இலங்கைக்கு சுதந்திரம் எனியாவது கிடைக்கட்டும்!
***************************************************
கத்தும் கடல் நாற்திசையும் கரையமைத்து வேலிதந்து
முத்தும்,மாணிக்கமும்,இரத்தினமும் மண்ணில் உள்ளடக்கி
முல்லையும்,மருதமும்,நெய்தலும்,குறிஞ்சி பாலையென
இயற்கையவள் எமக்களித்த எங்கள் தேசத்தை
போத்துக்கேயன்,ஒல்லாந்தன்,பிரிட்டிஸ் ஆண்டுவிட்டு
போகையிலே உம்மிடத்தில் எம் பொக்கிஷத்தை
மலைகுடைந்து பாதை தந்து வருமான பயிர் நட்டு
வீதி பல அமைத்து வீடுகட்டி கோட்டை தந்தான்.
நீங்களோ…
முட்செடியும்,புதரும்,புற்றும்,கஞ்சாவும்,களவும்,போதையும்
கொலையும்,கொள்ளையும்,இனத் துவேஷமும்-விஷமும்
சுயநலமும்,மதமும்,மதச் சண்டையும்,இனக் கலவரமும்
பெரும்பான்மை,சிறுபான்மையென பேசியே அழித்தீர்கள்.
அன்றே ஒருதாயின் பிள்ளைகளாய் ஒன்றாய் வாழாமல்
சிங்களவன் தமிழன் முஸ்லீம் பறங்கியென பிரித்து
சண்டையிட்டு சவக்கிடங்கில் போட்டு மகிழ்ந்தீர்கள்
சிங்களவன் மேல்லென்று சினமும் கொண்டீர்கள்.
ஒரு தேசம் ஒரேமக்கள் ஒற்றுமையே எம் நாடு என்றிருந்தால்
வடகிழக்கு,தமிழ்,முஸ்லீம்,தமிழீழம் வரைபடமே இருக்காது.
அரசியலில் உங்களிருப்பை தக்கவைக்க அப்பாவிமக்களையே
ஆட்டிப் படைத்து பாராளுமன்றத்தில் பல் இளித்து குதித்தீர்கள்.
சிங்கள தமிழ் முஸ்லீம் மலையக அப்பாவி மக்களுக்கு
அடிமை,வறுமை,அகதி,உயிரிழப்புகள் தவிர என்னதான் தந்தீர்கள்
ஆட்சி செய்த உங்களுக்கோ அரண்மனையும் வீடும் காரும்
சொத்தும் சுகபோகமும் சுறண்டியெடுத்து சுதந்திரமானீர்கள்.
சேர்ப் பட்டம் பெற்ற தமிழர்களும் எம்மை சேற்றிலே தள்ளினார்கள்
அவர்களுக்கு சிலையமைத்து உலக அரங்குக்கு காட்டினீர்கள்
எழுபது ஆண்டாக மக்களை இருளுக்குள் தள்ளிவிட்டு
ஒளிபெற்று நீங்கள் மட்டும் உன்னதமாய் வாழ்ந்தீர்கள்.
எனிக் காணும் இந்த இழிநிலைகள். மக்களை உயிர் வாழ விடுங்கள்
உன்னத சமுதாயம் உருவாக்க இளையோரே ஒன்றுபடுங்கள்-அது
இன மத மொழியின்றி எல்லோரும் சமமென பார்க்கும் “அரசாகட்டும்”
அவரவர் வாழும் மண்ணிலே அவரவர் கலாச்சாரவிழுமியங்கள் மிழிரட்டும்.
இருநாக்கு படைத்த தமிழ் அரசியல் வாதிகளுக்குமிது சமர்ப்பணம்.
அன்புடன் -பசுவூர்க்கோபி.