந்து எலும்புகள் தெரிந்த இரண்டு குழந்தைகள்..
தலை எல்லாம் நரைத்து எலும்பு கூடாக அந்த ஐயா..
"ஐயா தயவு செய்து போகாதீங்கள்.."
"நாங்கள் எல்லாம் ஒற்றுமையாக புலிகளின் பக்கம் நின்றால் தான் உலகம் எங்களுக்கு ஒரு தீர்வை தரும்"
"தம்பி என்னடா விசர் கதை கதைக்கிறாய்..இன்னும் இரண்டு நாள் இங்கே இருந்தால் நாங்கள் சாப்பாடு இல்லாமலே செத்து போயிடுவம், அதுக்கு பிறகு உங்கட தீர்வை கொண்டே என்ன செய்ய போறீங்கள்"
"அப்படி இல்லை ஐயா, உங்களுக்காக தானே நாங்கள் வீட்டை எல்லாம் விட்டிட்டு போராட வந்தனாங்கள், நீங்கள் போய்விட்டால் இவ்வளவும் தான் மக்கள் என்று, எங்களோட இருக்கிற மக்கள் எல்லாரையும் புலி என்று அழிச்சிடுவான், இது நீங்கள் மிச்ச மக்களுக்கு செய்கிற துரோகம் இல்லையா"
"தம்பி எனக்கு துரோகமா இல்லையா என்று வாதிட கூட தெம்பு இல்லை. இந்த பிள்ளைகளின்ட அம்மா, அப்பா எல்லாரும் செத்து போட்டினம், என்ர மனுசி கூட நேற்று தான் செல்லடியிலே செத்தவ..செல்லுக்கு கூட தாக்கு பிடிக்கலாம்.. சாப்பிடாமல் பசிக்கு தாக்குபிடிக்க முடியலை தம்பி"
"தம்பி எனக்கு நல்லா தெரியும்.நீங்கள் எங்களுக்காக தான் போராடுறீங்கள். சிங்களவன் கெட்டவன் என்றும் தெரியும். ஆனால் இப்போ பசிக்கு, உயிரை காப்பாத்த வேற வழி தெரியலை தம்பி."
"தம்பி எனக்கும் தமிழீழம் வேண்டும். நீங்கள் போராடி வெல்ல வேண்டும். நான் கடவுளை ஒவ்வொருநாளும் கும்பிடுறேன். நீங்கள் நாளைக்கு ஆமிக்கு ஓடி எங்கள் வீட்டுக்கு வந்தால் ஒளிச்சு வைச்சு சாப்பாடு குடுக்கிறேன். எனக்கு இந்த மண் மீது இப்பவும் பற்று இருக்கு.. என்னை போக விடு தம்பி. மூன்று உயிரை காப்பாத்தின புண்ணியமாவது உனக்கு கிடைக்கும்" என்று என் காலில் விழுந்து அழுதார்.
சொல்லுங்கள் உறவுகளே..இராணுவத்திடம் ஓடிய மக்கள் எல்லாரும் எங்களை வெறுத்த மக்களா..? எங்களை வேண்டாம் என்று ஓடிய மக்களா..??
எங்களை உயிராய் நேசிச்ச மக்கள் தான்..பசியாலும் பட்டினியாலும் சிங்கள் கொலைவெறி அரக்கனின் கோர தாண்டவத்தாலும் உயிரை காப்பாற்ற தான் எதிரியிடம் ஓடுகிறார்கள் என்று புரிந்துகொண்டேன்.
அவர்கள் எதிரியிடம் விரும்பி ஓடனும் என்றால் மன்னாரில் சண்டை தொடங்கும்போதே ஓடி இருப்பார்களே. இவ்வளவு காலம் தங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு எங்களுடனே வரவேண்டிய தேவை என்ன..??
"ஐயா ..எழும்புங்கோ ..நீங்க போயிற்று வாங்கோ..நாங்கள் நிச்சயம் வெல்லுவோம் அப்போ திரும்பி வாங்கோ .."
அவர் கண்ணில் மட்டுமல்ல என் கண்ணிலிருந்தும் ஒரு துளி கண்ணீர் அந்த மண்ணை நனைத்தது..
(தொடரும்)
பாகம் பதினைந்து இங்கே அழுத்துங்கள்