Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. அன்புக்கு இலக்கணம் ஆகிய அழகிய வதனம் கொண்ட சங்கவியை தெரிந்தவர்கள் யாராலும் மறக்கவே முடியாது…… அமைதியான சுபாபம் கொண்டவள். கூட இருப்பவர்களுக்கு உதவிடும் நல்ல உள்ளம் படைத்தவள். இரக்க குணம் அவளோடு கூட பிறந்தது. பழகியவர்களால் அவளை மறப்பது மிகவும் கடினம். 1998ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்டவள் சிறுத்தைப் படையணியில் நித்திலா 1 பயிற்சிப் பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்துக் கொண்டு மூன்றுமுறிப்பு களமுனையில் அவளது தோழிகளுடன் தடம் பதிக்கிறாள். முன்னணிக் காவலரண்களை பலமாக்கி பாதுகாப்பது, எதிரியின் ஊடறுப்பு தாக்குதல்களை முறியடித்து சமர் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டவள். தொடர்ந்து வந்த காலங்களில் அம்பகாமம், ஒட்டு ஒட்டுசுட்டான் போன்ற பகுதிகளிலும் அவளுடைய களப்பயணம் தொடர்கிறது. இன்றுவரை உலகவல்லரசுகளால் வியந்து பார்க்கப்படும் தீச்சுவாலைச் சமரில் பங்கு பற்றி தன்னுடைய திறமையை அங்கும் நிரூபிக்கிறாள். மிகப்பெரிய வெற்றியை ஈட்டித் தந்த அச் சமரில் தலையிலும் ,காலிலும் படு காயமடைந்தவள் ஆறுமாதங்கள் மருத்துவமனையில் ஓய்வுக்காக அனுமதிக்கப்படுகின்றாள். இயங்க முடியாத நிலையிலும் அமைதியான புன்னகையுடன் அடுத்த கட்டப் பணிக்காக தயாராகிறாள். தலையில் பலமான காயம் ஏற்பட்டதால் அடிக்கடி மயக்கம் வருவதும், தொடர் தலைவலியாலும் களமுனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படவே படையப் புலனாய்வுப் பிரிவின் பின்தள பணிக்காக அனுப்பப்படுகிறாள். ஆர்ப்பரிப்புக்கள் ஏதுமின்றி அமைதியாக சாதித்துவிட்டு எதுவும் நடவாதது போல் இருக்கும் அவள் தன்னுடைய மன வேதனைகளை எப்பவுமே யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை. களமுனைக்கு செல்லமுடியாமல் போகுமளவுக்கு காயம் அடைந்ததால் மனரீதியாக பலமாக பாதிக்கப்பட்டிருந்தாள். அவளுடைய எண்ணக் கிடக்கைகளை புரிந்துகொண்டு ஆறுதலாகப் பேசினால் கூட ஓர் சிறிய புன்சிரிப்போடு அமைதியாக இருப்பாள். தன்னுடைய இயலாமையை கூட வெளிக்காட்டாமல் தினமும் தலைவலியால் அவஸ்தை பட்டுக்கொண்டும் கொடுக்கப்படும் பணியை நேர்த்தியாகச் செய்து முடிக்கும் பண்பு அவளிடம் நிறையவே இருந்தது. சின்னச் சின்ன விடயங்களில் எல்லாம் மிகவும் அக்கறை எடுத்து அவற்றை அழகாக்கும் அழகே அவளுடைய பேரழகு. சிறு வயதிலேயே வறுமையின் வலியை அனுபவித்தவள். தனது குடும்பத்தின் மீது அளவுகடந்த பற்று இருந்த போதும், தனது குடும்பத்தின் சுமையை சுமக்க வேண்டிய மூத்த பிள்ளையாக இருந்தும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தாய்மண்ணை காக்க ஓடி வந்தவள். அவளுக்கு அடுத்து பிறந்த அவளது தம்பி மீது அளப்பெரும் அன்பு கொண்டவள். அவன் நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு வந்து குடும்பத்தை நன்றாகப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள் . கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அவள் தனது தம்பிக்கு வாழ்க்கையை புரியவைக்கும் முகமாக கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், குடும்பத்தை பொறுப்போடு பார்க்க வேண்டும் என்றும் கடிதம் மூலம் எழுதி அனுப்புவாள். அவளின் விருப்பம் போலவே அவளுடைய தம்பியும் படிப்பில் மிகவும் சுட்டி. இறுதி யுத்தத்தின்போது அனைவரும் களமுனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டபோது சங்கவியும் மிக்க மகிழ்ச்சியுடன் களமுனைக்குச் சென்றாள். 10.02.2009 அன்று தொலைத்தொடர்பு சாதனம் எடுப்பதற்காக எமது இடத்துக்கு வந்திருந்தாள் .என்னுடன் கதைக்க வேண்டும் என்று என்னிடம் வந்தாள் என்றுமே இல்லாதவாறு அவளுடைய முகம் மிகவும் வாடி இருந்தது. ஸ்ரீலங்கா இராணுவம் நடத்தும் கொடூரமான யுத்தத்தால் தன்னுடைய தம்பியின் கல்வி தொடர முடியாமல் போனதையும், தனது குடும்பச் சூழலையும் நீண்ட நேரமாக கண்ணீருடன் பகிர்ந்து கொண்டாள். எந்த ஒரு விடயத்தையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதவள் நீண்ட நேரமாக என்னிடம் தன்னுடைய ஆதங்கங்களை சொல்லிக் கொண்டிருந்தபோது எனக்குள் ஒருவித ஆச்சரியம் ஆனாலும் அவளுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன். செல்லும் போதும் திரும்பத் திரும்ப “அக்கா என்னை மறந்துடாதையுங்க” என்றாள் . அவளுடைய பேச்சிலும்,செயலிலும் கண்டுகொண்ட மாறுதல்களால் கலவரம் அடைந்தாலும் “ஒரு தாயால் எப்படி தன் குழந்தைகளை மறக்க முடியும்” என சிரித்தபடி சொன்னேன். அவளைப் பார்க்கும் இறுதிக் கணங்களும் அவளுடன் நான் பேசும் இறுதி வார்த்தைகளும் இவைதான் என்பது தெரியாமல்…..????? அவள் என்னிடம் பேசிச் சென்ற அடுத்த நாள் 11.02.2009 அன்று தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வல்லிபுனம் என்ற ஊரில் எதிரியுடன் ஏற்பட்ட நேரடி மோதலில்…… தன்னை ஆகுதி ஆக்கிக் கொண்டாள். சிறந்ததோர் அணித் தலைவியாக கொடுக்கப்பட்ட பணியினை சிறப்புடன் ஆற்றி இறுதி மூச்சு உள்ளவரை எதிரியுடன் சமராடி , அவள் உயிரிலும் மேலாக நேசித்த அன்னை மண்ணை முத்தமிட்டாள் . மறக்கவே முடியாத உறவுகளில் இவளும் ஒருத்தி .அடிக்கடி இவளின் நினைவுகள் எனக்குள் சுழன்றடிக்கும். தேநீரை தானே தயாரித்துத் தந்துவிட்டு குடித்த பாதி தேனீருக்காக காத்திருப்பாள் .சிலவேளைகளில் காத்திருப்பதை மறந்துபோய் பருகி விட்டால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அன்று முழுவதும் அமைதியாகி விடுவாள். எனது மகள் பிறந்திருந்த போது என்னிடம் வந்தாள். போகும்போது என்னிடம் ஒரு கவரை தந்து “அக்கா பிள்ளைக்கு ஒரு சட்டை வேண்டிவந்திருக்கிறேன். என்னிடமிருந்த காசுக்கு வேண்டினான் நீங்க பிள்ளைக்கு போடூறீங்களோ தெரியாது ,நான் போன பின்பு பிரித்துப் பாருங்கள் “என்றாள். அவள் போன பின்பு பிரித்துப் பார்த்தேன் மிகக் குறைந்த விலையில் மிக மிக அழகான ஒரு சட்டை இருந்தது . அவளுடைய குடும்ப சூழலுக்கு அந்தப் பணம் எவ்வளவு பெறுமதியானது என்பது எனக்கு தெரியும். .அந்த சட்டையை ஒரு பொக்கிஷம் மாதிரி பாதுகாக்க வேண்டும் என்று எண்ணி னேன். இடப்பெயர்வின் போது மிகவும் முக்கியமான பொருட்களை கூட நான் மறந்து விட்டுச் சென்றிருந்தேன். ஆனால் அவளுடைய அந்த நினைவுப்பரிசை பத்திரப்படுத்தி எடுத்துச் சென்றேன்….. இவ்வாறு பல நினைவுகளை என்னிடம் விட்டுச்சென்ற என் தங்கையே உன் நினைவுகளில் மூழ்கும் போதெல்லாம் என் இதயத்தில் ஏற்படும் வலியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது…. நீங்கள் இல்லாத இந்த உலகத்தில் உயிர் இருந்தும் வெறும் வெற்று கூடுகளாக வாழ்வது எத்தனை நரக வாழ்க்கை என்பதை தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் உங்கள் நினைவுகளுடன்…….🙏💐 கலைவிழி
  2. அன்றைய நாள் மிகவும் சோகமாக விடிந்தது போலத் தோன்றியது. மனதில் ஏதேதோ நெருடல்கள். நெஞ்சம் கனத்தது. ஏனென்றே தெரியவில்லை, எதையோ இழந்துவிட்டதுபோல் தவிப்பு உண்டானது. சக போராளிகள் இருவர் வந்தனர். இவர்கள் முகங்களிலும் சோகம். காரணத்தை அறிய மனம் துடித்தது. “உங்கட றெயினிங் மாஸ்ரர் சிறீ மதியல்லோ வீரச்சாவு” “ஆ………..? சிறீமதியக்காவோ ? எங்க ” “மணலாத்தில…………” நான் அழவும் முடியாமல், கதைக்கவும் முடியாமல், வாயடைத்துப் போனேன். சிறீமதி, உறுதியும், துணிச்சலும், தனக்கு கொடுக்கப்பட்டவேலையைப் புரிந்து கொண்டு செயற்படக்கூடிய திடகாத்திரமான உள்ளமும் படைத்தவள் அவள். அல்லிப்பளையில், ஒருநாள் மண்வெட்டி வாங்குவதற்காக வீடொன்றுக்குச் சென்றோம். எம்முடன் சிறீமதியும் வந்தாள். அங்கே எம்மை வரவேற்றவர் ஒரு வயோதிபத் தாய் சுகவீனமுடையவர். இருந்தாலும், தன்னால் இயன்றளவுக்கு எம்மை உபசரித்து, தேநீர் தயாரித்துத் தந்தார். நாங்கள் தேநீரை ஆவலோடு பார்த்தவண்ணம் இருக்க, சிறீமதியோ ஓடிச்சென்று, அம்மாவிடம் இருந்து தேநீரை வாங்கி எல்லோருக்கும் பரிமாறத் தொடங்கினாள். தாயோடு பிள்ளையாக, மக்களோடு மக்களாக ஒன்றுபடுகின்ற அந்தப் பண்பு அவளோடு கூடவே பிறந்தது. இன்னொரு நாள், நாம் பதுங்குகுழி வெட்டிக் கொண்டிருந்தோம். எமக்கு உதவியாக மக்களும் சேர்ந்து வெட்டிக் கொண்டிருந்தார்கள். மதியமாகி வெகு நேரத்திற்குப் பின்னரும் உணவு வரவில்லை . எமக்கு உதவியாகப் பதுங்குகுழி வெட்டிக் கொண்டிருந்த மக்கள் பசியுடன் இருக்கின்றார்களே என்ற எண்ணம் மனதை உறுத்த, உணவு வரும் வழியைப் பார்த்துப் பார்த்துக் கண் பூத்துப் போன சிறீமதி, பக்கத்தில் ஒரு சைக்கிளை வாங்கிக் கொண்டு நாம் தங்கியிருந்த இடத்திற்குப் போனாள். அங்கே நின்ற ஏனைய போராளிகள் ஏதோ வேலையாக இருந்ததால் அவர்கள் உணவை எடுத்து வருவதற்குத் தாமதமாகி விட்டது. வேகமாக வந்திறங்கிய சிறீமதியைக் கண்டதும், அவள் கோபமாக இருப்பது எல்லோருக்கும் விளங்கிவிட்டது. எல்லோரும் பதட்டத்துடன் இருந்தார்கள். “ஏன் இவ்வளவு நேரமும் சாப்பாடு கொண்டு வரேல்லை? வேலை செய்யிறசனங்கள் பாவமல்லோ ?” என்று பொரிந்து தள்ளிவிட்டு, உணவை எடுத்துக் கொண்டு, போனவேகத்திலேயே திரும்பி வந்துவிட்டாள். இவளுக்கு இரண்டு ஆண் சகோதரர்களும், இரு சகோதரிகளும் இருக்கிறார்கள். அவளது சகோதரன் ஒருவர் எமது முழுநேர உறுப்பினராகக் கடமையாற்றுகிறார். இவள் தனது பாடசாலை நாட்களில் சக மாணவர்களினதும் ஆசிரியர்களினதும், மதிப்பைப் பெற்றிருந்தாள். படிப்பிலும், விளையாட்டிலும் கலை நிகழ்ச்சிகளிலும் முன்னணியில் திகழ்ந்தாள். தான் படித்த ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர் ஒன்றியத் தலைவியாகவும், அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர் அமைப்பு உறுப்பினர்களுக்குப் பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டாள். இவள் சமகால நிகழ்வுகளையும், அரச படைகளால் மக்கள்படுகின்ற அவலங்களையும் கலைப் படைப்புக்களினூடாக மக்களுக்குத் தெளிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாள். அத்தோடு பெண்களை விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்காக அணிதிரட்டுவதிலும் ஈடுபட்டாள். இப்படியிருக்கும் போது, ஒரு நாள் தன் தாயிடம், “அம்மா, இன்னும் எவ்வளவு காலத்துக்கு இயக்கத்துக்கு ஆட்களை எடுக்கிற வேலையையே செய்து கொண்டிருக்கிறது? இயக்கத்திலே சேரப்போறன்” என்று கேட்டாள். அந்த வீரத்தாயும் மறுப்பேதும் சொல்லாமல், மகளைக் கூட்டிச்சென்று எம்மவரோடு இணைத்துவிட்டாள். எவராலும் அடக்கமுடியாத மதங் கொண்ட யானையைப் பிடித்துக் கட்டிய ‘அரியாத்தை ‘ பிறந்த முல்லைத்தீவு மண்ணிலேதான் சிறீமதியின் தாயும் பிறந்தவள் அல்லவா? அரியாத்தையின் வீரமும் உறுதியும் அவளிடமும் இருக்கத்தானே செய்யும்? பயிற்சியை முடித்த சிறீமதி அரசியல் வேலைக்கென நியமிக்கப்பட்டு, மணலாற்றில் தனது வேலையைத் தொடங்கினாள். அப்போதுதான், ஆயிரக்கணக்கான போராளிகளை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் அவளிடம் உண்டானது. அவளது எண்ணத்துக்கு ஏற்ப, அவளின் திறமையால் பயிற்சியாசிரியராக நியமிக்கப்பட்டாள். பதின்மூன்றாம் பயிற்சி முகாமுக்குத் துணையாசிரியராக இருந்த சிறீமதி, சிறீலங்கா இராணுவத்துக்கெதிரான எமது முதலாவது மரபுவழிப் போரான ஆகாயக்கடல் வெளித்தாக்குதலுக்கு உதவிக் குழுவாகச் சென்றாள். தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். இவள் மீது பொறாமை கொண்ட தடியொன்று இவளின் காலைப் பதம் பார்த்துவிட்டது. அந்தப் புண் நாளடைவில் பெரிதாகிவிட்டது. நடப்பதற்குக்கூடச் சிரமப்பட்டாள். இழுத்து இழுத்துத்தான் நடக்க முடிந்தது. ஆனாலும் தளரவில்லை . போர் ஒரு முடிவுக்கு வரும்வரை தனது பணியைத் தொடர்ந்து செய்தாள். அங்கிருந்து திரும்பியதும் மீண்டும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பெண்களைப் புதிய போராளிகளாக மாற்றியமைத்தாள். ஒருமுறை, எமக்குப் பயிற்சி நடந்துகொண்டிருந்தது. களைப்பு மிகுதியால் காவற்கடமையில் இருப்பவர்கள் தவிர, மற்றவர்கள் நித்திரைக்குச் சென்றுவிடுவார்கள். இரவில் சாப்பிடுவது பெரும்பாலும் குறைவு. உடல் அலுப்பால் உறங்கிவிடுவார்கள். எஞ்சுகின்ற உணவு கொட்டப்படும். இதைக்கண்ட பயிற்சி முகாம் பொறுப்பாளர் சிறீமதியைக் கூப்பிட்டார். “சிறீமதி, ஒருக்காப் போய் உன்ர பிள்ளையள் இருக்கற அறையளுக்குப் பின்னாலை பார், எவ்வளவு சாப்பாடு கொட்டிக்கிடக்குது எண்டு. நாளைக்கு முழுக்க அவையளுக்குச் சாப்பாடு குடுக்கக்கூடாது. அப்பத்தான் தெரியும் சாப்பாட்டின்ரை அருமை” என்று சொல்லிவிட்டார். மறுநாள் காலை பயிற்சியை முடித்துக்கொண்டு எல்லோரும் வரிசையில் இருக்கிறோம். எங்களிடம் வந்த சிறீமதி கண்டிப்பான தொனியில், “ஏன் பிள்ளையள் இவ்வளவு சாப்பாட்டையும் கொட்டியிருக்கிறியள்? இரவிலை ஏன் ஒருதரும் சாப்பிடுறதில்லை ? இப்படி இரவில சாப்பிடாமவிட்டா விடிய என்னெண்டு றெயினிங் எடுக்கிறது?” என்று, தொடர்ந்து ஒரு குட்டிப் பிரசங்கம் செய்துவிட்டு, “இண்டைக்கு முழுக்க நீங்க ஒருதரும் சாப்பிடக்கூடாது. அப்பத்தான் உங்களுக்குச் சாப்பாட்டின்ர அருமை தெரியும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அன்று முழுவதும் எவருமே சாப்பிடவில்லை . இவளும் சாப்பிடவில்லைத்தான். நாங்கள் எவ்வளவோ கெஞ்சியும் இவள் சாப்பிடவில்லை. வழமைபோல் நாளாந்தப் பயிற்சியை முடித்தபின் இரவு சாப்பிடாமல் படுத்த ஒவ்வொருவரையும் எழுப்பி, சாப்பிடவைத்து நாங்கள் சாப்பிட்டபின் தான் அவள் சாப்பிட்டாள். அந்த நேரத்தில் அவளது உணர்வு, எங்களின் உணர்வுகள் எப்படி இருந்தனவென்று வார்த்தைகளால் சொல்வது கடினம். அன்னையின் அரவணைப்பில் உள்ளது போல், அதற்கும் மேலே மேலே… உணர்ந்தோம். பிள்ளைகளைத் தண்டிக்க விரும்பாத சிறீமதி அடிக்கடி கூறுவது இதுதான்.”பிள்ளையள், சும்மா சும்மா குழப்படி செய்து அநியாயமாப் பனிஸ்மென்ற் வாங்காதேங்கோ”. பயிற்சியை முடித்த பின்னர் எமது குழுக்களில் ஒரு பகுதி தொண்டைமானாறுக்குச் சென்றது. அதற்குத் தலைமை தாங்கியவள் சிறீமதிதான். அங்கிருந்து வளலாய் இராணுவ முகாமுக்குக் காவற்கடமையைச் செய்வதற்காகச் சென்றுவருவோம். எந்த நேரமும் இராணுவம் முன்னேறலாம், சண்டை தொடங்கலாம் என்பதால் எதிரியை எதிர்பார்த்தே நின்றோம். அப்போது எங்களுக்குப் போர் அனுபவம் எதுவுமில்லை . “பிள்ளையள், பயப்பிடக்கூடாது, நல்லா அடிபடோணும். அதுக்காக மோட்டுத்தனமாய்ப் போய்மாட்டுப்படக்கூடாது. கவனமா, நிதானமா அடிபடோணும், என்ன ?” என்ற இவளுடைய வார்த்தைகள் எம்மை உறுதியாக்கும். போருக்குத் தயார்படுத்தும். இவளுடன் நாம் இல்லாவிட்டாலும், எம்மை எங்காவது காணும் பொழுதுகூட எம்மில் கவனம்தான். “என்ன பிள்ளையள் இந்த உடுப்பின்ர நிறம்? ஒழுங்காத் துப்பரவா இருக்கிறதுக்கென்ன, ஆ?” என்று செல்லமாகக் கண்டிப்பாள். அப்போது, எமது இதயபூமியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிறீலங்கா இராணுவத்தினர் மீண்டும் காட்டுக்குள் முன்னேறமுயன்றனர். எதிரியுடன் மோத எமது படையணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. சிறீமதிக்கோ புதிய போராளிகளுக்குப் பயிற்சி கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டது. விடுவாளோ அவள்? மகளிர் படையணியின் தளபதியிடம் போய்ச் சண்டைபிடித்தாள். “என்னைச்சண்டைக்குப் போகவிடுங்கோ. போயிட்டு வந்து றெயினிங் குடுக்கிறன்” இறுதியில் சிறீமதியின் பிடிவா தந்தான் வென்றது. சண்டைக் குச் சென்றாள். போர்முனைக்குப் போகும் போது, மீண்டும் ஒரு புறநானூறு எழுந்தது. மகளிர் படையணியினர் பயணம் செய்த வாகனம், போகும் வழியில் சிறீமதியின் வீட்டு வாசலின் முன்னால் பழுதடைந்து நின்றுவிட்டது. வாகனத்தைத் திருத்துவதற்கு இவளது குடும்பத்தினர் உதவி செய்தனர். தமிழீழத்தின் வீரத் தாய்மாருள் ஒருத்தியும் சிறீமதியின் அன்னையுமான அந்த மாதர்குல மாணிக்கம்,”நல்லாச்சண்டை பிடிச்சு, அவங்களை அடிச்சுத்திரத்திப் போட்டு வெற்றியோட வாங்கோ” என்று தன் மகள்களை ஆசிர்வதித்து, விடைகொடுத்தாள். தன்பெண் குழந்தைகளை ஒரு தாய் போருக்கு அனுப்பும் புதிய புறநானூறு ஒன்று அங்கே எழுதப்பட்டது. இதுதான் இந்த மண்ணுக்கேயுரிய இயல்பு. வாகனம் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தது. சிறீமதி திடீரென்று தன் மனதில் ஏதோ நினைத்தவளாய்… கண் கலங்க தனக்கருகில் இருந்த தோழியிடம் கூறுகிறாள். “நான் இயக்கத்துக்கு வந்ததற்கு ஒரு நாள் கூடக் கவலைப்படேல்ல. இப்ப அம்மா, அப்பா, சகோதரங்களையும் கண்டிட்டன். ஆனா உயிரையும் விடப் பெரிசெண்டு தான் நினைக்கிற இந்த மண்ணையும், மக்களையும் காக்கவெண்டு வெளிக்கிட்டவரைத்தான் காணேல்ல. அதுதான் எனக்கு இப்ப கவலையா இருக்கு”. அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. போர் முனையைப் படையணிகள் அடைந்துவிட்டன. சிறீமதி ஒரு குழுவுக்கு தலைமை தாங்கினாள். எதிரியிடமிருந்து எண்ணற்ற ரவைகளும் குண்டுகளும் எம்மை நோக்கிவந்து கொண்டிருந்தன. “செல் குத்துறான். எல்லாரும் கவரில நிண்டு அடிபடுங்கோ ” “கவனமா ஒருதரையும் விடாம தூக்கிக்கொண்டு போங்கோ” சிறீமதியின் குரல் முன்னணியில் நின்று வழி நடத்திக் கொண்டிருந்தது. எதிரியிடம் இருந்து வந்த எறிகணை ஒன்று தன்னிடம் இருந்து இவள் எல்லோரையும் தப்பவைக்கிறாளே என்ற கோபத்தினாலோ என்னவோ, இவளது தலையைச் சீவிச்சென்றது. ரீ81 துப்பாக்கியையும், வோக்கியையும் தனது இருகைகளாலும் அணைத்துப் பிடித்தபடி, விழுந்த சிறீமதியின் வாயிலிருந்து . “பிள்ளையள்” என்ற ஒரு சொல் மாத்திரமே வந்தது என்று, அவளோடுகளத்தில் நின்ற தோழிகள் விம்மலுடன் கூறினார்கள். முல்லைமண்பெற்றெடுத்த புதல்வியின் குருதியால், எமது இதயபூமி தன் வளத்துக்கு மேலும் உரம் சேர்த்துக்கொண்டது. அவள் காவல் செய்த தொண்டைமானாற்றுக் கடலோ தனது அலைகளை உயர்த்தி, “சிறீமதி எங்கே? எங்கே?” என்று தேடுகிறது. இவளின் அக்கா மகன் தீபன், “அன்ரி அன்ரி” என்று, வீட்டுக்கு வரும் பெண் போராளிகளில் சிறீமதியைத் தேடுகிறான். அவள் வளர்த்தெடுத்த புதிய தலைமுறைகளோ அவளின் இலட்சியக் கனவுகளையும், ஆசைகளையும் சுமந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். – உலகமங்கை – –களத்தில் இதழ்
  3. தமிழீழத்தின் வளம்மிக்க கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுர கிராமத்தில் இராசு ரட்ணசிங்கமாக 09/01/1980 ஆண்டு மூன்று சகோதரிகளுக்கு தம்பியாக பிறந்தான் மிகவும் செல்லமாக வளர்ந்து வந்தான் அவனது சிறுவயதில் தந்தை இறந்துவிட தாயார் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பிள்ளைகளை படிக்கவைத்து வளர்த்து வந்தார் இவனை எல்லோரும் சுதா என்றே அழைத்துவந்தனர் பாடசாலை கல்வி கற்றுவந்த வேலையில் யாழ்ப்பாணத்தை சிறிலங்கா படைகள் ஆக்கிரமித்ததன் விளைவாக பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து வன்னியில் குடியேறியிருந்தனர் அதன்படி தர்மபுர கிராமத்திலும் மக்கள் குடியேறியிருந்தனர் அவனுக்கு போரின் தாக்கம் அவனை பாதிக்க தொடங்கிய வேலை கிளிநொச்சி யை இராணுவம் ஆக்கிரமித்தவுடன் விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்து கொள்கிறான். அதன்படி 1996 ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து லெப்.கேணல் இம்ரான் பாண்டியன் படையணியில் மேஜர் மாறன் -01 பயிற்சி முகாமில் சுகுமார் என்கிற இயக்கபெயருடன் ஆரம்ப பயிற்சியை பெற்றான். பயிற்சியில் நல்ல திறமையாக செயற்பட்டான் அதேவேளை அவனுக்கு திடகாத்திரமான உடலமைப்பும் குறிபார்த்து சுடுவதிலும் வல்லவனாக இருந்தபடியால் ஆரம்ப பயிற்சி நிறைவுற்கு பின் தாக்குதல் அணியாக பிரிக்கும்போது LMG இலகுரக கனரக ஆயுத சூட்டாளனாக தேர்வு செய்யப்படுகிறான். LMG பயிற்சி மனலாறு முகாமில் நடைபெற்றுக்கொண்டுயிருக்கும் போது சிங்களப்படைகளின் ஜெயசிக்குறு படைநடவடிக்கை ஆரம்பமாக போவதை அறிந்த புலிகள் அதனை தடுப்பதற்கு பல தாக்குதல் அணிகளை களமுனைற்கு அனுப்பினார்கள். அதில் சுகுமாரின் அணியும் கலந்து கொண்டு பலமுன்னேற்ற முயற்சிகளை முறியடிப்பதில் வீரத்துடன் ஈடுபட்டான். இராணுவத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை தடுக்கும் நோக்கில் முன்னரங்கில் நின்றவேளை தவறுதலான சூட்டில் சுகுமார் கையில் காயப்பட்டு சிகிச்சைற்காக பின்நகர்த்தப்பட்டான். காயம் மாறியபின் தான் சண்டைக்களத்திற்கு போகவேணும் என்கிற எண்ணத்தை தனது படையணி சிறப்புத்தளபதிற்கு தெரியப்படுத்தினார். ஆனால் அவர் அவனை தொலைத்தொடர்பு கற்கைநெறிக்கு அனுப்பிவைத்தார். விருப்பமில்லாமல் சென்றாலும் தொலைத்தொடர்பு கல்வியை சிறப்பாக கற்றுதேர்ந்தான். இந்த காலத்தில் சண்டைற்கு செல்லும் எண்ணம் நிறைவேறாத காரணத்தாலும் சிங்களப்படைகளுக்கு எதிரினான தனது ஓர்மத்தை வெளிப்படுத்தும் நோக்கில் தன்னை கரும்புலிகள் அணிற்கு தேர்வு செய்யும்படி சிறப்புத்தளபதி கடாபியண்ணாவுற்கும் தமிழீழ தேசியத்தலைவருக்கும் தொடர்ச்சியாக பல கடிதங்களை அனுப்பியும் அவனது முயற்சி பயன் அளிக்கவில்லை. ஆனால் கடாபியண்ணாவின் நன்மதிப்பை பெற்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மிகவும் இரகசியம் வாய்ந்த தேசியத்தலைவரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் படைக்கல பாதுகாப்பு அணிற்கு தொலைத்தொடர்பாளனாக 1998 ஆரம்ப காலத்தில் அனுப்பபட்டான். படைக்கல பாதுகாப்பு பணி அந்த காலத்தில் மிகவும் ஆட்பற்றாக்குறை கடுமையான வேலைப்பலுவுடன் இயங்கி வந்த நேரம். சுகுமார் தனிஒருவனாக 24 மணிநேரமும் தொலைத்தொடர்பு கடமையை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் அதேநேரம் தாக்குதலுக்கான வெடிபொருட்களை பார ஊர்திகளில் ஏற்றி அனுப்ப வேணும் அத்தோடு விடுதலைப்புலிகளால் கொள்வனவு செய்து வரும் வெடிபொருட்களை முகாங்களில் களஞ்சியப்படுத்த வேணும் என பல வேலைகளை குறிப்பிட்ட போராளிகளே செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால் தனது தொலைத்தொடர்பு கடமையோடு இரவுபகல் பாராமல் எல்லாவேலையிலும் சோர்வு இன்றி ஈடுபடுவான். 2000 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் போரியல் வெற்றியின் உச்சத்தில் இருந்த நேரத்தில் வெடிபொருட்களின் கணக்காளராக இருந்த திருமாலுக்கு உதவியாக சுகுமாரை பொறுப்பாளர் சுயாகியண்ணா நியமித்தார். சுகுமார் தனக்கு தந்த பணியின் இரகசியத்தையும் முக்கியத்தையும் உணர்ந்து மிகவும் ஈடுபாட்டுடன் வேலைசெய்து வந்தான்.2002 சமாதான காலப்பகுதியில் இம்ரான் பாண்டியன் படையணி இரண்டாக பிரிக்கப்பட்டு லெப். கேணல் ராதா வான்காப்புப் படையணி என்கிற புதிய படையணியின் பெயருடன் இருந்த படையணிற்குள் படைக்கல பாதுகாப்பு அணி இயங்கிவந்தது. புதிய படையணியின் நிதிப்பொறுப்பாளராக திருமால் 2003 செல்ல சுகுமார் படைக்கல பாதுகாப்பு அணியின் கணக்காளராக நியமிக்கப்பட்டான். சுகுமார் கணக்காளராக வந்த பின் வெடிபொருட்களின் மாதாந்த இருப்பு வரவுசெலவுகளின் கணக்கறிக்கை தேசியத்தலைவருக்கு அனுப்பிய விதம் வடிவமைப்பு தேசியத்தலைவருக்கு பிடித்து தலைவரின் பாராட்டுகளை பெற்றான். சுகுமாருக்கு எந்த ஆயுதம் எந்த வெடிபொருள் எந்த மாவட்டத்தில் எந்த களஞ்சியத்தில் பாதுகாப்பாக இருப்பில் உள்ளது என்கிற மனதிலே பதியவைத்துவிடுவான் அவனது திறமையான செயல்பாட்டை பார்த்து பொறுப்பாளரால் பீல்ட்பைக் மோட்டர்சைக்கிள் கொடுக்கப்பட்டுயிருந்தது தேசியத்தலைமையிடமிருந்து .ஆயுத வெடிபொருட்களை குறிப்பிட்ட படையணி அல்லது தளபதியிடம் கொடுக்க சொல்லி கட்டளை வந்தால் சுகுமாரின் பீல்ட்பைக் உறுமிக்கொண்டு போகும். 2006 நான்காம் கட்ட ஈழப்போர் ஆரம்பமான பின் சுகுமாரின் பணி கடுமையானது முக்கியமான வெடிபொருட்கள் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கவேணும் என்றால் தனி ஒருவனாகவே பார ஊர்திகளில் வெடிபொருட்களை ஏற்றி கொண்டுபோய் குறிப்பிட்ட நேரத்திற்குள் கொடுப்பான் அவனது கன்டர் வாகனம் எப்போதும் வெடிபொருட்களை ஏற்றிய வண்ணமே இருக்கும். இந்த காலப்பகுதியில் சுகுமார் முன்னர் கொடுத்த கரும்புலிகள் அணிற்கான கடிதத்திற்கான பதிலாக அவனை கரும்புலிகள் அணிற்கு வரும்படி அழைப்பு வந்தது சுகுமாரும் உற்சாகமாக கரும்புலிகள் அணிற்கு செல்ல தயார் ஆனான் ஆனால் பொறுப்பாளர் சுயாகியண்ணை சுகுமாரின் வேலையின் முக்கியத்தையும் தற்போதைய நிலையில் அவனை அனுப்பமுடியாமல் உள்ள காரணத்தையும் தேசியத்தலைவருக்கு தெரியப்படுத்தி அவனை தனது கடமையை தொடர்ச்சியாக செய்ய அனுமதி வேண்டினார் இதனால் சுகுமார் மீண்டும் மனமுடைந்தான் இருந்தபோதிலும் தனது வேலையின் முக்கியத்துவத்தையும் தன்மீது பொறுப்பாளர் மற்றும் தேசியத்தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கைற்கு ஏற்றார்போல் சிறப்பாக செயல்படவேண்டும் உத்வேகத்துடன் செயல்பட்டான். 2008 ஆண்டு சிங்களப்படைகள் வன்னியை ஆக்கிரமிக்க தொடங்க படைக்கல இருப்புமுகாங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு நாளாந்த மாறிக்கொண்டுயிருந்தது 2009 ஆண்டு ஐனவரி மாதம் விசுவமடுவை ஆக்கிரமிக்க சிங்களப்படைகள் முன்னேறிவர படைக்கல பாதுகாப்பு அணியின் பிரதான தளமும் கைவிடப்பட்டு வெடிபொருட்கள் பின்நகரத்தப்பட்டன. தேசியத்தலைவருக்கும் மட்டுமே தெரிந்த விடுதலைப்புலிகளின் ஆயுதப்பலம் சுகுமாருக்கும் தெரியும் ஏனெனில் கடந்த 9 வருடங்களாக எவ்வளவு ஆயுத வெடிபொருட்கள் எமது அமைப்புற்கு வந்தது அது எந்தெந்த படையணிற்கு எவ்வளவு கொடுத்தது என்பதை அறிந்தவன் முள்ளிவாய்க்கால் மண்ணில் மே 15 திகதிவரை தேசியத்தலைவரின் கட்டளைற்கு அமைய ஆயுத வெடிபொருட்கள் வினியோகத்தை செய்தவன் அன்றிறவு தேசியத்தலைமையுடன் முள்ளிவாய்க்கால் முற்றுகையை உடைத்து வெளியேறும் அணியில் படைக்கல பாதுகாப்பு அணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு பேரில் ஒருவனாக புறப்பட்டான் ஆனால் பிரிகேடியர் சொர்ணம் வீரச்சாவுடன் அந்த நாள் திட்டம் கைவிடப்பட, அடுத்த நாள் பகல் வட்டுவாகல் பாலத்திற்கு அருகாமையில் வீதியோரமாக சுகுமாரின் அணிகளை பாதுகாப்பாக இருக்கும்படி கட்டளை கொடுக்கப்பட்டுயிருந்தது ஆனால் மக்களும் பெருமளவில் வெளியேற மக்களை கேடயமாக வைத்து இராணுவம் முன்னரங்க பாதுகாப்பை உடைத்துகொண்டு சுகுமாரின் அணிகள் நின்ற இடத்தை நெருங்கிவந்துவிட்டது உடனடியாக இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் நோக்கில் சுகுமாரின் அணி முன்னேற்றத்தை முறியடிக்கும் கடும எதிர்தாக்குதலை மேற்கொண்டு முன்னேற்ற முயற்சியை தடுத்தனர் ஆனால் 16/05/2009 அன்று மாலைப்பொழுதில் சிங்களப்படையின் தாக்குதலில் வீரச்சாவடைந்தான். விடுதலைப்புலிகளின் படைக்கல பலத்தை முழுமையாக அறிந்த இரகசியகாப்பாளன் முள்ளிவாய்க்கால் மண்ணில் தன் மூச்சை நிறுத்தினான்.
  4. நான் நடுராத்தியில் பல தடவை நித்திரையில் இருந்து எழுப்பியிருக்கின்றன். எந்தவித சலிப்பின்றி அவரே வந்து வேலை செய்து தருவார். பிரின்ரர் சிலவேளைகளில் வேலைசெய்யாமல் இருக்கும், சிலவேளைகளில் ரோணர் பிரச்சினையாக இருக்கும், உடனயாடியாக அன்புமணி அண்ணையிடம் ஓடிபோனா காணும், வேலை முடிஞ்சதிற்கு சமன். தன்னுடைய இடத்திலே வேலை செய்ய சொல்லிவிடுவார். யாருடைய வெளியீடு என்றாலும் உதவி என்று கேட்டால், எந்த மறுப்பின்றி உரிய நேரத்திற்குள் செய்து கொடுக்கும் அன்புமணி அண்ணையை இழந்து 12 ஆண்டுகளை கடக்கின்றோம். விடுதலைப்புலிகளின் உத்தியோக பூர்வ ஏடான “விடுதலைப்புலிகள்” பத்திரிகையின் இதழ் -01 தொடக்கம் 138 வரையான பதிப்புக்களை இணையத்தில் அனைவரும் பார்வையிடலாம். அந்த பணிகளுக்கு உரித்தானவர் இவரே. ஆவணப்படுத்தல்களை மிகவும் அக்கறையாக செய்து முடித்தவர். அவரையும் இந்நாளில் நினைவு கூருகின்றேன். “அன்புமணி அண்ணை எப்பொழுதும் எங்களோடயே இருப்பார்.”
  5. வைகாசி மாதம் வருகின்றதென்றால் அது ஓர் இருள் சூழ்ந்த மாதமாகவும், மனதில் கவலைகள் பெருகி குரல்வளையை நெரிக்கின்ற ஓர் உணர்வையும் தரும். இம் மாதத்திலே எங்களோடு இருந்த எத்தனையோ நூற்றுக்கு மேற்பட்ட போராளிகளை இழந்துள்ளோம். அவர்கள் இறுதிவரை நின்று களமாடியும், அவர்களது இவ்வுலக இருப்புப்பற்றி உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் நாங்கள் இன்னும் எத்தனையோ மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை செலுத்த முடியாத நிலையில், ஓர் ஆண்டின் பின்போ அல்லது மூன்று, ஐந்து ஆண்டுகளின் பின்போ அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் ஊமைகளாக உள்ளோம். அந்த வகையில் எங்களோடு நிதித்துறை கணக்காய்வுப் பகுதியில் இருந்து இறுதிப்போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட பூம்பாவை அக்காவைப் பற்றி எழுத நான் கடமைப்பட்டுள்ளேன். 1995ஆம் ஆண்டு மார்கழி மாதம் நானும் இன்னும் நான்கு போராளிகளும் அடிப்படைப் பயிற்சி முடித்து ஒரு இரவு நேரத்தில் நுணாவில் பகுதியில் இருந்த நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதி முகாமுக்கு கொண்டு வந்து விடப்பட்டோம். நாங்கள் அங்கு சென்றடைந்த போது இரவு 8 மணி இருக்கும். அங்கே நிறைய அக்காக்கள் பெரிய மண்டபத்தில் (hall) எல்லோரும் ஒவ்வொரு மேசையில் இருந்து பெரிய பெரிய கணக்கேடுகளில் பச்சைநிற எழுதுகோலை வைத்துக்கொண்டு அங்க பார்த்து இங்கயும் இங்க பார்த்து அங்கயும் சரி போட்டுக் கொண்டு இருந்தார்கள். (அப்ப எங்களுக்கு பெரிய பெரிய புத்தகங்கள் காசேடு, பேரேடு என்றும் பச்சைப் பேனையால கணக்காய்வு செய்யினம் என்றும் தெரியாது). அப்போது ஒரு அக்கா வந்து “பிள்ளைகள் இரவு ஆயிட்டுது அந்த அறையில் கொண்டு போய் உங்கட பைகளை (bags) வைச்சிட்டு வந்து முகம், கைகால கழுவிப்போட்டு வந்து சாப்பிட்டிட்டு படுங்கோ”என்றார். எங்களுக்கும் வந்த புதுசு தானே நல்ல பிள்ளைகளாக போய் சாப்பிட்டு விட்டு வந்து பயணம் செய்து வந்த களைப்பில் தூங்கி விட்டோம். அடுத்த நாள் காலை 4.30 மணியளவில் ஒரு அக்கா வந்து “பிள்ளைகள் எழும்பி போய் காலைக் கடன்களை முடித்து விட்டு சத்தியப் பிரமாணத்துக்கு வாங்கோ” என்றார். நாங்களும் காலைக் கடன்களை முடித்து விட்டு சத்தியப் பிரமாணம் எடுத்து விட்டு வந்தோம். நாங்கள் வந்த புதிது என்றபடியால் எங்கள் ஐவரையும் அன்று மட்டும் முகாமில் விட்டு விட்டு மிகுதி எல்லோரும் ஓட்டப் பயிற்சிக்கு சென்று விட்டு வந்தார்கள். மக்கள் குடியிருப்புக்குள் எங்கள் முகாம் இருந்தபடியால் விடிவதற்கு முன் ஓட்டப் பயிற்சியை முடித்து விட்டு வர வேண்டும். நாங்கள் ஐவரும் குளித்து சீருடை அணிந்து வரவேற்பறையில் வந்து இருந்தோம். ஒவ்வொரு அக்காமாரும் வந்து தங்களை அறிமுகப்படுத்திவிட்டுப் போனார்கள். அப்போது உயர்ந்த மெல்லிய வெள்ளை நிற கம்பீரமான தலையை இரண்டாக பின்னி வளைத்து கட்டிய, வெள்ளை நிற மேற்சட்டையும் கறுப்பு நிற நீளக்காற்சட்டையும் இடுப்பில் கறுப்பு நிற பட்டியும் அணிந்த படி ஒரு உருவம் எங்களிடம் வந்து தனது பெயர் பூம்பாவை என்று அறிமுகம் செய்தது. பெயருக்கு ஏற்ற மாதிரி மிகவும் அழகான கம்பீரமான எவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிற தோற்றம் பூம்பாவை அக்கா. அறிமுகப்படலத்தின் போது சொந்த ஊரை விசாரித்த போது நானும் அவாவும் ஒரே ஊர். என்னை தனது ஊர்க்காரி என்று தான் அழைப்பார். இப்படித் தான் எனக்கும் பூம்பாவை அக்காவுக்குமான உறவு ஆரம்பித்தது. தெல்லிப்பளை,யாழ்ப்பாணம் பூம்பாவை அக்கா யாழ்ப்பாணத்தின் வலிகாமப் பகுதியிலுள்ள தெல்லிப்பளை எனும் ஊரில் திரு.திருமதி சண்முகலிங்கம் இணையருக்கு மகளாக ஜெயசக்தி எனும் இயற்பெயருடன் 01.11.1971 அன்று பிறந்தார். அவர் சிறு அகவை முதல் படிப்பு, விளையாட்டு இரண்டிலும் முதன்மை நிலை வகித்தார். மேலும் கவிதை எழுதுதல், சிறுகதை எழுதுதல் போன்றவற்றிலும் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். 1990 – 1991 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் வர்த்தகப் பிரிவில் தோற்றி சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானவர். பல்கலைக்கழகத்திற்கான அனுமதி கிடைத்தும் தாய் நாட்டின் மீதும் மக்களின் மீதும் தலைவர் மீதும் இருந்த பற்றின் காரணமாக பல்கலைக்கழகக் கல்வி பயிலும் வாய்ப்பையும் தூக்கி எறிந்து விட்டு எமது போராட்டத்தில் 1992 இல் இணைந்தார். முதலில் அரசியற்துறையில் இருந்து பின்பு 1993 ஆம் ஆண்டில் நிதித்துறை கணக்காய்வுப்பகுதிக்கு வந்தார். அங்கு தான் அவரின் ஆற்றலும் ஆளுமையும் திறமையும் வெளிப்பட்டது. எமது நிதித்துறைக் கணக்காய்வுப் பகுதியின் மிகப் பெரிய ஆளுமையாக அவர் இருந்தார். ஆரம்ப காலத்தில் அவர் சேரன் வாணிபத்தின் எழிலகம், புடவை வாணிபங்களில் கணக்காய்வை மேற்கொண்டார். பின்பு அவரின் திறமை கண்டறியப்பட்டு நீண்டகாலம் கடைசி வரை நகை வாணிப கணக்காய்வு அணிக்கு பொறுப்பாளராகத் திறம்படச் செயற்பட்டார். வன்னியில் குப்பி விளக்கின் உதவியுடன் தரையில் பாய் விரித்து அதில் வாணிபங்களின் ஆவணங்களை எல்லாம் விரித்து வைத்தபடி இரவிரவாக உறக்கமில்லாமல் கணக்காய்வு செய்வார். வேலை என்று வந்துவிட்டால் அவருக்கு உணவு, தண்ணீர், உறக்கம் எல்லாம் மறந்தேபோகும். வேலையை முடிக்க வேண்டும் என்பதை மட்டுமே நினைவிற் கொண்டு செயற்படுவார். (அப்போது வன்னியில் மிகவும் கடினமான போராட்ட சூழல் நிலவிய காரணத்தினால் முகாம்களில் வசதியான முறையில் பணிபுரிய முடிவதில்லை. ஏதோ கிடைத்த வளங்களைக் கொண்டு தான் நிறைவான முறையில் எங்கள் பணிகளை மேற்கொள்வோம்). அந்தக் காலப்பகுதியில் காணப்பட்ட ஆளணிப் பற்றாக்குறையின் காரணமாக ஒரு போராளி பத்து பணியாளர்கள் புரியும் வேலையை தனி ஒருவராக நின்று பணிபுரியும் அளவிற்கு எமது அமைப்பினால் கற்கைநெறிக்குள் உள்வாங்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டு, புடம் போடப்பட்டனர். அந்த வகையில் பூம்பாவை அக்காவும் தனது கணக்காய்வுப் பணியினை கூடுதல் பணிச்சுமைக்கு நடுவிலும் தனது பணியினை திறம்பட அர்ப்பணிப்புடன் மேற்கொண்டார். நிறுவனங்களில் கணக்காய்வுப் பணிகளை மேற்கொள்ளும் போது பணியாளர்களுடன் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் அதே வேளை தேவையான போது கண்டிப்பாகவும் மிகவும் ஆளுமையுடனும் செயற்படுவார். பூம்பாவை அக்கா இருக்கும் இடத்தில் எப்போதும் கலகலப்புக்கு குறைவிருக்காது. எப்போதும் நகைச்சுவையாகவே பேசுவார். முன்னர் அவர் அரசியற்துறையில் இருந்தபோது யாழ்ப்பாணம் பண்ணையில் இருந்து மரக்கறிகளை மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று திண்ணைவேலிச் சந்தையில விற்ற கதையை மிகவும் நகைச்சுவையாக அடிக்கடி சொல்லுவார். பின்னரும் அந்த நினைப்பில எங்கட முகாமில் இருந்த மொழி அக்காவின் தலைப் பின்னலை பிடித்து மாட்டுவண்டி ஓட்டி அவாவிடம் முறைப்பையும் திட்டையும் பரிசாக வாங்குவார். ஏதாவது வேலை செய்து களைப்படைந்து விட்டார் என்றால் அவரின் வாயில் இருந்து “அப்பனே முருகா! பழம் பிள்ளையாரே! வைரவக் கிழவா!” என்ற சொல் தான் அடிக்கடி வரும். தலைவர் மீதும் போராட்டத்தின் மீதும் அவருக்கு எவ்வளவு பற்று, நம்பிக்கை இருந்ததோ அதற்கு அடுத்த படியாக கடவுள் மீதும் பற்று அதிகம். கந்தசஷ்டி விரதத்தை தன்னால் இயன்றளவு தொடர்ந்து பிடித்து வந்தார். அதே போல மாவீரர் நாள், திலீபன் அண்ணா நினைவு நாள் போன்றவற்றிற்கும் அன்று பகல் முழுவதும் நீர் கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து இரவு மட்டும் உணவு உண்ணுவார். நாங்கள் சில பேர் மட்டும் பசி தாங்க முடியாமல் “திலீபன் அண்ணைக்கு எங்களுக்குப் பசிக்கும் என்று தெரியும் தானே கோவிக்க மாட்டார். வாங்கோ அக்கா வெளியில போய் களவாக சாப்பிட்டு வருவோம்” என்று கூப்பிட்டால், எல்லாக் குழப்படிகளுக்கும் களவுகளுக்கும் எங்களோட சேர்ந்து வருபவர் இதற்கு மட்டும் வரமாட்டார். பொதுவாக திலீபன் அண்ணா நினைவு இறுதி நாளில் எங்கள் முகாமில் உணவு சமையல் பகுதியிலிருந்து எடுப்பதில்லை. எல்லோரும் விரதமாக இருந்து இரவு உணவை சைவ உணவாக சமைத்து உண்ணுவோம். பூம்பாவை அக்கா விதவிதமாக சுவையாக சமைப்பதிலும் படு விண்ணி. நாங்கள் கொஞ்ச பேர் 1995ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் கற்க ஆரம்பித்த புதிதில் போராட்டத்தில் இணைந்த காரணத்தினால், எங்களின் பணித்தேவை காரணமாக (கணக்காய்வுப் பகுதியில் போராளிகளாக இருந்த அனைவரும் பல்கலைக் கழகத்திலோ அல்லது உயர் தொழில்நுட்பக் கல்லூரியிலோ கல்வி கற்றவர்களாக இருந்தார்கள்) க.பொ.த உயர்தரம் படித்து சித்தியடைந்திருக்க வேண்டும் என்ற காரணத்தினால் 1997ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்திற்கு தோற்றுவதற்கு எமது அமைப்பினால் பணிக்கப்பட்டோம். அப்போது எங்களுக்கு பாடங்களில் ஏற்படும் தெளிவின்மைகளைத் தீர்ப்பதற்கு பூம்பாவை அக்கா பெரிதும் உதவி செய்வார். கணக்கியலில் அவர் ஒரு புலி. எந்தக் கடினமான கணக்கு என்றாலும் மிகவும் இலகுவான முறையில் எங்களின் மரமண்டைகளுக்குப் புரியவைத்து விடுவார். மற்ற நேரங்களில் மிகவும் இயல்பாக எங்களில் ஒருவராக அகவை வேறுபாடு பாராது பழகும் அவர் படிப்பு, வேலை என்று வந்து விட்டால் மிகவும் கண்டிப்பு நிறைந்த பெண்ணாக மாறி விடுவார். அவரிடம் பல மொக்கை கேள்விகள் கேட்டும் குரங்கு சேட்டைகள் புரிந்தும் மண்டையில் குட்டு வாங்கிய பெருமை என்னையே சாரும். கல்வி மற்றும் பணி தொடர்பான விடயங்களில் கண்டிப்பாக இருக்கும் அவர், மற்றைய நேரங்களில், நாங்கள் வேலிப் பொட்டுக்குள்ளால புகுந்து போய் கச்சான் விற்கும் ஆச்சியிடம் கச்சானும், குளிர்களி விற்கும் அண்ணையிடம் குளிர்களியும் ஒருவாறு தண்டல் தண்டி வாங்கி வந்து சாப்பிடும் போது “கழுகுக்கு மூக்கில வேர்த்தது போல” சரியான நேரத்துக்கு என்னை விட்டிட்டுச் சாப்பிடுறீங்களோடி …என்றபடி பங்கு கேட்க வந்துவிடுவார். ஒரு போராளி எந்நேரமும் களத்திற்கு செல்வதற்கு அணித்தமாக இருக்கும் வகையில், வெளிநிருவாகப் பணிகளில் மட்டுமல்ல களப்பணிகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எம் தேசியத் தலைவனின் அவா. அவ்வாறே வெளிநிருவாகப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் போராளிகள் தேவைப்படும் போது கடும் போர்ப் பயிற்சிகள் வழங்கப்பட்டு களப்பணிகளுக்குள் உள்வாங்கப்படுவதுண்டு. அந்த வகையில் பூம்பாவை அக்காவும் 1997 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எமது பிரிவிலிருந்து படையறிவியற் கல்லூரியில் அதிகாரிகள் பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டார். அங்கு திறம்பட செயற்பட்டு ஒரு போர் அதிகாரிக்குரிய தகுதியோடு முகாம் திரும்பினார். வெளிப்பணிகளில் மட்டுமல்ல சண்டைக்களங்களிலும் பூம்பாவை அக்கா திறம்பட செயற்பட்டார். அவரின் பணித் தேவையின் முதன்மை கருதி இயக்கம் சண்டைக்கு விடாத போதும் வலுக்கட்டாயமாக பொறுப்பாளருடன் சண்டை பிடித்து இரண்டு தடவைகள் சண்டைக்களத்திற்குச் சென்றார். 1999ஆம் ஆண்டு நெடுங்கேணிப் பகுதியில் உள்ள போர் முன்னரங்கப் பகுதிக்கு சோதியா படையணியுடன் இணைந்து ஒரு படைப் பிரிவுக்கு (platoon) அணிக்குத் தலைவியாக சென்று ஆறு மாதங்கள் திறம்படச் செயற்பட்டு பின் முகாம் திரும்பினார். பின்பு 2000 ஓயாத அலைகள்-4 இற்கும் ஒரு அணிக்கு தலைவியாகச் சென்று திறம்படச் செயற்பட்டு பின் முகாம் திரும்பினார். அவர் திருமண அகவையை அடைந்ததும், 2001 ஆம் ஆண்டு தலைவரின் கட்டளைக்கு ஏற்ப ஒரு போராளியை இணையேற்றார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிய பின்பும் குழந்தைகளை தளிரில் விட்டு விட்டு (திருமணமான பெண்போராளிகள் தடையின்றி பணிகளைச் செய்வதற்கு இலகுவாக அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்கு தலைவரால் உருவாக்கப்பட்ட காப்பகம் தான் தளிர்) நகை வாணிப கணக்காய்வு அணிக்கு பொறுப்பாளராக கடைசி வரை திறம்படச் செயற்பட்டார். பின்பு 2009 இல் எமது போராட்டத்தின் பரிணாம வளர்ச்சியைக் காணப் பொறுக்காமல் சிறிலங்கா அரசும் ஏனைய உலக வல்லாதிக்கங்களும் ஒன்று சேர்ந்து எங்கள் போராட்டத்தை நசுக்குவதற்கு திட்டம் போட்டு காய் நகர்த்தி எம்மையும் எமது மக்களையும் முள்ளிவாய்க்காலிலே ஒரு சிறிய வட்டத்திலே அடைத்தன. அப்போது பூம்பாவை அக்காவின் கணவர் 2009 பங்குனி மாதம் களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். பின்பு பூம்பாவை அக்கா இரண்டு சிறு குழந்தைகளோடும் வயோதிபத்தாயோடும் மிகவும் சிரமங்களுக்கு நடுவில் பிள்ளைகளுக்காக வாழ்ந்து வந்தார். இறுதியில் வைகாசி மாதத்தில் எதிரியின் எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அவரின் இரண்டு பெண்குழந்தைகளும் தாயும் இன்றி தந்தையும் இன்றி வயதான அம்மம்மாவின் அரவணைப்பிலும் பூம்பாவை அக்காவின் சகோதரனின் அரவணைப்பிலும் வாழ்ந்து வருகின்றார்கள். இப்படி நாட்டுக்காக தங்களையே அர்பணித்த பல மாவீரர்களின் அறியப்படாத பல பக்கங்கள் உள்ளன. பூம்பாவை அக்காவைப் பற்றி கூற இன்னும் மலையளவு விடயங்கள் உள்ளன. பூம்பாவை அக்காவே உங்கள் கனவு ஈடேறும் என்றும், எல்லா மானமாவீரர்களின் கனவும் ஈடேறும் என்றும் நினைவிலிருத்திக் கொண்டு உங்களுக்கு எமது வீரவணக்கங்களைச் செலுத்துகின்றோம். என்றும் உங்கள் மீளா நினைவுகளுடன்…. நிலாதமிழ்
  6. புகழினி என்றவுடன் எமக்கு நினைவுக்கு வருவது அவளது அழகான தெத்திப் பல்லு தெரிய சிரிக்கும் கள்ளமில்லா வெண் சிரிப்பும் “லொட லொட” என்று எந்நேரமும் வாயோயாமல் அலட்டும் பேச்சும் கட்டைக் காலை வைத்துக் கொண்டு பாதம் பெடல் கட்டையில் முட்டக் கஷ்டப் பட்டு “தெண்டித் தெண்டி”சைக்கிள் ஓடும் அழகும் தான்.அவளிடம் அணியும் ஆடை,செய்யும் வேலை எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்கும். எந்நேரமும் அயர்ன் பண்ணி(ironing) மடிப்புக் கலையாத ஆடை தான் அணிவாள். எந்த வேலையென்றாலும் நாளைக்குச் செய்து முடிப்போம் என்று எண்ணாமல் அன்றே செய்து முடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவள்.எங்களின் நாவற்பழ நிறத்தழகி அவள்.தெற்றுப் பல் தெரிய அவள் சிரிக்கும் அழகோ அழகு தான்….பார்த்துக் கொண்டே இருக்கலாம்.அவள் சராசரி உயரத்தை விட சற்றுக் குறைவான குள்ளமான உருவத்தை உடையவள்.இதனால் அவள் பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருந்தது.உதாரணத்துக்கு சைக்கிள் ஓட்டுவதற்குக் கூட ஏதாவது ஒரு புட்டியான இடம் பார்த்து தான் ஏறி ஓடுவாள்.இதனால் எல்லோரிடமும் நல்ல அறுவையையும் வாங்கிக் கட்டுவாள். எல்லோரையும் போலவும் தான் புகழினியின் பிள்ளைப் பராய வாழ்க்கையும் இன்பத்துடன் அமைந்தது.அம்மா,அப்பா,தம்பி,அவள் என அழகிய சிறிய குடும்பம் அவளுடையது.அவளது சொந்தப் பெயர் மேரி கொன்ஸ்ரலின்.வீட்டில் ஒரேயொரு மூத்த பெண்பிள்ளை என்பதால் சரியான செல்லமாக வளர்ந்தாள்.அவளது சொந்த இடம் வலிகாமப் பகுதியில் சில்லாலை என்ற கிராமம்.அவள் தனது கல்வியை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் கற்றாள்.வலிகாமம் பகுதியில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக அடிக்கடி இடப்பெயர்வு ஏற்பட்டதின் காரணத்தினால் அவளாலும் ஒழுங்காக கல்வி கற்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது. 1994 க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி சித்தியடைந்து க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள். 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது விடுதலைப் போராட்டமானது மிகவும் உச்ச நிலையை அடைந்திருந்தது.வலிகாமப் பகுதியில் எதிரியானவன் எம் நிலத்தை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்த போது எமது போராட்டத்தின் உண்மை நிலையை உணர்ந்து பல்லாயிரக் கணக்கான இளைஞர்,யுவதிகள் தாமாகவே மனமுவந்து வந்து எமது அமைப்பில் இணைந்து கொண்டார்கள்.அந்த வகையில் மேரி கொன்ஸ்ரலினும் “வண்ணக் கனவுகள் தன்னில் கரைந்துமே பெண்மை கரைந்தது போதும்….இனி கண்ணைத் திறந்தொரு மின்னல் எழுந்திட விண்ணை விழுத்தலாம் வாரும்….பூகம்பமே என்னில் சூழட்டும் நெஞ்சில் போர் எனும் தீ வந்து மூழட்டும்”என்று 1995ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் எமது அண்ணன் கரிகாலன் சேனையில் இணைந்து கொண்டாள்.அங்கு அவள் மகளிரணியின் 30ஆவது பயிற்சிப் பாசறையில் புகழினி எனும் நாமத்துடன் போராளியாக புடம் போடப்பட்டாள். பின்பு 1995ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதி முகாமுக்கு அனுப்பப்பட்டாள்.புகழினி கணக்காய்வுப் பகுதிக்கு வந்த காலம் தொட்டு நீண்ட காலம் மருந்து பால்மா அணியிலேயே என்னுடன் இணைந்து கணக்காய்வை மேற் கொண்டாள்.அவள் பணியிடத்தில் பணியாளர்களிடம் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் அதேவேளை தேவைப்படும் போது கண்டிப்பாகவும் பணியை மேற்கொள்ளுவாள்.அவள் கணக்காய்வில் மட்டுமல்ல மற்ற இதர செயற்பாடுகளிலும் தன்னை வளர்த்துக் கொண்டாள். தற்காப்புக்கலையிலும் திறம்பட பயின்று கறுப்புப் பட்டி வரை பெற்றவள்.அது மட்டுமல்ல அவள் முறிப்பு நடனம்(break dance)ஆடுவதிலும் நல்ல தேர்ச்சி பெற்றவள்.எங்கள் முகாமில் நத்தார்தின நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் முறிப்பு நடனமாடி அவள் தான் கதாநாயகியாக திகழ்வாள்.மேலும் அவள் வாகன ஓட்டுனர் பயிற்சிக் கல்லூரியிலும் பயின்று உழவு இயந்திரமும் நன்றாக செலுத்துவாள்.இயக்கத்துக்கு வரும் போது புகழினிக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது.ஆனால் பின்பு உழவு இயந்திரம் செலுத்தக் கூடிய அளவுக்கு அவளை எமது அமைப்பு வளர்த்து விட்டிருந்தது. 1996ஆம் ஆண்டு ஆரம்ப காலம் தொடக்கம் 2000 ஆண்டு வரை நானும் புகழினியும் ஒன்றாகவே மருந்து பால்மா அணியில் கணக்காய்வு பணி பேற்கொண்டமையினால் எனக்கும் அவளுக்குமான உறவானது பலமானதாகவும் பல இனிமையான தருணங்களைக் கொண்டதாகவும் இருந்தது.அதில் சிலவற்றை அவளது ஞாபகமாக பகிர்ந்து கொள்ள அவாக் கொண்டுள்ளேன். 1996ஆம் ஆண்டு வன்னிக்கு வந்த புதுசில நானும் புகழினியும் மருந்து பால்மா அணியில் தான் கணக்காய்வை மேற் கொண்டோம். எங்களுக்கு பணிக்குச் செல்வதற்கு சைக்கிள் கூட இல்லை.நானும் புகழினியும் சைக்கிள் இல்லாத காரணத்தினால் நடராசாவில்(நடையில்) தான் பணிக்குச் செல்வோம்.எங்களின் முகாமில் உள்ள போராளிகள் அனைவருக்கும் ஒவ்வொரு பட்டப் பெயர் வைத்து தான் கூப்பிடுவோம். புகழினிக்கு “பேணி”தான் பட்டப் பெயர்.(எந்த நேரமும் “லொட லொட” என்று தகர டப்பா மாதிரி அலட்டுவதால் அவளுக்கு “பேணி” என்ற பட்டப் பெயர் உருவானது).என்னைப் பேணி “அரியத்தார்” என்று தான் கூப்பிடுவாள்.பின்பு பணிக்குச் செல்வதற்கு இரண்டு பேருக்கு ஒரு சைக்கிள் என்ற ரீதியில் கொடுக்கப்பட்டது.அதில் நானும் பேணியும்(புகழினி)தான் ஒன்றாக பணிக்குச் செல்வோம்.வழமையாக அவளை மருந்து பால்மா கடையில் விட்டு விட்டு நான் பொன்னம்பலம் வைத்தியசாலைக்குச் செல்வேன். நாங்கள் பணி முடித்து விட்டு மதிய உணவு நேர இடை வேளைக்கு முகாமில் சென்றுதான் சாப்பிடுவோம்.அப்போது சாப்பிடும் தட்டுக் கழுவிற பஞ்சியில நானும் புகழினியும் ஒரு தட்டில தான் உணவு உண்ணுகின்றனாங்கள்.சாப்பிட்ட தட்டைக் கழுவோணும் என்ற கள்ளத்தில நான் முதலாவதாகச் சாப்பிட்டிட்டு தட்டை அவளிடம் தள்ளி விட்டு ஓடி விடுவேன்.அவள் என்னைத் திட்டிக் கொட்டிப் புறுபுறுத்தபடி ஒருவாறு தட்டைக் கொட்டிக் கழுவிப் போட்டு வருவாள்.அவ்வாறு அவளது புறுபுறுப்பைக் கேட்பதிலே எனக்கு பெரிய ஒரு சந்தோசமாக இருக்கும். 1997ஆம் ஆண்டு நாங்கள் க.பொ.த உயர்தரத்தை முடிக்காமல் எமது அமைப்பில் இணைந்த படியால் பணித்தேவையின் தகுதி கருதி உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு பணிக்கப் பட்டோம்.எங்களுடன் புகழினியும் இணைந்து கல்வி கற்றாள்.அவள் இயல்பாகவே மிகவும் கூச்ச சுபாவமும்,இரக்க குணமும்,பயந்த சுபாவமும் உடையவள். அதனாலேயே அவளை எந்நேரமும் கிண்டலடிப்பது தான் எமது பொழுது போக்கு. உயர்தரம் படிக்கும் போது எமது பொறுப்பாளரால் நாம் வெளியே செல்வதற்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.ஆனால் எமக்கோ வெளியில் விடுப்பு பார்க்காமல் இருக்க முடிவதில்லை.எங்கள் முகாம் முற்றத்திலே பெரிய அடர்ந்து செழித்து வளர்ந்த மாமரம் ஒன்று உண்டு.அதிலே ஏறிப் பார்த்தால் வெளியே குறிப்பிட்டளவு தூரம் மட்டும் என்ன நடந்தாலும் தெரியும்.அதனால் நாங்கள் மாமரத்துக்கு மேல ஏறி அமைதியாக இருந்து படிக்கிறம் என்று கதை விட்டு மாமரத்துக்கு மேல ஏறி இருந்து விடுப்புப் பார்த்துக் கொண்டு படிப்பதுண்டு.புகழினிக்கு மாமரத்தில எங்களோட சேர்ந்து ஏறி இருந்து விடுப்பு பார்க்க ஆசை….ஆனால் ஏறத் தெரியாது.அதனால் நாங்கள் இரண்டு பேர் அவளை மேலேயிருந்து அவளது இரண்டு கைகளையும் பிடித்து இழுக்க கீழே இருந்தும் ஒராள் தள்ளி விட்டு ஒரு மாதிரி ஏற்றிப் போடுவோம். மேலேயிருந்து படிக்கிறம் என்று போட்டு நாங்கள் மரத்தில இருக்கிற மாம்பிஞ்சுகளால றோட்டால மோட்டார் சைக்கிளில போற எங்கட இயக்க அண்ணாக்களுக்கு எறிவதுண்டு.அண்ணாக்களும் எறிவது நாங்கள் என்று தெரிந்தாலும் பாவம் பிள்ளைகள் தானே என்று விட்டுக் கண்டும் காணாத மாதிரி போய் விடுவினம். ஆனால் புகழினிக்கு நன்றாக இலக்கு பார்த்து எறிய தெரியாது.அவள் ஒரு மோட்டார் சைக்கிளுக்கு மாம்பிஞ்சால எறிய வெளிக்கிட்டு அது போய் பின்னால சைக்கிளிலே வந்த அப்பு மேல பட்டு அந்த அப்பு வந்து பொறுப்பாளரிட்ட வந்து பிள்ளையள் மாம்பிஞ்சால எறிஞ்சு போட்டுதுகள் என்று சொல்லிக் கொடுத்து புகழினியால நாங்கள் நான்கு பேரும் நூறு தோப்புக் கரணம் போட்டதை இப்பவும் மறக்க முடியாது. புகழினிக்கு எங்களோட சேர்ந்து கள்ள வேலைகள் செய்வதற்கு சரியான பயம்.நாங்கள் வலுக்கட்டாயமாக இழுத்தாலும் வரமாட்டாள்.எங்களது முகாமில் இருக்கும் போராளிகளின் பெற்றோர் அவர்களின் பிள்ளைகளைப் பார்க்க வரும் போது சாப்பிடுவதற்கு நிறைய உணவுப் பொருட்கள் கொண்டு வந்து தருவதுண்டு.அதை தமா அன்ரா தான்(ஒரு அக்காவின் பட்டப் பெயர் தான் தமா அன்ரா)எல்லோருக்கும் பிரித்துக் கொடுப்பார்.அவர் எல்லோருக்கும் அளவாகக் கொடுத்து விட்டு மிகுதியை ஒரு மேசையில் கடைசி இழுப்பறையில் (இலாச்சி) பதுக்கி வைப்பார்.அதில் கடைசி இழுப்பறைக்கு (இலாச்சி) மட்டும் தான் பூட்டு உள்ளது.மற்றைய இரண்டு இழுப்பறைகளுக்கும் பூட்டு இல்லை.தமா அன்ரா கடைசி இழுப்பறையில் (இலாச்சி) வடிவாக வைத்து பூட்டிப் போட்டு அங்கால போனதும் நாங்கள் பூட்டில்லாத மேல் இழுப்பறையைக் (இலாச்சி)கழட்டிப் போட்டு கீழ் இழுப்பறையில் (இலாச்சி) உள்ள தின்பண்டங்களை எல்லாம் எடுத்துச் சாப்பிடுவோம்.புகழினியை இதுக்கு கூட்டுச் சேர்த்தால் வரவும் மாட்டாள் நாங்கள் கொண்டு போய்க் கொடுத்தாலும் சாப்பிடவும் மாட்டாள்.சாப்பிட்டால் பிறகு தமா அன்ராவிடம் நல்ல கிழி வாங்க வேண்டிவரும் என்ற பயம் அவளுக்கு.(எங்களுக்கு எவ்வளவு கிழி வாங்கினாலும் சாப்பாட்டு விசயத்தில சொரணை வராது). எங்கட முகாமுக்கு பின் புறத்தில் இரண்டு பெரிய பலா மரமும் உண்டு.அதில் நிறைய பலாப்பழங்கள் கனிந்து தொங்குவதுண்டு.எங்கள் முகாம் வளவுக்கு சொந்தக்கார ஆச்சி முகாமுக்கு பக்கத்து வீட்டில தான் இருக்கிறவர்.அவர் அடிக்கடி முகாமுக்கு வந்து எத்தனை பலாப்பழம் காய்த்து இருக்கிறது என்று கண்காணிச்சுக் கொண்டு தான் இருப்பார்.எங்களுக்கோ அந்தப் பலாப்பழங்களைக் கண்டால் வாயூறும்.ஆச்சியின் கண்ணில மண்ணைத் தூவிப் போட்டு அந்த பலாப்பழங்களை அடிக்கடி நாங்கள் பிடுங்கிச் சாப்பிடுவதுண்டு.இந்தப் பலாப்பழம் பிடுங்குகின்ற நிகழ்வானது அடிக்கடி எங்கட இரவு காவற்கடமை நேரத்தில் தான் நிகழும். மற்ற குழப்படி வேலைகளுக்கு பயப்படுகின்ற புகழினி பலாப்பழத்தில இருக்கிற அலாதிப் பிரியத்தில இதுக்கு மட்டும் எங்களோட கூட்டுச் சேருவாள்.பலாப்பழம் ஏறிப் பிடுங்கவோ வெட்டவோ வரமாட்டாள்…நாங்கள் ஏறிப் பிடுங்கி வெட்டி வைத்தால் மற்றைய எங்கட கூட்டுக் களவாணிகளை(முகாமில இருக்கிற எல்லோரையும் நாங்கள் இந்த நிகழ்வுக்கு சேர்ப்பது இல்லை…பல விசுவாசக்குஞ்சுகளும் இருந்ததால் போட்டுக் கொடுத்து விடுவினம் என்ற பயம்)நித்திரையில் இருந்து எழுப்பிக் கூட்டி வந்து அவைக்கும் பரிமாறி தானும் சாப்பிடுகின்ற வேலையை மட்டும் தான் பார்ப்பாள். இப்படித்தான் ஒருநாள் இரவு காவற்கடமை நேரத்தில் பலாப்பழத்தை இறக்கிச் சாப்பிட்டுப் போட்டு பலாச்சக்கையை புகழினியின் மொக்கை ஐடியாவால பக்கத்து வீட்டு வளவுக்கை தூக்கிப் போட்டு அந்த பக்கத்து வீட்டுக்காரி முகாம் வளவுக்கு சொந்தக்கார ஆச்சியிடம் போட்டுக் கொடுத்து அந்த ஆச்சி முகாமுக்கு வந்து பொறுப்பாளரிடம் சொல்லி சண்டை பிடித்து பொறுப்பாளர் ஆச்சியை ஒரு மாதிரி சமாளிச்சு அனுப்பின கதையை இப்பவும் மறக்க முடியாது.(எங்களின் பொறுப்பாளர் சாப்பாட்டு விசயங்களில எங்களுக்குத் தண்டனை தருவது இல்லை).இப்படி புகழினியால நாங்களும் மாட்டுப் பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. புகழினியின் குடும்பத்தின் சூழ்நிலையானதுனது மிகவும் கவலையளிக்கக் கூடியதாகவே காணப்பட்டது.அவளது குடும்பம் சொந்த இடத்தில் இருந்த போது சொந்த தொழில் செய்து வந்த படியால் நல்ல வசதியாகத் தான் வாழ்ந்து வந்தார்கள்.பின்பு வன்னிக்கு இடம்பெயர்ந்து வந்ததால புகழினியின் அப்பாவிற்கு தொழில் வாய்ப்பின்றி அன்றாட உணவுத் தேவைக்குக் கூடக் கஷ்டப்பட்டார்கள்.புகழினியின் அம்மா மகள் இயக்கத்துக்கு வந்ததாலே யோசித்து யோசித்து இருதய நோய் மற்றும் ஆஸ்துமா நோய் பீடிக்கப் பட்டு மிகவும் கஷ்டப்பட்டார்.அப்பா தான் ஓலைப் பாய்,பெட்டி இழைத்து விற்றுபிழைப்பு நடத்தி வந்தார்கள்.புகழினியின் தம்பியோ மிகவும் சிறிய பையன்.அப்போது பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்தான்.இதனால் நாங்கள் புகழினியுடன் அவளது வீட்டுக்குச் செல்லும்போது புகழினியின் அம்மா”என்ரை மகள் வீட்டை இருந்திருந்தால் படித்து உழைத்து எங்களைப் பார்த்திருக்கலாம் தானே” என்று சொல்லி அழுது கவலைப்படுவார்.ஆனால் புகழினியோ “வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்குத் தேவை தானே”உங்களுக்கு தம்பி இருக்கிறான் தானே என்று சொல்லி சிரித்து சமாளித்து விடுவாள். புகழினி எமது தலைவர் மீதும் போராட்டத்தின் மீதும் எல்லாப் போராளிகளைப் போன்றே மிகுந்த பற்றும் விசுவாசமும் உடையவள்.எமது தலைவரின் புகைப்படங்களைச் சேகரித்து அதை ஒரு செருகேடாக(album) வைத்து இருந்தாள்.சில போராளிகள் வீட்டில “அம்மாவாணை “என்று சத்தியம் செய்வதைப் போல இயக்கத்திலே “அண்ணையாணை “என்று கதைப்பதுண்டு.அது புகழினிக்குப் பிடிக்காது.சும்மா அண்ணையை போட்டு உங்கட லூசுக் கூத்துக்களுக்கு இழுக்காதையுங்கோ என்பாள். எங்களின் பொறுப்பாளர் புகழினியின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவளைச் சண்டைக் களங்களுக்கு அனுப்புவதில்லை.1999ஆம் ஆண்டு எங்கள் முகாமில் இருந்து சிலபேர் நெடுங்கேணிப் பகுதிக்குச் சண்டைக் களத்திற்குச் சென்ற போது பொறுப்பாளர் புகழினியை அங்கே செல்வதற்கு அனுமதிக்கவில்லை.ஆனால் அவள் அழுது சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து அவரோடு சண்டை பிடித்து சண்டைக் களத்துக்குச் சென்று அங்கு திறம்பட செயற்பட்டு முகாமுக்கு திரும்பினாள். பொதுவாக நாங்கள் வெளிப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் பெரிய பெரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளின் போது போராளிகள் பற்றாக்குறை காரணமாக உடற் குறையுள்ள விழுப்புண்ணடைந்த மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் மட்டும் தேவையான கொஞ்சப் பேரை மட்டும் முகாமில் விட்டு விட்டு மிகுதிப் பேரை இடையிடையே போர்ப் பயிற்சிகள் தந்து களப்பணிகளுக்கு இணைத்துக் கொள்வார்கள்.எங்களுக்கும் களப்பணிகளில் ஈடுபடுவதில்லை என்று குற்றவுணர்ச்சி ஏற்படுவதால் இப்படி இடையிடையே இணைப்பதால் நாங்களும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் களப் பணிகளுக்குச் சென்று வருவோம்.எமது தலைவரும் ஒரு போராளிக்கு வெளிப் பணிகளில் மட்டுமல்ல களப்பணிகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார். அந்த வகையில் நிதித்துறை மகளிர் அணியைச் சேர்ந்த நாங்கள் 2000 ஆம் ஆண்டு மே மாதத்தில் மாலதி படையணியுடன் இணைந்து வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றிற்காக சுண்டிக்குளம் பகுதியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.அதே வேளை எங்கள் புகழினி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் பயின்று கொண்டிருந்த படியால் அவர்களுடன் சேர்ந்து பளைப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் எம் மக்களின் காவற் தேவதையாக காவற்கடமை புரிந்து கொண்டிருந்தாள். 29.05.2000அன்று எங்களுக்கு “புகழினி வீரச்சாவாம் ” என்ற கொடிய செய்தி வந்தடைந்தது.எல்லோரும் கலங்கிப் போய் நின்றோம்.பளைப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் அவள் காவற்கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் சுற்றிவளைப்பின் போது எதிரியுடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரமுடனும் தீரமுடனும் போராடி எங்களின் புகழினி லெப்ரினன்ட் புகழினியாக வீரமரணத்தைத் தழுவிக் கொண்டாள். பின்பு நாங்கள் அனைவரும் எங்களது பயிற்சி முகாம் பொறுப்பாளரிடம் ஒரு நாள் அனுமதி கேட்டு புகழினியின் இறுதி வணக்க நிகழ்வுக்குச் சென்றோம்.அங்கே எங்கள் புகழினியின் வித்துடலை கடைசியாகக் கூட பார்க்க முடியாமல் வித்துடல் பேழை அடைக்கப்பட்டிருந்தது.அதைவிட புகழினியின் அப்பா என்னைப் பார்த்து “பிள்ளை உன்னோட தானே என்ரை மகள் ஒன்றாகத் திரியுறவள் நீ மட்டும் தான் வந்திருக்கிறாய் என்ரை மகள் எங்கே”என்று என்னைக் கட்டிப் பிடித்துக் கதறி அழுததும் நானும் குற்றவுணர்வால் அழுததும் நான் சாகும் வரை என் நினைவை விட்டுப் போகாது.பின்பு2002ஆம் ஆண்டு புகழினியின் அப்பா பொன்னம்பலம் வைத்தியசாலையில் நான் பணியை மேற்கொண்டிருந்த போது என்னை வந்து சந்தித்து பிள்ளை தாங்கள் அனைவரும் சொந்த இடத்திற்கு (சில்லாலைக்கு)செல்லப் போறோம் என்று சொல்லி விட்டு “என்ர பிள்ளையில்லாமல் போகப் போறேன் “என்று கதறி அழுததை இன்றும் நினைத்தால் மனதை பாறாங்கல்லால் வைத்து அழுத்தியது மாதிரி ஒரு உணர்வைத் தருகிறது. எங்களின் அன்புத் தோழி புகழினியே…. உன்னை இழந்த இந்த நாளில் மட்டுமல்ல எங்கள் வாழ்நாட்கள் முழுக்க எந்நாளுமே எங்கள் பழைய தோழிமார் யாரோடு கதைத்தாலும் உன் நினைவைத்தான் மீட்டிக் கொண்டிருக்கின்றோம்.உன்னைப் போன்ற ஒன்றாய்க் கூடி வாழ்ந்த தோழர்கள்,தோழியர்களை இழந்து விட்டு நாங்கள் மட்டும் தப்பி வந்து குற்றவுணர்வுடன் நடைப்பிணங்களாக எங்களின் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக புன்னகை என்னும் அரிதாரத்தைப் பூசிக் கொண்டு மனதுள்ளே எரிமலை போன்று குமுறிக் கொண்டுஉயிர் இருந்தும் ஜடமாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இப்பொழுதும் நீ என்னை “அரியத்தார்” என்று கூப்பிடும் ஒலி காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எம் தமிழீழ வரலாற்றில் என்றும் உன் கதை எழுதி வைக்கப்படும். – நிலாதமிழ்.
  7. நாட்டுப்பற்றாளர் மாசிலாமணி கனகரெத்தினம் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டம் வீரப்பிறப்பு : 25-01-1950 வீரச்சாவு : 13-05-1980 தொண்டனாக வாழ்ந்து மறைந்த நாட்டுப்பற்றாளர் மா. கனகரெத்தினம்! அமரர் மா.கனகரெத்தினம் அதிபர், தான் வாழ்ந்த 38 வயதுக்குள் தன் மேலதிகாரிகள், தன்னோடொத்தவர்கள், தன்னிலும் இளையோர் ஆகிய முத்திறத்தாரையும் ஒரு சேரக் கவர்ந்துள்ள தனிச்சிறப்புப் பெற்றவர். தன் நல்லெண்ணத்தாலும், ஆளுமையினாலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் அவர் விரும்பப்பட்டார். இப்படியான சிறப்புக்கள் பொருந்திய மட்டக்களப்பு மண்ணுக்கும், தமிழ் பேசும் நல்லுலகத்துக்கும் பெருமை சேர்த்த மா.கனகரெத்தினம் ஐயாவின் நினைவு தினம் இன்றாகும். எந்தவொரு காரியத்தைப் பொறுப்பெடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பது இவரது மாற்றுரு திறமை. சிறிய உதவிகளாக இருந்தாலும் சரி, பலரை தொடர்பு கொண்டு முடிக்க வேண்டிய பெரிய வேலைகளாக இருந்தாலும் சரி எப்படியும் அதை முடித்தே தீருவார். முடியவில்லை என்று சாக்குப் போக்கு சொல்வது இவர் அகராதியிலேயே இல்லை. எந்நேரமும் எவருக்காவது உதவி செய்ய தயாராகவிருப்பது இவரது மற்றொரு பண்பு. தனக்குரிய பல வேலைக் கஷ்டங்களுக்கு மத்தியிலும் ‘உதவி’ என்று கோரிவந்த ஒருவரையும் தட்டிக் கழிக்கமாட்டார். மட்டக்களப்பு பிரஜைகள்குழு செயலாளராகவும், ஆரையம்பதி சமாதானக் குழு அமைப்பாளராகவும், நெருக்கடியான கட்டங்களில் எல்லாம், இவர் உயிரைத் துச்சமென மதித்து பணியாற்றியமை இங்கு நினைவு கூரத்தக்கது. ஆரம்பகாலத்தில் விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவரும், விடுதலைப் போராளிகளினால் அன்பாக மாஸ்டர் என்று அழைக்கப்பட்டவருமான நாட்டுப்பற்றாளர் கனகரெத்தினம் அவர்கள் ஊருக்காகவும், சமூகத்திற்காகவும் ஆற்றிய பணிகள் பல. தளபதி அருணா, பொட்டு அம்மான், குமரப்பா, ரமணன், தளபதி றீகன் ஆகியோரின் பெரு மதிப்பைப் பெற்றவரும், அவர்களுடன் இணைந்து செயற்பட்டவருமான மா. கனகரெத்தினம், காத்தான்குடி, ஆரையம்பதி கிராமங்களைச் சேர்ந்த தமிழ் – முஸ்லீம் இனக்கலவரம் உச்சக்கட்டம் அடைந்திருந்த வேளையில் இரு சமூகங்களிடையேயும் இவர் சென்ற சமாதானத் தூதின் மூலம் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தங்களை தவிர்ப்பதற்காக செயற்பட்ட மாபெரும் மனிதர். இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்களுக்குத் தனிப்பட்ட முறையிலும், மேற்படி அமைப்புகள் மூலமும் இவர் பெரிதும் உதவினார். தமிழ், முஸ்லீம் இனங்களுக்கு அவர் செய்த அந்த உன்னத பணியை இன்றுவரை அந்த மக்கள் நினைவுகூருவதோடு இன்னும் நன்றியுடையவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். தற்பொழுதைய கிழக்கின் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் மிகவும் கேவலமாக தங்களின் அரசியல் இலாபத்திற்காகவும், விடுதலைப்புலிகள் கட்டிக்காத்த தேசிய ஒற்றுமையை அழிக்கும் நோக்கிற்காகவும் அந்த மாமனிதன் செய்த மாபெரும் தேசியப் பணியை ஒரு நொடியில் அழித்து விட்டிருக்கிறார்கள். எனவே மக்கள் இப்படியான இனத்துரோகிகளைக் இனம்கண்டு அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். "புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்" - ஆரையம்பதியில் இருந்து தமிழின் தோழன்.
  8. பெண்ணாக பிறந்து புலியாக மாறி புயலாக எழுந்து பல களம் கண்ட வீரத் தளபதி இவள். ஆனந்தபுரத்தில் மோட்டார் அணியின் பெண் போராளிகளை வழிநடத்தி களத்தில் காவியமானவள். அமுதா பயிற்சிமுகாம் முடிந்த கையோடு கனரக ஆயுதப்பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அங்கு 60mm மோட்டார் அணியில் ஒரு காப்பாளராக பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் போதே எனக்கு அறிமுகம். நிறத்த மெல்லிய நெடுத்த அவளது தோற்றம் கனரக ஆயுதத்திற்குப் பொருத்தமில்லாதவாறே பார்ப்பவர்கள் கணிப்பிடுவர்.முகத்தில் என்றும் அமைதி குடிகொள்ள யாரை கண்டாலும் ஒரு சிரிப்பே இவளது பதிலாக இருக்கும். கதைப்பது குறைவு ஆனால் பயிற்சி வேளையில் உருவத்திற்கு பொருத்தமில்லாதா சுமையை 60mm செல் பெட்டியை நிறைத்த மணலோடு தூக்கி கடின பயிற்சிகளை எல்லாம் இலாவகரமாகச் செய்து முடித்தாள். படிப்படியாக 60mm மோட்டார் சூட்டாளன், இரண்டு மோட்டார்களின் பொறுப்பாளர் என இவளுடைய பயிற்சி ஆசிரியர்களின் அரவணைப்பில் வளர்ந்தாள் எனலாம். மேஜர் சௌதினி,மேஜர் கோகிலா இவளுடைய பெரும் வழிகாட்டிகள். தொடர்ந்து 82mm மோட்டார் தொட்டு 120mm மோட்டார் வரை வைத்து இலகுவாகச் சண்டை செய்தவள். தனது ஒரு காலை இழந்த பின்பும் பல மோட்டார் அணிகளின் ஒருங்கிணைப்புப் பொறுப்பாளராய் சிறப்பாகச் செயல்ப்பட்டு ஆனந்தபுரத்தில் கேணல் அமுதாவாக விதையாகிப் போனாள்.
  9. எமது தமிழீழ போரியல் வரலாற்றில் எத்தனையோ வீரமறவர்களையும் கல்விமான்களையும் பிரசவித்த யாழ்ப்பாணத்தின் புன்னாலைக்கட்டுவன் எனும் கிராமத்தில் திரு.திருமதி திருநாவுக்கரசு தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனாக 14.04.1987 இல் ஞானகணேஷன் எனும் கரிகாலன் வந்துதித்தான்.மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன் என்று எல்லோருக்கும் கடைக்குட்டியாய் வீட்டில் மிகுந்த செல்லத்துடன் வளர்ந்து வந்தான்.அவனது தந்தையார் ஒரு வைத்தியராகக் கடமை புரிந்தார்.அத்துடன் ஒரு தமிழ் ஆர்வலராகவும் செயற்பட்டு வந்தார். தாயார் ஒரு ஆசிரியையாக இருந்த போதிலும் பிள்ளைகளை சிறந்த கல்விமான்களாகவும் பண்பாளர்களாகவும் சிறந்த முறையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கில் தனது ஆசிரியப் பணியைத் துறந்து பிள்ளைகளை வளர்த்து வந்தார்.பெற்றோரது சிறந்த ஊக்குவிப்பு,அர்ப்பணிப்பு போன்றன வீண் போகவில்லை.அவர்களது ஒரு புதல்வனும் இரு புதல்விகளும் வைத்தியர்களாகவும் மற்றைய புதல்வி வங்கித் துறையிலும் சீரான முறையில் கல்வி கற்று பல்கலைக்கழகம் சென்று சித்தியடைந்து பணிபுரிந்தார்கள்.அந்த வகையில் கடைக்குட்டியான ஞானகணேசனும் சிறு வயது முதல் கல்வியை யாழில் பிரபல்யம் பெற்ற பாடசாலைகளில் ஒன்றான யாழ்.பரியோவான் கல்லூரியில் (st.johns college) கல்வி பயின்று வந்தான். அவன் சிறு வயது முதல் படிப்புடன் விளையாட்டு,பேச்சுப்போட்டி,கவிதைப் போட்டிகள், பட்டிமன்றம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினான். பூப்பந்து(badminton), கூடைப்பந்து (basket ball),கைப்பந்து (volley ball) போன்ற விளையாட்டுக்களில் யாழ் மாவட்டத்தில் அனைத்துப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் தனது பாடசாலை சார்பாக விளையாடி சிறப்பாகச் செயற்பட்டு colors சிறப்பு விருது பெற்று அவனது பாடசாலைக்கு பெருமை பெற்றுக் கொடுத்தான்.மற்றும் பாடசாலை மாணவர் அணித் தலைவனாகவும் (prefect)சிறப்பாகச் செயற்பட்டான்.மேலும் சாரணர் இயக்கத்திலும்(scout) இணைந்து சிறந்த சாரணனாகவும் செயற்பட்டான்.அவன் படிப்பிலும் குறை வைக்கவில்லை.ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சையிலும் அதி திறமைச் சித்தி பெற்று சித்தியடைந்தான். மற்றும் க.பொ.த சாதாரண தரத்திலும் சிறந்த பெறுபேற்றைப் பெற்று க.பொ.த உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்றுக் கொண்டிருந்தான்.சட்டத்துறை சார்ந்து உயர் படிப்பு படிப்பதே அவனது கல்வி இலட்சியமாக இருந்தது. தமிழீழத்திற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டத்தின் உண்மைத் தன்மை,அவர்களது அர்ப்பணிப்பு,தியாகம்,ஒழுக்கமான வாழ்க்கை முறை என்பன ஞானகணேஷனுக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.அதனால் அதன்பால் ஈர்க்கப்பட்டு அவனும் 2005 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் எமது அமைப்பில் அரசியல்துறையினரிடம் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு வன்னிப் பெருநிலப் பரப்புக்கு வந்து அடிப்படைப் பயிற்சியை முடித்துக் கொண்டு கரிகாலன் எனும் நாமத்துடன் வரிப்புலியாகி அரசியல்துறைக்குச் செல்லப் பணிக்கப்பட்டான். ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு கல்வி,அறிவாற்றல் என்பன மிக முக்கியமானது.அந்த வகையில் எமது தேசியத் தலைவரும் எமது போராளிகள் கல்வி,அறிவாற்றல் என்பனவற்றில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஒப்புரவு கொண்டவர்.அவ்வாறே கரிகாலனும் 2005-2007 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழி கற்பதற்கும் கணனிக் கற்கை நெறி கற்பதற்கும் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களால் பணிக்கப்பட்டான்.அங்கே அவன் ஆயுத தளபாடங்கள் சம்பந்தமான பொறி முறை பற்றிய நூல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழ்மொழிக்கும் தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்த்தல் சம்பந்தமான கற்கை நெறிகளைப் பயின்றான்.இயல்பாகவே மனம், புலன்களை கட்டுப்படுத்தி எளிதில் புரிந்து கொள்ளும் கற்பூர புத்தி கொண்டவன் கரிகாலன்.அவனுக்கு அந்த கற்கை நெறி இலகுவாகவே இருந்தது.மிகவும் விசுவாசத்துடனும் ஈடுபாட்டுடனும் அவன் அந்தக் கற்கை நெறியை மேற்கொண்டான். அவனுக்கு கல்வி கற்பதிலும் பார்க்க சண்டைக் களங்களுக்கு செல்வதிலேயே மிகவும் ஆர்வம் இருந்தது.ஆனால் தனக்கிடப்பட்ட பணியை செவ்வனே மேற் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தனது கல்வி கற்கை நெறியை மேற்கொண்டான்.மேலும் அவன் கரும்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு தேசியத் தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியிருந்தான்.ஆனால் அவனது தேவை முக்கியமான வேறு பணிக்கு எமது அமைப்புக்குத் தேவைப்பட்டதால் அவனது பொறுப்பாளரினால் அவனை கரும்புலிகள் அணிக்குள் உள்வாங்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட முடியவில்லை.இது அவனுக்குப் பெரும் கவலையைக் கொடுத்தது. அவன் எமது போராட்டத்தில் இணைந்து மிகக் குறுகிய காலமென்றாலும் மிகுந்த நம்பிக்கைக்குரியவனாகவும் விசுவாசமானவனாகவும் ஓர் சிறந்த போராளிக்குரிய ஓர்மம் உடையவனாகவும் அவனது பொறுப்பாளரினால் இனங் காணப்பட்டான். அவனது முகாமில் புதிதாக இணைந்த போராளிகளுக்கு எமது போராட்டத்தின் உண்மை நிலையை எடுத்துரைத்து நல்வழிகாட்டுவதற்கு அவர்களது பொறுப்பாளர் கரிகாலனைத் தான் பரிந்துரை செய்வார்.அந்தளவுக்கு எமது போராட்டத்தின் உண்மைத் தன்மையை விளக்கி அவர்களது மனவுறுதியை நிலை நாட்டும் அளவுக்கு பேச்சுத் திறமையும் சக போராளிகளை அனுசரித்துப் போகும் பாங்கும் அவனுக்கு இருந்தது. பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அண்ணா கரிகாலனின் பொறுப்பாளரிடம் அவரின் கீழ் உள்ள போராளிகளில் ஒருவரை தனது தனிப்பட்ட காரியதரிசியாகத்(personal secretary) தரச் சொல்லிக் கேட்ட போது அவர் கரிகாலனைத் தான் பரிந்துரை செய்யும் அளவுக்கு அவனுக்குத் திறமையும் ஆளுமையும் தனது பணியில் முழுமையான ஈடுபாடும் அர்ப்பணிப்பும் கொண்டவனாக விளங்கினான்.(இது கரிகாலன் தொடர்பாக அவனது பொறுப்பாளருடன் நான் உரையாடிய போது கூறப்பட்டது). 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகப் போகுவதாக இலங்கை அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்து எம்மண்ணில் எமக்கு எதிரான தாக்குதலை வான்,கடல்,தரை என மும்முனைகளிலும் தீவிரப்படுத்தியது.இதனால் வெளி நிர்வாகப் பணியிலிருந்த பெருமளவான போராளிகள் களமுனைக்கு அனுப்பப்பட்டனர்.அந்த வகையில் கரிகாலனும் சண்டைக் களங்களுக்கு அனுப்பப்பட்டான்.ஏற்கனவே சண்டைக் களங்களுக்குச் செல்ல ஏங்கிக் கொண்டிருந்த கரிகாலனுக்கு இந்தச் செய்தி கரும்பாக இனித்தது. 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வீரச்சாவடையும் வரை சண்டைக் களங்களிலேயே சூறாவளியாக எதிரிகளைக் கலங்கடித்தான். 2008ஆம் ஆண்டு பங்குனி மாதம் மணலாற்றில் போர் முன்னரங்கப் பகுதியில் களப்பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது காலில் விழுப்புண்ணடைந்து மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டான்.பின்பு சிகிச்சையிலிருந்து மீண்டெழுந்து 2008ஆம் ஆண்டு சித்திரை மாதம் தொடக்கம் ஆனி மாதம் வரை படையறிவியற் கல்லாரியில் பயின்று பின்பு ராதா படையணியுடன் இணைந்து சிறப்புப் பயிற்சி பெற்று சண்டைக் களங்களுக்குச் சென்றான். 2008ஆம் ஆண்டு ஆனி மாதம் கரிகாலன் படையறிவியற் கல்லூரியில் தனது சிறப்புப் பயிற்சியை முடித்துக் கொண்டு இரணைமடுப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் களப்பணியாற்றிக் கொண்டிருந்த போது அவன் மிகவும் திறமையாகச் செயற்பட்ட சம்பவம் ஒன்று அவனது பொறுப்பாளரினால் எனக்கு நினைவு கூரப்பட்டது. இரணைமடுப் பகுதியில் எமது விமான ஓடு பாதைப் பகுதியில் இவன் உட்பட ஆறு பேர் கொண்ட அணி ஒன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது.அப்போது அங்கே வந்த இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியொன்று இவனது அணியைச் சுற்றி வளைத்துக் கொண்டது.அதன் போது ஏற்பட்ட நேரடி மோதலில் அவனது அணித் தலைவர் விழுப்புண்ணடைந்ததும் அணித் தலைவரின் தொலைத் தொடர்பு சாதனத்தை உபயோகித்து அவன் அணியைத் தலைமையேற்று திறம்பட வழிநடத்தி மிகவும் ஓர்மத்துடன் போரிட்டு இராணுவத்தினருக்கு கண்ணாமூச்சியாட்டம் காட்டி அவர்களுக்கு பேரிழப்பை உண்டாக்கி தனது அணியைப் பாதுகாப்பாகப் பின் நகர்த்தினான்.அன்று அவன் உட்பட ஆறு போராளிகளும் கரிகாலனின் தலைமையேற்று போரிடும் திறனாலும் சமயோசிதப் புத்தியினாலுமே காப்பாற்றப்பட்டனர். பின்பு விசுவமடு ரெட்பானா பகுதி,புதுக்குடியிருப்புப் பகுதி,இரணைப்பாலை,மாத்தளன் போன்ற எல்லா போர் முன்னரங்கப் பகுதிகளிலும் சிறப்பாகச் செயற்பட்டான்.இவ்வாறு இறுதி யுத்தத்தில் இவன் செல்லாத சண்டைக் களங்கள் இல்லை.எல்லாச் சண்டைக் களங்களிலும் திறமையாகச் செயற்பட்டு எதிரிகளைக் கலங்கடித்தான். எல்லாப் போராளிகளையும் போன்றே கரிகாலனும் வெளிப் பார்வைக்கு கடினமானவனாகத் தெரிந்தாலும் அவனது மனம் பூவிலும் மென்மையானது.இதற்கு உதாரணமாக அவனுடன் நின்ற ஒரு போராளி கூறிய ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகின்றேன். முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் பால்மா வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவிய காலத்தில் இரத்த தானம் செய்தால் இரத்த தானம் செய்த நபருக்கு போதிய ஊட்டச்சத்து தேவை என்ற படியால் பால்மா பக்கற் கொடுப்பார்கள் எனும் நடைமுறை நிலவியது.அவன் தனது முகாமுக்கு அருகில் இருந்த குடும்பம் ஒன்றில் இருந்த சிறு குழந்தையொன்று பால்மா இன்றி அழுவது கண்டு மனம் வருந்தி தான் இரத்த தானம் செய்து அதனால் கிடைத்த பால்மா பக்கற்றை அச் சிறு குழந்தைக்குக் கொடுத்தான்.சிறு குழந்தைகளைக் கண்டால் தானும் ஒரு சிறு குழந்தையாகவே மாறி விடுவான். இரண்டு தடவைகள் அவனது பெற்றோர் வந்து சந்தித்த போது எனது வீட்டில் தான் விடுமுறையில் வந்து தங்கியிருந்தான்.நானும் ஒரு போராளியாக இருந்தும் என்னை விட மிகவும் வயதில் இளையவனான அவனின் உறுதியையும் நெஞ்சுரத்தையும் கண்டு நான் மிகவும் வியந்திருக்கின்றேன்.இயக்கத்தில் இணைந்து சிறிது காலமேயென்றாலும் எமது போராட்டத்தின் உண்மைத் தன்மையை “அக்கு வேறு ஆணிவேறாக “அவன் அலசி ஆராய்ந்து புரிந்து வைத்திருந்தான்.எமது தேசியத் தலைவரில் மிகுந்த நம்பிக்கையும் விசுவாசமும் வைத்திருந்தான்.விடுமுறையில் வீட்டில் வந்து தங்கியிருந்த போதும் நேரத்தை வீணடிக்காமல் அங்கிருந்தும் எமது போராட்டம் சம்பந்தமான நூல்களை வாசித்துக் கொண்டேயிருப்பான். அவன் ஒரு போராளியாகிய தனது கடமையில் மட்டுமன்றி ஒரு உறவினனாக உடன் பிறவாச் சகோதரனாக தனது குடும்பக் கடமையிலிருந்தும் சிறிதும் வழுவவில்லை. இறுதி யுத்தத்தில் எனது கணவர் வீரச்சாவடைந்திருந்த வேளை அதனைக் கேள்விப்பட்டு அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தனது பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டு வந்து நான் இரு சிறு குழந்தைகளுடன் பரிதவித்து நின்ற வேளை ஒரு உடன் பிறவாத சகோதரனாக வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்து எங்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி விட்டுத்தான் சென்றான்.இறுதி யுத்த நேரத்தில் பெரும்பாலான போராளிகளை அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் விரும்பினால் பெற்றோர்,உறவினருடன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லுமாறு கூறப்பட்டது.நானும் கரிகாலனிடம் “அம்மா,அப்பா கவலைப்படுவினம் எங்களுடன் வாங்கோ”எனக் கேட்ட போது அவன் “என்ர முடிவில மாற்றம் இல்லை அக்கா நான் இறுதி வரை நின்று போராடப் போகிறேன்” என்றும் “நீங்கள் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் எப்படியாவது ஆமிக் கட்டுப்பாட்டுக்கை போயிடுங்கோ அக்கா” என்றான்.இறுதி வரை அவன் தன் கொள்கையிலேயும் முடிவினிலேயும் உறுதியாக இருந்தான். இறுதியில் 14.05.2009 சுனாமிக் குடியிருப்புப் பகுதி முள்ளிவாய்க்காலில் போர் முன்னரங்கப் பகுதியில் குறி பார்த்துச் சுடும் அணியில் (சினைப்பர் அணி) களப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் தன் கொள்கையில் இருந்து வழுவாது இறுதி வரை களமாடி தன்னுயிரீந்து ஈழ மண்ணை முத்தமிட்டான் எங்கள் கரிகாலன். அவனது பொறுப்பாளருடன் நான் அவன் தொடர்பாக உரையாடிய போது அவர் அவன் நினைவாக கவலையுடன் கூறியது “இயக்கம் அவன் திறமைகளை முழுமையாகப் பெற முதல் அவன் வீரச்சாவடைந்து விட்டான்” என்பது தான். “ஓ… வீரனே எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும்…நீ மடியவில்லையடா…. உன் கதை முடியவில்லையடா….காலமெல்லாம் புலிக் குகையில் நீ தங்கினாய் கண் மூடி இன்று படமாய் தொங்கினாய்….” – நிலாதமிழ்.
  10. அது 1995 காலப்பகுதி,வெள்ளை மேற்சட்டையும்(shirt) கறுப்பு நிற நீளக் காற்சட்டையும் அணிந்து தமக்கு இடப்பட்ட கணக்காய்வுப் பணியுடனும் வெளிவாரி வர்த்தகப் பட்டப் படிப்பை (first in commerce) படிக்கவென யாழ் நாவலர் வீதியூடாக தனது ஈருருளியில் செல்லும் ஒரு போராளியாக கலைமதி அக்காவைக் காணலாம்.எப்பொழுதும் எதற்கும் தயாராக இருப்பது போல் அவருடைய எறும்பு போன்ற சுறுசுறுப்பான ஆனால் அடக்கி வைத்திருக்கும் அமைதியான ஆளுமை முதிர்வு எல்லோர் மனதிலும் நிறைந்திருக்கிறது. கலைமதி அக்காவும் எல்லோரும் போலவே திரு,திருமதி ஜெகதீசன் தம்பதியினருக்கு மகளாக 28.06.1966 இல் ரேணுகாதேவி என்ற இயற் பெயருடன் அக்காமார் , அண்ணன்,தங்கை ,தம்பிகள் கொண்ட சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான்.தந்தை ஒரு புகைப்பட வல்லுனராக அந்தக் காலத்தில் பிரபல்யம் பெற்ற நிறுவனம் வைத்திருந்தார்.மற்றவர்கள் போலவே கல்வி,வாழ்க்கை என்று போனது.கணக்கியல் உயர் தேசிய கல்வி (HNDA)கூட முடித்திருந்தார்.பின்பு நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து கொண்டிருந்தார். காலத்தின் தேவை கருதி 1993 காலப் பகுதியில் தனது பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்,புரட்டாதி மாதம் தனது ஆரம்பப் பயிற்சியை மகளிர் பயிற்சிப் பாசறையில் 27ஆம் அணியில் “சுகி” முகாமில் மேற்கொண்டார்.பயிற்சியில் ஓடும் போது அவருடைய ஒரு கால் புரண்டு விட்டது.அப்படியிருந்தும் அடிப்படைப் பயிற்சியைத் தொடர்ந்து மேற் கொண்டதால் கால் முறிந்து விட்டது.அதனால் மிகுந்த சிரமப்பட்டதுடன் மிகுந்த மன வேதனையும் அடைந்தார். அதன் பின் 1994 பங்குனி மாதமளவில் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதிக்கு பணிக்கு அனுப்பப்பட்டார்.சிறிது காலம் சிகிச்சையில் அவர் இருந்தாலும் கணக்காய்வுப் பணியைத் தொடர்ந்தார்.அங்கு தான் அவருடைய ஆளுமை வெளிப்பாடு தெரிய வந்தது.அத்துடன் வெளிவாரி வர்த்தக பட்டப் படிப்பையும் ( first in commerce)அங்கிருந்தே தொடர்ந்தார். நிதித்துறை வழங்கல் பிரிவின் வாணிபங்களின் கணக்காய்வுப் பகுதிக்கு பணிக்கப்பட்டிருந்தார்.அவருடைய பணி நேர்த்தி அவர்களுடன் இருந்தவர்களுக்கு நன்கு தெரியும்.தானும் நேரத்தை வீணடிக்காமல் மற்றவர்களையும் வீணடிக்க விடாமல் வேலை செய்வது அவரின் திறமை.வழங்கல் பகுதியில் இரும்புத் தொழிலகம்,புடவை வாணிபம்,கோல்சர் வாணிபம்,தையல் தொழிலகம்,அடுக்கணி வாணிபம் என பல வாணிபங்களிலும் தனது கணக்காய்வுப் பணியை திறம்பட மேற்கொண்டார். 1995 ஐப்பசி மாத காலப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காக வான் தாக்குதல்கள்,எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.அங்கிருந்து சென்று சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் முகாமை ஒழுங்கமைத்து பணிகள் தொடர்ந்தன.மீண்டும் தரை வழியாகவும் கரையோரத் தாக்குதல்கள் மூலமும் பகுதி பகுதியாக இராணுவத்தினர் ஊர்களைக் கைப்பற்றிக் கொண்டிருந்தனர். 1996 பங்குனி மாத நடுப் பகுதியில் அங்கிருந்தும் இடம் பெயர்ந்து வன்னிப் பகுதிக்குச் சென்ற போதும் வாணிபங்களுக்கான கணக்காய்வுப் பணி ஒழுங்கு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்றது.ஆரம்பத்தில் கடினமானதாக இருந்தாலும் மனம் சோராமல் அவற்றையெல்லாம் எதிர் கொண்டு நீண்ட தூரம் சென்றும் வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்த போதும் பணிகள் சீராக்கப்பட்டன. அத் தருணத்தில் தான் இழந்த ஒன்றிற்காக இன்னொன்றைப் பெறுவதற்காக ஓயாத அலைகள்1 நடவடிக்கைக்காக மேலதிக தேவை கருதி நிதித்துறை மகளிர் அணியும் படையணிக்காகத் தெரிவு செய்யப்பட்டனர்.அதில் கலைமதி அக்காவும் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டார்.பயிற்சியின் போது உடைந்து பொருந்திய காலுடன் மிகவும் சிரமப்பட்டார்.ஆனால் ஒருநாளும் பயிற்சிக்குப் பின் நின்றதே இல்லை.குறிப்பிட்ட எண்ணிக்கை முழு வட்டமும் ஓடி முடித்தே ஆக வேண்டும்.அவரால் ஓட முடியாத நிலையில் நடந்தே மீதித் தூரத்தையும் முடிப்பார். இயலாவிட்டால் முகாமுக்குத் திரும்பச் சொன்னாலும் போக மாட்டேன் எனக் கூறி விட்டார்.தனக்குக் கிடைத்த சண்டைக்குச் செல்லும் சந்தர்ப்பத்தைத் தவறவிட அவர் விரும்பவில்லை.சாப்பாடு எடுக்கும் முறை அணிக்குழுவில் அவருக்கு வரும்போது அவர் கொஞ்சம் குள்ளமாக இருப்பதால் சாப்பாடு எடுக்கும் பெரிய சட்டியை(டாசர்) கீழே பிடித்துக் கொண்டு வர கொஞ்சம் சிரமமாக இருக்கும்.அதனால் சட்டியை(டாசர்)தலையில் சுமந்து கொண்டு தாண்டித் தாண்டி நடக்க வெளிக்கிட்டு விடுவார்.ஓயாத அலைகள் 1 வெற்றியடைய சத்ஜெய 1 நடவடிக்கையும் நடந்து முடிந்தது. மீண்டும் முகாம் திரும்பி தனது தொடர்ச்சியான பணியை மேற்கொண்டார்.சில வேளைகளில் நாங்கள் முகாமில் சமைத்தும் சாப்பிடுவதுண்டு.அப்போது அவர் முட்டைப் பொரியல் உண்டால் சவர்க்காரம் போட்டுக் கைகழுவ மாட்டார்.ஏனென்றால் கையில் அடிக்கடி அதை மணந்து பார்த்து மகிழலாம் என்பார்.அத்துடன் சமையற்கூடப் பகுதியில் சோறு கூட எடுத்து வரச் சொல்லிக் கூறுவார்.ஏனென்றால் அதில் நீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் வெங்காயம்,பச்சை மிளகாய்,உப்பு,தேசிப்புளி எல்லாம் விட்டு பழஞ் சோறு குழைத்துத் தருவதற்கு தான்.அவர் அவ்வாறு தரும் பழஞ்சோற்றின் சுவையோ தனிதான். அவரை முகாமில் ஒரு மூத்த அக்கா போல் கருதுவார்கள்.ஏனெனில் அறிவுரைகள் சொல்வதிலும் வழிகாட்டுவதிலும் சிறந்தவர்.சக போராளிகளாயினும் பணியாளர்களாயினும் யாரையும் இலகுவில் பகைத்துக் கொள்ள மாட்டார்.கண்டிப்பாகவும் சகசமாகவும் பழகக் கூடியவர்.எனவே அவருக்கென்று ஒரு தனி மரியாதை எல்லோரிடத்திலும் இருந்தது.நீண்ட காலமாக வழங்கல் பகுதி வாணிபங்களின் கணக்காய்வை அவர் திறம்பட செய்து வந்தார்.வழங்கல் பகுதிப் பொறுப்பாளராக அம்மா அண்ணை இருந்து வந்தார். இருப்பு எடுத்தல் தொடங்கி விட்டால் கலைமதி அக்காவை கேட்கவே தேவை இல்லை.”திருவெம்பாவை பாட வெளிக்கிட்டுட்டா” என எல்லோரும் கூறுவார்கள்.இரவில் பெற்றோல் மக்ஸ் விளக்கையும் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு கொட்டிலாக பார்ப்பதற்கு கிளம்பி விடுவார்.”இந்த மனிசியுடன் குடும்பம் நடத்த இயலாது”என இவருடன் பணி செய்பவர்கள் பகிடிக்கு கூறுவர்.இதனையும் ஒரு நாள் அவர் கேட்டு விட்டார்.ஆனால் கோபிக்காமல் சிரித்து சமாளித்து வேலை செய்விப்பார். வழங்கல் பகுதி புடவை வாணிபம் சுதந்திர புரத்தில் தான் இருந்தது.கணக்காய்வுப் பணி நிமித்தம் அங்குள்ள முகாமில் கலைமதி அக்கா மற்றைய போராளிகளுடன் தங்கியிருந்து வந்தார்.அதிகாலை புலர்ந்தது.அன்று புதுக்குடியிருப்புக்கு சென்று தனி நபர் வழங்கல் எடுக்கும் நாள்.தன்னுடன் துணையாக பணி செய்த போராளியை அங்கு செல்லத் தயாராகுமாறு கூறி விட்டு தேநீர் தயாரிக்க பால் காய்ச்சிக் கொண்டிருந்தார்.அந்தப் போராளி தயாராகி வந்து பார்த்த போது பாற் சட்டி கருகியிருந்தது.கலைமதி அக்கா அங்கு தான் நின்றவர்.ஆனால் அவருக்கு அது தெரியவில்லை. 1998 ஆனி மாதம் பத்தாம் நாள் அன்று தான் அந்தத் துயரமான சம்பவம் நடந்தது.திடீரென சிறிலங்கா இராணுவம் அப்பகுதி மீது வான்,தரை,கடலிலிருந்து ஒரே நேரத்தில் மும்முனைத் தாக்குதல் நடாத்தியது.அதில் பெருமளவு மக்கள்(33 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்), பல பணியாளர்கள் படுகாயமடைந்தும் பலர் கொல்லவும் பட்டனர்.யார் நினைத்தார் இப்படி நடக்கும் என்று? அச் சம்பவத்தில் எமது கலைமதி அக்காவும்(கப்டன் கலைமதி)அம்மா அண்ணாவும்(லெப்.கேணல் அன்பு/அம்மா)வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.” புடவை வாணிபம் இல்லா விடில் தான் இல்லை”எனக் கூறும் எங்கள் கலைமதி அக்கா என்றும் எம் தேச வரலாற்றில் நீங்காமல் நிறைந்திருப்பார். – விண்ணிலா.
  11. எமது தேசத்துக்கான விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாம் எத்தனையோ ஒப்பற்ற அர்ப்பணிப்புக்கள்,தியாகங்கள்,உயிர்க்கொடைகள் போன்றவற்றைக் கண்டு வந்திருக்கின்றோம்.அந்த வகையில் தமிழீழத் தாயின் வீரப் புதல்வியாகவும் எம் ஒப்பற்ற பெருந் தலைவனின் வீரத் தங்கையாகவும் வாழ்ந்திருந்தாள் லெப்ரினன்ட் மிருணா/முல்லையரசி அக்கா. ஈழத் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் செங்கோலோச்சிய அடங்காப்பற்று என்று அழைக்கப்படும் வன்னிப் பெரு நிலப்பரப்பிலே இயற்கை எழில் கொஞ்சும் வட்டக்கச்சி எனும் ஊரிலே திரு.திருமதி சேதுபதி மண இணையருக்கு ஆசைப் புதல்வியாக மதிவதனி 1974.03.09 இல் பிறந்தாள்.வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக வாழ்ந்த பண்டார வன்னிய மன்னன் ஆண்ட வன்னி வள நாட்டில் பிறந்ததால் மதிவதனிக்கும் வீரம் எனும் சொல்லானது இரத்தத்தில் ஊறியே காணப்பட்டது.அவள் வீரத்தில் மட்டுமல்ல கல்வியிலும் சிறந்து விளங்கினாள்.தனது சிறு வயது முதல் கல்வியை வட்டக்கச்சி மகா வித்தியாலத்தில் (வட்டக்கச்சி மத்திய கல்லூரி) பயின்று வந்தாள்.1990ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரத்தில் தோற்றி அதி திறமைச் சித்திகள் எடுத்து க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவை தெரிவு செய்து பயின்று 1993 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்தில் தோற்றி சிறப்பாகச் சித்தியடைந்து பின்னர் எமது தமிழீழ சட்ட நீதி மன்றத்தில் பணி புரிந்து வந்தாள். ஆற்றோரத்து அகதி முகாம்கள்,வயல் மேட்டின் புற்றுப் பிட்டிகள்,வீதியோரங்களென விரிந்திருக்கும் இடப் பெயர்வின் துயர வாழ்வினைக் கண்டு மதிவதனியும் “அன்னை நிலத்தினுக்காக வரிப்புலியாகி நடந்திடுவோம்…எம் ஆசையெல்லாம் தமிழீழம் அதற்கென அங்கு விதைந்திடுவோம்”என பொங்கி எழுந்து 1995ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் எமது போராட்டத்தின் உண்மையின் கடப்பாட்டினைப் புரிந்து கொண்டு தனது தார்மீகக் கடமையை நிறைவேற்ற எமது அமைப்பில் இணைந்து “லீமா 1” மகளிர் பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படைப் பயிற்சியினை நிறைவு செய்து கொண்டு மிருணா/முல்லையரசி எனும் நாமம் கொண்டு தமிழீழப் பெண் விடுதலைப் போராளியாகி 1996ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதி முகாமுக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் கண்காய்வுப் பணியுடன் அம்முகாம் போராளிகளுக்கான மருத்துவப் போராளியாகவும் செயற்பட்டார்.அவரின் மற்றைய போராளிகளைத் தாயைப் போல அரவணைக்கும் பாங்கு,பொறுமை,சகிப்புத் தன்மை என்பனவற்றை இனங் கண்டு கொண்ட நிதித்துறை மகளிர் பொறுப்பாளர் லெப்.கேணல் வரதா அக்காவால் அவரைஎமது பிரிவின் மருத்துவப் போராளியாக நியமிக்கும் பொருட்டு ஆறு மாதங்கள் மருத்துவக் கற்கை நெறிக்கு மருத்துவப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார்.அங்கு அவர் திறமையாகச் செயற்பட்டு மருத்துவ கற்கை நெறியை நிறைவு செய்து கொண்டு நிதித்துறை மகளிர் மருத்துவப் போராளியாக எமது முகாம் திரும்பி பணி மேற்கொண்டார். எமது முகாமின் “விளக்கேந்திய சீமாட்டியாக” புளோரன்ஸ் நைற்றிங்கேலாக( florence nightingale) எமது மிருணா அக்கா மிகச் சிறப்பாகச் செயற்பட்டார்.அவர் குள்ளமான ,கொஞ்சம் உருண்டையான,குண்டான தோற்றத்தினைக் கொண்டிருந்த படியால் எங்கள் எல்லோராலும் “பொக்கான்”எனச் செல்லமாக அழைக்கபட்டார்.இவரது அன்பு,பரிவு,தாய்மையுணர்வு,எந்த வேலையென்றாலும் முழுமையாக முடிக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் போன்றவற்றினை எடுத்துக் காட்டக் கூடியதான சில சம்பவங்களைக் கூறுகின்றேன். 1997-1998ஆம் ஆண்டு காலப் பகுதியில் எமது வன்னிப் பெரு நிலப்பரப்பில் மலேரியா நோயின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்பட்டது.எமது மருத்துவப் பிரிவினரின் மகத்தான சிறந்த தன்னலமற்ற செயற்பாட்டின் காரணத்தினால் வன்னியில் அதன் தாக்கம் மிகக் குறைவாகி இல்லாதொழிக்கப் பட்டது.அந்த வகையில் எமது முகாம் போராளிகளுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இவ்விரண்டு குளோரோக்குயின்(chloroquine) எனும் மலேரியாத் தடுப்பு மாத்திரை வழங்கப்படுவதுண்டு.இதனால் ஞாயிற்றுக் கிழமைகளில் எங்களது முகாம் அல்லோல கல்லோலப்படும்.எமது புளோரன்ஸ் நைற்றிங்கேலான மிருணா அக்கா இந்த மலேரியா தடுப்பு மாத்திரை வழங்கும் திருப்பணியை மிகவும் கடினங்களுக்கு மத்தியில் சிறப்பாக மேற்கொள்ளுவார்.சில போராளிகள் மாத்திரையின் கசப்புத் தன்மையின் காரணத்தினால் மாத்திரை உட்கொள்ளக் கள்ளத்திலே “தாங்கோ மிருணாக்கா பிறகு போடுறம்” என்று போட்டு அவர் அங்கால போனதும் தூக்கி எறிவதுண்டு.இதனை எப்படியோ மிருணா அக்கா கண்டு பிடித்து விடுவார்.பின்பு தானே முன்னின்று அவர்களைப் பேசாது திட்டாது அன்பாக “இஞ்சாருமப்பா இதை மட்டும் ஒருக்கா போடுமனப்பா…என்ர செல்லம் எல்லோ” எனக் கெஞ்சிக் கொஞ்சிக் கேட்டு அன்பாக எல்லோரையும் மாத்திரை உட்கொள்ள வைத்து விடுவார். நாட்டில் காணப்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணத்தினால் ஏற்பட்ட பொருளாதாரத் தடையினால் வெளி நிர்வாகப் பணிகளில் ஈடுபடும் போராளிகளுக்கு முட்டைப் பொரியல் போன்ற விசேட உணவுகள் உணவு வழங்கல் பகுதியினால் வழங்கப்படுவதில்லை.இதனால் நாங்கள் முட்டைப் பொரியல் மீதுள்ள பிரியத்தினால் பக்கத்து வீட்டுக் கோழிகளை சாப்பாடு போட்டு அரவணைத்து முட்டை எடுத்து வழங்கல் பகுதியினால் தலைக்கு வைக்கத் தருகின்ற எண்ணெயைக் கொண்டு முட்டை பொரித்து சாப்பிடுவதுண்டு.சில வேளைகளில் ஒரு முட்டை தான் கிடைக்கும்.அதனை மிருணா அக்கா வெகு சாமர்த்தியமாக நிறையத் தண்ணீர் விட்டு நுரை பொங்கப் பொங்க நன்றாக அடித்து எத்தனை பேர் நிற்கிறோமோ அதற்கு அளவாக(4பேர் நின்றால் ஒரு முட்டையை நான்கு வட்டமாக)திறமையாக எல்லோருக்கும் பொரித்துக் கொடுப்பார். நாங்கள் வெளி நிர்வாகப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் போராளிகள் எல்லோரும் எப்போதும் சோர்வடையாமல் களத்திற்குச் செல்வதற்குத் தயாரான நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக எமது கணக்காய்வுப் பணிகளை மேற் கொள்வதற்கு முதல் அதிகாலையில் எழுந்து சத்தியப் பிரமாணம் முடித்து விட்டு உடற்பயிற்சிகள் செய்து முகாமுக்கு வெளியே வீதி வழியாக ஓட்டப் பயிற்சியை மேற்கொள்வதுண்டு. எமது முகாம் சனக்குடியிருப்புப் பகுதிகளில் இருந்த படியால் நாம் ஓட்டப் பயிற்சியினை மேற்கொள்ளும் போது அடிக்கடி தெரு நாய்களின் தொல்லைகளைச் சந்திப்பதுண்டு.இதன் காரணத்தினால் ஒவ்வொரு நாளும் நாம் ஓட்டப் பயிற்சியினை மேற்கொள்ளும் போது மிருணா அக்கா கையில் ஒரு கொட்டான் தடியுடன் காட்சியளிப்பார்.அவர் கட்டையான உருண்டையான உருவத்துடன் கையில் கொட்டான் தடியுடன் நாய்களைத் துரத்திய படி ஓடுவதைப் பார்க்க எங்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.சில போராளிகள் ஓடுவதற்கு கள்ளத்தில பம்மாத்து அடித்துக் கொண்டு முகாமுக்கு அருகில் இருக்கும் மரத்தடியில் குந்தியிருந்து விட்டு ஓடிக் களைத்து வியர்வை சிந்திய மாதிரி தோற்றமளிப்பதற்காக அருகில் இருக்கும் குழாய்க் கிணற்றில் தண்ணீர் எடுத்து தெளித்து விட்டு ஓடிக் களைத்து வியர்வை சிந்திய ஆக்கள் மாதிரி மற்றைய ஆக்கள் ஓடி முடித்து வரும் போது அவர்களுடன் சேர்ந்து வருவதுண்டு.ஆனால் மிருணா அக்கா பம்மாத்து அடிக்காமல் அந்த ஓட்டப் பயிற்சியை” மூச்சு வாங்க மூச்சு வாங்க”முழுமையாக ஓடி முடிப்பார். அவர் மருத்துவப் பணியோடு மட்டுமல்லாது கணக்காய்வுப் பணியிலும் திறம்படச் செயற்பட்டார்.எமது நிதித்துறை வாணிபங்களான சோழன் வாணிபம்,நகை வாணிபம்,பெருந்தோட்டப் பகுதி மற்றும் அது சார்ந்த வாணிபங்களிலும் தனது கணக்காய்வுப் பணியை மிகவும் ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் ஆளுமையுடனும் மேற் கொண்டார்.அவர் ஒரு பணியை முடிக்க வேண்டும் என்றால் இரவு,பகல் பாராது கண் விழித்து செயற்பட்டு முடிப்பார்.பணியிடங்களிலே பணியாளர்களுடன் மிகவும் அன்னியோன்னியமாகவும் தேவைப் படும் போது மிகவும் கண்டிப்புடனும் ஆளுமையுடன் செயற்படுவார். வெளி நிர்வாகப் பணிகளில் ஈடுபடும் போது மக்களுக்கும் போராளிகளுக்கும் இடையிலான உறவானது மிகவும் சுமுகமாகவே காணப்பட்டது.எமது மக்கள் போராளிகளை சாதி மத பேதங்களைக் கடந்து தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாகவே கருதினார்கள்.வீட்டில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை நிறைவு செய்வதற்காகவும் எமது கட்டுக்கோப்பான நிர்வாகக் கட்டமைப்பின் மீதுள்ள நம்பிக்கையினாலும் நாட்டின் முன்னேற்றத்துக்கு தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற அவாவினாலும் அவர்கள் எமது நிறுவனங்களில் பணிபுரிவதுண்டு.அந்தக் கஷ்டமான சூழ்நிலையிலும் பணியாளர் தாம் கொண்டு வரும் சிறிய சாப்பாட்டுப் பெட்டி உணவினை அன்புடன் எமக்குப் பகிர்ந்தளிப்பதுண்டு.சில வேளைகளில் “பாவம் போராளிகள் அவர்களுக்கு முகாமில் நல்ல ருசியான உணவு கிடைக்காது” என்று நினைத்து தங்கள் உணவினை எமக்களித்து விட்டு தாம் பட்டினி இருப்பதும் உண்டு. அந்த வகையில் மிருணா அக்காவுக்கும் பணியாளர்களுக்குமான உறவானது பணி தவிர்ந்த மற்றைய வேளைகளிலே ஒரு குடும்ப உறவு போலவே காணப்பட்டது.அவர்கள் தங்கள் சொந்த குடும்ப பிரச்சனைகளைக் கூட அவரிடம் சொல்லி தீர்வு கேட்பதுண்டு.மிருணா அக்கா எமது போராட்டத்தில் இணைவதற்கு முன்பு எமது தமிழீழ சட்ட நீதி மன்றில் பணிபுரிந்த காரணத்தினாலேயோ என்னவோ பணியாளர்களுக்கு அவர் நல்ல தீர்வுகளைக் கூறி அவர்களது குடும்பங்களைச் சேர்த்து வைப்பார். எமது போராட்டத்தில் இணைந்த காலத்தில் இருந்து மிருணா அக்காவுக்கும் எல்லாப் போராளிகளைப் போலவே சண்டைக் களங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை நீறு பூத்த நெருப்பாக ஆழ் மனதில் இருந்து வந்தது.1999ஆம் ஆண்டு போர் முன்னரங்கப் பகுதிகளில் ஏற்பட்ட ஆளணிப் பற்றாக்குறை காரணமாக நிதித்துறை மகளிர் அணியைச் சேர்ந்த சில பேர் களப்பணிக்கு தெரிவு செய்யப்பட்டனர்.அவர்களில் ஒருவராக மிருணா அக்காவும் தெரிவு செய்யப்பட்டார்.அது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.அவர் மிகவும் மகிழ்வுடனும் ஈடுபாட்டுடனும் களப்பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டு நெடுங்கேணிப் பகுதியில் போர் முன்னரங்கப் பகுதியில் சோதியா படையணியுடன் இணைந்து களப்பணிகளில் ஈடுபட்டு ஆறு மாதங்கள் மிகத் திறமையாகச் செயற்பட்டு முகாமுக்குத் திரும்பினார். பின்பு 2000ஆம் ஆண்டு ஓயாத அலைகள் 4 வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்காக போராளிகளின் ஆளணிப் பற்றாக்குறை காரணத்தினால் எமது பிரிவில் இருந்து பல பேர் மாலதி படையணியுடன் இணைந்து களப்பணிக்குச் செல்லத் தெரிவு செய்யப்பட்டோம்.அதிலும் ஒருவராக மிருணா அக்கா தெரிவு செய்யப்பட்டார். நாம் அனைவரும் சுண்டிக்குளம் பகுதியில் இரண்டு மாதங்கள் கடுமையான போர்ப் பயிற்சியில் ஈடுபட்டோம்.அப்போது அங்கு சூட்டுப் பயிற்சியின் போது மிருணா அக்கா மிகச் சிறப்பாகச் செயற்பட்டு நல்ல மதிப்பெண்கள்(score) சிறந்த சூட்டாளராகத் தெரிவு செய்யப்பட்டு ஆர்.பி.ஜி(R P G)கன ரக ஆயுதப் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.அக் கன ரக ஆயுதப் பயிற்சியிலும் சிறப்பாகச் செயற்பட்டு சிறந்த சூட்டாளராகத்(gunner) தெரிவு செய்யப்பட்டார். கள அனுபவம் அதிகமில்லாத வெளி நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு வந்த மிகவும் குள்ளமான தோற்றமுடைய ஒரு போராளி தன்னை விட அதிக எடை கூடிய ஆர்.பி.ஜி கன ரக ஆயுதத்தைத் தூக்கி பயிற்சி எடுத்து மிகக் குறுகிய காலத்தில் பயிற்சியை முடித்து ஆர்.பி.ஜி கன ரக ஆயுதத்தின் சிறந்த சூட்டாளராகத் தெரிவு செய்யப்பட்டது மிருணா அக்காவின் விடாமுயற்சியையும் தன்னம்பிகையையும் எடுத்துக் காட்டி அது அவருக்கு கிடைத்த அதிசயிக்கத்தக்க வெற்றி வாய்ப்பாகவே கருதக் கூடியதாக இருந்தது.இதனை மிருணா அக்கா மிகவும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். பின்பு நாகர் கோவில் பகுதியில் ஒரு வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்காக மிருணா அக்காவின் ஆர்.பி.ஜி அணி தெரிவு செய்யப்பட்டது.ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் அது மேற்கொள்ளப்படவில்லை.அது மிருணா அக்காவுக்கு மிகுந்த கவலையை அளித்தது.பின்பு அவர் எழுதுமட்டுவாள் பகுதி,பளை,முகமாலை கண்டல் பகுதி போன்ற போர் முன்னரங்கப் பகுதிகளில் களப்பணிகளில் திறமையாகச் செயற்பட்டார். போர் முன்னரங்கப் பகுதிகளில் களப்பணி புரியும் போது மற்றைய போராளிகளுக்கு அவர் கலகலப்பையூட்டி உற்சாகமாக இருக்குமாறு ஒரு தாயைப்போல அக்கறையுடன் பார்த்துக் கொள்ளுவார்.அங்கே தன்னுடன் இருக்கும் போராளிகளுக்கு, முதல் நாள் இரவு உணவுக்கு வரும் புட்டானது சில வேளைகளில் மேலதிகமாக எஞ்சி இருப்பதுண்டு. அதனால் அது வீணாகப் போகப்படாது என்ற எண்ணத்தில் அதை மிருணா அக்கா அடுத்த நாள் வெயிலில் காய வைத்து சற்றுத் தொலைவில் இருக்கும் இராணுவத்தினருக்குத் தெரியாதவாறு பாதுகாப்பாக பனை மறைவில் நெருப்பை மூட்டி வறுத்து சீனி போட்டு சுவையான சிற்றுண்டியாகத் தயாரித்து வெறுந் தேநீருடன் உண்ணுவதற்குக் கொடுப்பார்.சிற்றுண்டிகள் அரிதாகக் கிடைக்கும் அந்தக் காலப்பகுதியில் எமக்கு அது தேவாமிர்தமாக இருக்கும்.”எந்த அசாதாரண சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அதற்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொண்டு மற்றவர்களையும் உற்சாகப்படுத்திக் கொண்டு தன்னலமற்ற வாழ்வு வாழ்வது” ஒரு சிறந்த போராளிக்கான அடையாளம் ஆகும்.அது மிருணா அக்காவிடம் முழுமையாகக் காணப்பட்டது. பின்பு கிளாலிக் கடற்கரையோரப் பகுதியில் மிருணா அக்காவின் ஆர.பி.ஜி அணியும் வேறு சில பெண் போராளிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எமது பெண் போராளிகளின் காவலரணை நோக்கி இராணுவத்தினரின் காலாட்படை அணியொன்று யுத்த டாங்கி(tank)சகிதம் முன்னேறி வந்து கொண்டிருந்தது.அதன் போது மிருணா அக்காவும் அவரது உதவியாளரும் ஆர.பி.ஜியுடன் மூவிங் பங்கரூடாகச் சென்று தாக்கி அந்த யுத்த டாங்கியை முன்னோக்கி நகர விடாமல் திறமையாகச் செயற்பட்டு இராணுவத்தினருக்கு பேரிழப்பினை ஏற்படுத்தி வெற்றிகரமாக இராணுவத்தினரின் காலாட்படை அணியினை பின்னோக்கி நகரச் செய்தனர்.இதன் போது ஏற்பட்ட நேரடி மோதலில் மிருணா அக்காவின் உதவியாளராக இருந்த போராளி இரண்டு கைகளிலேயும் பாரிய விழுப் புண்ணடைந்து மருத்துவச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இதன் பிறகு மிருணா அக்கா மட்டுமே தனியே தனது ஆர்.பி.ஜியைத் திறமையாகக் கையாண்டார்.பின்பு எமது பெண் போராளிகள் தமது காவலரணை முன்னோக்கி நகர்த்திச் செல்லும் போது இராணுவத்துடருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் மிருணா அக்கா தனது ஆர்.பி.ஜியைத் தனியாகக் கையாண்டு மிகவும் உத்வேகத்துடனும் மனோலிமையுடனும் போரிட்டு 05.10.2000 அன்று இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதலால் லெப்ரினன்ட் மிருணா/முல்லையரசியாக ஈழ மண்ணை முத்தமிட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டாள். “ஆயிரம் ஆயிரம் வீரர்களை விதைத்தோம் கல்லறை வரிசைகள் நீண்டனவே….அந்த வரிசையில் சுடர்கள் ஏற்றிடும் போது நெஞ்சினில் நெருப்பது மூழ்கிறதே….” – நிலாதமிழ்.
  12. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கப்டன் கீர்த்திகா என்ற பெயரை அறியாத போராளி கள் அனேகமாக இருக்க மாட்டாரகள். அதுவும் வன்னிக் கிழக்கில் பணியில் இருந்தவர்கள் அறியாமல் இருப்பதற்கு வாய்ப்புக்கள் குறைவு. ஏனெனில் தமிழீழ மருத்துவப்பிரிவி ன் மிக முக்கிய இராணுவ மருத்துவமனை களில் ஒன்று கப்டன் கீர்த்திகா நினைவு இராணுவ மருத்துவமனை. புதுக்குடியிருப்புப் பகுதியில், வீதியில் இருந்து அதிக தூரம் இல்லாது இருப்பினும், வான வெளி தாண்டி வரும் சூரியக்கதிர்கள் நிலத்தைத் தொடமுடியாதபடி முற்றுமுழுதாக உருமறைக்கப்பட்ட நிலையில் அந்த மருத்து வமனை சாதாரணமாக இயங்கிக் கொண்டி ருக்கும். தமிழீழத்தின் முக்கியமான மூத்த மருத்துவர்களான மருத்துவக்கலாநிதி எழு மதி கரிகாலன், மருத்துவக்கலாநிதி சூரிய குமார், மருத்துவக்கலாநிதி ராஜா மற்றும் மருத்துவக்கலாநிதி சிவபாலன் ஆகியோரு டன் தமிழீழ மருத்துவக் கல்லூரியின் மருத்து வப் பட்டப்படிப்பை முடித்த மருத்துவர்களும், உதவி மருத்துவக் கற்கைகளை முடித்த மருத்துவப் போராளிகளும், தமிழீழத் தாதியப் பயிற்சிக் கல்லூரியில் தாதியப் பயிற்சி முடித்த தாதிய போராளிகளும் ஒருங்கிணை ந்த பணிச்செயற்பாட்டில் அம்மருத்துவமனை தன் பணியை சிறப்பாகவே செய்து கொண்டிருந்தது. சாதாரணமாகப் போராளிகளுக்கு ஏற்படும் காய்ச்சல் அல்லது விழி சிகிச்சைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனை தொடர்ந்த காலங்களில் அவை மட்டுமல்லா து, சண்டைக்களங்களில் விழுப்புண் ஏற்று வரும் போராளிகளுக்கான சத்திரசிகிச்சை கள் ஏனைய உடலியல் நோய்களுக்கான சிகிச்சைகளையும், போராளி / மாவீரர்கள் சார்ந்த குடும்பங்களுக்கான மருத்துவ சிகிச் சைகளையும் கீர்த்திகா மருத்துவமனை செய்யத் தொடங்கியது. வன்னிக் கிழக்கின் அதாவது A9 வீதியின் கிழக்குப் பக்கமாக இருந்த அனேகமான களமுனைகளின் மருத்துவக் காப்பீட்டு இடமாக கீர்த்திகா இராணுவ மருத்துவமனையே பின் நாட்களில் செயற்பட்டு வந்தது. சரி. கீர்த்திகா மருத்துவ மனையின் உருவாக்கத்தின் போது இந்த பெயர் பெற்றதற்கான காரணம் என்ன? யார் இந்த கீர்த்திகா? எதற்காக கீர்த்திகாவின் நினைவோடு இந்த மருத்துவமனை நிமிர்ந்து நின்றது? என்ற வினாக்கள் எமக்குள் நிச்சயமாக எழுவது சாதாரணமானதல்ல. இதற்கான பதிலைப் பார்க்க முன் எமது விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ அரசிடம் ஒரு வழமை இருந்ததைப் பற்றி கொஞ்சம் பார்க்க வேண்டும். அது மணலாற்றுக் காட்டில் இந்திய இராணுவத்தை எதிர்த்துக் களமாடிய காலத்தில் இருந்து பின்பற்றப்பட்ட ஒரு செயற்பாடு. துறைசார்ந்த முகாம்களின் குறியீட்டுப் பெயர்கள் , படையணிகளின் பெயர்கள், வெடிபொருட்களின் பெயர்கள் தொடக்கம் வீதிகளின் பெயர்கள் மருத்துவமுகாம்கள், என அனைத்தும் விடுதலைக்காக விதையாக வீழ்ந்த மாவீரர்களின் பெயர்களையே தாங்கி நிமிர்ந்து நின்றன. இதன் அடிப்படையே அபயன், திவாகர், நீலன், கீர்த்திகா, கஜேந்தி ரன், சிந்தனைச்செல்வன், எஸ்தர், யாழ்வேல், பசுமை என இராணுவ மருத்துவமனைகள் தமிழீழம் எங்கும் பணியாற்றிக் கொண்டிருந் தன. அவ்வாறாகத் தான் மருத்துவத் துறை சார்ந்த போராளியான கீர்த்திகாவின் பெய ரையும் தாங்கி நிமிர்ந்து நின்றது கப்டன் கீர்த்திகா நினைவு மருத்துவமனை. மருத்துவக் கலாநிதி திருமதி. எழுமதி கரிகாலன் அவர்களின் உதவி மருத்துவராக நீண்ட காலமாக பணியாற்றி பின் சிறுத்தைப் படையணியின் பிரதான மருத்துவநிலை யின் மருத்துவராக பணியாற்றிய போது வீரச்சாவடைந்த கீர்த்திகாவின் பெயரே இந்த இராணுவ மருத்துவமனையின் பெயராக நிமிர்ந்து நின்றது. சாதாரணமாக ஒரு மூத்த மருத்துவரின் கீழ் உதவிமருத்துவராக பணியாற்றிட முடியாது. அதுவும் மருத்துவத்துறையின் ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் மிக கடுமையான செயற் பாடு அது. சில வேளைகளில் சண்டை க் களங்களில் இருந்து ஒரே நேரத்தில் வரும் பல காயங்கள் அனைத்தையும் பிரதான மருத்துவர் தனித்து சிகிச்சை தர முடியாத சூழல் ஏற்படும் நேரங்களில், அவர்களுக்கான சிகிச்சைகளை பிரதான மருத்துவரின் உதவி மருத்துவர்களே செய்ய வேண்டிய சூழல் உருவாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் மருத்துவக்கலாநிதி எழுமதிக்கு பக்கபலமாக நின்ற உதவி மருத்துவர்களில் துடிப்பும் , நிதானமும், வேகமும், விவேகமும் கொண்டு டொக்டர் அன்ரியின் கண்ணசை வின் கட்டளைகளை கூட உள்வாங்கி, புரிந்து கொண்டு ஒவ்வொரு செயற்பாட்டையும் செய்யும் திறன் கொண்ட போராளியாக கீர்த்திகா இருந்தார். இவர் யார்? இயக்கத்தில் இவரது வகிபங்கு என்ன? இப்பத்தி அதைப் பற்றியே நீளப் போகிறது. 24.02.1976 இல் வன்னிமண்ணின் விவசா யம் செழிக்கும் கிராமமான மாமடு கிராமத்தி ல் விவசாயிகளான திரு / திருமதி கணபதிப் பிள்ளை குடும்பத்தில் நான்காவது பிள்ளை யாக வந்துதித்தவர் தான் யுகிதாவதி என்ற இயற்பெயரைக் கொண்ட கீர்த்திகா. இரண்டு மூத்த சகோதரிகளையும், ஒரு சகோதரனை யும் ஒரு தங்கையையும் உடன் பிறப்புக்களாக கொண்டு தமிழை நேசித்து தமிழோடு வளர்ந்து வந்தாள் யுகிதாவதி.தனது ஆரம்பக் கல்வியை, வ/ பெரியமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் கற்று முடித்த நிலை யில், வ/ நெடுங்கேணி மகா வித்தியாலயம் அவளது இடைநிலைக் கல்விக்காக அவளை உள்வாங்கிக் கொண்டது. அக் காலத்தில் தான் யுகிதாவதி முழுவதுமாக புடம் போடப் பட்டாள். கணித பாடத்தில் உயர் புள்ளிகளை ப் பெற்று ஆசிரியர்களிடம் உயர் மதிப்பை பெற்ற அதே நேரம், ஏனைய பாடங்களிலும் சளைக்காதவளாக நிமிர்ந்து நின்றாள். மேடைப் பேச்சிலும் தன் வல்லமையைக் காட்டும் அவள் மேடை நாடகங்களில் பாத்திர மேற்று நடித்து தனக்கென நல்ல ரசிகர்களை யும் உருவாக்கி இருந்தாள்.சிறு வயதிலேயே இவ்வாறான சிறப்புக்களைக் கொண்ட யுகி தாவதி இந்த இடைநிலைக் கல்விக் காலத்தி ல், தன்னை தமிழீழத்துக்கான விடுதலை வேங்கையாக புடம்போடத் தொடங்கியது பெற்றவர்கள் அறியாத செயற்பாடு. சிங்கள தேசம் எம் மண்ணின் மீது வலிந்து திணித்த யுத்தம் அவளது மனதிற்குள் தன் தேசம் மீதான சிந்தனைகளை வலிந்து திணித்தன. எறிகணை வீச்சுக்களும், விமானத் தாக்குத ல்களும், மரண ஓலங்களும், இடப்பெயர்வுக ளும் அவளின் மனதில் ஆழமான விடுதலை உணர்வைத் தூண்டி விட்டன. தமிழீழ மாணவர் அமைப்பின் உறுப்பு மாணவி யாக தன்னை இணைத்துக் கொண் டு தமிழீழத்துக்கான பணிகளைச் செய்து கொண்டிருந்த காலத்தில் தன்னை முழுமை யான விடுதலைப் போராளியாக இணைத்து க் கொண்டாள். மகளிர் பயிற்சி பாசறை அணி 18 அவளது அடிப்படைப் பயிற்சிப் பள்ளியாகியது. 1991 ஆண்டு அப் பள்ளி அவளைக் கீர்த்திகா என்ற புதுப் பெயரைச் சூட்டி தமிழீழ விடுதலைப்புலி ஆக்கியது. அங்கிருந்து முழுமையான போராளியாக புடம் போடப்பட்டு வளர்க்கப்பட்டாள். அடிப் படை அரசியல், ஆயுத, தொழில்நுட்ப, தொலைத் தொடர்பு, மருத்துவப்பயிற்சிகள் என அனைத்தையும் சிறப்பாக செய்திருந்த அப் போராளிகளின் பயிற்சி நிறைவின் போது அவர்களின் தகுதிகாண் அடிப்படையி ல் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் புதிய போராளி கள் உள்வாங்கப்பட்டார்கள். அப்போது கீர்த்தி கா தமிழீழ மருத்துவப் பிரிவுக்குள் உள்வாங் கப் படுகிறாள். மருத்துவப்பிரிவில் மருத்துவப் போராளிகள் பலர் பணியில் இருந்தாலும், களங்கள் தமிழீழத் தாயகம் முழுக்க விரிந்ததாலும், போராளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக் காரணமாகவும் மருத்துவப் பிரிவின் ஆளணி வளமும் மேம்படுத்தப்பட வேண்டிய தேவை எழுந்ததாலும் மருத்துவப் போராளிகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள், அடிப்படைக் கள மருத்துவ பயிற்சிகளை முடித்துக் கொண்டு மருத்துவப் பணிகளுக்காக ஒவ்வொரு மாவ ட்டங்களுக்கும் அனுப்பப்பட்டார்கள். அவ்வாறு மருத்துவப் பணிக்காக போராளி கள் உள்வாங்கப்பட்டுக் கொண்டிருந்த நேரம் மருத்துவப் போராளிகளுக்கான கள மருத்து வக் கற்கைப் பாடத்திட்டத்தைப் படித்து முடித் து பூரணமான ஒரு அடிப்படை கள மருத்துவப் போராளியாக உருவாக்கப்பட்டிருந்தாள் கீர்த்திகா. கீர்த்திகாவின் கற்றல் திறமையானது. மூத்த மருத்துவரான Dr. எழுமதி கரிகாலனுக்கு, அவளை தனித்துவமாக அடையாளம் காட்டி இருந்தது. அவரால் கற்பிக்கப்பட்டு, வளர்க்கப் பட்ட போராளிகளுக்குள் அவளின் நிதானமு ம் கற்றல் செயற்பாட்டில் காட்டிய அதீத திறனு ம், எதையும் பொறுப்பெடுத்து தளராது செய் து முடிக்கும் செயற்பாடும் Dr. எழுமதிக்கு கீர்த்திகா மீது தனித்துவமான குறியீட்டைக் காட்டி நின்றது. அன்றிலிருந்து அவரின் உதவி மருத்துவப் போராளியாக பணியேற்று க் கொள்கிறாள் கீர்த்திகா. மூத்த மருத்துவரி ன் வழிகாட்டலில் அனுபவம் மிக்க மருத்துவப் பணியில் ஈடுபட்டுப் புடம் போடப்பட்ட கீர்த்தி கா, தமிழீழ விடுதலைப் புலிகளின் களங்கள் எங்கெல்லாம் விரிந்தனவோ, எங்கெல்லாம் திருமதி எழுமதியின் மருத்துவமுகாம்கள் நிமிர்ந்து நின்றனவோ அங்கெல்லாம் பணியாற்றிக் கொண்டே இருந்தாள். அன்றைய நாட்களில், யாழ்ப்பாணம் முதல் மணலாறு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் என்று வடதமிழீழம் எங்கும் விரிந்த பெரும் களங்களில் பின்தள/ பிரதான மருத்துவ நிலையின் வைத்தியராக Dr. எழுமதி அவர் களே பெரும்பாலும் செயற்பட்டார். 1990ல் மாங்குளம், கொக்காவில் தொடங்கி, 1991ல் மன்னார் சிலாவத்துறை, காரைநகர், ஆகாய க் கடல்வெளி வலிந்து தாக்குதல், 1993ல் பூனகரி என விரிந்த இயக்கத்தின் களங்களி லும், எதிரி தானே வலிந்து முன்னெடுத்த பல இராணுவ நடவடிக்கைகளின் போதும் Dr. எழுமதி அவர்கள் பிரதான மருத்துவ நிலைக ளில் நின்று சிகிச்சை வழங்கினார். இவ்வாறு Dr. எழுமதி செல்லும் களங்களுக்கு தானும் செல்லும் சந்தர்ப்பம் அன்ரியின் உதவியாளராக வந்ததன் மூலம் 1992 முற் பகுதியிலிருந்து கீர்த்திகாவுக்கும் கிடைக்கத் தொடங்கின. இவை அவருக்கு சிறந்த கள அனுபவத்தை வழங்கின. தனது சுறுசுறுப்பு, உற்சாகம், துடிப்பான பணி, பதட்டமின்றி நிதானமாக செயற்படும் இயல்பு, வேலைக ளில் காண்பிக்கும் வேகம் மற்றும் நேர்த்தி என்பவற்றின் மூலம் இதுபோன்ற களமுனை களிலும் தன் ஆற்றல்களை வெளிப் படுத்தி னார். 1992 முற்பகுதியில் முல்லைத்தீவு முகாமிலி ருந்து 5 ஆம் கட்டை ஊடாக குமுழமுனையை க் கைப்பற்ற எதிரி மேற்கொண்ட ஒரு இராணுவ நடவடிக்கையின் போதும், அதே ஆண்டு நடுப்பகுதியில் ஆனையிறவிலிரு ந்து “பலவேகய – 2″ என்ற பெயரில் இயக்கச் சி சந்திவரை எதிரி மேற்கொண்ட ஒரு இராணுவ நடவடிக்கையின் போதும், பிரதான மருத்துவ நிலையத்தில் கீர்த்திகா இணைந்து பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்ததன் மூலம் அவரது ஆற்றல்களை அனைவராலும் புரிந்து கொள்ள முடிந்தது. இதுபோன்ற கள அனுபவ ங்கள், தனித்து பெரும் அணிகளின் மருத்துவ தேவைகளை தாங்கும் ஆற்றலை, ஆளுமை யை இவர் கொண்டுள்ளார் என்ற நம்பிக்கை யைப் பொறுப்பாளர்களிற்கு ஏற்படுத்தின. சிறுத்தைப் படையணியின் பிரதான மருத்துவ முகாமுக்கு பணியாற்ற வேண்டிய நிலை வந்த போது, படையணியின் பிரதான மருத்துவமுகாம் பொறுப்பு நிலை மருத்துவப் போராளியாக பணியாற்றத் தகுதி இவருக்கு இருந்ததை அடையாளம் கண்டார்கள். அந்த நிலையில் கீர்த்திகா அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பணியாற்றத் தொடங்குகி றார். சிறுத்தைப் படையணியின் மகளிர் பிரிவு, கண்ட களங்கள் கொஞ்சமல்ல. அங்கே பணியேற்ற நாளில் இருந்து சிறுத்தைப் படையணியின் ஒவ்வொரு களநடவடிக்கை களுக்கும் முதுகெலும்பாக உழைத்த முக்கிய போராளி கீர்த்திகா. ஒரு சண்டைக்கு ஆயுத வளங்கல் எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ, அவ்வளவு முக்கியம் வாய்ந்தது மருத்துவ வளங்கல். சண்டையணிப் போராளிகளின் உளவுரண் உடையாது காக்கும் ஒரு முக்கிய வளங்கல் மருத்துவ வளங்கல். தான் காயப் பட்டால், என் உயிரைக் காப்பாற்றி, சிங்கள எதிரியோடு போரிட்டு என் மண்ணைக் காக்க அடுத்த சண்டைக்கு தன்னை தயார்ப்படுத்த எமது மருத்துவர்கள் எம்மோடு உள்ளார்கள் என்பதே ஒவ்வொரு போராளிக்கும் இன்னும் வலுச் சேர்க்கும் வளங்கலாகும். அந்த வகை யில் சிறுத்தைப்படையணியின் ஒவ்வொரு போராளிக்கும் சிறந்த மனவுரணைக் கொடுத்திருந்தாள் கீர்த்திகா. மிக நேர்த்தியான பணி, காயப்பட்டு வரும் போராளிகள் மட்டுமல்ல தளபதிகள், போரா ளிகள் என அனைவரும் நேசிக்கும் அற்புதமா ன திறமை மிக்க போராளியாக ஒரு பொறுப் பு மிக்க மருத்துவராகப் பணியாற்றினாள் கீர்த்திகா.1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு முகாம் வெற்றிகொள்ளப்பட்ட ஓயாத அலைகள் 1 தாக்குதலுக்கு முன்பான காலம், மணலாறுப் பகுதியில் விடுதலைப்புலிகளின் சண்டை அணிகள் நடவடிக்கையில் இருந்த நாட்கள் ஒன்றில், மணலாறு ஜீவன் முகாமில் மேஜர் சோதியா படையணியின் புதிய போராளிகளுக்கான அடிப்படைப் பயிற்சி நடந்து கொண்டிருந்த போது, நடந்த சம்பவம் ஒன்றை இங்கே குறிக்க வேண்டியது முக்கியத்துவமானது. மணலாற்று காட்டுப்பகுதியில் அன்றைய நாட்கள் எல்லை வேலி என்று எதுவும் இருந்த தில்லை. அதனால் படையணிகள் நிலை யெடுத்திருந்த இடங்களுக்கு அடிக்கடி சிங்க ள இராணுவத்தின், வேவு அணியினர் வந்து செல்வது வழக்கமாக இருந்தது. அதனால் அதை முறியடிப்பதற்காகவும் போராளிகளின் பாதுகாப்பை நிலைப்படுத்தவும் சிறுத்தைப் படையணியின் மகளிர் அணி நடவடிக்கை யில் ஈடுபடுத்தப் பட்டிருந்தது. அப்போது சிறுத்தைப் படையணியின் வேவு அணிப் போராளியாக இருந்த இளம்பிறை பாம்புக்கடி க்கு இலக்காகினார். அப்போது உடனடியாக முள்ளியவளையில் இருந்த பிரதான மருத்து வ நிலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை. மணலாற்றுக் காட்டில் இருந்து, முள்ளியவ ளைக்கு வருவதென்பது அப்போது சாதார ணமான விடயம் இல்லை. மறைந்திருந்து தாக்குதல் செய்ய காத்திருக்கும் சிங்களப் படைகளின் வேவு அணியினரையும், பதுங்கி த் தாக்கும் அணியினரையும் கடந்து செல்வது அவ்வளவு எளிதானதல்ல. பாதைப் பாதுகாப் பை உறுதிப்படுத்த சுற்றுப் பாதுகாப்பணி முன்னால் நகர்ந்து பாதையின் இருக்கும் இடர்களைக் களைந்து பாதுகாப்பை வழங்கி க் கொண்டு செல்ல, அதன் பின்னே தான் ஏனையவர்கள் வெளியேற முடியும். அவ்வா றான ஒரு நடவடிக்கை மூலம் இளம்பிறையை முள்ளியவளைக்கு கொண்டு செல்வதற்கான கால அவகாசத்தில், காப்பாற்ற முடியாது என நினைக்கும் அளவுக்கு பாம்புக்கடியின் தாக்கம் இருந்தது. மூத்த மருத்துவர்கள் யாரும் இல்லாத போதும், களமருத்துவப் போராளியாக அங்கே இருந்த கீர்த்திகா 4 நாட்கள் கடுமையாக முயற்சி செய்து இளம்பிறையின் உயிரைக் காப்பாற்றியது அவரின் மருத்துவப் பணியில் ஒரு அடைவுக் கல் என்றே சொல்ல வேண்டு ம். இன்று இளம்பிறையின் இருப்பு எங்கென் று தெரியாது இருப்பினும், கீர்த்திகாவால் மணலாற்றுக் காட்டுக்குள் அடிப்படை கள மருத்துவ அறிவோடு காப்பாற்றப்பட்ட பின் பல களங்களில் எதிரியை துவம்சம் செய்த போராளியாக நிச்சயம் இளம்பிறை இருந்தி ருப்பார் என்பது திண்ணம். அவ்வாறான பணியின் ஒரு நாள் தான் அந்த கொடுமையான நாளும் பிறந்தது. சிறுத்தைப் படையணி, அப்போது எதிரியின் “ஜெயசிக் குறு “ நடவடிக்கையை முறியடிக்கும் பணியி ல் ஈடுபட்டிருந்தது. ஓமந்தைப் பகுதியில் சிறுத்தைப்படையணியின் பெண் போராளி கள் எதிரியோடு பொருதிக் கொண்டிருந்தார் கள்.மிக மூர்க்கமான சண்டைக் களம் அது. A9 வீதியை குறுக்கறுத்து கிளிநொச்சியை சென்றடைந்து யாழ்ப்பாணத்துக்கான தரை வழிப் பாதையை மீட்கும் நீண்ட திட்டத்தோடு நகர்ந்து வந்த சிங்களப்படைகளை எதிர்த்து நின்ற விடுதலைப்புலிகளின் வெற்றிக் களங்கள் நிறைந்த நேரம் அது. அங்குதான் இவர்களும் களமாடினார்கள். அவர்களுக்கான பிரதான மருத்துவ நிலையி ல் அதன் பொறுப்பாளரான கீர்த்திகாவும் பணியில் இருந்தாள். சிறுத்தைப் படையணி யின் வேவு அணி ஒன்று உள்நடவடிக்கைக் காக சென்று திரும்பியிருந்த அன்றைய நாள் 05.06.1997. உள்ளே வேவுக்காகவும், தாக்குத ல் நடவடிக்கைகளுக்காகவும் சென்று திரும்பி இருந்த அணியினர் தமது பணி முடித்து இராணுவப்பகுதியை விட்டு வெளியேறி கீர்த்திகாவின் மருத்துவநிலைக்கு அருகில் ஓய்வுக்காக வந்திருந்தனர். அந்த அணியின் தலைவி சஞ்சனா, நீண்ட நாட்களாக ஓய்வெ ன்பது இன்றி, சிங்களப்படைகளின் கட்டுப் பாட்டுப்பகுதிக்குள் தங்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அவர்களை ஓய்வெடுக்குமாறு பணித்துவிட்டு தன் பணியில் இருந்த நேரம், அந்த அணியின் மருத்துவப் போராளியாக இருந்த விடுதலை தன் மருத்துவ பொருட்க ளை மீள் ஒழுங்கு படுத்த வேண்டிய தேவை இருந்ததால் அந்தப் பணியில் ஈடுபடுகின்றார். நீண்ட நாட்களாக, மழையில் நனைந்து சேற் றில் குளித்து அருவருக்கத்தக்க மணத்தோடு இருந்த அவரின் மருத்துவப்பையை தோய்த் து காயப்போட்டுவிட்டு அவரின் மருத்துவப் பையில் இருந்த பொருட்களை மீள் ஒழுங்கு செய்கின்றார். அப்போது பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததால் பிரதான மருத்துவ முகாமில் இருந்து அவற்றைப் பெற வேண்டுமென்று அங்கு சென்று அவற்றின் விபரத்தோடு மருத்துவப்பொருட்களுக்கான கோரிக்கையை கொடுக்கிறார். கீர்த்திகா உடனடியாகத் தான் அவற்றை ஒழுங்கு செய்து தருவதாகவும். நாளை இப் பொருட்களை மருத்துவ வளங்கல் பகுதியில் இருந்து பெறுவதற்காக தான் மாங்குளம் சென்று பெற்றுத்தருவதாகவும் கூறிச் செல் கிறார். அதே நேரம் தாம் அங்கு செல்வதால் மருத்துவநிலையை கவனித்துக் கொள்ளு மாறும் பணித்துச் செல்கிறார் கீர்த்திகா. அன்றைய இரவுப் பொழுது அடுத்தநாள் காலைப் பொழுதாக சூரிய ஒளியோடு விடிகிறது. அனைவரும் தமது பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஓய்வில் நின்ற வேவு அணியும் ஓய்வின்றி ஏதோ ஒரு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது முன்னரங்கில் எறிகணைகளின் தாக்குதல் அதிகரித்திருப்பது உணரக்கூடியதாக இருந்தது. வேவு அணியை அவசர உசார் நிலைக்குக் கொண்டு வருகிறார் அணித்தலைவி. ”தற்செயலாக நாங்கள் காயப்பட்டு எமது அடுத்த நடவடிக்கை எம்மால் குழம்பிப் போகக்கூடாது” என்பதனால் அவதானமாக இருக்க உத்தரவிடுகிறார். அனைவரும் பாதுகாப்பு நிலையில் இருக்கின்றனர். விடுதலை மட்டும் உடனடியாக கீர்த்திகாவின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்பதை சஞ்சனாவுக்கு கூறி அனுமதி கேட்கிறார். ஏனெனில் இந்தத் தாக்குதலால் யாராவது காயப்பட்டு வரலாம் என்பது நியமானது. அந்த நேரத்தில் கீர்த்திகா அங்கே இல்லை. மருத்துவ வளங்கல் எடுப்பதற்காக மாங்குளம் சென்றிருந்தார் கீர்த்திகா. அதனால் மருத்துவ வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய விடுதலை உடனடியாக அங்கே செல்ல வேண்டியது கட்டாயமாகிறது. அதனால் அணித்தலைவியும் அவருமாக மருத்துவமுகாமுக்கு செல்கின்றனர். தூரத்தே ஒரு டிப்பர் ரக வாகனம் வருவதை காண்கிறார்கள் இவர்கள். அதே நேரம் ஆளில்லாத வேவு விமானம் மேலே சுற்றிக் கொண்டிருந்தது. அதையும் கவனிக்காத டிப்பர் வாகனம் மருத்துவ நிலைக்கு அருகில் வந்து நின்றது. அதில் இருந்து கீர்த்திகா மற்றும் ஜெனீபர் ஆகியோர் மருத்துவப் பொருட்களோடு இறங்கினார்கள். அவர்களைக் கண்டுவிட்டு விடுதலையும், சஞ்சனாவும் அருகில் செல்கிறார்கள். பொருட்களை தூக்கிக் கொண்டு மருத்துவநிலையை நோக்கிச் செல்கிறார்கள். ஜெனீபர் தனது தொலைத்தொடர்பு நிலைக்கு செல்ல விடுதலையும், சஞ்சனாவும் தேவையான மருத்துவப் பொருட்களை வாங்கிக் கொண்டு தமது நிலை நோக்கி நகர, கீர்த்திகா தனது நிலையை நோக்கி நகர்கிறார். அப்போது தான் அந்த கொடூரம் நிகழ்கிறது. போராளிகள் காயப்பட்டால் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மருத்துவ வளங்கலை எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்த கீர்த்திகாவின் மருத்துவநிலை நோக்கி எறிகணைகளை எதிரி பொழியத் தொடங்கினான். முதல் எறிகணை வரும் ஒலி கேட்டு பாதுகாப்பு நிலை எடுத்தவர்கள் நிமிர்ந்து பார்க்க கூட முடியாத அளவுக்கு புகை மண்டலம். தொடர்ந்து வந்த எறிகணைகளின் வெடிப்பு அந்த இடத்தையே போர்க்களமாக்கியது. அருகருகே வந்தவர்கள் பாதுகாப்பு நிலை எடுத்த போதும் கீர்த்திகாவுக்கு மேல் நேரடியாக விழுந்து வெடித்திருந்த முதல் எறிகணை கீர்த்திகாவைச் சிதறிப் போக வைத்தது. கீர்த்திகாவின் சிதறிய கை ஒன்று விடுதலை பதுங்கி இருந்த சிறு கிடங்குக்குள் வந்து முதுகில் விழுந்தது. ஜெனீபர் தான் காயப்பட்டுவிட்டதாக கத்திக் கொண்டிருந்த திசை நோக்கி விடுதலை ஓடுகிறார். அங்கே இரண்டு கால்கள், கை, வயிறு, தலை என உடலில் பல இடங்களில் காயப்பட்டிருந்த ஜெனீபர் உயிருக்காக போராடியபடி இருந்தார். கீர்த்திகாவை எங்கும் காணவில்லை. தேடிய போது சிதறிப் போயிருந்த கீர்த்திகாவின் உடற்ப் பாகங்கள் சிலவற்றை அடையாளம் கண்டார்கள் மற்ற தோழிகள். கைத்தகடு கட்டப்பட்டிருந்த கை, கீர்த்திகாவின் கைதான் என்று அவர்களுக்கு உண்மையை உரைத்தது. மருத்துவ வளங்கலில் கொண்டுவரப்பட்டிருந்த மருத்துவப் பொருட்கள் கீர்த்திகாவின் இரத்தத்தில் சிவப்பாகிக் கிடந்தது. படையணிப் போராளிகளின் உயிர் காத்த ஒரு மருத்துவப் போராளி கப்டன் கீர்த்தியின் கை ஒன்று சிதறிப் போய் ஒரு கிடங்குக்குள் கிடந்தது. அந்த மண் முழுவதும் அவளின் குருதியும், அவளின் தசைத் துண்டுகளும் கலந்து கிடந்தது. விடுதலைக்காக இளம் வயதிலேயே தன்னைப் புலியாக்கிய, கீர்த்தி காவின் புனித வித்துடல் அந்த மண்ணிலே மண்ணும், குருதியுமாக கலந்து சிவப்பாகிப் போய்க் கிடந்தது. 06.06.1997 ஆம் ஆண்டின் அன்றைய விடியல் எம் மனங்களில் குருதிச் சிதறல்களை விட்டுச் சென்று இன்றும் விழிகளில் சிவப்பாற்றை பனிக்கச் செய்து கொண்டு தான் இருக்கிறது. தகவல் -விடுதலை-
  13. பூ விரியும் ஓசையைவிட மென்மையானது அவனது மனம். எத்தனை சவால்களைக் கடந்து இந்தப் போராட்ட வாழ்வில் வழி நெடுக நடந்திருப்பான். எத்தனை இரவுகள் தூக்கங்களைத் தொலைத்து காயமடைந்த தோழர்களின் காயத்திற்கு மருந்திடுவது மட்டுமன்றி கூடவே ஒரு தாயாகி, கண்ணீர் துடைத்து தலைகோதி, ஆறுதல் தந்திருப்பான். கப்டன் மணிமாறன் (சிலம்பரசன்) நாங்கள் அவனை மணி என்று தான் அழைப்போம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பகுதியின் எல்லா நுழைவாயிலிலும் முட்டி மோதி யாழ் கண்டி நெடுஞ்சாலையை கைப்பற்றி வன்னியின் பூகோள ஒருமைப்பாட்டை சிதைத்து போராட்டத்தை கூறுபோடுவதற்காக தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தான் ஒப்பிறேசன் ஜெயசிக்குறு. இந் நடவடிக்கை 13.05 1997 ஆரம்பித்து ஒருவருடத்திற்கு மேலாக முட்டிமோதி திறன் இழந்துபோனது. இந்த எதிர்ச்சமர் நடவடிக்கை போராளிகளிற்கு கடினமானதும் நீண்டதுமானது. களவாழ்வில் ஓய்வு, உறக்கமின்றி நல்ல உணவின்றி போராளிகள் களத்தில் பணியாற்றினார்கள். அதே நேரம் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளிற்குள் தொல்லைப்பட்ட மக்கள் சீரற்ற காலநிலைக்கு முகம் கொடுத்து மலேரியா போன்ற தொற்றுநோய்களுடனும் எதிர்நீச்சல் போடவேண்டியிருந்தது. பெரும்பாலான வயல் நிலங்கள் செய்கை பண்ணப்படாமல் போனதால் தன்நிறைவு விவசாயமும் வீழ்ச்சி கண்டிருந்தது. இலங்கை அரசு அத்தியாவசியப் பொருட்களிற்கு மட்டுமன்றி மருந்துத் தடை, மண்ணெண்ணெய் தடை ,சக்கரைக்கும் தடை, பெண்கள் மாதவிடாய் காலங்களில் பாவிக்கும் பஞ்சுகளிற்கும் (period products) ஒரு பெண் அரச தலைவி சந்திரிக்கா அம்மையாரே தடைவிதித்திருந்ததும் அது முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்ததும் நாம் அனுபவித்த வலிகளே. மக்களைப்போலவே போராளிகளின் எல்லாப்பிரிவுகளிலும் வளத்தட்டுப்பாடு நிலவியது. அப்போது மருத்துவப்பிரிவும் நிர்வாக இலகுவாக்கலுக்காக வன்னிமேற்கு,கிழக்கு என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. வன்னி மேற்கின் நிர்வாகப் பொறுப்பாளராக நளன் அண்ணா இயங்கினார். எமது பிரதான தளமருத்துவமனையும் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னேரிக்குளம் சோலை என்ற இடத்தில் லெப் கேணல் நீலன் ஞாபகார்த்தமாக அமைந்திருந்தது. அங்கு ஓய்வின்றி தொடர்ச்சியாக சத்திரசிகிச்சை கூடம் இயங்கிக்கொண்டேயிருக்கும். அப்போது இரத்தவங்கிக்கு பொறுப்பாக நானும், எனக்கு உதவியாக மணிமாறனும் இருக்கின்றோம். அடிப்படை மருத்துவக் கற்கை நெறியினை நிறைவு செய்த மணிமாறனுக்கும் அவனது அணிக்கும் மேலதிக கற்கை வகுப்புக்களும் அங்கு நடைபெற்றன. தெரியாத விடையங்களை கேட்டு படிப்பதில் மிக ஆர்வமாக இருப்பான். எல்லாக் களமுனைகளும் விரிந்திருந்ததால் தொடர்ச்சியாக காயமடைந்தவர்களும் வந்துகொண்டேயிருப்பார்கள். ஓய்வின்றி வேலை தொடர்ந்தாலும் கிடைக்கும் நேரத்தில் மேலதிக கற்கைகளும் நடைபெறும். அன்று ஒரு நாள் இரவு செய்தி பரிமாறப்பட்டிருந்தது, மன்னார் களமுனையில் நாளை அல்லது மறு நாள் இராணுவம் தாக்குதலை நடத்தவுள்ளதாக வைத்தியர் கெளரி அண்ணா என்னிடமும் மருத்துவத்தாதி அக்காவிடமும் முன் ஆயத்தங்களை செய்யுமாறு பணிக்கின்றார். கையிருப்பில்அதிகம் தேவைப்படும் குருதி வகைகள் இன்மையால் உடனடியாக குருதி சேகரிக்க காலையில் போக வேண்டியிருந்தது . இரண்டு நாட்களாக வாகனத்தை எதிர்பார்த்து வரவில்லை, குருதி எடுக்க தூரத்திற்கு போவதற்கு வாகன வசதியில்லை. வன்னிமேற்கு பகுதியில் மருத்துவத் தேவைகளை பூர்த்திசெய்ய நின்ற ஒரே வாகனமும், அது மாதத்தில் பாதி நாட்களிற்கு மேல் வாகன திருத்தகத்தில் தான் நிற்கும். முகாம் பொறுப்பாளரிடமும் ஏதாவது ஒழுங்கு செய்யுமாறு கேட்கின்றோம் …. “எப்பிடி எங்க போறிங்களோ நாளைக்கு Blood bank பொறுப்பாளர் விளட்டோட வந்தால் சரி” என்று தனது வழமையான பாணியில் சொல்லி சென்றார் கெளரி அண்ணா. என்ன செய்யலாம் என்று யோசித்தோம் மணிமாறன் தான் யோசனை சொன்னான் முகாம் பொறுப்பாளருக்கு, “விடிய கலை டொக்டரை நீங்கள் கொண்டுபோய்‌ வைத்தியசாலையில் வீட்டிட்டு ராசாத்தியை கொண்டுவாங்கோ” Dr கலை காலையில் அக்கராயன் பிரதேச வைத்தியசலைக்கு கடமைக்கு செல்வது வழமை. நாங்கள் தேவையான பொருட்களுடன் cool box ஐ (இரத்தத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு வைத்துப் பாதுகாக்க பயன்படும் பெட்டி) கொண்டு வாறம்.” “ஓ நல்ல ஐடியா ….. நாங்கள் சைக்கிளில் (துவிச்சக்கரவண்டி) வாறம் என்றேன். தேவையான பொருட்களை எடுத்து வைக்கின்றோம் இரவு பத்துமணியாகியது . ஓ …அப்போது தான் நினைவு வந்தது காலை குளிப்பதற்கு தண்ணீர் இருக்காது, நாங்கள் இருந்த இடத்தில் கிணறு இல்லை ஒரு குளத்திற்கு அல்லது,ஒரு கி.மீற்றர் தூரம்சென்றால் ஒரு வெட்டையில் கிணறு இருக்கும் அங்கு தான் குளிக்க போவோம். இரவில் தான் அந்த கிணற்றில் குளிக்கலாம். அந்த இடத்தின் பெயர் சோலை நல்ல மாமரச் சோலையாகவும் தான் இருந்தது. எமது மருத்துவ மனை இருந்த இடம் ஏன் சோலை என பெயர்பெற்றது என்று தெரியாவிட்டாலும் நாம் இருந்த வளாகம் முழுவதும் மரங்களால் மூடி சோலை என்ற பெயரிற்கு ஏற்றால் போல பொருத்தமாகவிருந்தது . ஆனால் தண்ணீர் இல்லை என்பது ஒரு குறை. ஆண்கள் பகுதியில் ஒரு சிறு கிணறு இருந்தது. நோயாளிகளிற்கு வேண்டிய தண்ணீரை பணியாளர்களில் ஒருவரான செந்தில் அப்பா எடுத்து வருவார். அவருக்கு உண்மையில் என்ன பெயர் என்று தெரியாது நடிகர் செந்திலின் சாயலில் இருந்ததால் போராளிகள் எல்லோரும் செந்தில் அப்பா என்று அன்பாக அழைப்போம் அது அவருக்கும் மகிழ்ச்சியூட்டும். ஆனால் அவர் தண்ணீரை ஒரு ராங்கில் நிரப்பி தள்ளுவண்டியில் வைத்து கைகளால் தள்ளிக்கொண்டு வருவதைப் பார்த்தால் மனசு இறுகிக் கொள்ளும். அதனால் நாங்கள் அவர் கொண்டு வரும் நீரை எடுப்பதில்லை மருந்தைப்போல சிக்கனமாக பாவித்துக் கொள்ளுவோம். செந்தில் அப்பா சொல்லுவார் “பிள்ளைகள் தண்ணியைப் பாவியுங்கோ பின்னேரம் கொண்டு வாறன்” என்று…. அப்போதும் அவரது முகம் மலர்ந்து தான் இருக்கும். கைகள் தான் மரத்துப் போய்க் கிடக்கும். ஆனால் அதை அவர் பொருட்டாக எடுப்பதில்லை. விடுதலைப் பாதையில் போராளிகள் மட்டுமல்ல மக்களும் மனமுவந்து தோள் கொடுத்தார்கள். இந்த செந்தில் அப்பா போல் இன்னும் வெளியில் தெரியாமல் எத்தனை பேரின் நினைவுகளும், வியார்வைகளும் சிந்தியிருக்கின்றது எம் நிலங்களில். அதி காலை இரத்தவங்கியில் நிற்கின்றோம் மணி அழைக்கிறான் “அக்கா…அக்கா… ராசாத்தியை காணேல்லை” யார் இரவு கொண்டு போனது என்று தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே சுதர்சனின் குரல் கேட்டது ராசாத்தியையும் இரவு மதனிட்ட விட்டிட்டன்….(மதன் வாகன திருத்தகத்தின் பெயர்) என்றபடி. சுதர்சன் பின்னாளில் தமிழீழத்தின் தலைசிறந்த பல் வைத்தியராக பலராலும் அறியப்பட்டான். 2009 ம்ஆண்டு இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் இவனும் ஒருவன். வைத்திய போராளிகளிடம் ஒரே ஒரு மோட்டார் சைக்கிள் தான் இருந்தது. அதற்கு அவர்கள் வைத்த பெயர்தான் “ராசாத்தி “ அதனைத்தான் மாறி மாறி எல்லோரும் பயன்படுத்த வேண்டும் பல வைத்திய போராளிகள் அரசாங்க வைத்தியசாலைக்கு கடமைக்கு செல்லவேண்டும் . ராசாத்தி பகிடி மருத்துவ மனை முழுவதும் பரவி அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அண்ணா வின் காதுவரை போனது. “நீங்கள் நல்லா வருவீங்கள் அண்ணா ராசாத்தியையும் பழுதாக்கீட்டிங்களா “. சைக்கிளில எல்லாரும் போவோமா? என்றான் மணி . சரி, வேறு வழியில்லை போவோம் என்று cool box மற்றும் பொருட்களுடன் தயாரானோம். நன்றாக விடியவில்லை கருக்கல் நெருக்கலான மென் இருட்டு வன்னேரி கிராமத்தின் அலம்பல் வேலிகளின் பொத்தல்களாலும் மட்டை கடவையின் கீழாகவும் ஒவ்வொரு வீட்டு நாய்களும் குரைத்துக் கொண்டு அடுத்த வீட்டுப் படலை வரை கொண்டு போய் வழியனுப்பியது . மணிமாறன் சரியான குறும்புக்காரன் நாய்களுடன் சேட்டைபண்ணிக்கொண்டே மிதிவண்டியை ஓட்டினான். வன்னேரி ஐயனார் கோவில் மணியோசை கேட்கின்றது. ஐயனாரே இன்று எங்கள் தொழிலுக்கு நீ தான் துணை என்று சொல்லவும் அவனது மிதிவண்டி காற்றுப்போய் நிற்கவும் சரியாக இருந்தது. அப்போது முகாம்பொறுப்பாளர் வாணனுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை . மணி என்ன செய்வதென்று தெரியாது திக்கிப்போய் நின்றான் அவனது முகம் வாடியது. ஐயனாரே நீயுமா இப்படிச் செய்வாய்? என்று நொந்து கொண்டான். பின்னர் சிறிது தூரத்தில் அஞ்சனாவின் மாமாவின் வீடு இருந்தது எமக்கு நிம்மதியை தந்தது. அஞ்சனாவும் நானும் சென்று அவர்களை எழுப்பி காற்றுப் பம்மை வாங்கி மணியிடம் கொடுக்கின்றோம். அடிக்கும் காற்று அப்படியே வெளியேறியது தெரிந்தது. இலங்கை அரசு சைகிள் ரயர், ரீயூப் ஏன் அதனை ஒட்டிப் பாவிக்கும் பசைக்கும் தடைதான் போட்டிருந்தது. இப்போ எங்கு சென்று ஒட்டுவது , என்ன சோதனையடா இது என்று மனம் சஞ்சலப்பட அஞ்சனாவின் மாமி சூடான தேனீருடன் படலைக்கே வந்தார் “கெதியண்டு குடிச்சிட்டு போங்கோ”என்றபடி. எங்கள் முகங்களில் பதில் இல்லை . ஏன் காற்று ஏறுதில்லையா? இல்லை அன்ரி ஒட்டுப்போல என்றேன். அவர்களிடமும் உதவி கேட்க முடியாது, எல்லாருக்கும் கஸ்ரம்தானே என்று மனம் சொல்ல மௌனித்தோம். அவர்களாகவே நிலமையை புரிந்து மாமாவின் சைக்கிளை தந்தார்கள். நல்ல பெரிய கரியல் வசதியாய் இருந்தது பெட்டியை வைத்து கட்டுவதற்கு. “போகேக்க வாங்கோ ஒட்டி வைக்கிறன் “ என்றார் மாமனார். அப்பாடி… என்று மனம் குளிர்ந்தது . ஆனாலும் எங்கு குருதி எடுப்பது என்ற முடிவு இருக்கவில்லை. அக்கராயன் முறிகண்டி நெடுஞ்சாலைகள் குன்றும் குழியுமாக கிடந்தது . மிதிவண்டி நேரம் செல்லச் செல்ல வேகமெடுத்தது. மேடு, பள்ளம் தாண்டி ஒருவாறு அக்கராயன் சந்தியை அடைந்தபின், மணிமாறன் கேட்டான் “எங்க அக்கா வையூரோவை திருப்புறது” மணிமாறன் எப்போதும் மெல்லிய நீலக்கலர் சேட் தான் அதிகம் போடுவான். அன்றும் அப்படித்தான் அவனது சேட் செம்மண் புழுதி பட்டு கலர்மாறி கிடந்தது . அவனின் உடையை போலவே மனமும் எப்போதும் மென்மையே. ஸ்கந்தபுரம் பகுதியிலேயே அனேகமான பாடசாலைகள் இயங்கின. கிளிநொச்சி பாடசாலை இடம்பெயர்ந்து அங்குதான் இயங்கியது; அங்கு போவோம் என்றேன் நான். வழமையாக அரசியற் போராளிகள் பாடசாலைகளில், கல்விநிலையங்களில் அல்லது வர்த்தக சங்கத்தில் குருதி சேகரிப்பதற்கான ஒழுங்கமைப்பை செய்வார்கள். இன்று அவர்களிடமும் உதவிகேட்க முடியவில்லை ஊருக்குள் இரண்டு மூன்று வீரச்சாவு நிகழ்வுகள் நடைபெற்றன. அக்காலத்தில் வன்னிப்பெருநிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் யுத்தத்தினால் இருப்பிடம் இழந்து அக்கராயன் தொடக்கம் மல்லாவி வரையுமே மிகவும் நெருக்கமாக வசித்து வந்தனர். மதியம் இரண்டு மணியாகியும் எட்டு பைகள் குருதிக்குமேல் எடுக்கமுடியவில்லை . மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வமாக குருதி தருவதற்காக வந்தாலும் அவர்களில் சிலருக்கு உடல் நிறை காணாமல் இருக்கும், பலருக்கு தொடர்ச்சியாக மலேரியா வந்ததால் குருதிச்சோகை இருந்தது. பலர் குருதிக்கொடையாளராக உதவ மனம் இருந்தாலும் உடல் நிலை இடம் தரவில்லை. அவர்களிற்கு எல்லாம் நாங்கள் கொண்டு சென்ற விற்றமின் ,இரும்புச்சத்து மாத்திரைகளை கொடுத்து அடுத்த முறை வந்து உங்களில் குருதி எடுக்கின்றோம் என்போம், அவர்கள் மனம் நோகாமல். சில பிள்ளைகள் தன்மானப் பிரச்சினையில் அடம் பிடிப்பார்கள். நாங்கள் நல்ல ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றோம் எடுங்கள் என்று அழக்கூடத் தொடங்கி விடுவார்கள். அவர்களை ஏதாவது சொல்லிச் சாமாளித்து விடவேண்டும். வெய்யில் நன்றாக காயத்தொடங்கியிருந்தது cool box ல் உள்ள இரத்தத்தை குளிர் குறையுமுன் உடனடியாக முகாமிற்கு அனுப்பவேண்டும். அது இப்போது சாத்தியமற்றது, மாலை வன்னேரியிலும் அக்கராயன் வர்த்தக சங்கத்திலும் குருதி எடுக்க அரசியல்துறைப் போராளி ஒருவர் சிறு ஒழுங்கை செய்திருந்தார் . அக்கராயன் வைத்தியசாலைக்கு சென்று சேகரித்த குருதிகளை மாலை வரை பாதுகாப்பாக வைக்கலாம் என்று யோசனை தோன்றியது. அந்த மருத்துவமனையும் நோயாளர்களால் நிறைந்து கிடந்தது. அப்போது மாவட்ட வைத்திய அதிகாரியாக வைத்தியர் விக்கி அவர்கள் இருக்கின்றார். நேரடியாக அவரிடம் சென்று குருதி வங்கியில் உள்ள குளிர்சாதனப்பெட்டியில் சேகரித்த குருதிகளை பாதுகாப்பாக வைக்க அனுமதி கேட்கின்றோம். அவர் இல்லை என்றா சொல்வார்…. பின்னர் நாம் எதிர்பார்க்காத ஒன்றை எம்மிடம் வினாவினார்; “இஞ்ச அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) ஒரு நோயாளிக்கு அவசரம் ரத்தம்வேணும் Bநெக்கற்றிவ் உங்களிட்ட இருந்தா தாங்கோவன்” என்றார் இப்ப இல்லை இனி எடுக்கிற இடத்தில கிடைச்சால் தாறம். என்று கதைத்தபடியே இரத்த வங்கிக்கு போகின்றோம். அந்த நோயாளியின் மனைவி கண்களிலிருந்து நீர் வடிய ஒட்டிய உடலும் குழி விழுந்த கண்களுடன் சுமார் ஒரு 38 கிலோ தான் இருப்பார். கெஞ்சிக்கொண்டு நிக்கின்றார், “எத்தனை பேரை கொண்டு வந்திட்டன் ஒருவரிலையும் எடுக்க ஏலாது எண்டிற்றிங்கள் என்னில கொஞ்சம் எண்டாலும் எடுங்கோ என்ர மனுசன் எனக்கு வேணும் பிள்ளைக்கு அப்பா வேணும் ” என்றபடி.மகனின் தலையை வருடினாள். எங்களிற்கும் அந்த காட்சியைப் பார்க்க கண்களில் நீர்நிறைந்து குளமாகியது. விக்கி டொக்டர் தான் அந்த அம்மாவிற்கு ஆறுதல் சொல்லிக்கொண்டார். பின்னர் வர்த்தக சங்கத்திலிருந்தும் சிலரில் குருதிகளை எடுத்தும் Bநெக்கறிவ் கிடைக்கவில்லை. அப்போது மணிமாறன் “அக்கா நான் ஒருக்கா DT (குருதி வங்கியின் குருதி நோயாளிக்கு ஒத்துவருமா என்று அறியும் பரிசோதனை)செய்து பார்க்கவா? “ முதல் நீங்கள் ரத்தம் கொடுத்து இரண்டு மாதம் ஆகவில்லையே …. என்றேன். முதலில் எனது குருதி பொருந்துகின்றதா என்று பார்க்கின்றேன் என்றவன்; இவனது குருதிப் பொருத்தம் சரி என்றவுடன் உடனடியாக அடுத்த கதையின்றி “அம்மா அழாதேங்கோ நான் தாறன் ரத்தம் ” என்றான். ஏறி கட்டிலில் படுத்துக்கொண்டு அக்கா நீங்கள் எடுத்துக்கொடுங்கோ என்றான். ஆனால் அவனுக்கு ஊசி குத்துவது என்றால் பயம் கண்களை மூடிக்கொண்டான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, எடுங்கோ அக்கா என்றான். வாணணும் அஞ்சனாவும் “வேண்டாம் அக்கா பேச்சு வாங்குவீங்கள் டொக்டரிட்ட “ என்றனர். எனக்கும் தெரியும் மணிமாறன் 0- (நெக்கற்றிவ்) குருதி அடிக்கடி இரவுகளில் இவ்வகை குருதி தேவைப்படுவதுண்டு. அவசரதேவைக்கு ஒரு முறை கொடுத்து மூன்றுமாதத்திற்கு முன்பே அவனில் பல தடவை இரண்டாம் முறை எடுத்து விடுவோம் அதனால் தான் நான் சற்று தாமதித்தேன். “ஏனக்கா யோசிக்கிறிங்கள் பேச்சுத்தானே வாங்கிட்டு போங்கோ உயிரையே கொடுக்கிறார்கள் பேச்சு தானே வாங்கினா போச்சு எடுங்கோ” என்றான். “ அந்த அம்மா” என் தெய்வமே நீ நல்லாய் இருக்கவேணும் என்று கைகூப்பினாள் “ “.அன்று முழுவதும் உணவுமின்றி மணிமாறன் இன்னும் இழைத்திருந்தான். இரவு ஓரளவு குருதி சேகரித்த திருப்தியோடு நாமும் ,உதிரம் கொடுத்து உயிரை காப்பாற்றிய மகிழ்வில் மணியும் முகாம் திரும்பினோம். இரவு பதினொரு மணியிருக்கும் வாகனச் சத்தம் கேட்டது அதன் பின்னால் அன்பு அண்ணா (மூத்த மருத்துவப்போராளி பின்னர் பொக்கணைப் பாடசாலையில் இயங்கிய மருத்துவமனையில் வீழ்ந்தசெல்லில் வீரச்சாவு) தான் கூப்பிட்டார்” குயில் வாங்கோ” என்ற அவரது குரல் கண்ணீரென்றது பெண்களின் அவசரசிகிச்சை வோட்டில் இருந்த எனக்கு. ஏனோ மனம் பதை பதைத்தது “நல்ல பலாப்பழம் வந்திருக்கு” (பெரிய காயமென்றால் அப்படி அழைப்பது மருத்துவப் போராளிகளின் பரிபாசை) என்ன குருதிவகை என அறியமுனைந்த போது கும் இருட்டிலும் மின்னல் அடித்தது போல் இருந்தது 0- நெக்கற்விவ். மடியில் கனம் ஏறிக்கொண்டது. “கடவுளே இரண்டு பையின்ற் தான் கிடக்கு அது காணுமா இருக்க வேண்டும்“என்று நினைவில் வந்த தெய்வங்களை வேண்டிக் கொண்டு சத்திரசிகிச்சை கூடத்தில் நுழைந்தேன். வைத்தியர் அஜோ,கெளரி அண்ணா மீனா அக்கா மற்றும் சிலரும் சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது சுமார் ஒரு மணித்தியாலம் கடந்தபின் “நல்ல அடிதான் ஈரலிலும் பட்டிற்று இன்னொரு விளட் போட்டு வையுங்கோ” என்றார். வைத்தியர் அஜோ இரண்டு தான் கிடந்தது டொக்டர் என்றேன். (0வகை குருதிக்கு அந்த வகை மட்டும் தான் ஏற்றலாம்) நெஞ்சு பட படத்தது அடுத்து மணிமாறனை தான் கேப்பார் என்பது எனக்கு தெரியும். மணிமாறன் னுக்கும் தெரியும். மணி என்னைப் பார்த்து சொல்லவேண்டாம் என கண்களால் சொல்லி அங்கிருந்து அடுத்த அறைக்கு நழுவிப் போனான். “மணி இரத்தம் கொடுத்து இரண்டு இரண்டரை மாதம் வந்திருக்கவேணும் போய் எப்ப கொடுத்தது என்று பாத்திட்டு DT போடுங்கோ தேவை என்றால் எடுக்கலாம்” என்றார் . பதிலுக்கு எதுவும் பேசமால் இன்று அக்கரயானில் கொடுத்ததை சொல்ல இது நேரமில்லை அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனை மூளையை குடைய சத்திரசிகிச்சை கூடத்தில் போடும் சட்டைகளை கழற்றிவிட்டு இரத்தவங்கிக்கு சென்றேன். என் பின்னால் மணிமாறன் “அக்கா ஏன் பயந்து சாகிறிங்கள் இரத்தம் தானே இன்னொருக்கா இழுத்து தள்ளுங்கோ” என்றான். அவனை கடிந்து கொள்ள முடியவில்லை. சுதர்சன் , வைத்தியர் சதா இருவரும் 0 – (நெக்கறிவ்) தான் கொடுத்து ஒரு மாதம் ஆகவில்லை என்ன செய்வோம் என்று அன்பு அண்ணையிடம் கேட்டேன். காயமடைந்த நோயாளர்களை பராமரிக்கும் பணியாளரில் ஒருவரான சுறுளி அண்ணாவை பக்கத்திலிருந்த அவரது வீட்டிற்கு சென்று கூட்டிவந்தார் அன்பு அண்ணா . அவரின் குருதி பொருந்தியது மனம் மகிழ்ந்தது. இப்படித்தான் மணிமாறனின் குருதி ஏற்றப்பட்டு அவசர நேரங்களில் உயிர் மீண்டோர் எத்தனை பெயர் என்று சொல்ல முடியாது. வவுனியா நொச்சிக்குளம்த்தை சொந்த இடமாக கொண்ட மணிமாறன்‌புதுக்குளம் ம.வி கல்வி கற்றபோது 1998 ஆம்‌ஆண்டு தன்னை போராளியாக‌மாற்றிக்கொள்கின்றன்‌. தனபாலசிங்கம் தம்பதிகளின் ஐந்தாவது ‌புதல்வனே ஞானேஸ்வன் ‌என்ற இயற்பெயர்கொண்ட மணி‌ இவனது மூத்த‌ அண்ணா 1988இல் போராளியாகி‌1992 ம் ஆண்டு ‌இந்த மண்ணிற்காய் விரகாவியம் ஆகினார். அவனதுபதையில் மணியும் சென்றுவிடுவான்‌என்று குடும்பத்தினர் நினைக்கவில்லை இரண்டு ‌அக்காவும்‌ தம்பி‌ அண்ணா என்று ‌பாசத்தில் கரைந்த‌ள் குடும்பத்தைவிட்டுமணி தன் தாய்நாட்டை காக்க‌புறப்பட்டான்‌ ஆனால்குடும்பநிலை காரணமாக மீண்டும் 2004 போரத்திலிருந்து விலத்தி மனித நேய கன்னிவெடி‌ அகற்றும் நிறுவனத்தில் வேலை செயதான். ஆனால் மீண்டும். போர் மேகங்கள் எமை சூழத்தொடங்க களமருத்துவ அணியுடன் இவன் களம்புகுந்தான் . 2006 ம் ஆண்டு மீண்டும் முகமாலையில் போர் வெடித்த போது அப்போது முகமாலைப்பகுதியில் களமருத்துவப் போராளியாக நின்ற மணி பாரிய காயமடைந்ததில் குருதிக்குழாய் பாதிப்படைந்தது. அதிக குருதி இழப்பால் அவன் எம்மை விட்டு நிரந்தரமாய் பிரிந்தான் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. தோழர் உயிர்காக்க போராடிய பிள்ளை பாரிய விழுப்புண்ணடைந்து வலியால் துடிக்கின்றான், பாரிய சிதைவுக்காயம் காப்பாற்றத் துடிக்கின்றார்கள் மருத்துவ குழாம். “ என்னை நீங்கள் காப்பாற்ற மாட்டீங்கள் என்ர Blood..(இரத்தம்)..இல்லை என்றவனை காயத்தை கட்டி நம்பிக்கை யூட்டி அனுப்பி வைத்தனர் மருத்துவர்கள் ஆனால் பிரதான மருத்துவமனையின் வாசலிலேயே தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொள்கின்றான். உதிரம் கொடுத்து எத்தனை உயிர்களிற்கு மீள உயிர் அளித்திருப்பான்… இவர்கள் தான் தெய்வப்பிறவிகள் நாம் வணங்க வேண்டிய ஆத்மாத்தமானவர்கள். அவனது அண்ணா மேஜர் சிலம்பரசனாக மாவீரனானார். அவரது பெயரைத்தான் மணிமாறன் அல்லது சிலம்பரசன் என்று சூடிக்கொண்டவன் இவனும்‌ 12.08.2006 அன்று கப்டன்‌ மணிமாறன் (சிலம்பரசன்) ஆகிவிட்டான் . எப்போதும் சிரித்த அவனது முகம் வாடியிருந்தால் கேட்காமலே அறிந்து கொள்ளலாம் அவனது நோயாளர் விடுதியில் ஒரு போராளிக்கு உடல்நிலை மோசமாகவிருக்கிறது என்று. நேர்த்தியாக அவன் போடும் உடை, இரவில் எத்தனை மணிக்கு எழும்பி சத்திரசிகிச்சைக் கூடம் வந்தாலும் அவன் நேர்த்தியாக உடை அணிவான். மெல்லிய நீலநிற சேட் தான் அடிக்கடி போட்டிருப்பதால் அதன் பிரதிபலிப்பு அவன் அகமும் வெள்ளையே…. மற்றவர்களிற்கு ஒரு துன்பம் என்றால் அவனால் தங்கமுடியாது சிறிய விடையங்களில் கூட உன்னிப்பான கவனிப்பு இருக்கும். அவனது முகத்தில் எப்போதும் ஓர் பிரகாசமான ஒளி வீசிக்கொண்டேயிருக்கும். கண்களில் நிறைந்து பூத்திருக்கும் இலட்சிய உறுதி, மனதில் நிறைந்திருக்கும் பேரன்பு, எதையும் நுட்பமாக பார்த்தே தெரிந்துகொள்ளும் பக்குவம் என சொல்லில் வடிக்க முடியாத ஒரு துடிப்பும் எப்போதும் நாம் கண்ட சிறப்பு அவனிடம். சிறிலங்கா அரசின் ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்கள் அதிகரித்ததால் எந்த இடங்களில் முகாம் இருக்கின்றதோ அந்தப் பகுதிகளை கவனிக்கும் பொறுப்பு அந்த துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட காலத்தில் கனகபுரம் துயிலும் இல்லத்திற்கு அண்மையில் யாழ்வேள் மருத்துவ மனையிருந்தது. காலையில் நாங்கள் தான் அந்தப்பகுதியை கண்காணிக்க றோந்து போகவேண்டும். ஒரு நாள்வழியில் ஒரு மாணவன் நீண்ட தூரம் நடந்து வெறும் காலுடன் பாடசாலை செல்கின்றான். இரண்டாவது நாளும் அதே மாணவனை வெறுங்காலுடன் கண்டபோது மணிமாறன் தான் போட்டிருந்த சப்பாத்தை கழற்றிக்கொடுத்து விட்டு வெறும் காலுடன் தான் நடந்து சென்று ரோந்தை முடித்து விட்டு வந்தபோது கல்லும் முள்ளும் கால்களில் குற்றி இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இது மட்டுமல்ல கிளி முறிப்புப் பகுதியில் காவலரனில் நின்றபோது உணவில் இருந்து உடைவரை அந்த சிறுவர்களிற்கு கொடுத்து விடுவான். இது ஒரு கதையில்லை இப்படித்தான் வாழ்ந்தவர்கள் மாவீரர்கள், இவர்கள் இறந்தபின்பும் எதையும் எதிர்பார்க்கப் போவதில்லை. தனக்காக வாழாது தன் இனத்திற்காய் வாழ்ந்த இவர்களா உங்கள் பார்வையில் பயங்கரவாதிகள்? மருத்துவப் பணியில் மணிமாறனும் நானும் பல ஆண்டுகளாக ஒன்றாக பயணித்து இருக்கின்றோம். பல நினைவுகள் மனதில் இன்றும் நினைவாக தொடர்கின்றது. காயமடைந்து இவன் கரங்களில் சிகிச்சை பெற்று இன்றும் வாழும் பல போராளிகள் இவனை மறந்திருக்க மாட்டார்கள். மணி துடிப்பான ஒருவன் எந்த செயலையும் தன்னம்பிக்கையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவன். எங்களிற்கு வயதில் சிறியவனாக இருந்தாலும் மனம் தளரும் போதெல்லாம் புத்துணர்ச்சி தரும் அவன் பகிடிகளும் வார்த்தைகளும் இன்றும் பசுமையாய் ஒலிக்கின்றது. குறிப்பு -இந்த பதிவு திருத்திய மீள்பதிவு இந்த ‌மாவீரனின் புகைப்படம் பலரிடம் கேட்டு தேடிக் கொண்டிருந்தேன் .இப்போது கிடைத்தது ஊர் தேடிச்சென்று புகைப்படத்தை மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தையும் இணைத்து விட்ட பசீலன் அண்ணா விற்கு பேரன்புடன் நன்றிகள் -நன்றி- மிதயா கானவி.
  14. கரை புரண்டோடும் வெள்ளக் காடாக காட்சி தருகிறது உடையார்கட்டுப் பகுதி. திரும்பும் இடமெங்கும் சன நெரிசலால் திணறிக்கொண்டிருக்கிறது. ஒரு புறம் காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் முற்றிலும் நிறைந்து வழிந்தன. மறுபுறம் சாவடைந்த மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறு வரிசையில் இருந்தது. அவ்வாறான ஒரு நிலையில் தான் வன்னியின் முக்கிய அரச மருத்துவமனையாக இருந்த முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை இடம் பெயர்ந்து வந்து வள்ளிபுனத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. அங்கு அரச மருத்துவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை தமிழீழ மருத்துவப்பிரிவுக்கு இருந்ததால் பல மருத்துவப் போராளிகள் மக்களுக்கான மருத்துவப் பணியில் இருக்கிறார்கள். அதில் அல்லி என்று அன்பாக அழைக்கப்படும் பெண் போராளியும் இருந்தாள். உடலமைப்பிலும் மற்ற மருத்துவர்களின் வயதோடு ஒப்பீட்டளவில் சிறியவளாக இருந்தாலும் மருத்துவ அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ந்திருந்தாள். தமிழீழ தாதியர் கற்கைகள் கல்லூரியில் தனது மருத்துவ கல்வியை முடித்த அல்லி மயக்க மருந்து ( General Anesthesia /அனஸ்தீசியா) வழங்கும் மருத்துவராக சிறப்பு பயிற்சி பெற்றாள். இதற்கான பயிற்சிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிறப்பு மருத்துவர்களிடம் இருந்து பெற்றிருந்தார். அதனால் அவளது மருத்துவப் பணியின் பெரும் பங்கு சத்திரசிகிச்சை அறைகளிலையே அமைந்திருந்தது. சத்திரசிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு நம்பிக்கையும் விருப்பமுமான போராளியாக அல்லி இருந்தாள். மருத்துவத் துறையில், அதுவும் சத்திரசிகிச்சைப் பிரிவில் அதி முக்கியம் வாய்ந்த பணி என்றால் மயக்க மருந்து கொடுப்பது. அது அனைவரும் அறிந்த ஒன்று. கொடுக்கப்படும் அளவில் சிறு தவறு நடந்தாலும் அல்லது நேர விகிதங்களில் தவறு ஏற்பட்டாலும் உயிர் பிரியும் அபாயத்தைத் தர வல்லது General Anesthesia /அனஸ்தீசியா என்ற மருந்து. தற்காலிகமாக உடலியக்கத்தை நிறுத்தி வைக்கும் இம் மருந்து சரியான அளவில் சரியான நேரத்தில் கொடுக்கப்பட வேண்டியது முக்கியமானது. தவறின் உயிர் காப்பது கடினமாகும். இதற்காக அரச மருத்துவமனைகளிலும் சரி வெளிநாட்டு மருத்துவமனைகளிலும் சரி சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களே பயன்படுத்தப்படுவார்கள். அதுவும் சத்திரசிகிச்சை முடிவடையும் வரை ஒரு நோயாளிக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாசாரத்தில் பணியாற்றுவர். சில வேளைகளில் சத்திரசிகிச்சையின் தன்மையைப் பொறுத்து ஆளணி எண்ணிக்கை மாறுபடும். ஆனால் எமது தமிழீழ தாதிய பயிற்சிக் கல்லூரி ஒன்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற அல்லி அவர்கள் அனைவரையும் தாண்டி மருத்துவப் பணியாற்றியிருந்தாள். ஒரு சத்திரசிகிச்சை அறையில் சம நேரத்தில் நடந்த இரண்டுக்கு மேற்பட்ட சத்திரசிகிச்சைகளுக்கு தனி ஒரு மயக்க மருந்து சிறப்பு மருத்துவராக ( General Anesthesia Specialist ) தனது உதவியாளர்களை ஒவ்வொரு நோயாளர்களுக்கும் தனி ஒருவர் விகிதம் நேரடியாக மயக்கமருத்து உதவியாளராகப் பயன்படுத்தி பணியாற்றி இருந்தாள். ஒரு வினாடி அளவில் கூட ஏற்படும் தவறு குறித்த நோயாளிகளை சாவடைய வைக்கும் வல்லமை பொருந்தியது. ஆனாலும் அந்த வல்லமையை உடைத்தெறிந்து தமிழீழ மருத்துவத் துறையில் தன் உதவியாளர்களினூடாக புதிய ஒரு தடத்தை பதித்திருந்தாள் அல்லி. உண்மையில் அனைவரையும் வியக்க வைக்கும் இந்த பணியானது அல்லி என்ற பெண் போராளியால் செய்ய முடிந்தது என்பது தமிழீழ வரலாற்றில் பகிரப்படாத ஒற்றைப் பக்கம். பரதநாட்டியத்தில் அதீத ஈடுபாடும் கல்வியில் அக்கறையும் கொண்ட அல்லி க.பொ.த உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது தன்னை விடுதலைப் போராளியாக மாற்றிக் கொண்டார். இருப்பினும் விடுதலைப்புலிகள் அமைப்பு அல்லி உட்பட்ட சில போராளிகளை பள்ளிக்கல்வி கற்பதற்காக அனுமதித்திருந்தது. அதனால் அவர்கள் போராளிகளாக இருந்து கொண்டு பள்ளிக் கல்வியை தொடர்ந்தார்கள் உயர்தர பரீட்சையில் நல்ல பெறுபேற்றினை பெற்றிருந்தாலும் அரச பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர கூடிய பெறுபேறு கிடைக்கவில்லை அதனால் அல்லி விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டு மருத்துவக் கற்கையை கற்பதற்காக பணிக்கப்படுகிறார். அதன் பின்பான காலங்கள் பெரும்பாலும் மருத்துவமும் மருந்துகளுமே அவரது வாழ்க்கையாகிப் போனது. கள மருத்துவத்துக்காக முன்னணி மருத்துவ நிலைகளிலும் களமுனைகளிலும் பயணித்துக் கொண்டிருந்த அல்லி மயக்க மருந்து தொடர்பான சிறப்புப்பயிற்சி பெற்றதன் பின் பெரும்பாலான நாட்களை சத்திரசிகிச்சை அறைகளிலையே கடக்க வேண்டி இருந்தது. அதுவும் மருத்துவர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையின் சத்திரசிகிச்சை அறைகளில் தான் அதிகமாக கடமை செய்தார். அவரது நீண்ட நாள் அனுபவம் சத்திரசிகிச்சை அறைகளில் சக மருத்துவர்களின் பணியை இலகு படுத்துவது வழமை. 25.01.2009 அன்று அல்லி மூத்த மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவர்களுடன் வள்ளிபுனம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரச மருத்துவமனையில் பணியில் இருந்தாள். அப்போது சிங்கள அரச பயங்கரவாதம் மக்களுக்கான மருத்துவமனை என்பதை அறிந்தும் கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுக்கிறது. ஆட்லறி எறிகணைகள் மருத்துவமனை வளாகத்தில் வீழ்ந்து வெடிக்கின்றன. இலகுவில் அடையாளம் காண்பதற்காக மருத்துவமனை கூரையில் சிவப்பு நிறத்திலான சக (+) அடையாளம் மருத்துவமனைக் குறியீடாக வரையப்பட்டிருந்தும் சிங்கள இனவழிப்பு வெறியர் மருத்துவமனை மீது தாக்குதலைத் தொடுக்கிறார்கள். இங்கே மிக முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டிய ஒரு விடயம் ஒன்றுள்ளது. இந்த மருத்துவமனையின் ஆள்கூறு மற்றும் மருத்துவமனை பற்றிய விபரங்கள் அனைத்தும் சர்வதேச உதவி நிறுவனமான செஞ்சிலுவைச் சங்கத்திடம் மருத்துவமனை பொறுப்பதிகாரியால் வழங்கப்பட்டிருந்தது. அந்த விபரங்கள் மருத்துவமனை பாதுகாப்பு வலய ஏற்பாடுகள் தொடர்பாக சிங்கள அரசிற்கு செஞ்சிலுவை சங்கம் வழங்கி இருந்தது. இவ்வாறு மருத்துவமனை பற்றிய விபரங்களை அவர்களிடம் இருந்து பெற்ற பின்பே சிங்களம் திட்டமிட்டு தாக்குதலை நடாத்தி இருந்தது. இது முதல் தடவை நடந்ததல்ல இதற்கு முன்பும் அதன் பின்பும் பல இடங்களில் நடந்திருந்தன. அத்தாக்குதலில் அவசர சத்திரசிகிச்சை ஒன்றை செய்து கொண்டிருந்த மருத்துவர் அல்லி படுகாயம் அடைகின்றார். சிகிச்சை பெற வந்திருந்த நோயாளரின் நிலையோ மேலும் மோசமாகியது. சத்திரசிகிச்சை அறை சிதைந்து போய் இருந்தது. அதனால் அங்கே வைத்து சிகிச்சையை தொடர முடியாத நிலையில் உடனடியாக காயப்பட்டிருந்தவர்கள் உடையார்கட்டுப் பகுதியில் அமைந்திருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். ஆனால் அங்கும் உடனடியாக சிகிச்சை வழங்க முடியவில்லை அங்கும் அவசர சிகிச்சைப் பிரிவு நிறைந்து கிடக்கிறது. ஏனெனில் அது ஒரு இராணுவ மருத்துவமனையாக இருந்தாலும் போராளிகளுக்கான மருத்துவம் மட்டுமன்றி மக்களுக்கான மருத்துவத்தையும் போராளி மருத்துவர்களே செய்ய வேண்டி இருந்தது. ஏனெனில் அங்கே அரச மருத்துவ வளம் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்தளவிலே இருந்தது. அதனால் தமிழீழ மருத்துவப்பிரிவு மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் இணைந்தே பணியாற்ற வேண்டிய நிலையில் இருந்தார்கள். அதனால் அங்கு இருந்த சத்திரசிகிச்சைப் பிரிவிலும் அதிகளவான காயப்பட்டவர்களுக்கான சகிச்சை வழங்க வேண்டிய நிலை இருந்தது. இது ஒரு புறம் இருக்க பாதுகாப்ப வலயம் என்ற பெயரில் சிங்களத்தால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டிருந்த கொலை வலயத்தில் குவிந்து கொண்டிருந்த மக்கள் தொகையை மறுபுறம் கட்டுப்படுத்த முடியாது இருந்தது. அதை விட முதலாவது பாதுகாப்பு வலயத்தில் கொலை வெறித் தாண்டவமாடி தலை உயர்த்த முடியாத அளவுக்கு தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தது சிங்களப் பேரினவாதம். பனங்குற்றிகளால் சுற்றி பாதுகாக்கப்பட்டிருந்த சில அறைகளை சத்திரசிகிச்சை அறைகளாக மாற்றி இருந்த மருத்துவர்கள். காயப்பட்ட மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டிருப்பதால் பாதுகாப்புக்கள் எதுவுமற்று சத்திரசிகிச்சைகளை செய்ய முயன்றார்கள். ஒவ்வொரு தாக்குதல்கள் நடக்கும் போதும் நிலத்தில் குந்தி இருப்பதும் மீண்டும் எழுந்து நோயாளிக்கான சிகிச்சையைத் தொடர்வதுமாக அவர்கள் சாவோடு போராடும் காயப்பட்டவர்களை காக்க வேண்டும் என்ற துடிப்போடு போராடினார்கள். அவ்வாறான நிலையில் தான் அல்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தார். சத்திரசிகிச்சை பிரிவில் காயப்பட்ட மக்கள் அதிகமாக காணப்பட்டதாலும் அல்லியின் காயம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தாது என்ற எண்ணமும் அவரை சிகிச்சைக்காக உள் எடுப்பதில் தாமதத்தை ஏற்படுத்தியது. அதனால் உடனடியாக மருத்துவ உதவியாளர்களால் முதலுதவி சிகிச்சையை மட்டும் வழங்கப்படுகிறது. அல்லி காயப்பட்டதை அறிந்த அல்லியின் எதிர்கால வாழ்க்கைத் துணைவனாக வர இருந்த போராளியும் அங்கு வருகிறார். ( அல்லிக்கும் அந்தப் போராளிக்கும் திருமணம் செய்வதற்கான ஒழுங்குகளை திருமண ஏற்பாட்டுக் குழு செய்திருந்தது ஆனால் சூழல் அவர்களை திருமணப்பந்தத்தில் இணைய விடவில்லை) தன் கண்முன்னே தனது வருங்கால துணைவி காயப்பட்டிருந்த நிலையை பார்க்க முடியாது நின்றார் அந்தப் போராளி. அல்லியின் உயிர் அந்த போராளியின் கண்முன்னாலே கொஞ்சம் கொஞ்சமாக பிரியத் தொடங்கி இருந்ததை அவரும் அறியவில்லை. ஒருபுறம் சிங்களத்தின் தாக்குதல்கள் மறுபுறம் காயமடைந்து வந்த மக்கள் என தாமதத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்ததால் விரைவில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருந்தும் மக்களின் உயிர் காக்க வேண்டிய பொறுப்பில் இருந்த மருத்துவர்கள் தமது சக மருத்துவரை தாமதமாகவே சத்திரசிகிச்சை அறைக்கு உள்ளே எடுத்தார்கள். ஆனால் ஏற்கனவே முழங்காலின் பின் பகுதிக்குள்ளால் உள் நுழைந்திருந்த எறிகணைத் துண்டு தொடை வழியாகப் பயணித்து வயிற்றுக்குள் சென்ற நிலையில் வயிற்றுப் பகுதியில் உள்ளக குருதிப்பெருக்கத்தை (Internal Bleeding ) ஏற்படுத்தி இருந்தது. (Septicemia) அதைக் கண்டு பிடித்து அதற்கான சிகிச்சையை ஆரம்பித்த மருத்துவர்கள் உண்மையில் தோற்றுப் போனார்கள். காயப்பட்ட உடனே அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் அல்லி உயிர் தப்பி இருப்பாளோ என்ற எண்ணம் அவர்களிடையே எழுந்தது. ஆனால் மருத்துவமனையில் நிறைந்திருந்த காயப்பட்ட மக்களும் சிங்களத்தின் தொடர் தாக்குதல்களும் அவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை தர மறுத்திருந்தது. சத்திரசிகிச்சை அறைக்கு எடுக்கப்பட்டு அல்லிக்கு தீவிர சிகிச்சையை மேற் கொள்கின்றனர் மருத்துவர்கள் ஆனால் சிகிச்சை பலனற்றுப் போகிறது. அல்லி யாருக்காக வாழ்ந்தாளோ அந்த மக்களுக்காக இறுதி வரை வாழ்ந்தாள். ஒரே நேரத்தில் தனது உதவியாளர்களினூடாக இரண்டுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கான மயக்க மருந்தை கொடுத்து அவர்களின் சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக முடிப்பதற்கு பெரும் துணையாக நின்ற மருத்துவ வேங்கை தனது வருங்கால துணைவனாக தான் ஏற்க இருந்த போராளிக்கு முன்னால் மண்ணுக்குள் மேஜர் அல்லியாக உறங்குகிறாள். இ.இ. கவிமகன் 10.10.2018
  15. வட தமிழீழத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் வன்னித் தலை நிலத்தையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையிலே மொட்டைக் கறுப்பன்,பச்சைப் பெருமாள் ஆகிய பாரம்பரிய நெல்லினங்கள் விளையும் விவசாயப் பூமியும் எத்தனையோ மாவீரர்களையும் கரும்புலி வீரர்களையும் நாட்டுக்கீந்த வீரப்பூமியுமான பூநகரி எனும் ஊரிலே ஐந்து அக்காக்கள்,மூன்று அண்ணாக்கள் கொண்ட மிகப் பெரிய அழகான குடும்பத்திலே திரு.திருமதி கந்தர் தம்பதியினருக்கு கடைசிப் புதல்வியாக 09.04.1974 இல் ஞானசகுந்தலா அக்கா பிறந்தார்.அவர்களது குடும்பமானது எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆரம்ப காலம் முதல் தோள் கொடுத்து வந்த குடும்பம் ஆகும்.தேசப் பற்றுக் கொண்ட அந்தக் குடும்பத்தில் பிறந்த ஞானசகுந்தலா அக்காவின் புறச்சூழல்கள் அவருக்கு சிறு வயதில் இருந்தே விடுதலைத் தீயை வளர்க்கத் தொடங்கின. அவரது தந்தையார் ஒரு புகழ் பெற்ற பாரம்பரிய விவசாயி ஆவார்.அவர் ஒரு விவசாயியாக இருந்த போதிலும் தனது குழந்தைகளை நாட்டின் தலை சிறந்த கல்விமான்களாக ஆக்க வேண்டும் என்ற கொள்கையில் வெயில்,மழை பாராது வயலில் கடும் பணி புரிந்து அதன் மூலம் வரும் வருமானத்தின் மூலம் தனது குழந்தைகளை நன்றாக கல்வி கற்க வைத்தார். அவர்களும் தந்தையின் கடின முயற்சியும் நம்பிக்கையும் வீண் போகக் கூடாது என்ற எண்ணத்தில் மிகவும் உத்வேகத்துடனும் ஊக்கமுடனும் கல்வி கற்று மூத்த புதல்வர்கள்,புதல்வியர்கள் எல்லோரும் நல்ல அரசாங்க உத்தியோகத்தில் பணி புரிந்து வந்தார்கள். அந்த வகையில் ஞானசகுந்தலா அக்காவும் பெயருக்கு ஏற்றபடி கல்வி ஞானத்தில் வல்லவராக தனது சிறு வயதுக் கல்வியை ஆண்டு 5 வரை பூநகரி செல்வபுரம் அ.த.க பாடசாலையிலும் பின்பு ஆண்டு 6 தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை யாழ்.மருதனாமடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் பாடசாலையின் மாணவர் தங்கு விடுதியில் தங்கி நின்று கல்வி பயின்று வந்தார்.அவர் படிப்பு,விளையாட்டு,சதுரங்கப் போட்டி என்பனவற்றில் சிறந்து விளங்கினார்.கல்லூரியில் நடைபெறும் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி தனது இல்லத்திற்கு நிறையப் பரிசுக் கேடயங்களைப் பெற்றுக் கொடுத்தார்.”விளையும் பயிரை முளையில் தெரியும்” என்ற பழமொழிக்கேற்ப பின்னாளில் சிறந்த ஒரு கணக்காய்வாளராக வருவதற்கு அடையாளமாக மிகக் கூரிய அறிவு படைத்து யாழ் மாவட்டத்திலே அனைத்துப் பாடசாலைகளுக்கு இடையிலாக நடைபெறும் சதுரங்கப் போட்டிகளில் பல பரிசுகளை வென்று தனது கல்லூரிக்கு பெருமை பெற்றுக் கொடுத்தார்.அதுமட்டுமல்ல அவர் படிப்பிலும் சிறந்து விளங்கினார்.க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றி அதி திறமைச் சித்திகள் பெற்று க.பொ.த உயர்தரத்தில் 1993வது அணியில் வர்த்தகப் பிரிவை தேர்ந்தெடுத்து கல்வி பயின்று வந்தார். எமது தமிழீழப் போராட்ட வரலாற்றில் 1991ஆம் ஆண்டு இடம் பெற்ற ஆகாய கடல் வெளி ஆனையிறவுச் சமரானது பெரும் முங்கியத்துவம் வாய்ந்தது.இந்நடவடிக்கையானது 10.07.1991 தொடங்கி 53 நாட்களாக நீடித்தது.இதன் போது நாம் 573 மாவீரர்களை விலையாகக் கொடுத்தோம். அந்தப் போர்க்களமானது இந்த உலகிற்கும் ஒரு செய்தியை உணர்த்தியது.அதற்கும் மேலாக எமது மக்களிற்கும் ஒரு நம்பிக்கையை உணர்த்தியது.நாம் எமது நாட்டிலே சுதந்திரமான ஒரு சொந்த அரசை நிறுவி அதைப் பாதுகாத்து, நாம் தமிழீழ மக்கள், இந்த நாடு எமது தமிழீழ நாடு என்று பெருமை கொண்டு உரிமையுடன் எமது சொந்த அரசை நிறுவி அதைப் பாதுகாத்து நாமே நமது நாட்டை அமைக்க எமக்கு உறுதியான ஒரு படை உண்டு ,அந்தப் படையில் எமது நாட்டுக்கான போராட்டத்தை எமது நாட்டுக்கான இராணுவத்தை அமைக்க முடியும்,அமைய முடியும் என்ற செய்தியை உலகிற்கு மட்டுமல்ல எமது எதிரிக்கு மட்டுமல்ல எமது மக்களிற்கும் உறுதியாக உணர்த்தி நின்றது ஆனையிறவுச் சமர். அந்த வகையில் ஞானசகுந்தலா அக்காவும் ஆ.க.வெ ஆனையிறவுச் சமர் நடை பெற்ற காலப்பகுதியில் 1991 ஆவணி மாதத்தில் இன்றைய எமது தேவை உறுதியுள்ள ஓர் இனம் என்றும் தனது சுதந்திரத்திற்காக எவரிலும் எவர் மீதும் தங்கியிருக்காது தனது சுதந்திரத்திற்கு தன்னையே நம்பி தன்னை அடிமை கொள்ள நினைக்கும் எவரையும் எதிர்த்து நின்று தனது நாட்டிற்காக தனது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடும் ஒரு வீராங்கனையாக தன்னை உருவாக்க தீர்மானித்து உணர்வு கொண்டு எமது போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.அங்கு எமது மகளிர் பயிற்சிப் பாசறையில் 23 ஆவது அணியில் அடிப்படைப் பயிற்சி பெற்று 1992ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் சுடரொளி எனும் நாமம் கொண்டு வரிப்புலியாகி அரசியல்துறைப் போராளியாக நியமிக்கப் பட்டார். 1992-1993 ஆம் ஆண்டு வரை அரசியல்துறை மகளிர் பிரிவில் நிதிப் பொறுப்பாளராக தனது பணியைத் திறம்பட தியாக மனப்பான்மையுடனும் அர்ப்பணிப்புடனும் ஆளுமையுடனும் மேற்கொண்டார்.எமது போராட்டத்தைப் பொறுத்த வரையில் மக்கள் வேறு புலிகள் வேறு அல்ல.மக்கள் தான் புலிகள் புலிகள் தான் மக்கள் என இது உலகியல் ரீதியாக உலக நாடுகள் அனைத்தாலும் உணர்ந்து கொள்ளப்பட்ட விடயம் ஆகும். அந்த வகையில் சுடரொளி அக்காவும் தனது அரசியல் பணியின் போது மக்களோடு மக்களாகவே அவர்களில் ஒருவராகவே வாழ்ந்திருந்தார்.அவரது கனிவான பார்வையும் எந்நேரமும் சிரித்த முகமும் சுறுசுறுப்பும் அமைதியான சுபாவமும் எம் மக்களை அவர்பால் ஈர்த்தது.எமது போராட்டத்துக்கு உதவி செய்த மக்கள் வீடுகளுக்கெல்லாம் சென்று அவர்களின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் பங்கெடுத்து இயன்றவரை அவர்களுக்கு உதவி செய்வார்.மேலும் மக்களின் பிரச்சனைகள்,அத்தியாவசிய தேவைகள், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்குத் தேவையான உதவிகள் போன்றனவற்றை அறிந்து உதவி செய்வார்.அந்த அளவுக்கு தனது மக்களை நேசித்த போராளி அவர். 1991ஆம் ஆண்டு எமது போராட்டமானது பல துறைசார் வளர்ச்சிகளினைக் கண்டிருந்தது.அந்த வகையில் எமது தேசியத் தலைவர் தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவுடன் கலந்தாலோசித்து எமது நிதித்துறை வாணிபங்களின் கணக்கு ரீதியிலான நடவடிக்கைகளை நிர்வகிக்க போராளிகளினால் மட்டுமே அர்ப்பணிப்புடனும் இதய சுத்தியுடனும் செயற்பட முடியும் என்பதனை உணர்ந்து நிதித்துறை கணக்காய்வுப் பகுதி என்ற பிரிவினை உருவாக்கினார். எனவே அதற்கு கணக்கியல் ரீதியில் அறிவும் அனுபவமும் புலமையும் உடைய போராளிகள் மற்றைய பிரிவுகளில் இருந்து நிதித்துறை கணக்காய்வுப் பகுதிக்கு உள்வாங்கப்பட்டனர்.அந்த வகையில் சுடரொளி அக்காவும் நிதி தொடர்பான கணக்கு நடவடிக்கைகளில் அவரது புலமை,கூரறிவு என்பன இனங் காணப்பட்டு 1993ஆம் ஆண்டு நிதித்துறை மகளிர் கணக்காய்வுப் பகுதிக்கு உள்வாங்கப் பட்டார். அங்கு 1993ஆம் ஆண்டு காலப் பகுதியில் பருத்தித்துறைப் பகுதியில் ஆயப்பகுதி,வருவாய்ப் பகுதி மற்றும் எமது நிதித்துறை வாணிபங்களில் ஒன்றான சேரன் வாணிபத்தின் யாழ்ப்பாணன் கடை போன்றனவற்றில் தனது கணக்காய்வுப் பணியைத் திறம்பட மேற்கொண்டார்.அத்துடன் தமிழீழ மீட்பு நிதி தொடர்பான பணிகளையும் மேற்கொண்டார். பின்பு 1994ஆம் ஆண்டு காலப் பகுதியில் பணித் தேவையின் தகுதி கருதி பல்கலைக்கழகத்திற்கு செல்லாத மற்றைய நிதித்துறை ஆண்,பெண் போராளிகள் அனைவரையும் யாழ் உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்கும்படி பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவினால் பணிக்கப்பட்டனர்.அந்த வகையில் சுடரொளி அக்காவும் அவ்வணியில் தெரிவாகினார்.அவர் அக் கற்கை நெறியினை மிகுந்த விருப்புடனும் ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொண்டார்.அங்கே ஒன்பது மாதங்கள் போராளிகள் அனைவரும் காலை 8 மணி முதல் மாலை 2 மணி வரை தொழில்நுட்பக் கல்லூரியில் கற்கை நெறியினையும் மாலை நேரத்தில் தமக்கென ஒதுக்கப்பட்ட வாணிபங்களின் கணக்காய்வுப் பணியினையும் சோர்வடையாது மேற் கொண்டனர்.அதைவிட அவர்களுக்கு இரவு நேரங்களில் யாழில் பிரபலம் பெற்ற வணிகத் துறை சார்ந்த ஆசிரியர்களினால் விசேட வகுப்புக்களும் நடைபெறுவதுண்டு. சுடரொளி அக்காவும் சிறிதும் சோர்வடையாமல் கற்கை நெறியினையும் மேற்கொண்டு அதே நேரத்தில் கணக்காய்வுப் பணியினையும் மேற்கொண்டு புடம் போடப்பட்டு நிதித்துறைக் கணக்காய்வுப் பகுதியின் தலை சிறந்த கணக்காய்வாளர் ஆகினார்.பின்பு 1995ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் நகை வாணிபம்,சேரன் இரும்பகம்,எழிலகம் புடவை வாணிபம் போன்றவற்றிலும் தனது கணக்காய்வுப் பணியினை மேற்கொண்டார். 1995ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் எமது முகாமை ஒழுங்கமைத்து வாணிபங்களுக்கான கணக்காய்வுப் பணிகள் அங்கிருந்து மேற்கொள்ளப்பட்டன.பின்னர் பங்குனி மாத நடுப்பகுதிகளிலும் அங்கிருந்து வன்னிப் பெரு நிலப்பரப்புக்கு இடம்பெயர்ந்து வந்து புதுக்குடியிருப்புப் பகுதியில் எமது முகாம் ஒழுங்கமைக்கப்பட்டு எமது நிதித்துறை வாணிபங்களும் ஒழுங்கமைக்கப்பட்டு கணக்காய்வுப் பணிகள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் சீராக மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் சுடரொளி அக்காவும் தனது கணக்காய்வுப் பணியை போதிய வசதியின்மை காணப்பட்டும் கிடைத்த வளங்களைக் கொண்டு செவ்வனே மேற்கொண்டார்.அக்காலப்பகுதியில் காணப்பட்ட பொருளாதாரத் தடை காரணத்தினால் எரிபொருள் தட்டுப்பாட்டினால் உந்துருளிகள் பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டது.அதனால் சுடரொளி அக்கா பணி நிமித்தம் துணுக்காய் மல்லாவி,மாங்குளம் போன்ற இடங்களுக்கு துவிச்சக்கர வண்டி மூலமே பிரயாணம் மேற்கொண்டு தனது உடற்சோர்வையும் பொருட்படுத்தாது விசுவாசத்துடனும் விருப்புடனும் தனது பணியினை மேற்கொள்ளுவார். 1995 இல் வலிகாமம்,பின் 1996 இல் தென்மராட்சிப் பகுதி போன்ற இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து வன்னியை வந்தடைந்ததால் எமது போராளிகள், மற்றும் மக்களின் உளவரணானது பாதிக்கப்பட்டுக் காணப்பட்டது.இதனால் இராணுவத்தினருக்கு பதிலடி கொடுக்கவும் எமது போராளிகள்,மக்களின் உளவரண் வலுப் பெறுவதற்கும் எந்த ஒரு பலத்திலும் பலவீனம் இருக்கவே செய்யும்.அதனைச் சரியாக கண்டறிந்து திட்டமிட்டுத் தாக்குவதில் தான் வெற்றியின் ரகசியம் இருக்கின்றது என்ற கொள்கையுடைய எமது தேசியத் தலைவர் ஓயாத அலை 1 என்ற நடவடிக்கையை முல்லைத்தீவிலுள்ள மிகப் பலம் கொண்ட இராணுவ முகாம் மீது மேற் கொள்ளத் தீர்மானித்தார். இதற்காக ஆளணிப் பற்றாக்குறை காரணத்தினால் எமது பிரிவில் இருந்தும் போராளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.அவர்களில் ஒருவராகச் சுடரொளி அக்காவும் தெரிவு செய்யப்பட்டார்.இரண்டு மாதங்கள் கடும் பயிற்சியின் பின் விசேட அணியில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டு ஓயாத அலைகள் 1 வலிந்த தாக்குதல் நடவடிக்கையில் திறம்படக் களமாடி பின்பு சத்ஜெய 1 தாக்குதல் நடவடிக்கையிலும் திறமையாகக் களமாடி வெற்றியுடனும் பெரும் மனத் திருப்தியுடனும் எமது முகாமிற்குத் திரும்பினார். பின்பு அவர் 1997 ஆம் ஆண்டு மார்கழி மாதம் அவர் சுகவீனம் காரணமாகச் சாவடையும் வரை எமது நிதித்துறை வாணிபங்களில் ஒன்றான நகை வாணிபத்தின் கணக்காய்வு அணிக்கு அணிப்பொறுப்பாளராக பொறுப்பேற்று பணி மேற்கொண்டு வந்தார்.பணியிடத்தில் பணியாளர்களுடன் மிகவும் அன்பாகவும் பண்புடனும் அதேவேளை தேவைப்படும் போது கண்டிப்புடனும் ஆளுமையுடன் செயற்படுவார். துணுக்காய்,மல்லாவி,மாங்குளம்,விசுவமடு,முழங்காவில்,புதுக்குடியிருப்பு,ஸ்கந்தபுரம்,தண்ணீரூற்று போன்ற இடங்களில் உள்ள நகை வாணிபங்களுக்கு தனது 125 ரக உந்துருளியில் பிரயாணம் செய்து தனது கணக்காய்வுப் பணியினை மேற்கொள்ளுவார்.குள்ளமான மெல்லிய தோற்றமுடைய அவர் தன்னை விட பெரிய 125 ரக உந்துருளியை ஓட்டும் அழகை நாங்கள்”துவைக்கிற கல்லில தவளை உட்கார்ந்து இருக்கிறது போல இருக்குது”என்று கிண்டல் பண்ணுவோம்.அதனை அவர் கோபிக்காமல் சாதாரணமாகவே எடுத்து சிரித்து விட்டுச் செல்லுவார்.சக போராளிகளை மதித்து அரவணைத்து அன்புடன் நடந்து கொள்ளுவார்.புதிய போராளிகளுக்கு கணக்காய்வு நடவடிக்கைகளை சுலபமாக புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அதன் நெளிவு சுளிவுகளை இலகுவான முறையில் துல்லியமாக புரிய வைப்பார். பணி என்று வந்து விட்டால் உணவு,உறக்கம் அவருக்கு இரண்டாம் பட்சம் தான்.பெரும்பாலும் தனது தூர இடத்துப் பிரயாணங்களை நேரத்தினை வீணடிக்கக் கூடாது என்ற நோக்கில் பகல் முழுவதும் பணி புரிந்துவிட்டு இரவில் தான் மேற்கொள்ளுவார்.உணவு உட்கொள்ளும் நேரத்தைக் கூட சிக்கனப்படுத்தி ஒரு போராளியை உந்துருளியைச் செலுத்த விட்டு தான் பின்னிருக்கையில் அமர்ந்து உணவினை உட்கொள்ளுவார். வாணிபங்களின் முடிவுக் கணக்குகள் சமப்படாமல் பிழைக்குமெனில் எந்நேரமும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு நித்திரையின் போது கூட பேரேட்டை(ledger) தலையணை போல் வைத்துக் கொண்டு படுத்திருந்து நித்திரையில் இருந்து திடீரென விழித்து தவறினைக் கண்டு பிடித்து சீர் செய்வார்.நாங்கள் கூட எங்களது வாணிபங்களின் முடிவுக் கணக்குகள் சமப்படாவிட்டால் எப்படிப்பட்ட சிக்கலான கணக்கு என்றாலும் அவர் கண்டு பிடித்து சீர் செய்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் சுடரொளி அக்காவையே நாடுவதுண்டு. தடிமன்,காய்ச்சல்,தலையிடி போன்ற நோய்கள் வந்தால் ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் வலி நிவாரணி மாத்திரையைப்(panadol) போட்டுவிட்டு தனது பணிக்குப் புறப்பட்டு விடுவார்.இதனால் அவரது உடல் நிலை சீரற்றுக் காணப்பட்டது.ஆனால் அதைப் பற்றி யோசிக்காது தன்னை முழுமையாக கணக்காய்வுப் பணிக்கு அர்ப்பணித்த போராளி அவர். நான் எனக்கு அவரைத் தெரிந்த நாள் முதல் அவர் விடுமுறையில் அவரது வீட்டிற்குச் சென்று ஒரு நாளுக்கு மேல் தங்கி நின்றதைப் பார்த்ததில்லை.விடுமுறையில் நிற்கும் நாட்களைக் கூட சிக்கனப்படுத்தி அந்த நாட்களில் கூட தனது கணக்காய்வுப் பணியை மேற்கொண்டு “அண்ணை எங்களை நம்பி இந்தப் பணியைத் தந்திருக்கிறார்….அந்த நம்பிக்கையை நாங்கள் வீணடிக்கக் கூடாது”என்று கூறுவார். எந்த ஒரு சாதாரண உணவையும் அவர் ரசித்து ருசித்துச் சாப்பிடுவார்.உதாரணத்துக்கு எமது உணவு வழங்கல் பகுதியில் இருந்து வரும் கத்தரிக்காய்க் கறியினைக் கூட(நிறைய போராளிகளுக்கு சேர்த்து உணவு தயாரிப்பதனால் அதன் சுவை குறைவாகவே காணப்படும்) சுவையான கோழி இறைச்சிக் கறியினைச் சாப்பிடுவது போல ரசித்து ருசித்து உண்ணுவார்.அவர் அப்படி உண்ணும் அழகைப் பார்த்து எமக்கும் கூட அதை உண்ண வேண்டும் என்ற அவாத் தோன்றும். அவர் கணக்காய்வுப் பணியினை மேற் கொண்டாலும் அவரது எண்ணங்களில் எப்போதும் சண்டைக் களங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற அவாவே காணப்பட்டது.எந்நேரமும் களத்தில் நிற்கும் போராளிகளை நினைத்துக் கவலைப்படுவார்.”நாங்கள் இங்கே இப்படி வசதியாக இருக்கிறோம்…களத்தில் நிற்கும் போராளிகள் பனி,வெயில்,மழை,உணவு,உறக்கம் பாராது பணி புரிந்து எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்”என்று அடிக்கடி கூறிக் கொண்டே இருப்பார்.தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைக்கும்படி தேசியத் தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பி விட்டு பதிலுக்கு காத்திருந்தார்.அவரின் பணியின் தேவை கருதி அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு தலைவரிடம் இருந்து பதில் வந்தும் மீண்டும் மனம் சோராமல் மறுபடியும் தன்னைக் கரும்புலிகள் அணியில் உள்வாங்கும்படி தேசியத் தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பி விட்டுப் பதிலுக்கு காத்திருந்தார். இவ்வாறு எந்நேரமும் ஓய்வு ஒழிச்சலின்றி தனது கணக்காய்வுப் பணியையே முழு மூச்சாக மேற் கொண்டு தனது உடல் நிலையை சரிவரக் கவனத்தில் கொள்ளாது இருந்த காரணத்தினால் நீண்ட நாட்களாக இனந் தெரியாத வகைக் கொடிய காய்ச்சலால் பீடிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்தார்.அப் போதும் கூட முகாமில் வைத்து தனது வாணிபங்களின் ஆவணங்களை வரவழைத்து கணக்காய்வினை மேற்கொண்ட சுடரொளி அக்கா,அன்று சாவடைந்த நாளன்று பகல் கூட தனது வாணிபத்தின் சமப்படாக் கணக்கொன்றினைச் சமப்படுத்திக் கொடுத்து விட்டு 16.12.1997 அன்று இரவு எம்மையெல்லாம் துயரில் ஆழ்த்தி விட்டு தனது கரும்புலிகள் அணியில் சேர்வதற்கான கனவினையும் மனதில் சுமந்து கொண்டு தனது பணியினை மற்றைய போராளிகள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் மீளாத் துயில் கொண்டுவிட்டார். – நிலாதமிழ்
  16. ஒவ்வொரு நாளும் வாழ்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எம்முடன் வாழ்ந்தவர்களைப்பற்றி நினைக்க வைத்து விடும் அப்படித்தான் இன்றும் நெல்ஷா அக்காவின் நினைவுடன்… வழமையான பாடசாலை விடுமுறை நாட்களில் சின்னமகள்(கவிநிலா)விற்கு இரவு தூக்கத்திற்கு போகும் போது கதைசொல்லவேண்டும் இன்று வழமைக்கு மாறாக மகளிடம் நான் கேட்டேன். “அம்மாவிற்கு தூக்கம்வரவில்ல இன்று நிங்கள் கதை சொல்லி என்னை முதலில் தூங்கவைத்த பின்தான் தூங்கவேண்டும் என்றேன் சரி இதற்கு ஒரு வழி இருக்கு என்று சொல்லி முதலில் கண்களை இருவரும் மூடுவம் என்றாள் .இப்போ நான் சொல்லுவதை கற்பனை பண்ணுங்க எண்டன் ஒரு பட்டியில் நிறைய ஆட்டுக்குட்டிகள் நிக்கிறது தெரிகிறதா? என்ன நிறம் எண்டு கேட்டன் பிடிச்ச கலரைவையுங்கள் என்றாள் இப்போ ஆட்டுக்குட்டிகள் ஒவ்வொன்றாய் பாய்ந்து கடவையை கடந்து வெளியே போகபோகுது நிங்கள் எண்ணுங்கள் என்றாள் … அப்போது தான் எனக்கு இன்னொரு நினைவு வந்தது ஆட்டுக்குட்டிகள் நிக்கட்டும் நான் இப்போ உங்களுக்கு ஒரு கதை சொல்லுறன் … மேஐர் நெல்ஷா அக்காவும் நானும் யெயசுக்குறு களமுனைக்கு இருந்த பிரதான கள மருத்துவமனை நிலையத்தின் பதுங்குழி பக்கத்தில் படுத்திருக்கின்றோம் வானத்தில் வெள்ளி பூத்து கிடக்கிறது. நெல்ஷா அக்கா களமருத்துவமனைகளிற்கு பொறுப்பாகவிருத்தவா அவாவிடம் இருந்தது ஒரு சயிக்கிள்தான் ஓமந்தையில் இருந்து மன்னார் வரையும் அதிலதான் போய் எல்லா வேலைகளையும் கவணிப்பார். இயக்கம் சொத்துகளை பாதுகாப்பதிலிருந்து. சிக்கனப்படுத்துவதுவரை சரி வர செய்வதில் அவளுக்கு நிகர் அவள்தான். அவளுடன் நல்லா பழகியவர்களிற்கு தெரியும் அவளது இழகியமனம். எங்களுக்கு அவா வாறது என்றால் நல்ல சந்தோஷம் சாப்பாட்டு சாமன்களும் கச்சானும் கொண்டு வருவா அவாட சகோதரன் பணம் அனுப்பி இருந்தால் அதிவிசேடமான உணவுப்பொருட்களுடன் வருவாள். அவளிற்கு வாங்கிக்கொடுக்கிற உடுப்புகளை தான் போடமாட்டா களத்தில் நிற்கும் பிள்ளைகளுக்குதான் கொடுப்பா இடையிடையே மகளின் கேள்விகளுக்கு பதிலும் சொல்லிக்கொண்டு இருவரும் ஓமந்தை கிழவன்குளத்தில் நடந்து கொண்டிருந்தோம். எவ்வளவு களைத்துப்போய் வந்தாலும் வந்தவுடன சயிக்கிள துடைச்சு போட்டுதான் வருவா இப்படிதான்ஒர் இரவு படுத்திருக்கும் போது நித்திரை வர இல்லை என்றேன் வானத்தில இருக்கிற நட்சத்திரத்தில் 108ஜ சரியா க எண்ணி முடித்தால் உனக்கு பிடித்தவங்க கனவில் வருவார்கள் என்றா .மகள் கேட்டா எண்ணி முடித்திங்களா என்று இல்லை இடையில் நித்திரை என்றேன். இப்போ அந்த அன்ரி எங்க என்று கேட்க வீரச்சாவு என்றேன்அவா பற்றி சொல்ல நிறைய இருக்கு நேரம் அதிகாலை 1.30ஆகிவிட்டது நாளைக்கு சொல்கின்றேன் என்றேன். இன்று அக்கா கானநிலாவும் சேர்ந்துகொண்டா அந்த நெல்ஷா அன்ரி பற்றி மிச்ச கதையை சொல்லுங்க என்று….. எம்முடன் வாழ்ந்தவர்களைப்பற்றி நாம் சொல்லாமல் யார் சொல்லப்போறார்கள். மிதயா கானவி
  17. வடக்கு புன்னாலைக்கட்டுவனில் இந்தியப் படையின் முகாம் பொறுப்பதிகாரியான மேஜர் கே.பி.தாஸ் அச்செழு அங்கிளிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். அதாவது அக்காச்சி எப்படிப்பட்டவன் என்பதே அக்கேள்வி. அதற்கு அங்கிள் நல்ல போராளி அதைவிட மிகச் சிறந்த சமூகசேவையாளன் என்று பதில் கொடுத்தார். இதன் பின் அக்காச்சியின் பொதுப் பணிகள் பற்றி ஆராய்ந்த மேஜர் கே.பி. தாஸ் தான் அக்காச்சியைப் பார்க்க வேண்டும் என்றும், அக்காச்சியருகில் இருந்து தேனீர் குடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அடுத்த போர் நிறுத்தம் வரும்போது தனது கண்களைக் கட்டிக்கொண்டுபோயாவது அக்காச்சியின் முன் நிறுத்துங்கள் என்றார். தெற்கு புன்னாலைக்கட்டுவன் முகாம் அதிகாரியான மேஜர் ஒபரோய் பத்து நாட்களுக்குள் அக்காச்சியை உயிருடன் பிடிப்பேன் எனச்சொல்லி தோற்றுப் போனார். ஆனால் பின்னர் அக்காச்சி சமூகத்திற்கு நிறைய சேவைகள் செய்துள்ளான் என்று பிரஜைகள் குழுவிடம் கூறியுள்ளார். இதேபோல் நீர்வேலிச் சந்தியில் முகாமிட்டிருந்த படையதிகாரியான மேஜர் பாபுஜி ஏபிரகாம், அக்காச்சியின் சமூக சேவைகள் பற்றி தான் கேள்விப்பட்டதாக பொது மக்களிடம் கூறியிருக்கிறார் அனைத்து மக்களதும் அன்பிற்கு உரித்துடைய அந்த வெள்ளை உள்ளம் மறைந்த செய்தி குடாநாடெங்கும் பரவியது. எல்லோர் முகத்திலும் ஒரே துயரம். வலிகாமம் மேற்கில் வட்டுக்கோட்டை தொடக்கம் வலிகிழக்கு அச்சுவேலி, புத்தூர் பகுதியில் இருந்தும் மக்கள் சாரை சாரையாக மிதிவண்டிகள், உழுபொறி வண்டிகள்(டிரக்கரர்), சிறு உழுபொறி வண்டிகள்(லான்ட்மாஸ்ரர்கள்) மூலமும் கப்டன் அக்காச்சியின் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்ற அந்த இடத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். ஈகைச்சுடர் திலீபன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் தொடங்கிய 15.09.1989 நினைவு வணக்க அலங்கரிப்பு மற்றும் பதாகைகளைக் கட்டுவதிலும் ஈடுபட்டிருந்த மக்களின் செவிகளில் அக்காச்சியின் வீரச்சாவுச் செய்தி விழுந்த போது அக்காச்சியின் உடலையாவது கடைசியாகப் பார்த்து விடவேண்டும் என்ற ஆவலில் எல்லோரும் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்ற அந்த ஒதுக்குப் புறமான ஏகாந்தமான பகுதியை நோக்கி விரைந்து கொண்டிருந்தோம். தரிசு நிலப்பகுதி அந்த தரவை நிலத்தை ஊடறுத்துச் செல்லும் களிமண் பாதையில் நெடுந்தூரம் சென்று பின்னர் இடைக்கிடை கரடுமுரடான பாதையிலும் சேற்று நிலத்திலும் மாறி மாறி சில மைல்கள் தூரம் சென்று அக்காச்சியின் வீரவணக்க நிகழ்வு நடந்த அந்த இடத்தை அச்செழு அங்கிளும் எனது மகனும் நானும் அடைந்தோம். இன்னுமொரு பாதைவழியாக, யாழ். மாவட்ட மக்கள் முன்னணி அமைப்பளார் ராஜன் அவர்களை வழிமறித்து அக்காச்சி பற்றிய செய்தியை வினவிய நீர்வேலி உதயதாரகை வாசிகசாலை மக்கள், துயரம் ததும்பிய குரலில் “ஐயோ எங்கள் தலைவனை இழந்து விட்டோம்” என்று அழுது கூறினார்கள். இப்படித்தான் அக்காச்சியின் வித்துடல் வைக்கப்பட்டிருந்த பேழையைச் சுற்றி அமர்ந்திருந்த மக்கள் பெண்கள் முதியவர்கள் தமது தலைவனை இழந்த சோகத்தில் மூழ்கியிருந்த காட்சி என் நெஞ்சை பிழிவதாக இருந்தது. இளமைக்காலம் இளமைக் காலம் வசந்த காலம் என்பர். நீர்வேலியைச் சேர்ந்த சிவகுருநாதன் – கனகமணி இணையர் தாம் பெற்ற இரட்டைக் குழந்தைகளுக்கு சிறிகாந்தன் என்றும் சிறிரஞ்சன் என்றும் பெயரிட்டிருந்தனர்;. சிறிரஞ்சன் சிறு வயதிலேயே சாவடைந்து விட்டான். சிறிகாந்தன் விடுதலை இயக்கத்தில் ஜெகன் என்ற பெயரில் இணைந்து கொண்டு அக்காச்சி என்ற பெயரில் மக்கள் தலைவனாக இருந்தான். அக்காச்சி பள்ளியில் படிக்கும் காலத்தில் விளையாட்டுக் போட்டிகளிலும் கராட்டிப் பயிற்சிகளிலும் குதிரையேற்றப் பயிற்சிகளிலும் மிகுந்த ஆர்வமுள்ளவனாக இருந்தான். துடுப்பாட்டம், உதைபந்தாட்டம் ஆகிய வற்றோடு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கிளித்தட்டு விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக அக்காச்சி விளங்கினான். குதிரையேற்றப் பயிற்சிக்காக சிறுவயதில் ஒரு குதிரையை வளர்த்து வந்தான். சிறுவயதிலிருந்தே கீழ்ப்படிவு, நேர்மை, கண்ணியம், இரக்கம் சகிப்புத் தன்னை, கொடுத்த வேலைகளை திறம்படச் செய்யும் மனப்பான்மை என்பன இவனிடம் குடிகொண்டிருந்தன. ஒரு முறை ஈகைச்சுடர் திலீபனின் தந்தையார் இராசையா மாஸ்ரர் “உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத வெள்ளையுள்ளம் அக்காச்சியின் உள்ளம்” என்று குறிப்பிட்டார். கப்டன் அக்காச்சி (சிவகுருநாதன் சிறிகாந்தன்) எப்படிப் போராளியானான்? 1983ஆம் ஆண்டு கலவரத்தின் எதிரொலிகள் எல்லோரையும் போல அக்காச்சியையும் பாதித்தது. இதனால் விடுதலை இயக்கத்தின் போரணியில் ஒர் உறுப்பினனாக இணைந்து கொண்டான். நீர்வேலியைச் சேர்ந்த கப்டன் கண்ணாடி ராஜனும்(இராஜதுரை ஜெயக்குமார்) இவனும் ஒரே நாளில் இயக்கத்தில் இணைந்து கொண்டனர். ‘அக்காய் ரீசேர்ட்’ அணிந்து கொண்டு நின்ற ஜெகனைக் கண்ட, மறைந்த கப்டன் பண்டிதர் “அக்காச்சி” என்ற பெயரை வைத்தார். அன்றிலிருந்து அப்பெயரே நிலைத்து நின்றுவிட்டது. விடுதலை இயக்கத்தின் இரண்டாம் படைப்பிரிவில் படையப் பயிற்சியை முடித்துக் கொண்டு 1985ஆம் ஆண்டின் முற்பகுதியில் தாயகம் திரும்பிய அக்காச்சி அக்கால கட்டத்தில் விடுதலை இயக்கத்தினால் நடாத்தப்பட்ட பல தாக்குதல் நடவடிக்கைகளிலும், 1985 பெப்ரவரியில் இடம்பெற்ற கொக்கிளாய் படை முகாம் தாக்குதல், 1985 ஏப்ரல் மாதம் நடைபெற்ற யாழ்ப்பாணப் காவல்துறை நிலையத் தாக்குதல், 1985 மே மாதம் நடைபெற்ற மன்னார் காவல்துறை நிலையத் தாக்குதல் என்பவற்றில் பங்கேற்றான். யாழ். காவல்துறைநிலையத் தாக்குதலில் அக்காச்சி குருநகர் பாசையூர் பகுதிகளில் தாக்குதலுக்குத் தயார் நிலையில் நின்ற விடுதலைப் புலிகளுடன் இணைந்து குருநகர் படை முகாமைச் சேர்ந்தோர் வெளியேறி முன்னேறாதபடி தடுத்துக் கொண்டிருந்தான். 1985ஆம் ஆண்டு நடுப்பகுதியில் யாழ். குடா நாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதன் பின் நீர்வேலிப் பகுதிப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்ட அக்காச்சி ஸ்ரீலங்காப் படைகள் முகாமைவிட்டு வெளியேறாத படி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் பங்குபற்றினான். குறிப்பாக பலாலியிலிருந்த தரைப்படை – வான்படை கூட்டுத் தளத்திலருந்து படைகள் வெளியேற முயன்றபோது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பல எதிர்த் தாக்குதல்களில் அக்காச்சி பங்கேற்றான். நீர்வேலிப் பகுதியில் பொம்மர் குண்டுவீச்சு வானூர்திகள் குண்டுகளை வீசித் தாக்ககுதல் மேற் கொண்டபோது அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அக்காச்சி உதவி செய்தான். படை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு நீர்வேலி கூட்டுறவுச் சங்கக் கட்டடமொன்றை ஒதுக்கிக் கொடுத்து அவர்கள் நலன்களைக் திறம்படக் கவனித்துக் கொண்டான். பல இடம்பெயர்ந்தோர் முகாம்களை அமைத்து மக்களைப் பாதுகாத்தான். மழையில் நனைந்து கொண்டு சென்று இடம்பெயர்ந்தவர்களிற்கு உதவிகள் செய்திருக்கிறான். விடுதலை இயக்கத்துடன் தொடர்பு கொண்டு உழைத்த பொது மக்களுக்கு தோள் கொடுத்து உதவியிருக்கிறான். வறுமையில் வாடிய மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை அளிக்க பண்ணைகளை நிறுவினான். கிராமிய உழைப்பாளர்கள் சுரண்டியபோது அம்மக்களின் நேர்மையான ஊதியத்திற்காகவும் நேரப்படியான உழைப்பிற்காகவும் போர்கொடி தூக்கிப் போராடியவன் அக்காச்சி. ஏழைகளுக்கு கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக தளபதி கிட்டுவின் அறிவுரையில் பல நேர்மை விலைக் கடைகளைத் திறந்தான். பொதுப்பணிகள் தமிழ் இளைஞர்கள் ஒவ்வொருவரும் பொதுப்பணி செய்ய முன்வரவேண்டும் என அறிஞர் அண்ணாத்துரை ஒரு முறை குறிப்பிட்டார். விடுதலைப் போராளியாகவும், சமூக ஒழுங்கமைப்பவனாகவும் பொதுப் பணியாளனாகவும் விளங்கிய கப்டன் அக்காச்சியை மக்கள் தலைவனாக்கிய சிறப்புப் பரிமாணங்கள் அவனது யாதார்த்தமான செயற்பாடுகளேயாகும். சக விடுதலைப் போராளிகள் அக்காச்சியை ஏழைகளின் தொண்டன், மக்கள் தலைவன் என்று சுவையாக குறிப்பிடுவதுண்டு. படித்தவர்கள் பலர் புத்தகப் பூச்சிகளாகவே வாழ்நாளை வீண் நாளாக்கி மறையும் காலத்தில் கிராமத்தையே கலாசாலையாக்கி ஏழைகளையே தனது ஆசான்கiளாக்கி அக்காச்சி அனுபவக் கல்வியூடாக மக்கள் பணிசெய்யக் கற்றுக் கொண்டவை ஏராளம். அவையே அவனது முன்னேற்றப் பாதையின் படிக்கற்களாகும். அபிவிருத்தியென்பது சமூகத்தின் அடி மட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்பட வேண்டு என ஒர்சுலாக்கிக்ஸ் என்ற அறிஞர் குறிப்பிட்டார். அபிவிருத்தியில் பல்வேறு பரிணாமங்களை சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்ப விரும்பிய கப்டன் அக்காச்சி, கீழ் மட்டத்தில் வாழும் மக்களுக்கு அடிப்படைக் கல்வியறிவைப் போதிக்க விரும்பி அதற்கான திட்டங்களை முதலில் வகுத்துக் கொண்டான். கல்விப் பணிகள் “அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” இப்படி மகாகவி பாரதியார் பாடினார். கப்டன் அக்காச்சியின் கல்விப் பணிகளும் பாரதி பாடலின் தாற்பரியத்தை வெளிப்படுத்துவனவாகவே அமைந்திருந்தன. நீர்வேலி பல பொருளாதார கட்டுமானங்களைக் கொண்ட மக்கள் வாழும் பகுதியாகும். பொருளாதார வசதி படைத்த செல்வந்தர்களும் மிக ஏழைகளும் இங்கே வாழ்கிறார்கள். முற்றிலும் கிராமப் புறம் சார்ந்த ஒரு பகுதிப் பொறுப்பாளனாக பொறுப்பேற்றுக் கொண்ட அக்காச்சி இப் பகுதியில் வாழும் வசதி குறைந்த குழந்தைகளுக்கு கல்வியூட்ட விரும்பி பல பகுதிகளில் மழலைகள் பாடசாலைகளை உருவாக்கினான். புத்தூர் வாதரவத்தையில் இரண்டு மழலைகள் பாடசாலைகளை திறந்து வைத்தான். நீர்வேலி கந்தசாமி கோயில் அருகில் ஓர் மழலைகள் பாடசாலையை உருக்கினான். இதைவிட இடைநிலைக் கல்வி கற்கும் மாணவர்களது வசதி கருதி அக்காச்சி கட்டணமற்ற வகுப்புக்களை தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தினார். அக்காச்சி அச்செழுவில் நூலகம் ஒன்றை அமைத்திருந்தான். வெளிநாட்டு விடுதலைப் போராட்டங்கள் பற்றி அபூர்வமான நூல்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. தனது போராளிகளை அரசியல் அறிஞர்களாக வளர்த்து எழுப்பதில் அவன் அதிக நாட்டமுடையவனாக இருந்தான். அந் நூலகத்தில் அருந்த நூல்களையெல்லாம் 1987 ஒக்ரோபர் – நவம்பர் மாத காலத்தில் அந்நிய ஆக்கிரமிப்பு அள்ளிக் கொண்டு சென்று நீர்வேலி – மாசுவன் சந்தியில் போட்டுத் தீயிட்டது. யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது அதனைக் கண்டித்த இந்தியா தனது வல்வளைப்புப் படைகள் மூலம் ஈழத்தின் பல பகுதிகளிலிருந்த நூலகங்களைத் தீக்கிரையாக்கி ‘வரலாற்று பெருமை’ யைப் பெற்றுக் கொண்டது. மதிய உணவு தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படும் திட்டமும் இலங்கை அரசின் மாணவர் மதிய உணவுத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படு முன்னரேயே கப்டன் அக்காச்சி பாலர்களிற்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தான். இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் அரசியல் நோக்குடன் இத்திட்டம் அடுத்த தேர்தலை நோக்காக் கொண்டே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அடுத்த சந்ததின் வளமான வாழ்வுக்காக அக்காச்சி இத்திட்டத்தை அறிமுகம் செய்தான். நீர்வேலி கந்தசுவாமி கோயில் அருகில் அமைக்கப்பட்ட பாடசாலை அபிவிருத்திக்காக காலஞ்சென்ற மக்கள் கலைஞர் வி.எம்.குகராஜா அவர்கள் தயாரித்த “மனிதனும் மிருகமும்” என்ற நாடகத்தை அரங்கேற்றி அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு பாடசாலைக்கான சுற்றுமதில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தான். பாடசாலை காலையிலும் மாலை வேளையிலும் இலவசமாக இருநேர உணவு வழங்க ஏற்பாடு செய்தான். பொருளாதார வசதியுடையவர்களை அணுகி அவர்கள் மூலமாக தளபாட வசதிகளைப் இப் பாடசாலைக்குச் செய்த கொடுத்தான். நீர்வேலி வீரபத்திரர் கோயில் அருகில் ஈகைச்சுடர் திலீபன் நினைவு ஒரு நூலகத்தை அமைத்த அக்காச்சி, அக் கட்டடித்திற்குத் தேவையான சீமெந்து கற்களை தனது சொந்த வீட்டிலிருந்தே எடுத்து வந்து பயன்படுத்தினான். ஏழை மக்கள் மதுப்பழக்கத்திற்கு இலக்காகி சீரழியாமல் தடுக்க விரும்பிய அக்காச்சி கசிப்பு ஒழிப்பு நாடக மூலம் பரப்புரை செய்தான். கசிப்பு ஒழிப்பு நேரடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டான். தூய்மைப்படுத்தல் பணி அக்காச்சி தான் பொறுப்பாளராகவிருந்த நீர்வேலிப் பகுதியில் காலத்திற்குக் காலம் பல தூய்மையாக்கல் பணிகளைச் செய்து வந்தான். இப் பணிகளில் போராளிகளும் பொது மக்களும் இணைந்து பங்கேற்றார்கள். நீர் வழங்கல் வசதி குறைந்த இடங்களில் குளங்களைத் திருத்தும் வேலைகளை அக்காச்சி செய்து வந்தான். அந்த வகையில் நீர்வேலிப் பகுதியிலுள்ள நடுவத்தாள், கிராஞ்சி போன்ற குளங்களின் திருத்த வேலைப் பணிகள் கப்டன் அக்காச்சியால் மேற்கொள்ளப்பட்டவையாகும். அக்காச்சி இரக்கம் மிக்க போராளி என்ற முறையில் வரட்சிக் காலத்தில் மேய்ச்சலுக்காக செல்லும் கால் நடைகளும் இக்குளங்களில் நீர் பருக வேண்டும் என்பது அவனது ஆசையாக இருந்தது. வாதரவத்தைப் பகுதியில் கல்வி வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் அயராது உழைத்த அக்காச்சி இப் பகுதியில் குடிநீர்ப் பிரச்சினையை தீர்கும் முகமாக வாகரவத்தையில் பெரியபொக்கணைக்கும் வீரவாணிக்கும் இடையில் வாழ்ந்த மக்கள் நலன் கருதி தண்ணீர் வசதிகளைச் செய்து கொடுத்தான். மக்கள் மத்தியில் ஏற்பட்ட பிணக்குகளை மனச்சாட்சியின் படி இயற்கை நீதிக் கோட்பாட்டைப் பின்பற்றி தீர்த்து வைத்தான். காணிப் பிரச்சினைகளை அவன் அணுகிய விதமும் தீர்த்து வைத்த முறையும் பலரது பாராட்டுதல்களையும் பெற்றது. “ஒப்பரேஷன் லிபரேஷன்” 1987இல் சிறிலங்கா அரசு வடமராட்சி மீது தொடுத்த ஒப்பரேஷன் லிபரேஷன் படை நடவடிக்கைக்கு எதிரான யுத்தத்தில் அக்காச்சி பங்குபற்றினான். சிறிலங்கா படைகள் எனது பகுதிக்குள் நுழைய முயன்றால் எல்லையில் வைத்து மோதுவேன், என் உடலைத் தாண்டி வந்தே அவர்கள் எனது பகுதிக்குள் நுழையலாம் என சபதம் எடுத்துச் செயற்பட்டான். வடமராட்சி சென்று பலதாக்குதல்களில் பங்குபற்றிவிட்டு பொது மக்களுக்கு உதவியும் செய்துவிட்டே அக்காச்சி மீண்டும் வந்தான். இந்திய படையினருடன் ஏற்பட்ட மோதல் இந்திய படைகள் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விடுதலைப் புலிகளுடன் மீது போர் தொடுத்தது. யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டையில் இருந்து ஒரு பிரிவினர் வெளியேற முயன்று கொண்டிருந்த அதே வேளையில் வேறு படைப் பிரிவினர் பலாலி வீதி, காங்கேசன்துறை. வீதி, கண்டி வீதி வழியாக யாழ்ப்பாண நகரை நோக்கி முன்னேற முயன்று கொண்டிருந்தனர். கைதடி – கோப்பாய் வீதி வழியாக கோப்பாய்ச் சந்திக்க வரமுயன்ற இந்திய படையினரை அந்த இடத்தை நோக்கி நகரவிடாமல் பதினொரு நாட்கள் அக்காச்சியின் அணி தடுத்து நிறுத்தி வைத்துக்கொண்டது. கடுமையான போர் இடம்பெற்றது. பலத்த எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றன. சமர்க் களத்தில் நின்ற இந்திய போர் வீரர்களிற்கு உணவு கொண்டு வந்த இந்திய உலங்குவானூர்திகள் மீது விடுதலைப் புலிகள் தொடுத்த தாக்குதலால் அவை உணவுப் பொட்டலங்களை நாவற்குழி தரவகை; காட்டுப்பகுதியில் போட்டுவிட்டு ஓடித்தப்பி தலைமறைவாயின. இந்த கடுமையான போரில் கோப்பாய் சந்திக்கு வரமுடியாத நிலையில் நின்ற இந்திய படைகளின் ஒரு பிரிவை அக்காச்சியின் அணி தடுத்து நிறுத்தி வைத்துக் கொண்ட நிலையில் இன்னுமொரு இந்தியப் படைப்பிரிவு மறுபக்கத்தால் உரும்பிராய் கிருஷ்ணன் கோயிலடிக்கு வந்து வாழைத் தோட்டங்களுக்கூடாக நீர்வேலி வெங்காயக் கூட்டுறவுச் சங்கமருகில் வந்தது. கொமாண்டோ மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறும், போர் டாங்கிகளுடன் கோப்பாய்ச் சந்திக்கு இந்திய படைகண் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கே சென்றடைந்தது. இந்திய படை நடவடிக்கைளின் போது நீர்வேலிப்பகுதியில் அதிக உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படாமல் அக்காச்சியே ஏற்ற நடவடிக்கைகளையெடுத்து தனது திறமையால் கிராமத்தைக் காப்பாற்றினான் என இப்பகுதி மக்கள் நினைவு கூர்ந்து கொள்கிறார்கள். வேறும் பல தாக்குதல்கள் 1987 அக்டோபர் தொடக்கம் 1988 மார்ச் வரையுள்ள காலப்பகுதியில் நீர்வேலிப் பகுதியில் இந்திய படையினருடன் பல சண்டைகளில் அக்காச்சி பங்கேற்றான். இந்தத் தாக்குதல்களில் பலவும் தற்காப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்டவையாகும். அதாவது 1987 டிசம்பர் மாதத்தின் பின்னர் நீர்வேலி, அச்செழுப் பகுதிகளில் போராளிகளைத் தேடி இந்திய படைகள் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களை உடைத்து அவர்களது தேடுதல் வேட்டைகளை நிறுத்திய பின் அக்காச்சி அங்கிருந்து தப்பி பிறிதொரு பகுதிக்குள் நுழைந்தான். இந்த சுற்றி வளைப்பின் போது காயப்பட்ட மன்னாரைச் சேர்ந்த பெண் போராளி சகிலா சயனைட் உட்கொண்டு ஈகைச் சாவடைந்தார். பொதுமகன் காப்பாற்றல் 1988 முற்பகுதியில் ஒரு நாள் அச்செழு பகுதிக்கு வந்த இந்திய படையினர் பற்றை மறைவுகளின் பின்னால் படுத்துக் கொண்டு போராளிகளது வாருகைக்காகக் காத்துக் கிடந்தனர். முக்கிய போராளிகளான லெப்டினன்ட் கேணல் இம்ரான், கப்டன் நேரு, அக்காச்சி இப்படியாக பல போராளிகள் அங்கே தங்கியிருந்தனர். அதிகாலை ஆகையால் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் படையினரின் நடமாட்டம் பற்றிய தகவல் அன்றைய நாள் போராளிகளுக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பொதுமகன் ஒருவர் மீன் வலைகளைத் தன் தோளில் போட்டுக் கொண்டு வந்து படையினர் நடமாட்டம் பற்றிய தகவலைக் கொடுத்து போராளிகளைக் காப்பாற்றினார். தலைவர் பிரபாகரன் கூறியது போல “நாம் கடக்க வேண்டியது நெருப்பாறு என்பது எமக்குத் தெரியும். ஆனால், அதனைக் கடக்க மக்கள் ஆதரவு எனும் கவசம் எம்மிடம் உண்டு” என்ற கூற்றை இச் சம்பவம் நினைவு படுத்துவதாக அமைந்தது. வன்னியில் அக்காச்சி 1988 மார்ச் மாதம் தொடக்கம் 1989 தை மாதம் வரை அக்காச்சி வன்னிப் பகுதியில் இந்திய படையினருடன் பல மோதல்களில் ஈடுபட்டான். காலத்திற்குக் காலம் பல்வேறு சங்கேத மொழிகளில் இந்திய படையினர் மீது விடுதலைப் புலிகள் மீது தொடுத்த தாக்குதல்களின் இந்திய படை ஒவ்வொரு தடவையும் பலத்த இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டது. போராட்டத் தலைமையையும் போராட்டத்தையும் இக் கால கட்டத்தில் காப்பாற்றுவதில் வன்னிப் பகுதி வகித்த பங்கு வரலாற்றுச் சிறப்புடையது. பாரிய இழப்புக்களை இந்திய படைகள் அடைந்ததோடு, பெரும் ஈகத்தை செய்து வரலாற்றுக் கடமையை விடுதலைப் புலிகள் நிறைவேற்ற வன்னியின் இயற்கை அரணுடன் மக்களும் உறுதுணையாயினர். முல்லைத்தீவுப் பகுதியில் நின்று போரில் ஈடுபட்ட அக்காச்சியிடம் வன்னி அனுபவங்கள் பற்றிக் கேட்டபோது, ஒரு நாள் அடர்த்தியான காட்டில் பொழுது இருண்ட வேளையில், ஒரு இளம்புலி தனது கையிலிருந்த துப்பாக்கியால் இரண்டு தடவைகள் சுட்டான். மறுநாள் காலையில் இந்திய வானொலி அந்த இடத்தைக் குறிப்பிட்டு அந்த இடத்தில் இரண்டு படையினர் சொன்னது. தலைவர் அந்த இளம் போராளியை அழைத்துப் பாராட்டினார். அதனை என்னால் மறக்க முடியாது என்று அக்காச்சி பதில் சொன்னான். மீண்டும் அக்காச்சி சில மாதங்களை வன்னியில் கழித்துவிட்டு மீண்டும் 1989 தை மாதமளவில் அக்காச்சி குடா நாட்டிற்குள் வந்தான். இக்காலத்தில் அக்காச்சியும் அவனது தோழர்களும் கெரில்லா வாழ்க்கையே மேற்கொண்டனர். வீதிகளைக் கடக்கும் போது அல்லது தனது ஆதரவாளர்களைச் சந்திக்க வரும்போது எதிர்பாராமல் இந்திய படையினரைச் சந்திக் நேரிட்டால் மோதல்கள் ஏற்படுவதுண்டு. இவ்வாறான மோதல்களில் பெரும் இழப்புக்களோடு இந்திய படை முகாம் திரும்பிய ஒரு மோதல் 17.05.1989 அன்று நீர்வேலிப் பகுதியில் நிகழ்ந்தது. இதேபோல் 30.05.1989 அன்று அக்காச்சியும் சிவநேசன் என்ற இன்னொரு போராளியும் எதிரும் புதிருமாக இந்திய படையினரைச் சந்தித்தபோது பெரும் மோதல் ஒன்று நிகழ்ந்தது. இந்த மோதலின் போது கப்டன் நேரு, லெப்.குட்டி ஆகியோரும் இந்தியப் படையினருடன் மோதினர். நீர்வெலி – அச்செழு வீதியில் நிகழ்ந்த இந்த மோதலில் எல்லோரும் சுற்றி வளைப்பை உடைத்து வெளியேறினர். ஆனால் போராளி சிவநேசன் நேருக்கு நேர் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவடைந்தான். இதே போன்ற பிறிதொரு மோதல் 8.8.1989 அன்று பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டிக்கு அருகே ஏற்பட்டது. இந்த மோதலில் கப்டன் ஒருவன் உட்பட இரண்டு இந்திய படையினர் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் அக்காச்சி முக்கிய பங்கு வகித்தான். இந்த மோதல் நிகழ்ந்த மறுநாள் காலை 7:15 மணிக்கு ஆகாசவாணி டில்லி தமிழ்ச் செய்தியில் இந்த மோதல் பற்றிக் குறிப்பிட்டு அக்காச்சி தலைமையிலான குழுவே இந்த மோதலில் ஈடுபட்டது என்று தெரிவித்தது. சுவையான சம்பவங்கள் 1987 ஒக்டோபர் தொடக்கம் 1989 செப்ரம்பர் வரை ஏறத் தாழ இரண்டு ஆண்டுகளில் அக்காச்சி கரந்துறை வாழ்வில் பல சுவையான சம்பவங்கள் நிகழ்நதன. 1987 டிசெம்பர் மாதம் ஒருநாள் அக்காச்சி இராஜ வீதி வழியாக வந்துகொண்டிருந்தான். இந்திய படையினர் வீதியில் நின்று வீதியாற் செல்வோரை வழிமறித்து விசாரிப்பதும் அவர்களைச் சோதனையிடுவதுமாக நின்றனர்.எதிரும் புதிருமாக அந்த வீதி வழியாக வந்த அக்காச்சி படையினரைக் கண்டவுடன் பதட்டமடையாமால் வாழைத் தோட்டம் ஒன்றுக்குள் இறங்கினான். மறு மக்கமாக சீக்கிய இனப்படையாள் வருவதைக் கண்ட அக்காச்சி அந்தத் தோட்டத்திலே நின்று வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவரின் கையில் தனது சேட்டைக் கழற்றிக் கொடுத்து விட்டு அந்த விவசாயியின் சவுக்கத்தை(சால்வை)யை வாங்கி தலைப்பா கட்டிக் கொண்டு அந்த விவசாயின் மாட்டை மேய்த்துக் கட்டுவதுபோல் சாய்த்துக் கொண்டு சென்று அப்பால் உள்ள மரம் ஒன்றில் கட்டிவிட்டுத் தலைமறைவானான். இதேபோல் இந்திய படைகள் நூற்றுக் கணக்கில் ஒரு கிராமத்தைச் சுற்றி வளைத்த போது ஒரு வீட்டின் தண்ணீர்த் தாங்கி ஒன்றினுள் ஏறி அக்காச்சியும் அவனது தோழர்களும் படுத்துக் கொண்டனர். நீண்ட நேரமாகியும் படையினர் அகல்வதாக இல்லை. திடீரென தண்ணீத் தாங்கி அருகில் இருந்த பப்பாசி மரம் அசைந்தது. திகைப்படைந்த அக்காச்சி எட்டிப் பார்த்தான். அந்த வீட்டுக்காரர் பப்பாசிமரம் மரம் வழியாக ஏறி தண்ணீர்த் தாங்கி அருகில் வந்து “இந்தாங்கோ ஜூஸ் கரைச்சுக் கொண்டு வந்தனான்” என்று கொடுத்துவிட்டு மரத்தில் இருந்து இறங்கிச் சென்றார். இதேபோல் பிறிதொரு இடத்தில் அக்காச்சியும் அவனது நண்பர்களும் ஒரு சுற்றிவளைப்பின் போது தண்ணீர்த் தாங்கி ஒன்றினுள் ஒளிந்து கொண்டனர். ஏணி வழியாக ஏறி மேலே வந்த அந்த வீட்டின் ஐந்து வயதுச் சிறுவன் தானும் அக்காச்சியோடு தண்ணீர்த் தாங்கியினுள் ஒளிந்து கொள்ளவேண்டும் என்று அடம்பிடித்தான். உடனே அக்காச்சி “நீ போகாவிட்டால் அடிப்பேன்” என்று அதட்டிக் கூறினான். உடனே அந்தச் சிறுவன் “அண்ணை இப்ப அடிப்பியளோ? அல்லது ஆமி போனப்பிறகு அடிப்பியளோ?” என்று வினா எழுப்பினான். இதேபோல் அக்காச்சியும் அவனது தோழர்களும் ஒரு வீட்டிற்கு மதிய உணவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அந்த வீட்டிற்குள் நுழைந்த அக்காச்சி குழுவினர் “எம்மைப் போல் இன்னும் இரண்டு நண்பர்கள் இங்கோ சாப்பிட வருவார்கள்” என்று கூறிவிட்டு உள்ளே இருந்த தமது வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். திடீரென அங்கு வந்த அந்த வீட்டுக்கார அம்மா, “தம்பியவை, இரண்டுபேர் படலேலை வந்து நிக்கினம். ஒருவர் தாடியும் தலைப்பாகையுமாக நிற்கிறார், மற்றவர் ஆமி உடுப்புப் போட்டிருக்கிறார். அவையளைக் கூட்டிக் கொண்டு வரட்டோ” என்றார். வெளியே அக்காச்சி எட்டிப் பார்த்தான். படலையில் ஒரு சீக்கியனும் அவனுக்குதவியாக ஒரு ஒட்டுக்குழு உறுப்பினரும் நின்றனர். இப்படியாகப் பல சுவையான சம்பவங்களையெல்லாம். தனது கெரில்லா வாழ்க்கையின் போதுதான் சந்திக்க நேரிட்டது என்று அக்காச்சி தனது நண்பர்களுக்குக் கூறி தானும் சேர்ந்து சிரிப்பான். அக்காச்சியின் வசீகரமான அந்த முகத்தில் அடிக்கடி உதிரும் புன்னகை ஆயிரம் பொருட்களைக் கொண்டது. அவனது அந்தப் புன்னகையில் எம்மை மறந்து எமது கவலைகளை மறந்து மகிழ்சியடைந்த நாட்கள் எத்தனை எத்தனை. மக்கள் காப்பாற்றல் ஒரு நாள், 1989 ஆகஸ்ட் மாதமளவில், அக்காச்சியும் அவனது நண்பர்களும் கப்புது என்ற கிராமத்தில் தங்கியிருந்தனர். கிராமத்தை 800க்கு மேற்பட்ட இந்தியச் படையினர் சுற்றிவளைத்துக் கொண்டனர். வீடுவீடாகத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சாதாரண மக்களைக் கொண்ட அந்தக் கிராமம் அக்காச்சியையும் அவனது தோழர்களையும் காப்பாற்றியது. இந்தக் கிராம மக்கள் நீண்ட காலமாகவே போராளிகளுக்கு உறுதுணையாக இருந்து வருபவர்கள். இன்னும் ஒரு சம்பவம் மறக்க முடியாதது. 1987 ஜூலை 5ஆம் திகதி மில்லர் இலங்கை இராணுவம் தங்கியிருந்த நெல்லியடி மத்திய கல்லூரி முகாம் மீது தாக்குதலைத் தொடுக்க முன்னர் தயாரிப்பு வேலைகளை முடித்துக் கொண்டு இக் கிராமத்துக்குள் சென்றான். கப்டன் மில்லர் எடுத்துச் சென்ற அந்த ஊரை்தி இலங்கை படையினரின் கண்களில் படாதபடி அந்தப் பெரிய ஊர்தி இலைகுழைகளில் மூடி மறைத்து உருமறைப்புச் செய்து உதவியவர்கள் இந்தப் பகுதி மக்கள் தான் என்று ஈகைச்சுடர் திலீபன் பெருமையோடு கூறுவார். மில்லரின் அந்தத் தாக்குதல் தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனைக்கு வழிவகுத்தது. கடைசித் தாக்குதல் ஓட்டுமடம் என்ற இடத்தில் கூடாரமடித்து தேசத்துரோகச் செயல்களில் ஈடுபட்டிருந்த ஈ.என்.டி.எல்.எப். என்ற ஒட்டுக் கும்பல் 15.09.1989 அன்று ஈகைச்சுடர் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு மக்களை கொடுமைப்படுத்தியது. நிகழ்ச்சிகளைக் குழப்பும் நோக்குடன் நீர்வேலிக்கு ஹைஎஸ் ரக ஊர்தி ஒன்றைக் கடத்திக் கொண்டு வந்தார்கள். திலீபனின் நினைவு வணக்க பதாகை ஒட்டிய மதனா என்ற இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். இவற்றையெல்லாம் கேள்வியுற்ற அக்காச்சி நீர்வேலிச் சந்தியில் நின்ற தேசவிரோதிகளை நோக்கி சக போராளிகளோடு விரைந்தான். அங்கே பெரும் மோதல் ஒன்று தொடங்கிய. தேசத் துரோகிகள் தாம் கடந்தி வந்த வானையும் விட்டுவிட்டு நீர்வேலி தரவைப் பாதையூடாக ஓட்டம் பிடித்தனர். சண்டையில் பல துரோகிகள் மாண்டுபோயினர். ஒருவன் உயிருடன் பிடிபட்டான். தற்செயலாக நீர்வேலி கண்ணாடித் தொழிற்சாலைக்குச் சென்ற அக்காச்சி மீது அங்கு ஒளிந்திருந்த கோழையொருவன் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மார்பினில் குண்டேந்தி அக்காச்சி வீரச்சாவை அணைத்துக் கொண்டான். நீர்வேலியில் பிறந்து நீர்வேலியில் கல்வி கற்று நீர்வேலிப் பகுதிப் பொறுப்பாளனாக இருந்து நீர்வேலியில் வீரச்சாவடைந்த அக்கச்சியின் வாழ்வு விடுதலைக்குப் போராடும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகவுள்ளது. அவன் செய்த சேவையின் நினைவுச் சின்னங்களாக நீர்வேலிப் பகுதியில் காணப்படும் கட்டங்களாக மிளிர்கின்றன. இவனது ஒன்றுவிட்ட சகோதரர் பல தடவை தன்னுடன் வெளிநாடு வருமாறு அழைத்தும் அங்கு செல்ல மறுத்து விட்டான். இவன் வீரச்சாவடைவதற்கு இரண்டு நாட்களிற்கு முன்னரும் இவ்வாறான வேண்டுகோளை அவர் அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியைக் கொண்டு வந்தவரிடம் அக்காச்சி பின்வருமாறு சொன்னான் “நான் செய்யும் பணிகளை வேறு ஒருவரைக் கொண்டு நிறைவு செய்ய முடியுமாயின் தான் வருவேன். அதுவரை நான் வரமாட்டேன்.” இந்த ஆணித்தரமான பதில் வெறும் மேனி மினுக்கு வார்ததைகளல்ல, அது ஒரு உறுதியான வீரனின் வெளிப்பாடு என்பதில் சந்தேகமில்லை. ஈழம் ரஞ்சன்.
  18. சிறுத்தைகளைப் போன்று பதுங்கிப் பாயும் அணியொன்றின் நிர்வாக வேலையில் சிலகாலம் பங்கேற்ற பின் விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்திருந்தார் நித்தியா. எப்போதும் சிரித்த முகம். மனம் சிரிப்பது விழிகளில் வெளிப் படையாகத் தெரியும் படியான சிரிப்பு. சளைக்காமல்இ களைக்காமல் எத்தனை கடின பயிற்சியையும் செய்தார். விடுதலைப்புலிகள் மகளிர் படையணிக்கு வந்த நாளிலிருந்து தொடர்ந்து சண்டைதான். தொடர்ந்து காயங்கள்தான். பயிற்சி செய்வார். களம் செல்வார். காயத்தோடு வந்து ஓய்வெடுப்பார். மறுபடி பயிற்சி சண்டை காயம் ……. ……. என்று ஒரு தொடர் சங்கிலி. அமைதியான இயல்பைக் கொண்ட அவர் கண்டிப்பான அணி முதல்வியாக அல்லாமல் அன்பான அணி முதல்வியாகவே தனது ; முதற் களமான…. 1992 ஆம் ஆண்டில் தொண்டைமானாற்றிலிருந்து ஒட்டகப்புலம் வரையான நூற்றைம்பது காப்பரண்கள் மீதான தாக்குதலில் தொடங்கி 1997 இல் ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கை வரை எம்மோடிருந்தார். பயிற்சி செய்தால் தூரம் நடந்தால் கால் வீங்கும் என்று தெரிந்து கொண்டே சளைக்காமல் எல்லாவற்றிலும் ஈடுபட்ட நித்தியாவினுள் கரும்புலிக் கனவு மொட்டவிழ்ந்து வாசம் வீசியபோது எங்களுக்குத் தெரிந்துவிட…. “என்ன நித்தியா கரும்புலிப் பயிற்சி செய்யிற நிலைமையிலா நீ இருக்கிறாய்” என்ற நண்பிகளின் அக்கறையான கேள்விக்கும் சிரிப்பையே பதிலாகத் தந்துவிட்டு அவர் போய்விட்டார். நினைவுப்பகிர்வு:- மலைமகள்.
  19. யோ. யோகியோடு (மாவீரர்) தலைவர்மாமா
  20. எமது நீண்டபெரும் விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் களமான முள்ளிவாய்க்கால் வராலாற்றுப் பூமியில் உறுதியோடு போராடி தம் இன்னுயிர்களைத் தமிழீழ விடுதலைக்காய் அர்ப்பணித்துக் கொண்ட எண்ணற்ற மாவீரர்களுள் ஒருவராக மாவீரர் வீரவேங்கை அறிவும் வித்துடலாய் சாய்ந்தார். இவர் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு செல்லையா சிவகுமார் என்னும் இயற்பெயரோடு துடிப்புள்ள இளஞராக வளர்ந்து வந்தார். 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட யாழ். இடப்பெயர்வின் மூலம் அதிகமான மக்கள் இவர் வாழ்ந்து வந்த தொட்டியடி. விசுவமடு பகுதியிலும் குடியேறவே அவரது கண்முன்னே தம் இருப்பிடங்களை இழந்து எம் மக்கள் படும் இன்னல்களையும் அவர்கள் சந்தித்த இழப்புகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டும் தேச விடியலின் அவசியம் பற்றிச் சிந்தித்தவராக 1995 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தன்னை விடுதலைப்புலிகள் அமைப்பினரோடு இணைத்துக் கொண்டார். வன்னிப் பகுதியின் வனப்பகுதியொன்றில் அமைக்கப்பட்டிருந்த பயிற்சிப் பாசறையில் மாறன் பயிற்சி முகாம்) புதிதாக இணைந்த பல தோழர்களோடு சுறுசுறுப்புடன் பயிற்சிகளில் கலந்து கொண்டு துணிவு மிக்க போராளியாக அறிவு எனும் பெயருடன் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறினார். இக்காலப்பகுதியில் வன்னிப் பெருநிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் நோக்கோடு சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கையை எதிர்கொள்ளும் படையணியில் ஒருவராக அறிவும் புளியங்குளம் நோக்கி புறப்பட்டார். அங்கே இராணுவத்தினரோடு இடம்பெற்ற கடும் சமர்களில் ஆர்வமுடனும் துணிவுடனும் களமாடி நின்றார். புளியங்குளத்தில் எதிரியின் நகர்வுகளைத் தடுத்து நிறுத்தி தீரமுடன் போரிட்ட எம்மவர்களில் அறிவின் வீரமும் துணிவும் அனைவராலும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொடர் சண்டைகளில் ஈடுபட்ட அணிகள் பின் தளங்களுக்கு அனுப்பப்பட்ட வேளையில் அறிவும் முகாம் திரும்ப நேரிட்டது. ஆனாலும் மீண்டும் களமுனைக்கு செல்வதற்கான அனுமதி வேண்டி தனது பொறுப்பாளரிடம் கேட்டுக்கொண்டே இருந்தார். ஓய்வில் இருந்த போராளிகளைச் சந்திக்க வந்த சிறப்புப் பொறுப்பாளர் பிரிகேடியர் கடாபி அவர்களின் கவனத்தில் அறிவின் செயற்பாடுகள் கொண்டுவரப்பட்டபோது, பொறுப்பாளரினால் வேறு வேலைகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டார். அவனது திறமையும் இரகசியம் பாதுகாக்கும் தன்மையும், விடயங்களை ஊகித்தறியும் திறனும் அவரை இரகசிய பாதுகாப்பு அணிக்கு உள்வாங்கியது. தலைவரின் பாதுகாப்பு அணியின் தள அமைப்பு நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கும் தனக்குத் தரப்பட்ட கடமையைத் திறம்படச் செய்தார் அறிவு. சண்டைக்களங்களில் அவர் காட்டிய அதே வேகமும் ஆர்வமும் இங்கும் காணமுடிந்தது. இரவுபகல் பாராது தரப்பட்ட வேலையை முடித்த பின்னரே ஓய்வெடுப்பார். இவ்வாறு நகர்ந்த அவரது போராட்ட வாழ்க்கையில் அமைப்பு நடைமுறைகளுக்கு அமைய திருமண பந்தத்தில் இணைந்தார். குடும்பம் ஒரு பக்கம் இருக்க கடமையே கண்ணாக முகாமில் பணிசெய்தார் அந்த அற்புத போராளி. மீண்டும் போர் ஆரம்பித்து நில ஆக்கிரமிப்புத் தொடர அணிகள் தொடர் சண்டையில் நின்றபோது அதில் ஒருவராய் விசுவமடு. புதுக்குடியிருப்பு. ஆனந்தபுரம் என தொடர் களங்களின் நெடுகிலும் தொடர்ந்து வந்தார் அறிவு. இவ்வாறு உறுதிமிக்க ஒரு போராளி மண்ணையும் மக்களையும் நேசித்த அந்த மாவீரர் 13 மே 2009 அன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் விதையாக வீழ்ந்தார். நன்றி சூரியப்புதல்வர்கள் -2023
  21. அன்பரசன் (லோறன்ஸ்) அவர்கள் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறிலங்கா அரசு தமிழர்கள் மீதும், தமிழர் தாயகத்தின் மீதும் காலத்திற்குக் காலம் மேற்கொண்டு வந்த ஆக்கிரமிப்புகளாலும், இராணுவத்தின் தாக்குதல்களாலும் மக்கள் அனுபவித்த அவலங்களையும் வலிகளையும் கண்டு 1989 இன் பிற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். மணியந்தோட்டம் 03 பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று அன்பரசன் என்னும் பெயருடன் யாழ். மாவட்டப் படையணியில் சேர்க்கப்பட்டார். யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களில் இவரும் பங்கு கொண்டார். தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதித்துறை ஆரம்பிக்கப்பட்டு. துறை சார்ந்த சார்ந்த பணிகளைச் செய்வதற்காகத் தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் போராளிகள் தலைமையால் நிதித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யாழ். மாவட்டத்திலிருந்து அன்பரசனும் 1991 ஆம் ஆண்டு நிதித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நிதித்துறைப் பணிகளைக் கற்றறிவதற்காக இவர் நிதித்துறைப் பொறுப்பாளருடன் பணியாற்றினார். நிதித்துறையால் தமிழீழ மீட்புநிதி சேகரிப்புப் பணி தொடங்கியபோது அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். இயல்பாகவே அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் பேசும் பண்பு கொண்ட இவர், மக்களுக்கு நிதி சேகரிப்பின் தேவையைத் தனது பேச்சாற்றலால் புரியவைத்துப் பணியைத் திறம்படச் செய்ததோடு, இரவு பகல் பாராது அயராது பணிசெய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இவரின் முயற்சியினையும் பணியின் ஆர்வத்தினையும் தற்துணிவான நன்னடத்தையையும் கருத்தில் எடுத்த நிதித்துறைப் பெறுப்பாளர் அவர்கள், இவரை வருவாய்ப்பகுதிப் பணிக்கு மாற்றினார். அக்காலப் பகுதியில் வருவாய்ப் பகுதிப் பொறுப்பாளராக இருந்த தமிழ்க்குமரன் அவர்களுடன் வருவாய்ப்பகுதி நடவடிக்கைகளை ஆர்வமுடன் பட்டறிந்துகொண்டு செயலாற்றினார். இதனால் இவருக்கு வலிகாமம் பகுதி சந்தைப்பகுதியினை நிர்வகிக்கும் பணி வழங்கப்பட்டது. வன்னிக்கும் யாழ். குடாநாட்டுக்குமான போக்குவரத்துப் பாதையாக இருந்த கிளாலி படகுச்சேவையில் பணியாற்றுவதற்காக 1995 காலப்பகுதியில் அமர்த்தப்பட்டார். மக்களின் சிரமங்களையெல்லாம் கருத்திற் கொண்டு பொறுமையாகவும். அமைதியாகவும், மக்களுடன் நல்லுறவாகவுமிருந்து தனது பணிகளை நகர்த்தி, தான் சிறந்த நிர்வாகி என்பதை இப்பணி மூலம் நிரூபித்தார். 1995 இறுதிக்காலப்பகுதியில் யாழ். குடாநாட்டை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றிய பின் கிளிநொச்சிப் பகுதியில் வருவாய்ப்பகுதி நடவடிக்கைகளை நிர்வகித்தார். 1996 இல் சிங்கள இராணுவத்தின் முல்லைத்தீவு இராணுவமுகாம் மீதான ஓயாத அலைகள் 1 தாக்கி அழிப்புச்சமரில் நிதித்துறைப் படையணியில் ஒரு அணியின் பொறுப்பாளராக நின்று களமாடினார். சமநேரத்தில் ஆனையிறவுப் பகுதியிலிருந்து சத்ஜெய 1. 2 இராணுவ நடவடிக்கை மூலம் கிளிநொச்சி நோக்கி முன்னேறிய இராணுவத்தை எதிர்த்துச் சமர் புரிவதற்காக நிதித்துறைப் படையணி முல்லைத்தீவுப் பகுதியிலிருந்து ஆனையிறவின் முன்னரங்கப் பகுதிக்கு நகர்த்தப்பட்டது. அங்கு முன்னேறிய இராணுவத்தைத் தடுத்து நிறுத்தி விரட்டியடித்த சமரில் இவர் தனது வீரத் தடத்தைப் பதித்திருந்தார்.அதன் பின் 1996 இன் இறுதிக் காலப்பகுதியில் இவர் நிதித்துறையின் போர் ஊர்திப் பகுதிக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் அப்பணிகளுக்குப் பொறுப்பாகவிருந்த யாழவன் (நியூட்டன்) அவர்களுடன் பணியாற்றியதோடு ஊர்திகள் பற்றி தெரிந்து கொள்வதுடன் போர்க்களங்களின் சூழலுக்கு ஏற்ப பாதைகள் அமைப்பது, பாதைகளுக்கு ஏற்ப ஊர்திகள் தேர்வு செய்வது, ஓட்டுநர்களின் பாதுகாப்பு போன்ற அனைத்து விடயங்களையும் நேரில் சென்று பணி செய்து பட்டறிந்து கொண்டார். யாழவன் அவர்களுக்கு வேறு பணி வழங்கப்பட்டபோது அன்பரசன் போர் ஊர்திப் பகுதியின் பொறுப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். போர் ஊர்திப் பணி என்பது சாதாரண பணியல்ல. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பகுதியில் எறிகணைகள். துப்பாக்கி ரவைகள் மழையாகப் பொழியும். வான்தாக்குதலுக்கு மத்தியில் ஊர்தியை ஓட்டவேண்டும். உயிருக்குப் போராடும் விழுப்புண் அடைந்த போராளிகளை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாது பாதையில் ஆழ ஊடுருவும் இராணுவத்தின் கிளைமோர் தாக்குதலையும் சமாளிக்க வேண்டும். முன்னிலையில் சமராடிக்கொண்டிருக்கும் போராளிகளுக்கு உணவு. வெடிபொருட்கள் வழங்கல். அணிகளை இடம் மாற்றுதல் போன்ற பின்களப் பணிகளை ஆற்ற வேண்டும். இவற்றைத் திறம்படச் செய்தார். 2002 இல் அன்பரசனிற்கு அமைப்பினால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. 2002 சமாதான காலப்பகுதியில் வருவாய்ப்பகுதிப் பணி நடவடிக்கையாக யாழ். மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிலகாலம் அங்கு சிறப்பாகப் பணியாற்றினார். சமர்க்கள முன்னரங்க நிலைகளில் எதிரியின் தாக்குதலை போராளிகள் தற்காத்து நின்று சமர் புரிவதற்கு ஏதுவாகப் பாரிய மண் அணை அமைப்பது, பீரங்கித் தாக்குதல்கள், வான் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவல்ல காப்பரண் அமைப்பது, எதிரியின் துப்பாக்கிரவை, எறிகணைவீச்சு, விமானக் குண்டுவீச்சுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் கால்வாய்ப் பாதைகள் மற்றும் பதுங்குகுழிகள் அமைத்தல், விழுப்புண்ணடைந்த போராளிகளையும், சமர்க்களத்தில் வித்தான மாவீரர் வித்துடல்களையும் துரிதமாக பின்களம் நகர்த்துவதற்கு ஏற்ப பாதைகள் அமைத்தல் போன்ற முக்கிய பணிகளை துரித கதியில் மேற்கொள்வதற்காக 2003 காலப்பகுதியில் புதிய தொழில்நுட்ப கனரக ஊர்திகள் இணைக்கப்பட்டு நிதித்துறைக் கனரக ஊர்திப் பகுதி புதிதாக உருவாக்கப்பட்டு அன்பரசன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். போர்ப் பகுதி முன்னரங்கப் பணி என்பதால் ஓய்வின்றி, தூக்கமின்றிப் பணியாற்ற வேண்டும். இப்பணிக்குப் பொறுமை, அமைதி என்பன இருக்க வேண்டும். இப்பணியினை இவர் செவ்வனே செய்தார். களமுனைப்பகுதி, நிர்வாகப் பகுதிக்கான இன்னொரு பகுதி ஊர்தி பேணுகைப் பகுதி. இதற்குப் பொறுப்பாக இருந்த போராளி வேறு பணிக்கு மாற்றப்பட்டமையால் அவரின் பணியினை 2007 காலப்பகுதியில் அன்பரசன் பொறுப்பேற்றார். இங்கும் தனது திறமையான செயற்பாட்டால் களமுனைப் பணிகள் மற்றும் படையணிகளின் ஊர்திகளைப் பேணுகை செய்யும் மிகப் பெரும் பணியினை 2009 இறுதிவரை சிறப்பாக ஆற்றினார். 2009 மார்ச் மாதம் ஆனந்தபுரம் பெட்டிச்சமருக்கான ஏற்பாடு நடந்தபோது நிதித்துறையின் காப்பரண் அமைக்கும்பணி. உணவு விநியோகம் வழங்கற் பகுதி நடவடிக்கை. ஊர்திப் பகுதி, ஊர்திப் பேணுகைப்பகுதி மற்றும் நிதித்துறை சார்ந்த அனைத்துப் பணிகளுக்கும் பொறுப்பாளராக அன்பரசன் அமர்த்தப்பட்டார். மாதத்தின் இறுதிப் பகுதியில் ஆனந்தபுரப் பகுதியை நோக்கி இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்த சமயத்தில் புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியிலிருந்து ஆனந்தபுரம் நோக்கி முன்னேறிய இராணுவத்தைத் தடுத்து கட்டளைத் தளபதி பானு அவர்களின் நெறிப்படுத்தலில் தனது அணியுடன் களமிறங்கிய அன்பரசன் அச்சமரில் விழுப்புண் அடைந்தார். இவர் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது. 15 மே 2009 ஆம் நாள் காலை சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் வீரச்சாவடைந்தார். மாவீரன் அன்பரசன் (லோறன்ஸ்) அவர்களின் விடுதலைப் போராட்டப் பணி அதிகமாகக் களமுனை சார்ந்ததாகவே இருந்தது. அதாவது களமுனையில் போராடும் போராளிகளுக்கான சுடுகலன், வெடிபொருட்கள் வழங்குதல், உணவு வழங்குதல், முன்னரங்க நிலைகளில் காப்பரண்கள் அமைத்தல், விழுப்புண் அடைந்த போராளிகளின் உயிரைக் காப்பாற்றத் துரிதமாகப் பின்களம் எடுத்து வருதல். படையணிகளை நகர்த்தும் பணிகள் என முக்கிய பணிகளுக்காக இந்த மாவீரன் தனது இறுதி மூச்சுவரை பயணித்து தமிழீழ விடுதலைக்காகத் தாய்மண்ணிலே வித்தானார். நன்றி சூரியப்புதல்வர்கள் -2023
  22. குழந்தைகளுடன் நிற்கும் புலிவீரர்கள் 1986<
  23. அண்ணன் அப்துல்லா வழியில் ஆகுதியான தங்கை திலகா நிதித்துறை மகளிரிலிருந்து போர்முன்னரங்குகளுக்கான மேலதிக ஆட்கள் தேவை கருதி அணி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. முத்தையன்கட்டு சோதியா படையணியின் பயிற்சிப் பாசறை நோக்கி மேஜர் ஜெயந்தி களப்பயிற்சிக்காக அவ் அணியை அழைத்துச் சென்றார். நீண்டகாலம் வெளிக்களப்பணிகளில் இருக்கும் போராளிகளுக்கு இப்பயிற்சி மிகவும் இன்றியமையாததாகும். அது 1999 ஆம் ஆண்டின் முற்பகுதி, “நான் ஆர்.பி.ஜி (RPG) பயிற்சி எடுக்க விரும்புறன்” என்று பயிற்சியின் போது பொறுப்பாளரைக் கேட்டது வேறு யாருமல்ல. உயரமான நிமிர்ந்த உருவமும், தீர்க்கமான பார்வையும் கொண்ட திலகா அக்கா தான். திலகா அக்காவின் குடும்பத்தின் போராட்டப் பங்களிப்பானது மிகவும் முதன்மையானது. “அப்துல்லா குடும்பம்” என்றால் தெரியாதவர் யாருமில்லை எனலாம். முதன்முதலில் ஆர்.பி.ஜி (RPG) இயக்கத்துக்கு கிடைத்தபோது, அதை இயக்கி “RPG அப்துல்லா” என அழைக்கப்பட்ட நகுலன் அண்ணாவின் தங்கையே திலகா அக்கா. 1987.10.05 அன்று சிறிலங்கா இந்திய கூட்டுச் சூழ்ச்சியில் வீரகாவியமாகி தீருவிலில் தீயுடன் சங்கமமாகிய பன்னிரு வேங்கைகளில் மேஜர் அப்துல்லாவும் ஒருவர் என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது. யாழ்.தென்மராட்சி சாவகச்சேரியை இருப்பிடமாகக் கொண்ட திரு.திருமதி கணபதிப்பிள்ளை இணையர் 4 மகன்களையும் 4 மகள்களையும் பெற்றெடுத்தனர். இப்படியாக திலகா அக்காவின் குடும்பம் மிக அழகானது. தந்தை ஒரு சிறந்த கட்டடத் தொழிலாளி. கடைசிக்கு முதல் செல்லப்பிள்ளையாக தர்சினி 11.11.1971 அன்று எம் மண்ணில் பிறந்தார். சிறுபராயம் முதல் கல்வி, விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் கல்வி கற்று வர்த்தகப்பிரிவில் தேறினார். குண்டெறிதல், தட்டெறிதல் மேலும் வலைப்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கினார். உதவிப்பந்து போடுபவராக இருந்து அவர் கையில் பந்து கிடைத்தால் அது வலையில் விழும் என்ற அளவிற்குத் திறமையாக ஆடுவார். மேஜர் திலகா / வான்மதி வீரப்பிறப்பு: 11.10.1971 வீரச்சாவு: 12.06.1999 சாவகச்சேரி, யாழ்ப்பாணம் 1991 ஆம் ஆண்டு ஏழாம் மாதம், யாழ் பழைய பூங்காவில் புதிதாக இணைந்த பெண் போராளிகள் கூடியிருந்தார்கள். உயரமாக நீண்ட கூந்தலுடன் “யார் அந்தப் பெண்” என்று தோழிகள் கேட்க, “மேஜர் அப்துல்லாவின் தங்கை” என்ற பதில் வந்தது. அடிமனதில் அடக்கி வைத்திருந்த தமையனின் பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டார். ஒவ்வோர் பிரிவுக்குமுரிய மகளிர் பொறுப்பாளர்கள் தம் உதவிப்பணிக்குத் தேவையான புதிய போராளிகளை அழைத்துச் சென்றனர். அங்கு பிரிந்த தோழிகள் மீண்டும் ஒன்பதாம் மாதம் 19 ஆம் அணி மகளிர் பயிற்சிப் பாசறையில் ஒன்றிணைந்து ஆரம்பப் பயிற்சியை நிறைவுசெய்து போராளி திலகாவாக உருவானார். 1992 ஆரம்பத்தில் நிதித்துறைக்கு முதன்முதலாக மகளிர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் வர்த்தகம் படித்தவர்கள் (எழுத்து, நேர்முக) தேர்வுகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட, முதல் எட்டுப் பேரில் திலகா அக்காவும் இருந்தார். கணக்காய்வுப் பணிக்கான கல்வி அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. சிறிதுகாலம் செல்ல, வாணிபங்களுக்கான கணக்காய்வு பணியையும் ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் திலகா அக்கா சேரன் வாணிபம், மருந்து பால்மா வாணிபங்களில் தனது கணக்காய்வுப் பணிகளை மேற்கொண்டார். நிதித்துறையின் வழங்கல் பகுதி 1993 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு அதற்குரிய கணக்குமுறைகள் ஒழுங்குசெய்யப்பட்டு 1994 அளவில் திலகா அக்காவும் இன்னும் சிலரும் கணக்காய்வு செய்து வந்தனர். 1993 நவம்பர் மாதம் பூநகரி சிறிலங்கா அரச படையினரின் கூட்டுப்படைத்தளம் மீதான “தவளைப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை தொடங்கியது. அந்தவேளையில், தானும் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலில் திலகா அக்காவும் இருந்தார். ஆனால், அவர் தாக்குதலிற்குச் செல்ல அனுமதிக்கப்படாமையால் ஏமாற்றமடைந்தார். கணக்காய்வுப் பணியுடன் யாழ்.உயர் தொழில்நுட்பக்கல்லூரியில் கணக்கியல் உயர் தேசியக் கல்வியையும் பயின்று வந்தார். அவர் குணநடை பற்றிக் கூறுவதாயின், உடனடியாக தெரியாதவர்களுடன் நன்றாகப் பழகமாட்டார். பணியாளர்கள், மற்றவர்களிடம் கண்டிப்பாக இருப்பார். “பிழை என்றால் பிழை தான்”என்றும் எல்லோரும் பணியில் “நேர்மையாக” இருக்க வேண்டும் எனவும் எண்ணுவார். ஆனால் நன்கு தெரிந்தவர்களுடன் நன்கு நெருக்கமாகப் பழகுவார். மனம் திறந்து கதைப்பார். பகிடிகள் விடுவார். வெளிப்பார்வைக்குத்தான் அப்படிக் கடுமை போல் காட்டிக் கொள்வார். ஆனால் எம்முடன் மனதளவில் அன்பாகப் பழகுவார். ஏனெனில் “ஒரு போராளியின் இதயம் மென்மையானது”. களமுனைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவர் மனதில் ஆழமாக இருந்தது. 1995 ஆம் ஆண்டு (நடுப்பகுதி) யாழ்ப்பாணத்தை வன்கவரும் வெறியோடு வந்த சிறிலங்கா இராணுவத்தை விரட்டியடிக்கும் “புலிப்பாய்ச்சல்” தாக்குதல் நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. அதற்குச் செல்லவென பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டிருந்த திலகா அக்காவும் தோழிகளும் வண்டியில் (pick-up) ஏற்றிச் செல்லப்பட்டார்கள். மனதுக்குள் மகிழ்ச்சி. அழைத்துச் செல்லப்பட்டவர்கள் ஒரு சமையல்கூடத்தில் இறக்கி விடப்பட்டு சீனிச்சம்பல் செய்வதற்காக வெங்காயம் உரிக்க விடப்பட்டனர். (ஏனெனில் வெளிப்பணிகளும் போராட்டத்துக்குத் தேவையானது என்பதால் உரியவர்கள் இடப்படும் பணிகளை செய்ய வேண்டும்) யாழ் இடப்பெயர்வு இடம்பெற்று 1996 வன்னிப்பகுதி சென்று இழப்பீடுகள் தவிர்த்து கணக்குகள் மீண்டும் ஒழுங்கமைக்கப்பட்டு கணக்காய்வு நடவடிக்கைகள் தொடர்ந்தன. எதற்கும் சளைக்காது திலகா அக்காவும் சிறப்புற பணிகளைச் செய்தார். ஓயாத அலைகள் 1 தாக்குதல் பயிற்சிக்கு நிதித்துறை மகளிரிலிருந்து சிலர் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் அவர் அவ்வணியில் தெரிவு செய்யப்படாதது அவருக்கு மிகவும் வருத்தம் தான். எந்த ஒரு நடவடிக்கையின் வெற்றிக்கும் பின்னால் வழங்கல் அணியின் திறமையான பங்களிப்பும் மிக முதன்மையானதாக இருக்கும். வழங்கல் சரியாக உரிய நேரத்தில் சென்றடைந்தால் தான் உரிய அப்பணியைச் சிறப்பாக செய்யலாம். அந்தவகையில் முல்லைத்தீவு மீட்புப் போரின் வெற்றியும் அமைந்தது. அதன் பின் 1997 ஆம் ஆண்டு அளவில் அங்கு முதன்மையான சிற்றுண்டி வாணிபம் திறந்து வைக்கப்பட்டது. சிற்றுண்டி வாணிபங்களுடன் சமையல்கூடங்களுக்கான கணக்காய்வுப் பணியையும் திலகா அக்கா அணியினர் செய்து வந்தனர். 1998.06.10 அன்று சுதந்திரபுரம் மீதான சிறிலங்கா இராணுவத்தின் கொடூரமான மும்முனைத் தாக்குதலில் வழங்கல்பகுதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் அம்மா/அன்பு அண்ணாவும், வழங்கல் வாணிபங்களின் எமது கணக்காய்வுப்பகுதித் தோழி கப்டன் கலைமதி அக்காவும் அன்று வீரச்சாவடைந்தனர். மற்றும் பணியாளர்கள், பொது மக்கள் பலரும் கொல்லப்பட்டும் படுகாயமும் அடைந்தனர். திலகா அக்காவும் அந்தப் பேரிடியால் கலங்கித்தான் போனார். கப்டன் கலைமதி அக்கா திலகா அக்காவின் நெருங்கிய தோழி, வழங்கல் பகுதி கணக்காய்வுப் பணியினை கப்டன் கலைமதி அக்காவுடன் இணைந்தே அவர் மேற்கொண்டு வந்தார். நீண்டகாலமாக ஒரே இடத்தில் இருவரும் ஒன்றாக பணிபுரிந்து வந்தமையினால் இருவருக்குமிடையே ஆழமான நட்பும் புரிந்துணர்வும் காணப்பட்டிருந்தது. தனிப்பட்ட தனது சொந்தச் சிக்கல்களை சொல்லி மனம் விட்டுக் கதைக்கும் நெருங்கிய தோழியாக திலகா அக்காவுக்கு கப்டன் கலைமதி அக்கா விளங்கினார். இவரது இழப்பானது திலகா அக்காவை மிகவும் தாக்கியது. அதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டிருந்தார். தொடர்ந்து புதுக்குடியிருப்புக்குச் சென்று கணக்குகள் ஒழுங்கமைக்கப்பட்டு மீள தமது பணிகளைச் செய்துவந்தார். ஆரம்ப காலம் தொட்டு திலகா அக்காவின் முழுக்குடும்பமும் எமது போராட்டத்துக்கு உறுதுணையாகவும் வலுவூட்டிக்கொண்டும் இருந்தனர். ஒவ்வொரு இடப்பெயர்வுகளிலும் தாய், தந்தை, அக்காமார், அண்ணாமார், தங்கை என குடும்பமாக இடம்பெயர்ந்து வந்து எமது தமிழீழ விடுதலைக்கு உறுதுணையாக நின்று உரமூட்டினர். விருந்தோம்பலிலும், கட்டட நிர்மாணப் பணிகளிலும், காப்பரண்களாக நிற்பதிலும் இன்னும் இன்னோரன்ன செயற்பாடுகளிலும் அவர்கள் என்றுமே சளைத்ததில்லை. போராளிகள் சாப்பிடுவதற்கென்றே எந்த நேரத்திலும் அங்கு அடுப்பங்கரை இயங்கிக் கொண்டிருக்கும். “எங்கள் உடல்களில் ஓடும் செங்குருதி உங்கள் சோறல்லவா” என்று என்றும் அவர்கள் எமது நினைவிலிருப்பார்கள். 1999 ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதியில் முன்னரண்களுக்கான ஆளணி தேவை கருதி நிதித்துறை மகளிரணி பயிற்சிக்கு அணியமானார்கள். திலகா அக்காவின் நீண்ட நாள் கனவு நிறைவேற அவரும் தெரிவு செய்யப்பட்டார். பயிற்சிக்குச் செல்வதற்கு முன்பு தனது குடும்பத்தினரிடம் சென்று வந்தார். அவர்களுடன் உரையாடி, உண்டு மகிழ்ந்து நிழற்படங்கள் எடுத்துக் கொண்டார். திலகா அக்கா களமுனைக்கு செல்லப்போகும் விடயம் அவர்களுக்குத் தெரிந்திருக்காது. வீட்டுக்குச் சென்று வந்துவிட்ட பின்பாக பயிற்சி முகாம் திரும்பி பயிற்சிகளை ஆரம்பித்துவிட்டார். அதிகாலையில் ஓட்டப்பயிற்சியின் போது “முந்தி, கேட்கக் கேட்க சண்டைக்கு விடேல்லை, இப்ப வயது போட்டுது” என்று கூறிக் கொண்டும் விடாமல் “மூசி மூசி” ஓடுவார். ஓய்வுவேளையில் பூப்பந்து, கரப்பந்து நன்றாக விளையாடுவார். தான் சண்டைக் களத்திற்கு சென்று தனது தமையன் போல சாதனை செய்ய வேண்டும் என்ற ஓர்மம் அவர் மனதில் ஆழப்பதிந்திருந்தது. அதைத் தொடர்ந்து களப்பயிற்சியை முடித்து நெடுங்கேணி முன்னரங்க காவலரண்களில் கடமையில் ஈடுபட்டார். அன்று காவலரண்களுக்கான உணவு எடுத்துச் சென்று வழங்கும் முறை திலகா அக்காவினது. ஒவ்வொரு அரணாகக் கொடுத்துக் கொண்டு வருகையில் 34 வது அரண் வந்தது. தனது பாசறை மற்றும் கணக்காய்வு முகாம் தோழியிடம் “எனக்குக் களைப்பாக இருக்கிறது. இங்கு நிற்கிறேன்…அடுத்த அரண்களுக்கு உணவினைக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார். அவரும் “ஓம்” என்று கொண்டு சென்றார். திடீரென பக்கத்து அரண் நோக்கி சிறிலங்கா இராணுவம் பதுங்கித் தாக்குதலைத் தொடங்கியது. ஒரு பக்கம் லெப்.புகழினி நின்ற காப்பரண். உடனே திலகா அக்காவும் பக்கத்துக் காப்பரணுக்கு துணையாக தாக்குதல் நடந்த திக்கை நோக்கி பதிலடி கொடுத்தார். எதிரியோ திசை திரும்பி திலகா அக்காவின் தாக்குதலுக்கு எதிராகத் தாக்கத் தொடங்கிவிட்டான். திலகா அக்காவும் தோழிகளும் மூர்க்கத்துடன் களமாடினார்கள். திலகா அக்கா தனது காப்பைக் கருத்தில் கொள்ளாது எதிரியை விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 12.06.1999 அன்று யாருமே நினைத்திருக்கவில்லை. எதிர்பாராத வகையில் எதிரியின் பி.கே (PK) ரவை அவரின் நெற்றியைக் குறிபார்த்தது. அசையாத மரம் போல நெஞ்சுரமும் நிமிர்ந்த தோற்றமும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட எங்கள் திலகா அக்கா எம் தாய் மண்ணை முத்தமிட்டார். தோழிகள் கலங்கினர்.எப்படிச் சொல்வோம் அவர் குடும்பத்துக்கு என்ன பதில் சொல்வோம் என்று பதறினர். ஏற்கனவே துன்பத்திலிருந்த அவர்கள் குடும்பத்திலிருந்து இன்னொரு மாவீரரையும் எம் தாய்மண் சுமந்து கொண்டாள். “போன வருடம் (1998) மாவீரராய் சென்ற அவர் தோழி (கப்டன் கலைமதி) தான் எங்கள் தர்சினியையும் கூட்டிக் கொண்டு சென்று விட்டாள்” எனத் தாய் புலம்பினார். திலகா அக்காவின் வித்துடலைத் தூக்கிய போது அவரின் அந்த நீண்ட கூந்தலின் பின்னல் ஒன்று கழன்று தொங்கியது. உடல் கவசத்தைக் கழற்றிய போது நெஞ்சிலும குண்டு பாய்ந்திருந்தது. எங்கள் நிதித்துறை வழங்கல்பகுதியின் கணக்காய்வு பகுதி அணிப் பொறுப்பாளர் மேஜர் திலகா/வான்மதியாக வீர வரலாறாகினார். தமிழீழ நிதித்துறை கணக்காய்வுப் பகுதியின் ஒரு விருட்சம் வீழ்ந்தாலும் விழுதுகள் அவர் பெயர் சொல்லி தொடர்கிறோம். -நிலா தமிழ். (இந் நினைவுப் பகிர்வுக்கு தகவல் குறிப்புகள் வழங்கியவர் -விண்ணிலா)
  24. இதை எழுதிய ச.ச. முத்து என்பவர், 1979ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இரண்டு கிழமைகள் மட்டுமே இணைந்திருந்ததாகவும் பின்னர் வீட்டிற்கு அனுப்பப்பட்ட போது சிங்களக் காவல்துறையிடம் சரணடைந்தார் என்று ஐயர் (கணேசன்) அவர்களின் ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்' என்ற நூலில் எழுதப்பட்டிருக்கிறதாம். ஆனால், இவரோ தான் 1982ம் ஆண்டு லெப். சீலன் எ சுரேஸ் அவர்களின் படத்தைப் பெறச் சென்றேன் என்றும் "பொன்னம்மானின் பொற்காலம் என்று நான் கருதுவது பொன்னம்மான் அண்ணையுடன் தமிழகத்தில் நின்றிருந்த 81,82 ஆண்டுக்காலம்தான்." என்றெல்லாம் எழுதி வருகிறார். எனினும் புலிகளின் எந்தவொரு வரலாற்று ஆவணங்களிலும் இவ்வாறு ஒரு உருப்படி தம் இயக்கத்தில் இணைந்து தொடர்ந்து செயலாற்றினார் என்றோ இல்லை குறிப்பிடத்தக்கவராக இருந்தார் என்றோ குறிப்பிடவில்லை. எனவே இவர் தன்னை வரலாற்று மாந்தனாக உட்புகுத்த முயல்கிறாரா என்ற ஐயம் வாசகர் நடுவணில் வலுவாக எழுகிறது. ஆகையால் இவர் தன்னைப் பற்றிய உண்மையை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார். இந்தத் தகவலை கட்டுரை தொடர்பான வாசகரின் மெய்ப்பார்ப்பிற்கு இங்கே இட்டுச் செல்கிறேன்.
  25. படிமப்புரவு (Image Credit): சாத்திரி அவர்களின் "அவலங்கள்" என்ற வலைப்பூவிலிருந்து.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.