ம்.. இன்னொரு கதை.
வெற்றித் திருநகரை ஆண்டுவந்த கிருஷ்ணதேவராயரின் அரண்மனை விகடகவி தெனாலிராமன் மீது பிராமணர்களுக்கு கடுங்கோபம். அது ஏன் என பிறகு எழுதுகிறேன்.
ஒருமுறை கடும் வயிற்று நோவினால் தெனாலிராமன் அவஸ்த்தைப்பட்டு, ஊண் உறக்கம் இன்றி மெலிந்து துரும்பாக இளைத்துவிட்டான். அரண்மனை வைத்தியர் உட்பட பலரும் மருந்து செய்தும் ஆள் தேறியபாடில்லை. ராமன் மனைவிக்கோ பயம் தொற்றிக் கொண்டது. என்ன செய்வது என கடுமையாக யோசித்த போது, பட்டாபிஷேக சர்மா உடனே நினைவுக்கு வந்தார். அவரிடம் கேட்டால் ஏதாவது யாகம், மந்திரம் செய்து ராமனை பிளைக்க வைத்துவிடுவார் என பூரணமாக நம்பினாள்.
விடயத்தை கூர்ந்து கேட்ட பட்டாபிஷேக சர்மா, ஏற்கெனவே ராமன்மீதிருந்த குரோதத்தை நினைத்துக்கொண்டே, அவனை பழிக்குப் பழி வாங்க நல்ல சந்தர்ப்பம் வாய்த்ததடா சாமி என சந்தோஷப்பட்டு ராமன் வீட்டுக்கு வந்து பார்ப்பதாக கூறி அனுப்பினார். ராமன் மனைவியும் ஒருவாறு தேறி, வீடுசென்றாள். அடுத்த நல்ல முகூர்த்தத்தில் பட்டாபி சர்மா இராமனை பார்க்க வந்து, "அடே ராமா, பார்த்தாயா? பிராம்மணர்களை வதைத்த தோஷம் உன்னை பிடித்திருக்கிறது. இதற்கு ஒரு யாகம் செய்தால் சரியாக போய்விடும். ஆனாலும் நிறைய பொற்காசுகள் செலவாகுமே? என்ன செய்வது?" என ராமனுக்கு ஒரு போடு போட்டார். பட்டாபி சர்மாவின் வஞ்சனை ராமனுக்கு உடனே புரிந்தது. அவனும், "அய்யா பிராம்மணரே, சாவது விதியென்றால் யாரால் மாற்ற இயலும். போனால் போகட்டும். என்பாட்டில் இருக்கும்வரை இருந்துவிட்டு போகிறேன். இந்த யாகங்களுக்கெல்லாம் என்னிடம் பொற்காசுகள் இல்லை" என வேண்டா வெறுப்புடன் கூற, எங்கே தன் பணம்பண்ணும் வேலை பாழாய்ப் போய்விடுமோ என்று பயந்த பட்டாபி சர்மா, "அடப் பாவி. உயிரைவிடவா பொருள் பெரிது. நீ இப்பொழுது பணம் தரவேண்டாம். நீ பூரணகுணமானதும் உன் குதிரையை விற்று அந்த பணம் முழுவதையும் எனக்கே தந்துவிடவேண்டும்" இதுதான் நமக்குள் எழுதாத ஒப்பந்தம் என அடித்து சத்தியம் வாங்கிக்கொண்டு வீடுசென்றார்.
அடுத்த கிழமை, ராமனின் வீட்டில் ஒரே அமர்க்களம் போங்கள். தடல்புடலான யாகம், பல்வேறு பட்சணபலகாரங்களுடன் அமோகமாய் நடந்தேறியது. பட்டாபி சர்மாவும், மிகுந்த விநயத்டுடன், யாகத்தை முடித்து, இருந்த பல்வேறு பதார்த்தங்களையும் அள்ளிக் கொண்டு வீடு சென்றார். பிராம்மணர் செய்த யாகம் எப்படியும் கணவனை குணப்படுத்தி விடும் என்று ராமன் மனைவிக்கு ஒரு நம்பிக்கை இருந்தது.
நம்பிக்கை வீண்போகவில்லை. ராமனும் நாளொரு மேனியாக தேறி, பழைய அலங்காரங்களுடன் கொலுவாக வீற்றிருந்தான். பணத்தை வசூல்செய்ய பட்டாபியும் ஒவ்வொரு நாளும் ராமன் வீட்டுக்கு நடையாய் நடந்து துரும்பாய் இளைத்துவிட்டார். ராமனோ பணத்தை தருவதாக இல்லை. இறுதியில், பொற்காசு பெறாமல் நான் வீடு ஏகேன் என பிராம்மணர் ஒரே முடிவாக ராமன் வீட்டில் இருந்துவிட்டார்.
ராமனுக்கும் மனசு பொறுக்கவில்லை. பிராம்மணரின் பேராசையை மட்டந்தட்ட எண்ணினான். பட்டாபியை பார்த்து, "பிராம்மணரே!! என்னுடன் வாரும். சந்தையில் குதிரையை விற்று உமக்கு பொற்காசுகளை தருகிறேன்" என்று கூற, அவரும் மிகுந்த சந்தோசத்துடன் "ராமா!! நமக்குள் இருக்கும் ஒப்பந்தம் நன்றாக ஞாபகம் இருக்கட்டும். குதிரைவிற்ற பொற்காசு அவ்வளவும் எனக்கே" என மீண்டும் ஞாபகமூட்டினார்.
சந்தைக்கு புறப்படும்போது ராமன் வீட்டில் நின்ற வெள்ளை பூனைக்குட்டியையும் கடாசுவதற்காக தன்னுடன் எடுத்து சென்றான். வீட்டில் பூனைக்குட்டியின் கொடுமை தாங்க முடியாது. அன்று சந்தையில் குதிரைகள் படு கலாதியாக, அதிக விலைக்கு விற்பனையாகிக் கொண்டு இருந்தன. பிராம்மணருக்கு மகிழ்ச்சி தாளமுடியவில்லை. ஒப்பந்தத்தை மீண்டும் மீண்டும் ராமனுக்கு நினைவுபடுத்தியபடியே இருந்தார்.
"ராமா, குதிரை 1000 பொன் பெறும். கவனம்" என அறிவுரையும் கூறிவைத்தார். உள்ளூர இதைக்கேட்டு நகைத்த ராமன், "இந்த பூனைக்குட்டியை 1000 பொன்னுக்கு வாங்குபவனுக்கு இந்தக் குதிரை 1 பொன்னுக்கு விற்கப்படும். இரண்டும் சேர்த்தே விற்கப்படும்" என பெருங்குரலில் கூவினான். இதைக்கேட்டு பலர் திகைத்தனர். பூனைக்கு 1000, குதிரைக்கு 1 பொன்னா? என்ன விசித்திரம்? பிராம்மணர் மூர்ச்சையாகிவிட்டார். கூட்டத்தில் நின்ற ஒருவன், "அண்ணே!! பூனையென்றால் என்ன, குதிரை என்றால் என்ன. வாங்கிவிடுங்கள்" என தன் தமயனுக்கு உற்சாகமூட்ட, குதிரை 1 பொன்னுக்கும், பூனை 1000 பொன்னுக்கும் விற்பனையானது.
மூர்ச்சை அடைந்திருந்த பிரம்மணரை தலையில் தண்ணீர் தெளித்து எழுப்பி, "அய்யா. நமது ஒப்பந்தப்படி குதிரை விற்ற பணம்." என 1 பொற்காசை அவர் உள்ளங்கையில் அழுத்தி வைத்தான் ராமன். மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் கற்சிலையாய் நின்றார் பட்டாபி.
- ஈழத்திருமகன் -