Everything posted by நன்னிச் சோழன்
-
வேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும்!
தனக்கென முயலா நோன்றாள் பிறர்கென முயலுநர் உண்மை யானே ….. தமிழீழ விடுதலைப்போராட்டம் சந்தித்த மிக இறுக்கமான நேரங்களில் எல்லாம் ஒரு மைல் கல்லாக, திருப்புமுனையாக போராட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் பெரும் பலம் பொருந்திய ஆயுதமாக “கரும்புலிகள்” என்ற உயிராயுதங்களை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் உருவாக்கினார். 1987 ஆம் ஆண்டு யூலை 5, “ஒபரேசன் லிபரேசன்” என்ற பெயரில் வடமராட்சி மண்ணை சிறிலங்காப் படைகள் வல்வளைப்புச் செய்த போது ,கொத்துக் கொத்தாய் எம் உறவுகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன. சொத்துகள் அழிக்கப்பட்டன. சொந்த மண்ணிலே வாழ முடியாது மக்கள் ஏதிலிகளாய் பெரும் அவலங்களை சந்தித்தனர். இந்த நேரத்திலே, வடமராட்சி மண்ணின் சில பகுதிகள் அரச படைகளால் கைப்பற்றபட்டதோடு, வெற்றி மமதையில் இருந்து கொண்டு மீண்டும் ஒரு பட நடவடிக்கைக்கு தம்மை தயாராக்கினர் சிறிலங்கா படைகள். இந்த நிலையிலே,அரச படைகளின் கொட்டத்தை அடக்கி மீண்டும் எமது மண்ணை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் விடுதலைப்புலிகளிடம் இருந்தது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் சிறிலங்காப் படைகளால் நிரம்பி வழிந்தது. எந்த நேரத்திலும் இன அழிப்புக்கான அடுத்த கட்ட படை நடவடிக்கை ஆரம்பமாகி விடும். இப்படியான ஒரு சூழலில் தான் ஒரு மனிதனால் தன்னுடைய நாட்டுக்காகத் தன்னுடைய மக்களுக்காகச் செய்யக்கூடிய அதி உயர் ஈகமாக கொடையாக தன்னுடைய உயிரை ஆயுதமாக்கி மெய்சிலிர்க்க வைக்கும் ஈக வரலாற்றின் முதல் அத்தியாயத்தை தொடக்கி வைத்தான் கரும்புலி கப்டன் மில்லர். அன்று தொடங்கிய ஈக வரலாறு பின்னாளில் விடுதலைப்போராட்டம் சந்தித்த பெரு வெற்றிகளுக்கெல்லாம் திறவுகோலாய் அமைந்தது. எமது போராட்டம் சந்தித்த பெரும் நெருக்கடிகளில் இருந்து எமது மண்ணையும் மக்களையும் காப்பதற்காக தேசத்தின் புயல்களாய் வீசிகடல்தனில் காவியமாகி ,காற்றிலே ஏறி விண்ணையும் சாடி, ஊர் பேர் தெரியாத நிழல் கரும்புலிகளாய் மாறி உயிர் கொடைகளை அள்ளித் தந்தவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து நெஞ்சிருத்திக் கொள்ளும் திருநாள் இன்று. உண்மையிலே பார்ப்பவர்களுக்கு நெருப்பு மனிதராய் தெரியும். இந்தக் கறுப்பு மனிதருக்குள் இருக்கும் மென்மையும் ,ஈரமும் வெறும் வார்த்தைகளுக்குள் சொல்லி விட முடியாதவை. “வேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும்” யாரிவர்கள்…………விண்ணில் இருந்து குதித்து வந்த விசித்திர மனிதரல்ல…..எம்மைப் போலவே இரத்தமும் சதையுமாய் ஈழத் தாய்குலத்தின் மடியில் பிறந்து வளர்ந்த சரித்திரங்கள். அவர்களுக்கும் அம்மா,அப்பா ,உடன் பிறந்தோர், சொந்தம், சுற்றம் என பந்தங்கள் பல இருந்தன. துன்பங்கள் தெரியாத சுகமான வாழ்வு இருந்தது. பள்ளிப் படிப்பும், நண்பர் கூட்டமும் இருந்தன. இளமைக்கால வண்ணக் கனவுகள் இருந்தன. ஏன் ஒரு சிலருக்குள் அழகான காதல் கூட இருந்தது. ஆனால் இவை எல்லாவற்றையும் விட இந்த மக்களையும் ,தேசத்தலைவனையும் அவர்கள் நேசித்தார்கள். தமிழீழ மண்ணின் விடுதலையைத் தம் இலட்சியமாக கொண்டார்கள். அதனால் தான் கரும்புலிகள் என்ற உயரிய ,உன்னதமான இலட்சியக் கனவை அவர்களால் நிறைவேற்ற முடிந்தது. இந்த இலட்சியக்கனவை நிறைவேற்றுவதற்காக எத்தனை நாள் காத்திருப்பு ……வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கடின பயிற்சிகள்….ஓய்வு உறக்கமின்றிப் போன எத்தனையோ இரவுகள் ….பசிகூட மறந்து போன பொழுதுகள்,தம் இலக்கை நோக்கிச் செல்வதற்குள் எத்தனையோ தடைகள் ,அத்தனையும் ,கடந்து பகை அழித்து வென்றவர்கள் இவர்கள். இந்த இடத்தில ஒரு சிறிய சம்பவம் ஒன்றைப் பதிவாக்க நினைக்கிறேன் . இன்று தன்னுடைய ஆளுமையாலும், போரியல் நுட்பத்தாலும், மனித நேயத்தாலும்,சுய ஒழுக்கத்தாலும் உலகமே வியந்து பார்க்கும் எம் தலைவர் அவர்கள்,தாக்குதலுக்காகப் புறப்படும் கரும்புலிகளிடம் ஒரேயொரு விடயத்தை மட்டும் மிகவும் வலியுறுத்தி சொல்லுவார் . “ நீங்கள் தேடிச் செல்லும் இலக்கு எதிரிகள் மட்டும் தான். எதிரி இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்த மக்களும் எங்களுடைய நேசிப்புக்கு உரியவர்கள். அவர்களுக்கு எந்தவொரு சிறு தீங்கோ இழப்போ ஏற்படக் கூடாது. இந்த விடயத்தில் அனைவருமே மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.” எங்கள் தேசத்தலைவனின் அந்த வாக்கு இலக்கைத் தேடிச் செல்லும் ஒவ்வொரு கரும்புலிக்குள்ளும் இருந்தது. அப்படித்தான் அவனுக்கான இலக்கு பகை வாழும் இடத்தில இருந்தது. எத்தனையோ நாள் காத்திருப்பு. எத்தனையோ பல முயற்சியின் பின் அவனுக்கு கிடைத்த சந்தர்ப்பம். எதிரியை மிக நெருங்கி விட்டான். அந்த நேரம் சிறுவர்கள் விளையாடுவதற்காக அந்த இடத்துக்குள் வந்துவிட்டார்கள். அவன் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடும். ஒரு நொடி அவனது மனதில் தலைவரின் அறிவுறுத்தல் நினைவுக்கு வருகின்றது. அந்த கணமே அவன் பின் வாங்குகிறான். ஆனால் எதிரிக்குச் சந்தேகம் வந்து விட்டது. அவன் சுற்றி வளைக்கப்படப் போகின்றான். எதிரியிடம் பிடிபடக் கூடாது. அதே நேரம் பொதுமக்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது. உடனே மக்கள் நட மாட்டம் இல்லாத பகுதியை நோக்கி அவன் ஓடுகின்றான். மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி விட்டு தன் உடலில் கட்டிய வெடிமருந்தை வெடிக்க வைத்து சாவை அணைத்துக் கொள்கின்றான். உண்மையிலே அவனது சாவு என்பது ஒரு சம்பவமாகி விடவில்லை . அவன் தன் உயிரை விட எதிரி இனத்தைச் சேர்ந்த மக்களாக இருந்தாலும் அவர்களையும் எவ்வளவு நேசித்தான் என்பதன் அடையாளம் தான் அவனுடைய சாவு. இது முகம் மறைந்த கரும்புலி வீரன் ஒருவனின் வரலாறு. இது ஒரு சம்பவம் ஆனால் இப்படி எத்தனையோ வெற்றிச் சரித்திரங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எதிரியின் குகைக்குள்ளே இருந்து, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு ,பகையோடு உறவாடி, சாதுரியமாய் தமக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி, வெளியே தன் முகம் மறைத்து ,உள்ளே தன் இலக்கழித்து வெற்றிகளைத் தந்து விட்டு நினைவுகள் கல் கூட இன்றி, ஏன்ஆணா, பெண்ணா என்று கூட தெரியாது வீரச் சாவுகளின் பின்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிழல் கருவேங்கைகளின் ஈகத்தை எப்படி எழுத வேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும். அழகான காதல் அவனுக்குள் அழகான காதல் இருந்தது. தன் காதலை எப்படியாவது அவளிடம் சொல்லி விட வேண்டும் என்று பல தடவை அவன் முயற்சி எடுத்தான்.அது வாழ்வதற்கான காதல் அல்ல .இலட்சியத்தால் ஒன்று பட்டு வரலாறுகளைப் பதிவதற்கான இலட்சியக் காதல். அவன் யார் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அவன் தன்னை விரும்புகிறான் என்பதும் அவளுக்குத் தெரியும். ஆனால் ஒரு போதும் அவனது காதலை அவள் ஏற்க வில்லை. அவனுக்கான இலக்கு கிடைத்து விட்டது் அவன் புறப் படப் போகின்றான். இறுதி விடை பெறுவதற்காக அவளிடம் வருகின்றான். அப்போதும் அவனைச் சந்திக்க அவள் மறுத்து விடுகின்றாள் . அவன் வழமையான தன் புன்னகையோடே புறப்பட்டு விட்டான். அன்று இரவே சிறிலங்கா கடற்படையின் கப்பல் தகர்த்து கடலிலே காவியம் படைக்கின்றான். அவனும் கூடவே 3 தோழ தோழியருமாக தொலைத்தொடர்பு சாதனம் காற்றலையில் அவனது வீரச்சாவு செய்தியை தாங்கி வருகின்றது. அவள் விழிகளில் நீர் கோர்த்தது. தோழிகள் அவளிடம் கேட்கின்றனர் . “ அவன் உன்னிடம் பேச நினைத்த போதெல்லாம் நீ பேச வில்லை, இப்போது எதற்காகக் கவலைப்படுகின்றாய்” என அதற்கு அவள் சொல்கிறாள் “ நான் காதலிக்கிறேன் என்ற அந்த ஒற்றைச் சொல் ,அவரது இலக்கு நோக்கிய பயணத்தில் ஒரு சிறிய தடுமாற்றத்தைக் கூட ஏற்படுத்தி விடக் கூடாது. சில வேளை இலக்குச் சரியாக அமையாமல் அவர் திரும்பி வந்தால் கூட என்ர மனது குற்ற உணர்வில் துடித்துப் போய்விடும். எப்போதும் அவர் தன்னுடைய இலட்சியத்தில் வெற்றி அடையவேண்டும் இது தான் என்னுடைய ஆசை. உண்மையிலே நானும் அவரை மனதார நேசிக்கின்றேன்.அவரை மட்டுமல்ல ,அவரது இலட்சியங்களையும் சேர்த்து வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல செயலிலும் அவள் நிரூபித்துக் காட்டினாள். விளையாட்டுப் பிள்ளை அவன் ஒரு குழப்படிக்காரன் . ஒரு இடத்தில இரு என்றால் அது அவனால் முடியாத காரியம். சின்ன வயதிலேயே அப்பாவை இழந்ததனாலோ என்னவோ அவனுக்கு அளவுக்கு அதிகமான செல்லம். அம்மாவுடன் சேர்ந்து குடும்பச்சுமையை மூத்தவர்கள் சுமக்க வீட்டில் நிற்கும் இவனோ ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பிரச்சனைகளை அம்மாவின் தலையில் ஏற்றி வைப்பான். அந்தளவுக்கு குறும்புக்காரன் . வேலை முடித்து களைத்து வரும் அம்மா ஏக்கத்தோடே வீட்டுக்கு வருவார். இன்றைக்கு என்ன செய்து வைத்திருக்கின்றானோ என்ற பதபதப்பு அம்மாவுக்குள் எப்போதும் இருக்கும். ஒரு நாளைக்கு விழுந்து கைய முறிச்சிருப்பான் இல்ல காலில் அடிபட்டிருப்பான் ,இல்ல எதோ வெட்ட எடுத்த கத்தி கைய பதம் பார்த்திருக்கும். அதுகும் இல்லை என்றால் அயல் வீட்டுச் சிறுவர்களோடு அடிபட்டு பிரச்சனையை இழுத்து வைத்திருப்பான் . அப்படியொரு விளையாட்டுப் பிள்ளை அவன். ஆனால் இப்போது அவன் ஒரு கரும்புலி வீரன் , அதுகும் நீரடி நீச்சல் கரும்புலி. மூன்றாம் கட்ட ஈழப் போரின் திறவுகோல்களில் ஒருவனாக அவன். சாவுக்கு நாள் குறித்த அவர்கள் பயணம் தொடங்குகின்றது. இடியும் மின்னலுமாய் மழை கொட்டிக் கொண்டிருக்க, நீரின் அடியால் வெடிமருந்துகளைச் சுமந்த படி அவர்கள் …….. திருமலைத் துறை முகம் பலத்த பாதுகாப்பு நிறைந்த கோட்டையாக இறுமாப்புடன் இருந்தது. அந்தக் கோட்டைக்குள் அலையோடு அலையாக எதிரி விழிப்படையா வண்ணம் மெல்ல மெல்ல நகர்ந்து , எதிரியின் பாதுகாப்பு வேலிகளைக் கடந்து உள்நுழைந்து ,தமக்கான இலக்கைத் தேடிக் கண்டு பிடித்து விட்டார்கள். இன்னும் 30 நிமிடங்கள் மிக நிதானமாக கப்பலில் குண்டினைப் பொருத்தி எதிரி விழிப்படையா வண்ணம் மிக அமைதியாகத் தம் கைகளால் அதைத் தாங்கியபடி அவர்கள் நேரங்கள் மெல்ல மெல்ல நகர்கின்றன. தம் சாவுக்கான ஒவ்வொரு மணித்துளிகளையும் எண்ணிய படி தேசத்தலைவனும், தாம் நேசித்த மக்களும் , மலரப் போகும் தமிழீழத் தேசமும் மனக் கண்ணில் நிலைத்து நிற்க ,ஆடாமல் ,அசையாமல் ,விலகாமல் குண்டை அணைத்த படி அவன்.அந்தக் கடைசி மணித்துளி ……..” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” திருமலைத்துறைமுகம் அதிர்கின்றது. கப்பல் தகர்கிறது. ஒரு நிமிடம் கூட ஓய்ந்திருக்கத் தெரியாத அந்தத் தீராத விளையாட்டுப்பிள்ளை நம் தேச விடுதலைக்காக போரியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி மூன்றாம் கட்ட ஈழப் போரின் திறவுகோலாக வரலாற்றைப் படைத்தான் கடற்கரும்புலி மேஜர் கதிரவன். அக்கினிக் குஞ்சுகள் அனுராதபுரம் வான்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு ஆண், பெண் கரும்புலிகள் தயாராகின்றனர். இலக்கை அழிப்பதற்கான ஓயாத பயிற்சிகள் எல்லாம் நிறைவடைந்து விட்டன. தேசத்தின் புயல்கள் புறப்படுவதற்கான பொழுது நெருங்கி விட்டது. தாய்க் குருவியோடு சேய்க்குருவிகள் மகிழ்ந்திருக்கும் அந்த அழகான தருணத்துக்கான காத்திருப்பு கறுப்புவரிச் சீருடைக்குள் புன்னகை வீசிய படி குதூகலத்துடன் அந்த உயிராயுதங்கள் அணிவகுத்து நின்றார்கள் . எங்கும் அமைதி ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றது. தலைவர் அவர்கள் உள்ளே நுழைகின்றார். “ அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு……” என்ற பாரதியாரின் கவிதை வரிகளைச் சொல்லிக் கொள்கிறார். “உண்மையிலே எங்கட விடுதலைப் போராட்டத்தில் நீங்களும் அப்படித்தான் . கரும்புலி என்கின்ற பொறி ,இன்று எங்கட மண்ணிலும் , புலம்பெயர் தேசங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எங்கள் மக்களுடைய மனங்களில் பெரும் விடுதலை தீயை மூட்டியிருக்கின்றது. உலகம் எங்கும் எமது விடுதலைப் போராட்டத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றது” என்ற தலைவர் அவர்களின் எண்ணத்தை தாங்கியவர்களாய், இன்று ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் , எமக்காக வாழ்ந்து தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த இந்தக் கரும்புலிகள் நினைவு சுமந்த நாளில் , அவர்களின் கனவாகிய தாயகக் கனவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என்கின்ற தார்மீகப் பொறுப்புணர்ந்து அனைவரும் ஒன்றுபட்டு பயணிப்போமாக. அ.அபிராமி – https://eelamaravar.wordpress.com/2019/07/04/black-tigers-17/
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் -21 வன்னியில் விழிப்புலனற்றவர்களுக்கும் கணனிக் கல்வி வழங்கிய அறிவியற்கழகம். அப்போதெல்லாம் அடிக்கடி “இளையோர் அறிவியற் கழகம் “ என்ற பெயர்பலகை நிமிர்ந்து நின்ற இடத்தை கடக்க வேண்டிய தேவை எனக்கு இருந்தது. அதைக் காணும் போதெல்லாம் எமது தேசியத் தலைவரின் எண்ணங்களைச் சுமந்து உருவாக்கப்பட்ட அத்தனை கட்டமைப்புக்களும், அதை எல்லாம் நிர்வகித்து வந்த தமிழீழ அரசும் தான் நினைவில் வந்து செல்லும். உண்மையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தனித்து ஆயுத வழிப் போராட்டமாகவோ அல்லது அகிம்சை வழிப் போராட்டமாகவோ மட்டும் நடக்கவில்லை. தாயகம் தழுவிய பிரதேசங்கள் எங்கும் நிழல் அரசை எமது விடுதலை அமைப்பு உருவாக்கி சமூக விடியலுக்கான போராட்டமாகவே நடத்தி வந்ததை அனைவரும் அறிந்த ஒன்று. இவ்வாறான தமிழீழ அரசின் ஒரு செயற்பாடாகவே கல்வி மேம்பாடும் இருந்தது. அதற்காக பல செயற்றிட்டங்களை தமிழீழ அரசு நிறுவி இருந்தது. அவற்றை முழுமையாக இப் பகிரப்படாத பக்கத்துக்குள் கொண்டு வர முடியாது என்றாலும் அதன் ஒரு அங்கமான “இளையோர் அறிவியற் கழகம்”. என்ற கல்விச்சாலை பற்றி ஒரு பக்கத்தை பதிவிடுகிறது பகிரப்படாத பக்கங்கள். வசதிவாய்ப்பற்ற மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவென்று உருவாக்கப்பட்ட இந்த அறிவியற்கழகம் விசுவமடு பிரதேசத்தை சார்ந்த பல ஆயிரம் மாணவர்களின் ஆதாரமாக இயங்கி வந்தது. சர்வதேச தரத்துடன் ஒப்பிடும் போது வசதிகள் குறைவாக இருந்தாலும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது அந்தக் கல்லூரி. கணனிகள் யாவும் உள்ளக வலையமைப்பில் இணைக்கப்பட்டிருந்தன. உயர் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கான அத்தனை வசதிகளையும் கொண்டிருந்தது அறிவியற்கழகம். அறிவியல் தொழில்நுட்ப உச்ச வளர்ச்சியில் உள்வாங்கலுக்குள் எமது இனமும் அடங்கியுள்ளது. அந்தவகையில் நாங்கள் இன்றொரு தேசத்தை நிர்மாணிப்பதற்காகவும் தேசத்தை மீட்பதற்காகவும் போராடிக்கொண்டிருந்தாலும் எங்களுடைய தேசம் நாளைக்கு விடுதலை அடையும் பொழுது உலகத்தின் ஒட்டத்தோடும், அதி உச்ச வளர்ச்சியோடும் நாங்களும் இணைந்து கொள்வதன் ஊடாகத்தான் உலகப்பந்திலே எங்களுடைய தேசமும் நிலைக்க கூடிய வாய்ப்பு ஏற்படும். அந்தவகையில் எங்களுடைய தலைவர் எவ்வளவு தூரத்தில் எதிரியை விரட்டி எங்களுடைய தமிழீழ தேசத்தை மீட்க அவருடைய கவனத்தையும் அக்கறையையும் அவருடைய ஈடுபாட்டையும் செலுத்துகின்றாரோ அதேபோன்று இளைய தலைமுறையையும் புதிய உலக மாற்றத்தோடும் உலகத்தின் வளர்ச்சிப் போக்கோடும் இணைத்து கொண்டு போகின்ற ஒரு போராட்டத்தையும் சம காலத்தில் அவர் கையிலேடுத்து செயற்படுத்தி வருகின்றார். அதனுடைய ஒரு செயற்பாடாகத்தான் இந்த அறிவியற்கழகத்தின் தோற்றம் இங்கே கருக்கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் காலையில் இலத்திரணியல், அடிப்படை கணனிப் பயிற்சி , மின்சாரவியல் போன்ற அடிப்படை தொழில்சார் கல்விகளையும் அதாவது பணியுடனான கற்றல் செயற்பாடுகளையும் (பணிக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டது ), மாலை நேரத்தில் மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளுடனான ( அரச பாடசாலைக் கல்வித்திட்ட பாடங்கள்) கணனிக் கல்விகளையும், ICT, GIT என்று இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டிருந்த முறையே சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான தொழில்நுட்பப் பாடங்களையும் மாணவர்களுக்காக கற்பித்து வந்தது. அத்தோடு அங்கு பாடசாலை மாணவர்களின் அறிவு மற்றும் கலை கலாச்சார வளர்ச்சிகளுக்கான செயற்றிட்டங்களையும் செயற்படுத்தினர். இவற்றை விட நேரடியாக மக்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புனர்வு செயற்பாடுகளையும், கல்விக்கான அவசியத்தை உணர்த்தும் கருத்தரங்குகளையும் நடத்தி வந்தது. இதை விட மிக முக்கியமான ஒரு செயற்பாட்டை அறிவியற்கழகம் ஆற்றி வந்ததை நான் முன்பே அறிந்துள்ள ஒரு விடயம். அதாவது வள்ளிபுனம் பகுதியில் இயங்கி வந்த விழிப்பலனற்ற இளையவர்களுக்கான இல்லமான இனியவாழ்வு இல்லத்தில் இருந்த மாணவர்களுக்கு கணனிக் கற்கைநெறி ஒன்றை செய்து வந்தது. அதற்காக அவர்கள் “Jaws “ என்ற மென்பொருளை கணனியில் நிறுவி அதன் மூலமாக எழும் ஒலி வடிவக் கட்டளைகளை கிரகித்து அதற்கு ஒலிவடிவக் கட்டளைகளை வழங்கி விழிப்புலனற்ற மாணவர்களும் தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பத்தை கொடுத்தார்கள். உள்ளக பயிற்சி வகுப்புக்களில் கண்பார்வையற்ற பல போராளிகள் இக்கற்கையை பெற்றிருந்தாலும், ( நவம் அறிவுக்கூட போராளிகள்) மக்களுக்கான பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் இத் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஈடுகொடுக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது அறிவியல் கழகம் என்றால் அதில் பொய்மை இல்லை. இதற்காக புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த இளையோர் அமைப்பை சார்ந்த துறைசார் பயிற்சி பெற்ற இளையவர்கள் புலம்பெயர் நாடுகளில் இருந்து அறிவியற்கழகத்திற்கு வந்திருந்தார்கள். அதில் முக்கியமான ஒரு இளையவளை நான் அறிந்திருந்தேன். அந்த இளையவள் இப்போது எங்கே எப்படி இருக்கிறாள் என்பது தெரியாததால் அதைப் பற்றித் தொட்டுச் செல்வது நல்லதல்ல என்று கருதுகிறேன். ஆனாலும் அந்த இளையவளின் முயற்சியானது பல விழிப்புலனற்ற மாணவர்களுக்கு பெரிதும் பேறாக அமைந்தது என்பதை நான் குறிப்பிட முடியும். இச் செயற்பாடானது, பயங்கரவாதிகள் என்று தமிழீழ விடுதலைப்புலிகளை கூறி வரும் சிங்களத்துக்கும் சர்வதேசத்துக்கும் நிட்சயமாக ஒரு செய்தியை சொல்லி செல்லும். தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களுக்காக போராடினார்கள். அவர்களின் நலன்களுக்காக போராடினார்கள். அவர்களுடைய சுதந்திரமான சுவாசக்காற்றுக்காக தம்மை அர்ப்ணித்தார்கள். அதனால் தான் ஒவ்வொரு தமிழனும் பாகுபாடின்றி பயன்பெறும் வகையில் தமது நிர்வாக ஆட்சியை நிலைப்படுத்தினார்கள். விழிப்புலன்றறவர்களை தூக்கி எறிந்து அவர்களை கைவிடவில்லை. அவர்களுக்கான வாழ்வாதாரத்தை கொடுக்க என்று பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களுடனான இல்லம் ஒன்றை நிறுவி, அதை “இனியவாழ்வு இல்லம்” என்ற பெயருடன் நிர்வகித்த அதே நேரம் அவர்களும் மற்றப் பிள்ளைகளைப் போல தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதிலும் அக்கறையாக செயற்பட்டார்கள். அதனால் தான் பலவகையான இல்லங்கள் வன்னியெங்கும் இயக்கப்பட்டன. அந்தவகையில் அறிவியற்கழகம் விடுதலைப்புலிகளின் கணனிப் பிரிவினால் இயக்கப்பட்டு வந்தாலும், இதனை நிர்வகித்து வந்தது அனைத்துலக தொடர்பகம் என்ற பிரிவு. தமிழீழ தேசியத்தலைவரின் எண்ணத்தில் எழுந்த இந்த செயற்றிட்டத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பை வழங்கியது அனைத்துலகத் தொடர்பகத்தினூடாக “சர்வதேச இளையோர் அமைப்பு.” “சர்வதேச இளையோர் அமைப்பின் “ செயற்றிட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இக் கழகம் தனது பணியை சிறப்பாக செய்து கொண்டே வந்தது. இந்த நிலையில் சிங்கள அரசு ஒரு முறை இளையோர் அறிவியல் கழகத்தை இலக்கு வைத்து கிபிர் விமானத்தால் தாக்குதல் செய்த போதும் இங்கே யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாத வாறு அக் குண்டுகள் நிலத்துள் புதைந்து போயின. கிட்டத்தட்ட 4 குண்டுகளுக்கு மேல் வீசப்பட்டிருந்தாலும் ஒரு குண்டு மாத்திரமே வளாகத்திற்கு அருகில் விழுந்திருந்தது. அதுவும் வெடிக்காமல் புதைந்திருந்தது. மற்றைய குண்டுகள் தூரமாக வீழ்ந்து வெடித்தன. கல்வி கற்பிக்கும் பள்ளிகளையே இலக்கு வைக்கும் சிங்கள அரசு அறிவியற் கழகத்தை விட்டு வைக்கவா போகிறது? சர்வதேச இளையோர் அமைப்பின் பெரும் கனவான இவ் விளையோர் அறிவியற் கழகம் இன்று எந்த நிலையில் உள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், வன்னியின் மக்கள் செறிந்து வாழ்ந்த விசுவமடுப் பிரதேசத்தில் பெரும் பேறாக இருந்த இக் கழகத்தை இன்று அழித்தொழித்திருக்கும் என்றே நம்புகிறேன். சர்வதேச மக்களைப் போல் எம் மக்களும் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற எண்ணக்கருவோடு விழிப்புலன்றறவர்களுக்கும் தொழில்நுட்ப அறிவை வழங்கிய இளையோர் அறிவியற் கழகம் மீண்டும் செயற்கரு கொண்டு எழ வேண்டும் என்பதே தனது ஏக்கமாக பகிரப்படாத பக்கம் தன் மீது பதிவாக்கிக் கொள்கிறது. இ.இ.கவிமகன் 13.10.2018
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் -20 மேஜர் அல்லியும் மயக்க மருந்தும்… கரை புரண்டோடும் வெள்ளக் காடாக காட்சி தருகிறது உடையார்கட்டுப் பகுதி. திரும்பும் இடமெங்கும் சன நெரிசலால் திணறிக்கொண்டிருக்கிறது. ஒரு புறம் காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் முற்றிலும் நிறைந்து வழிந்தன. மறுபுறம் சாவடைந்த மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறு வரிசையில் இருந்தது. அவ்வாறான ஒரு நிலையில் தான் வன்னியின் முக்கிய அரச மருத்துவமனையாக இருந்த முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை இடம் பெயர்ந்து வந்து வள்ளிபுனத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. அங்கு அரச மருத்துவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை தமிழீழ மருத்துவப்பிரிவுக்கு இருந்ததால் பல மருத்துவப் போராளிகள் மக்களுக்கான மருத்துவப் பணியில் இருக்கிறார்கள். அதில் அல்லி என்று அன்பாக அழைக்கப்படும் பெண் போராளியும் இருந்தாள். உடலமைப்பிலும் மற்ற மருத்துவர்களின் வயதோடு ஒப்பீட்டளவில் சிறியவளாக இருந்தாலும் மருத்துவ அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ந்திருந்தாள். தமிழீழ தாதியர் கற்கைகள் கல்லூரியில் தனது மருத்துவ கல்வியை முடித்த அல்லி மயக்க மருந்து ( General Anesthesia /அனஸ்தீசியா) வழங்கும் மருத்துவராக சிறப்பு பயிற்சி பெற்றாள். இதற்கான பயிற்சிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிறப்பு மருத்துவர்களிடம் இருந்து பெற்றிருந்தார். அதனால் அவளது மருத்துவப் பணியின் பெரும் பங்கு சத்திரசிகிச்சை அறைகளிலையே அமைந்திருந்தது. சத்திரசிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு நம்பிக்கையும் விருப்பமுமான போராளியாக அல்லி இருந்தாள். மருத்துவத் துறையில், அதுவும் சத்திரசிகிச்சைப் பிரிவில் அதி முக்கியம் வாய்ந்த பணி என்றால் மயக்க மருந்து கொடுப்பது. அது அனைவரும் அறிந்த ஒன்று. கொடுக்கப்படும் அளவில் சிறு தவறு நடந்தாலும் அல்லது நேர விகிதங்களில் தவறு ஏற்பட்டாலும் உயிர் பிரியும் அபாயத்தைத் தர வல்லது General Anesthesia /அனஸ்தீசியா என்ற மருந்து. தற்காலிகமாக உடலியக்கத்தை நிறுத்தி வைக்கும் இம் மருந்து சரியான அளவில் சரியான நேரத்தில் கொடுக்கப்பட வேண்டியது முக்கியமானது. தவறின் உயிர் காப்பது கடினமாகும். இதற்காக அரச மருத்துவமனைகளிலும் சரி வெளிநாட்டு மருத்துவமனைகளிலும் சரி சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களே பயன்படுத்தப்படுவார்கள். அதுவும் சத்திரசிகிச்சை முடிவடையும் வரை ஒரு நோயாளிக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதாசாரத்தில் பணியாற்றுவர். சில வேளைகளில் சத்திரசிகிச்சையின் தன்மையைப் பொறுத்து ஆளணி எண்ணிக்கை மாறுபடும். ஆனால் எமது தமிழீழ தாதிய பயிற்சிக் கல்லூரி ஒன்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற அல்லி அவர்கள் அனைவரையும் தாண்டி மருத்துவப் பணியாற்றியிருந்தாள். ஒரு சத்திரசிகிச்சை அறையில் சம நேரத்தில் நடந்த இரண்டுக்கு மேற்பட்ட சத்திரசிகிச்சைகளுக்கு தனி ஒரு மயக்க மருந்து சிறப்பு மருத்துவராக ( General Anesthesia Specialist ) தனது உதவியாளர்களை ஒவ்வொரு நோயாளர்களுக்கும் தனி ஒருவர் விகிதம் நேரடியாக மயக்கமருத்து உதவியாளராகப் பயன்படுத்தி பணியாற்றி இருந்தாள். ஒரு வினாடி அளவில் கூட ஏற்படும் தவறு குறித்த நோயாளிகளை சாவடைய வைக்கும் வல்லமை பொருந்தியது. ஆனாலும் அந்த வல்லமையை உடைத்தெறிந்து தமிழீழ மருத்துவத் துறையில் தன் உதவியாளர்களினூடாக புதிய ஒரு தடத்தை பதித்திருந்தாள் அல்லி. உண்மையில் அனைவரையும் வியக்க வைக்கும் இந்த பணியானது அல்லி என்ற பெண் போராளியால் செய்ய முடிந்தது என்பது தமிழீழ வரலாற்றில் பகிரப்படாத ஒற்றைப் பக்கம். பரதநாட்டியத்தில் அதீத ஈடுபாடும் கல்வியில் அக்கறையும் கொண்ட அல்லி க.பொ.த உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது தன்னை விடுதலைப் போராளியாக மாற்றிக் கொண்டார். இருப்பினும் விடுதலைப்புலிகள் அமைப்பு அல்லி உட்பட்ட சில போராளிகளை பள்ளிக்கல்வி கற்பதற்காக அனுமதித்திருந்தது. அதனால் அவர்கள் போராளிகளாக இருந்து கொண்டு பள்ளிக் கல்வியை தொடர்ந்தார்கள் உயர்தர பரீட்சையில் நல்ல பெறுபேற்றினை பெற்றிருந்தாலும் அரச பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர கூடிய பெறுபேறு கிடைக்கவில்லை அதனால் அல்லி விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டு மருத்துவக் கற்கையை கற்பதற்காக பணிக்கப்படுகிறார். அதன் பின்பான காலங்கள் பெரும்பாலும் மருத்துவமும் மருந்துகளுமே அவரது வாழ்க்கையாகிப் போனது. கள மருத்துவத்துக்காக முன்னணி மருத்துவ நிலைகளிலும் களமுனைகளிலும் பயணித்துக் கொண்டிருந்த அல்லி மயக்க மருந்து தொடர்பான சிறப்புப்பயிற்சி பெற்றதன் பின் பெரும்பாலான நாட்களை சத்திரசிகிச்சை அறைகளிலையே கடக்க வேண்டி இருந்தது. அதுவும் மருத்துவர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையின் சத்திரசிகிச்சை அறைகளில் தான் அதிகமாக கடமை செய்தார். அவரது நீண்ட நாள் அனுபவம் சத்திரசிகிச்சை அறைகளில் சக மருத்துவர்களின் பணியை இலகு படுத்துவது வழமை. 25.01.2009 அன்று அல்லி மூத்த மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவர்களுடன் வள்ளிபுனம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரச மருத்துவமனையில் பணியில் இருந்தாள். அப்போது சிங்கள அரச பயங்கரவாதம் மக்களுக்கான மருத்துவமனை என்பதை அறிந்தும் கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுக்கிறது. ஆட்லறி எறிகணைகள் மருத்துவமனை வளாகத்தில் வீழ்ந்து வெடிக்கின்றன. இலகுவில் அடையாளம் காண்பதற்காக மருத்துவமனை கூரையில் சிவப்பு நிறத்திலான சக (+) அடையாளம் மருத்துவமனைக் குறியீடாக வரையப்பட்டிருந்தும் சிங்கள இனவழிப்பு வெறியர் மருத்துவமனை மீது தாக்குதலைத் தொடுக்கிறார்கள். இங்கே மிக முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டிய ஒரு விடயம் ஒன்றுள்ளது. இந்த மருத்துவமனையின் ஆள்கூறு மற்றும் மருத்துவமனை பற்றிய விபரங்கள் அனைத்தும் சர்வதேச உதவி நிறுவனமான செஞ்சிலுவைச் சங்கத்திடம் மருத்துவமனை பொறுப்பதிகாரியால் வழங்கப்பட்டிருந்தது. அந்த விபரங்கள் மருத்துவமனை பாதுகாப்பு வலய ஏற்பாடுகள் தொடர்பாக சிங்கள அரசிற்கு செஞ்சிலுவை சங்கம் வழங்கி இருந்தது. இவ்வாறு மருத்துவமனை பற்றிய விபரங்களை அவர்களிடம் இருந்து பெற்ற பின்பே சிங்களம் திட்டமிட்டு தாக்குதலை நடாத்தி இருந்தது. இது முதல் தடவை நடந்ததல்ல இதற்கு முன்பும் அதன் பின்பும் பல இடங்களில் நடந்திருந்தன. அத்தாக்குதலில் அவசர சத்திரசிகிச்சை ஒன்றை செய்து கொண்டிருந்த மருத்துவர் அல்லி படுகாயம் அடைகின்றார். சிகிச்சை பெற வந்திருந்த நோயாளரின் நிலையோ மேலும் மோசமாகியது. சத்திரசிகிச்சை அறை சிதைந்து போய் இருந்தது. அதனால் அங்கே வைத்து சிகிச்சையை தொடர முடியாத நிலையில் உடனடியாக காயப்பட்டிருந்தவர்கள் உடையார்கட்டுப் பகுதியில் அமைந்திருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். ஆனால் அங்கும் உடனடியாக சிகிச்சை வழங்க முடியவில்லை அங்கும் அவசர சிகிச்சைப் பிரிவு நிறைந்து கிடக்கிறது. ஏனெனில் அது ஒரு இராணுவ மருத்துவமனையாக இருந்தாலும் போராளிகளுக்கான மருத்துவம் மட்டுமன்றி மக்களுக்கான மருத்துவத்தையும் போராளி மருத்துவர்களே செய்ய வேண்டி இருந்தது. ஏனெனில் அங்கே அரச மருத்துவ வளம் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்தளவிலே இருந்தது. அதனால் தமிழீழ மருத்துவப்பிரிவு மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் இணைந்தே பணியாற்ற வேண்டிய நிலையில் இருந்தார்கள். அதனால் அங்கு இருந்த சத்திரசிகிச்சைப் பிரிவிலும் அதிகளவான காயப்பட்டவர்களுக்கான சகிச்சை வழங்க வேண்டிய நிலை இருந்தது. இது ஒரு புறம் இருக்க பாதுகாப்ப வலயம் என்ற பெயரில் சிங்களத்தால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டிருந்த கொலை வலயத்தில் குவிந்து கொண்டிருந்த மக்கள் தொகையை மறுபுறம் கட்டுப்படுத்த முடியாது இருந்தது. அதை விட முதலாவது பாதுகாப்பு வலயத்தில் கொலை வெறித் தாண்டவமாடி தலை உயர்த்த முடியாத அளவுக்கு தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தது சிங்களப் பேரினவாதம். பனங்குற்றிகளால் சுற்றி பாதுகாக்கப்பட்டிருந்த சில அறைகளை சத்திரசிகிச்சை அறைகளாக மாற்றி இருந்த மருத்துவர்கள். காயப்பட்ட மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டிருப்பதால் பாதுகாப்புக்கள் எதுவுமற்று சத்திரசிகிச்சைகளை செய்ய முயன்றார்கள். ஒவ்வொரு தாக்குதல்கள் நடக்கும் போதும் நிலத்தில் குந்தி இருப்பதும் மீண்டும் எழுந்து நோயாளிக்கான சிகிச்சையைத் தொடர்வதுமாக அவர்கள் சாவோடு போராடும் காயப்பட்டவர்களை காக்க வேண்டும் என்ற துடிப்போடு போராடினார்கள். அவ்வாறான நிலையில் தான் அல்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தார். சத்திரசிகிச்சை பிரிவில் காயப்பட்ட மக்கள் அதிகமாக காணப்பட்டதாலும் அல்லியின் காயம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தாது என்ற எண்ணமும் அவரை சிகிச்சைக்காக உள் எடுப்பதில் தாமதத்தை ஏற்படுத்தியது. அதனால் உடனடியாக மருத்துவ உதவியாளர்களால் முதலுதவி சிகிச்சையை மட்டும் வழங்கப்படுகிறது. அல்லி காயப்பட்டதை அறிந்த அல்லியின் எதிர்கால வாழ்க்கைத் துணைவனாக வர இருந்த போராளியும் அங்கு வருகிறார். ( அல்லிக்கும் அந்தப் போராளிக்கும் திருமணம் செய்வதற்கான ஒழுங்குகளை திருமண ஏற்பாட்டுக் குழு செய்திருந்தது ஆனால் சூழல் அவர்களை திருமணப்பந்தத்தில் இணைய விடவில்லை) தன் கண்முன்னே தனது வருங்கால துணைவி காயப்பட்டிருந்த நிலையை பார்க்க முடியாது நின்றார் அந்தப் போராளி. அல்லியின் உயிர் அந்த போராளியின் கண்முன்னாலே கொஞ்சம் கொஞ்சமாக பிரியத் தொடங்கி இருந்ததை அவரும் அறியவில்லை. ஒருபுறம் சிங்களத்தின் தாக்குதல்கள் மறுபுறம் காயமடைந்து வந்த மக்கள் என தாமதத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்ததால் விரைவில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருந்தும் மக்களின் உயிர் காக்க வேண்டிய பொறுப்பில் இருந்த மருத்துவர்கள் தமது சக மருத்துவரை தாமதமாகவே சத்திரசிகிச்சை அறைக்கு உள்ளே எடுத்தார்கள். ஆனால் ஏற்கனவே முழங்காலின் பின் பகுதிக்குள்ளால் உள் நுழைந்திருந்த எறிகணைத் துண்டு தொடை வழியாகப் பயணித்து வயிற்றுக்குள் சென்ற நிலையில் வயிற்றுப் பகுதியில் உள்ளக குருதிப்பெருக்கத்தை (Internal Bleeding ) ஏற்படுத்தி இருந்தது. (Septicemia) அதைக் கண்டு பிடித்து அதற்கான சிகிச்சையை ஆரம்பித்த மருத்துவர்கள் உண்மையில் தோற்றுப் போனார்கள். காயப்பட்ட உடனே அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் அல்லி உயிர் தப்பி இருப்பாளோ என்ற எண்ணம் அவர்களிடையே எழுந்தது. ஆனால் மருத்துவமனையில் நிறைந்திருந்த காயப்பட்ட மக்களும் சிங்களத்தின் தொடர் தாக்குதல்களும் அவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை தர மறுத்திருந்தது. சத்திரசிகிச்சை அறைக்கு எடுக்கப்பட்டு அல்லிக்கு தீவிர சிகிச்சையை மேற் கொள்கின்றனர் மருத்துவர்கள் ஆனால் சிகிச்சை பலனற்றுப் போகிறது. அல்லி யாருக்காக வாழ்ந்தாளோ அந்த மக்களுக்காக இறுதி வரை வாழ்ந்தாள். ஒரே நேரத்தில் தனது உதவியாளர்களினூடாக இரண்டுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கான மயக்க மருந்தை கொடுத்து அவர்களின் சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக முடிப்பதற்கு பெரும் துணையாக நின்ற மருத்துவ வேங்கை தனது வருங்கால துணைவனாக தான் ஏற்க இருந்த போராளிக்கு முன்னால் மண்ணுக்குள் மேஜர் அல்லியாக உறங்குகிறாள். இ.இ. கவிமகன் 10.10.2018 மரணம் என்பது மரணிக்கும் வரை இம் மறவர்களது வீரம் பார் முழுக்க ஓங்கி ஒலிக்கும்.
- போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 18 கண்முன்னே பிள்ளை சாக… செய்வதறியாது விழி கரைந்த தந்தை “தம்பி இந்தியா என்ட பிள்ளையை காப்பாத்துமா?அல்லது என் கண்ணுக்கு முன்னாலையே பிள்ளையை சாகடிக்குமா தம்பி…? நல்லூரான் முன்றலில் அடிக்கடி புரட்சிக் கவிஞர் காசியானந்தனையும் அங்கே இருந்த தேவர், வாஞ்சிநாதன், ராஜன், பிரசாத், சிறி போன்ற போராளிகளையும் கேட்டுக் கொண்டிருக்கிறார் தியாகதீபம் திலீபனின் அன்புத் தந்தையான இராசையா ஆசிரியர். அவர் கண் முன்னே அவர் பெற்ற பிள்ளை பசிப் போர் புரிந்து கொஞ்சம் கொஞ்சமாக சாவடைந்து கொண்டிருந்த கொடூரத்தை எமது தேச வரலாறு பதிவு செய்து கொண்டது எவ்வளவு கொடியது. உண்மையில் ஒரு நேர உணவை தனது பிள்ளை உண்ண வில்லை என்றால் கூட நெஞ்சில் நெருப்பேந்தி நிற்கும் தந்தைகளுக்கு மத்தியில் பசிப் போரால் இந்திய வல்லாதிக்க சக்திகளை எதிர்த்து நின்ற தியாகதீபம் திலீபனின் தந்தை எவ்வளவு மனவுறுதி இருந்திருந்தால், தன் பிள்ளை சாவதற்காக காத்திருந்த ஒவ்வொரு நொடியும் அந்த மேடைக்கு அருகில் இருந்தருப்பார்? பிள்ளை செத்துக் கொண்டிருந்ததை விழி கரைய பார்த்துக் கொண்டிருப்பார்? பூமி உயிருடன் இருக்கும் வரை எந்த தந்தையாலும் செய்ய முடியாத தியாகம் இது. மாவீரர்கள் மட்டும் அல்ல அவர்களைப் பெற்றவர்களும் தியாக வேள்வியில் தம்மை ஆகுதி ஆக்கியவர்கள் என்பதற்கு திரு இராசையா ஆசிரியர் ஒரு சாட்சியம். ஒரு கணம் சிந்தித்து பாருங்கள் அந்த தந்தையின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும்? தன் மகன் செத்து விடுவானோ என்ற ஏக்கம் ஒருபுறம் கனன்று கொண்டிருக்கும். மறுபுறம் இந்திய அரசு எப்பிடியாவது பிள்ளையை காப்பாற்றும் என்ற நம்பிக்கை இருக்கும். நல்லூர் கந்தன் கைவிட மாட்டான் என்று நம்பிக்கை இருந்திருக்கும். அடிக்கடி முருகனை கையெடுத்து வணங்கி இருப்பார். தாய் இல்லாத நிலையிலும் தனி ஒருவனாக வளர்த்து மருத்துவபீட மாணவனாக உயர்நிலையை பெற வைத்த அந்த தந்தை இந்த தருணத்தை எவ்வாறு அனுபவத்திருப்பார்? இருந்தாலும் அவர் தன் கண்முன்னே பிள்ளை செத்துக்கொண்டிருந்ததை தாங்கிக் கொண்டிருந்தார். இந்து சமயப் பற்றும் தமிழ் மீதான பற்றுதலும் பண்ணிசைகளும், விபூதி சந்தனம் என்று சிறுவயதில் அமைதியாக வளர்ந்த பிள்ளை தீ ஏந்தி பெரும் போர் வீரனாக மாறியது யாரால்? இன்று தன் வயிற்றில் பசித் தீயை மூட்டிவிட்டு சாவுக்கே வீரம் உரைத்து படுத்திருந்தது யாரால்? என்பவை எல்லாம் எம் மீது வல்லாதிக்கங்களை கட்டவிழுத்து விட்டிருந்த எதிரிகளுக்கு புரிந்திருக்கும். அதனால் தான் அமைதியாக பெரு வீரனை சாகடித்தது இந்திய தேசம். நெஞ்சை உருக்கும் அந்த சந்தர்ப்பத்தை உருவாக்கிய இந்திய தேசத்தை நாம் என்னவென்று கூற? தமிழீழ விடியலுக்காக களம் கண்ட தமிழீழ விடுதலைப்புலிகளை முடக்கி விட வேண்டும் என்ற அப்போதைய சிங்களத்தின் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாக்கும், அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை இடையே யூலை 29, 1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் என்று கூறப்பட்ட “இலங்கை இந்திய” ஒப்பந்தத்தை வைத்து இந்திய வல்லாதிக்கப்படை இலங்கைக்குள் அமைதிப்படை என்ற பெயரில் கால் வைத்தது. இந்திய வல்லாதிக்கத்தின் கபடத்தை புரிந்து கொண்டார்கள் விடுதலைப்புலிகள். அதனால் தான் ஆயுதவழிப்போர் முறையில் யாரிடம் இருந்து தம்மை மேம்படுத்தினார்களோ அவர்களுக்கு எதிராகவே அவ்வாயுதத்தை திருப்பி அவர்களுடன் சண்டையிட முடிவெடுத்திருந்தது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் தலமையிலான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. இக் காலகட்டத்தில் தான் பயங்கரவாதிகள், ஆயுதவிரும்பிகள் என விடுதலைப்புலிகளை குறிவைத்து சர்வதேசப் பரப்புரை ஒன்றை முன்னெடுக்கத் தொடங்கிய சிங்களத்துக்கு நாம் ஆயுதவிரும்பிகள் இல்லை என்பதை காட்ட வேண்டிய தேவை எழுந்தது. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக தந்தை செல்வாவினால் மேற்கொள்ளப்பட்ட அறவழிப்போராட்டம் தோற்ற நிலையில் ஆயுதவழிப் போராட்டத்தை எம் மீது திணித்த சிங்கள அரசுக்கு எதிராக ஆயுதவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தாலும் அறவழியில் இருந்து நாம் இன்னும் வெளியில் போகவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய நிலையும் எழுந்த போது திலீபன் என்ற புனிதன் அதற்கு தயாராகினார். அந்த தருணத்தில் தான் புரட்சிக் கவிஞர் காசியானந்தன் தேசியத் தலைவரை சந்திக்க யாழ்ப்பாணம் வந்திருந்தார். அப்போது, “அண்ண இது தான் திலீபன். “ என அறிமுகப்படுத்தி அன்புக் கட்டளை ஒன்றையும் வழங்குகிறார். திலீபனோடு இணைந்து பணியாற்றுமாறு கட்டளையிட்ட தலைவர் தன் பணியில் மூழ்கி விடுகிறார். தியாக தீபம் திலீபனுடனான குறுகிய நாள் பயணத்தில் ஆற்றல்மிக்க ஒரு இளைஞனை தான் கண்டு கொண்டதாக குறிப்பிடுகிறார் கவிஞர் காசியானந்தன். இந்நிலையில், வவுனியாப் பகுதியில் நடந்த சண்டை ஒன்றில் வீரச்சாவடைந்த இரு போராளிகளின் வித்துடல்களை மக்களின் வணக்கத்துக்காக தாயக பிரதேசம் எங்கும் கொண்டு செல்லுமாறு திலீபன் பணிக்கிறார். அப்பணியை ஏற்றுக்கொண்டு தாயகம் எங்கும் பயணித்து மீண்ட காசியானந்தனுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அந்த தருணத்தில் தான் உண்ணாநிலைப் போராட்டத்துக்கான முடிவெடுக்கப்பட்டிருந்தது. எங்கட விடுதலைப்போராட்டத்தின் அடுத்த நகர்வு ஒன்றாக இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் தார்ப்பரியங்கள் விளக்கப்பட்டு திலீபனின் உண்ணாவிரத்ததை ஆரம்பித்து வைக்க தலைவரால் பணிக்கப்படுகிறார் கவிஞர் காசியானந்தன். அப்போது கூட இது நடந்தால் திலீபனை இழந்து விடுவோம் என்று உள்மனம் கூறினாலும் இலட்சியப் பற்றில் விடாத கொள்கை கொண்ட திலீபனின் முடிவை மாற்ற யாராலும் முடியவில்லை. உண்ணா நிலைப் போராட்டத்துக்கான ஏற்பாடுகள் நிறைவு கண்டன. 15 ஆம் நாள் புரட்டாதி 1987 ஆம் ஆண்டும் பிறந்தது. பிறந்திருக்கக் கூடாது என்று நினைக்கக் கூடிய கொடிய நாள் பிறந்தது. உண்ணாநிலைப் போருக்கு தயாராகி மேடையில் ஏற வந்தவரை இடை மறித்த தாய் ஒருத்தி வீரத்திலகமிட்டு அனுப்புகிறாள். இது திலீபனின் மனதில் இன்னும் அதிகமான பற்றுதலை ஏற்படுத்தியது. ஒருவேளை பெற்ற தாய் இருந்தருந்தால் கூட இவ்வாறு தான் திலகமிட்டு அனுப்பி இருப்பார். தந்தையைப் போலவே மேடையை சுற்றி சுற்றி வந்து தன் பிள்ளையை இந்தியா காப்பாற்றுமா என வேண்டியிருப்பார். ஆனாலும் திலீபனின் முடிவினை எதிர்க்கவோ தடுக்கவோ முயன்றிருக்க மாட்டார். ஏனெனில் அந்த வீரத்தாயின் வயிற்றில் பிறந்தவனே இவ்வாறான தியாகத்தின் உச்சமாக இருக்கும் போது எவ்வாறு தாய் மட்டும் கோழையாக இருக்க முடியும்? திலீபன் தன் தாயை நினைத்தாரோ என்னவோ புன்னகை புரிந்த படி திலகமிட்ட தாயையும் தன் மக்களையும் பார்க்கிறார். இந்தியாவுக்கு எதிராக 5 வகை கோரிக்கையை முன் வைத்து ஆரம்பிக்கப்பட்ட நீர்கூட அருந்தாத உண்ணாநிலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை அருகில் அமைக்கப்பட்ட மேடையில் வைத்து சர்வதேசத்துக்கு தெளிவு படுத்துகிறார்கள் பிரசாத் தலமையிலான போராளிகள். மக்களும் போராளிகளும் சுதந்திரப்பறவை பெண்களும் என மாறி மாறி மேடைகளில் கவிதைகளாகவும் பேச்சுக்களாகவும் தியாக தீபத்துக்கு இன்னும் உரமேற்றியும், வேண்டாம் அண்ணா இதை கைவிட்டு எம்மோடு உயிரோடு இரு அண்ணா என்றும், இந்தியத்தை கெஞ்சி மன்றாடியும், நல்லூரான் கந்தனை மன்றாடியும் என நிகழ்வுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன. எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இராசையா ஆசிரியரோ விழிகளில் இருந்து ஓடும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் மேடைக்கு அருகிலும், பின்னாலும் முன்னாலும் என்று அலைந்து கொண்டே இருக்கிறார். வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி போராளிகள் கொடுக்கும் உணவில் எப்போதாவது ஒரு தடவை கொஞ்சமாக உண்டார். தூக்கமில்லை. துவண்டு கொண்டருக்கும் தன் பிள்ளையை நினைத்து நினைத்து செய்வதறியாது இருந்தார். இந்திய அரசோ அல்லது படைகளோ தியாக தீபத்தை காப்பாற்றும் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போய் இனி எதுவுமே நடக்கப்போவது இல்லை என்ற நிலைப்பாடு புரிந்த போது மெழுகுவர்த்தியாக உருகிக் கொண்டிருந்த அந்த உத்தமன் தனது உயிரை பசிப் போரில் ஆகுதியாக்கி விட்டிருந்தான். அப்போது மருத்துவர் பரிசோதித்துவிட்டு திலீபனின் பாதங்களை தொட்டு வணங்கிய போது தன் கண்முன்னே தான் பெற்றவன் வீரச்சாவடைந்ததை கண்ட அதி உச்ச வலியோடு பார்த்தீபனின் ( திலீபன்) தந்தை மேடைக்கு ஓடி வருகிறார். தன் மகன் கிடந்த கோலத்தை ஒவ்வொரு வினாடியாக பார்த்துக் கொண்டிருந்த தந்தையால் அந்தக் காட்சியை காண முடியவில்லை. இறுதிவரை மகனை இந்திய அரசு காப்பாற்றுவார்கள் என்று நம்பி இருந்த அவரின் நம்பிக்கையை உடைத்தெறிந்து துரோகம் இழைத்தது இந்திய வல்லாதிக்க அரசு. இந்த நிலையில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தனது பாதுகாப்பு போராளிகள் மற்றும் புரட்சிக் கவிஞர் காசியானந்தன் ஆகியோருடன் முகாம் ஒன்றில் இருந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். திலீபன் வீரச்சாவடைந்துவிட்டதாக தலைவருக்கு தெரியப்படுத்தப்படுகிறது. உண்ணா நிலைப் போராட்டத்தின் முடிவெடுக்கப்பட்ட நாளில் இருந்தே தியாக தீபம் திலீபனை நினைத்து வாடிக் கொண்டிருந்த தேசியத் தலைவரின் விழிகள் கண்ணீரை சொரிகிறது. எதற்கும் அஞ்சாத பெரு வீரனின் விழிகள் அன்று திலீபன் என்ற ஒற்றை புனிதத்துக்காக கலங்கி நின்றது. மகனின் வித்துடல் தாங்கிய ஊர்தியோடு இறுதிவரை பயணித்த தந்தை தாங்க முடியாத வேதனைகளை மனதுக்குள் புதைத்து விட்டு வீரப் புதல்வனுக்காக வணக்கம் செலுத்துகிறார். இன்றும் எங்கள் மனங்களில் தியாக தீபம் திலீபனைப் போலவே அவரின் தந்தையும் நிலைத்து விட்டார். அவர் மட்டுமல்ல இந்திய தேசமும் தான். அவர் மட்டுமல்ல இந்திய தேசமும் தான். நன்றி புரட்சிக் கவிஞர் காசியானந்தன். இ.இ.கவிமகன் 19.09.201 https://eelamaravar.wordpress.com/2019/06/27/thileepan-8/
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் -17 லெப்டினன் கேணல் சிவம். பகிரப்படாத பக்கம் -17 பல வருடங்கள் கழித்து கொடுத்த மகிழ்வை பறித்து சென்ற தமிழீழ காவலன். லெப்டினன் கேணல் சிவம். தென்னை வளத்தால் மேன்மை கொண்டிருக்கும் தென்மராட்சியின் ஒரு கிராமம் அது. 2000 ஆம் ஆண்டின் பங்குனி மாதத்தின் 26 ஆம் நாள் குடாரப்புப் பிரதேசத்தில் நடந்த மாபெரும் தரையிறக்கத்தின் தொடர் வெற்றிகளால் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பின் மீண்டும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வந்திருந்தது அந்த கிராமம். அக் கிராமத்தில் விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்ட மக்களின் ஒரு தொகுதியினர் வன்னிக்கு நகர்த்தப்படாமல் இருந்தார்கள். அவ்வாறான நிலையில் பூநகரி ஊடாக நகர்ந்து வந்த போராளி ஒருவரால் வீட்டுக் கதவு ஒன்று தட்டப் படுகிறது. திடீர் என்று தட்டப்பட்ட ஒரு வீட்டின் கதவினைத் திறந்த இளம் பெண் ஒருத்தி தனது கண் முன்னே நின்ற போராளியைக் கண்டு எதையும் பேச முடியாதவளாக வாய் மூடி நின்றாள். அவள் உடல், உயிர், ஆவி அனைத்தும் ஒடுங்கிப் போகும் அளவுக்கு மகிழ்ச்சி பொங்கி பிரவாகித்தது. எதிர்பார்த்து நீண்ட காலமாக காத்திருந்த அவளது உயிர் எதிர்பார்க்காத நேரத்தில் கண்முன்னே வந்தி நின்றதை அவளால் நம்ப முடியவில்லை. கிட்டத் தட்ட 10 வருடங்களுக்கு மேலான காத்திருப்பு. கிடைக்குமா கிடைக்காதா என்ற ஏக்கம். அனைத்தையும் தாண்டி இன்று கண் முன்னே கிடைக்கும் என்று பதிலளித்தபடி நிற்கிறது அவளின் உயிர். அவரும் அப்படித் தான் கிட்டத்தட்ட 1990 ( சரியாக ஆண்டு நினைவில்லை) ஆம் ஆண்டின் ஆரம்ப காலத்தில் வடமராட்சிப் பகுதியில் இந்தியத்துக்கு எதிராக போராடிய குறிப்பிட்ட சில போராளிகளுள் அவரும் ஒருவர். இந்திய இராணுவத்தின் தாக்குதல் ஒன்றில் கால் தொடையில் காயப்பட்டு படகு மூலமாக இந்தியாவுக்கு சிசிக்கைக்காக செல்கிறார். அங்கே உடைந்து கிடந்த தொடை எலும்புக்கான சிகிச்சையை தமிழகத்தின் ஈழ உணர்வாளர்கள் செய்கிறார்கள். கடுமையான முயற்சியின் பின் அவரின் கால் துண்டாக்கப்படாமல், எலும்பு சீரமைக்கப்படுகிறது. உண்மையில் அக்காலம் இந்தியாவில் பல சிரமங்களுடன் தான் இச்சிகிச்சைகளை தமிழின உணர்வாளர்கள் செய்தார்கள். ஏனெனில் யார் இடத்தில் பயிற்சிகளைப் பெற்று எம்மை மெருகேற்றினமோ? அவர்களுக்கெதிரான சண்டையில் காயப்பட்ட போராளியை அவர்களின் இடத்தில் வைத்து காப்பாற்றுவது என்பது எவ்வளவு கடுமையான சிக்கல்களை உருவாக்கும் என்பது வெளிப்படையானது. இவ்வாறான நிலையில் சிகிச்சை முடிந்து கொஞ்சம் உடல்நிலை தேறி இருந்தவரை தமிழக காவல்துறை கைது செய்யது வேலூர் வேறு சில போராளிகளுடன் சேர்த்து அடைத்தது. போராளிகளால் சிவம் அண்ணை என்று அன்பாக அழைக்கப்படும் அப்போராளியின் சண்டை முறைகள் சொற்களில் சொல்ல முடியாத வீரம் செறிந்தவை. அதனால் சிறைக்குள் இருந்த போதிலும் கட்டுக்கடங்காத இனவுணர்வை தன் மனதுக்குள் வளர்த்து தன்னைப் புடம் போட்டுக் கொண்டவர். பல ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தியாவின் வேலூர் சிறையில் இருந்து சிறையுடைத்துத் தப்பித்து தாயகம் வந்து சேர்ந்தார். அப்போது உண்மையில் எமது விடுதலை இயக்கம் பல பரினாம வளர்ச்சிகளை தன்னகத்தே கொண்டு வானம் தொட்டு நின்றது. இனம் மானம் குன்றாமலும், விடுதலை பெற வேண்டும் என்ற வீச்சு குறையாமலும் சிறையில் இருந்து மீண்டு வந்த சிவம் அவர்களை விடுதலைப்புலிகளின் சண்டைக்கான வாகனப்பகுதி தன்னகத்தே உள்வாங்கிக் கொள்கிறது. நெடுங்கேணி பிரதேச வாகனப்பகுதிப் பொறுப்பாளராக இயங்கத் தொடங்கிய அந்த மூத்த போராளி தன்னுடைய பணியில் கொஞ்சமும் தளர்ந்ததில்லை. சண்டை அணிகளுக்கு மிக முக்கியமான பணியாக இருந்தவை காயப்படும் போராளிகளை பின்நகர்த்துவது அல்லது வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்களை பின்நகர்த்துவது. அதற்காக நிதிப்பிரிவின் கீழ் இயங்கி வந்த வாகனப்பகுதியே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. அதை விட FDL என்று சொல்லப்படுகின்ற எல்லை வேலியில் காவல் காக்கும் போராளிகளுக்கான உணவு வழங்கலையும் அவர்களே செய்து வந்தார்கள். அதில் இவ்வாறான இரு பெரும் பணிகளை தமிழீழத்தின் எல்லை வேலிகள் அனைத்திலும் வாகனப்பகுதிப் போராளிகள் செய்து வந்தார்கள். அவர்களில் ஒரு பகுதிப் பொறுப்பாளராகவே சிவம் அவர்களும் இயங்கினார். இந்த நெடுங்கேணிப் பிரதேச எல்லை வேலியில், சோதியா படையணியின் ஒரு தொகுதிப் போராளிகள், தளபதி லோரன்ஸ் தலமையில் சிறுத்தை படையணியின் ஆண் பெண் அணிகள், தளபதி லெப் கேணல் ஸ்ரான்லி தலமையில் ஜெயந்தன் படையணியின் ஒரு தொகுதி அணி ஆகியன தரித்து நின்றன. இவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் கட்டளைத் தளபதியாக பிரிகேடியர் பால்ராஜ் இருந்தார். இக் களமுனை எல்லையை மிகவும் இறுக்கமாக வைத்திருக்க வேண்டிய தேவை எழுந்தது. ஏனெனில் அப்போது இருந்த எல்லை வேலியை இராணுவம் உடைத்து முன்னேறுமாக இருந்தால் முள்ளியவளை, முல்லைத்தீவு என்பவற்றை இலகுவாக கைப்பற்றி விடுவான் எதிரி. அதனால் பல வியூகங்களைக் கொண்டு நிமிர்ந்து நின்றது அக் களமுனை. அப்போது இத்திமடு பகுதியில் பிரதான மருத்துவநிலையை போராளி மருத்துவர்கள் அமைத்திருந்தார்கள். அதில் மருத்துவர் தணிகை, மருத்துவர் பௌலின், மருத்துவப் போராளி மாறன், உதவி மருத்துவர் தில்லை, இம்ரான் பாண்டியன் படையணியின் மருத்துவப் போராளிகள் இருவர், மருத்துவப் போராளி தேவிகா ஆகியோர் பணியில் இருக்கின்றனர். அம் மருத்துவ நிலை ( இம் மருத்துவ நிலை மட்டுமல்ல பெரும்பாலும் எல்லா இடமும் இதே நிலை தான்) 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரும் இடர் ஒன்றை சந்தித்தது. அக்காலப்பகுதியில் வன்னியில் பெரும் தொற்று நோய்களாக விளங்கிய மலேரியா (Malaria) , வட்டக்கடி (Ringworm) , நெருப்புக்காச்சல் (Typhoid ), செங்கண்மாரி (Jaundice ), சொறி சிரங்கு( Scabies ) போன்ற தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்திருந்தது. இதனால் மக்கள் மட்டுமல்ல பல நூறு போராளிகளும் அடிக்கடி பாதிக்கப் பட்டார்கள். இதில் குறிப்பிட்ட அனைத்தும் தொற்று நோய்களாலும் பல இடர்களை சந்தித்தார்கள் போராளிகள். இதில் வட்டக்கடி என்று சொல்லப்படுவது ஒரு தோல் வருத்தம். அவ்வருத்தம் உடனடியாக பரவும் அபாயம் நிறைந்தது. அதுவும் களமுனை எல்லைகளில் நிற்கும் போராளிகளுக்கு பரவும் வேகம் அதிகரித்திருந்தது. அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் மிக முக்கிய காரணமாக எல்லை வேலிகளில் தூய்மையை பேணுவதில் எழும் சிக்கல்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். குளிப்பதற்கோ அல்லது உடை மாற்றுவதற்கோ ஒழுங்கான நேர அட்டவனை கிடைப்பதில்லை. உறக்கமோ உணவோ சரியாக கிடைப்பதில்லை. அவ்வாறு இருக்கும் எல்லை வேலிகளில் வாரத்துக்கு ஓர் இரு முறைகள் தான் குளிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும். இவ்வாறு இருக்கும் நிலையில், வட்டக்கடி பரவுதலை தடுக்க முடியாத நிலை மருத்துவர்களுக்கு எழுந்தது. ஆண் போராளிகளை விட அதிகமாக பாதிக்கப்படுவது பெண் போராளிகளே. ஏனெனில் அவர்களின் களமுனை வாழ்க்கை என்பது வார்த்தைகளால் கூற முடியாதது. வளங்கல் பிரிவால் கொடுக்கப்பட்ட மாற்றுடையை சண்டைகளினால் இழந்து ஒற்றை உடையோடு காவல் இருக்கும் அவர்களுக்கு மாற்றுடை வரும் வரை உடை மாற்றுவது என்பது வினாக்குறியே. இவ்வாறு களமுனைகளில் இருந்தவர்களுக்கு தொற்று நோயின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை நினைத்து பார்க்க முடியுமா? ஆனாலும் லெப் கேணல் சிவம் போன்ற போராளிகளால் அவர்கள் நலமடைந்து வாழ்ந்ததை மறுக்கவோ மறக்கவோ முடியாது. பெரும்பாலான போராளிகள் இந்த தோல் நோய் தொற்று ஏற்பட்டவர்களை தனித்துவமாக சிகிச்சை வழங்க வேண்டிய நிலைக்கு வந்திருந்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்துப்படும் மாத்திரையான GRISOVIN பயங்கர வலுவான காரணத்தால் பசுப்பாலுடன் சேர்த்தே அம் மருந்தை உட்கொள்ள வேண்டி இருந்தது. அதைப் போலவே மலேரியா தொற்றால் பாதிக்கப்பட்ட போராளிகளையும் தனிமைப்படுத்த வேண்டி வந்தது. அவர்களுக்கு சத்துணவுகளை கொடுக்க வேண்டி நிலை வந்தது. ஏனெனில் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மாத்திரைகளான Chloroquine, Primaquine என்பனவும் வலுவானவையாக இருந்தன. அதனால் அவ் வலுவான மாத்திரைகளை தாங்கும் சக்தியை அவர்களின் உடல் கொண்டிருக்க வேண்டி இருந்தது. இவ்வாறான நிலையில், அக்காலத்தில் உணவு வழங்கலை செய்வதே பிரச்சனையாக இருந்தது. ஒரு நெகிழ்வுப் பையில் ( Shopping Bag) மூன்று பேருக்கான சோறும் கத்தரிக்காய் கறியும் தான் பெரும்பாலும் கிடைக்கும். அதுவும் சில வேளைகளில் சாப்பிட முடியாத நிலையில் களமுனை அதிர்ந்து கொண்டிருக்கும். இப்படியான நேரத்திலும் இராணுவ மருத்துவமனைகளில் விழுப்புண் அடைந்த போராளிகளுக்கு பால் முட்டை மற்றும் இறைச்சி போன்ற சத்துணவுகள் வழங்கப்பட்டு வந்தாலும், முன்னணி நிலைக்கு வழங்குவது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. அதனால் மருத்துவர்களுக்கு அம் மருந்தைக் கொடுப்பதில் சிக்கல்கள் நிறைந்திருந்தது. அந்த நேரத்தில் திடீர் என்று பெரிய பரல்களில். பசுப்பாலை கொண்டு வந்து காச்சி அவற்றை மருத்துவ நிலைகளுக்கு வழங்குவார். கிரிசோவின் குடிக்கிறதென்றா பால் வேணுமல்ல இத பெடியளுக்கு குடுங்கோ என்பார். அல்லது திடீர் என்று காட்டு மிருகங்களை வேட்டையாடி அவற்றை உணவாக்கி அப் போராளிகளுக்கு வழங்குவார். அப்போது, “அண்ண எப்பிடியண்ண தெரியும் இந்த மாத்திரைக்கு பால் கட்டாயம் தேவை என்று? “ போராளி மருத்துவர் வினவுகிறார். டொக்டர் இப்பத் தான் மருத்துவப்பிரிவு, உணவுப்பிரிவு, வாகனப்பிரிவு, அரசியல்துறை, நிதி, நிர்வாகம் எல்லாம் தனித்தனி அலகுகளாக பிரிக்கப்பட்டு நிர்வாகம் இயங்குகிறது. எங்கட காலத்தில நாங்கள் தான் டொக்டர், நாங்கள் தான் இராணுவம், நாங்கள் தான் அரசியல். ஆக மொத்தத்தில் எல்லாமே செய்ய வேண்டியவர்களாக இருந்தோம். அதனால் தான் இவ்வாறான செயற்பாடுகளை பட்டறிவால் அறிந்து கொண்டோம். என்கிறார் உண்மையில் எமது போராளிகளை தேசியத்தலைவர் அவ்வாறு தான் வளர்த்தார். அனைத்தையும் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவரது எண்ணம். சில போராளிகள் துறை சார்ந்த சிறப்பு வல்லுனர்களாக வளர்க்கப்பட்டாலும் அத்துறை சாராதவர்களுக்கும் அது பற்றிய பட்டறிவு நிட்சயமாக கொடுக்கப்பட்டிருக்கும். இது நியமானதே. இது இவ்வாறு இருக்க உணவில் இப்போதெல்லாம் அடிக்கடி காட்டு விலங்குகளின் இறைச்சி அதிகமாக சேர்க்கப்பட்டதன் காரணத்தையும் வினவுகிறார் மருத்துவர். அப்போது புத்தம் புதிய இரட்டை குழல் சொட்கன் (Double Barrel Shotgun) என்ற வகை ஆயுதத்தை எடுத்துக் காட்டி லீமா தந்தவர். அவருக்கு அண்ணை பிரத்தியேகமாக கொடுத்தவராம் அதை எனக்கு தந்தவர். இது தான் வேட்டைக்கு உதவுது. அவர் என்னை மதிப்பளிக்கத் தந்த இந்த ரைபிள் பெடியளுக்கு சாப்பாட்டுக்கு உதவுது என்ற படி புன்னகைக்கிறார் மூத்த போராளி சிவம். நகைச்சுவை உணர்வு மிக்க அவர் போராளிகளையும் மக்களையும் எப்பவும் சிரிக்க வைத்து மகிழ்வதைப் போல அவர்கள் தேவையை அறிந்து அதை நிவர்த்தி செய்தும் மகிழ்விப்பார். இவ்வாறாக வாகனப்பகுதி பொறுப்புநிலைப் போராளியாக வாழ்ந்த மூத்த போராளி சிவம் அவர்களின் நெஞ்சத்துள் குடி கொண்டிருந்த சண்டை ஆர்வம் தனது பொறுப்பாளரிடம் சண்டைக்கு செல்வதற்கான அனுமதிக்கு அடம்பிடிக்க வைக்கிறது. அனுமதி கிடைத்து சண்டையணிக்கு செல்கிறார். பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் தலமையிலான சண்டையணி ஒன்றின் பகுதித் தளபதியாக வட போர்முனையை நோக்கி செல்கிறார். தனது நுன்னறிவுப் பார்வையால் சண்டைக் களங்களை அளவிடத் தொடங்கினார். அவரது சண்டையணி சிறப்பாக செயற்படத் தொடங்கிய காலப்பகுதியில், குடாரப்பு தரையிறக்கம், அனையிறவு படைமுகாம் மீதான முற்றுகை மற்றும் யாழ்ப்பாணத்தில் செறிந்திருந்த சிங்களப்படைகளை முற்றுகையிட்டு முடக்குவது போன்ற பெரும் இலக்குகளுடன் பல பகுதிகளூடாக பல படையணிகள் களம் இறங்கின. இந்த சந்தர்ப்பத்தில், பூநகரி ஊடாக தனங்கிளப்பு சென்று அதனூடாக மிருசுவில், கைதடி என நகர்ந்து யாழ்ப்பாண நகரை சென்றடையும் இலக்கோடு ஒரு அணி நகர்ந்தது. அதில் பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் கட்டளையின் கீழ் அவரது அணியும் இருந்தது. அவர்கள் இலக்கை வெற்றியடைந்து கொண்டு யாழ்ப்பாணத்தை நோக்கி செல்கிறார்கள். அவ்வாறான வெற்றிச் சமர் ஒன்றை செய்து தென்மராட்சிப் பகுதிக்குள் உள் நுழைந்திருந்த மூத்த போராளி சிவம் தலமையிலான அணி தமது முன்னிலை வேலியை இறுக்கமாக போட்டிருந்தது. இந்த நிலையில் தான் தென்மராட்சியில் இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த அப் பிரதேசத்தில் அமைந்திருந்த 10 வருடத்துக்கு மேலாக நேசித்த அவ்வுறவின் நினைவு மேலெழுந்து அவ்வீட்டுக் கதவை தட்டி இருந்தார் சிவம். அவர் நினைத்து வந்தது. தான் காதலித்த தன் உயிரானவள் இன்னும் ஒரு ஆடவனை திருமணம் செய்து இரண்டு மூன்று குழந்தைகளின் தாயாகி இருப்பாள் என்றே. ஆனால் தான் காதலித்தவனுக்காக 10 வருடங்களுக்கு மேல் வருவான் வருவான் என காத்திருந்த அப் பெண்ணைக் கண்டதும் கட்டித் தழுவி முத்தமிட வேண்டும் போல் தோன்றியது அவருக்கு. ஆனாலும் அவர் முதுநிலை போராளி. விடுதலைப்புலிகளின் இயக்க விதிகளை மீற அவரால் முடியாது. எண்ணங்களுக்கு கடிவாளமிட்டு விட்டு தனது காதலியிடம் நலமா என வினவுகிறார். அவளால் எதையும் பேச முடியவில்லை. விழிகள் கலங்கி அருவியாய் கண்ணீர் ஓடத் தொடங்கியது. அழாதையுங்க இது என்ன சின்னப் பிள்ளை போல அழுது கொண்டு…? அவர் அவளை ஆற்றுப் படுத்துகிறார். ஆனால் அவளால் பேச முடியவில்லை. தான் நேசித்தவன் இருக்கிறானா இல்லையா என்ற எந்த தொடர்புகளுமற்று வாழ்ந்து வந்த காலம் அத்தனைக்கும் இன்று தன் முன்னே பெரும் மகிழ்வாக வந்து அவனே நிற்பதை அவளால் உணர முடியவில்லை. அவள் பேச்சற்று இருந்த போது அவளை உடனடியாக வன்னிக்கு செல்லுமாறும் அங்கே தான் வந்து சந்திப்பதாகவும் விபரங்கள் கூறி வழியனுப்புகிறார். அதன் பின் தன் கடமைக்காக களத்துக்கு சென்று விடுகிறார். குறித்த சில காலங்களில் அவருக்கும் அவளுக்கும் இடையிலான மகிழ்வான தருணங்களை அமைப்பின் திருமண ஏற்பாட்டுக் குழு செய்யத் தயாராக இருக்கும். அதற்கான அனுமதியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்குள் எழுந்தது. ஆனால் அனுமதி கிடைத்தாலும் அம் மகிழ்வான தருணங்களை அவர் அடைய முடியாத நிலையில் தமிழீழ விடியலுக்காக பல கனவுகளைச் சுமந்து வாழ்ந்த அப் போராளி வித்துடலாக தென்மராட்சி மண்ணின் கைதடி பாலம் தாண்டிய பகுதியில் ( சரியான இடம் தெரியவில்லை) விதையாக வீழ்ந்திருந்தார். சிவமண்ண என்று அன்பாக அழைக்கும் போராளிகளை லெப்டினன் கேணல் சிவம் என்ற மாவீரன் என்று அழைக்க வைத்துவிட்டு அவர் நிம்மதியாக உறங்குகிறார். தமிழ்லீடர் மருத்துவர் தணிகையுடன் இ.இ. கவிமகன் 29.08.2018
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் -16 சாவடைந்தும் சாகாத வீரம் கேணல் ராயூ. பகிரப்படாத பக்கம் -16 சாவடைந்தும் சாகாத வீரம் கேணல் ராயூ. “அப்பா போட்டு வாறம் …” இந்த வார்த்தைகளை சிறுத்தைப் படையணிப் போராளிகள் சண்டைக்குச் செல்லும் போது தமது தளபதியான கேணல் ராயூவுக்கு சொல்லி செல்லும் வார்த்தைகள் இவை. உண்மையில் ஒரு மகளிர் சிறப்புப் படையணியை உருவாக்குதல் என்ற திடமான முடிவை தேசியத்தலைவர் எடுத்த போது அதற்கான பொறுப்பை முதலில் எடுக்க மறுத்த கேணல் ராயூ பின் நாட்களில் அப்படையணியின் அப்பாவாக அம்மாவாக அண்ணனாக என அனைத்துமாக மாறி இருந்த நிலையை எம் வரலாறு பதிவாக்கத் தவறவில்லை. சிறுத்தைப் படையணியின் மகளிர் பிரிவின் போராளிகள் கேணல் ராயூ அவர்களினால் புடம்போடப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். சின்னச் சின்ன விடயங்களை கூட மிகவும் கருத்தில் எடுத்து கவனிக்கும் கேணல் ராயூவின் எண்ணமெல்லாம் மகளிர் சிறுத்தைப் படையணியை பெரும் வரலாறுகள் படைக்கும் அணியாக வளர்க்க வேண்டும் என்பதே. அவ்வாறான பயிற்சிகளே அவர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இராணுவப் பயிற்சியிலும் இது சிறப்பு பயிற்சி. சிறப்பு அணிகளின் அதி உயர் தாக்குதல் பயிற்சி. அதனால் இறுக்கமான கட்டுப்பாடுகளும், அதி திறன்வாய்ந்த பயிற்சிகளும் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அப்படியான பயிற்சியின் ஒரு நிலையில் கப்பியில் கடக்கும் பயிற்சிக்காக போராளிகள் கூடி நிற்கிறார்கள். அதில் ஒரு போராளி கடந்து கொண்டிருந்த போது கப்பி அறுந்து விடுகிறது. எல்லோரும் கீழே விழுந்து கொண்டிருக்கும் போராளி இறந்து விடுவாள் என்று நினைத்து சத்தமாக குழறுகிறார்கள். ஆனால் நிதானம் கொண்ட கேணல் ராயூ அவளை பக்கவாட்டாக விழு என்று கத்துகிறார். முன்பக்கமாகவோ அல்லது பின்பக்கமாகவோ விழுந்தால் விழுகின்ற வேகத்தில் உடலுறுப்புக்கள் பாதிப்படையும் வாய்ப்புக்கள் அதிகம். அதனால் சாவடைய வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தது. ஆனால் பக்கவாட்டாக விழுவதனூடாக சாவைத் தவிர்க்கலாம் என்று அவர் கருதினார். அதனால் அவளை உடனடியாக அதை செய்யுமாறு பணிக்கிறார். அது அதிஸ்டவசமோ அல்லது அவளின் முயற்சியோ தெரியாது அவள் விழுந்தது பக்கவாட்டாகவே அதனால் அவளின் இதயமோ நுரையீரலோ அல்லது உடலின் உள்ளுறுப்புக்களென எதுவுமோ பெரிதளவில் பாதிப்படையவில்லை. எலும்பு முறிவுகள் தான் ஏற்பட்டிருந்தது. அவள் உயிர் தப்பி இருந்தாள். இங்கு அந்தப் போராளி உயிர் தப்பியது ஒரு புறமிருக்க அந்த நேரத்தில் உடனடியாக அவரின் வாய் ஐயோ என்று கத்தவில்லை அவளை காப்பாற்றக் கூடிய வகையைத் தான் மொழிகிறது. அவர்களை தன் பிள்ளைகளைப் போல பார்த்து வந்த கேணல் ராயூ கடுமையும் கண்டிப்பும் நிறைந்த தளபதி. சின்னச்சின்ன விடயங்களில் அதி கவனமாக போராளிகளை வளர்த்தார் அவர். சிறுத்தைப் படையணியைப் பொறுத்தவரை அனைத்து வகைகளிலும் மேன்மை மிக்கவர்களாக சிறப்பணியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் திடமாக இருந்தார். அதனால் பயிற்சி, பயிற்சி, பயிற்சி இதைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்கு இருந்தது குறைவு. இன்னொரு நாள் காட்டுப் பயிற்சியை எடுத்துக் கொண்டருந்த ஒரு போராளி காட்டுக்குள் இருந்த பழமான “ பேக்குமட்டி “ என்ற பழத்தை உண்டு விடுகிறாள். அப் பழம் நச்சுத் தன்மை நிறைந்தது. அதனால் அந்தப் போராளி சாவடைந்து விடுகிறாள். இந்த சாவு கேணல் ராயூவையும் அவர் சார்ந்தவர்களையும் பல முடிவுகளை எடுக்கத் தூண்டியிருந்தது. காட்டு மரங்கள் பற்றிய பயிற்சிகளோ அறிவோ அப்போது அவர்களிடத்தில் இருக்கவில்லை. அதனால் உடனடியாக அந்த காடு முழுவதும் அலைந்து திரிந்து பலவகையான பழங்களை சேகரித்து அதன் தன்மைகளை ஆராய்கிறார் கேணல் ராயூ. அவரின் ஆய்வுத்திறன் தன்மையாலும் மருத்துவப் போராளிகளின் உதவிகளோடும் காட்டில் உள்ள மரங்கள், பழங்கள், இலைகுழைகள் என அனைத்தும் எவை உணவுக்கேற்றவை, எவை நஞ்சுத்தன்மை பொருந்தியவை என்று இனங்காணப்படுகிறது. அதன் பின்நாட்களில் போராளிகளுக்கு அவை தொடர்பாக கற்பிக்கப்படுகிறது. எவை உண்பதற்கு உகந்தது என்றும் எவை உணவுக்கு ஏற்பற்றவை என்றும் பயிற்சியளிக்கப்படுகிறது. இதன் பின்னர் பழங்களை உண்டு சாவடைந்ததான வரலாறு தமிழீழத்தில் இருக்கவில்லை. இவ்வாறு ஒன்றை ஆய்தலும் அவற்றை கற்றுக்கொள்ளுதலும் முக்கியம் என்பதை உணர்ந்த அவர், தான் மட்டுமல்ல தன் போராளிகளும் அவ்வாறே வளர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். போராளிகளிடையே வாசிப்புத் திறனை ஊக்கிவிப்பதும். புதிய விடயங்களை கற்றுக் கொள்வதும் அவரால் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இரவு பகல் என்று ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் அந்த போராளியின் கண்கள் ஓய்வைக் கண்டது மிகக் குறைவு. எப்போதும் கற்றலும் தேடலுமாகவே அவர் இருப்பார். ஒரு விடயத்தை அறிந்து கொள்வதற்காக தேடல்களில் ஈடுபட்டால் அவருக்குத் தூக்கம் என்பது வராது. Nes Coffee என்று சொல்லப்படும் கோப்பியை அடிக்கடி குடிக்கும் கேணல் ராயூ அவர்கள் உணவைப் பற்றியும் அதிகம் கவனமெடுப்பதில்லை. இவ்வாறான ஒரு பயிற்சியில் ஒரு குளத்தினூடாக நகர வேண்டிய அணி அக்குளத்தில் முதளை இருப்பதாக அறிந்து தயங்கி நின்றது. எப்போதும் போலவே அப் போராளிகளுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடும் கேணல் ராயூ முதளைகள் இருக்கும் அக் குளத்தை கடப்பது எவ்வாறு என்பதை முதலாவது போராளியாக கடந்து காட்டி கற்பித்தார். அதன் பின் அப் போராளிகளுக்கு முதளை மீதிருந்த பயம் விலகி இருந்தது. அவ்வாறு தான் காட்டுப் பயிற்சியில் யானையை கண்டு தயங்கியவர்களை யானைகள் நடமாடும் பகுதிக்குள்ளையே தங்கி இருந்து பயிற்சியை மேற்கொள்ள வைத்து அதன் மீதிருந்த பயத்தையும் அவர் போக்கி இருந்தார். இவ்வாறாக ஒவ்வொரு விடயங்களிலும் கவனம் எடுத்து செயற்படும் கேணல் ராயூ அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் உள்வரும் எந்த வகை ஆயுதங்களாக இருந்தாலும் சரி அதன் பொறிமுறைகளை, செயற்பாடுகளை கண்டறிந்து அவற்றை செயற்படுத்துபவராக இருப்பார். அது சாதாரண தர கைத்துப்பாக்கி என்றாலும் சரி ஆட்லரி எறிகணை செலுத்தியாக இருந்தாலும் சரி அவரது கை பட்ட பின்பே முதல் குண்டை செலுத்தும். அவ்வாறான அறிவாற்றலும் ஆய்வுத் தன்மையும் நிறைந்த கேணல் ராயூவால் வளர்க்கப்பட்ட போராளிகளும் பெரும் சாதனைகளை நிலைநாட்டியவர்கள் என்றால் அது மிகையில்லை. இவ்வாறான தளபதியின் இன்னொரு முகத்தையும் இங்கே பதிவிட வேண்டியது அவசியமாகிறது. சிறுத்தைப்படையணி ஒரு சிறப்பணியாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் வெளித் தொடர்புகள் அற்றவர்களாகவே வளர்க்கப்பட்டிருந்தார்கள். அதனால் குறித்த பயிற்சிக் காலம் நிறைவு பெறும் வரையில் பெற்றவர்களையோ உறவுகளையோ சந்திக்க அனுமதி இருந்ததில்லை. அதே போல கடிதப் பரிமாற்றங்களும் மறுக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில் கேணல் ராயூ அவர்களின் தங்கையும் போராளியுமான கோமதி இவருக்கு அவசர மடல் ஒன்றை அனுப்பி இருந்தார். ஆனால் அம்மடல் உடைக்கப்படவும் இல்லை வாசிக்கப் படவும் இல்லை. அம்மடல் மேசையின் ஒரு இழுவைப் பெட்டியில் ( லாட்சி) அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது. அவரின் பொறுப்பில் இருந்த போராளிகள் எந்த வெளித்தொடர்புகளும் இல்லாது இருக்கும் போது தான் மட்டும் எவ்வாறு தங்கையின் கடிதத்தை வாசிப்பது என்ற சிந்தனை அவரை கட்டுப்படுத்தி இருந்தது. அச்சிந்தனை ஒன்றே அவரது தந்தையை உயிருடன் பார்ப்பதற்கு வழிதராமல் போனது. ஏனெனில் அக்கடிதத்தில் தங்கை அவர்களது தந்தை அவசர சிகிச்சை பெற்று வருவதைப் பற்றியே அவசர மடல் அனுப்பி இருந்தார். அக்கடிதத்தை பார்த்திருந்தால் கூட தந்தையை போய் பார்த்திருப்பாரா என்பது வினாக்குறியே ஆனாலும் தந்தை பற்றிய செய்தியையாவது அறிந்திருப்பார். ஆனால் அவர் அப் போராளிகளுடன் அவர்களைப்போலவே வாழவேண்டும் என்ற சிந்தனையில் இருந்ததால் அக்கடிதத்தை கண்டுகொள்ளவே இல்லை. சிறுத்தைப் படையணி பெரும் சாதனைகளின் ஆரம்பப் புள்ளியாக வளர்க்கப்பட்டது. தொட்டுணர முடியாத வீரத்தின் உச்சத்தை அப்போராளிகள் கொண்டிருந்தார்கள். அவ்வாறான சிறுத்தைப் படையணிப் போராளிகளுக்கு அப்பாவாக, அண்ணாவாக, அம்மாவாக என பல வடிவங்களில் ஒன்றிப் போயிருந்த கேணல் ராயூவை தமிழீழ தேசத்தை சிங்களப் படைகள் ஆக்கிரமித்ததைப் போல கொஞ்சம் கொஞ்சமாக புற்றுநோய் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. சாதாரண வயிற்றுவலி என்று அதற்கு சாதாரண வலிநிவாரணிகளை சாப்பிட்ட படி பணி தொடர்ந்தார் கேணல் ராயூ. ஆனால் புற்றுநோய் உச்சம் தொட்டுவிட்டது. பல சிகிச்சைகளை எம் விடுதலை அமைப்பு செய்திருந்தது. ஆனால் ஆரம்பகட்டத்தை தாண்டி விட்டிருந்த புற்றுநோய்த் தாக்கம் அவருக்கு உச்ச நிலையைத் தொட்டிருந்தது. அப்போது கூட தான் வளர்த்த போராளிகளுக்கு தமிழீழத்தை வெல்லுவதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தார். முழுவதும் இயலாத நிலையிலும் முழுமையான மருத்துவக்கண்காணிப்பில் இருந்த நிலையிலும் கேணல் ராயூ தனது படைய அறிவியலை போராளிகளுக்கு வழங்க தயங்கவில்லை. கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்கான வெடிபொருள் தொகுதியைப் பற்றிய தொழில்நுட்பத்தை கடற்புலி அணிக்கு தெளிவாக சொல்லிக் கொடுக்கிறார். அவ்வாறாக வாழ்ந்த கேணல் ராயூ சிகிச்சை பலனின்றி தன் இறுதி மூச்சை இந்த தேசத்துக்காக விட்டார். கேணல் ராயூ/ குயிலன் என அழைக்கப்படும் எமது விருட்சம் ஏழாலையில் திருதிருமதி அம்பலவாணன் தம்பதியின் மகனாக பிறந்து தனது சகோதரிகளுடனும் துணைவியுடனும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து இறுதிவரை உழைத்தவர். 25.08.2002 ஆம் ஆண்டு உறுதியன் உறைவிடமாக மண்ணுக்குள் விதையாகிவிட்டார். விடுதலைப்புலிகள் அமைப்பின் பீரங்கிப் படையிணி, வெடிபொருள் உருவாக்கப்பிரிவு, தொலைத்தொடர்பு புரிவு, என பல பிரிவுகளின் உருவாக்கத்துக்கு காரணமாக இருந்த கேணல் ராயூ, வெடிபொருள் அறிஞனாக, தொலைத்தொடர்பு தொழில்நுட்பவியலாளனாக, இலத்திரணியல் துறை வேங்கையாக என வாழ்ந்தார். இறுதிவரை தனது பணியை அவர் நிறுத்தவே இல்லை. அதனால் தான் ஒரு சந்திப்பில் வைத்து தொழில்நுட்ப பிரிவுப் பொறுப்பாளர்களிடம் “ நீங்கள் எல்லாரும் சேர்ந்தாவது கேணல் ராயூவின் வெற்றிடத்தை நிரப்புங்கள் “ தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கோரிக்கை வைத்தார். இவ்வாறாக வாழ்ந்த பெரு விருட்சம் சாவடைந்த பின்னும் போராளிகளுக்கு அறிவியலை ஊட்டிக் கொண்டிருந்தது. அவர் தனது பங்கினை அறிவிலாளர்களாக போராளிகள் ஆவதற்கு பணி செய்தார். பல ஆயிரம் தொழில் நுட்பப் பொறிமுறைகளாக கேணல் ராயூ நிமிர்ந்து நின்றார். இன்றும் நிமிர்ந்து நிற்கிறார். இ.இ.கவிமகன். 26.08.2018 ( இப்பதிவு எழுதப்பட்டிருந்தாலும் சில இடர்கள் தாண்டி வெளியில் பதிவிட முடியவில்லை. ஆனாலும் பகிரப்படாதபக்கங்கள் இடர்கள் தாண்டியும் தொடரும்…) https://eelamaravar.wordpress.com/2019/06/26/col-raju-2/
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கங்கள் -15 படைய ஆசான் கேணல் வசந்த் நினைவுகளோடு… சுனாமி வீட்டுத்திட்டத்தடியில் இருந்து உண்டியல் சந்திக்கு…வசந்த் மாஸ்டரோட நாங்கள் நந்திக்களி என்ற இடத்துக்கு 2009 ஆண்டின் நேற்றைய நாள் இரவு நகர்ந்திருந்தோம். எல்லாப் பக்கமும் இராணுவம் சூழ்ந்து கொண்டு எமது இறுதிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை கைப்பற்றும் நோக்கில் வந்து கொண்டிருந்தது. இறுதியாக இருந்த முள்ளிவாய்க்கால் மாவீரர் நினைவு மண்டபம் மற்றும் மாஞ்சோலை மருத்துவமனை எல்லாம் சிங்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. நாங்கள் சுனாமி வீட்டுத் திட்டம் இருந்த இடத்தில் நந்திக்கடல் பக்கமாக முள்ளிவாய்க்கால் இரணைப்பாலை வீதியில் இருந்தோம். எமக்கு அருகில் வசந்த் மாஸ்டரோட படையப் பொருள் களஞ்சியம் இருந்தது. அது வெளியில் தெரியாதவாறு உருமறைப்புச் செய்யப்பட்டிருந்தாலும் துரோகிகளால் சூழ்ந்திருந்த தமிழீழ மண்ணில் அதை அவர்களால் இனங்காணுவது ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை. அதனால் அந்தப் பகுதி பெரும் அவலத்தை அன்றும் சந்தித்ததை மறுக்க முடியாது. அப்போது சாப்பாடு என்பது பூச்சிய நிலை. நாம் சாப்பிட்டு இரண்டு மூன்று நாட்கள் கடந்திருந்தன. ஆனாலும் அந்த படையக் களஞ்சியத்துக்குள் குறிப்பிட்ட சில போராளிகள் படைய பொருட்களை சீர்ப்படுத்துவதிலும் அவற்றை துப்பரவாக்குவதிலும் மும்முரமாக இருக்கின்றனர். அதனால் பசியைப் பற்றியெல்லாம் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை பசி தாகம் எல்லாமே அவர்களுக்கு ஒன்றாகவே இருந்தது. எப்படியாவது இந்த இக்கட்டான சூழலில் இருந்து நாம் வெளியில் வந்து சிங்களத்தை வெல்ல வேணும். எம் மண்ணை மீட்க வேண்டும் என்பதாகவே இருந்தது. இந்த நிலையில் நாங்கள் தங்கி இருந்த பதுங்ககழிக்கு சற்றுத் தள்ளி நிறுத்தி வைக்கப் பட்டிருந்த எனது உந்துருளி முதல் நாள் காணாமல் போயிருந்தது. நான் அதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை. நடந்து திரியவே முடியாத இடத்தில் எமக்கு எதற்கு உந்துருளி என்ற நிலை அதனால் எதற்கு அந்த நினைப்பு? என்ற கேள்வி எழுந்ததால் உந்துருளியைப் பற்றி சிந்திக்காமல் என் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அடுத்தநாள் எனது நண்பன் ஒருவனை சந்தித்த போது அவன் அதைப்பற்றி என்னோடு பேசினான். “மச்சான் உன்னோட வண்டி நேற்று வெடிச்சிருக்கும் என்று நினைக்கிறன்டா. “ என்றான். நான் புரியாமல் என்னடா என்று வினவினேன். அப்போது தான் எனக்கு தெளிவாக கூறுகிறான். “இல்ல மச்சான் …….. அண்ணையாக்கள் உன்னோட வண்டில சக்கை ஏற்றினவங்கள். நான் கண்டனான். உன்னோட வண்டி தானடா “ என்றான்.( குறிப்பிட்ட போராளியின் இருப்பு என்ன நிலை என்பது தெரியவில்லை அதனால் அவரின் பெயரைத் தவிர்க்கிறேன்.) எனக்கு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எல்லாமே முடிந்து விட்டது என்று எங்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது. இனி என்ன செய்தும் எம்மால் மீள முடியாது என்றே நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் இவர்களால் மட்டும் எப்படி முடிகிறது? இறுதி நேரத்தில் கூட தமிழீழத்தை நேசிக்க அந்த மனிதர்களால் மட்டும் எப்படி முடிந்தது? நான் சிந்தித்துக் கொண்டிருக்க நண்பன் என் எண்ணத்தைத் திசை திருப்புகிறான். “பசிக்குது அண்ண எதாவது சாப்பிட கிடைக்குமா என்று பார்ப்பம் வா. “ சாப்பிட எதுவுமே இல்லை என்று தெரியும் ஆனாலும் தேடிப் பார்த்துவிட்டு தோற்றுப் போன நிலையில் வீதியை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறோம். மாலை 6 மணி இருக்கும் என்று நினைக்கிறேன். ( சரியான நேரம் நினைவில் இல்லை) முல்லைத்தீவு பரந்தன் வீதியில் இருந்து திடீர் என்று ஒரு தானியங்கி டொங்கான் தாக்குதலை சிங்கள இராணுவம் செய்தது. திட்டமிட்டு வசந்த் மாஸ்டருடைய படையக்கல களஞ்சியம் மீது அத்தாக்குதல் செய்யப்பட்டிருந்தது. அதுவும் காட்டிக் கொடுப்பாளர்களால் இனங்காணப்பட்டிருந்த அம் முகாம் மீது சிங்களப் படையின் தாக்குதலாளன் தாக்கியிருந்தான். பகைவன் அடித்த தானியங்கி 40 mm எறிகணை ஒன்று (Auto dongan ) அவரது களஞ்சிய எரிபொருள் கலன் மீது விழுகிறது. எரிபொருள் கலன் சிதறி தீ அனைத்து இடங்களிலும் பரவுகிறது. அந்த தீயை அணைக்க முடியாத நிலை.. போராளிகளும் வசந்த் மாஸ்டரும் முயன்று கொண்டே இருக்கிறார்கள். தீ பரவி களஞ்சிய முழுவதுக்கும் பரவுகிறது. கரும்புகை மூட்டம் வானைத்தொடுகிறது. கட்டுப்படுத்த முடியாதளவுக்கு வெடிபொருள் களஞ்சியத்தின் ஏனைய பகுதிகளும் தீயால் சூழ்கிறது. கட்டுக்கடங்காமல் சூழல் இவர்களுக்கு பாதகமாகி கொண்டு போன நிலையில் ஆயுதம் துடைக்கும் துணி (சிந்தி) மீது தீ மூள்கிறது. எதுவுமே செய்ய முடியாத நிலை அடுத்தது வெடிபொருள்கள் மீது பரவப் போகிறது நடப்பை புரிந்த வசந்த் கட்டளை இடுகிறார். “ஓடு, ஓடுங்கோடா எல்லாரும் வெளீல ஓடுங்கோடா…. டேய் எல்லாரும் ஓடுங்கடா “ அனைவரும் வெளியேறி விடுகின்றனர். அருகிருந்த மக்கள், காயப்பட்ட போராளிகள் என அனைவரும் பாதுகாப்பாக அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். ஆனால் வசந்த் தனது பொறுப்பில் இருந்த அந்த வெடிமருந்து களஞ்சியம் தன் முன்னே எரிந்து கொண்டிருப்பதை கூட மறந்து மீண்டும் உள் நோக்கி ஓடுகிறார். “மாஸ்டர் வேண்டாம்… நெருப்பு எல்லா இடமும் பரவீட்டுது இனி ஆபத்து போகவேண்டாம் “ போராளிகள் மறித்தார்கள், கெஞ்சினார்கள் ஆனால் வசந்த் மாஸ்டர் கேட்கவே இல்ல. தடுத்தவர்களுக்கு தனது தெளிவான நிலைப்பாட்டை விளக்குகிறார். ” தமிழீழ படைக்கல பொறுப்பாளர் நெருப்புக்கு பயந்து தனது உயிரை காத்து கொள்ள தன்னுடைய கைத்துப்பாக்கியை விட்டிட்டு ஓடிட்டாராம்” என்று என் எதிர்காலம் பேசக்கூடாது. இந்த இழி சொல் எனக்கு வேண்டாம். அதை விட இத்தனை காலமாக நான் பயிற்சி குடுத்த போராளிகளுக்கு நான் எதை கண்டிப்பாக போதித்தனோ அதை இனிவரும் காலங்களில் புதிய போராளிகளுக்கு எப்படி போதிப்பேன்…? படைகல பாதுகாப்பு பற்றிய கட்டுக்கோப்பான போதனைகளை நான் போராளிகளுக்கு வழங்கும் போது அவர்கள் என்னிடமே கேள்வி கேட்க மாட்டார்களா? “நெருப்புக்கு பயந்து தானே அன்று நீ உன்னோட பிஸ்டல விட்டிட்டு ஓடினி” இன்று உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்க மாட்டாங்களா? இதை எல்லாத்தையும் விட இது எனக்காக அண்ண பிரத்தியேகமா தந்த கைத்துப்பாக்கி. இதை விட்டிட்டு அவரிடம் எப்படி போவது…? அவரிடம் எந்த முகத்தை வைத்து பிஸ்டல நெருப்புக்க விட்டிட்டு வந்திட்டன் என்று சொல்வது. என் உயிரிலும் மேலான எனது ஆசிரியத்துவத்தையும் எனது படைக்கல பாதுகாப்பையும் நானே பாதுகாக்க வேண்டும். நில்லுங்கடா நான் எடுத்து கொண்டு ஓடி வாறன். போனவர் திரும்பி வரவே இல்லை. படைக்கலக் களஞ்சியத்துக்குள் இருந்த லோ வகை ஆயுதங்கள் தொடக்கம் உள்ளே இருப்பில் இருந்த அத்தனை ஆயுத தளவாடங்களும் வெடித்து எரிந்தன. மக்கள் தொடக்கம் போராளிகள் அனைவரும் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப் பட்டிருந்தார்கள். அல்லது வெளியேறி இருந்தார்கள். எமக்கும் வசந்த் மாஸ்டருக்கு என்ன நடந்தது என்பது தெரிந்திருக்கவில்லை நாமும் அந்த இடத்தை விட்டு வெளியேறி இருந்தோம். அப்போது தான் இறுதியாக எமக்காக வீழ்ந்த மாவீரர்களை விதைத்த துயிலுமில்லத்தடியில் கணினிப் பிரிவை சேர்ந்த வில்லவன் என்ற போராளியை சந்தித்தோம். அவருக்கும் பின் நாட்களில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஆனாலும் அந்த உயர்ந்த இராணுவ மிடுக்குள்ள அவரை இறுதியாகக் கண்ட போது மீண்டும் சந்திக்க மாட்டோம் என நாம் நினைக்கவில்லை. அவருடன் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசிய நாம் உண்டியல் சந்தியை வந்தடைந்திருந்தோம். அம்மா அப்பா என என் உறவுகள் அனைவரையும் அங்கே ஓரிடத்தில் அமர வைத்து விட்டு நானும் என் நண்பனும் மைத்துனனுமாக மீண்டும் நாம் இருந்த இடத்துக்குச் சென்ற போதே வசந்த் மாஸ்டருடைய படையக்கல களஞ்சியம் முற்று முழுதாக எரிந்து முடிந்திருந்ததும் இடுப்புக்கு கீழ் முழுவதுமாக அவர் எரிந்த நிலையில் தனது கைத்துப்பாக்கியை இறுகப்பற்றிய படி வீரச்சாவடைந்திருந்ததையும் அங்கே நின்றவர்கள் கூற நாம் அறிந்தோம். அவர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து விட்டு வெளியில் வரும்போது எதிரி தொடர்ந்து களஞ்சியம் மீது ஏவிய எறிகணைகளின் துண்டுகள் அவரை வீழ்த்தியிருக்கிறது. அவரால் காயத்துடன் வெளியேற முடியவில்லை அவர் முயன்று கொண்டே இருந்திருக்கிறார். ஆனால் அவரது உடலத்தை துளைத்து வெளியேறிய இரும்புத் துண்டுகள் அவரை நிலத்தில் சாய்த்து விட்டது. எறிகணை குண்டுகளால் வீரச்சாவடைந்த பின் தான் தீயின் நாக்குகள் அவரை தீண்ட முடிந்தது… அதுவும் அவரை முழுமையாக அல்ல குறையாகவே தீண்டி சென்றிருந்தது நெருப்பு. மனம் வெறுத்தது. எம் மூத்த தளபதிகள் ஒவ்வொருவரையும் இழந்து நாம் ஒன்றுமே இல்லாதவர்களாக போகப்போகிறோம் என்பது புரிந்து போனது. அங்கே எதுவும் இல்லை. தாக்குதல் பலமாக நடந்து கொண்டிருந்ததால் அங்கே நிற்பது உயிராபத்தைத் தரும் என்று அஞ்சினோம். நாம் நேசித்தவர்கள் தம்மை வெடியாக்கி காற்றோடு கலந்து போக, எதிரியை அழித்து மண்ணில் வீழ்ந்து போக நாங்கள் உயிருக்குப் பயந்து மீண்டும் உண்டியல் சந்திக்கு வந்து சேர்ந்தோம் … கவிமகன்.இ 10.05.2018
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் 14 -தமிழீழ மருத்துவரின் கதை. மருத்துவம் என்றாலே ஒரு புனிதமான பணி அதிலும் கள மருத்துவம் என்பது போர் காலங்களில் போரணியை காக்கும் மிக முக்கிய பணி. சர்வதேச நாடுகளின் இராணுவங்களில் மருத்துவ அணி தனித்தனியாக செயற்பட்டு வரும் களமுனை மருந்துவர்கள் போரணியை மட்டும் காக்கும் பணியையும் மக்கள் பணியில் இருக்கும் அணியினர் மக்களை பாதுகாக்கும் பணியிலும் செயற்படுவர் ஆனால் எங்கள் மண்ணில் அவ்வாறல்ல. சண்டையணிகளையும், போராளிகளையும், மக்களையும் குறித்த சில அரச மருத்துவர்களுடன் இணைந்து சில நூறு மருத்துவப்பிரிவுப் போராளிகளே பாதுகாத்தார்கள். சண்டைக் களங்களில் மருத்துவ உபகரணங்களை மட்டும் கொண்டு செல்லப் பணிக்கப்பட்டாலும் அடம்பிடித்து துப்பாக்கிகளையும் கொண்டு செல்லும் மருத்துவப் போராளிகளையே தமிழீழம் தன்னகத்தே சுமந்து நின்றது. இந்நிலையில் மற்ற நாட்டு இராணுவங்களைப் போல உணவு, உடை, உறையுள் என்ற மனித வாழ்வின் அடிப்படைகளைக் கூட அவர்கள் முக்கியத்துவப் படுத்தியதில்லை. கிடைப்பதை உண்டு கிடைப்பதை உடுத்து கிடைக்கும் நேரத்தில் கிடைக்கும் இடத்தில் உறங்கி வாழ்ந்தார்கள். அவர்களின் இலக்கு மிக நீண்டது. உயிர்காப்பு நடவடிக்கைகளுக்காக அதில் பயணித்துக் கொண்டே இருந்தார்கள். 2009 சண்டை இறுதி நிலைக்கு வந்திருந்த தருணங்களில் எங்கள் மருத்துவ அணி வளங்கள் எதுவும் அற்ற நிலையில் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே போராடிக் கொண்டிருந்தது. மக்கள், போராளிகள் என்ற பாகுபாடின்றி போராளி மருத்துவர்களும் அரச மருத்துவர்களில் ஒரு சிலரும் உயிர் காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படியான ஒரு இரவில் தான் அந்த மருத்துவனும் முழித்திருந்தான். அப்போதெல்லாம் அவர்களுக்குத் தூக்கம் கிடையாது. ஒழுங்காக உணவு கிடைக்காது. “உயிர் காத்தல் “ ஒன்று மட்டுமே அவர்களின் எண்ணங்களில் நிறைந்து கிடந்தது. இரவு முழுவதும் பயங்கர எறிகணைத் தாக்குதல். முன்னணி அரண்கள் வீட்டு முற்றத்துக்கு வந்து போராளிகளும் இராணுவமும் கைகலப்பு செய்ய கூடிய தூரத்தில் மோதிக்கொண்டிருந்த பொழுதுகள். விடுதலைப்புலிகளின் மருத்துவ போராளிகளும் தூக்கமின்றி, உணவின்றி தங்களால் ஒரு உயிரை காக்க முடியுமா? என்ற ஏக்கத்தோடு பனைக்குற்றிகளின் அடுக்குகளுக்கிடையில் பணி செய்து கொண்டிருந்த கடுமையான நினைவுகள். அவர் ஒரு மூத்த போராளி மருத்துவர், நல்ல எழுத்தாளரும் கூட. முக்கியமான மருத்துவப் பிரிவு தொடர்பான நாவல்களை உருவாக்கிய போராளி. தமிழீழ மருத்துவத் துறைக்கு என்றும் தேவையான போராளி. அன்று நீண்ட நாட்கள் தூக்கமின்மை, தொடர் சத்திர சிகிச்சைகள் என அவர் ஓயாது ஓடிக்கொண்டுருந்தார். எதிரித் தாக்குதலில் காயப்பட்ட ஒரு சிறுவனுக்கு சத்திர சிகிச்சை அழித்த பின் சிறு ஓய்வு கிடைக்குமா? அவர் எதிர்பார்ப்போடு அந்த பனைக்குற்றிகளை விட்டு வெளியில் வருகிறார். “டொக்டர் கொஞ்சம் தூங்குங்கோவன்… காயங்கள் தொடர்ந்து வருகுது ஓய்வு எடுத்தால் தான் நல்லது…” ஊடகப் பிரிவைச் சேர்ந்த நண்பன் ஒருவன் அவரை வற்புறுத்துகிறான். ” ம்ம்… சாப்பாடு எதாவது இருக்காடா…? தெரியல்ல டொக்டர். உணவு வைப்பதற்காக இருந்த தறப்பாள் கொட்டிலுக்குள் போன மருத்துவர், அங்கே எதுவும் இல்லாதது கண்டு பசியுடன் திரும்புகிறார். அப்போதெல்லாம் பசி என்பதற்காக பணியில் இருந்து விலக முடியாத சூழல். அதனால் பசியைப் பொருட்படுத்தாது சிறிய ஓய்வுக்காக தனது கொட்டிலுக்கு போகிறார். அவரது விழிகளுக்கு குப்பைத் வாளியில் ஒரு பொதி தெரிகிறது. யார் என்று தெரியவில்லை எப்போது உண்டார்கள் என்று கூடத் தெரியாது. ஆனால் பழுதடையாத நிலையில் கசக்கி வீசப்பட்ட ஒரு பொலித்தீன் (shoping bag) பை கண்ணில் தெரிகிறது. அதைப் பார்த்து அந்த உணவை வீணாக்கியவர் மீது கோவம் வருகிறது. ஆனாலும் யாரிடம் நொந்து கொள்ள? அந்த பையை விரித்துப் பார்க்கிறார். அதற்குள் ஒரு திரளை சோறும் பருப்பு கறியையும் குழைக்கப்பட்டிருந்தது. அதை சுவைத்து உண்கிறார். உண்டு விட்டு வாளியில் இருந்த தண்ணீரில் கையை அலம்பிக் கொண்டு வெளியில் வருகிறார். புலம்பெயர் தேசங்களில் சரி தாயகத்தில் சரி பெற்ற பிள்ளைகள் உண்ட உணவைக் கூட தாம் உண்ணக் கூடாது என்பதற்காக குப்பையில் வீசும் பல பெற்றவர்கள் வாழ்வது கண்ணூடு. அவ்வாறான உறவுகளுக்குள் இவ்வாறான மனிதர்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது மனதை நெருடுகிறது. இவர் மட்டுமல்ல இவ்வாறு பல ஆயிரம் போராளிகள் வாழ்ந்தார்கள். குப்பையில் இருந்தவற்றை கூட உணவாக்கினார்கள். காட்டுக்குள் இருந்த பன்னை இலைகளை அவித்து உண்டார்கள். இலக்குகளை அடைய வேண்டும் என்பதற்காக கிடைத்தவற்றை பச்சையாகவே உண்டார்கள் . தமது சிறுநீரைக் கூட குடித்து உயிர் வாழ்ந்தார்கள். அவ்வாறு வாழ்ந்த பல ஆயிரம் போராளிகள் இன்று நடைப்பிணங்களாக வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரு சுட்டியாகவே இந்தக் கதையில் இவர் கோடிட்டு நிற்கிறார். வீழ்ந்தவர்கள் கூட நிம்மதி இன்றியே விதை குழிகளுக்குள் வாழ்கிறார்கள். தங்கள் உயிர்களை தாய் மண்ணுக்காக குடுத்து சென்ற வீரத்தையும் உணர்வுகளையும் நாமும் எமது இளையவர்களும் மறந்திட முடியுமா? ஆண்டுகள் பல களமுனைகளை வாழ்வாக்கி வாழ்ந்தவர்களை நினைக்காமல் இருக்க முடியுமா? தன்னிலை மறந்து மக்களின் வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்த மறவர் தியாகங்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் எருவாகிட விடலாமா…? கவிமகன்.இ 13.07.2018
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 13 போராளி மருத்துவர் லெப் கேணல் இசைவாணன் ! யாருக்கும் தொந்தரவு தரமாட்டன் – போராளி மருத்துவர் லெப் கேணல் இசைவாணன் தமிழீழ விடுதலைப்போராட்டம் பல போராளிகளின் தியாகங்களால் கட்டியமைக்கப்பட்டது. எங்கள் தேசத்தின் விடியலுக்காக தமது வாழ்க்கையினை தியாகம் செய்த எம் போராளிகள் ஒவ்வொருவரும் எதோ ஒருவகையில் பெரும் தியாகத்தின் உச்சத்தை தொட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் தான் சுரேன் என்றும் இசைவாணன் என்றும் அழைக்கப்படும் போராளியும் ஒருவராகிறார். தமிழீழ விடுதலைக்காக ஒரு காலை கொடுத்துவிட்டு அதற்கு மாற்றீடாக ஒற்றைச் செயற்கை காலோடு தன் வாழ்க்கையை தமிழீழ விடுதலைக்காக கொடுத்த உன்னதமான வேங்கை இசைவாணன். இன்று நாம் இழந்து விட்டோம் என்ற உண்மை ஏற்க முடியாது தொண்டைக்குள் சிக்குண்டு கிடக்கிறோம். ஒற்றைக்கால் என்பது சில வேளைகளில் அவர் நடக்கும் போது புலனாகினும் அவரின் நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் அதை வெளிக்காட்டியதே இல்லை. இதை உணர்த்தக் கூடிய ஒரு நிகழ்வாக கீழ் வருவதை குறிப்பிடலாம். 1991 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் குறிபார்த்து சுடுதல் (Sniper) பயிற்சிக்காக ஒரு அணி தயாராகிய போது தன்னை அதில் இணைக்கும் படி பல முறை தலமையை நச்சரித்து கொண்டிருந்தார். ஆனால் அந்த பயிற்சி கடினமானதாக இருக்கும் என்ற நிலையில் அவரின் ஒற்றைக்கால் பெரும் குறையாக பார்க்கப்பட்டு உள்வாங்கப்படாது தவிர்க்கப்பட்டார். இதை அறிந்த இசைவாணன் தனது தளபதியோடு பலமுறை சண்டையிட்டு தலைவரிடமும் பலமுறை வேண்டுதல் செய்து அந்த அணிக்குள்ளே சென்றார். பல மாத பயிற்சிகள், மிகக் கடினமான பயிற்சிகள். ஆனாலும் அவை அத்தனையையும் பொடியாக்கி உடைத்தெறிந்து வெற்றி பெற்றார். இறுதி பயிற்சி நடந்து முடிந்து போட்டிகள் நடந்தன. அப்போது குறிபார்த்து சுடுதல் போட்டி நடந்த போது கொடுக்கப்பட்ட அனைத்து ரவைகளையும் இலக்கினில் சரியாக பொருத்தி அனைவரிலும் சிறந்தவனாகவும் முதன்மையானவனாகவும் வந்த அந்த பொழுதுகளை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது. அன்றில் இருந்து விடுதலைப்புலிகளின் பதுங்கிச்சுடும் அணிப் போராளியாக பயணித்தார். இந்தக் காலத்தில் தேசியத்தலைவரின் சிந்தனையில் உருவாகியது தமிழீழ மருத்துவக் கல்லூரி. 1982 நவம்பர் 27 ஆம் நாள் ஆண்டு தன் மடியினில் தலைவைத்து முதல் வித்தாக வீழ்ந்த சங்கரை போல இனி வரும் காலங்களில் எம் போராளிகள் சீரான மருத்துவக் காப்பு இல்லாமல் வீரச்சாவடையக் கூடாது என்ற தமிழீழ தேசிய தலைமையின் உன்னத நோக்கத்தின் பின்னால் உருவானதே ” தமிழீழ மருத்துவக்கல்லூரி”. இந்தக் கல்லூரி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் அழகையா துரைராஜா அவர்களின் வழிகாட்டலில் , தமிழீழ மருத்துவக்கல்லூரியின் பீடாதிபதி ஜெயகுலராஜா, பேராசிரியர் சிவபாலன், மற்றும் வேறு பல பேராசிரியர்களின் ( அவர்களின் பெயர்கள் இப்போது வெளியில் குறிப்பிட முடியவில்லை) முழுமையான ஆதரவோடு உருவாக்கம் பெறுகிறது. அப்போது பல பிரிவுகளில் இருந்து போராளிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். அதில் ஒரு போராளி இசைவாணன். பதுங்கிச்சுடும் அணியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்ட இசைவாணன் ஒரு மருத்துவப் போராளியாக கல்லூரிக்கு அனுப்பப் படுகிறார். அவ்வாறு மருத்துவப் பிரிவில் வளர்த்தெடுக்கப்பட்ட பெரு வீரர்களில் ஒருவன். சண்டைக் களங்களை தம் ஆளுகைக்குள் வைத்திருக்கும் ஒவ்வொரு போராளிகளுக்கும் மட்டுமல்ல மருத்துவ தேவைகள் உணரப்பட்ட அத்தனை இடங்களிலும் மக்களின் சேவையாளனாக, தன்னை நிலை நிறுத்திய ஒரு இலட்சியவாதி. போராளி மருத்துவராக பயணிக்கத் தொடங்கி சில காலங்கள் கழிந்த நிலையில் 1993 பங்குனி மாதம் 23 நாள் அன்று தமிழீழ மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களை தேசியத்தலைவர் கல்லூரியில் வைத்துச் சந்திக்கிறார். அங்கு பலர் இருந்தார்கள். ஆனாலும் எமது தேசத்தின் தலைமகன் “சுரேன் நீ இங்கயா இருக்கிறாய் …?’’ என பெயரைக் கூறி அழைத்து நலம் விசாரித்தது போராளி மருத்துவர் இசைவாணனைத்தான். (சுரேன் என்பது இசைவாணனின் முன்னாள் பெயர் ) அப்பிடி தலைவனின் நெஞ்சில் ஆழமாக பதிந்திருந்தவர், போராளி மருத்துவர் லெப். கேணல் இசைவாணன் தனக்கு ஒரு கால் இல்லை என்பதை உணர்ந்ததும் இல்லை, மற்றவர்களுக்கு அதை காட்டிக் கொண்டதும் இல்லை. எப்போதும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவே இருந்தார். தமிழீழ மருத்துவக்கல்லூரி என்றும் இராணுவக் கட்டுப்பாடுகள் நிறைந்ததாகவே இருக்கும். அவர்கள் விடும் சிறு தவறுகளும் தண்டனையில் தான் முடியும். அவ்வாறான தண்டனை ஒன்றில் இசைவாணனின் உறுதியை அவருடன் கூடப் பயணித்த அனைத்துப் போராளிகளும் உணர்ந்து கொண்டார்கள். எந்த நிலையிலும் கால் இல்லை என்பதைக் காரணம் காட்டி இசைவாணன் வேலைகளிலிருந்தும், கற்றலிலிருந்தும் பின்தங்கியது இல்லை. என்றும் முன்னிலை மருத்துவ மாணவனாகவே விளங்கினார். ஒரு பணியின் முக்கியத்துவத்தை உணர்த்தினால் மட்டுமே போதுமானதாகும். எந்த விதமான ஆளணி மற்றும் உதவிகளின்றி, அந்த முக்கியம் வாய்ந்த பணியை முடித்து பொறுப்பாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் பண்பு நிறைந்தவர். அதற்காக பல முனைகளில் பலருடன் விவாதங்கள் என்றும் சண்டைகள் என்றும் நிறைய பின்னடைவுகளைச் சந்திப்பார். ஆனாலும் சாதுரியமான பேச்சினால் அவர்கள் மனதை வென்று பணியை முடித்திருப்பார். அவ்வாறான பெரும் சாதுரியம் மிக்க போராளி மருத்துவர். யாழ்ப்பாண மாவட்டம் சிங்களத்தின் சந்திரிக்கா தலைமையிலான, அரச படைகளால் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்ட போது பெரிதும் நொந்து போனார். உரிமைகளை மீட்டெடுக்க போராளியாகியவர்கள் இவரும் இவரது தோழர்களும். ஆனால் தமது கண் முன்னே தமது தாயகம் எதிரியின் கைகளுக்குள் போவதைத் தாங்கிக் கொள்ள முடியாது விக்கித்து நின்றனர். ஆனால் தேசக் கடமை இவர்களை மருத்துவர்களாக மாற்றிய தேசியத் தலைவர் உரைத்த வார்த்தைகளை நினைத்தார்கள். “ஆயுதம் தூக்கி எதிரியின் உயிரை எடுக்க வந்த உங்களை நான் உயிர் காக்கும் பனி ஒன்றுக்காக தாயாராகுங்கள் என்று விட்டிருக்கிறேன். இது பலருக்கு ஏமாற்றத்தைத் தரலாம் ஏனெனில் போராளிகள் அனைவரும் எதிரியின் கொடூரங்களை எதிர்க்கவே புலியானவர்கள். ஆனாலும் இந்தப் பணியும் எம் அமைப்புக்கு மிக முக்கியமானது என்பதை நீங்கள் மருத்துவர்களாக கற்றுத் தேர்ந்ததும் புரிந்து கொள்வீர்கள். களமுனையில் ஒரு உயிரைஎதிரியைக் கொள்வதை விட அதே களமுனையில் எமது போராளி ஒருவனின் உயிரைக் காப்பாற்றும் போது இந்த பெறுபேற்றை அறிவீர்கள் ” என்ற கருத்துத் தாங்கிய செய்தி ஒன்றை அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதைப்போலவே இப்போது தலைமையின் கட்டளைக்கு ஏற்ப வன்னிக்கு இடம்பெயர்கிறார்கள். வன்னி மண்ணில் தொடர்ந்த அவர்களது மருத்துவக் கற்கை இசைவாணனையும் அவருடன் கூட இருந்த போராளி மருத்துவர்களையும் மருத்துவத்துறையில் புடம் போட்டது. மருத்துவப் போராளிகள் கற்கைகளை கற்கும் அதே நேரம் சண்டைகளிலும் பங்குபற்ற வேண்டியவர்களாக இருந்தார்கள். அதனால் முழுமையான போர் வீரர்களாகவும் மருத்துவர்களாகவும் வாழ்ந்தார்கள் அதில் இசைவாணனும் சிறப்பான இடத்தை வகிக்கிறார். எதற்கும் அஞ்சாத நெஞ்சம் கொண்ட இசைவாணன் முதன்முதலாக ஒரு விடயத்துக்காக அஞ்சத் தொடங்கினார். எந்த வேலைக்கும் யாரிடமும் உதவி கேட்காத இசைவாணன் முதல்தடவையாக தனது வாழ்க்கைத் துணைவிக்காக நண்பனிடம் உதவி கேட்கிறார்.களத்துக்கு அஞ்சாத மருத்துவர் இசைவாணன், காதலுக்காக அஞ்சியதை அவரது தோழர்கள் அன்று கண்டார்கள். “ரதி” மருத்துவர் இசைவாணனின் மனத்தைக் கவர்ந்த பெண் போராளி. மருத்துவப்பிரிவின் முதலாவது தாதியப் பிரிவில் பயின்று ஒட்டிசுட்டானில் அமைந்திருந்த “மேஜர் அபயன்” இராணுவ மருத்துவமனைக்கு பணிக்காக வந்திருந்த போதே முதலில் இசைவாணன் கண்டிருந்தார். ஏனோ ரதியை பிடித்திருந்தது. ஆனாலும் மனதில் பயமாக இருந்தது. அமைதி காத்தார். கிளிநொச்சி எதிரியிடம் “சத்ஜெய” நடவடிக்கை மூலம் வீழ்ந்த போது “மேஜர் அபயன் ஞாபகார்த்த ” இராணுவ மருத்துவமனை மருத்துவப்போராளி அருண் தலைமையில் தோற்றம்பெறுகின்றது. மாமனிதரான வைத்தியக் கலாநிதி கங்காதரன் அவர்களால் ஒரு வயிற்றறுவைச் சிகிச்சையுடன் ஆரம்பிக்கப்பட்ட “மேஜர் அபயன்” மருத்துவமனை போராளிகளுக்கும், மக்களுக்குமான மருத்துவப்பணியில் இயங்கியது. இந்த மருத்துவமனையே முல்லைத்தீவுச் சமர் ஜெயசிக்குறு சமர்களில் எல்லாம் முக்கிய இராணுவ மருத்துவ மனையாக இயங்குகின்றது. அமைப்பின் மூத்த மருத்துவர்களான மருத்துவ கலாநிதி பத்மலோஜினி கரிகாலன் (அன்ரி), மருத்துவ கலாநிதி சூரி, மருத்துவ கலாநிதி பாலன், மருத்துவ கலாநிதி சுஜந்தன், மருத்துவ கலாநிதி அஜந்தன் ஆகியோர் அடங்கிய அணி அங்கு கடமையில் இருக்கின்றது. இந்த அணியில் ஒருவராகவே இசைவாணன் பணியில் இருந்தார். அப்போது தான் ரதி மீதான அவரது காதல் மலர்ந்திருந்தது. ஆனால் அதை வெளிப்படையாக கூற மருத்துவர் இசைவாணனால் முடியவில்லை. ஏனெனில், தனது பொறுப்புக்கு கீழ் இருக்கும் “மேஜர் அபயன்” இராணுவ மருத்துவமனையின் சத்திரசிகிச்சைக் கூடத்தில் பணியில் இருக்கும் ஒரு பெண் போராளியை தான் விரும்புவதாக கூறும் போது அவள் மறுத்து விட்டால்…? அல்லது தனது பொறுப்பாளர் தன்னைக் காதலிப்பதாக கூறுகிறார் என்று வெளியில் சொல்லி விட்டால்? போராளிகள் மத்தியில் பேசு பொருளாகி விடக்கூடிய அபாயத்தை அவர் உணர்ந்திருந்தார். அதனால் நண்பனின் உதவியை நாடினார். நண்பனின் உதவியோடு அவரது காதல் திருமணத்தில் முடிந்தது. திருமண வாழ்வு எல்லையில்லா மகிழ்வை தந்தது அந்த சந்தோசத்தின் சிகரமாக அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். இவ்வாறான அவரது மகிழ்வான பக்கங்களை மேஜர் அபயன் மருத்துவமனை தாங்கி நின்றது. இந்த நேரத்தில் “ஜெயசிக்குறு” தொடர் நடவடிக்கை மூலம் எதிரி வன்னியை இருகூறாக்கக்க முனைகையில் வன்னிப்பெருநிலப்பரப்பு வன்னி மேற்கு, வன்னி கிழக்கு என இரண்டாக பிரிந்து போனது. மாங்குளத்துக்கும் கிளிநொச்சியின் இரணைமடுச் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியே இரண்டு பிரதேசங்களையும் இணைக்கும் பகுதியாக இருந்தது. இதனால் இரண்டு பிரதேசங்களுக்குமான மருத்துவ அணியின் தேவை உணரப்பட்டு ஒரு மருத்துவ அணி வன்னி மேற்கிற்கு நகர்ந்தது. அந்த அணி வன்னேரிக்குளம் பகுதியில் தமது மருத்துவக் களத்தை விரிவாக்குகின்றது. அங்கே அபயன் மருத்துவமனையில் இருந்து பிரிக்கப்பட்ட போராளிகளின் அணி மருத்துவ கலாநிதி சுஜந்தன், மருத்துவ கலாநிதி அஜந்தன் உட்பட்ட மருத்துவ ஆளணியாகி விரைந்து இயங்குகின்றது. மாங்குளத்தில் அசைவற்று நின்ற அந்த “வெற்றிநிச்சயம் (ஜெயசிக்குறு )” நடவடிக்கையில் சிங்கள படைகள் பல முறை தோல்விக்குமேல் தோல்வியடைகிறன. இந்த சண்டைகளுக்கெல்லாம் பிரதான மருத்துவ அணியாக இவர்கள் இயங்கினார்கள். இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் அதே நேரம் கிளிநொச்சியை மீட்கும் ஓயாதலைகள் -2 நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் செய்ப்பட்டு மருத்துவ அணிகள் தயாராகின்றன. மருத்துவ களநிலைகளில் போராளி மருத்துவர் லெப்.கேணல் காந்தனும், போராளி மருத்துவர் லெப். கேணல் இசைவாணனும் முறிகண்டிக்கு அண்மையில் உள்ள வசந்தநகர் கிராமத்தில் தமது மருத்துவ நிலையை அமைக்கின்றனர். போராளிமருத்துவர் தணிகை மற்றும் பெண் போராளி மருத்துவர் மீனலோஜினி ஆகியோர் ஜெயந்திநகர் பக்கமாகவும், போராளி மருத்துவர் மேஜர். சுசில் மற்றும், போராளி மருத்துவர் மேஜர் றோகிணி ஆகியோர் முரசுமோட்டைப் பகுதியிலும் மருத்துவ நிலைகளை அமைத்து நிற்கின்றனர். இந்த மருத்துவ நிலைகள் சாதாரணமான மருத்துவ நிலைகளாக இல்லாது பிரதான மருத்துவ நிலைகளாக உருவாக்கி இருந்தார்கள். உலக அரங்கிலையே முன் வைத்தியசாலை பராமரிப்பு நிலையங்களில் குருதி மீளேற்றம் அல்லது Intercostals Drainage Tube (ICD Tube), Traumatic Amputation, Blood Transfusion(some time auto transfusion), போன்ற சிறு சத்திரசிகிச்சைகள், Inserting Urinary Catheter for check the urine out put , Giving Tetanus toxoid , Proper Splinting for fractures போன்றவை செய்யப்படுவதில்லை. ஆனால் இங்கே அமைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் மருத்துவ நிலைகள் அனைத்திலும் இவை அனைத்தையும் செய்யக் கூடிய வகையிலையே அமைத்திருந்தார்கள். ஏனெனில் அப்போது பிரதான இராணுவ மருத்துவமனையாக ஒட்டிசுட்டான் பகுதியில் மேஜர் அபயன் ஞாபகார்த்த மருத்துவமனை அமைந்திருந்தது. அதனால் கிளிநொச்சியில் இருந்து அபயன் ஞாபகார்த்த மருத்துவமனைக்கு காயப்பட்டவர்களைக் கொண்டு செல்வதற்கு கிட்டத்தட்ட ஒன்று தொடக்கம் இரண்டு மணித்தியாலங்கள் தேவைப்படும். அதனால் அந்த தூர இடைவெளிக்குள் காயப்பட்ட போராளிகள் குருதி வெளியேற்றத்தால் வீரச்சாவு அடைவதை தடுக்கவும் காயங்கள் மேலும் பாதிப்படைவதைத் தடுக்கவும் இவ்வாறான முன் மருத்துவ பராமரிப்பு நிலையங்களிலையே அவற்றைச் செய்ய வேண்டி இருந்தது. அந்தச் சண்டையில் மேஜர் சுசில், மேஜர் றோகிணி மற்றும், களமருத்துவப் பொறுப்பாளர் மேஜர் திவாகர் பெண் மருத்துவ நிர்வாகப் போராளி மேஜர் எஸ்தர் மற்றும் மேஜர் கமல் மாஸ்டர் போன்றவர்கள் மருத்துவ நிலைகள் மீதான எதிரியின் தாக்குதல்களில் வீரச்சாவடைய காயப்பட்ட போராளிகள் இசைவாணனின் மருத்துவ நிலை மற்றும் தணிகையின் மருத்துவ நிலைகளில் குவிகின்றனர். அதனால் வேலைப்பளு அதிகமாகிறது. தொடர்ந்து நிற்க முடியாத சூழல். அவரது ஒற்றைக் கால் புண்ணாகுகிறது. தொடர்ந்தும் பொய்க்காலை போட்டிருந்ததால் அந்தக்கால் பயங்கர வேதனையைத் தருகிறது. ஆனாலும் சோர்வு அவரில் வரவில்லை பணிமுடித்து தளம் மீள்கிறார். இவ்வாறான உறுதிமிக்க போராளி மருத்துவர் போராளிகளின் மருத்துவத்தை மட்டுமல்லாது மக்களையும் தன் மருத்துவப் பணியால் அரவணைத்ததை வன்னியில் இருந்த அனைவரும் அறிந்திருப்பர். வன்னியில் இருந்த மருத்துவ ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தமிழீழ மருத்துவப் பிரிவால் உருவாக்கப்பட்ட பயிற்சிக் கல்லூரிகளில் முதுநிலை விரிவுரையாளராக இருந்து மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்குவதில் முன் நின்றார் இசைவாணன். அதை விட அரச மருத்துவர்கள், போராளி மருத்துவர்கள் என்ற இரு வேறு பிரிவுகளுக்குள் அடக்கப்பட்டிருந்த தமிழீழ மருத்துவ அணி உள்ளே ஓரணியாகவும் வெளியில் மட்டும் இரு அணியாகவும் பணியாற்றியது குறிப்பிட வேண்டிய ஒன்று. (எதிரிக்காக )அவசர கால சூழல்களைத் தவிர்ப்பதற்காக அனைவரும் அரச மருத்துவமனைகளிலோ அல்லது இராணுவ மருத்துவமனைகளிலோ ஒருங்கிணைந்து செயற்படுவர். அச்செயற்பாடுகளில் எல்லாம் இசைவாணனும் முன்நிலை வகிப்பது குறிக்கப்பட வேண்டியது. வன்னிப் பெருநிலம் எங்கும் மலேரியா ( Malaria) தலைவிரித்து ஆடிய 1996- 1998 காலப்பகுதியில் தமிழீழ சுகாதார சேவைகள் முற்றுமுழுதான வேலைத் திட்டம் ஒன்றை செயற்படுத்த வன்னிக்குள் கொடிய மலேரியா நோய்த் தாக்கத்தை இல்லாமல் செய்தார்கள் அந்த செயற்பாட்டின் முன் நிலை வகிப்பவர்களுள் இசைவாணனும் ஒருவர் என்றால் மிகையல்லை. அன்றைய நாட்களில் இலங்கை சுகாதாரத் திணைக்களத்தால் தடுக்க முடியாமல் திணறிய மலேரியா நோய்த் தாக்கத்தை வன்னிக்குள் முழுமையாக தடுத்தருந்தது தமிழீழ சுகாதார சேவைகள் திணைக்களம். இந்த செயற்பாடானது சர்வதேச சுகாதார வல்லுனர்களையே எம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது என்றால் அது தவறில்லை. அதற்காக இசைவாணன் காத்திரமான பங்கை கொடுத்திருந்தார். 2006 ஆண்டின் நடுப்பகுதியில் வன்னி மண் இறுதிப்போருக்குத் தயாரானது போது. எதிரி ஊடுருவித் தாக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருந்தான். அதே நேரம் சர்வதேச அளவிலான பலத்தை வன்னிமீது திருப்பி எம்மை இல்லாது செய்வதற்கான திட்டமிடலில் எதிரி வெற்றியடைந்துவிட்டிருந்தான். ஆனாலும் எந்த நிலையையும் வெற்றியின் படிக்கற்களாக்கும் போராளிகள் தடுமாறவில்லை. இயக்கத்தின் வழிநடத்தலை முழுமையாக நடைமுறைப்படுத்தும் எந்த ஆபத்தான சூழலிலும் பணியாற்ற எமது போராளிகள் தயாராகவே இருந்தார்கள். வழமையில் இராணுவ மருத்துவ மனைகளில் தொங்கும் போரரங்கின் வரைபடங்கள் தினமும் விவாதத்துக்கும் அனுமானங்களுக்கும் களமமைக்கும். “எதிரி மக்களை இலக்கு வைப்பதன் மூலம் உளவுரன் ரீதியில் பலவீனப்படுத்த முனைவான். சிவில் நிர்வாகத்தை உடைத்துப் போரொன்றை எதிர்கொள்ளும் சக்தியை உடைக்கவும் மூல உபாயம் வகுத்துள்ளான் ” என்று இசைவாணன் வாதிடுவார். அவரின் கூற்றுப்படியே பல சம்பவங்கள் நடந்து முடிந்தன. அதன்படி தொண்டு நிறுவன வாகனங்கள், மருத்துவக் காவுவண்டிகள், சுகாதார சேவைகள், உணவு விநியோகம் போன்றவற்றைத் தான் முதலில் எதிரி இலக்குவைத்தான். சர்வதேச தொண்டு நிறுவனங்களை வன்னியில் இருந்து வெளியேற்றினான். இந்த நிலையில் முற்று முழுதாக எதிரியால் தடைசெய்யப்பட்ட அனைத்து வளங்களையும் எம் மக்களுக்காக நாமே ஏற்பாடு செய்ய வேண்டிய தேவை எழுந்திருந்தது. தன்னிறைவுப் பொருளாதார வளர்ச்சியில் நாம் வளர வேண்டிய தேவையைத் தேசியத் தலைவர் போராளிகளுக்கு உணர்த்திய போது மக்களுக்கான போசாக்கு உணவுத் தயாரிப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கினார் இசைவாணன். அதற்காக ஒரு தொழிற்சாலையையே இயக்கினார். இதனை வடிவமைக்கும் பொறுப்பை தமிழீழ சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி. சுஜந்தன் அவர்கள் இசைவாணனிடம் ஒப்படைத்த போது நிட்சயமாக அதன் பலன் பெரும் வெற்றியைத் தரும் என்றே நம்பினார். அதைப் போலவே கர்பிணித் தாய்மாருக்கும் குழந்தைகளுக்கும் பயன்படக்கூடியதான “போசாக்கு மாவை ” ( அரசாங்கத்தால் கொடுக்கப்படும் திரிபோசா மாவின் தரத்தோடு) உற்பத்தி செய்தார் இசைவாணன். இந்த உற்பத்தியானது இறுதிச்சண்டை வரை தொடர்ந்ததும். பட்டினியால் வாடிய மக்களின் பசி போக்குவதற்கு பெரிதும் உதவியதும் வரலாறு. இவ்வாறான போராளி மருத்துவர் இசைவாணன் மன்னார் மாவட்ட தமிழீழ சுகாதாரசேவைகள் பொறுப்பாளராக இருந்த போது மக்களுக்கான பணிகளை சரியாக செய்தார். களமுனை கொஞ்சம் கொஞ்சமாக எமது பிரதேசங்களுக்குள் நகர்ந்த போதெல்லாம் படையணிப் போராளிகளுக்கான மருத்துவம் மட்டுமல்லாது மக்களுக்கான பணிகளையும் செவ்வனவே செய்தார். அவ்வாறான ஒரு இக்கட்டான சூழலில் இராணுவம் எமது பிரதேசம் ஒன்றைக் கைப்பற்றிய போது இவரின் பொறுப்பில் இருந்த போசாக்குமாத் தொழிற்சாலை எமது படையணிகளின் எல்லை வேலிக்கும் எதிரிக்கும் இடையில் சிக்குண்டது. ஆனாலும் கட்டாயமாக அங்கிருக்கும் தானியங்கள், மற்றும் பாத்திரங்கள் இயந்திர உபகரணங்கள் கட்டாயமாக மீட்கப்பட வேண்டும். ஆனாலும் பாதுகாப்பு என்பது அறவே இல்லை. லெப்கேணல். இசைவாணனும் விடுதலைப்புலிகளின் முதன்மை இராணுவ மருத்துவர் வாமனும் அவற்றை மீட்டே ஆக வேண்டும் என்பதில் திடமாக இருந்தார்கள். இவர்களிடம் பிஸ்டலையும், கழுத்தில் இருந்த குப்பியையும் தவிர வேற எதுவும் இல்லை. அதைவிட அவர்களிடம் இருந்த வாகனமோ இயங்குநிலை தடைப்பட்டால் திரும்பத் தள்ளித் தான் இயக்க வேண்டும். இந்த நிலையில் எப்படி அவர்களால் அந்த போசாக்கு மா தொழிற்சாலையை மீட்க முடியும். ஆனால் இரு இராணுவ மருத்துவர்களும் தமது வாகனத்தோடு அந்த கொட்டகைக்கு சென்றார்கள். ஒற்றைக் கால் வலிக்க வலிக்க அத்தனை பொருட்களையும் வாகனத்தில் ஏற்றினார்கள். ஆனால் வாகனம் இயங்கவில்லை. இருவருமே திட்டமிட்டு வாகனத்தை விட்டிருந்த இடம் ஒரு ஏற்றமான பகுதி. வாகனத்தைத் தள்ளி இயங்க செய்வது இலகு என்பதால் அவர்கள் அவ்வாறு செய்திருந்தார்கள். இப்போது மருத்துவர் வாமன், மற்றும் இசைவாணன் ஆகியோர் தமது வாகனத்தை மெதுவாக தள்ளி இயங்கு நிலைக்கு கொண்டுவந்து அந்த சூனியப் பிரதேசத்தில் இருந்து தப்பி வருகிறனர். தருணம் தப்பினால் மரணம் என்ற நியத்தை சவாலாக ஏற்று மக்களுக்காக அந்த பொருட்களை மீட்டு வந்தார்கள் மருத்துவர்கள். இவ்வாறான போராளி மருத்துவர்கள் இறுதி வரை தளராது களமாடிய பெரும் வேங்கைகள். ஆனாலும் அவர்கள் ஒரு விடயத்தில் சில மாறுதலான முடிவுகளை எடுத்திருந்தார்கள். ஏனெனில், அப்போது இறுதிப் போர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கை சிங்கள அரசு திட்டமிட்டதைப் போலவே வன்னி மண்ணில் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கு துணை போன சர்வதேசம் போட்ட நிகழ்ச்சி நிரலில் வன்னியில் மக்கள் காப்பற்றப்படுகிறார்கள் என்று வெளிச்சமிட்டுக் கொண்டு இனப்படுகொலைகள் அரங்கேறின. அதனால் தமது வருங்காலக் சந்ததியினரான குழந்தைகளை காத்துவிடத் துடித்தார்கள் சில போராளிகள். ஆனாலும் தமது பிள்ளைகள் தம்முடனே இருக்கட்டும் என்ற முடிவில் இருந்து பல போராளிகள் மாறவில்லை. யாருக்காக இந்த போராட்டம் நடக்கிறதோ? எந்தச் சந்ததி வாழ வேண்டும் என்று அவர்கள் களத்தில் நிற்கிறார்களோ ? அந்த சந்ததி அழிந்து கொண்டிருப்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை. சிங்களத்தின் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் ஏற்படுத்தப்பட்ட தாக்குதல் வலயங்களிலெல்லாம், பெரும் உயிர் சேதங்கள் வந்த போதெல்லாம் மருத்துவப்பிரிவின் போராளி மருத்துவர்கள் தமது உயிர் காக்கும் செயற்பாடுகளை இறுதிவரை செய்தார்கள். இவ்வாறான சூழல் ஒன்றில் தான், போராளி மருத்துவ அணியில் இருந்த பல மூத்த மருத்துவர்கள் சண்டைகளில் வீரச்சாவடைகிறார்கள். லெப்கேணல் வளர்பிறை, லெப்கேணல் கமலினி, லெப்கேணல் காந்தன், லெப்கேணல் சத்தியா, லெப்கேணல் தமிழ்நேசன் ஆகியோர் வீரச்சாவடைந்த நிலையில் இறையொளி, செவ்வானம் ஆகியோரும் இறுதி சண்டையில் நடந்த மருத்துவமனை மீதான தாக்குதலில் வீரச்சாவடைகின்றனர். இப்போது மிகுதியாக இருக்கும் மருத்துவ வளமோ மிக சிறியது. மூத்த மருத்துவர்கள் மிக குறுகியவர்களே பணியில் இருக்கிறார்கள், அரச மருத்துவர்களான மருத்துவக் கலாநிதி வரதராஜன், மற்றும் மருத்துவக் கலாநிதி சண்முகராஜா ஆகியோருடன் தமிழீழ மருத்துவர்கள் இடைவிடாத உயிர்காப்பு நடவடிக்கைகளைத் தொடர்கிறார்கள். இந்த நிலையில் தான் சிறு ஓய்வுக்காக வீட்டுக்குச் சென்றிருந்த (வீடு என்பது தரப்பாளால் அமைக்கப்பட்டிருந்த சிறு கொட்டகை அதனோடு இணைந்த பதுங்ககழி ) இசைவாணன் 12.05.2009 அன்று அவரது குடும்பத்தோடு எறிகணை வீச்சுக்கு இலக்காகுகிறார். அந்த எறிகணை வீச்சில் பவிதா(8) றோகிதா(5) தமிழ்வேந்தன்(3) ஆகிய மருத்துவர் இசைவாணனின் மூன்று குழந்தைகளும் சாவடைகின்றனர். தமது கண்முன்னே தம் குழந்தைகள் துடித்துச் சாவதை இசைவாணனும் அவரது மனைவியும் மருத்துவப்பிரிவுப் போராளியுமான ரதியும் பார்க்கிறார்கள். ஆனால் எதையும் செய்ய முடியாத சூழல். மூன்று குழந்தைகளை கண்முன்னே பறி கொடுத்த தாய் தனது கணவனான இசைவாணன் முழுமையாக இருந்த கால்த் தொடையில் பெரியளவிலான முறிவுக் காயமடைந்ததையும் பார்க்கிறார். ஒரு பக்கம் மூன்று குழந்தைகளின் சாவு, மறுபக்கம் உயிருக்குப் போராடும் கணவன். என்ன செய்வது என்று அறியாத நிலையில் கத்திக் குழறும் பெண் மருத்துவப் போராளியை அருகில் இருந்தவர்களால் ஆற்றுகைப்படுத்த முடியவில்லை. அவரைத் தேற்ற வழியற்றுப் போனார்கள். எமது விடுதலை அமைப்பு சாவுகளைக் கண்டு அஞ்சியதில்லை. ஆனால் பெற்ற குழந்தைகள் மூவரும் ஒரே இடத்தில் சாவடைந்த கொடூரத்தை எந்த தாய் தந்தையால் ஏற்றுக்கொள்ள முடியும்? குருதி பெருக்கெடுத்து ஓட, இசைவாணன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். மீள் உயிர்ப்பித்தல் சிகிச்சை தரப்பட்டு, இசைவாணன் காப்பாற்றப் படுகிறார். இந்த நிலையில் இறுதி வரை இயங்கி வந்த அலன் இராணுவ மருத்துவமனை சிங்களத்தால் முற்றுகையிடப்படும் நிலை வந்தது. அதனால் அங்கிருந்து இயலுமானவரை காயப்பட்ட போராளிகள் எமது கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி கொண்டு செல்லப்படுகின்றனர். அவர்களில் ஒருவனாக இசைவாணனும் கொண்டு செல்லப்படுகிறார். துணைவி ரதியும் தமிழீழ சுகாதார பரிசோதகரும் போராளியுமான தீபனும் இசைவாணனுடன் நிற்கிறார்கள். அருகில் காயமடைந்திருந்த மூத்த போராளி மருத்துவர் வாமனும் இருக்கின்றார். இசைவாணன் காயமடைந்து மூன்று நாட்கள் கடந்த நிலையில் முற்றுமுழுதாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக இருந்த குறுகிய நிலப்பரப்பு சிங்களப் படைகளால் கண்மூடித் தனமாக தாக்கப் படுகிறது. இந்த நிலையில் அடிக்கப்பட்டுக் கொண்டிருந்த எறிகணைத் தாக்குதல்களில் இருந்து தனது பிள்ளைகளைக் காத்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு மருத்துவர் வாமன் இவர்களை விட்டு வெளியேற முனைந்தார். அப்போது “மச்சான் நிலைமை சிக்கலாகிவிட்டது. இனி என்னை இயக்கம் வைச்சு பராமரிக்கிறது என்பது பயங்கர சிக்கல் நிறைஞ்சது. ரதியும் பாவம் என்னை வைச்சு எப்பிடி பராமரிப்பா? அதை விட இப்படியே சிங்களவனிடம் சரணடையவும் என்னால் முடியாது. அவன் எங்களை நாயைச் சுடுவது போல சுட்டுத் தள்ளுவான். அப்பிடி அவனிடம் சாக நான் தயாராய் இல்ல… மச்சான் நான் குப்பி கடிக்கப்போறன்” என்கிறார் இசைவாணன். சிங்களப் படைகளை அவர் சரியாக புரிந்திருந்தார். தனக்கு நடக்கப்போகும் அவலச்சாவை அவர் விரும்பவில்லை. தீர்க்கதர்சனமாக முடிவை எடுத்தார். அதைக் கேட்டு உடனடியாக மறுக்கிறார் வாமன்… “இல்ல மச்சான் நான் சொல்லும் வரை அப்பிடி எதுவும் செய்யாத… நான் நிலைமையைப் பார்த்து சொல்லுறன். இப்ப எதுவும் முடிவெடுக்காத மச்சான்” இசைவாணனின் தலையை வருடியபடி ஒற்றைக்காலில் நின்றுகொண்டு மருத்துவர் வாமன் கூறிய போது இசைவாணன் அவரது கூற்றை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், மச்சான் நீ போய் பிள்ளைகள் எப்பிடி என்று பார்த்திட்டு வாடா … என வாமனை அனுப்புகிறார் இசைவாணன். மருத்துவர் வாமனும் தனது பிள்ளைகளை காத்திட வேண்டும் என்ற துடிப்போடு ஊன்றுகோலின் உதவியோடு வெளியேறி விட்டார். ரதி என்னோட பொய்க்கால ஒருக்கா எடுத்து வாறியா…” மனைவியிடம் வேண்டுகிறார் இசைவாணன். ரதி அவரது பொய்க்காலை எடுப்பதற்காக வெளியில் செல்கிறார். அப்போது இசைவாணனின் அருகில் நின்ற போராளி தீபனை அருகில் அழைத்து. “நான் குப்பி அடிக்கப்போறன் நான் சாகும் வரை ரதியை உள்ள விடாத…” அண்ண வேண்டாம் அண்ண… பிளீஸ் வேண்டாம் அண்ண அண்ணி தாங்க மாட்டா அண்ண ஏற்கனவே பிள்ளைகளை இழந்து தனிய நிக்கிறா நீங்களும் இல்லை என்றால் அவா தாங்க மாட்டா அண்ண… அவன் தடுக்கிறான் ஆனால் இசைவாணன் முடிவை மாற்றவில்லை. தீபன் இது என்னோட இறுதிக் கட்டளை… அண்ணியை உள்ள வர விடாத நான் செத்ததும் வரவிடு… தீபன் பார்த்துக் கொண்டிருக்க இசைவாணனின் துடிப்பு அடங்கிப் போகிறது. பல ஆயிரம் உயிர்களுக்கு மீள் உயிர்ப்பூட்டிய மருத்துவ வேங்கை தான் கட்டி இருந்த நஞ்சுக் குப்பிக்குள் தனது வாழ்வை அடைத்துச் சென்று விட்டார். இரண்டு கால்களும் செயலியக்கத்தை இழந்த நிலையில் தன்னால் இயக்கத்துக்கும் தனது துணைவிக்கும் சிரமம் இருக்கக் கூடாது என்ற நினைப்பு அவரை இந்த முடிவுக்குக் கொண்டு வந்திருந்தது. இறுதி முடிவை அவர் உணர்ந்திருந்தார் எதிரியிடம் பிடிபட்டு கேவலச்சாவு சாவதை விட வீரனாக சாக எண்ணினார். அதனால் அவர் சுமந்து திரிந்த குப்பி அவரை உண்டு தின்றது. இசைவாணன் என்ற பெரும் மருத்துவ மரம் சாய்ந்து எம் மண்ணுக்கு உரமாகி, விதையாகி என்றோ ஒருநாள் விடியப்போகும் சுதந்திர தமிழீழத்துக்காக காத்திருக்கிறது. “பகிரப்படாத பக்கங்கள் ” நூலாக்கம் நடந்து கொண்டிருப்பதால் நீண்ட நாட்களின் பின் மருத்துவப் போராளி இசைவாணன் அவர்களின் பக்கத்தோடு தமிழ்லீடருக்காக… கவிமகன். இ 04.04.2018 https://eelamaravar.wordpress.com/2019/06/25/ltte-history-lt-col-isaivanan-2/
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் -12 எதிரியின் உயிரைக் காத்த வீரத்தளபதி பிரிகேடியர் ஜெயம் அண்மையில் லண்டனில் “கழுத்தை வெட்டி கொல்லுவோம் ” என்று சைகை மூலமாக மிரட்டல் விடுத்த இராணுவத் தளபதி பிரிகேடியர் பிரியங்கவின் மனிதமற்ற செயலை பலர் கண்டித்தார்கள். பலர் “அதில் என்ன இருக்கு இதையெல்லாம் பெரிசு படுத்த வேண்டாமே…, ” என்றார்கள். “புலி சீறிய தெருவில் ஒரு சிங்கம் சைகை தானே காட்டியது. ” என்று பிதற்றினார்கள் சிலர். “புலிக் கொடியை ஏன் தூக்கிப் பிடித்தார்கள் அதனால் தானே இவ்வாறு அந்த சிங்கள இராணுவத் தளபதி மிரட்டல் விட்டார் ” என்று கொல்வேன் என்று மிரட்டியவனுக்கே பரிந்து பேசினார்கள் சிலர். என பலவாறு பல கருத்துக்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய கொடூர முகத்தைக் கொண்ட சிங்களப் படைகளை எதிர்த்து நின்ற எம் வீரத்தளபதிகளின் மனிதமும் உயிர்கள் மீதான உயிர்ப்புள்ள பிடிப்பும் ஒப்பிட முடியாதவை. “ஜூலியட் மைக்” (Juliet mig ) இந்த குறியீட்டுப் பெயருக்கு சொந்தக்காறனை பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அவரை பலர் காணாமல் கூட இருக்கலாம். ஆனால் அவரின் செயற்பாடுகளை, வீரத்தை, தமிழீழம் மீது கொண்ட பாசத்தை அறிந்து கொள்ளாதவன் எதிரியாக கூட இருக்க முடியாது என்றே நான் கூறுவேன். அவ்வளவு மனவலிமையும் உறுதியான தேசப்பற்றும் கொண்ட மூத்த தளபதி. விசேட வேவுப் பிரிவின் பொறுப்பதிகாரி. மன்னார் களமுனையின் நீண்ட நாள் நண்பன், தளபதி, பொறுப்பாளர், சண்டைக்காறன் என பல நூறு நிலைகளை வகித்தவர். இப்போது இந்த சங்கேத பெயரின் சொந்தக்காறன் பிரிகேடியர் ஜெயம் என்பது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மூத்த தளபதி ஜெயம் அவர்களின் சண்டைகள், வேவுகள், கட்டளைகள் என பலரும் அவர் சார்ந்த பலவற்றை அறிந்தாலும், பகிரப்படாத மென்மையான பக்கமும் அவருக்கு உண்டு என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த உயர்ந்த இராணுவ மிடுக்கு கொண்ட திடமான மனிதன் மிகவும் மென்மையானவர் எளிமையானவர் என்பதை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். நான் அவரை முதன் முதலாக கண்ட காட்சி இன்றும் மனத் திரையில் பதிந்துள்ளது. 2000 ஆம் ஆண்டு காலப்பகுதி, நானும் என் நண்பனும் புத்துவெட்டுவான் கொக்காவில் வீதியூடாக முறிகண்டி சென்று அதனூடாக புதுக்குடியிருப்பு போவதற்காக கொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரத்தடியில் போய்க் கொண்டிருந்தோம். அப்போது கொக்காவில் பகுதியில் எதிரே ஒரு MD90 உந்துருளி வந்து கொண்டிருக்கிறது. வெள்ளை நிற சாறமும் பழும்பு மஞ்சள் நிற சட்டையும்( Shirt ) போட்டுக் கொண்டு உயரமான ஒருவர் தனது நண்பனுடன் ( பாதுகாவலனுடன்) வந்து கொண்டிருக்கிறார். எம்மைக் கண்டவுடன் கையைக் காட்டி நிறுத்திய போது நான் எதுவும் விளங்காமல் முழிக்கிறேன். ஆனால் “நிப்பாட்டு மச்சான் நிப்பாட்டுடா… “ என்று கத்துகிறான் என் நண்பன். “நில்லுடா வாறன் …” என்று கூறிச் செல்கிறான். போனவன் 10 நிமிசமாக அவருடன் சிரித்து கதைத்தபடி நின்றான். எனக்கும் அவர்களுக்குமிடையே 40-50 மீட்டர் இடைவெளி இருந்ததால் எனக்கு எதைக் கதைத்தார்கள் என்று எதுவும் விளங்கவில்லை. இறுதியாக அவர் இவனின் முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டியது மட்டும் புரிந்தது. நண்பன் அவரை வழியனுப்பி விட்டு வந்தான். மச்சான் யார் என்று தெரியுமா? இல்லையே…. மச்சி ஜெயம் அண்ணைடா… என்னடா சொல்லுறாய்…? நான் அதிர்ந்து போனேன். எமது விடுதலை அமைப்பின் மூத்த தளபதி. எந்த பாதுகாப்பும் இன்றி சாதாரணமாக எம்மைப் போல பயணம் செய்ததை என்னால் நம்பவே முடியவில்லை. பாதுகாப்புக்கு இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கி மட்டும் தான் இருந்திருக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் வேறு எந்த ஆயுதங்களையும் நான் காணவில்லை. பாதுகாப்பு போராளியிடமும் எந்த ஆயுதங்களும் இருந்ததுக்கான அறிகுறி இல்லை. அவ்வாறான எளிமை மிக்க எம் தளபதி வேவினூடாகவும் சண்டைகளின் ஊடாகவும் சாதித்தவை கொஞ்சமல்ல. அவற்றை பல இடங்களில் பலர் பகிர்ந்து கொண்டாலும், அவரது மென்மையான பக்கங்களை இப்போது பகிர வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. ஏனெனில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என உலகத்திடம் பரப்புரை செய்யும் நல்லாட்சி என்று தம்மைக் காட்டிக் கொண்ட இனவழிப்பு அரசுக்கு புரியாத புதிராக இருப்பது இவர்களிடம் எப்படி இத்தனை மென்மையான இதயம் என்பது மட்டுமே. ஏனெனில் இன்றும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பல நூறு பொதுமக்கள் இன்றும் விடுதலை செய்யப்படாது அரசியல் கைதிகளாக சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த இராணுவம் குறுகிய நாட்களில் தனது வீடுகளுக்கு விடுதலையாகிச் சென்றது வரலாறு. அதை விட அவர்கள் மீது விடுதலைப்புலிகள் என்றும் அடாவடித்தனத்தை பிரயோகித்தது இல்லை. கைதியாக சிறைகளில் இருந்தார்களே அன்று சித்திரவதைகளை அனுபவித்ததில்லை. ஆனால் எம் பொது மக்களையும் போராளிகளையும் இந்த அரசு எத்தனை கொடூரமாக வைத்திருந்தது என்பதை பல ஆவணங்கள் வெளிக் கொண்டு வந்திருந்தன. அந்த நிலையில் தான் தளபதி ஜெயம் அவர்களின் மென்மையான இதயத்தை இங்கே குறிக்க வேண்டிய தேவை வருகிறது. 1999 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் ஒரு நாள். ( திகதி சரியாக தெரியவில்லை) ஓயாத அலைகள் 3 இன் தொடர் வெற்றியில் மகிழ்ந்திருந்த எம் தேசத்தில் மன்னார் களமுனை தனது போராளிகளுடன் மகிழ்வாக இருக்கிறது. அங்கு நடந்த ஒரு சண்டை ஒன்றில் சிங்களத்தின் ஊர்காவற்படையைச் சேர்ந்த இரண்டு பொதுமக்கள் ஜெயம் அவர்களின் கட்டளைக்குக் கீழ் நின்ற போராளிகளால் கைது செய்யப்படுகின்றனர். அதில் ஒருவர் சிறு காயங்களோடு தப்பி வந்திருந்தார். தனக்குத் தானே பச்சிலைகளை கசக்கி மருந்திட்டு காயத்தின் குருதிப் பெருக்கை கட்டுப்படுத்தி இருந்தார். கைதாகியவர்கள் சாகப் போகிறோம் என்று பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வகையில் அவர்களை பொதுமக்கள் என்று கூறவும் முடியாது. அதே வேளை இராணுவம் என்றும் சொல்ல முடியாது. அவர்களும் எங்களின் நடவடிக்கைகளை எதிர்த்து நிற்பவர்கள் தான். ஆனாலும் மக்கள் அதனால் அவர்கள் தொடர்பாக முடிவுகள் எடுக்கும் போது கவனமாக எடுக்க வேண்டிய தேவை இருந்தது. விடுதலைப்புலிகள் கைதானவர்களை கைதிகளாக வைத்திருப்பார்கள் அல்லது உடனடியாக விடுதலை செய்வார்கள். இது விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல காலங்கள் பதிவாகிய நிகழ்வுகள். ஆனால் சில போராளிகள் அந்த ஊர்காவற்படையைச் சேர்ந்த இருவரும் எமக்கெதிராக சண்டை போட்டவர்கள். இவர்களால் கூட எம் பல போராளிகளை நாம் இழந்திருக்கிறோம். அவர்களை எதற்காக உயிருடன் வைத்திருக்க வேண்டும்? என்று கொதித்தார்கள். அப்போது வன்னி மேற்குப் பிராந்தியத் தளபதியாக இருந்த ஜெயம் அவர்கள் அமைதியாக போராளிகளுடன் கதைக்கிறார். “அவர்கள் பொதுமக்கள் அதுவும் இப்போது எம் கைதிகள் அவர்களை சுட்டுக் கொல்வது மனிதம் அற்ற செயல். அவர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்ப வேண்டும். எங்களுடைய மக்களைப் போலத் தான் இவர்களும். ஆனால் ஒரு வித்தியாசம் எங்கட மக்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். இவர்கள் எங்கட உரிமைகளை பறிக்க வந்திருக்கிறார்கள். என்றாலும் அவர்களை உயிருடன் அனுப்ப வேண்டியது எமது கடமை. அதனால் அவர்கள் மீது எந்த விதமான தண்டனைகளும் வழங்க வேண்டாம் உடனடியாக அரசியல் துறை மூலமாக குடும்பங்களிடம் ஒப்படைக்க வேண்டும். என்று அறிவுறுத்துகிறார். போராளி மருத்துவர் தணிகையை அழைத்த தளபதி உனடியாக இருவருக்கும் மருத்துவசிகிச்சை செய்யும் படி பணித்தார். எதிரி எனிலும் உயிரைக் காக்க வேண்டும் என்ற மேன்நிலை நோக்கத்தோடு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கினார் இராணுவ மருத்துவர் தணிகை. அப்போது “யூலியட் மக் ” சண்டையில் எவ்வளவு உக்கிரமமான தளபதி என்றாலும் மக்கள் மீதும் போராளிகள் மீதும் எவ்வளவு பாசத்தை வைத்துள்ளார். அதே நேரம் எதிரிகளின் உதவிக்காக வந்திருந்தவர்களைக் கூட இவ்வாறு நேசிப்பது என்பது எந்த நாட்டிலும் எந்த இராணுவத் தளபதியாலும் செய்ய முடியாத பெரும் மென்நடவடிக்கை என்பதையும் அவர் எவ்வளவு மென் உள்ளம் படைத்த தளபதி என்பதை அந்த ஊர்காவற் படையை சேர்ந்தவர்களும் அன்று உணர்ந்திருப்பர். மருத்துவர் தணிகை மற்றும் மூத்த போராளி மார்ஷல் ஆகியோரை அழைத்த தளபதி ஜெயம் கைதியாக இருந்த இரு ஊர்காவற் படை உறுப்பினர்களையும் பொறுப்பளிக்கிறார். “கவனமாக கொண்டு போங்கோ … கல்விளானில் இருக்கும் அரசியல் துறை நடுவப்பணியகத்தில் ஒப்படையுங்கள்” என்று கட்டளையிடுகிறார். கட்டளையை ஏற்று போராளி மருத்துவர் தணிகையும், மார்ஷலும் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு மன்னாரில் இருந்து எமது பொது மக்களின் வாகனம் ஒன்றை உதவிக்கு வரு மாறு அழைத்துக் கொண்டு கல்விளானுக்கு வருகிறார்கள். அப்போதெல்லாம் இயக்கத்திடம் வாகனப்பற்றாக்குறை இருந்த காரணத்தால் மக்களின் வாகனங்களே அதிகமாக பயன்படுத்தப்படுவது வழமை. அதுவும் சாரதிகளும் பெரும்பாலும் மக்களாகவே இருப்பார்கள். போராளிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் எம் மக்கள் பிரிக்கப்படாத அளவுக்கு பிணைந்திருந்தற்கு இந்த வாக சாரதிகளும் ஒரு சான்றாகின்றனர். கல்விளானுக்கு மக்களின் உதவியோடு வந்த போராளிகள் இருவரும் ஊர்காவற்படையின் இரு உறுப்பினர்களையும் அரசியல்துறையின் மக்கள் தொடர்பகப் பிரிவில் பொறுப்பாக இருந்த போராளி தயா மாஸ்டரிடம் ஒப்படைக்கிறார்கள். மரணம் வரும் தருவாயை எதிர்பார்த்து பயந்து இருந்த சிங்களத்தின் ஊர்காவற்படையை சேர்ந்த இருவரும் தமக்கு என்ன நடக்கிறது புரியாமல் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு பின் சர்வதேச செஞ்சிலுவை சங்கப் பிரதிநிதிகள் வந்து அவர்களைப் பொறுப்பெடுப்பார்கள். அப்போது தான் அந்த அப்பாவி ஊர்காவற்படை உறுப்பினர்களுக்கு நிம்மதியாக இருந்திருக்கும். அவர்கள் தமது குடும்பங்களுடன் இணைவதற்கான நடவடிக்கைகளை எம் மொழி பெயர்ப்பு போராளிகள் அவர்களுக்கு விளங்கப்படுத்தி இருப்பார்கள். அதன் பின்னான நாள் ஒன்றில் அவர்கள் நிட்சயமாக விடுதலை செய்யப்பட்டு இன்றும் எங்கோ ஓர் இடத்தில் வாழ்வார்கள். உண்மையில் அவர்கள் புரிந்திருப்பார்கள். தம்மை உயிருடன் விடுவித்த பிரிகேடியர் ஜெயம் அவர்களின் மென்மையையும் தமது சிங்களத் தளபதி பிரியங்காவின் கொலை வெறியையும். அதோடு மட்டுமல்லாது, தான் நேசித்த தமிழீழ மண்ணை அள்ளி நெஞ்சில் அணைத்தபடி தன்னைத் தானே சுட்டும், குப்பி கடித்தும் தனது உயிரை மண்ணுக்காக வித்தாக கொடுத்த பிரிகேடியர் ஜெயம் அவர்களின் புகைப்படத்தைப் பார்த்து கட்டாயம் விழி கலங்கியிருப்பர். எம்மைக் காத்த தெய்வம் தமது கண்முன்னே தான் நேசித்த மக்களுக்காக வீழ்ந்து கிடப்பதை உணர்ந்திருப்பர். எந்த விடுதலை இயக்கமும் சரி, இராணுவக் கட்டமைப்பும் சரி அதிலும் சிங்கள அரச படைகள் தன் எதிரே துப்பாக்கியுடன் நிற்கும் எதிரிகளை மட்டுமல்ல அப்பாவி மக்களையும் கொன்று குவிக்க வேண்டும் என்பதையே தம் நிலைப்பாடாக கொண்டிருப்பர். ஆனால் விடுதலைப் புலிகளின் தளபதிகளோ போராளிகளோ அவ்வாறானவர்கள் இல்லை. மனிதமும் உயிர்களை நேசிக்கும் உயரிய பண்பையும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். என்பதை புரிந்து கொள்ள எந்த சிரமமும் இருக்கவில்லை. சிங்கள இராணுவத் தளபதி இறுதி யுத்தம் என்ற பெயரில் இனவழிப்பை நிறைவேற்றி முடித்தது காணாது என்று, இன்றும் தமிழர்களை கொல்வதற்காகவும் தமிழ் நிலங்களை அபகரிப்பதற்காகவும் தயாராகவே இன்றும் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறார்கள். ஆனால் எம் போராளிகளோ அவ்வாறு இல்லை என்பதை நிரூபித்தார்கள். அவர்கள் எதிரியையும் எதிரிகளின் உயிரையும் மதிக்கத் தவறியதில்லை. இதை எம் தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களும் நிரூபிக்கத் தவறவில்லை… கவிமகன்.இ 10.03.2018
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம், புதிய பதிப்பிற்குப் பின்னர் சில சிக்கல்களை நான் எதிர்கொள்கிறேன். படிமங்களை edit செய்ய திறந்தால் அவற்றை காணக்கிடைக்கவில்லை. தலைப்புகளில் Tags வேலை செய்யவில்லை. Views தெரியவில்லை / mobile version @மோகன்
-
தமிழீழத்தின் இதய பூமியான மணலாறு மீட்டெடுக்கும் நாளே நமது திருநாள்!
நக்கீரன் தமிழீழத்தின் இதய பூமியான மணலாறு மீட்டெடுக்கும் நாளே நமது திருநாள்! தமிழீழத் தாயகக் கோட்பாட்டைத் தகர்த்தெறிய சிங்கள-பௌத்த ஏகாதிபத்தியம் கையில் எடுத்த ஆயுதம் சிங்களக் குடியேற்றமாகும். தமிழர்களின் பாரம்பரிய பூமியில் சிங்களவர்களை அரச செலவில் குடியேற்றுவதன் மூலம் வட-கிழக்கு மாகாணத்தின் குடித்தொகையில் படிப்படியான மாற்றத்தை ஏற்படுத்தஇ தமிழ் மக்களை அவர்களது சொந்த மண்ணில்இ அவர்களது தந்தையும் – தாயும் மகிழ்ந்து குலாவி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்த மண்ணில்-சிறுபான்மையர்கள் ஆக மாற்றுவதே சிங்கள அரசுகளின் குறிக்கோளாக இருந்து வருகிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் காரணமாகவே செந்தமிழ் மணம் கமழும் பட்டிப்பளை ஆறு கல்லோயா எனப் பெயர் மாற்றம் பெற்றது, அல்லை கந்தளாய், அல்ல-கந்தளாவ ஆக மாறியது, முதலிக்குளம் பதவியாக உருவெடுத்தது, தமிழீழத்தின் இதயபூமியான மணலாறு இரவோடு இரவாக வெலிஓயாவாக மறு அவதாரம் செய்தது. இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவின் நரிமூளையில் உருவாகிய நச்சுத் திட்டமே இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள். அவரே பட்டிப்பளை ஆறு கல்ஓயாவாக மாறியதன் சூத்திரதாரி. ஐம்பதின் முற்பகுதியில் கல்லோயா ஆற்றுக்குக் குறுக்கே இங்கினியாகல என்ற இடத்தில் பாரிய அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டு சேனநாயக்க சமுத்திரம் உருவாக்கப்பட்டது. 67.2 மில்லியன் டொலர் செலவில் அமெரிக்க கம்பனிகளின் உதவியுடன் கல்ஓயாவில் நிருர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாற்பது கொலனிகள் உருவாக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் 150 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று ஏக்கர் வயல் காணியும் ஒன்றரை ஏக்கர் மேட்டுநிலக் காணியும் வழங்கப்பட்டது. முதற் கட்டமாக இருபதாயிரத்திற்கும் மேலான சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் மூலம் எம் செந்தமிழ் நிலமான தென்தமிழீழம் எவ்வாறு மெல்ல மெல்ல சிங்களவரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டது என்பதைக் கீழ்க்கண்ட அட்டவணை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அட்டவணை கிழக்கு மாகாண மக்கள் தொகை (1881-1981) சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் ஆண்டு தொகை விழுக்காடு தொகை விழுக்காடு தொகை விழுக்காடு 1881 5947 4.5 75408 61.35 43001 30.65 1891 7512 4.75 87701 61.55 51206 30.75 1901 8778 4.7 96296 57.5 62448 33.15 1911 6909 3.75 101181 56.2 70409 36.0 1921 8744 4.5 103551 53.5 75992 39.4 1946 23456 8.4 146059 52.3 109024 39.1 1953 46470 13.1 167898 47.3 135322 38.1 1963 109690 20.1 246120 45.1 185750 34.0 1971 148572 20.7 315560 43.9 248567 34.6 1981 243358 24.9 409451 41.9 315201 32.2 1881 ம் ஆண்டில் 4.5 விழுக்காடாக இருந்த சிங்களவர் தொகை 1981 ஆம் ஆண்டு 24. 9 விழுக்காடாக அதிகரித்தது. அதே சமயம் தமிழர்களுடைய விழுக்காடு 1881 ஆம் ஆண்டு 61.35 ஆக இருந்து 1981ல் 41.9 ஆக வீழ்ச்சியடைந்தது. இந்த வீழ்ச்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கல் ஓயா, மதுறு ஓயா, திருகோணமலை மாவட்டத்தில் அல்லை-கந்தளாய், பதவியா (முதலிக்குளம்), யான் ஓயா போன்ற பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களை சிங்கள பேரினவாத அரசுகள் கொண்டு வந்து நிறைவேற்றியதே காரணமாகும். இவற்றிற்கும் மேலாக அரச அனுசரணையுடன் தமிழர்களது காணிகளிலும், கோவில் காணிகளிலும் சட்ட விரோதமாகச் சிங்களவர் குடியேறியதும் காரணமாகும். இந்தச் சிங்களக் குடியேற்றங்களில் எல்லாம் மிகவும் மோசமான அதே சமயம் ஆபத்தான குடியேற்றத் திட்டம் வெலிஓயா ஆகும். எண்பது முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம் 1988 ஆம் ஆண்டு அசுர வேகத்தில் முடுக்கி விடப்பட்டது. இதற்காக ஸ்ரீலங்காவின் முழு அரச இயந்திரமும் பயன்படுத்தப்பட்டது. 1988ம் ஆண்டு சித்திரைத் திங்கள் 16ம் நாள் ஒரு சிறப்பு அரசதாள் மூலம் முல்லைத்தீவு மாவடத்தின் மணலாற்றுப் பிரதேசம் வெலிஓயாவாக பெயர் மாற்றம் செய்யப் பட்டது. அது மட்டும் அல்லாது ஸ்ரீலங்காவின் 26வது மாவட்டமாகவும் அது பிரகடனப் படுத்தப்பட்டது. முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராமங்களில் காலம் காலமாக வாழ்ந்து வந்த 13,288 தமிழ்க் குடும்பங்கள் 48 மணித்தியாலக் காலக்கெடுவுக்குள் அவர்களது வீடுவாசல்களில் இருந்து வெளியேறுமாறும், வெளியேறத் தவறினால் பலவந்தமாக அவர்கள் வெளியேற்றப் படுவார்கள் எனவும் சிங்கள இராணுவம் ஒலிபெருக்கி மூலம் மிரட்டியது. பின்வரும் கிராமங்களைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் இந்த பலவந்த வெளியேற்றத்திற்கு உள்ளாக்கப் பட்டன. வவுனியா மாவட்டம் அரியக்குண்டசோலை – 118 வெடிவைத்தகல்லு – 89 ஏனையவை – 85 முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத் தொடுவாய் கிராமசேவகர் பிரிவு கொக்குத் தொடுவாய் – 861 கருநாட்டுக்கேணி – 370 ஏனையவை – 66 கொக்குளாய் கிராமசேவகர் பிரிவு கொக்குளாய் – 508 மரியமுனை – 04 முதத்துவாரம் – 1004 ஆலடிக்குளம் – 05 ஆறுமுகத்தான்குளம் – 69 நாயாறு – 465 தண்ணிமுறிப்பு – 243 ஆண்டான்குளம் – 49 குமுழமுனை – 1164 புளியமுனை – 16 வவுனியா வடக்கு கிராமசேவகர் பிரிவு புதுக்குடியிருப்பு – 351 காட்டுப்பூவரசங்குளம் – 91 கற்குளம் – 101 கோவில்புளியங்குளம் – 81 சொரியல் – 6448 இவற்றைவிட ஒவ்வொன்றும் 1000 ஏக்கர் கொண்ட பின்வரும் 14 குத்தகைக் காணிகளில் (99 ஆண்டுக் குத்தகை) குடியிருந்த தமிழ்க் குடும்பங்களும், பெரும்பாலும் மலையகத் தமிழ்க் குடும்பங்கள், வெளியேற்றப் பட்டன. இந்தக் காணிகள் சொந்தக்காரர்களால் பெரிய பொருட் செலவில் பண்படுத்தப் பட்டு அதில் கமம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1. றேடியோ கண்ணன் 2. டொலர் பாம் 3. ஆனந்தா றேடிங் கொம்பனி 4. செகசோதி அன்ட் கொம்பனி 5. எஸ். இராசரத்தினம் 6. எஸ். செல்லத்துரை 7. எஸ். அம்பலவாணர் 8. த.நடராசா 9. கென்ட் பாம் 10. சிலோன் தியேட்டர் 11. அரியகுண்டன் 12. கார்கோ போட் கொம்பனி 13. றெயில்வே குறூப் 14. போஸ்டல் குறூப் குருவிக் கூட்டைக் கலைப்பதென்றாலே அது பாவம் என்று மனிதர்கள் நினைப்பதுண்டு. உணவு மறுப்பதை விட உறையுள் மறுப்பது பெரிய பாவமாகும். ஆனால் 13, 288 குடும்பங்கள் தாங்கள் பிறந்து வளர்ந்து மண்ணில் இருந்து துரத்தப்பட்டாhர்கள் என்றால், அதுவும் அவர்கள் தமிழர்களாகப் பிறந்த ஒரே குற்றத்திற்காக துரத்தியடிக்கப்பட்டார்கள் என்றால் இதைவிடக் கொடுமை, மனிதவுரிமை மீறல் வேறு ஏதாவது இருக்க முடியுமா? ஆனால் சிங்கள-பௌத்த ஏகாதிபத்தியவாதிகள், அன்பு, அகிம்சை, கருணை போதித்த புத்தரின் சீடர்கள் அந்தக் கொடுமையை எந்தவித துக்கமோ வெட்கமோ இன்றிச் செய்தார்கள்! கல்ஓயா சிங்களக் குடியேற்றத் திட்டத்தின் சூத்திரதாரி டி.எஸ். சேனநாயக்கா என்றால் வெலிஓயா மற்றும் மதுறு ஓயாக் குடியேற்றத் திட்டங்களின் சூத்திரதாரி அன்றைய விவசாய, துரித மகாவெலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காமினி திசநாயக்கா ஆவார். அமைச்சர் காமினி திசநாயக்காவும் அவரது அமைச்சு அதிகாரிகளும் சேர்ந்து மிக இரகசியமாக திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா மாவட்டங்களில் யான் ஓயா, மதுறு ஓயா, மணல் ஆறு போன்ற குடியேற்றத் திட்டங்களை எப்படி நடைமுறைப் படுத்தினார்கள் என்பதை துரித மகாவெலி சபை அதிகாரிகளில் ஒருவரான கேர்மன் குணரத்தின சண்டே ரைம்ஸ் (26-08-90) பத்திரிகையில் எழுதிய கட்டுரை மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். அவர் எழுதியிருந்ததாவது- “All wars are fought for land…The plan for the settlement of people in Yan Oya and Malwathu Oya basins were worked out before the communal riots of 1983. Indeed the keenest minds in the Mahaweli, some of whom are holding top international positions were the architects of this plan. My role was that of an executor… We conceived and implemented a plan which we thought would secure the territorial integrity of Sri Lanka for a long time. We moved a large group of 45,000 land-hungry (Sinhala) peasants into the Batticaloa and Polonnaruwa Districts of Maduru Oya delta. The second step was to make a similar human settlement in the Yan Oya basin. The third step was going to be a settlement of a number of people, opposed to Eelam, on the banks of the Malwathu Oya. By settling the (Sinhala) people in the Maduru Oya we were seeking to have in the Batticaloa zone a mass of persons opposed to a separate state…Yan Oya, if settled by non-separatists (Sinhala people), would have increased the population by about another 50,000. It would completely secure Trincomalee from the rebels…” ‘நிலத்தைப் பிடிக்கவே எல்லா யுத்தங்களும் மேற்கொள்ளப் படுகிறது……..யான் ஓயா மற்றும் மதுறு ஓயாப் பள்ளத்தாக்கில் (சிங்கள)க் குடியேற்றத்தை அமுல் படுத்துவதற்கு வேண்டிய திட்டம் 1983ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்துக்கு முன்னரே தீட்டப் பட்டுவிட்டது. உண்மையில் இந்தத் திட்டத்தின் சிற்பிகள் மகாவலியில் பணியாற்றிய மெத்தப் படித்த அறிவாளிகள் ஆவர். இவர்கள் இப்போது அனைத்துலக மட்டத்தில் பெரிய பதவிகளில் பணியாற்றுகிறார்கள். இந்தத் திட்டத்தில் எனது பாத்திரம் அதனை நடைமுறைப் படுத்துவதே. ”இந்தத் திட்டத்தை நாம் சிந்தித்து நிறைவேற்றியதின் காரணம் ஸ்ரீலங்காவின் பிரதேச கட்டுமானத்தை நீண்ட காலத்துக்கு உறுதிப்படுத்துவதே. மதுறு ஓயா பள்ளத்தாக்கை உள்ளடக்கிய மட்டக்களப்புக்கும் பொலநறுவைக்கும் நாங்கள் காணிக்கு அந்தரித்த 45,000 மக்களைக் கொண்டு சென்று குடியேற்றினோம். அடுத்ததாக இதேபோல் யான் ஓயாவில் (சிங்களவர்களை) குடியேற்ற நடவடிக்கை எடுத்தோம். மூன்றாவதாக ஈழத்துக்கு எதிரானவர்களை மல்வத்து ஓயாவின் கரைகளில் குடியேற்ற முடிவுசெய்தோம். ‘மதுறு ஓயாவில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலம் மட்டக்களப்புப் பிரதேசத்தில் தனியரசுக்கு எதிரான ஒருதொகை மக்களை உருவாக்கினோம். யான் ஓயாவில் பிரிவினைக்கு எதிரானவர்களைவர்களை குடியேற்றுவதன் மூலம் மக்கள் தொகை 50,000 ஆகக் கூடியிருக்கும். இதன் மூலம் போராளிகளிடம் இருந்து திருகோணமலையை முற்றாகக் காப்பாற்றி விடலாம்.’ 1988-89ல் வெலி ஓயாவில் முதல் கட்டமாக 3,364 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. இவர்களில் பெரும்பாலானோர் கிறிமினல் குற்றவாளிகள் ஆவர். இரண்டாம் கட்டமாக 35,000 பேர் குடியமர்த்தப் பட்டார்கள். இந்தக் குடியேற்றங்களைப் பாதுகாக்க சிங்கள இராணுவ முகாம்கள் ஆங்காங்கே நிர்மாணிக்கப்பட்டன. இதில் இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜானக பேரராவின் சேவையை ‘மெச்சி’ தண்ணிமுறிப்பு ஜானகபுரவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்ற ஆண்டு பிரிகேடியர் கிரான் கலன்கொட வெலிஓயாவின் கேந்திர முக்கியத்துவம்பற்றிப் பின்வருமாறு கூறியிருந்தது கவனிக்கத் தக்கது. “Weli Oya is very important militarily. Our presence will not allow the North-East merger. Terrorists cannot win Eelam as long as we stay here. If we go, there will be a threat to Padavia, Kebitigollewa and eventually Anuradhapura.” (Sunday Observer – 22 February, 1998). இப்போது 11 ஆண்டுகள் கழித்து வெலி ஓயாவில் உள்ள கென்ட் பாம், டொலர் பாம், சிலோன் தியேட்டர், கஜபாகுபுரம் உட்பட ஆறு பெரியதும் சின்னதுமான இராணுவ முகாம்கள் வி.புலிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி அவர்களிடம் வீழ்ந்துள்ளன. இதை எழுதும் போது ஜானகபுர இராணுமுகாம் வி.புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாகவும் அது எந்த நேரத்திலும் அவர்கள் கையில் விழலால் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வி.புலிகளின் இராணுவ முகாம்கள் மீதான தாக்குதலுக்குப் பயந்து சுமார் 9,000 சிங்களக் குடியேற்றவாசிகள் அண்மையில் உள்ள பதவியாவிற்கும், அனுராதபுரத்துக்கும் இடம் பெயர்ந்துள்ளார்கள். இந்த இடப்பெயர்வை ஒத்துக் கொண்ட சனாதிபதி சந்திரிகா அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். எண்பதுகள்வரை சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் முடிக்குரிய வெற்றுக் காணிகளிலேயே பெரும்பாலும் இடம் பெற்றது. ஆனால் அதன்பின் தமிழர்களைத் துரத்திவிட்டு அவர்களுக்குச் சொந்தமான காணிகளில் சிங்களவர்களை குடியேற்றும் படலம் ஆரம்பமானது. மணலாறு அதில் ஒன்றாகும். வெலி ஓயாக் குடியேற்றத் திட்டத்தின் மூலம் இன்னொரு ‘சாதனை’யையும் ஸ்ரீலங்கா அரசு படைத்தது. வட தமிழீழத்துக்கும் தென் தமிழீழத்துக்கும் இடையிலான நிலத்தொடர்வை வெட்டியதே அந்தச் ‘சாதனை’யாகும். இதன் மூலம் தமிழர்களது தயாகக் கோட்பாட்டிற்று வேட்டு வைப்பதே சிங்கள அரசின் அரசியல் – இராணுவ நோக்கமாகும். வெலி ஓயாப் பிரதேசத்திலிருந்து சிங்களக் குடியேற்றமும் அந்தச் சிங்களக் குடியேற்றத்துக்கு காவலாகச் செயல்படும் இராணுவத்தையும் எங்கள் மண்ணிலிருந்து விரட்டி அடித்து தமிழீழத்தின் இதய பூமியான மணலாறு மீண்டும் முற்றாக மீட்டு எடுக்கப்பட வேண்டும். அந்த மீட்பு நாளே நமது வாழ்வின் திருநாள். எமது மரபுவழித் தாயகத்தை இழப்போமா? அல்லது போராடிப் மீழப் பெறுவோமா? (நக்கீரன்) தமிழீழத் திருநாட்டின் தலைநகரான திருகோணமலை சமாதான நகரமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாயிரம் (2000)ஆண்டை அகிலவுலக சமாதான ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை பிரகடனப் படுத்தியுள்ளது. இதனை ஒட்டி 87 உலக நாடுகளின் நகரங்கள் சமாதான நகரங்களாக யூனெஸ்கோ முன்மொழிந்துள்ளது. உருசியாவின் மொஸ்கவ், வியட்நாமின் ஹனோய், யப்பானின் ஹிரோசிமா, ,ஸ்ரேலின் ஜெரூசலம், லெபனாவின் பெயிரூட் போன்று தமிழீழத்தில் திருகோணமலை சமாதான நகரமாக யூநெஸ்கோவினால் முன்மொழியப் பட்டுள்ளது. திருகோணமலை நகரின் சமாதான துவக்க விழா போன வாரம் மிகவும் ‘கோலாகலமாகக்’ கொண்டாடப்பட்டுள்ளது. அன்புவழிபுரம் சந்தியில் எழுதப்பட்ட அலங்கார வளைவை தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் மங்கள சமரவீர திரை நீக்கம் செய்து வைத்திருக்கிறார். அத்தோடு திருமலைக் கடற்கரையில் அமைச்சர் மங்கள சமரவீர ‘சமாதான நகர் நினைவுச் சின்னம்’ ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல்லையும் நாட்டியுள்ளார். சமாதான நகர் துவக்கவிழா திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் நடந்தேறியிருக்கிறது. இந்த விழாவில் உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர திருகோணமலையை வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். ஆரம்பக்கட்டமாக யப்பான் உதவியுடன் திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கென 150 மில்லியன் (15கோடி) ரூபாயை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார். ‘இலங்கையில் மூன்று இனங்கள் வாழும் திருகோணமலை சமாதான நகரமாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. எமது அரசாங்கம் நிரந்தர சமாதானத்தை இந்த நாட்டில் ஏற்படுத்துவதற்கு உறுதியுடன் உழைத்து வருகிறது. திருகோணமலை இலங்கையில் சமாதானத்தைப் பேணும் ‘மாதிரி’ நகரமாக மாறும். இலங்கையின் வர்த்தக நகராக திருகோணமலை நகரம் அபிவிருத்தி செய்யப்படும்” இப்படி அமைச்சர் மங்கள சமரவீர வயிற்றுப் பிள்ளை கீழே நழுவி விழுமாறு அந்த விழாவில் பேசியிருக்கிறார். சனாதிபதி சங்திரிகா குமாரணதுங்கா இந்த துவக்க விழாவையொட்டி ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியை வட-கிழக்கு மாகாண ஆளுநர் அசோகா ஜெயவர்த்தன வாசித்தார். அந்தச் செய்தியில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது – ‘திருகோணமலையை சமாதான நகராகப் பிரகடனம் செய்யும் யூனெஸ்கோவின் முன்மொழிவை எனது அரசாங்கம் மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டில் சமாதானம், இயல்பு நிலைமை ஏற்படுத்த நாம் உறுதி பூண்டு செயல்பட்டு வருகிறது. அதில் நாம் வெற்றியடைவோம் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது.” திருகோணமலை நகரை சமாதான நகராகப் பிரகடனப் படுத்த யூனெஸ்கோ உண்மையாக தன்பாட்டில் முன்வந்திருந்தால்; இந்த யோசனையை முன்மொழிந்த அந்த அமைப்பின் அதிகாரிக்கு விசித்திரமான நகைச்சுவை உணர்வு இருந்திருக்க வேண்டும். காரணம் திருகோணமலை நகரம் சமாதானத்தைக் கண்டு, அதன் காற்றைச் சுவாசித்து அரை நூற்றாண்டுக்கும் மேலாகிறது. திட்டமிட்ட- இடைவிடாத சிங்களக் குடியேற்றம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் சிறுபான்மையராக இருந்த சிங்களவர் இன்று பெரும்பான்மையராகவும் பெரும்பான்மையராக இருந்த தமிழர் சிறுபான்மையராகவும் மாற்றப்பட்டுள்ளார்கள். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு இன்றுவரை திருமலை மாவட்டத்துக்கு தமிழர் ஒருவர் அரசாங்க அதிபராக நியமனம் பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது. பரங்கியர் ஒருவர் அரசாங்க அதிபராக இருந்திருக்கிறார். ஆனால் தமிழர் ஒருவர் இதுவரை இருக்கவில்லை. அரசாங்க அதிபர் பதவி மட்டுமல்ல காணிப் பங்கீட்டுக்குப் பொறுப்பாவுள்ள மாவட்ட காணி அதிகாரி (District Land Office) பதவியும் அன்று தொடக்கம் இன்றுவரை சிங்களவராலேயே நிரப்பப்பட்டு வந்திருக்கிறது. இவை ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. இந்த மாவட்டத்தை சிங்கள மயப்படுத்துவதற்கு வசதியாக திட்டமிட்டே பின்பற்றப்பட்டு வரும் பேரினவாதக் கொள்கையாகும். வட- கிழக்கு ஆளுநர் பதவியை முன்னைய காமினி பொன்சேகா இராஜினாமா செய்த போது அவரது இடத்துக்கு இன்றைய மேஜர் ஜெனரல் அசோகாவை சந்திரிகா அரசு அவசர அவசரமாக நியமித்தது. தனது இராணுவப் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற 48 மணித்தியாலங்களுக்குள் அசோகா ஜெயவர்த்தனா வட- கிழக்கு ஆளுனராகப் பதவியேற்றார். வட- கிழக்கு மாகாணத்தில் தமிழ்மொழி பேசுவோரே இன்றும் பெரும்பான்மையராக இருக்கிறார்கள். எனவே ஒரு தமிழர் ஆளுனராக நியமிக்கப் படுவதே நியாயமாகும். ஒத்துழைப்புத் தமிழர்களில் ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்தியிருக்கலாம். ஒத்துழைப்புத் தமிழர் மீதும் சந்திரிகா அரசுக்கு நம்பிக்கையில்லா விட்டால் குறைந்த பட்சம் ஒரு முஸ்லீமை ஆவது ஆளுநராக நியமித்திருக்கலாம். ஆனால் சிங்கள அரசு ஒருபோதும் அப்படிச் செய்யாது. அப்படிச் செய்வது அதன் எழுதப்படாத அல்லது பிரகடனப் படுத்தப் படாத இனவாதக் கொள்கைக்கு முரணாக இருக்கும். மாறி மாறி ஆட்சிக் கதிரையைப் பிடித்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தங்களுக்குள் அரசியல் மட்டத்தில் அடிபட்டுக் கொண்டாலும் வட-கிழக்கு மாகாணத்தில் தமிழருக்குச் சொந்தமான பூமியில் சிங்களவரைக் குடியேற்றி அதனைச் சிங்கள மயப்படுத்த பெரும்பாடுபட்டு வருகின்றன. இதில் சிங்கள ஆட்சியாளர்கள் குறிப்பிடத் தக்க வெற்றியும் கண்டுள்ளார்கள். ஐ.தே.கட்சி – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இந்த இரண்டு சிங்களப் பேரினவாதக் கட்சிகள் தங்களுக்குள் குத்துப் பட்டு வெட்டுப் பட்டாலும் தமிழ் மண்ணில் சிங்களக் குடியேற்றத்தை முடுக்கி விடுவதைப் பொறுத்தளவில் இந்த இரண்டு கட்சிகளும் அண்ணன் – தம்பிபோல் ஒற்றுமையாகச் செயல்படுகின்றன என்பதற்கு எடுத்துக் காட்டு அம்பாரையில் சென்ற வாரம் நடந்து முடிந்த கல்லோயாத் திட்ட பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டமாகும். இந்தப் பொன்விழாக் கொண்டாட்டத்தில் அரசியலில் கீரியும் – பாம்பும் போல் சண்டை போடும் நீர்ப்பாசன மின்சக்தி அமைச்சரும் துணைப் பாதுகாப்பு அமைச்சருமான அநுருத்த இரத்வத்தையும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே மேடையில் இராம-இலட்சுமணர் போல் அருகருகே அமர்ந்திருந்தார்கள். வட-கிழக்கு மாகாணத்திலும், குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் ஏற்பட்ட மக்கள் தொகை மாற்றங்களை குடித் தொகை கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம். 1881ம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் எண்ணி 935 சிங்களவரே வதித்து வந்தார்கள். இது மொத்த விழுக்காட்டில் 4.2. ஆனால் ஒரு நூற்றாண்டு கழித்து அதாவது 1981 ஆம் ஆண்டு சிங்களவர்களது தொகை 86,341 ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த விழுக்காட்டில் 33. 6. பின்வரும் அட்டவணை இந்தத் தலைகீழ் மாற்றத்தை தெளிவாகக் காட்டுகிறது. அட்டவணை 1 திருகோணமலை மாவட்ட மக்கள் தொகையில் இடம்பெற்ற மாற்றங்கள் (1881-1981) சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் ஆண்டு தொகை விழுக்காடு தொகை விழுக்காடு தொகை விழுக்காடு 1881 935 4.2 14394 64.8 5746 25.9 1891 1109 4.3 17117 66.4 6426 25.0 1901 1203 4.2 17069 60.0 8258 29.0 1911 1138 3.8 17233 57.9 9714 32.6 1921 1501 4.4 18586 54.5 12846 37.7 1946 11606 15.3 33795 44.5 23219 30.6 1953 15296 18.2 37517 44.7 28616 34.1 1963 40950 29.6 54050 39.1 42560 30.8 1971 54744 29.1 71749 38.1 59924 31.8 1981 86341 33.6 93510 36.4 74403 29.0 கிழக்கு மாகாண மக்கள் தொகையில் இடம்பெற்ற மாற்றங்கள் (1881-1981) சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் ஆண்டு தொகை விழுக்காடு தொகை விழுக்காடு தொகை விழுக்காடு 1881 5947 4.50 75408 61.35 43001 30.65 1891 7512 4.75 87701 61.55 51206 30.75 1901 8778 4.70 96296 57.50 62448 33.15 1911 6909 3.75 101181 56.20 70409 36.0 1921 8744 4.50 103551 53.50 75992 39.4 1946 23456 8.40 146059 52.30 109024 39.1 1953 46470 13.10 167898 47.30 135322 38.1 1963 109690 20.10 246120 45.10 185750 34.0 1971 148572 20.70 315560 43.90 248567 34.6 1981 243358 24.90 409451 41.90 315201 32.2 1881 ஆம் ஆண்டில் 4.5 விழுக்காடாக இருந்த சிங்களவர் தொகை 1981ம் ஆண்டு 24. 9 விழுக்காடாக அதிகரித்தது. அதே சமயம் தமிழர்களுடைய விழுக்காடு 1881ம் ஆண்டு 61.35 ஆக இருந்து 1981ல் 41.9 ஆக வீழ்ச்சியடைந்தது. இந்த வீழ்ச்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் கல் ஓயா (பட்டிப்பளை ஆறு), மதுறு ஓயா, திருகோணமலையில் அல்லை-கந்தளாய், பதவியா (முதலிக்குளம்) போன்ற பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களை சிங்கள பேரினவாத அரசுகள் கொண்டு வந்து நிறைவேற்றியதே காரணமாகும். இவற்றிற்கும் மேலாக அரச அனுசரணையுடன் தமிழர்களது காணிகளிலும், கோவில் காணிகளிலும் சட்ட விரோதமாகச் சிங்களவர் குடியேறியதும் காரணமாகும். 1981 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குடிசன கணிப்பீடு எடுக்கப் படவில்லை. 2001ல் குடிவரவு கணிப்பீடு எடுக்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அதன்போது தமிழர்களது எண்ணிக்கையும் விழுக்காடும் இனக் கலவரங்கள், புலப்பெயர்வுகள், இடப்பெயர்வுகள் காரணமாக பெருமளவு வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கலாம். திருகோணமலையை தமிழர்களிடம் இருந்து கைப்பற்ற வேண்டும் என்பது சிங்கள பேரினவாத அரசுகளின் நீண்ட காலத் திட்டமாகும். ஐம்பதுக் கடைசிகளில் திருகோணமலையை அண்டிய பகுதிகளில் ஸ்ரீமாபுர, அக்போபுர குடியேற்றக் கிராமங்கள் உருவாகிவிட்டன. ‘சம்பந்தர் புரம்’ என்ற பெயரில் தமிழ் மீனவர் வீடமைப்புத் திட்டத்தில் குடியிருந்த தமிழர்களை சிங்களவர்கள் வெட்டிக் கொலைசெய்து எஞ்சியவர்களை கலைத்துவிட்டு அதில் வலோத்காரமாக குடியேறியுள்ளார்கள். இதே போல் இந்து ஆலயங்களின் தீர்த்தத் திருவிழா நடைபெறும் தீர்த்தக் கடற்கரைப் பிரதேசமும் தமிழ் மீனவர்கள் கரைவலை மீன்பிடித்தலுக்குப் பயன்படுத்தி வந்த ‘உயர்ந்த பாடு’ கடற்கரைப் பகுதியும் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு ஐப்பசித் திங்களில் திருகோணமலை கீரித்தோட்டப் பகுதியில் திருமலை நகரசபையால் 60 இலட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பொதுச் சந்தை சிங்கள இராணுவம், சிங்கள வர்த்தகர்கள் இவர்களது எதிர்ப்பால் மூடப்பட்டுக் கிடக்கிறது. திருமலையில் வர்த்தகம், குறிப்பாக மீன், மரக்கறி வியாபாரம் நூறு விழுக்காடு சிங்களவர்கள் கையில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. திருகோணமலை சமாதான நகரமாகப் பிரகடனப்படுத்தி அதனை ஒரு வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் மேலும் அங்குள்ள சிங்களவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே சந்திரிகா அரசின் அந்தரங்க நோக்கமும் திட்டமுமாகும். ‘திருகோணமலையை சமாதான நகராக பிரகடனம் செய்யும் யூனெஸ்கோவின் முன்மொழிவை எனது அரசாங்கம் மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டில் சமாதானம், இயல்பு நிலைமை ஏற்படுத்த நாம் உறுதி பூண்டு செயல்பட்டு வருகிறோம். அதில் நாம் வெற்றியடைவோம் என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு’ என்று சனாதிபதி பேசியிருப்பதன் அர்த்தம் திருகோணமலையை கைப்பற்றுவதில் அரசாங்கம் வெற்றிபெறும் அதில் தனக்கு நம்பிக்கையுண்டு என்பதுதான். நமது மரபுவழித் தாயகத்தின் பெரும்பகுதியை நாம் இழந்து விட்டோம். கிழக்கு மாகாணத்தில் மூன்றில் இரண்டு நிலப்பரப்பை சிங்களக் குடியேற்றத்திற்குப் பறிகொடுத்து விட்டோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 1961 இல் அம்பாரை மாவட்டம் உருவாக்கப்பட்டதும், இதே காலகட்டத்தில் அம்பாரைத் தேர்தல் தொகுதியும் (1960) சேருவில தேர்தல் தொகுதியும் (1977) சிங்களவர்களுக்காக உருவாக்கப்பட்டதும் அதனை உறுதி செய்கிறது. திருகோணமலை நகரம் சமாதான நகரமாகப் பிரகடனம் செய்யப்பட்டதை நாம் போர்ப் பிரகடனமாகவே அர்த்தம் கொள்ளல் வேண்டும். முடிவாக எமது மரபுவழித் தாயகத்தை சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்புக்கு நிரந்தரமாக இழப்போமா? அல்லது போராடி அதை மீழப் பெறுவோமா? https://nakkeran.com/index.php/2018/06/13/manarl-aru-the-heartland-of-tamil-homeland/
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 11 குடாரப்புத் தரையிறக்கத்தின் வலி ஒன்று…. ஆண்டாளைப் பற்றி அவதூறாக பேசியதாக தமிழ் சினிமாவின் கவிப்பேரரசு வைரமுத்து மீது பெரும் எதிர்ப்புத் தெரிவித்து இந்து அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் என் நெஞ்சைத் தொட்ட சம்பவம் ஒன்றை நினைவு படுத்தியது. அந்த சம்பவம் உண்மையில் எங்கள் விடுதலைப் போராட்டத்துக்கு மக்கள் எப்படியெல்லாம் தங்களின் கூரிய பங்கை தந்தார்கள் என்ற கேள்விக்கான விடையை இலகுவாக சொல்லிச் சென்றது. “குடாரப்பு தரை இறக்கம் ” சொல்ல முடியாத வரலாற்று பக்கத்தை கொண்டது. இதில் பல ஆயிரம் சம்பவங்கள் உறங்கிக் கிடக்கின்றன. அதில் ஒன்று இன்றைய இந்து மதம் சார்ந்தவர்களுக்கு அதிர்ப்த்தியை தரலாம். அல்லது வேறு மதத்தை சார்ந்தவர்கள் பற்றி பதிவிடப்படவில்லை என்று கோவிக்கலாம். அல்லது என் மீது இந்த சம்பவத்தை பதிவதால் எதிர்ப்பு எழலாம். ஆனால் இது மதம் தொடர்பான பதிவல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். பதியப்பட வேண்டி முக்கிய சம்பவம். எம் விடுதலைப் போராட்டம் தனக்குள் சாதி மத பேதமின்றியே தன்னகத்தே அனைவரையும் ஒரு கோட்டில் இணைத்து வைத்திருந்தது. மதக் கோட்பாடுகளுக்கு விடுதலைப்புலிகள் எப்போதும் தடை விதித்ததில்லை. அது பல விமர்சனங்களை உருவாக்கி இருந்தாலும் தடை இல்லை என்பதுவே நியம். அதற்கு மடு மாதா ஆலயம், வற்றாப்பளை கண்ணகி ஆலயம் போன்றவை போல பல நூறு வணக்க தலங்களின் பெருவிழாக்களை அவர்களே பாதுகாப்பு வழங்கி மக்கள் செய்து வந்ததை குறிப்பிடலாம். இந்த நிலையில், அனைத்து மத குருக்களும் விடுதலைப்புலிகளால் மதிக்கப்பட்டே வந்தார்கள். அது இந்து கிருஸ்த்தவம் என்ற பாகுபாடில்லை. இந்த நிலையில் இந்து மதக் கோட்பாடுகளில் ஒன்றான ” கொல்லாமை உண்ணாமை “என்ற பெரும் விடயம் இந்து மத குருக்கள் மாமிச உணவுகளை உண்ணாமையை குறித்து பேசுகிறது. கொல்வதும் அதை உண்பதும் குற்றம் என்று கூறப்படுகிறது. உண்மையில் தீவிர இந்து மதம் சார்பானவர்கள் மாமிச உணவுகளின் அருகே செல்லக்கூட மாட்டார்கள். அவ்வாறான ஒரு இந்து மத குரு பற்றியே இந்த பத்தி கூற விளைகிறது. குடாரப்புச் சண்டை தொடங்கிய முதல் நாள், அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் பலர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தார்கள். அவர்களில் இந்து மத குருவும் ஒருவர் இருந்தார். அவர் இயக்கப் போராளிகளைக் கண்டதும் பெரும் மகிழ்வடைகிறார். கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து தனது வெளிப்படையான மகிழ்ச்சியை உணர்த்துகிறார். “தம்பி உங்களக் பார்க்க எவ்வளவு ஆசைப்பட்டம். இன்றுதான் மனசு நிறைஞ்சிருக்கு” என்று மகிழ்வின் உச்சத்தில் இருந்தார். அவருக்கு புலிகளைக் கண்டது பெரு மகிழ்வைத் தந்தது. கடல், இத்தாவில், நாகர்கோவில், மருதங்கேணி என நான்கு புறமும் இராணுவத்தின் பயங்கர தாக்குதல்கள் அந்த பகுதி எங்கும் நடக்கின்றது. மக்கள் பாதுகாப்பு பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டிருந்தார்கள். போராளிகள் தம் இலக்குகளை அடையும் ஓர்மத்தோடு சண்டையிடுகிறார்கள். அதைப் போலவே இராணுவமும் தனது படை பலத்தை பிரயோகிக்கிறது. இரு தரப்பும் அதி உச்ச பலத்தை பிரயோகித்து கொண்டிருந்தனர். அப்படியான சண்டைக்களத்தில் காயமடையும் போராளிகளுக்கான மருத்துவ அணியையே அவர் சந்தித்திருந்தார். அவர்களும் அவரை கண்ட மகிழ்வில் இருக்கிறார்கள். அப்பா நீங்கள் கவனமா இருங்கோ. இது சண்டைக்களம் இங்கு எப்ப என்ன நடக்கும் என்று தெரியாதப்பா. கவனமா இருங்கோ பங்கர்ல… மருத்துவப் போராளிகள் அவரை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்புகிறார்கள். சரியப்பு சாப்பாடுகள் என்ன மாதிரி? சாப்பிட்டீங்களா? அவர் உணவை பற்றி வினவிய போது ஓம் அப்பா சாப்பாடு இருக்கு பட்ஜட் கொண்டு வந்தனாங்கள். சாப்பாட்ட பற்றி நினைக்க முடியாதப்பா. இந்த சண்டை வெற்றி பெறும் வரைக்கும் எங்களால சாப்பிட முடியாது அப்பா. மருதங்கேணி பக்கமாக உடைச்சு பாதை எடுக்கும் வரை இது தான் அப்பா சாப்பாடு. என்று மருத்துவ போராளி ஒருவர் தனது உணவுத் தொகுதிப் பையை காட்டுகிறார். அதற்குள் சில உலருணவுகள், பொரித்த இறைச்சித் துண்டு போன்றவை இருக்கின்றன. அதைக் கேட்ட உடனே அவருக்கு கவலையாக இருந்தது சரியப்பு நான் பிறகு வாறன் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார். அங்கே சண்டையணிகள் உலருணவை மட்டுமே நம்பி சண்டையை செய்தனர். அவர்களுக்கு உணவு வருவதென்பது சாதாரணமாக இருக்கவில்லை. அதனால் உணவைப் பற்றி அவர்கள் நினைக்கவும் இல்லை. அவர்கள் எண்ணங்கள் முழுவதும் சண்டை பற்றியே இருந்தது. ஆனால், காயப்பட்டு வரும் போராளிகளுக்கு உணவுத் தேவை எழுந்தது. உலருணவை சாதாரணமான போராளிகள் பயன்படுத்துவதில் சிக்கல்கள் எதுவும் இல்லை ஆனால் காயப்பட்ட போராளிகளுக்கு இருக்கவில்லை. அவர்களால் உலருணவை உண்ண முடியாது. அதனால் உடனடி சமைத்த உணவு கொடுக்க வேண்டிய தேவை இருந்தது. இந்த நிலையில் அங்கே தரித்து நின்ற மருத்துவ அணி பல சிக்கல்களை எதிர்நோக்கி இருந்தது. காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுத்து கொண்டிருந்த மருத்துவர் தணிகை, வித்தகி மற்றும் மருத்துவ போராளிகளான வண்ணன் மற்றும் நிர்த்தனா ஆகியோர் களைப்படைந்து காணப்படுகிறார்கள். வரும் காயங்க்காறரை பாதுகாக்க அவர்கள் அயராது உழைக்க வேண்டி இருந்தது. இத்தாவில் பக்க களமுனைக்கு கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுடன் இராணுவ மருத்துவர் சத்தியா, மருத்துவர் மணிவண்ணன், வளர்மதி மற்றும் மருத்துவப் போராளி திருவருள், சுதர்சன் ஊரமுதன் ஆகியோர் சென்றிருந்தனர். அவர்களும் இவர்களைப் போலவே சண்டையை எதிர் கொண்டிருந்தனர் இவர்களோடு அப்பன் மற்றும் அருந்ததி ஆகியோரும் அங்கே பணியில் இருந்தனர். அவர்களுக்கு தொடர்ந்த தாக்குதல்கள் தூக்கமற்ற இரவுகளாகவே இருந்தன. அதோடு உணவுகளும் இல்லாமல் இருந்தது. காயப்பட்ட போராளிகளும் மருத்துவர்களும் சோர்வடைந்து இருந்த போதும், அவர்களுக்கான உணவு வளங்கல்கள் கிடைப்பது பெரும் சிக்கலாக இருந்தது. சண்டை தொடங்கி 2 ஆவது நாள் மேலே குறிப்பிட்ட இந்து மதக் குரு அங்கே வருகிறார். போராளிகள் படும் கஸ்டங்களை அவரால் தாங்க முடியாது இருந்தது. எதுவும் பேசாது திரும்பி சென்றவர். தன் வீட்டில் கூட்டுக்குள் நின்ற இரண்டு சேவல்களை பிடித்து கொண்டு ஓடி வருகிறார். “தம்பி நான் கொலை செய்ய மாட்டன் எனக்கு உரிக்கவும் தெரியாது. இதை உரிச்சு தர முடியுமாப்பு.? நான் சமைச்சு கொண்டு வாறன். மருத்துவர்களால் அவரின் வேண்டுகோளை ஏற்க முடியவில்லை. அவர்கள் ஏற்கனவே காயப்பட்டிருந்த 6 போராளிகளுக்கு சிகிச்சை செய்திருந்தார்கள். கைகள் , உடை என்று அனைத்தும் அந்த போராளிகளின் குருதியில் நனைந்தருந்தன. அதை விட தொடர்ந்தும் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த பல போராளிகளை மீள்உயிர்ப்பு நடவடிக்கை செய்ய வேண்டியும் இருந்தது. கிட்டத்தட்ட 34 போராளிகள் காயமடைந்து அங்கே இருந்தார்கள். அவர்களை விட வீரச்சாவடைந்த மாவீரர்களின் வித்துடல்களும் அங்கே வைத்திருந்தார்கள். அதனால் அவர்கள் மறுக்கிறார்கள் “இல்லை அப்பா நிறைய போராளிகளுக்கு சிகிச்சை குடுக்க வேணும். நாங்கள் இதில மினக்கட இப்ப நேரம் இல்லை அப்பா. பரவாயில்ல நீங்கள் யோசிக்க வேணாம் அப்பா நாங்கள் உலருணவு சாப்பிட்டனாங்கள் சாப்பாட்டை பற்றி கவலையில்லை அப்பா. அவர்கள் தம் கடமையில் மூழ்கிப் போய்விட இந்து மத குருவால் எதையும் செய்ய முடியவில்லை. கொல்வதும் உண்பதும் தவறான செயல் என்ற கோட்பாட்டுக்குள் வாழ்ந்து வரும் அவரால் அதை மீறவும் முடியவில்லை. ஆனால் தன் பிள்ளைகளான போராளிகள் பசியோடு இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கவும் அவரால் முடியவில்லை. அவரின் மனப் போராட்டம் இறுதியாக அடிப்படை இந்துதத்துவ கோட்பாட்டை உடைத்தெறிகிறது. கோழியை கொன்று உரிக்கிறார். சோறும் சுவையான கோழிக் கறியும் சமைக்கிறார். உயிரை கொல்லுதல் பாவம் என்று வாழ்ந்த அந்த இந்துமதக் குரு, போராளிகளுக்காக இரண்டு கோழிகளை கொலை செய்தும், அதை தன் கைகளால் சமைத்தும் பெரும் வெற்றி ஒன்றுக்காக தம்மை ஆகுதி ஆக்கத் தயாராக இருந்த அந்த போராளிகளின் பசியை போக்கினார். எங்கள் மக்களுக்காக அவர்களின் வாழ்வுக்காக போராளிகள் எதையும் செய்ய தாயாரானவர்கள் எதையும் தியாகிக்க துணிந்தவர்கள். ஆனால் பொதுமக்கள் அவ்வாறானவர்கள் அல்ல, தமது குடும்பம், தனிநபர் விருப்பங்கள் என்றும் மதம், சாதியம் போன்ற கொள்கைகள் என்றும் பலவாறான கட்டுப்பாட்டு விழுமியங்களை பின்பற்றியே வந்தார்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி இப் போராளிகளுக்கும் எம் போராட்டத்துக்குமாக எதையும் செய்ய துணிந்தவர்கள் எம் மக்கள் என அந்த இந்துக் குரு சொல்லி நின்றார். இது நடந்து 3 ஆவது நாள் போராளிகளுக்கான உணவு வழங்கள் மருதங்கேணி பகுதியில் இருந்து ஒழுங்காக கிடைக்கத் தொடங்கிய போது இந்து மதக் குரு கொஞ்சம் ஆறுதலடையத் தொடங்கினார். ஆனால் அவர் அதன் பிறகு கூட காயப்பட்ட போராளிகளை பராமரிக்கும் உதவியை மருத்துவ அணிக்கு செய்தார். உணவூட்டி தண்ணீர் பருக்கி அவர்களுக்கு உதவினார். வரு சண்டைக் கள முனையில் போராளிகளுக்கு உதவ எந்த பயமும் இன்றி ஆனால் அன்று பின்னேரம் காலில் பாரிய காயமடைந்திருந்த சாள்ஸ் அன்டனி சிறப்பு படையணிப் போராளி வைத்தியை ( வைத்தி அண்ணை) அவசர சிகிச்சைக்காக தமது மருத்துவ பதுங்ககழி நோக்கி தூக்கிக் கொண்டு வந்தார்கள் மருத்துவர்களான வித்தகி மற்றும் தணிகை ஆகியோரை தாண்டி திடீர் என்று கிபிர் தாக்குதல் நடக்கிறது. நடந்த கிபிர் தாக்குதலில் தப்பிக்க நிலத்தில் நிலை எடுக்கிறார்கள். பல குண்டுகள் அந்த பிரதேசம் எங்கும் கிபிரால் விதைக்கப்பட்ட போது, இந்துக் குருவின் வீட்டுப்பக்கத்தில் இருந்தும் பெரும் புகைமண்டலம் எழுந்தது. அப்போது அவர்களின் மனதில் அந்த மதகுரு வந்து போனார். அவரின் வீட்டை நோக்கி ஓடிய போராளிகள் காலை வரை தமக்கு உணவளித்து தம் தந்தையாக நின்று தம்மை பராமரித்த அந்த மதக்குரு உடல் உயிரற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு மனமுடைந்தார்கள். அவரை தூக்கினார்கள் உயிரற்ற வெற்றுடலை துப்பரவு செய்தார்கள். அப்போது அந்த பெரியவரின் மனைவி ஓடி வருகிறார். கதறி அழுதார். போராளிகளை பராமரிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு தேவையான உணவுகளை சமைத்து குடுக்க வேணும் என்றுதான் அவர் அவர்களுடன் செல்லாது இங்கே தங்கி இருந்ததை எண்ணி மனம் வருந்தினார்கள் போராளிகள். ஆனாலும் தளரவில்லை குடாரப்பில் வீரச்சாவடைந்த போராளிகளோடு இன்றும் அவரை நினைத்துக் கொண்டு பயணிக்கிறார்கள்… கவிமகன்.இ
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 10 எதிரியின் கட்டுப்பாட்டுக்குள் காயத்துடன் 3 மாதங்களுக்கு மேல் வாழ்ந்த மலரவன் எதிரியின் கட்டுப்பாட்டுக்குள், இடுப்பளவு நீருக்கு மேல் கட்டப்பட்ட பறணில் முதுகு காயத்துடன் 3 மாதங்களுக்கு மேல் வாழ்ந்த மலரவன் பகிரப்படாமல் இருக்கும் பல்லாயிரம் வீரங்களும் தியாகங்களும் இந்த பகிரப்படாத பக்கங்களினூடாக ஒவ்வொன்றாக பகிரப்பட்டு வரும் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும் எம் தியாக வேங்கைகள் எங்கள் மனங்களில் உயிர்வாழ்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்நிலையில் வெளித் தெரியாமல் தேச வரலாற்றுப் பக்கங்களை நிரப்பி நிற்கும் தமிழீழ மருத்துவத் துறை நீண்ட பெரும் தியாகங்களைக் கொண்டது. யாழ் மாவட்டம் அப்போது அங்குலம் அங்குலமாக தீவிர தேடுதல்களுக்கு உள்ளாகும் எம் தாயக நிலம். கிட்டத்தட்ட 40000 படைகளை குவித்து வைத்து வெறும் 100 பேரளவிலான விடுதலைப்புலிகளின் தொல்லை தரும் கெரில்லாத் தாக்குதல்களை எதிர்கொள்ள திணறிய காலம். “யாழ்செல்லும் படையணி” என்ற உள் நடவடிக்கை படையணிப் போராளிகளின் அதிரடித் தாக்குதல்கள் யாழ்ப்பாண மாவட்டம் எங்கும் பரந்து விரிந்து கிடந்தது. அதனால் கைதுகளும் காணாமல் போதலும் அதிகரித்திருந்த காலம். அதனால் அந்த நாட்களை எம் போராளிகள் கடப்பது என்பது சாதாரணமானதல்ல. அவ்வாறான திகில் தரும் நாட்களை சில பத்து போராளிகள் சிறு அணிகளாக கடந்து கொண்டிருந்தனர். அவர்களோடு யாழ்ப்பாண நடவடிக்கைகளுக்கான நடவடிக்கை மருத்துவர்களாக மூன்று மூத்த மருத்துவர்கள் தென்மராட்சி, வடமராட்சி பிரதேசங்களின் எல்லைக் கிராமமான கப்பூது, முள்ளி போன்ற இடங்களை சூழ்ந்த கண்டல் பற்றைகளுக்குள் நிலை எடுத்து இருந்தார்கள். அவர்களின் தங்குமிடம். எப்போதும் வல்லையில் இருந்து ஆனையிறவு வரை நீண்டு செல்லும் சிறு கடல்நீரேரியால் சூழ்ந்த இடம். எப்பொழுதும் நீர் ஓடிக் கொண்டிருக்கும் அந்த கண்டல் காடு தான் அப்போது பாதுகாப்பானதாக விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணிகளால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. நீருக்கு மேலே வளர்ந்து நிற்கும் கண்டல் பற்றைகளில் மறைப்பில் நீண்ட தடிகளினால் பறண்கள் அமைத்து அதன் மேலே அவர்கள் வாழ்ந்தார்கள். அந்த பறன் தான் அவர்களின் மறைவிடம், தங்குமிடம், மருத்துவ அறை, உணவகம், சத்திரசிகிச்சை அறை. எந்த நாட்டிலும் இல்லாத இராணுவ மருத்துவர்கள் எம் போராளிகள். அவர்களுக்கு சத்திரசிகிச்சைக்கு வசதிகள் தேவையில்லை. வாழ்வதற்கு குளிரூட்டப்பட்ட வீடுகள் தேவையில்லை. தினமும் அழுத்தி மடிக்கப்பட்ட சீருடைகள் தேவையில்லை. அவர்களுக்கு வேண்டப்பட்டதெல்லாம் ஒன்று தான் தமது மருத்துவப் பொருட்களை பாதுகாக்க, காயப்பட்டவர்களை பராமரிக்க ஒரு பாதுகாப்பான இடம். அதை அவர்கள் சரியாக தெரிவு செய்திருந்தார்கள். ஒரு மரபு வழி இராணுவ படையின் மூத்த இராணுவ மருத்துவர்களாக இருந்தும். தள மருத்துவமனைகளில் மட்டும் சத்திரசிகிச்சைகள் அல்லது மருத்துவ பணி என்றில்லாமல், கள மருத்துவ போராளிகள் போலவே இவர்கள் வாழ்ந்தார்கள். அங்கே அமைக்கப்பட்டிருந்த பரண்களே அவர்களின் சத்திரசிகிச்சைக் கூடம். இவ்வாறான வாழ்க்கையில் அவர்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த இந்த கண்டல் பற்றைக் காடுகளின் தெரிவில் பல காரணங்கள் இருந்தாலும், இரண்டு முக்கிய காரணங்கள் குறிக்கப்பட்டன. 1). தண்ணீர் இடுப்பளவிற்கு மேல் ஓடுவதால் அதற்குள் விடுதலைப்புலிகள் தங்கி நிற்க வாய்ப்பில்லை என்று சிங்களம் கருதும். அதனால் அந்த இடத்தில் சிங்கள இராணுவம் கவனம் கொள்ளாது. 2). ஒருவேளை எதிரி இனங்கண்டு தாக்க வந்தால் கூட நீரில் அவனின் நகர்வுகளை எம்மவர்கள் இலகுவில் அடையாளம் கண்டு தப்பிக்க முடியும். இவ்விரண்டு விடயங்களும் ஆபத்து நிறைந்தவை எனிலும் அப்போதைய யாழ்ப்பாணச் சூழலில் அதுவே சிறந்த தெரிவாக இருந்தது. அங்கே தங்கி நின்ற மருத்துவ அணி யாழ்ப்பாணத்தில் நடவடிக்கையில் நின்ற அனைத்து போராளிகளையும் காயங்களில் இருந்தும் வீரச்சாவில் இருந்தும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை சுமந்து நின்றனர். வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளில் காயப்படும் போராளிகள் இவர்களிடம் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டு மீள்உயிர்ப்பித்தல் செய்யப்பட்டே வன்னிக்கு அனுப்பப்படுவார்கள். இவ்வாறாக காயப்பட்ட ஒரு போராளி யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னியின் இராணுவ மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் வரை அவர்களின் உயிர்காத்தல் நடவடிக்கைகளை அங்கே கடமையில் இருந்த இராணுவ மருத்துவர்களான திரு மலரவன், திரு முரளி, திரு அமுது, கப்டன் அன்பானந்தன் ( பின்னொரு நாளிள் வலிகாமம் பகுதியில் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு) ஆகிய நான்கு மருத்துவர்களுமே செய்ய வேண்டி இருந்தது. இவர்களோடு மருத்துவ நிர்வாகப் பொறுப்பாளர் மாவியும் அங்கே நின்றார். மருந்துப் பொருட்களை பாதுகாக்க பெரும் பிரச்சனைகள் எழுந்தன. ஒரே இடத்தில் வைக்க முடியாது. எதோ ஒரு இடம் எதிரியால் இனங்காணப்பட்டால் அத்தனை மருந்துகளும் கிடைக்காமல் போய்விடும் அதனால் 10 பரல்களில் (Log tubes ) மருத்துவ பொருட்களை பாதுகாப்பாக அடைத்து மூன்று இடங்களில் அவற்றை தாட்டார்கள். தாட்டு அதன் புவிநிலையைக் GPS (Global Position System ) குறித்துக் கொள்வார்கள். ஒரு தொகுதி பிடிபட்டாலும் ஏனையவை தப்பிக்கும் என்ற நம்பிக்கை. அல்லது ஓரிடத்தில் இருந்து பாதுகாப்பு கருதி மாறும் போது பயன்பாட்டுக்கு மற்றவற்றை பயன்படுத்த முடியும். இதில் ஏற்பு வலி தடுப்பூசிகளை (ATT – Anti Tetanus Toxoid ) பாதுகாப்பது என்பது பெரும் பிரச்சனையாக இருந்தது. அதற்கு குளிரூட்டி தேவைப்பட்டது. அதனால் வன்னியில் இருந்து கொண்டு வந்து பயன்படுத்துவது சாத்தியமற்று போனது. அதன் காரணமாக அவற்றை அங்கே வாழ்ந்த எம் மக்களின் உதவியோடு மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், தாதிகளினூடாக அவற்றை பெறுவதற்கு திட்டமிடப்பட்டது. அவர்களூடகவே அவை பெறப்பட்டன. அவற்றை மக்கள் மனமுவந்து போராளிகளுக்கு கொடுத்துதவினார்கள். அவற்றை வழங்குவதால் இராணுவத்திடமிருந்து கிடைக்க போகும் ஆபத்துக்களை எல்லாம் அவர்கள் சிந்திக்கவில்லை. அவர்களின் உதவிகளூடாக பெறப்பட்ட மருத்துவப் பொருட்களையும் கொண்டு ஒரு பெரும் சாதனையையே செய்தார்கள் மருத்துவப் போராளிகள். இவர்களின் வீரம்மிகு செயல்களால் தாக்குதல் அணியில் இருந்த போராளிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த நேரங்களில் எதிரியை திணறடிக்கும் பல முனைக் கெரில்லாத் தாக்குதல்களை போராளிகள் செய்து கொண்டிருந்தனர். எங்காவது இலக்கு கிடைக்கும் என்று வேவுக்காக அலைவதும், கிடைக்கும் இலக்குகளை வீணாக்காது அழிப்பதும், தப்பி ஓடுவதும் என யாழ்ப்பாணத்தை விடுதலைப்புலிகளின் படையணிகள் திணறவைத்துக் கொண்டிருந்தன. இதில், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என நான்கு சண்டை வலையங்களாக பிரிக்கப்பட்டு தனித்தனி தளபதிகளும் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர். அப்போது தென்மராட்சி கோட்டத் தாக்குதல் அணித் தளபதியாக திரு வீமன் அவர்கள் இருந்தார். அவரோடு நடவடிக்கை பொறுப்பாளராக திரு கோகுலன் அவர்கள் இருந்தார். ( சாள்ஸ் அன்டனி படையணியின் தளபதிகளில் ஒருவரும், குடாரப்பு தரையிறக்க வெற்றியின் மிக முக்கிய வேவுப் போராளியாக செயற்பட்டு அந்த வரலாறு காணாத வெற்றி சமரின் ஆணிவேர்களில் ஒருவராக விளங்கியவர். ) இவர்களின் பிரதேச அறிவும் மதிநுட்பமான திட்டமிடலும் தென்மராட்சியில் தங்கியிருந்த இராணுவத்தை திணறடித்துக் கொண்டிருந்தது. இவ்வாறான ஒரு நாளில் தான். வடமராட்சிக்கு செல்ல வேண்டிய தாக்குதல் அணி ஒன்று பூநகரி ஊடாக தென்மராட்சிக்கு வந்திருந்தது. அந்த அணியை நகர்த்துவதில் பெரும் இடர்கள் வந்தன. அதனால் சுட்டிபுரம் அம்மன் கோவிலுக்கு அருகில் இருந்த ஒரு எல்லை காவலரன் தொகுதியை தாக்க வேண்டிய தேவை எழுந்தது. திரு கோகுலனின் தலமையிலான வேவு அணி அதற்கான வேவை எடுத்து சண்டைக்கான திட்டத்தை போடுகிறார்கள். தென்மராட்சியில் தாக்குதலுக்காக தளபதி வீமனின் கட்டளைக்குள் செயற்பட்டுக் கொண்டிருந்த தாக்குதல் அணி தயாராகியது. அந்த தாக்குதல் அணியில் ஒருவராக மலரவனும் செல்கிறார். தாக்குதல் போராளிகளால் தொடங்கப்பட்ட போது காவலரனில் இருந்த இராணுவத்தினர் எதிர்த் தாக்குதலை தொடுத்தனர். அப்போது 15 போராளிகள் விழுப்புண் (காயம்) அடைகிறார்கள். அதில் இரண்டு வயிற்றுக் காயம் மற்றவை வேறு வேறு காயங்கள். அக் காயப்பட்ட போராளிகளில் மருத்துவர் மலரவனும் ஒருவர். மலரவன் முதுகுப் பக்கத்தின் தோழ் மூட்டு (Back side shoulder ) பகுதியில் காயமடைந்திருந்தார். இராணுவம் சுட்ட ரவை ஒன்று பெரும் காயத்தை உண்டு பண்ணி இருந்தது. குருதி பெருக்கெடுத்த நிலையில் மலரவனும் ஏனைய காயமடைந்த போராளிகளும் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து மறைவிடத்துக்கு தாக்குதல் அணியினரால் நகர்த்தப்படுகிறார். காயப்பட்ட போராளிகள் அனைவரையும் அந்த கண்டல் காட்டுக்குள் நகர்த்தி பாதுகாப்பது என்பது சாதாரணமானதல்ல. ஆனால் அசாதரமாணதைக் கூட சாதாரணமாக செய்து முடிக்கும் எம் போராளிகள் அதையும் செய்தார்கள். இரண்டு மருத்துவர்கள் மட்டும் அத்தனை போராளிகளுக்கும் சிகிச்சை அளிப்பது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் முதலில் வயிற்றுக் காயத்தை திறந்து சிகிச்சை செய்தார்கள் அமுது மற்றும் முரளி ஆகிய இராணுவ மருத்துவர்கள். கண்முன்னே மயக்க நிலையில் போராளிகள் இருக்கும் போது இராணுவம் இவர்களைத் தாக்கினால் தப்பிக்க வழி இல்லை என்ற பெரும் பிரச்சனை ஒன்று எழுந்தாலும், காயப்பட்ட அத்தனைபேருக்கும் சிகிச்சை கொடுத்து காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை. கிடைத்த மருத்துவ வசதிகளைக் கொண்டு சிகிச்சை தரப்படுகிறது. அந்த பிரதேசத்தில் முழுமையாக பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. திடீர் தாக்குதல் நடந்தால் சமாளிக்கும் வகையில் போராளிகள் தயாராக நின்றார்கள். காயப்பட்டிருந்த மருத்துவர் மலரவனால் மற்ற இரு மருத்துவர்களும் சிகிச்சை அளிப்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. தானும் மற்றைய போராளிகளுக்கு சிகிச்சை அளிக்க தொடங்குகிறார். குருதி தடுப்புக்கு கட்டப்பட்டிருந்த குருதி தடுப்பு பஞ்சை மீறி அவரது காயத்தில் இருந்து குருதி வெளியேறுகிறது. மருத்துவர் முரளியும் அமுதுவும் மலரவனை தடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்க முயல்கிறார்கள். ஆனால் மலரவன் மறுக்கிறார். முதலில் அவசர சிகிச்சைக்குரிய போராளிகளின் காயங்களுக்கான சிகிச்சையை மற்றவர்களுடன் இணைந்து வழங்குகிறார். அவரது காயம் பெரும் வலியைத் தந்தாலும் அதை பொருட்படுத்தாது ஏனைய 14 போராளிகளுக்கும் சிகிச்சை வழங்கிய பின்னே தனக்கான சிகிச்சை வழங்க அனுமதிக்கிறார். முறையான சிகிச்சை வழங்கவில்லை எனில் மலரவனை நாம் இழக்க வேண்டி வரும் என்ற உண்மை அங்கு நின்றவர்களால் புரியப்பட்டது. அதாவது காயத்தை பிரித்து சுத்தம் செய்து மருந்திடுவது (Wound Toilet ) அதனால் மருத்துவர் முரளியும் அமுதுவும் மலரவனுக்கான சிகிச்சையை கண்டல் காட்டுப் பரண்களில் வைத்து செய்கிறார்கள். முதுகு காயம் பலமானதாக இருந்தது. மயக்க மருந்து (General Anesthesia /அனஸ்தீசியா) கொடுக்கப்படுகிறது. காயம் தாங்க முடியாத வேதனையை தந்தது. ஆனாலும் மலரவன் மயக்கநிலையில் இருந்து மீண்டு வந்தும் அந்த வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்டார். காயப்பட்ட இடத்தில் ஒவ்வொரு கலன்களும் பிய்ந்து தொங்கின. அவற்றை எல்லாம் சிகிச்சை மூலம் சீரப்படுத்த முனைந்தார்கள் மருத்துவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான ஒரு போராளியாக இருந்த மலரவனை நிட்சயமாக இழக்க முடியாது. தமிழீழ மருத்துவக் கல்லூரியின் முதல்நிலை மாணவனாக இருந்து, தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த இராணுவ மருத்துவனாக இருக்கும் அவரை இழப்பது பல போராளிகளை இழப்பதற்கு ஒப்பானது என்பதை அங்கு நின்ற மற்ற மருத்துவர்களும் மருத்துவ அணிக்கு பொறுப்பாக நின்ற மாவியும் புரிந்து கொண்டார்கள். தளபதி வீமன் உடனடியாக அவரை இரகசிய பாதையூடாக பூநகரிக்கு அனுப்பி அங்கிருந்து சரியான மருத்துவத்தை கொடுக்க ஏற்பாடு செய்தார். யாழ்செல்லும் படையணியின் கட்டளைச் செயலகம் உடனடியாக மலரவனை வன்னிக்கு நகர்த்துமாறு கட்டளை அனுப்புகிறது. காயப்பட்ட மற்ற போராளிகளுடன் அவரையும் வருமாறு கூறப்படுகிறது. ஆனால் மலரவன் வன்னிக்கு போக மறுக்கிறார். யாழ்ப்பாணத்தில் தனது தேவை இருக்கும் நிலமையை புரிந்து கொண்டார். தான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளி வர முடியாது என்று திடமாக அறிவித்தார். யாழில் நடவடிக்கையில் நிற்கும் பல நூறு போராளிகளை விட்டு என்னால் வன்னிக்கு வர முடியாது. அவர்களின் மருத்துவ நம்பிக்கையை என்னால் உடைத்தெறிய முடியாது. எனது காயம் எனக்கு பெரும் பாதிப்பைத் தரப்போவதல்ல. என் காயத்தை நான் இங்கிருந்தே மாற்றிக் கொள்ளலாம். அதற்கான வசதிகள் போதிய அளவு எம்மிடம் இருக்கிறது என்று கூறி மறுக்கிறார். போராளிகளின் மருத்துவ நம்பிக்கை தளர்ந்தால் யாழ்ப்பாணத்துக்கான நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அவர்கள் காயப்பட்டாலும் மலரவன் டொக்டரோட மூன்று மருத்துவர்கள் நிக்கினம் எங்கள காப்பாத்துவினம் என்ற எண்ணம் போராளிகளிடம் இருக்கும் என்றே அவர் நம்பினார். அப்பிடி இருக்கும் போது தான் இந்தக் காயத்தை சுட்டிக்காட்டி வன்னிக்கு பாதுகாப்பாக சென்றால் அவர்கள் மனதளவில் சிறு நம்பிக்கையீனம் தோன்றாலாம். காயப்பட்டாலும் மீண்டும் எதிரியோடு சண்டை போட தயாராகலாம் என்ற நம்பிக்கை இல்லாது போய்விடும் காயப்படுபவர்கள் குப்பியோ அல்லது குண்டையோ பயன்படுத்தி உயிரிழக்கும் அபாயம் தோன்றும் என்றெல்லாம் அவர் சிந்தித்தார். சிறு காயங்கள் என்றாலும் பாதுகாப்பாக மருத்துவமனையில் பதுங்கும் இராணுவத்தை கொண்டவர்கள் அல்ல விடுதலைப்புலிகள். அஞ்சாத வீரமும், அடங்காத மண்பற்றும் கொண்ட பெரும் வேங்கைகள் இவர்கள். இவர்களை இந்தக் காயங்கள் ஒன்றும் சண்டைக் களத்தில் இருந்து வெளியில் கொண்டு போகாது. இது பல ஆயிரம் போராளிகளின் சான்று. இன்றும் மலரவனாலும் நியமாக்கப்பட்டது. அவரால் நிமிர்ந்து படுக்க முடியாது. ஒற்றைப் பக்கமே சரிந்து உறங்க முடியும். மறுபக்கமும் திரும்ப முடியாது. அதுவும் பஞ்சு மெத்தையில் அவர் உறங்கவில்லை. குறுக்கே கட்டப்பட்டிருக்கும் கட்டைகள் அவர் உடலில் வேதனையை உண்டாக்கும். ஆனால் அதை பெரிது படுத்துவதில்லை. எப்பவோ ஒரு நாள் கிடைக்கும் உறக்கத்தையும் காயத்தின் வலி குழப்பும் ஆனால் அவர் தளர்ந்து போகவில்லை. காயம் தாங்க முடியாத வலியை தரும் போதெல்லாம் அதற்கு வலிநிவாரணியாக Brufen / Voltaren மாத்திரைகளில் ஏதோ ஒன்றை கூட போட முடியாது. அந்த மாத்திரைகள் வலியை தற்காலிகமாக குறைக்கும் அதே வேளை நித்திரையை உருவாக்கும் அதனால் அதை பாவிப்பவர் சரியான உறக்க நிலைக்கு சென்று விடுவார். அவ்வாறு மலரவனும் உறக்க நிலைக்கு போனால், திடீர் என்று அவர்களின் மறைவிடம் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டால்? நிலை என்ன? என்ற வினா எழும். அதற்கு பதிலாக வீரச்சாவு அல்லது கைது என்று பதில் வரும். தப்பிப்பது கடினம். அதற்காக வலிநிவாரணி மாத்திரைகளை கூட மலரவன் பாவிப்பதை பெரும்பாலும் தவிர்த்தார். அதே வேளை அந்த மாத்திரைகள் போட்ட உடன் வயிற்றில் எரிவு ஏற்படும். (குடற்புண் (Ulcer ) வந்தால் ஏற்படும் எரிவை போன்றது.) அந்த வேளைகளில் நல்ல உணவும் தண்ணீரும் குண்ண வேண்டும். ஆனால் அவர்களுக்கு உணவு கிடைப்பது அருமை. அதனால் காயத்தில் இருந்து எழும் பயங்கர வலியை தாங்கிக் கொண்டார். கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேலாக அந்த காயம் ஆறாது இருந்தது. அத்தனை நாட்களும், ஏனைய போராளிகள் தாக்குதல்களுக்காகவோ அல்லது வேவுக்காகவோ அல்லது காயப்பட்ட போராளிகளின் மருத்துவத் தேவைக்காகவோ மறைவிடம் விட்டு வெளியில் சென்றால், தன்னந்தனியாக இரவு பகல் என்ற பேதம் இன்றி துப்பாக்கியை கையில் பிடித்துக் கொண்டு காவல் காப்பார் மலரவன். சில வேளைகளில் போனவர்கள் மீள வர மூன்று நாள் கூட ஆகும். அவ்வாறான நேரத்தில் தூக்கமோ அல்லது பசிக்கு உணவோ கிடைக்காது. 2 அல்லது 3 வெறும் பிஸ்கட் ( Biscuit) ஐ மட்டும் சாப்பிடுவார். துப்பாக்கியை இறுக பற்றிக் கொண்டு காத்திருப்பார் மலரவன். இழந்த இரத்தத்தை நிரப்ப மீள் இரத்தமேற்றலோ, அல்லது உடலில் உருவாக ஒழுங்கான உணவோ, தண்ணியோ, ஓய்வோ கிடைக்காத போதிலும் மலரவன் சோர்ந்ததில்லை. இந்த இடத்தில் முக்கியமாக எம் மக்களை நினைவு கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த கண்டல் பற்றைகளுக்குள் வாழும் எம் போராளிகளுக்கு மட்டுமல்ல இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் வாழும் போராளிகள் அனைவருக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு அரண்கள் எம் மக்களே. உணவு வழங்கல் தொடக்கம் அவர்களுக்கு இராணுவம் தொடர்பான வேவாளர்களாகவும் போராளிகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றுனர்களாகவும் அவர்களே இருந்தார்கள். பல துரோகிகள் எம்மினத்தில் கலந்திருந்தாலும் அவர்களின் கண்களில் மண்ணைத்தூவி போராளிகளை மக்கள் காத்தார்கள். அவ்வாறே மலரவனையும் மக்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உணவு வழங்கி பாதுகாத்தார்கள். இவ்வாறான நிலையில் போராளிகளுக்கு வேறு ஒரு பிரச்சனையும் எழுந்தது. அதாவது உணவு மற்றும் மருத்துவ பொருட்களின் கழிவுப் பொருட்களை ( Packet, Plastic Bags, Syringe, Syringe Needles and ect… ) அகற்றுவது பெரும் பிரச்சனையாக இருந்தது. ஏனெனில் கீழே பாய்ந்து கொண்டிருக்கும் தண்ணீரில் அவை மிதந்து போய் எங்கோ ஒரு கரையில் ஒதுங்கும் போது நிட்சயமாக எதிரிக்கு பெரும் தடையம் கிடைக்கும். அதனூடாக அவன் இவர்களின் மறைவிடத்தை இனங்காணக் கூடும். அதனால் அனைத்தையும் சேர்த்து வைத்து மக்களின் குப்பைக் கிடங்குகளில் கொட்டுவது வழமை. சிறு உணவுத் தடையம் கூட மறைவிடத்தை காட்டிக் குடுக்கும் வல்லமை பொருந்தியது. அதனால் உணவுக்காக பயன்படுத்தப்படும் பிஸ்கட் பைகளைக் கூட கவனமாக சேகரித்து பாதுகாத்து வைப்பார்கள் இவர்கள். பின் வெளியே உணவுக்காக அல்லது தாக்குதலுக்காக என்று செல்லும் போது அவற்றை மக்களின் குப்பைக் குவியல்கள் அல்லது கிடங்குகளில் மேலே எறியாது கிளறிவிட்டுத் தாட்டு விடுவார்கள். அது கண்ணுக்குள் எண்ணையை விட்டு காத்திருக்கும் புலனாய்வாளர்களையும் சிங்களப் படைகளையும் ஏமாற்றி மக்களின் கழிவுப் பொருளாகவே அதற்குள் இத்துப் போய்விடும். காயங்களில் தண்ணீர் பட்டால் காயம் ஆறுவது கடினம் என்பார்கள். அதை எல்லாம் பொய்ப்பித்தவர் மலரவன். இடுப்பளவு தண்ணீருக்கு மேல் கட்டப்பட்டிருந்த பரணில் மூன்று மாதங்களுக்கு மேலே முதுகில் ஏற்பட்ட பாரிய காயத்தோடு வாழ்ந்த போராளி. அதை விட மழை பெய்தால் அவர்கள் ஒதுங்குவதற்கு ஒரு கூரை கிடையாது. வெறும் மழை அங்கியை போட்டுக் கொண்டு அல்லது அதை கூடாரமாக்கி அதற்குள் வாழ்ந்தார்கள். அவ்வாறு வாழ்ந்தும் காயம் கொஞ்சம் ஆறிய போது, காயப்பட்டு வந்த போராளிகளுக்கான மருத்துவத்தை தானும் செய்தார். மற்ற மருத்துவர்கள் தடுத்தாலும் தன்னால் முடிந்தவற்றை அவரும் செய்யத் தொடங்கினார். எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை அருந்தும் மலரவன் தேடலையும் கற்றலையும் கைவிட்டதில்லை. மறைவு வாழ்க்கையில் ஓய்வு என்பது கிடைக்காத ஒன்று. இருந்த போதிலும் ஒருபுறம் எதற்கும் தயாராக இருக்கும் அவர், மடியில் துப்பாக்கியை தயாராக வைத்துக் கொண்டு கையில் புத்தகங்களை வைத்து படிப்பார். மருத்துவம் தொடர்பான புத்தகங்களை எப்படியோ பெற்றுக் கொண்டு அதை படிப்பார். வலி ஒருபுறம் அவரை வேதனைப்படுத்தும் அதே வேளை, அதை பொருட்டாக கொள்ளாது தான் மருத்துவத்துறையில் இன்னும் பல வேலைகளை செய்ய வேண்டும் என்ற ஆவலோடு எதிரி எப்பொழுதென்றாலும் தாக்கலாம் என்ற அபாயத்தையும் தாண்டி புத்தகங்களை படிப்பார். அதோடு மீண்டும் வேவுகள், தாக்குதல்கள் என யாழ்ப்பாணத்தில் நீண்ட காலங்களை இந்த பரண்களிலால் ஆன நீர் நிலை வாழ்விடங்களில் வாழ்ந்தார். இவ்வாறு பல நூறு பகிரப்படாத பக்கங்களை தன் வாழ்க்கையில் கொண்ட இராணுவ மருத்துவர் திரு மலரவன் தனது வாழ்க்கைத் துணையான யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியும் விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவருமான திருமதி பிரியவதனா வுடன் 2009 ஆம் ஆண்டு வைகாசி 17 வரை தமிழீழ விடியலுக்காக மருத்துவப் பைகளோடு திரிந்ததை மறுக்கவோ மறக்கவோ முடியாது… இப்போது அவரும் மனைவியும்…. எம் மனங்களில் பலநூறு கேள்விகளை உருவாக்கி விட்டு சென்று விட்டார்கள்… கவிமகன்.இ 15.01.2018 https://eelamaravar.wordpress.com/2019/06/23/ltte-history-malaravan/
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் -09 சுனாமியின் தாக்கமும் விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர்களும் ! 2004 மார்கழி மாதத்தின் 25 ஆம் நாள் இரவு தனது இருட்டைத் தொலைத்து சூரிய ஒளியால் ஒளிரத் தொடங்கிய அதிகாலை நேரம். பல ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் நிறைந்து கிடக்கிறது. எம் வாழ்வுக்கு ஒளி காட்ட பாலன் பிறந்துவிட்டான் என்று எம் ஊர்கள் மட்டுமல்ல உலகமே மகிழ்வில் திளைத்துக் கொண்டிருந்தது. தேவாலையங்கள் எங்கும் மங்களம் பொங்கும் நிகழ்வுகள், பூஜைகள் நடந்து ஜேசு பாலன் பிறப்பை கொண்டாடி மகிழ்ந்தது. அந்த நேரம் தான் இந்தனோசியா கடலடியில் ஏற்பட்ட பூமித் தட்டுக்களின் உரசல் பூமிப்பந்தையே உலுக்கி இந்து மகா சமுத்திர நீரையே விழுங்கிக் கொள்கிறது. அதிகாலை 2004.12.26 அன்று இலங்கை நேரம் அதிகாலை 6.28 மணியளவில் விழுங்கிய நீரை பூமித்தகடுகள் துப்பிவிட மேலெழுந்த நீர் பெரும் அலைகளாகி சுனாமி என்ற சொல்லை எம் தேசத்துக்கு அறிமுகப்படுத்துகிறது. கிட்டத்தட்ட அதிகாலை 9.00 -9.15 ( இலங்கை நேரம்) இடைப்பட்ட காலத்தில் நத்தார் கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் கடற்கரை நீர் உள் இழுக்கப்படுவதை கண்டு என்ன என்று அறிய முன் கடலில் பாரிய அலை ஒன்று கரை நோக்கி வருவதை கண்டு திகைத்து நின்றார்கள். இலங்கையின் கீழ்நில கடற்கரைப் பகுதிகள் யாவும் சுனாமி அலைகளால் தாக்கப்பட்டு பாரிய சேதம் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 30000 மக்கள் இயற்கையின் சீற்றத்தால் உயிரிழந்து, பல ஆயிரம் மக்கள் காயமடைந்து, பல கோடி உடமைகளை இழந்து போன அந்த நொடி இன்றும் இரத்தவாடையோடு நகர்கிறது. எம்மினத்தை மட்டுமல்லாது பல்லின மக்களையும் ஏதுமற்ற ஏதிலிகளாக்கிய சுனாமி சிறிய இடைவெளியில் மீண்டும் ஒரு முறை தாக்கி விட்டு சென்ற போது மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். கடல் அலையால் தூக்கி எறியப்பட்டவர்கள் கையில் கிடைத்தவற்றை பிடித்து கொண்டு தம்மை காத்து கொண்டார்கள். பனை தென்னை என்றும் மரங்களின் கொப்புகளிலும் பிடித்துக்கொண்டு காத்து கொண்டவர்கள் பயங்கர காயங்களாலும் பாதிக்கப்பட்டார்கள். இது உடனடியாக அறியாத தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ அணி ஒன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஒரு மருத்துவ கற்கைநெறிக்காக தங்கி நின்றது. அவர்களுக்கு செய்தி கிடைத்த போது உடனடியாக அந்த அணியில் இருந்த காந்தன், வளர்பிறை, தமிழ்நேசன், சத்தியா, வாமன், அமுதன், தூயவன், தணிகை ஜோன்சன் ,தமிழினியன் போன்ற இறுதி வருட தமிழீழ மருத்துவக்கல்லூரியின் மாணவர்களான இராணுவ மருத்துவர்கள் வன்னிக்கு செல்கிறார்கள். அங்கே என்ன செய்ய வேண்டும்? எங்கே செய்ய வேண்டும்? என்பன பற்றி விளக்கப்பட்டு அனைத்து மருத்துவப்பிரிவு போராளிகளும் மருத்துவ உதவிகள் அற்று இருக்கும் பிரதேசங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். சுகாதாரப்பிரிவு பணிப்பாளர் மருத்துவக்கலாநிதி சுஜந்தன் இதற்கான உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். அவரோடு மருத்துவக்கலாநிதி விக்கினேஸ்வரனும் இருந்தார். பணிப்பாளரின் உத்தரவை தொடர்ந்து அவசர உதவி அணியாக வெளிக்கிட்ட மருத்துவ அணி எந்த முன் ஆயுத்தங்களும் (தங்குமிடம், உணவு ) இன்றி சிறியளவு மருந்து பொருட்களோடு உடனடியாக மட்டக்களப்பை நோக்கி நகர்கிறார்கள். அந்த அணி இராணுவமருத்துவர்களை தாங்கிய வாகனம் மட்டக்களப்பின் “தேனகம்” முகாமுக்கு வந்து சேர்கிறது. அங்கே மட்டு, அம்மாறை சிறப்புத் தளபதியாக இருந்த ராம் மருத்துவ அணியை வரவேற்று மருத்துவர்களுக்கான சில அறிவுறுத்தல்களை வழங்கி ஓர் அணியை அம்பாறை நோக்கி கொண்டு செல்கிறார். அனுப்பப்பட்ட மருத்துவ அணி நேரடியாக அம்பாறைக்கு போவதில் பல சிரமங்களை எதிர் நோக்க வேண்டி வந்தது. வாகனம் அம்பாறை நோக்கி பயணிக்கிறது அப்போது முதல் தடையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வருகிறது. மட்டக்களப்பில் இருந்து அம்பாறை நோக்கி செல்லும் வழியில் அமைந்திருந்த பெரிய பாலமான ஒந்தாச்சிமடப் பாலம் சுனாமி தாக்கத்தால் முழுவதுமாக சிதைந்து போய் கிடக்கிறது. அதைக் கடந்தே செல்ல வேண்டும். ஆனால் அதன்கு எந்த வழியும் இல்லை. இந்த இடத்தில் இராணுவ மருத்துவர் வாமன் தென் தமிழீழத்தை சேர்ந்த போராளி என்பதால் பிரதேச அறிவு அவருக்கும் இருந்தது அதனால் அவர்களின் பயணப்பாதை இலகுவாக இனங்காணக் கூடியதாக இருந்தது. வேறு பாதையான வெல்லாவெளி, நாவிதன்வெளி, சவளைக்கடை ஊடாக அம்பாறையின் மேற்குப்பகுதி ஊடாக பயணிக்கிறார்கள். ராம் அம்பாறையின் பிரதேச அறிவை கொண்டிருந்ததால் அவர் பாதை மாற்றி பயணிப்பதில் வெற்றி கண்டார். ஆனாலும் அங்கே வேறு ஒரு பிரச்சனை கண்முனே நின்றது. வெல்லாவெளியில் வைத்து விசேட அதிரடிப்படையின் (Special Task Force) ஒரு முகாமைத் தாண்டியே பயணிக்க வேண்டிய தேவை இருந்தது. 2004 ஆம் ஆண்டு காலம் சமாதான காலம் என்பது நியம் என்றாலும் விடுதலைப்புலிகளின் போராளிகளை அவர்கள் அப்போதும் எதிரியாகவே பார்த்தார்கள். அவ்வாறு பயணித்த போதும் விசேட அதிரடிப்படை (STF) அவர்களை உள்ளே அனுமதிக்காது தடுக்கிறார்கள். ஆனாலும் பல மணி நேரங்கள் கழிந்த நிலையில் சில பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மருத்துவ அணி உள்ளே அனுமதிக்கப் படுகிறது. உலகமே அதிர்ந்து கிடந்த இயற்கை சீற்றத்தில் கொடுமையாக பாதிக்கப்பட்ட மக்களை காக்க சென்ற மருத்துவ அணிக்கு முதல் தடை சிங்களத்தால் விழுந்தது. ஒரு மாதிரி அவற்றை சரியாக்கி சாகாமம் என்ற கிராமத்தை கடந்த போதும் மறு படியும் தடைகள் எழுந்து அதிரடிப்படையினர் போராளி மருத்துவர்களை மறிக்கிறார்கள். அதிலும் நீண்ட நேரங்கள் விவாதங்களின் பின் அனுமதிக்கப்பட்ட பின் சாகாமம் ஊடாக திருக்கோவில் என்ற இடத்தை அடைகிறார்கள் மருத்துவ அணியினர். அங்கே அவர்கள் தங்குவதற்கோ உண்பதற்கோ உறங்குவதற்கோ எதுவுமே இருக்கவில்லை. அவர்கள் போராளிகளல்லவா அதை பற்றிய எந்த சிந்தனையும் அவர்கள் மனதில் எழவில்லை. மக்களின் நிலையை அறிய முயல்கிறார்கள். அங்கு எதுவுமே இல்லை என்பது புரிகிறது. எந்த ஓசையும் இல்லாமல் மயான அமைதியாக இருக்கிறது. ஒரு உயிரினத்தின் மெல்லிய முனகல் கூட அற்று அந்த பிரதேசம் வெறுமையாய் கிடக்கிறது. இவ்வாறான நிலையில் அம்பாறை மாவட்ட தளபதி அவர்களை இறக்கி விட்டு மீண்டும் மட்டக்களப்புக்கு திரும்பி விட மருத்துவ அணி அங்கே தனித்துவிடப்படுகிறது. அவர்கள் போய் சென்ற நேரம் இரவு என்பதால் அவர்களால் உடனடியாக எதையும் ஒழுங்கு படுத்த முடியவில்லை. அப்போது தான் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் குணபாலன் இவர்களிடத்துக்கு வருகிறார். வந்தவுடன் தான் இவர்களுக்கான ஒரு வலு கிடைப்பதை மருத்துவ அணி உணர்கிறது. அப்போது விரிவுரையாளன் குணபாலன் இவர்களின் நிலை அறிந்து, சுனாமியால் பாதிக்கப்பட்டு இருந்த தனது வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அங்கும் எதுவும் இல்லை. அவர்களின் தேவையான உணவை ஒழுங்கு படுத்துவதற்காக தன்னோடு உதவிக்கு வந்த பல்கலைக்கழக மாணவனை அருகில் இருந்த விசேட அதிரடிப்படை முகாமுக்கு அனுப்புகிறார். அங்கே தளபதியாக இருந்த ரட்னாயக்கா என்பவர் ஊடாக இவர்களுக்கான உணவு உதவி கிடைக்கிறது. அதை விரும்பியோ, வெறுத்தோ உண்ண வேண்டிய சூழல் அவர்களுக்கு, ஏனெனில் கிளிநொச்சியில் இருந்து வெளிக்கிட்ட மருத்துவ அணி இங்கு வந்து சேரும் வரை எதையும் உணவாக உண்ணவில்லை. அவர்களுக்கு அந்த உணவு தேவைப்பட்டே இருந்தது. நாளையும் அதை தொடர்ந்து வரும் நாட்களும் உணவு கிடைக்குமா என்பது கேள்விக்குறி. அதனால் கிடைப்பதை உண்டு பசியாற வேண்டிய நிலை. அவர்கள் இராணுவத்தின் வெள்ளை அரிசி சோற்றையும் பருப்பையும் உண்கிறார்கள். ஆனால் எங்கும் தங்கி இருந்து ஓய்வெடுக்க முடியவில்லை. அதே நேரம் அங்கே வாழ்ந்து வந்த அம்பாறை தேர்தல் தொகுதியின் முந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரதேரு அந்த இடத்துக்கு வந்து சேர்கிறார். அதன் பின் தான் மக்கள் எங்கே தங்கி இருக்கிறார்கள்? எங்கெல்லாம் சுனாமிப்பேரலை தாக்கி இருக்கிறது என்ற தகவல்கள் முழுவதும் மருத்துவ அணிக்கு கிடைக்கிறது. எனவே ஓய்வு உறக்கமற்ற அவர்கள் அதிகாலையே மக்கள் வாழ்ந்த இடங்களுக்கு சென்றார்கள். திரும்பும் இடமெல்லாம் உயிரற்ற உடல்கள் நிறைந்து கிடந்தன. அவற்றை மீட்டு அடக்கம் செய்ய வேண்டிய தேவை எழுந்தது. அதற்கான பணிகளை ஆரம்பித்தது மருத்துவ அணி. சந்திரநேரு அவர்களிடம் தமக்கு தேவையான வாகனங்களை ஒழுங்கு படுத்தி தர வேண்டுகிறார்கள். அப்போது சந்திரநேரு அவர்களின் ஒருங்கிணைப்பில் உடனடி நடமாடும் மருத்துவ சேவை ஒன்றை ஆரம்பிக்க கூடியதாக தனது வாகனத்தை வழங்குகிறார். அதே நேரம் இந்த மருத்துவ அணியில் இருந்த இராணுவ மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பிரிவின் நிர்வாக போராளிகள் அவர்களுடன் வந்திருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளர் ஒருவரும் மாணவர்களும் இணைந்த அணி இறந்து போன மக்களின் உடலங்களை மீட்டு ஒரு மேட்டுப் பகுதில் ஒருங்கிணைக்கிறார்கள். பொத்துவில், அக்கரைப்பற்று, மாவடிவேம்பு, கல்முனை, தம்புலுவில், திருக்கோவில், பானமை ஆகிய கிராமங்களை நோக்கி தமது பணிகளை விரைவாக விரிவு படுத்துகிறார்கள். தமிழீழ காவல்துறை அங்கே இல்லாத காரணத்தால் உயிரற்ற உடலங்களை அடக்கம் ஏற்படும் சட்டச் சிக்கல்களை தவிர்ப்பதற்காக இலங்கை காவல்துறையின் உதவியோடு இறந்தவர்கள் புதைக்கப்படுகிறார்கள். இவர்களோடு அக்கரைப்பற்று மருத்துவ நிர்வாக பொறுப்பாளர் பாரதனும் நிற்கிறார். விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்று பறைதட்டிக் கொள்ளும் சிங்கள தேசம் மக்கள் மனிதநேயப் பணிக்காக வந்த போராளிகளை தடுத்து உள்ளே விட அனுமதிக்காது பிரச்சனைப்பட்ட போது அதில் இருந்து மீண்டு வந்த அந்த போராளிகள் அணி அம்பாறை மாவட்டத்தில் இன மத பேதமின்றி பணியாற்றிய வரலாறு இங்கு பதிவு செய்யப்பட்டதை அங்கே நின்ற விசேட அதிரடிப்படை உணர்ந்திருக்க கூடும். ஏனெனில் பொத்துவில் மற்றும் சின்ன உல்லை பெரிய உல்லை என்ற பிரதேசங்கள் முற்று முழுதாக முஸ்லீம் மக்களாலும், பாணமை என்ற பிரதேசம் முற்றுமுழுதாக சிங்களமக்களாலும் நிரம்பி இருந்த பிரதேசங்களாகும். அந்த இடத்தில் மருத்துவ அணி தமிழ் சிங்கள முஸ்லீம் என்ற எந்த பாகுபாட்டையும் பார்த்ததில்லை. சிங்கள மக்களையும் காப்பாற்றிட துடித்தார்கள் முஸ்லீம் மற்றும் தமிழ் மக்களையும் காத்தார்கள். ஆனால் சிங்களமோ தொடர் தடைகளை ஏற்படுத்தியே வந்தது. சாதாரணமாக ஒலிபெருக்கியில் எதாவது அறிவித்தல் செய்ய வேண்டி இருந்தால் கூட அங்கே உள்ள இராணுவ அதிகாரிக்கு என்ன விடயம் அறிவிக்கப் போகிறோம் என்பதை எழுத்து வடிவில் கொடுத்து அனுமதி பெற வேண்டிய நிலையில் தான் மருத்துவ அணி இருந்தது. சுனாமி அடித்து மக்கள் சாவடைந்த பொழுது விசேட அதிரடிப்படையினரும் மக்களைக் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட போதிலும் மனித நேய பணிகளுக்காக வந்திருந்த போராளிகள் மீது அடக்குமுறைகளை பிரயோகிப்பதை வழமையாக்கி இருந்தார்கள். இந்த நிலையில் தான் அதிகமான மருந்துகள் மருத்துவப் பொருட்கள் என்பவற்றின் தேவையும் அவசர ஊர்திகளின் தேவையும் அந்த காலத்தில் இறுதியாண்டு மருத்துவக் கற்கையை மேற்கொண்டு கொண்டிருந்த இராணுவ மருத்துவர்கள் உணர்கிறார்கள். அதற்கான வேண்டுகைகளை கிளிநொச்சியில் அமைந்திருந்த “தமிழர் புனர்வாழ்வு நிறுவனத்துக்கு “ ஊடாக மன்னார் வவுனியா பிரதேசங்களில் நிலை கொண்டு மனிதநேய பணியாற்றிக்கொண்டிருந்த FSD (Swiss Foundation of Demining ) நிறுவனத்துக்கு அனுப்புகிறார்கள். FSD உடனடியாக அம்பாறைக்கு 25 அவசர ஊர்திகளை அனுப்பி வைக்கிறது. அவற்றின் வருகை என்பது உண்மையில் அந்த மக்களுக்கான மருத்துவ தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய பெரிதும் உதவியது என்றே கூற வேண்டும் ஏனெனில் அங்கு அனுப்பப்பட்ட வாகனங்கள் அனைத்தும் ” 4 weal ” என்று அழைக்கப்படுகிற பொறிமுறையைக் கொண்ட வாகனங்களாகும் அவை சேறு, காடு, மழை, மலை என்று எதிலும் பயணிக்கக் கூடியதான வாகனங்கள் என்பது இங்கு முக்கியமானது. இந்த ஊர்திகளில் அதை விட பல மேன்மை படுத்தப்பட்ட வசதிகளும் இருந்தது. இந்த அவசர ஊர்திகளின் வருகையின் போது ஒரு சுவிஸ் நாட்டை சேர்ந்த தலைமை வைத்தியரும் உள்நாட்டு வெளிநாட்டு மருத்துவர்களால் நன்கு பயிற்றப்பட்ட ParaMedics அணியும் வந்திருந்தது. அவர்களின் பணியும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இது ஒருபுறம் இருக்க, அன்பழகன் மாஸ்டர் என்று போராளிகளால் அழைக்கப்படும் நடமாடும் மருத்துவ பிரிவை சேர்ந்த போராளி உதவி மருத்துவர் இராணுவ மருத்துவர்களை வந்து சந்திக்கிறார். அங்கே இருந்த நிலமைகள் அவருக்கு விளக்கப்பட்டு, புலம்பெயர் தமிழ் உறவுகளின் மனித நேயப்பணிகள் அம்பாறைக்கும் கிடைக்க வேண்டிய தேவையை உணரவைக்கிறார்கள் மருத்துவர்கள். அப்போது அதற்கான உறுதியை அளித்து சென்ற அன்பழகன் கொழும்பில் உள்ள பம்பலப்பிட்டி பகுதியில் ஒரு அவசர உதவி மைய அலுவலகத்தை நிறுவி புலம்பெயர் தேசங்களில் இருந்து வந்து கொண்டிருக்கும் விசேட நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள், மனிதநேயப் பணியாளர்கள், பொறியியலாளர்கள் தாதிகள் என்ற எந்த பாகுபாடின்றி தேவையானவர்களை தேவையான பிரதேசங்களுக்கு பிரித்து அனுப்பத் தொடங்கினார். இந்த நடவடிக்கையானது. உண்மையில் இனங்காணப்படாமல் இருந்து எந்த உதவிகளும் கிடைக்காமல் இருந்த பல பிரதேசங்களுக்கு உடனடி உதவிகளை செய்ய வழி தந்தது. இந்த இடத்தில் இன்னும் ஒரு விடயத்தை குறிக்க வேண்டிய தேவை இருக்கிறது. திருக்கோவில் என்ற இடத்தில் அமைந்திருந்த ஆதார மருத்துவமனைக்கு செல்லவேண்டிய தேவை மருத்துவர் தணிகைக்கு வந்த போது அங்கு செல்கிறார். அங்கே முற்று முழுவதுமாக விசேட அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த மருத்துவமனை இனங்கான முடியாத அளவுக்கு சுற்றிவர இராணுவம் தமது காவலரண்களை அமைத்து மக்களை பயமுறுத்திய நிலையில் இருந்ததையும் அந்த மருத்துவமனையில் இரண்டு சிங்கள மருத்துவர்களை மட்டும் சிங்கள அரசு பணியமர்த்தி இருந்ததும் கொடுமையாக இருந்தது. அவர் கண்ணுற்று வேதனைப்பட்டார். இந்த நிலையில் உடனடி தேவையாக இருந்த மருத்துவ உதவிகள் பெரும்பாலும் ஒழுங்கமைக்கபட்ட போதும் மக்களின் பிரச்சனைகள் அங்கே ஏராளமாக இருந்தன. ஒழுங்கான உணவுகள், தங்குமிடங்கள், உடைகள் குடிநீர் என எதுவும் அங்கு கிடைக்கவில்லை. அதனால் அவற்றையும் கருத்தில் எடுக்க வேண்டிய தேவை மருத்துவர்களுக்கு எழுந்தது. அதற்காக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தோடு (TRO)தொடர்பு கொண்ட போது அவர்கள் ஏற்கனவே அதற்கான ஆயுத்தங்களோடு அம்பாறைக்கான பொறுப்பதிகாரியாக ஆதவன் என்பவரை நியமித்து அங்கு அனுப்பி விட்டதாகவும் அவர்கள் அம்பாறைக்கு வந்து நேர்ந்து விட்டதாக தகவல் வந்தது. ஆனால் இங்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உள்ளே வருவதில் பெரும் சிக்கலை எதிர்நோக்கி விசேட அதிரடிப்படையின் தடைமுகாமில் தடுக்கப்பட்டு இருந்தது. உடனடியாக இராணுவ மருத்துவர் தணிகையும் மாமனிதர் சந்திரநேரு மற்றும் விரிவுரையாளர் குணபால் ஆகியோரும் அங்கு விரைகிறார்கள். அங்கே பணியில் இருந்த அதிரடிப்படையினரோடு கதைக்கிறார்கள். மட்டு அம்பாறை மாவட்டங்களின் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வந்திருந்த வாகனங்களுக்கு சரியான இலங்கை பதிவுகளும் இலக்கத்தகடுகளும் இல்லை என்றும், வாகன ஓட்டுனர்கள் சரியான அனுமதிப்பத்திரம் இல்லை என்றும் காரணம் கூறப்படுகிறது. ஒரு நாட்டில் பயங்கரமான ஒரு அனர்த்தம் நிகழ்ந்து முடிந்த நிலையில் மக்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டு மீள் எழும்ப முடியாது எங்கெல்லாமோ ஏதிலிகளாக வாழ்ந்து வர அந்த நாட்டின் இராணுவம் மனித நேயப் பணிகளை தடை செய்கின்றது என்பது பயங்கரவாதமா அல்லது அங்கே பணி செய்த விடுதலைப்புலிகளின் மனிதநேயப்பணி பயங்கரவாதமா என்ற இரு வினாக்கள் இங்கு எழுகிறது. இது இவ்வாறு இருக்க பல மணி நேரங்கள் மீண்டும் மீண்டும் பேசிய பின் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் அம்பாறைக்குள் வருகின்றன. அதன் பின்பு மக்களுக்கான அவசர தேவைகளை தமிழர் புணர்வாழ்வுக்கழகமும் செய்யத் தொடங்கியது. இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க அக்கரைப்பற்றுக்கும் திருக்கோவிலுக்கும் இடையில் உள்ள வீதி ஒன்றில் தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழினி தனது அணியோடு நிற்கிறார். அவரோடு இசைப்பருதி, தாமரை, குவேனி, அர்ச்சனா, உஷா போன்ற போராளிகள் நிற்கிறார்கள். அவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரிந்து போய் கிடந்த உறவுகளை சேர்க்கும் பெரும் பணியை செய்து கொண்டு நின்றார்கள். இசைப்பருதி தனது உந்துருளியில் ஒருவரை மாறி ஒருவரை ஏற்றிக் கொண்டு அவர்களின் உறவுகளோடு இணைத்துக் கொண்டும், அவர்களுக்கு ஆற்றுகை செயற்பாடுகளை செய்து கொண்டும் இருக்க தாமரை அங்கே நேரடியாக தம்மால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஒளிப்படங்கள் என்பவற்றை ஊடகங்களுக்கு அனுப்பி எம் மக்களின் நிலைகளை சர்வதேசம் அறியகூடியதாக செயற்ப்பட்டுக் கொண்டிருந்தார். இதை போலவே ஏனைய ஊடக பிரிவுப் பெண் போராளிகள் ஆவணமாக்கல்களையும் மக்களுக்கான உளவுரண் செயற்பாடுகளை சில போராளிகளும், ஏனையவர்கள் ஆண் போராளிகளைப் போலவே இறந்த உடலங்களை அடக்கம் செய்யும் பணிகளையும் காயமடைந்தவர்களை மருத்துவ உதவிக்காக கொண்டு வருதல் போன்ற பணிகளோடும் இரவு பகல் என்று இல்லாது கண் விழித்து ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். கைக்குழந்தைகளை வைத்திருந்த தாய்மார் குழந்தை பிறக்க இருந்த நிறை மாத கர்ப்பணிகள் போன்றவர்களை கவனிக்க என்று ஒரு அணியை ஒழுங்கு படுத்தி இருந்தார் தமிழினி. அவர்கள் அந்த மக்களுக்கு தேவையானவற்றை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து கவனிக்க தொடங்கினார்கள். அங்கே தாய் தந்தையை பிரிந்து தனித்து இருந்த பல குழந்தைகள் தமிழினியின் அணியால் காப்பாற்றப்படுகிறார்கள். அவர்களில் சிலர் உறவுகளும் அற்று தனித்து நின்ற போது அல்லது உறவுகளாலும் பராமரிக்க முடியாத சூழல் எழுந்து நின்ற போது அவர்களை பொறுப்பெடுக்கிறார் தமிழினி அதில் மிகவும் பாதிக்கப்பட்ட பத்து, பதினோரு வயசு நிரம்பிய குழந்தைகள் ஐந்து பேரை தமிழினி தனது வாகனம் ஒன்றில் ஏற்றி உடனடியாக வன்னிக்கு அனுப்பி செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலை என்பவற்றில் வளர்வதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் அவரதுவாகனம் அம்பாறையில் இருந்து புளியங்குளம் பகுதியில் வந்த போது இடைநிறுத்தப்படுகிறது. அங்கே நின்ற இராணுவம் அந்த குழந்தைகளை இயக்கத்தில் இணைப்பதற்காக கொண்டு போவதாக கூறி சாரதியையும் கைது செய்து வைத்திருந்தார்கள். பின் மனிதநேயப்பணியில் இருந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் நேரடியாக தலையிட்டதோடு பாதிக்கப்பட்ட உறவுகளின் நேர்காணல்கள், சாட்சியங்கள் போன்றவற்றை குடுத்து அந்த குழந்தைகளையும் சாரதியையும் மீட்டார் தமிழினி. இங்கும் இராணுவம் மக்கள் பணியை தடுத்து போராளிகளின் வேகமான செயற்பாடுகளை முடக்க நினைத்தது பதிவாகியது. இவ்வாறாக விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு படைப்பிரிவும் முற்றுமுழுதாக மக்கள் நேயப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். விரைவாகவும் விவேகமாகவும் அவர்களின் செயற்பாடுகள் அமைந்த போது சிங்களமும் சர்வதேசமும் அதிர்ந்து போனது உண்மை. இதை இங்கே நான் குறித்தே ஆகவேண்டும். ஏனெனில் இவ்வாறான வேகமானதும் நேரியதுமான செயற்பாடுகளே அமரிக்காவின் முன்னாள் அரச தலைவர் தமிழர் புனர்வாழ்வுக்கழக பணிப்பாளரை சந்தித்து கைகுலாவி வாழ்த்திய வரலாற்று சம்பவம் நிகழ்கிறது. அதை விட பின்நாட்களில் சிங்கள இராணுவத்தினால் எமது போராளிகளுக்கு ஏற்பட்ட பல இழப்புக்களுக்கு இது காரணமாகியது. (இது தொடர்பாக பின்னொரு பத்தியில் பார்க்கலாம்) இவ்வாறு அனைத்து படைப்பிரிவை சேர்ந்தவர்களும் பணியில் ஈடுபட்டு இருக்க அவசர தகவல்களை பரிமாற்றம் செய்வதற்காக அம்பாறை அரசியல் துறை போராளி வோக்கி கதைத்த போது மீண்டும் பெரும் சர்ச்சை வெடித்தது. வோக்கி இராணுவ உபகரணம் என்றும் அது அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பயன்படுத்த கூடாது என்று சமாதான உடன்படிக்கையின் சரத்து ஒன்று கூறுவதாகவும் விசேட அதிரடிப்படையினால் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அங்கே நின்ற சிங்களப்படை அங்கே நடந்து கொண்டிருப்பது போராளிகளின் அரசியல் நடவடிக்கை அல்ல மக்களுக்கான அவசர மனிதநேயப்பணி என்பதை ஏனோ நினைக்கவே இல்லை. போராளிகள் மீண்டும் தமது மக்களுக்காக விட்டுகுடுக்கிறார்கள். வோக்கி பாவிப்பதை நிறுத்துகிறார்கள். அவர்களின் நோக்கம் மக்களை நோக்கியே இருந்ததால் அதிரடிப்படையின் எந்த தடைகளையும் தாண்டி பயணிக்க வேண்டி இருந்தது. அங்காங்கே சிதறிபோய் மேட்டுநிலங்கள் தேடி தனித்து போய் தவித்து கிடந்தவர்களை ஒருங்கிணைக்கும் செயற்பாடு நடந்து கொண்டிருக்க அவர்களுக்கான தங்குமிடங்களை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் முகாம்களாக ஏற்பாடு செய்திருந்தது. தற்காலிக தங்குமிடங்கலில் மக்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கான அதி முக்கிய அடிப்படைத் தேவைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது. அவற்றை புனர்வாழ்வுக்கழக ஒழுங்கு படுத்தல்களில் OXFARM நிறுவனம் ஏற்படுத்துகிறது. அப்போது இராணுவ மருத்துவர்கள் மீண்டும் ஒரு வேண்டுகோளினை வைக்கிறார்கள். அதில் அங்கே பயன்படுத்தக்கூடியதான தற்காலிக மலசலகூடங்கள் புதிதாக அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். அந்த வேண்டுகையை தொடர்ந்து அமைக்கப்பட்ட முகாம்கள் அனைத்திலும் புதிதாக தேவையான அளவு மலசல கூடங்கள் மற்றும் தனித்துவமான சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்படுகிறன. புதிதாக குடிநீர் தாங்கிகள் உருவாக்கப்படுகின்றன. ஒருபுறம் சுனாமி தாக்கி பெரும் இடர்களை சுமந்து கொண்டிருந்த மக்களுக்கு மீண்டும் மாரி மழை வந்து பெரிய அனர்த்தத்தை செய்தது அவசர சிகிச்சைகளுக்காக காயப்பட்டவர்களை அவசர ஊர்திகளின் மூலம் கொண்டு செல்ல முடியவில்லை. உடைந்த பாலங்களால் நீர் முட்டி பாய்ந்தது. அவசர ஊர்திகள் பயணிக்க முடியாது சேற்றினுள் புதைந்தது. அப்போது தான் அங்கே நின்ற மருத்துவர்கள் அங்கு மனிதநேயப் பணியாற்றி கொண்டிருந்த கனேடிய இராணுவ அணியிடம் அங்கு வைக்கப்பட்ட நீர்த்தாங்கிகளுக்கான நீர் வேறு இடத்தில் இருந்து கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளையும் உடைந்து கிடந்த பாலங்களின் மூலமாக பயணிக்க முடியாத பொதுமக்கள் , நோயாளர்களை சிறுவகை டிங்கி படகுகள் மூலமாக போக்குவரத்து ஏற்பாடுகளையும் ஒழுங்கு பண்ணி தருமாறு வேண்டுகை விடப்படுகிறது அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு அந்த பணியை செய்கிறார்கள். அனைத்து மக்களுக்கும் அவசர நோய்த் தடுப்பு ஊசி போடப்படுகிறது. சிறு காயங்கள் முதல் பெரிய காயங்கள் வரை அதாவது பேரலையால் அடித்து செல்லப்பட்டு உயிர் தப்பியவர்கள் பெரும்பாலும் சிறு உரசல் மற்றும் கீறல் காயங்கள் எலும்பு முறிவுகள் என பல தரப்பட்ட காய வகைகளை கொண்டிருந்தனர். தம் வசதிகளை பொறுத்து மக்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர்கள். ஆனாலும் சில பெரிய காயங்களை அங்கு வைத்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்தால் உடனடியாக பல மணி நேரப்பயணத்தில் இருந்த மட்டக்களப்பு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அப்போது தான் இந்த கிராமங்களைத் தாண்டி இன்னும் ஒரு கிராமம் இருப்பதாகவும் அது நேரடியாக சுனாமியால் பாதிப்படையவில்லை என்றாலும் மருத்துவ தேவைகள் அந்த கிராமத்தில் இருப்பதாகவும் மருத்துவர்களுக்கு வந்த தகவலை அடுத்து விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவ அணி அங்கே செல்கிறது. அந்த கிராமம் அழிக்கம்பை என்று அழைக்கப்பட்டது. அங்கு சென்ற போது புதிய ஒரு பிரச்னையை இந்த மருத்துவ அணி சந்திக்கிறது. அங்கே வாழ்ந்து வந்த மக்கள் இவர்கள் அறியாத புதிய திராவிட மொழி ஒன்றை பேசுபவர்களாக இருந்தார்கள். அம்மொழியை என்ன என்றே மருத்துவர்களால் இனங்காண முடியாத நிலையில் மருத்துவ சிகிச்சை தாமதமாவதையும் உணர்ந்த மருத்துவர்கள் அங்கு வாழ்ந்த இளையவர்களை அழைத்து பேசிய போது அவர்கள் தமிழை பேசக்கூடியவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்களை வைத்து உடனடி மருத்துவ உதவிகளை செய்ய கூடியதாக ஒழுங்குகளை செய்தார்கள் மருத்துவர்கள். இந்த நிலையில் அதையும் தாண்டி ஒரு கிராமம் இருப்பதை அந்த மக்கள் மூலமாக அறிந்தவர்கள் அங்கு மருத்துவமனை ஒன்றும் இருப்பதை அறிந்து கொள்கிறார்கள். அதனால் அங்கே சென்று நிலையை அறிய முயன்ற போது விசேட அதிரடிப்படையினர் தடுக்கிறார்கள். அந்த கிராமம் அவர்களது முற்று முழுதான கட்டுப்பாட்டில் இருந்ததை காணக்கூடியதாக இருக்கிறது. ஆனாலும் அங்கே இருக்கும் மருத்துவமனைக்கு போக வேண்டும் என்று கூறிய போது பலத்த விவாதத்திற்கு பிறகு அனுமதிக்கிறார்கள். உள்ளே சென்ற போது கைவிடப்பட்ட நிலையில் ஒரு பிள்ளையார் கோவில் இருப்பதை காண்கிறார்கள். ஆனால் அந்த கோவில் எந்த பராமரிப்பும் இன்றி இருந்தது. மருத்துவ அணி உண்மையில் திகைத்து போகிறது. “மாந்தோட்டம் “ என்ற தமிழ் கிராமம் முற்றுமுழுவதுமாக சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டு “தொட்டம ” என்ற பெயரோடு சகல வசதிகளையும் கொண்டு ஒரு சிறு நகரமாக மிளிர்ந்தது. உண்மையில் அருகருகே இருக்கும் இரு கிராமங்களில் சிங்கள கிராமம் அத்தனை வசதிகளையும் பெற்றிருக்க தமிழ் மற்றும் முஸ்லீம் கிராமங்கள் எந்த அடிப்பபை வசதிகளையும் கொண்டிராது இருப்பதன் இனவாதம் அங்கே மீண்டும் பதியப்பட்டிருந்தது. இவ்வாறாக அந்த கிராமத்தை பார்வையிட்ட பின் திருக்கோவில் திரும்பிய மருத்துவ அணி மீண்டும் நேரடியாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பணிகளை தொடர்கிறார்கள். அப்போது அம்பாறை மாவட்டத்துக்கு புலம்பெயர் தேசங்களில் இருந்து வந்திருந்த தமிழ் உறவுகள் தாயக உறவுகள் என்ற எந்த பாகுபாடுமற்று இரவு பகல் என்ற பேதம் இன்றி நித்திரை, உணவு என்று எதுவும் இன்றி மக்கள் பணியை மேற்கொண்டு கொண்டிருக்க, அங்கே மக்கள் மனிதநேய பணிக்காக கனடா நாட்டில் இருந்து வந்த கனேடிய இராணுவம் மற்றும் கனேடிய இராணுவ மருத்துவ அணி என்பன அங்கே நடந்து கொண்டிருந்த அனர்த்த முகாமைத்துவத்தின் விரிவான செயற்பாட்டையும் ஒருங்கினைவான ஒன்றிணைந்த செயற்பாடுகளையும் கண்டு அதிர்ந்து போனார்கள். நேரடியாகவே அதை மருத்துவர்களிடம் கேட்கும் அளவிற்கு அவர்களுக்கு அங்கு நடந்த செயற்பாடுகள் இருந்தன. “ உண்மையில் நீங்கள் உன்னதமானவர்கள் தான். எப்பாடு உங்களால் இரவு பகல் என்றும் உணவு நித்திரை இல்லாமலும் இருபத்து நாலு மணிநேரமும் பணியாற்ற முடிகிறது? என்று அதிர்ச்சியோடு கேட்டார்கள். இவ்வாறாக வெளிநாட்டு, இந்தியா மற்றும் சிங்கள தேசம் என பலதரப்புக்கள் அதிசயமாக பார்த்த சுனாமி அனர்த்த முகாமைத்துவ பணியானது எம் மக்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்தாலும் மனதளவால் பாதிக்கப்பட்டவர்களை மீள் நிலைக்கு ஆற்றுகைப்படுத்த முடியவில்லை. மருத்துவர்கள் நேரடியாகவே அதையும் செய்தார்கள் உடனிருத்தல், ஆற்றுப்படுத்தல் போன்றவற்றை இராணுவ மருத்துவர்களான ஜோன்சன் லெப்.கேணல் வளர்பிறை லெப் கேணல் தமிழ்நேசன் ஆகியோர் ஈடு பட்டனர். அவர்களுக்கான ஆற்றுகைப்படுத்தல்களை ஆடல் பாடல் என்று அவர்களே செய்ய எத்தனித்த போது மீண்டும் அதிரடிப்படையின் பிரசன்னம். என்ன பாடல் போடப்போகிறோம் என்ன பேசப்போகிறோம் என்ன அறிவிக்கப்போகிறோம் என்பதை பற்றி எல்லாம் அவர்களிடம் எழுத்து மூல அனுமதி பெறவேண்டி இருந்தது. இவ்வாறு எம் போராளிகள் எந்த வேலையை முன்னெடுத்த போதும் அவற்றை தடுப்பதில் முன்னின்றது சிங்களப் படைகள். ஆனாலும் அதையும் தாண்டி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை அது தமிழ், முஸ்லீம், சிங்களம் என்ற இனபேதம் இன்றி பாதுகாத்து அவர்களின் இடர் களைந்து அவர்களை ஆற்றுகைப்படுத்தி நின்றார்கள் போராளிகள். இந்த இடத்தில் சுனாமி அனர்த்த முகைமைத்துவ செயற்பாடுகளில் ஈடுபட்ட தாயக மற்றும் புலம்பெயர் மக்களை மனதாற நினைவில் கொள்ளுவதோடு Center for Health Care என்ற அமைப்பினூடாக பெரும் பணிகளை செய்த புலம்பெயர் மருத்துவ உறவுகளையும் மனதில் நிறுத்திக் கொள்கிறார்கள் இராணுவ மருத்துவர் தணிகை மற்றும் அவரது அணியினர். கவிமகன் 26.12.2017 https://eelamaravar.wordpress.com/2019/06/22/ltte-histroy-tsunami/
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 8 மணலாறு காட்டிடை மேவிய தளபதி பிரிகேடியர் சொர்ணம்தமிழீழத்தின் தலைநகரில் தொடங்கிய 5 ஆம் கட்ட ஈழ யுத்தம் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் என்று விரிந்து மணலாறு மண்ணிலும் தரித்து நின்ற காலம் அது. அந்தக் காலத்தின் ஒரு நாளில் தாயக தேசத்தை மூடி நின்ற வானம் இருண்டு போய்க் கிடக்கிறது. வானத்திற்கு வெளிச்சமூட்ட முனைந்து தோற்றுப் போன நிலையில் தன்னை முகில் கூட்டங்களுக்குள் மறைத்து மறைத்து எட்டிப் பார்க்கிறது தேய்பிறை. அந்த அழகை ரசித்தபடி நிற்கிறார்கள் சோதியா படையணியின் பெண் போராளிகள். அவர்களின் கரங்கள் திடமாக பற்றி இருந்த துப்பாக்கிகள் எதிரியின் வரவை எதிர்பார்த்து விழித்திருந்தன. சோதியா படையணி போராளிகள் மட்டுமல்லாது மணலாறு கட்டளைப்பணியக போராளிகள், தலைமைச் செயலக “மணாளன்” சிறப்பு தாக்குதலணி மற்றும் பூநகரி படையணி போராளிகள், எல்லைப்படை மற்றும் காவல்துறைப் படையணி என பல படையணி போராளிகளை உள்ளடக்கிய போராளிகளணி. இதன் கட்டளைத் தளபதியாக பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் பணியாற்றினார். வான் நிலாவின் அழகை ரசித்தபடி சுடுகலன்களை தயாராக வைத்து காத்திருக்கிறது அந்த அணி. அதில் பல புதிய போராளிகள் இருந்தாலும், அவர்கள் விசுவாசமாக சண்டையை எதிர் கொண்டதும் எதிரிகளை திணறடித்ததும் அங்கு பதிவாகிய வரலாறு. அவர்களுக்கான அணித்தலைவர்கள் அனுபவம் மிக்க சண்டையணிப் போராளிகள் என்பதால் சண்டையை சீராக செய்ய கூடிய நிலை இருந்ததும் அங்கு பெறுமதியான பதிவாக மணலாறுக் களமுனை அன்று நிமிர்ந்து நிற்கிறது. இந்த நிலையில் போராளிகள் தயார்நிலையில் இருந்த அதே வேளை, களமுனையின் எல்லை வேலி இந்திரன் முகாமில் இருந்து மிக அருகில் சிங்கள இராணுவமும் அதை தாண்டிய ஜீவன் முகாமருகில் போராளிகளுமாக நீண்டு சென்றது. மிக அருகில் ஜீவன் முகாமில் பிரிகேடியர் சொர்ணம் தனது கட்டளை பணியகத்தை (Commanding station ) அமைத்து இருந்தார். அவருக்கு ஜீவன் முகாமின் ஒவ்வொரு அங்குலத்தையும் பார்க்கும் போதெல்லாம் 1987 ஆம் ஆண்டு கால நினைவுகள் மனதை விட்டு மறையாது இருக்கும். இந்திய இராணுவத்தின் வருகை விடுதலைப்புலிகளையும் தேசியத்தலைவரையும் மணலாறுக் காட்டுக்குள் கொண்டு சென்ற போது, ஜீவன் முகாம் பல வருடங்களாக தேசியத் தலைவரை தாங்கி நின்ற வரலாற்று நிமிர்வு மிக்கதான ஒரு முகாம். வானுயர்ந்த மரங்களின் போர்வைக்குள் எதிரியின் நுழைவுகளை தடுக்கும் பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு நிமிர்ந்து நின்றது ஜீவன் முகாம். ( முன்னாளில் உதயபீடம் என்று அழைக்கப்பட்ட இந்த முகாம் தான் தலைவரின் பிரதான தங்ககம்) அது மட்டுமல்லாது, நீதிதேவன் (நீதி வழங்கல்), காமதேனு ( வளங்கல் பிரிவு) விடியல் (மகளிர் படையணி), வைகறை (மகளிர் படையணி) அமுதகானகம் (மருத்துவபிரிவு) என பல முகாம்கள் அங்கு நிமிர்ந்து நின்றன. பின்நாட்களில் அவை குறியிடு பெயர்கள் மாற்றப்பட்டு மாவீரர் பெயர்களை தாங்கி நின்றது வரலாறு. அங்கு தான் ஜொனி மிதிவெடியின் உயர் பயனை விடுதலைப்புலிகளும் எம் வெடிபொருள் உற்பத்தி அறிவினை இந்திய இராணுவமும் அறிந்த நாட்கள் அமைந்திருந்தன. தேசியத்தலமையை தன்னுள் பல காலங்களாக சுமந்து நின்ற இந்த முகாம்களின் வடிவமைப்பின் போது விடுதலைப்புலிகளின் நம்பிக்கைக்குரிய பொது மகன்கள் சிலரையும் நாம் நினைவு கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒமர் முக்தார் (Omar Mukhtar, 1858 – செப்டம்பர் 16, 1931 மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர்.இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார். ) என்று அன்பாக விடுதலைப்புலிகளால் அழைக்கப்படும் லெப் கேணல் டடி அல்லது நவம் என்ற மாவீரனை பெற்ற தந்தை அதில் முக்கியம் பெறுபவராவார். அவர் மூலமாகவே அதுவரை வவுனியா மன்னார் காடுகளில் வாழ்ந்த விடுதலைப்புலிகளுக்கு மணலாறு காடு பற்றிய அறிவும் பரீட்சயமும் கிடைத்தது. அவரால் தான் மணலாறு காடு பெரும்பாலும் விடுதலைப்புலிகளின் வாழ்விடமாகியது. அவரின் அனுபவமும் திறணும் மணலாறு காட்டினுள் பல இடங்களில் வாழ்விடங்களாகவும் கிணறுகளாகவும் நிமிர்ந்து நின்றதை நாம் மறுக்க முடியாது. இங்கு மிக முக்கியமான ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டியது அவசியம். மணலாறு காட்டினுள் இருந்த இந்திரன் முகாமில் நிலத்தடி மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதாவது சாதாரண பதுங்ககழி போல் அல்லாது நிலத்துக்கு கீழாக ஒரு மருத்துவமனையை நிர்வகிக்க கூடிய அளவில் நிலத்தடி மருத்துவமனை ( Underground Hospital ) அமைக்கப்பட்டு போராளிகள் பராமரிக்கப்பட்டார்கள். இது கட்டுவதற்கும் இவரின் பங்கு மிக முக்கியமானதாக வரலாறு பதிவாகியிருக்கிறது. அதைப் போல தேசியத் தலைவனின் மிக நெருக்கத்திக்குரிய பாதுகாவலனாக இருந்த ஆதவன் அல்லது கடாபி என்று அழைக்கப்படும் மூத்த தளபதியின் தந்தை காட்டுக்குள் சமையல் கூடங்கள் மற்றும் வெதுப்பகம் என்பவற்றை உருவாக்குவதில் வெற்றி கண்டு எம் வரலாற்றில் முக்கியம் பெறுகிறார் . ஓங்கி வளர்ந்திருந்த மரங்களின் அசைவில் எழும் இன்னிசைகளில் இந்த நினைவுகள் எல்லாம் வந்து போன போது அந்த நாட்களை தன் விழி முன்னே கொண்டு வந்து நினைவு கொள்வார் பிரிகேடியர் சொர்ணம். கெரில்லா போராளிகளாக இருந்த காலத்தில் தான் எவ்வாறு பயணித்தார் என்பதை அடிக்கடி நினைவூட்டிக் கொள்வார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பரினாம வளர்ச்சியின் பின் இன்று மரபுவழி இராணுவக் கட்டமைப்பாக நிமிர்ந்து நின்றாலும் மணலாறு காட்டைப் பொறுத்தவரை கெரில்லா போர்முறையே சரியான தெரிவாக இருக்கும் என்பது அவரது தெரிவாக இருந்தது. ஏனெனில் 1991ஆண்டு ஆகாய கடல் வெளி என்ற பெரும் வலிந்து தாக்குதலை செய்து விடுதலைப்புலிகளின் போரியல் ஆற்றலை சிங்களத்துக்கு புகட்டிய எம் அமைப்பு அது முடிந்த சில நாட்களில் இதே மணலாறு காட்டினுள் மின்னல் நடவடிக்கை சிங்களத்தால் செய்யப்பட்ட போது, அதை எதிர்கொள்ளும் திடத்தை பெற்றிருந்ததை மறுக்க முடியாது. சிங்களம் மணலாறு காட்டுக்குள் மின்னல் படைநடவடிக்கையை செய்து காட்டுக்குள் வந்திருந்தாலும் அதை அவர்களால் பாதுகாக்க முடியவில்லை. உடனடியாகவே அந்த நடவடிக்கையை விட்டு வெளியேறிச் சென்றது. காரணம் அப்போதெல்லாம் சிங்கள இராணுவத்திற்கு போதிய அளவு காட்டு நடவடிக்கைகள் பரீட்சயம் இல்லாமல் இருந்தது. இவ்வாறான படை நடவடிக்கைகளின் தோல்விக்கு பின்னான காலங்களில் “ஜெயசிக்குறு” என்ற படை நடவடிக்கையை சிங்களம் செய்த போது அமெரிக்காவின் Green pared என்ற படையணியின் மூலமாக முற்று முழுதான காட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார்ப்படுத்தப்பட்டே வந்தன. ஆனாலும் அவர்களும் எமது படையணிகளிடம் பல முறை அடி வாங்கி சிதைந்து போனது வரலாறு. இது இவ்வாறு இருக்க, ஒரு மரபுவழி இராணுவக் கட்டமைப்பால் அந்த காட்டுக்குள் நின்று உணவு மருத்துவம் என்று எந்த தேவைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாது என்பதே அவரது கணிப்பாக இருந்தது. அதற்காக அவரின் போரியல் முறையில் சில வேவு அணிகளை தயார்ப்படுத்தி எல்லை வேலிக்கு முன் நகர்த்தி இருந்தார். அவர்கள் கெரில்லா முறைத் தாக்குதல்களை செய்ய பணிக்கப் பட்டார்கள். இவ்வாறாக அந்த களமுனை இறுதிக் கட்ட சண்டையை மிக மூர்க்கமாக எதிர்கொண்டிருந்த காலத்தில் தான் சில இடங்களில் சிதைந்திருந்த எம் எல்லையை சீராக்கி FDL (Forward Defense Line இதை பேச்சுவழக்கில் லைன் (line) என்று குறிப்பிடுவார்கள். ) முன்னகர்த்த வேண்டும் என்ற எண்ணம் அவருள் எழுகிறது. இதற்காக திட்டமிட்டு 2008 சித்திரை 27 ஆம் நாள் அணிகளை நகர்த்துகிறார். பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் திட்டம் எதிரிக்கு கசிந்து விட்டதாலோ என்னவோ சண்டை எம் அணிகள் நினைத்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. அதனால் மறுபடியும் சித்திரை 29 ஆம் நாள் பெரும் முயற்சி எடுக்கப் படுகிறது. அந்த சண்டை எமக்கு சாதகமாக இருந்த போதும் நாம் புதிய சிக்கல் ஒன்றை எதிர் கொள்ள நேர்ந்தது. விடுதலைப்புலிகள் மீண்டும் தொடர் தாக்குதல்களை செய்யலாம் என்று எதிர்பார்த்த சிங்களம் இரவு முழுவதும் ஓயாத எறிகணை தாக்குதல்களை செய்கிறது. அந்த எறிகணையின் சிதறல்கள் கட்டளைச்செயலக பகுதிகளையும் தாக்குகிறது. பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் பாதுகாப்பு போராளிகள் பதுங்ககழிக்குள் வருமாறு பல தடவை அழைத்தும் உள்ளே செல்லாது பதுங்ககழிக்கு மேலே படுத்திருந்தார். அந்த சிதறல்களில் ஒன்று சொர்ணம் அவர்களின் கழுத்திலும் இன்னொன்று கண்ணுக்கு மேல் உள்ள புருவத்திலும் தாக்குகின்றன. இரத்தம் சீறிப் பாய்கிறது. களமருத்துவப் போராளி உடனடி இரத்தக் கட்டுப்பாட்டை செய்துவிட்டு அருகில் இருந்த குட்டுவன் என்ற முகாமில் மருத்துவ முகாமை அமைத்து தங்கி நின்ற இராணுவ மருத்துவர் தணிகை மற்றும் மருத்துவப்பிரிவு பொறுப்பாளர் ரேகா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப் படுகிறது. அவர்களோடு மருத்துவ நிர்வாக போராளி நம்பியும் உடனடியாக ஜீவன் முகாமுக்கு வருகிறார்கள். காயத்தின் நிலை கொஞ்சம் சிக்கலாக இருந்ததால் அருகில் இருக்கும் ஏதோ ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலை உணரப்படுகிறது. மருத்துவர் தணிகையும் பொறுப்பாளர் ரேகாவும் அதை எடுத்து கூறுகிறார்கள். உள்ளே தங்கி விட்ட எறிகணைத் துண்டை வெளியில் எடுக்க வேண்டிய தேவையை அவர்கள் அவருக்கு உணர்த்த முனைகிறார்கள். ஆனால் தான் அந்த இடத்தை விட்டு ஒரு போதும் பின்நகரப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் தளபதி சொர்ணம். ஆனால் எவ்வாறாயினும் அவரை புதுக்குடியிருப்புக்கு நகர்த்தி விட துடித்தனர் இரு மருத்துவ பிரிவு போராளிகளும். தம்மிடம் இப்போது மயக்க மருந்து குடுத்து சத்திரசிகிச்சை செய்ய உபகரணங்கள் இல்லை அதனால் கப்டன் கீர்த்திகா இராணுவ மருத்துவமனைக்கு போய் சத்திரசிகிச்சை பெற்று உடனே திரும்பலாம் என்பதை வலியுறுத்துகிறார்கள். அவரோ மறுக்கிறார். அவர்களுக்கு களமுனையில் மயக்க நிலையில் மூத்த தளபதி ஒருவரை வைத்திருக்கும் அபாயம் கண்முன்னே நின்றது. அதை விட சொர்ணம் அவர்கள் ஒரு நீரிழிவு நோயாளி அவருக்கு தகுந்த வசதிகளற்று சிகிச்சை அளித்து அதனால் விளைவுகள் பாதகமானால் ? என்ற வினா எழுந்து நின்றது. ஆனால் அவர் அதை ஏற்க வில்லை மயக்க மருந்து போட தேவை இல்லை லோக்கல (Local Anesthesia/அனஸ்தீசியா) போட்டு சிதறிய எறிகணைத் துண்டை எடுக்கும் படி கேட்கிறார். அவர்கள் மறுக்கிறார்கள். அப்போது இவ்வளவு பேர சண்டைல விட்டிட்டு இந்த ஒரு காயத்துக்கு சிகிச்சை என்று என்னால் பின்னுக்கு போக முடியாது என்கிறார் தளபதி சொர்ணம். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர் மருத்துவர்கள். ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அவரை புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயல்கின்றனர். சத்திரசிகிச்சைக் கூடம் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என்றார்கள். அதற்கும் பதில் தந்த தளபதி சொர்ணம் எங்கட பெடியள் எத்தின பேருக்கு பங்கருக்க வைச்சுத் தான் தான் உயிர் காத்தனிங்கள் என்னை மட்டும் ஏன் இப்பிடி செய்கிறீர்கள்? என்னால் இவ்வாறான நிலையில் அண்ணைய பார்க்க முடியாது. புதுக்குடியிருப்பு போனால் அவர சந்திக்காமல் வர முடியாது அதனால் நான் பின்னால் வர மாட்டேன். அவர் உறுதியோடு இருந்தார். சண்டை எப்ப தொடங்கும் என்று தெரியாத நிலை. இதுக்குள் நான் எப்பிடி பெடியள விட்டிட்டு பின்னால வாறது என்னால முடியாது. என்று மறுக்கிறார். அவரின் உறுதியும் இறுதியான கட்டளையும் மருத்துவர் தணிகைக்கு எதையும் செய்ய முடியாத நிலையை உருவாக்குகிறது. கிடைத்த வளங்களை வைத்து அந்த சத்திரசிகிச்சையை செய்ய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்திருந்தது. பதுங்ககழிக்குள் வைத்து சிகிச்சை செய்ய அழைத்த போதும் அதை மறுத்து வெளியில் வைத்தே சிகிச்சை செய்ய தளபதி சொர்ணம் அவர்களால் பணிக்கப்படுகிறார் மருத்துவர். பெரிய வெளிச்சத்தை பாச்ச முடியாத சூழலில் சூரிய விடியலின் சிறு வெளிச்சத்தைக் கொண்டு இரத்த அழுத்தம்(Blood Pressure ) பரிசோதிக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் சரியான நிலையில் இருந்த போது அனஸ்தீசியா ( Local Anesthesia) போடப்பட்டு சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. வெடிபொருள் சிதறல்கள் அகற்றப்பட்ட பின் உடனடியாகவே சண்டைக்கு தயாராக வோக்கியை கையில் எடுத்துக்கொண்டு நிமிர்ந்த குரலை கேட்ட போது இராணுவ மருத்துவர் தணிகையின் விழி கலங்காமல் இல்லை. உண்மையில் ஒரு பெரும் தளபதி தன் காயத்தை கூட பொருட்படுத்தாது, களமுனை நிலவரத்தை மனதில் கொண்டு களமுனை விட்டு நகர மாட்டேன் என கூறியது எம் போராட்ட வரலாற்றை மீண்டும் பெறுமதியாக்கி சென்றது. எம் தளபதிகள் இறுதி வரை இவ்வாறே வாழ்ந்தார்கள். தம் சாவுக்கு மேலாக மக்களை நேசித்தார்கள். அவர்களின் குடும்பங்களை பற்றி சிறிதளவு கூட சிந்திக்காது தலைவனை பற்றிச் சிந்தித்தார்கள். கவிமகன்.இ 23.12.2017 .
-
2010இல் வன்னி சென்று திரும்பிய செய்தியாளர் கண்ட காட்சிகளின் விரிப்பு
1/1/2010 வன்னியின் இன்றையை நிலையை புதினப்பலகை தமிழ் ஈழ இணையதளம் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இதுகுறித்து அந்த இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரை... புதினப்பலகையின் பங்காளர் தேவன் பசுபதி ஒரு பயணம் போனார். ஒளி ஓவியர் செல்லையா ஞானசி்ங்கமும் ஒரு பயணம் போனார். இரு பயணங்கள் - ஒருவர் கணிணியின் எழுதுபொறியால் நோக்கினார்; அடுத்தவர் ஒளிப்படக் கருவியின் வில்லையால் நோக்கினார். எழுத்தையும் படங்களையும் ஒருங்கிணைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றது புதினப்பலகை. - சித்தார்த்தன் என்கிற கௌதம புத்தன் ஒர் ஆக்கிரமிப்பாளன் - வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையான மூன்று மணி நேரப் பயணத்தில் எனக்குத் தோன்றியதெல்லாம் இது தான். மூன்று வருடங்களின் பின்னர் தாயக மண் நோக்கிய எனது பயணம் கடந்த டிசம்பர் 31ஆம் நாள் ஆரம்பமானது. வவுனியா நகரில் இருந்து எங்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி "தேக்கவத்தை" என்ற இடத்தில் இறக்கி விட்டது. இந்த ஊர் முன்னர் 'தேக்கங் காடு' என்றே அறியப்பட்டிருந்தது. ஈரப்பெரிய குளத்திற்குப் பதிலாக படையினரின் சோதனை நிலையமாக இப்போது அந்த இடம் மாற்றப்பட்டிருக்கிறது. அது ஒரு பழைய விளையாட்டுத் திடல். முகமாலை மாதிரியே அரைச் சுவர் வைத்த சோதனைச் சாவடிகள் அங்கேயும் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் ஓய்விடத்திற்கு அருகிலேயே பேருந்துகள் தரிப்பிடத்திற்கான நிலம் செம்மையிடப்பட்டுக் கொண்டிருந்தது. அந்தச் சோதனை நிலையம் இன்னும் பல பத்தாண்டுகள் சிறப்பாக இயங்குவதற்காகத் தயார்ப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. வவுனியா பேருந்து நிலையத்தில் இருந்தும் கொழும்பு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்துகள் ஒவ்வொன்றாக வந்து அங்கே வரத் தொடங்கின. பிற்பகல் 2 மணிக்கு 6 பேருந்துகள் ஒரே அணியாக அங்கிருந்து புறப்பட படையினர் அனுமதித்தார்கள். நாங்கள் 12 மணிக்கே அங்கே போயிருந்தோம். எமது பொதிகள், பைகள் சோதனையிடப்படவில்லை அடையாள அட்டைகளின் பிரதிகள் வாங்கப்படவில்லை. ஆனாலும் ஓய்விடத்தில் படை ஆட்கள் சொல்லும் படியே அமர்ந்து, அடையாள அட்டைகளை அவர்கள் பார்வையிட்ட பின்னர், அவர்கள் காட்டிய வழியில் நடந்து, அவர்களின் வழிகாட்டலில் பேருந்துகளில் ஏறிக்கொண்டோம். அந்த மைதானத்தைச் சுற்றி அடிக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகளுக்கு அப்பால் இருந்து பயணிகளுக்கு பழங்களும் தேநீரும் விற்கப்படுகின்றன. விற்பவர்களில் சிங்களவர்களும் அரசின் தடுப்பு முகாம்களில் வசிக்கும் மக்களும் இருக்கிறார்கள். பேருந்துகள் தாண்டிக்குளம் ஜோசப் முகாம் தாண்டி ஓமந்தையை அடைகின்றன. அங்கே எல்லாம் அப்படி அப்படியே இருக்கின்றன. சோதனைச் சாவடிகளுக்கு பேருந்துகளில் இருந்து இறங்கி நெருக்கி அடித்தபடி ஓடும் மக்களையும் சோதனைக்காக கால்கடுக்கக் காத்திருப்பவர்களையும் மட்டும் தான் காணவில்லை. அமைதிக்காகக் காத்திருந்த 2000 முதல் 2006 வரையான ஆண்டுகளில் இந்தச் சோதனைச் சாவடி வழியாக பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் சென்று வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் பல தடவைகள் சிங்களப் புலனாய்வாளர்களுடன் வாக்குவாதப்பட வேண்டி இருந்திருக்கின்றது. அந்தச் சோதனைச் சாவடிகள் மீண்டும் தமது பொற்காலத்திற்காக ஏங்கி அப்படியே கிடக்கின்றன. பழையபடியே பிரதான சாலையைத் தவிர்த்து சாவடிகளைச் சுற்றிக் கொண்டு பயணிக்கின்றன பேருந்துகள். தமிழீழம் வரவேற்கிறது பலகையைக் கண்கள் தேடுகின்றன. ஒன்றும் இல்லை. அங்கே முன்பு ஏதோ இருந்தது என்பதற்கான தடயங்களே கிடையாது. அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த "பாஸ்" வழங்கும் இடம், தமிழீழ காவல்துறைப் பணியகம், தமிழீழ வருவாய்த்துறை நிலையங்கள் எல்லாமும் அழிக்கப்பட்டு விட்டன, எதுவும் இல்லை, இருந்த இடம்கூடத் தெரியவில்லை. வெறும் பச்சைப் பசேல் என்ற புல் வெளிகளாக வீதி ஓரங்கள் அனைத்தும் விரிந்து கிடக்கின்றன. ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரைக்கும் வீதியின் இரு மருங்கும் சுமார் அரைக் கிலோ மீட்டருக்கு இப்போது ஒன்றுமே இல்லை. செம்புழுதி படிந்தபடி கிடந்த காட்டு மரங்கள் இல்லை. பாலை மரங்களும் ஏனைய பெரிய மரங்களும் அங்கு இருந்ததற்கான அடையாளங்களும் இல்லை. மேற்கு நாடுகளின் முற்றங்களில் தண்ணீர் ஊற்றி வளர்க்கப்பட்ட புல் தரைகளாக அவை காட்சி அளிக்கின்றன. ஏன் அகற்றினார்கள் தமிழீழத்தின் அத்தனை பெரிய மரங்களையும் அடிக்கட்டை கூட இல்லாமல்.....? புரியவில்லை. அந்தப் புல் வெளிகளுக்கு நடுவே 200 மீட்டர் தூரத்திற்கு ஒன்றாக காவல் அரண்கள் -- கலை நயத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. காட்டு மரங்கள் நட்டு, ஓட்டுக் கூரை போட்டு, அரை வாசிக்குச் சரிவாக அணைக்கப்பட்டுள்ள மண்ணில் அறுகம் புற்கள் வேர்விட்டு பசுமையாய் படர்ந்திருக்கின்றன. இந்த காவல் அரண்களுக்கு இடையே தான் மக்களும் மீளக்குடியமர்த்தப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு எல்லாமும் கொடுக்கப்படும் தகரங்கள் தான். காட்டுத் தடிகளால் நான்கு கப்பு நட்டு, கூரை போட்டு மேலேயும் தகரம், சுற்றி வரவும் தகரம். இது தான் இப்போதைக்கு அவர்களின் இல்லம். பக்கத்தில், மிக நெருக்கமாக, அவர்களுக்கு இருக்கும் துணை - படை ஆட்களின் காவல் அரண்கள் மட்டும் தான். மீளக் குடியமர்ந்த மக்களின் வீடுகளில் இருந்து 20 அடி தூரத்தில் காவல் அரண்கள் கண்ணுக்குப்படுகின்றன. இல்லை.... நான் சொல்வது தவறு என்று நினைக்கிறேன்.... சரியாகச் சொன்னால், காவலரண்களில் இருந்து 20 அடி தூரத்தில் கொட்டகை அமைப்பதற்கு தான் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. வெய்யில் காய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மேலேயும் சுற்றி வரவும் தகரங்களும் தரப்பாள்களும் கொண்ட கொட்டகைகளில் வாழ்வு எப்படி இருக்கும் என்பதன் அனுபவம் 1996-இல் கிளிநொச்சியை விட்டு ஓடி ஒட்டுசுட்டானில் இருந்த போதே எனக்குத் தெரியும். அந்தத் தற்காலிகக் கொட்டகைகளின் அருகிலேயே பெண்களும், சிறுமிகளும், இளைஞிகளும் காணப்படுகிறார்கள். காவல் அரண்களில் படை ஆட்கள் இருக்கிறார்கள். சில இடங்களில் காவல் அரண்களுக்குப் பதில் காவல் துறையினரின் நிலைகள். மக்களின் தற்காலிகக் கொட்டில்களை விட அவை உறுதியானவையாகவும், அரை நிரந்தரமானவையாகவும் ஓடு போடப்பட்டவையாகவும் காட்சி தருகின்றன. கிணறுகளுக்கு அருகில் காணப்படும் இந்தக் காவல் நிலையங்களில் உள்ளவர்கள் குளித்துக் கொண்டிருப்பதைப் பேருந்தில் இருந்தபடியே பார்க்க முடிகிறது. பேருந்து அந்த இடத்தைக் கடக்கையில் 10 அடி தூரத்தில் அடுத்த கொட்டில் தெரிகிறது. உள்ளே இருப்பவர்களைப் பேருந்தில் இருந்தும் பார்க்க முடிகிறது. வீதியோரத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் இன்னும் உயிர் வாழும் வாய்ப்பு அரச மரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன. அரச மரங்கள் காணும் இடங்களில் எல்லாம் அதைச் சுற்றி வெள்ளை வெளீர் என்று சுவர்கள் கண்ணைப் பறிக்கின்றன. கௌதம புத்தர் அந்த மரங்களின் கீழே சத்தியத்தையும், அமைதியையும், வாழ்க்கையின் நிலையாமையையும், அகிம்சையையும் போதித்தபடி அமர்ந்திருக்கிறார். பேருந்துகள் மாங்குளத்தை நெருங்கிவிட்டன. முறிகண்டியில் அவை ஓய்வுக்காக நிறுத்தப்படும் என்றும் அங்கே ஒட்டுசுட்டான் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் சாப்பாட்டுக் கடை ஒன்று திறந்திருக்கிறது என்றும் எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கூட்டுறவுச் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் எனது உறவினர் முறிகண்டியில் தான் இருப்பார் என்பதும் எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. பல வருடங்களின் பின்னர், முக்கியமாக கடைசிப் போரில் எப்படியோ உயிர் தப்பிய அவரைப் பார்க்கும் ஆவல் என்னிடம் கட்டுக்கடங்காமல் இருந்தது. ஏமாற்றங்கள் மட்டுமே மிச்சமாகி விட்ட தமிழர்களில் நான் விதிவிலக்கா என்ன...? மாங்குளத்தில் உள்ள படைகளின் உணவு விடுதியில் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டு விட்டன. சிற்றுண்டிகளுக்கான பட்டியல் முதலில் சிங்களத்திலும் பின்னர் தமிழிலுமாக எழுதப்பட்டு நீட்டாகத் தொங்க விடப்பட்டிருக்கிறது. புறப்படும் போது மதியச் சாப்பாடு சாப்பிட்டிருக்கவில்லை எனினும் அங்கே எதையும் சாப்பிட மனம் இடங்கொடுக்கவில்லை. முறிகண்டியில் இனி பேருந்துகள் நிற்காது என்ற ஏமாற்றமும் எரிச்சலும் வேறு மனதை அலைகழித்தது. சலத்தையாவது கழிப்போம் என்று எதிர்ப் புறத்தில் Toilet என எழுதப்பட்டிருந்த இடத்தை நோக்கிப் போனேன். உள்ளே என்ன கந்தறு கோலமோ என நினைத்துக் கொண்டே பற்றைப் பக்கமாக ஒதுங்கினேன். சரசரப்புடன் ஏதோ ஒன்று நகர்ந்தது. கூர்ந்து பார்த்தபோது பச்சை உடையில் கைகளில் ஆயுதங்களுடன், தன் மீது தெறித்து விடாதபடிக்கு அந்த மனிதன் நகர்ந்து கொண்டான். இழுத்த ஜிப் அரைவாசியில் நிற்க சுற்றும் முற்றும் பார்த்தேன். நிறையப் பேர் அந்த மனிதன் போன்றே நின்றிருந்தார்கள். பேருந்துகளில் வந்தவர்கள் காடுகளுக்குள் போய் விடாமல் இருக்கக் காவல். அந்த நாற்றத்திற்குள் நின்று காவல் செய்ய வேண்டும் என்று உனக்கு விதிக்கப்பட்டிருந்தால், நான் என்ன செய்வது...? என் வேலை முடித்து வந்து பேருந்தில் ஏறிக் கொண்டேன். மாங்குளம் முகாம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் ஏ-9 வீதிக்குக் கிழக்காக விரிந்து கிடக்கிறது. 200 ஏக்கரா அதற்கும் மேலா என்று எனக்கு மதிப்பிடத் தெரியவில்லை. (மாங்குளம் சந்தியி்ல் உள்ள ஒரு வழிகாட்டுப் பலகை. ஊர்களின் பெயர்கள் சிங்களத்தில் இரு முறை எழுதப்பட்டுள்ளன: ஒன்று - அந்த ஊர்களுக்கு உரிய சிங்களப் பெயர்கள் (யாப்பாணய). அடுத்தது - சிங்களவர்களால் அந்த ஊர்களுக்குச் சூட்டப்பட்ட பெயர்கள் (யாப்பா பட்டுவ) முகாமைக் கடந்ததும் மீண்டும் ஒரு அரச மரம், சுற்றி வெள்ளைச் சுவர் அமைதியைப் போதிக்கும் பெரிய கௌதம புத்தர். இதுவரை பார்த்தவர்களிலேயே பெரியவர். மீண்டும் வீதியின் இரு மருங்கும் அதே காட்சிகள். எங்கெல்லாம் ஓடு போட்ட கட்டடங்கள் தெரிகின்றனவோ, அவை எல்லாம் ஒன்றில் படையினரின் முகாம்களாக, அல்லது காவல்துறை நிலையங்களாக இருக்கின்றன. தன் தாய் நிலத்தில் தகரங்களுக்குள் ஒடுங்கிக் கிடக்கிறான் தமிழன். கனகராயன் குளத்தில் பாடசாலைக் கட்டம் அப்படியே இருக்கின்றது. வெள்ளைச் சீருடையில் சில மாணவர்களைக் காண முடிகிறது. ஆனால், பாடசாலைகளைக் கடக்கும் போது எப்போதும் கேட்கும் அந்தத் தனித்துவமான இரைச்சல் சத்தம் கேட்கவே இல்லை. ஆங்காங்கே இடிந்து போன கோயில்களின் எச்சங்கள் தங்களைப் புனரமைக்கப் போகும் மீட்பர்களுக்காகக் காத்துக் கிடக்கின்றன. பேருந்துகள் கிளிநொச்சியை நெருங்குகின்றன. அமைதிக்காகக் காத்திருந்த காலங்களில் எனக்கு மிக நெருக்கமான ஊர் அது. பணி நிமித்தம் பல தடவைகள் அந்த நகரத்துக்கு வந்து போயிருக்கிறேன். யாழ்ப்பாணத்திற்குப் பின்னர் எனது பாதங்கள் அதிகம் நடந்தது அந்த நகரத்தில் மட்டும் தான். 55 ஆம் கட்டையில் புலிகளின் குரல் ஒலிபரப்புக் கோபுரங்கள் இருந்த இடத்தில் இப்போது வேறு கோபுரங்கள் நின்று கொண்டிருக்கின்றன. ஒன்றல்ல இரண்டு. கிளிநொச்சியை நெருங்குகையில் புலிகளின் குரல் வானொலிப் பணியகம் இருந்த இடத்தில் சிறிலங்கா படைகளின் சமிக்ஞை மத்திய நிலையம் நின்று கொண்டிருக்கின்றது. முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் வலுவாக நிரந்தரக் கட்டங்களுடன் அது காட்சி தருகிறது. அந்த இடமே சமிக்ஞை தருவதற்குத் தான் உகந்தது போல் இருக்கிறது. கிளிநொச்சி நகரைப் பார்ப்பதற்கு கண்களும் இதயமும் துடிக்கின்றன. கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் ஓட்டையாகிப் போன சுவர்கள் இன்னும் அப்படியே நின்று கொண்டிருக்கின்றன. அருகில் வேறு எவற்றையும் காணவில்லை. பாண்டியன் உணவு விடுதி இருந்த இடம் தெரியவில்லை. முன்னாலேயே பூங்காவில் முதிர்ந்த மரங்கள் தவிர பெரிதாக நினைவிடம் ஒன்று எழுந்து நிற்கிறது. போரில் இறந்த படையினருக்கானது அது. மேலிருந்து வெடித்துப் பிளந்து பூமி நோக்கி ஒரு வேர் போவதாக அமைத்திருக்கிறார்கள். மிகப் பிரமாண்டமாக இருக்கிறது. அதே இடத்தில் முன்னர் ஏதோ இருந்ததாக எனக்கு ஞாபகம். நினைவுபடுத்திப் பார்க்க விருப்பம் வரவில்லை. கிளிநொச்சி நகரில் ஏ-9 பாதையின் மேற்குப் புறத்தில் ஒன்றும் இல்லை. கற்குவியல்கள் மட்டுமே கிடக்கின்றன. சந்தை, கடைகள், மதுக் கடை, எதிர்ப் புறத்தில் இருந்த சேரன் வாணிபம்... கற்குவியல்களுக்குள் தேடினால் தடயங்கள் கிடைக்கக் கூடும். எல்லாமும்... எல்லாமுமே... போய்விட்டன. எஞ்சி இருக்கும் கடைகளில் சிங்களம் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. நெஞ்சு விம்மி வெடித்து இரத்தக் கண்ணீர் வடிக்கிறது. பேருந்தில் மயான அமைதி. எல்லோர் கண்களும் கடப்பதற்குள் பார்க்க முடிந்தவற்றைப் பார்வையால் விழுங்கிக் கொள்கின்றன. புதிதாகக் கட்டப்பட்டிருந்த தமிழீழ காவல்துறை அலுவலகம் கூரைகள் ஏதும் இன்றி எஞ்சி நிற்கிறது. முன்பு - அடிக்கடி போய் வந்திருக்கிறேன். சில வேளைகளில் இரவு நேர ஓய்வுகூட அங்கே தான் எடுத்திருக்கிறேன். மூன்று வருடங்களில் எல்லாமும் மாறி விட்டன. அந்தத் தண்ணீர் தொட்டி மீண்டும் உடைந்து கிடக்கிறது. முன்னர் அதன் தண்டுப் பகுதி நொருங்கி தொட்டிப் பகுதி மண்ணில் அரைவாசியாகப் புதையுண்டு கிடந்தது. இப்போது அடியில் தண்டுப் பகுதியுடன் முறிந்து கிழக்கு நோக்கிச் சாய்ந்து கிடக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம், அரசியல் துறைச் செயலகம், மாணவர் அமைப்புச் செயலகம் அமைந்திருந்த அந்தப் பகுதி இப்போது அதி உயர் பாதுகாப்ப வலயமாகத் தோன்றுகின்றது. அந்த இடத்தில் இருந்து கிளிநொச்சி நகர எல்லை தொடங்கும் பிள்ளையார் கோயில் வரைக்கும் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் இருக்கும் படை முகாம்கள் மட்டுமே தெரிகின்றன. அந்தப் பக்கத்தில் கடைகள் கொஞ்சம் எஞ்சி இருக்கின்றன. தமிழர்கள் அங்கு வாழ்ந்ததற்கான அடையாளமாக அவற்றின் மேல் எழுதப்பட்டுள்ள தமிழ் வாசகங்கள் மட்டுமே எஞ்சிக் கிடக்கின்றன. மறு புறத்தில் - மருத்துவமனைப் பகுதியை கடந்து நிமிர்ந்தால், ஞானம் கிடைக்காதவர்கள் மனிதர்களே இல்லை. அங்கும் கம்பீரமாக நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் கௌதம புத்தர். நயினாதீவு நாக விகாரை சின்னதாகத் தோன்றியது எனக்கு. பெரிய அரச மரத்தை விட்டு சற்று வெளியே அமர்ந்திருந்தார். உள்ளே இருந்தால் தனது இருப்பு மறைக்கப்பட்டு விடும் என்று நினைத்தாரோ என்னவோ வீதியில் செல்வோரைப் பார்த்தபடியே தியானம் செய்கிறார். கண்ணைப் பறிக்கும் வெள்ளை மதில் சுவர்கள் கணிசமான பிரதேசத்தைச் சுற்றி வளைத்து நிற்கின்றன. கிளிநொச்சிப் பிள்ளையார் கோயில் குண்டுக் காயங்களுடன் ஆனாலும் ஓட்டுக் கூரையுடன் முடிய கதவுகளுடன் இன்னும் அங்கேயே இருக்கின்றது. இனி பேருந்துக்கு வெளியே பார்ப்பதை நிறுத்திக் கொள் என்று மூளையில் இருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. அதனை மதிக்கத் தவறும் உணர்வுகள் பரந்தன் சந்தியில் அலை மோதுகின்றன. விசுவமடு நோக்கிச் செல்லும் பாதையின் மூலையில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலையம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தனியார் நிறுவனம் ஒன்று கட்டிவிட்ட ‘பருவகால வாழ்த்துக்கள்’ பதாகை தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் கட்டத்தில் என்ன எழுதி இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை; எனக்குச் சிங்களம் படிக்கவோ பேசவோ வராது. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எதிரே இருந்த கடைகளில் சில திறந்திருக்கின்றன. சிற்றுண்டிச் சாலைகள் என்பது பார்த்தால் தெரிகிறது. ராணுவ உருமறைப்பு உட்சட்டை அணிந்தவர்கள் சிலர் அங்கே அமர்ந்து தேநீர் அருந்துகிறார்கள். அங்கே எழுதி இருப்பவையும் அவர்களுக்கு மட்டும் தான் புரியும். இத்தனைக்கு மேல் இனியும் பார்க்க வேண்டுமா...? மனம் அங்கலாய்க்கிறது. நான் பார்க்க விரும்பவில்லை என்பதற்காக உண்மைகள் மறைந்துவிடப் போவதில்லையே! ஆணையிறவு....! முகமாலை சோதனைச் சாவடியை மூடிவிடப் போகிறார்களே என்ற காரணத்திற்காக மாலை 4.30 மணிக்கு உந்துருளியில், கண்களில் நீர் தாரையாக வழிய, 110 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேலே, முகத்தில் வந்தறையும் உப்புக் காற்றை எதிர்த்து நான் ஓடித் திரிந்த பாதை. பளையின் அந்த வளைவுகளைக் காணும் போது மட்டுமே என் உந்துருளியின் வேகம் குறையும். அந்தப் பக்கம் தமிழீழ காவல்துறையின் போக்குவரத்துக் கண்காணிப்பு ஆட்கள் நிற்பார்கள் என்ற பயம். உப்புக் கடலைத் தாண்டி, வாடி வீடு இருந்த இடத்தில் முதலில் உடைந்து போன பீரங்கி வண்டி ஒன்று முன்னர் நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது எதுவும் இல்லை. 2000-இல், சிறிலங்கா படைகளிடம் இருந்து ஆனையிறவை விடுதலைப் புலிகள் மீட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் விதத்தில் நினைவிடம் நிர்மாணிப்பதற்கு ஒதுக்கப்பட்டு துப்புரவு செய்யப்பட்டிருந்த இடத்தில் இப்போது ‘ஆனையிறவு மாடி வீடு’ என்ற மிகப் பிரமாண்டமான நினைவிடம் நின்று கொண்டிருக்கிறது. சிமென்ட்டினால் போடப்பட்ட அடித்தளத்தின் மேலே செப்புப் படிமங்களால் ஆக்கப்பட்ட பல கைகள் முழு இலங்கையைத் தூக்கிப் பிடித்து நிற்கின்றன. தாமரைப் பூவும் மொட்டும், அந்த இலங்கையின் ஆனையிறவுப் பகுதி வழியாகப் பின்னிருந்து முன்பாகக் கவிழ்ந்து கிடக்கின்றன. பணிகள் இன்னும் நடைபெறுகின்றன. கீழே மலர்ச் செடிகளும் வண்ணத் தாவரங்களும் வளர்ப்பதற்கும் நடைபாதை அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், கட்டத்தைச் சுற்றி இருந்த மறைப்பு நீக்கப்பட்டிருக்கிறது. யாரும் இதுவரை அதனைத் திறந்து வைக்கவில்லை. ஆனாலும், சிங்களவர்கள் நிறையப் பேர் யாழ்ப்பாணம் வந்து போகிறார்கள். பளையில் விடுதலைப் புலிகளின் சோதனை நிலையங்களும் "பாஸ்" அலுவலகங்களும் இருந்தன என்பது என் நினைவில் மட்டுமே இப்போது இருக்கின்றது. பளை நகருக்கு அருகிலேயே எனது தோழிக்கு பல ஏக்கர் தென்னந் தோட்டம் இருக்கிறது. இப்போது வந்தால் அவளுக்கு அது எங்கிருந்தது என்று அடையாளம் தெரியுமா...? சொல்லத் தெரியவில்லை. எறிகணைகளும் குண்டுகளும் கழுத்தறுத்த தென்னைகள் நின்றிருக்க வேண்டுமே..? 2001-இல் வந்த போது அவற்றைத் தானே முதலில் கண்டோம். இப்போது அந்தக் கழுத்தறுந்த தென்கைள் கூட இல்லை. ஆங்காங்கே சில மீட்டர் தூரங்களில் இருக்கும் காவல் அரண்கள் அதற்கான காரணத்தைச் சொல்லக்கூடும். இந்தப் பாதை முழுவதும், மீணடும், இடை இடையே கௌதம புத்தர் ஞானம் வேண்டித் தியானம் செய்து கொண்டே இருக்கிறார். முகமாலை சோதனை நிலையம் இருந்த இடம் இது தானா என்று ஞாபகப்படுத்திப் பார்க்கக் கடினமாக இருக்கிறது. மிருசுவில் வந்துவிட்ட பின்னர்தான் இந்த இடங்களை எல்லாம் நாம் தாண்டி வந்து விட்டோம் என்பது உறைக்கிறது. ஒரு நாடு ஒரே மக்கள் ((one nation one people) எழுத்துக்கள் மஞ்சள் பலகையில் கறுப்புப் படிமங்களாகச் சிரிக்கின்றன. இந்தப் பயணத்தின் முடிவில் நான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னதில் தவறு இருப்பதாக எனக்கு கிஞ்சித்தும் தோன்றவில்லை. ஆக்கிரமிக்கப்பட்டதன் அடையாளமாக நிறுத்தப்படும் வரையில் கௌதம புத்தனும் ஒரு ஆக்கிரமிப்பாளனே தான். சித்தார்த்தனாகத் தான் பிறந்த போது செய்யத் தவறியதை சிறிலங்காவில் அவன் செய்கிறான். யாழ்ப்பாணம் அப்படியே தான் இருக்கிறது. அபிவிருத்தி அடைந்ததாய் ஊடகங்கள் சொன்னவற்றைக் கண்களால் காண முடியவில்லை. வங்கிகள் மட்டுமே அவசர அவசரமாக குக்கிராமங்களையும் ஒழுங்கைகளையும் தேடிச் சென்று கிளைகள் திறக்கின்றன. மதுச் சாலையின் முன்பாகத் தான் வங்கிக் கிளை அமைக்க இடம் கிடைக்குமா...? அது பற்றிக் கவலையில்லை; எங்கே இருந்தாலும் கிடைக்க வேண்டியது பணம் தானே...? வாழ்ந்த இடங்களும் திரிந்த இடங்களும் இப்படிக் கிடக்கையில் மக்கள் என்ன சொல்கிறார்கள்...? தாங்கள் பட்ட துன்பங்களின் வடுக்கள் இன்னும் அவர்கள் மனங்களில் இருந்து ஆறவில்லை. ஐரோப்பாவிலிருந்து வந்திருந்த பழைய நண்பன் ஒருவனுடன் தெருவோரக் கடை ஒன்றில் தேனீர் அருந்தினேன். உதயன் படித்துக்கொண்டு அரசியல் பேசிய பெரியவர் ஒருவரிடம், "தளர்ந்து போகாதங்கோ, ஐயா, எல்லாம் வெல்லலாம். பேராட்டத்தை மட்டும் கைவிட்டுவிடக் கூடாது" என்றான் என் நண்பன். பத்திரிகையிலிருந்து கண்களை எடுத்து அவனை நேரே பார்த்து அவர் சொன்னார் - “வெளிநாட்டில இருந்துவிட்டு வந்து இங்க போராடுறதைப் பற்றிக் கதைக்கக் கூடாது, ராசா. இங்கயே சீவிச்சால் தான் இங்க என்ன நிலைமை எண்டு விளங்கும்." திரும்பி என்னைப் பார்த்தான் நண்பன். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. நன்றி தட்ஸ் தமிழ்
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம்- 8 மணலாறு காட்டிடை மேவிய தளபதி பிரிகேடியர் சொர்ணம் தமிழீழத்தின் தலைநகரில் தொடங்கிய 5 ஆம் கட்ட ஈழ யுத்தம் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் என்று விரிந்து மணலாறு மண்ணிலும் தரித்து நின்ற காலம் அது. அந்தக் காலத்தின் ஒரு நாளில் தாயக தேசத்தை மூடி நின்ற வானம் இருண்டு போய்க் கிடக்கிறது. வானத்திற்கு வெளிச்சமூட்ட முனைந்து தோற்றுப் போன நிலையில் தன்னை முகில் கூட்டங்களுக்குள் மறைத்து மறைத்து எட்டிப் பார்க்கிறது தேய்பிறை. அந்த அழகை ரசித்தபடி நிற்கிறார்கள் சோதியா படையணியின் பெண் போராளிகள். அவர்களின் கரங்கள் திடமாக பற்றி இருந்த துப்பாக்கிகள் எதிரியின் வரவை எதிர்பார்த்து விழித்திருந்தன. சோதியா படையணி போராளிகள் மட்டுமல்லாது மணலாறு கட்டளைப்பணியக போராளிகள், தலைமைச் செயலக “மணாளன்” சிறப்பு தாக்குதலணி மற்றும் பூநகரி படையணி போராளிகள், எல்லைப்படை மற்றும் காவல்துறைப் படையணி என பல படையணி போராளிகளை உள்ளடக்கிய போராளிகளணி. இதன் கட்டளைத் தளபதியாக பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் பணியாற்றினார். வான் நிலாவின் அழகை ரசித்தபடி சுடுகலன்களை தயாராக வைத்து காத்திருக்கிறது அந்த அணி. அதில் பல புதிய போராளிகள் இருந்தாலும், அவர்கள் விசுவாசமாக சண்டையை எதிர் கொண்டதும் எதிரிகளை திணறடித்ததும் அங்கு பதிவாகிய வரலாறு. அவர்களுக்கான அணித்தலைவர்கள் அனுபவம் மிக்க சண்டையணிப் போராளிகள் என்பதால் சண்டையை சீராக செய்ய கூடிய நிலை இருந்ததும் அங்கு பெறுமதியான பதிவாக மணலாறுக் களமுனை அன்று நிமிர்ந்து நிற்கிறது. இந்த நிலையில் போராளிகள் தயார்நிலையில் இருந்த அதே வேளை, களமுனையின் எல்லை வேலி இந்திரன் முகாமில் இருந்து மிக அருகில் சிங்கள இராணுவமும் அதை தாண்டிய ஜீவன் முகாமருகில் போராளிகளுமாக நீண்டு சென்றது. மிக அருகில் ஜீவன் முகாமில் பிரிகேடியர் சொர்ணம் தனது கட்டளை பணியகத்தை (Commanding station ) அமைத்து இருந்தார். அவருக்கு ஜீவன் முகாமின் ஒவ்வொரு அங்குலத்தையும் பார்க்கும் போதெல்லாம் 1987 ஆம் ஆண்டு கால நினைவுகள் மனதை விட்டு மறையாது இருக்கும். இந்திய இராணுவத்தின் வருகை விடுதலைப்புலிகளையும் தேசியத்தலைவரையும் மணலாறுக் காட்டுக்குள் கொண்டு சென்ற போது, ஜீவன் முகாம் பல வருடங்களாக தேசியத் தலைவரை தாங்கி நின்ற வரலாற்று நிமிர்வு மிக்கதான ஒரு முகாம். வானுயர்ந்த மரங்களின் போர்வைக்குள் எதிரியின் நுழைவுகளை தடுக்கும் பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு நிமிர்ந்து நின்றது ஜீவன் முகாம். ( முன்னாளில் உதயபீடம் என்று அழைக்கப்பட்ட இந்த முகாம் தான் தலைவரின் பிரதான தங்ககம்) அது மட்டுமல்லாது, நீதிதேவன் (நீதி வழங்கல்), காமதேனு ( வளங்கல் பிரிவு) விடியல் (மகளிர் படையணி), வைகறை (மகளிர் படையணி) அமுதகானகம் (மருத்துவபிரிவு) என பல முகாம்கள் அங்கு நிமிர்ந்து நின்றன. பின்நாட்களில் அவை குறியிடு பெயர்கள் மாற்றப்பட்டு மாவீரர் பெயர்களை தாங்கி நின்றது வரலாறு. அங்கு தான் ஜொனி மிதிவெடியின் உயர் பயனை விடுதலைப்புலிகளும் எம் வெடிபொருள் உற்பத்தி அறிவினை இந்திய இராணுவமும் அறிந்த நாட்கள் அமைந்திருந்தன. தேசியத்தலமையை தன்னுள் பல காலங்களாக சுமந்து நின்ற இந்த முகாம்களின் வடிவமைப்பின் போது விடுதலைப்புலிகளின் நம்பிக்கைக்குரிய பொது மகன்கள் சிலரையும் நாம் நினைவு கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒமர் முக்தார் (Omar Mukhtar, 1858 – செப்டம்பர் 16, 1931 மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர்.இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார். ) என்று அன்பாக விடுதலைப்புலிகளால் அழைக்கப்படும் லெப் கேணல் டடி அல்லது நவம் என்ற மாவீரனை பெற்ற தந்தை அதில் முக்கியம் பெறுபவராவார். அவர் மூலமாகவே அதுவரை வவுனியா மன்னார் காடுகளில் வாழ்ந்த விடுதலைப்புலிகளுக்கு மணலாறு காடு பற்றிய அறிவும் பரீட்சயமும் கிடைத்தது. அவரால் தான் மணலாறு காடு பெரும்பாலும் விடுதலைப்புலிகளின் வாழ்விடமாகியது. அவரின் அனுபவமும் திறணும் மணலாறு காட்டினுள் பல இடங்களில் வாழ்விடங்களாகவும் கிணறுகளாகவும் நிமிர்ந்து நின்றதை நாம் மறுக்க முடியாது. இங்கு மிக முக்கியமான ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டியது அவசியம். மணலாறு காட்டினுள் இருந்த இந்திரன் முகாமில் நிலத்தடி மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதாவது சாதாரண பதுங்ககழி போல் அல்லாது நிலத்துக்கு கீழாக ஒரு மருத்துவமனையை நிர்வகிக்க கூடிய அளவில் நிலத்தடி மருத்துவமனை ( Underground Hospital ) அமைக்கப்பட்டு போராளிகள் பராமரிக்கப்பட்டார்கள். இது கட்டுவதற்கும் இவரின் பங்கு மிக முக்கியமானதாக வரலாறு பதிவாகியிருக்கிறது. அதைப் போல தேசியத் தலைவனின் மிக நெருக்கத்திக்குரிய பாதுகாவலனாக இருந்த ஆதவன் அல்லது கடாபி என்று அழைக்கப்படும் மூத்த தளபதியின் தந்தை காட்டுக்குள் சமையல் கூடங்கள் மற்றும் வெதுப்பகம் என்பவற்றை உருவாக்குவதில் வெற்றி கண்டு எம் வரலாற்றில் முக்கியம் பெறுகிறார் . ஓங்கி வளர்ந்திருந்த மரங்களின் அசைவில் எழும் இன்னிசைகளில் இந்த நினைவுகள் எல்லாம் வந்து போன போது அந்த நாட்களை தன் விழி முன்னே கொண்டு வந்து நினைவு கொள்வார் பிரிகேடியர் சொர்ணம். கெரில்லா போராளிகளாக இருந்த காலத்தில் தான் எவ்வாறு பயணித்தார் என்பதை அடிக்கடி நினைவூட்டிக் கொள்வார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பரினாம வளர்ச்சியின் பின் இன்று மரபுவழி இராணுவக் கட்டமைப்பாக நிமிர்ந்து நின்றாலும் மணலாறு காட்டைப் பொறுத்தவரை கெரில்லா போர்முறையே சரியான தெரிவாக இருக்கும் என்பது அவரது தெரிவாக இருந்தது. ஏனெனில் 1991ஆண்டு ஆகாய கடல் வெளி என்ற பெரும் வலிந்து தாக்குதலை செய்து விடுதலைப்புலிகளின் போரியல் ஆற்றலை சிங்களத்துக்கு புகட்டிய எம் அமைப்பு அது முடிந்த சில நாட்களில் இதே மணலாறு காட்டினுள் மின்னல் நடவடிக்கை சிங்களத்தால் செய்யப்பட்ட போது, அதை எதிர்கொள்ளும் திடத்தை பெற்றிருந்ததை மறுக்க முடியாது. சிங்களம் மணலாறு காட்டுக்குள் மின்னல் படைநடவடிக்கையை செய்து காட்டுக்குள் வந்திருந்தாலும் அதை அவர்களால் பாதுகாக்க முடியவில்லை. உடனடியாகவே அந்த நடவடிக்கையை விட்டு வெளியேறிச் சென்றது. காரணம் அப்போதெல்லாம் சிங்கள இராணுவத்திற்கு போதிய அளவு காட்டு நடவடிக்கைகள் பரீட்சயம் இல்லாமல் இருந்தது. இவ்வாறான படை நடவடிக்கைகளின் தோல்விக்கு பின்னான காலங்களில் “ஜெயசிக்குறு” என்ற படை நடவடிக்கையை சிங்களம் செய்த போது அமெரிக்காவின் Green pared என்ற படையணியின் மூலமாக முற்று முழுதான காட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார்ப்படுத்தப்பட்டே வந்தன. ஆனாலும் அவர்களும் எமது படையணிகளிடம் பல முறை அடி வாங்கி சிதைந்து போனது வரலாறு. இது இவ்வாறு இருக்க, ஒரு மரபுவழி இராணுவக் கட்டமைப்பால் அந்த காட்டுக்குள் நின்று உணவு மருத்துவம் என்று எந்த தேவைகளையும் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாது என்பதே அவரது கணிப்பாக இருந்தது. அதற்காக அவரின் போரியல் முறையில் சில வேவு அணிகளை தயார்ப்படுத்தி எல்லை வேலிக்கு முன் நகர்த்தி இருந்தார். அவர்கள் கெரில்லா முறைத் தாக்குதல்களை செய்ய பணிக்கப் பட்டார்கள். இவ்வாறாக அந்த களமுனை இறுதிக் கட்ட சண்டையை மிக மூர்க்கமாக எதிர்கொண்டிருந்த காலத்தில் தான் சில இடங்களில் சிதைந்திருந்த எம் எல்லையை சீராக்கி FDL (Forward Defense Line இதை பேச்சுவழக்கில் லைன் (line) என்று குறிப்பிடுவார்கள். ) முன்னகர்த்த வேண்டும் என்ற எண்ணம் அவருள் எழுகிறது. இதற்காக திட்டமிட்டு 2008 சித்திரை 27 ஆம் நாள் அணிகளை நகர்த்துகிறார். பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் திட்டம் எதிரிக்கு கசிந்து விட்டதாலோ என்னவோ சண்டை எம் அணிகள் நினைத்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. அதனால் மறுபடியும் சித்திரை 29 ஆம் நாள் பெரும் முயற்சி எடுக்கப் படுகிறது. அந்த சண்டை எமக்கு சாதகமாக இருந்த போதும் நாம் புதிய சிக்கல் ஒன்றை எதிர் கொள்ள நேர்ந்தது. விடுதலைப்புலிகள் மீண்டும் தொடர் தாக்குதல்களை செய்யலாம் என்று எதிர்பார்த்த சிங்களம் இரவு முழுவதும் ஓயாத எறிகணை தாக்குதல்களை செய்கிறது. அந்த எறிகணையின் சிதறல்கள் கட்டளைச்செயலக பகுதிகளையும் தாக்குகிறது. பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் பாதுகாப்பு போராளிகள் பதுங்ககழிக்குள் வருமாறு பல தடவை அழைத்தும் உள்ளே செல்லாது பதுங்ககழிக்கு மேலே படுத்திருந்தார். அந்த சிதறல்களில் ஒன்று சொர்ணம் அவர்களின் கழுத்திலும் இன்னொன்று கண்ணுக்கு மேல் உள்ள புருவத்திலும் தாக்குகின்றன. இரத்தம் சீறிப் பாய்கிறது. களமருத்துவப் போராளி உடனடி இரத்தக் கட்டுப்பாட்டை செய்துவிட்டு அருகில் இருந்த குட்டுவன் என்ற முகாமில் மருத்துவ முகாமை அமைத்து தங்கி நின்ற இராணுவ மருத்துவர் தணிகை மற்றும் மருத்துவப்பிரிவு பொறுப்பாளர் ரேகா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப் படுகிறது. அவர்களோடு மருத்துவ நிர்வாக போராளி நம்பியும் உடனடியாக ஜீவன் முகாமுக்கு வருகிறார்கள். காயத்தின் நிலை கொஞ்சம் சிக்கலாக இருந்ததால் அருகில் இருக்கும் ஏதோ ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலை உணரப்படுகிறது. மருத்துவர் தணிகையும் பொறுப்பாளர் ரேகாவும் அதை எடுத்து கூறுகிறார்கள். உள்ளே தங்கி விட்ட எறிகணைத் துண்டை வெளியில் எடுக்க வேண்டிய தேவையை அவர்கள் அவருக்கு உணர்த்த முனைகிறார்கள். ஆனால் தான் அந்த இடத்தை விட்டு ஒரு போதும் பின்நகரப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் தளபதி சொர்ணம். ஆனால் எவ்வாறாயினும் அவரை புதுக்குடியிருப்புக்கு நகர்த்தி விட துடித்தனர் இரு மருத்துவ பிரிவு போராளிகளும். தம்மிடம் இப்போது மயக்க மருந்து குடுத்து சத்திரசிகிச்சை செய்ய உபகரணங்கள் இல்லை அதனால் கப்டன் கீர்த்திகா இராணுவ மருத்துவமனைக்கு போய் சத்திரசிகிச்சை பெற்று உடனே திரும்பலாம் என்பதை வலியுறுத்துகிறார்கள். அவரோ மறுக்கிறார். அவர்களுக்கு களமுனையில் மயக்க நிலையில் மூத்த தளபதி ஒருவரை வைத்திருக்கும் அபாயம் கண்முன்னே நின்றது. அதை விட சொர்ணம் அவர்கள் ஒரு நீரிழிவு நோயாளி அவருக்கு தகுந்த வசதிகளற்று சிகிச்சை அளித்து அதனால் விளைவுகள் பாதகமானால் ? என்ற வினா எழுந்து நின்றது. ஆனால் அவர் அதை ஏற்க வில்லை மயக்க மருந்து போட தேவை இல்லை லோக்கல (Local Anesthesia/அனஸ்தீசியா) போட்டு சிதறிய எறிகணைத் துண்டை எடுக்கும் படி கேட்கிறார். அவர்கள் மறுக்கிறார்கள். அப்போது இவ்வளவு பேர சண்டைல விட்டிட்டு இந்த ஒரு காயத்துக்கு சிகிச்சை என்று என்னால் பின்னுக்கு போக முடியாது என்கிறார் தளபதி சொர்ணம். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர் மருத்துவர்கள். ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அவரை புதுக்குடியிருப்பில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயல்கின்றனர். சத்திரசிகிச்சைக் கூடம் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என்றார்கள். அதற்கும் பதில் தந்த தளபதி சொர்ணம் எங்கட பெடியள் எத்தின பேருக்கு பங்கருக்க வைச்சுத் தான் தான் உயிர் காத்தனிங்கள் என்னை மட்டும் ஏன் இப்பிடி செய்கிறீர்கள்? என்னால் இவ்வாறான நிலையில் அண்ணைய பார்க்க முடியாது. புதுக்குடியிருப்பு போனால் அவர சந்திக்காமல் வர முடியாது அதனால் நான் பின்னால் வர மாட்டேன். அவர் உறுதியோடு இருந்தார். சண்டை எப்ப தொடங்கும் என்று தெரியாத நிலை. இதுக்குள் நான் எப்பிடி பெடியள விட்டிட்டு பின்னால வாறது என்னால முடியாது. என்று மறுக்கிறார். அவரின் உறுதியும் இறுதியான கட்டளையும் மருத்துவர் தணிகைக்கு எதையும் செய்ய முடியாத நிலையை உருவாக்குகிறது. கிடைத்த வளங்களை வைத்து அந்த சத்திரசிகிச்சையை செய்ய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்திருந்தது. பதுங்ககழிக்குள் வைத்து சிகிச்சை செய்ய அழைத்த போதும் அதை மறுத்து வெளியில் வைத்தே சிகிச்சை செய்ய தளபதி சொர்ணம் அவர்களால் பணிக்கப்படுகிறார் மருத்துவர். பெரிய வெளிச்சத்தை பாச்ச முடியாத சூழலில் சூரிய விடியலின் சிறு வெளிச்சத்தைக் கொண்டு இரத்த அழுத்தம்(Blood Pressure ) பரிசோதிக்கப்படுகிறது. இரத்த அழுத்தம் சரியான நிலையில் இருந்த போது அனஸ்தீசியா ( Local Anesthesia) போடப்பட்டு சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. வெடிபொருள் சிதறல்கள் அகற்றப்பட்ட பின் உடனடியாகவே சண்டைக்கு தயாராக வோக்கியை கையில் எடுத்துக்கொண்டு நிமிர்ந்த குரலை கேட்ட போது இராணுவ மருத்துவர் தணிகையின் விழி கலங்காமல் இல்லை. உண்மையில் ஒரு பெரும் தளபதி தன் காயத்தை கூட பொருட்படுத்தாது, களமுனை நிலவரத்தை மனதில் கொண்டு களமுனை விட்டு நகர மாட்டேன் என கூறியது எம் போராட்ட வரலாற்றை மீண்டும் பெறுமதியாக்கி சென்றது. எம் தளபதிகள் இறுதி வரை இவ்வாறே வாழ்ந்தார்கள். தம் சாவுக்கு மேலாக மக்களை நேசித்தார்கள். அவர்களின் குடும்பங்களை பற்றி சிறிதளவு கூட சிந்திக்காது தலைவனை பற்றிச் சிந்தித்தார்கள். கவிமகன்.இ 23.12.2017
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 7 நாங்க போராளிகளா… அல்லது கூத்தாடிகளா..? ஜேர்மனியின் குறித்த பகுதி ஒன்றில் விசேட மக்கள் சந்திப்பு ஒன்றுக்காக, பிரித்தானியாவில் இருந்து தேசத்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்த எங்கள் உரிமைக் குரலுக்குரியவரும் அங்கிள் என்று அன்பாக போராளிகளால் அழைக்கப்பட்டு உரிமை கோரப்பட்டவரும் தமிழீழத்துக்காக உலகெங்கும் தனது குரலை உரிமையோடு ஒரிக்க விட்டவருமான அன்டன் பாலசிங்கம் அவர்களும் தாயகத்தில் இருந்து புன்னகைக்குச் சொந்தக்காறனாக இருந்து போராளிகள் மக்கள் என்ற பாகுபாடின்றி தாயகம், புலம்பெயர் தேசம் என்ற வேறுபாடின்றி தமிழீழம், இலங்கை, அனைத்துலகம் என்ற பிரிவின்றி எங்கும் புன்னகையால் கொள்ளை கொண்ட அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களும் வருவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகி இருந்தன. குறித்த நகரத்தில் ஏற்பாட்டாளராக இருந்தவருக்கு பிரித்தானியாவில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது. “எப்பிடியடாப்பா ஏற்பாடுகள் எல்லாம் முடிஞ்சுதே? சனம் என்ன மாதிரி…?” அண்ண சனம் ஆர்வமா இருக்கு உங்களையும் தமிழ்செல்வன் அண்ணையையும் பார்க்க வேணும் என்று ஆவலாக இருக்குதுகள். கடுமையான எதிர்பார்ப்போட உங்களுக்காக காத்திருக்குதுகள் அண்ண. “எங்கட சனம் எப்பிடி என்று சொல்லவா வேணும் அண்ண? நகரப் பொறுப்பாளர் மிக மகிழ்வோடு கூறியதை கேட்டுக் கொண்டிருந்த பாலா அங்கிள், ” சரியடாப்பா நாங்கள் சரியான நேரத்துக்கு விமானநிலையம் வந்திடுவம் அங்க ஒரு கார் அனுப்பு சரியா? தொலைபேசி துண்டிக்கப்பட இருந்த சந்தர்ப்பத்தில் ஏற்பாட்டாளர் சந்தோசமாக இன்னொரு தகவலை குறிப்பிடுகிறார். அண்ண உங்கள விமானநிலையத்தில் இருந்து கூட்டி வருவதற்கு ஒழுங்கு செய்திட்டன் அண்ண. விமான நிலையத்தில இருந்து உயர் ரக கார் ஒன்று உங்களை ஏற்றி வரும் அதற்கு பிறகு நிகழ்விடத்தில், மக்கள் இரு பக்கமும் சுமார் 200 மீட்டர் வரை நின்று உங்களை வரவேற்பார்கள். வாசல்வரை கார் கொண்டு வரும் அதன் பின் உங்களை பூமாலைகள் அணிவித்து ஆராத்தியுடன் உள்ளே அழைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இருக்கு அண்ண… தொடர்கிறார் ஏற்பாட்டாளார். அந்த குரலை இடைமறித்த மறுபக்கம் “நிறுத்து… நாங்கள் என்ன களியாட்ட நிகழ்வுக்கா வருகிறோம்…? நாங்க போராளிகளா அல்லது கூத்தாடிகளா? அல்லது அரச தலைவர்களா…? ஆடம்பரம் காட்டுறதுக்கு? தாயகத்தில எங்கட மக்கள் என்ன நிலையில வாழுகினம் என்றத மறந்திட்டியா…? ஜேர்மனிக்கு எங்கட மக்கள பார்க்கத்தான் நாங்கள் வாறம். பொழுது போக்குக்கல்ல பூ மாலையும் வரவேற்பும் ஏற்றுக்கொள்ள வரல்ல. புரிஞ்சு நடந்துக்க. சாதாரண கார் ஒன்றை அனுப்பு… மக்களை மண்டபத்தை விட்டு வெளியில் கொண்டுவர வேணாம் கார் கார்ப்பார்க்கிங்ல நிக்கட்டும் அதில இருந்து நாங்கள் நடந்தே வருவோம் இதை விட்டு எதாவது ஆடம்பரம் காட்டாத மீறினா நடக்குறதே வேற. அந்த குரலின் அதிகாரத்திலும் கட்டளையின் வேகத்திலும் இந்தப்பக்கம் அதிர்ந்து கிடந்தது. “சரி அண்ண” பதில் அலைபேசி வழி சென்றடையும் முன்னே தொடர்பு துண்டிக்கப்படுகிறது. சொகுசான வாழ்க்கையை பல உறவுகள் தேடிக் கொண்டிருந்த போது, புலம்பெயர் நாட்டில் மேன்நாட்டு வாழ்க்கைக்குள்ளும் தன்னைத் தொலைத்து விடாத விடுதலைப் போராளியாக வாழ்ந்து வந்தவர் எங்களின் தேசக் குரல் அன்டன் பாலசிங்கம் அங்கிள்… இவ்வாறான ஓர்மமும் உறுதியும் கொண்ட பாலா அங்கிள் வன்னியில் இருந்த காலத்தில் அதாவது 1999 ஆம் ஆண்டு உடல்நிலையில் பயங்கர பின்னடைவை சந்தித்தார். தமிழீழ மருத்துவர்கள் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். மூத்த இராணுவ மருத்துவர் ஒருவரின் முழுமையான பொறுப்பில் பாலா அங்கிள் படுக்கையில் மருத்துவ சிகிச்சைக்காக இருக்கிறார். அவர் கூட அடேல் அன்டியும் பராமரிப்புக்காக இருக்கிறார். பூரண மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அவரது சிறுநீரகம் செயலிழந்து போகிறது. உடனடியாக அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழீழ இராணுவ மருத்துவர்கள் அவரது சிறுநீரை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அதாவது சிறுநீரில் உள்ள பொட்டாசியம் (Potassium) மற்றும் யூரியா (urea) ஆகியவற்றின் அளவுகளை சரியாக கணித்துக்கொள்ளும் பரிசோதனை செய்ய வேண்டும் (Urine Analyze ) ஆனால் அதற்கான எந்த வசதிகளும் வன்னியில் அப்போது இருக்கவில்லை. (Analyzers) என்ற சாதனம் எம்மிடம் இல்லை அதனால் கொழும்புக்கு சிறுநீரை அனுப்பி பரிசோதிக்க வேண்டிய சூழல் வருகிறது. தினமும் செல்லும் அவசர ஊர்தியில் (Ambulance) அவரது சிறுநீர் வேறு ஒருவரது பெயரோடும் அவரின் வயதோடும் அனுப்பப்படும். நான்கு நாட்கள் கழிந்த நிலையில் கிடைக்கும் பெறுபேறுக்காக (Report) மருத்துவர்கள் காத்திருப்பார்கள். சாதாரணமாக ஒவ்வொரு 10 மணித்தியாலத்துக்கு ஒரு முறை பரிசோதித்து பெறுபேற்றை (Report) ஆராய வேண்டிய நிலையில் இருக்கும் சிறுநீர் பெறுபேறு நான்கு நாட்களுக்கு ஒருமுறையே ஆராயப்பட்டது. தேசியத்தலைவரை தம்பி என்று உரிமையோடு அழைக்கும் அந்த குரல் வன்னியில் ஓய்ந்து போடுமோ என்ற அச்சம் எழுந்த போதெல்லாம் தலைவருக்கு விடுதலைப்புலிகளின் மூத்த இராணுவ மருத்துவர் நம்பிக்கை கொடுத்தார். “அண்ண பாலா அண்ணைக்கு ஒன்றும் ஆகாது ஆனாலும் நாங்கள் லண்டனுக்கு அனுப்புறது நல்லது அண்ண… ” மருத்துவரின் நம்பிக்கையான வார்த்தைகளுக்குள் இருந்து மறு தெரிவு ஒன்றும் வெளி வந்தது. லண்டனுக்கு அனுப்பப்பட்டால் நிட்சயமாக அவரின் உடல்நலம் சீராகும் என்ற நம்பிக்கையை மருத்துவர் விதைத்தார். தலைவருக்கும் அதுவே சிறந்த தெரிவாக இருந்தது. அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அண்ணைக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. தமிழ்செல்வன் அண்ணை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக (ICRC) அன்றைய சிங்கள அரச தலைவராக இருந்த சந்திரிக்கா குமாரதுங்காவுக்கு தொடர்பினை ஏற்படுத்துகிறார். பாலா அங்கிளின் உடல்நிலையை தெரியப்படுத்தி அவசரமாக பயண வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. அதாவது கட்டுநாயக்கா விமானநிலையம் ஊடாக பிரித்தானியாவுக்கு அவரை அனுப்புவதற்கான அனுமதி கேட்கப்படுகிறது. கேட்கப்பட்ட மறு நிமிடமே சந்திரிக்கா பாலா அங்கிளை கட்டுநாயக்கா ஊடாக லண்டனுக்கு பயணம் செய்ய தான் அனுமதிப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்வதாகவும் கூறுகிறார். தன்னைப் பொறுத்தவரை அவர் ஆயுதம் ஏந்த வில்லை அதை விட உலக அரசியல் ஒழுங்குகள் இந்த நடவடிக்கை மூலம் எந்த கெடுதலையும் பெறாது என்ற எண்ணம் சந்திரிக்காவுக்கு இருந்திருக்கலாம். தலை சிறந்த உலக அரசியல் வல்லுனர்களுக்கு நிகரான பெரும் அரசியலாளன் என்ற உண்மையை சந்திரிக்கா உணர்ந்திருக்கலாம் அதனால் உடனடியாக பணயத்துக்கு அனுமதி தருவதாக கூறுகிறார். ஆனால் உடனடியாக அனுமதி தருவதாக சம்மதித்த அம்மையார் 3 அல்லது 4 நாட்கள் கடந்தும் அதற்கான ஏற்பாடுகளை செய்யாது காலம் நகர்த்தினார். பின் அனுமதிக்க முடியாது என்று மறுக்கிறார். அப்போது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தால் எதற்காக மறுக்கிறீர்கள்? என்று காரணம் கேட்கப்பட்டது. அப்போது தனக்கு இதில் ஆட்சேபனை இல்லை என்றும் தனது இராணுவ படை அதிகாரிகள் இது தொடர்பாக அதிர்ப்தி தெரிவிப்பதாகவும் கூறுகிறார். ஆனால் மீண்ணும் மீண்டும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முயன்று கொண்டிருக்கிறது. அரசியல்துறையும் முயற்சியை கைவிடாது முயல்கிறது. ஆனால் இனவாத அரசும் அதன் துவேசம் பிடித்த இராணுவ அதிகாரமும் அனுமதியை இறுதிவரை தரவே இல்லை. எம் மூத்த மருத்துவர் தொடக்கம் இராணுவ மருத்துவர்கள் மற்றும் உதவி மருத்துவர்கள் தொடக்கம் நெருங்கி இருந்த போராளிகள் வரை அனைவருக்கும் ஏமாற்றம். பாலா அங்கிளை நாம் இழந்து விடுவோமோ என்ற ஏக்கம். ஆனாலும் தலைவர் இதை எதிர்பார்த்தே இருந்தார். அதனால் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அண்ணைக்கு பாலா அங்கிளை பிரித்தானியாவுக்கு கடல் மூலம் கொண்டு செல்வது தொடர்பான ஏற்பாடுகளை கவனிக்க கட்டளையை ஏற்கனவே இட்டிருந்தார். ஒரு பக்கம் அரசியல்துறை முயன்று கொண்டிருக்க மறுபக்கம் கடற்புலிகளின் அணிகள் பாலா அங்கிளை பிரித்தானிய மண்ணுக்கு அழைத்துச் செல்ல தயாராகியது. சிங்கள தேசம் விடுதலைப்புலிகள் தமது அரசியல் ஞானியை இழக்கப் போகிறார்கள் என்று கணக்குப் போட்டுக் கொண்டது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்திருக்காத ஒன்று கடல் மூலம் நிறைவேற்றப்பட்டது. சிங்களம் பாலா அங்கிள் வன்னியிலே இருப்பதாக கனவு கண்டு கொண்டிருக்க கடல் நீரை கிழித்துக் கொண்டு கப்பல் ஒன்று அவரை பிரித்தானிய மண்ணுக்கு கொண்டு சென்றது. இதற்காக சூசை அண்ண நேரடியாக கடலில் நின்றார். மருத்துவப் போராளி ஒருவரோடு பாதுகாப்புப் படகுகள் நீரை கிழித்து செல்ல பாலா அண்ண சிறிய படகின் மூலமாக சர்வதேச கடல் எல்லைக்கு நகர்த்தப்படுகிறார். பின் அங்கே நங்கூரமிடப்பட்டிருந்த சர்வதேச கப்பல் ஒன்றில் ஏற்றப்பட்டு விநியோக பிரிவு போராளிகளால் பாலா அங்கிள் தன் துணைவியோடு பாதுகாப்பாக பிரித்தானியாவுக்கு கொண்டு செல்லப்படுகிறார். இந்த நிலையில் தன் கணவனை தனது குழந்தை போல் தாங்கி நின்ற திருமதி அடேல் பாலசிங்கம் அன்டியின் துணிவும் பாசமும் நேர்த்தியான தாதியப் பணியும் கட்டாயம் வரலாற்றில் எழுதப்பட வேண்டிய ஒன்று. உண்மையில் எங்கள் போராட்டத்தோடு முழுவதுமாக அர்ப்பணித்து இருந்த அந்த நேசத்துக்குரியவரை தமிழ் நெஞ்சங்கள் மறந்துவிடக்கூடாது. இவ்வாறாக தன் வாழ் நாளில் பல வருடங்களை நோயின் பிடியில் கழித்த பாலா அங்கிள் பிரித்தானியா மண்ணில் இருந்து எம் குரலாக ஓங்கி ஒலித்ததை என்றும் மறக்க இயலாது. ஆனாலும் இன்றோடு 11 வருடங்கள் கடந்து விட்ட இந்த நாளில் பாலா அங்கிள் என்ற எம் உரிமைக் குரல் ஓய்ந்து போய் விட்டதாக வந்த செய்தி பொய்யாகாதா என்று வன்னி காட்டிடை வளர்ந்து கிடந்த வன மரங்கள் அனைத்தும் ஏங்கியதை மறக்கவும் முடியாது. அவ்வாறான இன்றைய நாள் மீண்டும் ஒரு வருடத்தை கடந்து பயணிக்கிறது. கவிமகன்.இ 14.12.2017 https://eelamaravar.wordpress.com/2019/06/19/ltte-history-balasingam/
-
தலைவரின் பாதுகாப்புப் பொறுப்பிலிருந்து வீரச்சாவடைந்த போராளிகள் சிலரின் பெயர் விரிப்பு
ராதா வான்காப்புப் படையணியில் ஏறத்தாழ 700 போராளிகள் இருந்தனர் என்றும் அவர்களில் ஏறத்தாழ 400 பேர் வரையில் முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு சரணடைந்ததிருந்தனர் என்றும் இப்படையணியில் கடமையாற்றிய இரு முன்னாள் விடுதலைப் போராட்ட வீரர்கள் தெரிவித்தனர்.
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 6 லெப் கேணல் ஞானசுதன்/மணி இறந்த சிங்கள இராணுவ வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய பெரும் வீரன்… லெப் கேணல் ஞானசுதன்/மணி நாகர்கோவில் பகுதி உணவுப்பகுதி போராளிகளால் தரப்பட்டிருந்த உணவுப் பொதியை பிரித்த இராணுவ மருத்துவர் தணிகை அருகில் இருந்த அந்த பாட்டியிடம் அம்மா சாப்பிடுங்கோ என்று உணவை கொடுத்து கொண்டு அருகில் அமர்கிறார். தம்பி என்னப்பு நான் சமைச்சு தாறன் என்றாலும் கேட்கிறியள் இல்ல இப்பிடி எனக்கு நீங்கள் சாப்பாட்ட தாறியள்.? அந்த வயதானவளுக்கு நிலமை புரிந்திருக்கவே இல்லை. அங்கே என்ன நடக்கிறது என்பது அவளுக்கு தெரியவே இல்லை. தான் இப்போது வாழ்வது சண்டைக்களம் ஒன்றில் என்ற எண்ணம் அவளுக்கு வரவே இல்லை. வெடிச்சத்தங்களை அந்த தாய் பொருட்டாக எடுக்கவே இல்லை. பரவாயில்லையம்மா உங்க பேரப்பிள்ளைகள் தானே தாறம் சாப்பிடுங்கோ… அவள் அருகில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒரு வளர்ப்பு நாய் திடீர் என்று உணவு வாசத்தை உணர்ந்து எழுந்து கொள்கிறது. அம்மா இவன எப்பிடி கொண்டு வந்தியள்? என்று மருத்துவர் கேட்க அருகில் புன்னகைத்துக் கொண்டு நின்ற மூத்த போராளியை பார்த்து புன்னகைக்கிறாள் அந்த 93 வயதான மூத்த தாய். அந்த பார்வை ஒன்று நடந்ததை உணர்த்தியது. மணியண்ண என்று அன்பாக போராளிகளால் மட்டுமல்ல மூத்த தளபதிகளாலும் அண்ணா என்று அன்பாக அழைக்கப்படும் அந்த மனிதன் எதையும் செய்யாதவர் போல சிறிய புன்னகைக்குள் தன்னை அடைத்துக் கொள்கிறார். அன்றைய சூழலில் அந்த இடம் மிகவும் பாதுகாப்பற்ற இடம் என்பது எவ்வளவு நியமோ அவ்வளவு நியமானது அந்த பகுதியில் பொதுமக்கள் ஆறு பேரின் பாதுகாப்பை தம்மால் முடிந்தவரை உறுதிப்படுத்தி காத்து வன்னிக்கு அனுப்பியதும் உண்மை. எம் படையணிகள் பலமான தாக்குதல்களை எதிர்கொண்ட அந்த சண்டையின் மத்தியிலும் அவர்களை காக்க வேண்டும் என்று துடித்தது நியம். சர்வதேசமே நெற்றியில் கை வைத்து யோசித்த வெற்றி சண்டை ஒன்றை புலிகள் செய்து கொண்டிருந்தனர். இன்றும் பல நாட்டு இராணுவ வல்லுனர்களை கேள்விக்குறியாக்கிய அந்த சண்டை வேறெதுவும் இல்லை. தமிழர் சேனையின் பெரும் தரையிறக்கத் தாக்குதலான “குடாரப்பு தரை இறக்கம்” சர்வதேசத்திலே ஒரு மரபுவழி இராணுவமாக பரிணாமம் பெற்றிருந்த விடுதலை அமைப்பு இவ்வாறான தரை இறக்கத்தை செய்வதென்பது வரலாற்றுப்பதிவுகளில் முதல் தடவையாகும். விடுதலைப்புலிகளின் படையணிகள் ஏற்கனவே 1995 ஆம் ஆண்டு மண்டைதீவு படை முகாமுக்குள் ஒரு தரையிறக்கத் தாக்குதலை செய்து வொட்டர்ஜெட் வகை படகினை கைப்பற்றி சாதித்திருந்தாலும், குடாரப்புத் தரையிறக்கமே பாரிய தரையிறக்கமாக கொள்ளப்படுகிறது. கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்தில் தரித்து நின்ற 40000 சிங்களப்படைகளில் 20000 படைகள் சூழ்ந்து நின்ற பிரதேசத்துக்குள் குறுகிய அளவான 1500 பேர்கொண்ட தாக்குதல் அணிகள் தரையிறங்குவது என்பது எத்தகைய வீரம் என்பதை அனைவரும் அறிவர். அவ்வாறான ஒரு வீரம் மிக்க தாக்குதலான குடாரப்புத் தரையிறக்கம் நடைபெற்ற போது இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த சிறிதளவு மக்கள் கடும் சண்டைக்குள் சிக்குண்டனர். அவர்களை பாதுகாத்து சண்டை பிடிக்க வேண்டிய நிலை எம்மவர்களுக்கு எழுந்தது. அதனால் பெரும் இடர்களை புலியணிகள் எதிர்கொண்டன. யாருக்காக இந்த போராட்டமோ அவர்களை பாதுகாக்க பல பிரச்சனைகள் கண்முன்னே எழுந்தன. ஆனாலும் அத்தனையையும் தகர்த்தெறிந்து தமக்காக அமைக்கும் பதுங்ககழிகளை மக்கள் பயன்பாட்டுக்காக விட்டு வேறு பதுங்கு குழிகளை உருவாக்கி சண்டையிட்டார்கள் புலியணிகள். அவ்வாறு எழுதுமட்டுவாள் பகுதியில் இருந்து பாதுகாக்கப்பட்டு செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் தேவாலயத்தின் அருகில் அமைக்கப் பட்டிருந்த மருத்துவ நிலையத்திலே அந்த வயோதிபத் தாயும் அவருடன் வேறு உறவுகளும் பாதுகாக்கப் பட்டனர். உறவுகள் மட்டுமல்ல அவர்களின் செல்லப் பிராணியான நாய்கூட காப்பாற்றப்பட்டது. தம்பி இவன் என் செல்லப்பிள்ளை… அவன் விட்டிட்டு வந்திருந்தால் நான் ரொம்ப கஸ்டப்பட்டு இருப்பான். எனக்கு இவன ரொம்ப பிடிக்கும் அதனாலதான் நான் கேட்க முதலே பயங்கர சண்டைக்குள்ளும் என்னை இடுப்பளவு தண்ணியுக்கால எப்பிடி தூக்கி அந்த படகில இங்க கொண்டு வந்தாரோ அதைப் போலவே என்ட கண்ணனையும் தூக்கி படகில ஏற்றி கிபிர்காறனும் ஆமிக்காறனும் மாறி மாறி அடிக்க கொண்டு வந்து இங்க சேர்த்தவன். அதுக்க வந்த பாதை வெறும் சதுப்பு நிலமப்பு கண்டல் பத்தைகளும் வேர்களும் தான் நிறைஞ்சு கிடந்தது. அதுக்குள்ளால எங்கள பாதுகாத்து என்ட பிள்ள எங்கள கொண்டு வந்திச்சுது. அந்த பாட்டி கூறி முடிக்க முன் இராணுவ மருத்துவர் தணிகையும் மருத்துவப் போராளி சுடர்மதியும் ( பின்னொரு நாள் புலோப்பளையில் அமைந்திருந்த மருத்துவ முகாம் ஒன்றின் மீது எதிரியால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் கப்டன் சுடர்மதியாக வீரச்சாவு) அமைதியாக இருந்த ஞானசுதன் / மணி என்ற அந்த மூத்த போராளியின் மனதில் இருந்த ஈரத்தை புரிந்து கொண்டனர். விடுதலைப் போராட்டத்தின் வளர்நிலை காலங்களில் வவுனியாக் காட்டுப் பகுதிகளிலும் மணலாறு காட்டுப்பகுதிகளிலும் எம் போராளிகளின் வழிகாட்டியாக இருந்த கணேசலிங்கம் அவர்கள் 1990 க்கு பின்னான காலப்பகுதில் விடுதலைப் புலியாக அடிப்படைப் பயிற்சிகளை முடித்து “சாள்ஸ் அன்ரனி” சிறப்பு படையணிக்குள் உள்வாங்கப்படுகிறார். நீண்ட நாட்கள் “சாள்ஸ் அன்ரனி” சிறப்புப் படையணியின் நிர்வாக வேலைகளை செய்து வந்த மணி அவர்கள் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜின் நம்பிக்கைக்கும் நேசத்துக்கும் உரிய மூத்த போராளி. வோக்கியில் கதைக்க முடியாத இரகசியங்களை நேரடியாக சென்று கதைக்க முடியாத சந்தர்ப்பங்களில் எல்லாம் தூதுவனாக மற்ற தளபதிகளிடம் தகவல் காவி செல்லும் நம்பிக்கையும் இரகசியம் காப்பவருமாக பால்ராஜ் அவர்களின் நெருங்கிய தோழனாகவே வாழ்ந்தார். பின்நாட்களில் வடபோர்முனை களமுனை பற்றிய செறிந்த அறிவு இருந்ததாலோ என்னவோ பிரிகேடியர் தீபன் அவர்களோட வடபோர்முனை கட்டளைப் பணியகத்தின் நிர்வாகங்களை பொறுப்பெடுத்து தன் நிர்வாக எல்லையை சரியாக நெறிப்படுத்தினார். அப்போதெல்லாம் களமுனை போராளிகள் சோர்ந்து போகாது நிமிர்ந்து நிற்க தன் பூரணமான ஆற்றலை வெளிப்படுத்தினார் லெப் கேணல் மணி. சண்டையும் சண்டைக்கான நிர்வாகத்திறனும் ஒருங்கே கொண்டமைந்த லெப். கேணல் மணி தான் களத்தில் நின்ற அதே வேளை தனது மகனை தேச விடுதலைக்காக முகந்து போராளியாக்குகிறார். தந்தை கடமையில் இருந்த அதே களமுனையில் மகனும் காவல் வேலியாக இருந்ததை ஈழ வரலாறு தன் மீது பதிந்திருந்தது. தமிழீழ தேசத்தில் தந்தையும் மகனும் ஒன்றாக களமுனைகளில் நின்ற வரலாறுகள் பல இருந்தாலும் அவற்றில் இதுவும் முதன்மை பெறுவதை தவிர்க்க முடியாததாக தேச வரலாறு எழுதப்படுகிறது. இவ்வாறான ஒரு நம்பிக்கையான போராளியை, பொறுப்பாளர்கள், மூத்த தளபதிகள் கூட அண்ணா என்று அன்பாக உரிமை கொள்ளும் அந்த மனிதனை, “சாள்ஸ் அன்ரனி” சிறப்பு படையணியின் தளபதியாக இருந்த இராஜசிங்கம் உட்பட்ட இளநிலைத் தளபதிகளின் நேசத்துக்குரிய அண்ணனாக சண்டைக் களங்களை சுற்றி வந்த பெரும் வீரனை குடாரப்பு தரையிறக்கத்தின் போது மனிதநேயம்மிக்கவனாக பல சம்பவங்கள் வெளிப்படுத்தி இருந்தன. புலிகள் பயங்கரவாதிகள் என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் சர்வதேசமும் சிங்களமும் தமிழீழத்தில் வாழும் தமிழ் மக்கள் மட்டுமல்ல உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தம் உயிரையும் வெறுத்து களத்தில் நின்ற மணி உட்பட்ட அனைத்துப் போராளிகளையும் எந்த வரைக்குள் கொண்டு செல்லப் போகிறது. என்பது இங்கே முக்கிய வினாவாக எழுகிறது. இந்த களமுனை லெப்கேணல் மணியின் மனிதத்துவத்தை காட்ட இன்னும் ஒரு சான்றை விட்டுச் சென்றது. களமுனையில் திடீர் என்று தோன்றிய டாங் ஒன்றை வீழ்த்த வில்லை என்றால் அந்த களமுனையின் போக்கு மாறிவிடும் என்ற நிலை. களமுனையின் கட்டளைத் தளபதியான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களைக் கூட தமிழீழம் இழந்திருக்க வேண்டி வந்திருக்கும். அவ்வாறான ஒரு நெருக்கடி மிக்க சூழ்நிலையில், எமது கவச எதிர்ப்பு ஆயுத பெண் போராளி ஒருவரின் துணிந்த தாக்குதலால் மண் அணையை தாண்டி நுழைய வந்த டாங் ஒன்று அடித்து சேதமாக்கப்படுகிறது. உண்மையில் இது நடக்கவில்லை என்றால் சண்டையின் போக்கு மாறி இருக்கும். ஆனையிறவு எம் கைகளில் வந்திருக்காது. குடாரப்பில் தரை இறங்கிய போராளிகள் அத்தனை பேரையும் இழக்க வேண்டி வந்திருக்கும். ஆனால் அதை முறியடித்து அந்த டாங்கை சிதைத்தெறிந்தாள் ஒரு இளைய பெண் போராளி. அவள் RBG உந்துகணை செலுத்தியால் அடித்து சேதமான டாங்கினுள் இறந்து கிடந்த ஒரு சிங்கள இராணுவ வீரன் ஒருவனின் புகைப்பட அல்பம் ஒன்றை எடுத்துப் பாக்கிறார் மணியண்ண அவரது கண்கள் பனிக்கின்றன… “கல்யாணம் செய்து கொஞ்சநாள் தான் இருக்கும் இங்க பாருங்கோ அந்த பிள்ளை சின்னப்பிள்ளை இவங்கள் எங்கட மண்ண ஆக்கிரமிக்க வந்து செத்திட்டாங்கள். ஆனால் அந்த பிள்ளையின் வாழ்க்கை…? ” அவர் எதிரியின் மனைவிக்காக அழுதது கவலை தந்தது. எங்கள் போராளிகள் வீரச்சாவடைந்த பொழுதெல்லாம் நாங்கள் அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் எண்ணி கண் கலங்கி நின்றோம் ஆனால் லெப். கேணல் மணி எதிரிக்காகவும் அவனது குடும்பத்துக்காகவும் அன்று கண்ணீர் சிந்தினார். இவ்வாறான ஒரு மனிதத்துவம் மிக்க போராளியை வடபோர்முனைக் களமுனையில் வித்தாக்கி விடுவோம் என நம்பவில்லை. ஆனால் எதிரியின் தாக்குதலில் 2007.12.06 ஆம் நாள் தான் நேசித்த மண்ணுக்காக விதையாகி போனார் லெப் கேணல் ஞானசுதன்/ மணி என்ற உத்தம வீரன் கவிமகன். இ https://eelamaravar.wordpress.com/2019/06/18/ltte-history-lt-col-mani/
-
ஒரு துரோகத்தின் நாட்காட்டி
கருணாவோடு ஏறத்தாழ 1500 போராளிகள் பிரிந்து போயிருந்தனர் (கருணாவோடு சென்றவர்கள் மற்றும் இருபக்கத்திலுமில்லாது விலகிச் சென்றவர்கள்). இவர்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய கோவைகளை புலிகள் இறுதிவரை பாதுகாத்து முள்ளிவாய்க்காலில் எரித்தழித்தனர். - இதை அழித்த முன்னாள் விடுதலைப் போராட்ட வீரனின் வாக்குமூலம்.
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 5 இசைவிழி செம்பியனின் வீரச்சாவும் புலிகளின்குரலும்…. ஒரு கூட்டுக் கிளியாக வாழ்ந்தவளின் வீரச்சாவை பதட்டமின்றி செய்தியாக வாசித்த புலிகளின்குரல் அறிவிப்பாளர்கள்…. இசைவிழி செம்பியனின் வீரச்சாவும் புலிகளின்குரலும்…. இவர்களுக்காகவும் வீசு காற்றே… அன்று வீசிய காற்று எம் தேசமெங்கும் எழுச்சிக் காற்றாக நிமிர்ந்தெழுந்தது. 2007 மாவீரர் நாள் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் எழுச்சியாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. தேசம் எங்கும் மஞ்சள் சிகப்பு கொடிகள் எழுச்சியை ஊட்டிக் கொண்டிருக்கின்றன. எல்லை காத்து விதையாகிவிட்ட காவியப் புலிகளின் வணக்கத்துக்குரிய நாளை எதிர்கொள்ள தமிழன் வாழும் தேசங்கள் தயாராகிக் கொண்டிருந்தன. அவ்வாறான செயற்பாடுகளோடு தான் கிளிநொச்சி மண்ணில் நிமிர்ந்து நின்று உலகத்தமிழர் வாசலெங்கும் உரிமைக் குரலாக ஒலித்துக் கொண்டிருந்தது புலிகளின்குரல் வானொலி. தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின்குரல் மாவீர் நாள் சிறப்பு ஒலிபரப்போடு காற்றில் தவழ்ந்து கொண்டிருந்தது. மாவீர்களின் தியாகங்களையும் அவர்களின் புனிதத்தையும் சுமந்து சர்வதேசத்தின் மூலைமுடுக்கெங்கும் பரவிக்கொண்டிருந்த புலிகளின் குரலின் பணிசார்ந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றுக்கான வேலையில் மூழ்கி கிடக்கிறார்கள். இசையோடும் கவியோடும் நாடகத்தோடும் கணப்பொழுதோடும் வானலையாக பரவிக் கொண்டிருந்த புலிகளின்குரலை சர்வதேசமே ஏதோ ஒன்றுக்கா உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நிமிடங்களில் சர்வதேசமே காத்திருக்கும் அந்த குரல் காற்றோடு கலக்க இருக்கிறது. அவர்களின் ஒருவருட காத்திருப்புக்கான பல நூறு செய்திகளைத் தாங்கிய வரலாற்று பெருமை மிக்க தமிழீழ தேசிய தலைவரது உரையை ஒலிபரப்ப வானொலி தயாராக காத்திருக்கிறது. ஆனால் சிங்கள தேசத்தின் எங்கோ ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து பெரும் திட்டம் ஒன்று தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை தமிழீழ தேசமே நன்கு அறியும். மாவீரர் நாளின் புனிதத்தை கெடுக்க சிங்களம் திட்டமிட்டு செயல்படும் என்ற கொடூரத்தை சிறுபிள்ளையும் அறியும். அதனால் அதற்கு தயாராகவே இருந்தது எம் தேசம். தேசியத்தலைவரின் உரையை வானொலியில் ஒலிபரப்புவதை தடுக்க முனைப்பு கொள்கிறது அரச தலைமை. அது ஒலிபரப்பாவதன் மூலம் சர்வதேச அளவில் தமக்கு கிடைக்கப்போகும் நெருக்குதல்களை அவர்கள் சமாளிக்க முடியாது என்பதும், அவர் வார்த்தைகளை சர்வதேசமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்த நொடிப்பொழுதை உடைத்தெறிய வேண்டியதுமான இருமுனை திட்டத்தை அரசு செயற்படுத்த நினைக்கிறது. திட்டமிட்ட தாக்குதல் ஒன்றுக்கான கட்டளையை தனது விமானப்பிரிவுக்கு வழங்க, வானேறி வருகிறது வான்படையின் கிபிர் மற்றும் மிக் 27 ரக வானூர்திகள். துயிலும் இல்லங்கள் தோறும் திரண்டு நின்ற மக்களை பயமுறுத்தி நிகழ்வைக் குழப்ப முனைந்தாலும் அவர்களின் மிக முக்கிய நோக்கு புலிகளின்குரல் வானொலியே. அதன் ஒலிபரப்பு இடைநிறுத்தப்பட்டு தேசியத் தலைவரது உரை தடுக்கப்பட வேண்டும். அதனால் தாக்குதல் இலக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த புலிகளின்குரல் நடுவப்பணியகம் சிதைக்கப்படுகிறது. அதில் இசைவிழி செம்பியன் என்கின்ற மூத்த பெண் அறிவிப்பாளர் மற்றும் வானொலி நிலையப் பொறியியல் பிரிவைச் சேர்ந்த கி.தர்மலிங்கம்( இவரது மகள் அறிவழகி இறுதி சண்டையில் வீரச்சாவடைந்தார்), சுரேஸ் லிம்பியோன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். வீரச்சாவுகள், படுகாயங்கள் ஒருபுறம் இருக்க, ஒரு வினாடி கூட தடையாகாத புலிகளின்குரல் ஒலிபரப்பைக் கண்டு திகைத்தது சிங்களம். பல முறை தாக்குதல் நடாத்தியும் பல நூறு இடங்களுக்கு இடம்பெயர்த்தும் ஒரு வினாடி கூட இடைவிடாது ஒலிக்கும் புலிகளின்குரலை சிங்களம் அச்சத்துடனே எதிர் கொண்டது. இந்த நிலையில் புலிகளின் குரல் ஊடகவியலாளரான சுபா (இசைவிழி) பற்றி நாம் பார்க்கலாம். புலிகளின்குரலோடு நீண்ட காலமாக பயணித்த ஒரு தனித்துவம் மிக்கவர். யாழ்ப்பாணம் அளவெட்டியை சொந்த இடமாக கொண்ட இசைவிழி 1993 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் புலிகளின் குரலின் கலையகம் இயங்கிய காலத்தில் தனது ஊடக பணியை ஆரம்பித்தார். ஆனால் புலிகளின்குரலின் ஒலிபரப்பு நிலையம் கோட்டைப்பகுதியில் இயங்கியது. அப்போது தினமும் ஈருருளியில் இரு இடங்களுக்கும் ஓடித் திரிந்தார் சுபா என்கிற இசைவிழி. அந்தக்காலத்தில் புலிகளின் ஒலி,ஒளி ஊடகங்கள் இணைந்த செயற்பாட்டு நிறுவனமாக நிதர்சனம் இருந்தது. அந்த வேளையில் புலிகளின் குரலுக்குள் உள்வாங்கப்பட்ட சுபா இசைவிழி என்ற பெயருடன் தனது குரலை தேசக்காற்றோடு கலக்க விட்டார். புலிகளின் குரல் செயற்பாடுகள் மட்டுமன்று ஒளிவீச்சு மாதாந்த ஒளிச்சஞ்சிகையிலும் தனது பணியை ஆற்றிய முதல் நிலை ஊடகவியலாளர். அறிவிப்பு, நிகழ்ச்சி தயாரிப்பு, செய்தி வாசிப்பு, நிகழ்ச்சி தொகுப்பு, மட்டுமன்றி ஒலிப்பாடல் தொகுப்புக்களின் அறிமுகவுரைகள், வானொலி நாடகங்கள் என பல முகம் கொண்ட கலைஞராக வலம் வந்தார். ஒரு நல்ல குரல்வளம் கொண்ட ஊடகவியலாளராக பயணித்து கொண்டிருந்தார். அத் தருணத்தில் அவருக்கான வாழ்வின் அடுத்த நிலை ஏற்பாடு செய்யப்படுகிறது. திருமணம் என்ற பெரும் பந்தம் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளியான ராஜன் அல்லது செம்பியன் என்ற போராளியோடு நடைபெறுகிறது. வாழ்க்கைப்பந்தம். சந்தோசம், மகிழ்வு என்று பயணித்ததன் பெறுமதியாக மூன்று குழந்தைகள். இசைவிழி செம்பியன் என்ற மணவிணையர்கள் தம் வாழ்வில் பலவருடங்களை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காகவே வாழ்ந்தார்கள். ( இறுதியாக விடுதலைப்புலிகளின் ஆயுத மௌனிப்புக்கு பின் இராணுவத்திடம் சரண்டைந்த இசைவிழியின் கணவரான செம்பியனும் அவர்களுடைய 3 குழந்தைகளும் என்ன ஆனார்கள் என்பது வினாக்குறி) 1993 இல் இருந்து 2007 வரையான காலத்தில் தமிழீழ ஊடகப்பரப்பில் பெயர் சொல்லக்கூடியதாக பணியாற்றி தமிழீழ தேசியத் தலைவராலும் அடையாளம் காணப்பட்டவர். அவரால் மதிப்பளிக்கப்பட்டவர். தமிழீழ தேசத்தால் அங்கிகரிக்கப்பட்டவர். மக்கள் மனங்களில் நீறா நெருப்பாக நெருங்கி இருந்தவர். அவரை பற்றி அவரோடு கூட பயணித் ஒருவரிடம் வினவிய போது, சுபாக்கா பற்றி எப்படி சொல்லுறது. எனக்கு எங்கட புலிகளின் குரலுக்க அதிகம் பிடிச்ச என் அக்கா. ஒரு நாள் கூட அவாவை சந்திக்க வில்லை எனில் என்னால் எந்த செயற்பாடுகளையும் செய்ய முடியாது அவ்வாறான ஒரு நெருக்கம் அவாவுக்கும் எனக்கும் இருந்ததை இன்றும் மறக்க முடியவில்லை. என்னை ஒரு தங்கையாக அத்தனை அன்பையும் வாரி வழங்கிய நல்ல உள்ளம். அன்று அழகான பச்சை நிறத்து சேலை கட்டி வந்தா. துணிவும் அசாத்திய திறமையும் கொண்டிருந்த சுபாக்கா அன்று ஏனோ கொஞ்சம் பதட்டமாகவே காணப்பட்டா. தனக்கு ஏதோ நடந்து விடப் போவதை உணர்ந்ததாலோ என்னவோ அந்த பதட்டம் இயல்பாக எழுந்திருந்தது. ஆனாலும் பணியில் தளரவில்லை. அன்று காலையிலே எம் அலுவலகம் மற்றும் கலையகங்களை தாக்க வந்து தோற்றுத் திரும்பிய சிங்கள வானூர்திகள் மீண்டும் தாக்குதலுக்காக வந்தன. திடீர் என்று எழுந்த கிபிர் விமானங்களின் இரைச்சல் எம்மை எச்சரிக்கைக்கு கொண்டு வந்திருந்தது. கிபிர் சத்தம் கேட்டு நாம் பதுங்ககழிக்கு ஓட முனைந்த போது, எம் அலுவலகம் தாக்கப்பட்டது. முதல் அடிச்ச குண்டே எம் அலுவலக வாசலை நோக்கித் தான் அடிச்சவன். பாதுகாப்பு பதுங்ககழி அதிர்கிறது. ஏழெட்டு குண்டுகள் எம் கலையகங்களையும் அலுவலகத்தையும் முழுவதுமாக சிதைத்து விட்டது. தாக்குதல் நின்று சிறு இடைவெளியில் அலுவலக வாசலை நோக்கி சென்ற போது மதிய உணவு நேரம் என்பதால் வீட்டுக்குச் சென்று கைக்குழந்தைக்கு பாலூட்டிவிட்டு பணிக்காக வர நினைத்த சுபாக்கா பிடரிப் பக்கத்தில் பலமான காயத்தோடு வீரச்சாவடைந்திருந்தா. ஜனனியக்கா மற்றும் அன்பரசியக்கா ஆகியோர் படு காயமடைந்திருந்தனர். ஜனனியக்கா கண்டி வீதி தாண்டி தூக்கி எறியப்பட்டு கிடந்தா அவாவுக்கும் பலமான காயம். சுபாக்காக்கு என்ன நடந்தது என்று அப்போது ஜனனி அக்காவுக்குத் தெரியவில்லை. அரை மயக்கத்தில் சுபாக்காவை கூப்பிட்டுக் கொண்டிருந்தா. காயப்பட்டவர்களை மருத்துவமனைக்கு தூக்கி செல்கிறார்கள் அப்போது எம்மோடு கூடப்பயணிக்கும் சகோதரி ஒருத்தி சுபாக்கா…. ஏன் எங்கள விட்டு போனாய்…என்று குளறி அழுவது என் செவிகளில் விழுகிறது. சுபாக்கா வீரச்சாவு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என் அக்கா என்னை விட்டு சென்றது மட்டும் தாங்க முடியாத வேதனையைத் தந்தது. என் அருகில் என் சகோதரி இல்லாத வெறுமை என்னை முழுமையாக வாட்டியது. தாங்க முடியாத வேதனையைத் தந்தது. என்று விழி கலங்கிய புலிகளின்குரல் அறிவிப்பாளரின் தொலைபேசியை துண்டிக்கிறேன் நான். வீரச்சாவடைந்த அல்லது விழுப்புண் அடைந்த அத்தனை பேரும் ஒரு கூட்டு கிளிகளாக வாழ்ந்தவர்கள். கூட இருந்து ஒன்றாக உண்டு பல ஆண்டுகளாக நெருக்கமாக வாழ்ந்தவர்கள். தம் துயரை மகிழ்வை ஒன்றாக பகிர்ந்தவர்கள். சிங்களத்தின் வஞ்சக தாக்குதலுல் வீழ்ந்து போனார்கள். கண்ணுக்கு முன்னால் ஒன்றாக ஒரு கூட்டுக்குள் வாழ்ந்தவர்கள் வீழ்ந்து போக நிலைகுலைந்தது புலிகளின்குரல் கூடு. ஆனாலும் அவர்கள் தளரவில்லை. ஒலிபரப்பை ஒர் வினாடி கூட நிறுத்தவில்லை. மாவீரர் சிறப்பு ஒலிபரப்பு வானோடு வருவது நிற்கவில்லை. புலிகளின்குரலுக்கு வான்தாக்குதல் நடத்தப்பட்டதாக மக்களிடையே செய்தி பரவிய போது மக்கள் தங்கள் நேசத்துக்குரிய அறிவிப்பாளர்களை வானொலியில் தேடினார்கள். அப்போதும் வீரச்சாவடைந்த இசைவிழி மற்றும் காயப்பட்டிருந்த ஜனனி, அன்பரசி ஆகியோரது பதிவு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகள் காற்றில் வருகின்றன. இசைவிழி செம்பியன் என்ற புலிகளின்குரலின் விழுது கம்பீரமாக ஒலித்த போது இசைவிழிக்கு எதுவும் நடக்கவில்லை என்பதை மக்கள் நம்பினார்கள். ஆனால் புலிகளின் குரல் செய்தி அவர்களின் நம்பிக்கையை உடைத்து தம் ஊடகப்பணியாளர்கள் மூவர் வானூர்தி தாக்குதலில் வீரச்சாவென்ற செய்தியை கூறுகிறது. தம் நேசத்துக்குரியவர்கள் வீரச்சாவடைந்து விட்டதை ஏற்க மனம் தடுமாறுகிறது. தொடரக்கூடிய விமானத்தாக்குதல் அபாயம் ஒருபுறம் இருக்க தம்மோடு ஒன்றாக வாழ்ந்து பயணித்த சகோதரர்களை தம் கண்களுக்கு முன்னால் மண்ணில் வீழ்ந்த செய்தியை எந்த பதட்டமும் இல்லாமல், குரலில் எவ்வித மாற்றமும் இல்லாமல், சர்வதேசத்துக்கு தெரியப்படுத்த வேண்டிய நிலையில் இருந்தார்கள் புலிகளின் குரல் அறிவிப்பாளர்கள். உண்மையில் அந்த சம்பவத்தை செய்தியாகவோ அறிவிப்பாகவோ வெளியிடுவது எவ்வளவு கொடிய வேதனை என்பது உணர்ந்தவர்களுக்கே புரியும். மாவீரர் சிறப்பு ஒலிபரப்பு அறிவிப்பை எந்த குரல் மாற்றங்களும் இன்றி பதட்டமின்றி வெளியிட வேண்டும். இதை என் சகோதரர்கள் அன்று செய்து காட்டினார்கள். உண்மையில் என் கூடப்பிறக்காது ஒன்றாக வாழ்ந்த சகோதரியான புலிகளின்குரல் பெண் அறிவிப்பாளர் உறுதி யாருக்கு வரும்? கொடிய வேதனையை வெளிப்படுத்தாது அறிவிப்பு செய்த அவளின் உறுதியை எப்படி சொல்வது? கட்டுப்படுத்த முடியாது அணையுடைத்த அழுகையை அறிவிப்பு முடித்து கலையகத்தின் வெளியில் வரும்வரை அடக்கி வெளியில் வந்து சுபாக்கா… எங்கடீ போனாய் என்று கத்தி அழுது தீர்த்த சோகத்தை யாருடன் ஒப்பிட முடியும்? தன் நெருக்கமானவள் தன் வகுப்புத் தோழி, தன் பணியிடத் தோழி தன் கண்முன்னே கொடியவனின் வானூர்தி தாக்குதலில் வீழ்ந்ததை செய்தியாக வெளிக் கொண்டு வர வேண்டிய நிலையில் கலையக ஒலிவாங்கி முன் இருந்த உறுதிமிக்க ஆண் அறிவிப்பாளனின் மனநிலையை எப்படி அளவிட முடியும். இவர்களும் தாயக விடுதலையின் வேர்கள் என்பதை எம் தேசக்காற்றே தமிழ் தேசம் முழுக்க வீசு சொல்லு… கவிமகன்.இ 27.11.2017 https://eelamaravar.wordpress.com/2019/06/17/ltte-history-3/
-
போராளிகளின் பகிரப்படாத பக்கம் | நெடுந்தொடர்
போராளிகளின் பகிரப்படாத பக்கம் – 4 திட்டமிட்ட சண்டை திட்டமிடப்படாத வகையில் எதிரியால் ! மணலாறு காட்டுக்குள் ஜீவன் முகாம் தன்னுள் பல நூறு போராளிகளை உள்வாங்கி இருந்தது. அங்கு தான் இறுதியாக சண்டையின் திட்டங்கள் விளக்கப்பட்டு போராளிகள் வழியனுப்பி வைக்கப்படுகிறனர். ஜீவன் முகாமில் இருந்து கிட்டத்தட்ட 7 மணித்தியாலங்களுக்கு மேலான நடைப்பயணம். கொக்குத்தொடுவாய் நோக்கிய திசையில் அடர் காட்டுக்குள் பாதைகளற்ற நிலையில் காட்டு மரங்கள் மற்றும் பற்றைகளை முறித்து பாதையமைத்து செல்கிறது அந்த போராளிகள் அணி. சிறுத்தை படையணி, மன்னார் மாவட்ட படையணி, துணைப்படை என்று சண்டையணிகளை கொண்ட அந்த பெரும் நகர்வுக்குள் மிக குறுகிய ஆளணி மற்றும் வளங்களை முதுகுப்பைகளில் சுமந்தவாறு செல்கிறது மருத்துவ அணி ஒன்று. கொக்குத்தொடுவாய் இராணுவ முகாம் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்ட போது, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விடுதலைப்புலிகளால் அந்த தாக்குதல் வெற்றி கொள்ளப்படும் என்று நம்பப்பட்டது. ஆனால் சில இரகசிய கசிவால் அந்த தாக்குதல் இழப்புக்களோடு வெற்றியடையவில்லை. என்றாலும் பல அனுபவங்களை எம் படையணிகளுக்கு கொடுத்ததை மறுக்க முடியாது. ஒரு படைக்கட்டமைப்புக்கு இரகசியம் என்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை உணர வைத்த தாக்குதலாக இது அமைந்தது. இந்த சண்டை வெற்றி பெறுமாக இருந்தால் கொக்குத்தொடுவாயில் இருந்து முல்லைத்தீவு நோக்கி செல்லும் பிரதான வீதியால் மற்றும் தென்னமரவாடி கடற்பகுதி உள்ளிட்ட 15 கிலோ மீட்டருக்கு மேலான பிரதேசம் எமது கட்டுப்பாட்டுக்குள் வரும் அவ்வாறு வரும் போது, காயமடைந்த போராளிகள் மற்றும் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்களையும், சண்டை அணிகளுக்கான வளங்கல்களையும் செய்யக் கூடியதான நிறைவான திட்டம் இடப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டது எதுவும் நடக்கவில்லை. வெற்றி பெற்றிருந்தால் இது நடந்திருக்கலாம். எம்மால் திட்டமிடப்படாத முறையில் எதிரியால் திட்டமிடப்பட்ட தாக்குதல் தொடங்கிய போது நாம் திணறித்தான் போனோம். தாக்குதலுக்காக படையணிகள் தயாராக தமது நிலைகளில் நிற்கின்றன கரி படர்ந்து கிடந்த அந்த காடெங்கும் ஒருவரை ஒருவர் தெரியாத இருட்டு. இராணுவ முகாம் சுற்றிவளைக்கப்பட்டு இருந்ததாய் எம்மவர்கள் நம்பினார்கள். தாக்குதல் வியூகம் எதிரிக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது என்ற உண்மை யாருக்கும் புரியவில்லை. எதிரி எதிர்பார்த்துக் காத்திருந்தான். நாங்களோ அவனை வீழ்த்தி விடுவோம் என்ற முழு நம்பிக்கையோடும் புதிய வியூகம் ஒன்றோடும் காத்திருந்தோம். அதே போலவே அவனும் தாக்குதலை நடாத்த காத்திருந்தான். திடீர் என்று ஒரு ஊதா நிறத்து பரா (வெளிச்சக் குண்டு) எழுந்து வானில் எரிகிறது. எம்மவர்களுக்கு அந்த சமிக்கை புரியவில்லை. ஆனால் எம் தளபதியின் சமிக்கைக்காக காத்திருந்தார்கள். முன்னணியில் நின்ற போராளிகளில் இருந்து 300 -400 மீட்டர்கள் தூரத்தில் மருத்துவ அணி தயார் நிலையில் இருந்தது. சண்டை தொடங்கியதும் தமக்கான பணி ஆரம்பமாகும் என்ற உண்மையோடு தாயாராக இருந்தார்கள். இந்த அணியில் விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர்களான மலரவன், தணிகை, மிரேஷ் ஆகி மூன்று தமிழீழ மருத்துவக்கல்லூரியின் முதல்நிலை மருத்துவர்களும் மற்றும் கலை ( யாழ்ப்பாண பல்கலைக்கழக 3ஆம் ஆண்டு மருத்துவ பீட மாணவன்) என்பவரும் அடங்கி இருந்தார்கள். இதே வேளை இராணுவ மருத்துவர்களான ஜோன்சன் மற்றும் புரட்சிமாறன் ஆகியோர் கருனாட்டுக்கேணி படைமுகாம் நோக்கியும் மருத்துவர் நளன் மண்கிண்டிமலைப் பக்கத்தில் இருந்து முன்னேறக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட இராணுவத்தினை மறிப்பதற்காக சென்ற அணியோடு செல்கின்றனர். அதே நேரம் களமுனையின் பின்னணியில் மருத்துவ சிகிச்சைகளை செய்யும் தயார் நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட ஆரம்பிக்கப்பட்ட போது முதல் அணி மாணவியாக உள் நுழைந்து மருத்துவக் கலாநிதியாக வெளிவந்து அரச மருத்துவராக பணியாற்றி பின்னர் போராளியாகி இராணுவ மருத்துவராக பணியாற்றிய டொக்டர் அன்ரி (திருமதி எழுமதி கரிகாலன் , 2009 ஆயுத மௌனிப்பின் பின் சிங்களத்திடம் சரண்டைந்து காணாமல் ஆக்கப் பட்டுள்ளார். அவரோடு அவரது கணவனான போராளி கரிகாலனும் சரணடைந்தார் ) மற்றும் போராளி மருத்துவர் லெப் கேணல் இசைவாணன் ஆகியோர் தமது பிரதான மருத்துவமனையை நாயாற்றுப்பாலத்தில் இருந்து செம்மலை செல்லும் வீதியூடான பகுதி ஒன்றிலும் “மலைப்பொயின்ட் ” என்று கூறப்படுகின்ற இடத்தில் யாழ் பல்கலைக்கழக மருத்துபீட 3 ஆம் வருட மாணவனும் போராளியுமான “அடம்ஸ்” பிரதான மருத்துவமனை ஒன்றுடனும் தயாராக இருந்தார்கள். காயங்களை உடனடியாக பின்நகர்த்தி மெயின் என்று கூறப்படுகின்ற இரு பிரதான இராணுவ மருத்துவமனைகளுக்கும் ஒரு மணித்தியாலத்துக்குள் அனுப்பினால் காயங்களுக்கான மருத்துவக்காப்பு நிட்சயமாக உறுதிப்படுத்தப்படும். ஆனால் அங்கு நடந்ததோ தலைகீழானது. சண்டை நடந்த இடத்தில் இருந்து பிரதான மருத்துவமனைக்கு காயங்களை நகர்த்துவதில் பல இடர்கள் எழுந்தன. திட்டமிட்டபடி சண்டை நடந்திருந்தால் காயங்களை வெற்றிகரமாக காத்திருக்கலாம். ஆனால் சண்டையின் போக்கு எதிரிக்கு சாதகமாக போனதால் எம் மருத்துவ அணி பல சிக்கல்களை எதிர் நோக்கியது. திடீர் என்று எழுந்த ஊதா நிற பராவைத் தொடர்ந்து வெண்ணிற பரா வெளிச்சம் மேலெழ, எதிரி தாக்கத் தொடங்கி இருந்தான். அணிகள் சிதறத் தொடங்கின. திட்டமிட்ட தாக்குதலில் திட்டமிடப்படாத சண்டை தொடங்கியிருந்தது. எமது அணிகள் தொடங்க வேண்டிய சண்டையை எதிரி தொடங்கி இருந்தான். இந்த நிலையில் அவசரமாக கொண்டுவரப்பட்ட போராளி ஒருவரின் காயத்தை பரிசோதிக்க முடியாத நிலை மருத்துவர்களுக்கு எழுந்தது. வெளிச்சமற்ற நிலையில் உடலில் எங்கு காயம் என்பதை அறிய கடினமாக இருந்தது ஆனாலும் ஜெமினி மாஸ்டர் என்று அழைக்கப்படும் மணலாறு கோட்டப் படையணியின் தளபதியின் ஒரு கால் சிதைவடைந்ததை இனங்கண்டு அவருக்கான இரத்தப்பெருக்கை கட்டுப்படுத்த முனைகிறார்கள். களமுனைகளில் நிற்கும் எந்த போராளிக்கும் இரத்தக்கட்டுப்படுத்தி துணி ( field comparator) கொடுக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் குருதி வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி உடனடியாக பின்னே அனுப்புகிறார்கள். அப்போதெல்லாம் மருத்துவ அணியிடம் கைவசம் இருந்ததெல்லாம் சாதாரண நாளத்தினுடாக(Intravenous fluids/IV fluids) ஏற்றும் திரவங்கள்தான். E.g.- Normal Saline, இவற்றினூடாகவே சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. அந்த காயத்தை பின் அனுப்பி நிமிர்ந்த போது மேனன் என்ற போராளியின் நெஞ்சுக்கு கோல்சரை கிழித்து அதற்குள் இருந்த இரும்பு magazine ஐ பிரித்து சென்ற ஒரு ரவை ஏற்படுத்திய நெஞ்சு காயத்தை கொண்ட ஒரு போராளியை கப்டன் தமிழ்குமரன் தூக்கி வந்தார். (தமிழ்குமரன் பின்நாட்களில் வேறு ஒரு சம்பவத்தில் வீரச்சாவடைந்தார்.) அவருக்கும் இரத்தக் கட்டுப்பாட்டு சிகிச்சையையே செய்தார்கள். அவரை அனுப்பிய மறு நிமிடம் பெண் போராளி ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவ அணியிடம் கொண்டு வரப்படுகிறார். இதயகீதன் என்ற போராளி கூட வந்திருந்தார். (அவர் பின் நாள் ஒன்றில் கப்டன் இதயக்கீதனாக வீரச்சாவு ) அவருக்கான உடனடி சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம். வென்புலோன் ( Venflon ) போட்டு சேலைனோடு கிருமி தொற்று நீக்கி மருந்தும் (Antibiotics )இரத்தமும் (Blood) அவசரமாக போட வேண்டும். இல்லை என்றால் காயப்பட்ட போராளிக்கு எதுவும் நடக்கலாம். சண்டை நேரத்து இருட்டில் எதுவமே தெரியாத நிலை. போராளி மருத்துவர் மலரவன் பரா வெளிச்சத்தில் அந்த பெண் போராளிக்கு சேலைன் போடுகிறார். இரத்தம் போட முடியாது. உடனடியாக களமுனையில் இரத்தம் ஏற்றும் நிலையில் அன்றைய மருத்துவப்பிரிவின் வளர்ச்சி இருக்கவில்லை. அதை விட இரத்தம் போடுவதாயின் இரு பெரும் பிரச்சனைகளை மருத்துவ அணி எதிர்கொள்ள வேண்டி இருந்தது. 1- உடனடியாக காயப்பட்ட போராளியின் இரத்த மாதிரி எந்த வகை இரத்தப்பிரிவு என்று பரிசோதிக்கப்பட வேண்டும். அதற்கு கட்டாயமாக வெளிச்சம் வேண்டும் இல்லையெனில் இரத்த மாதிரி பரிசோதிக்க முடியாது. 2- உடனடியாக இரத்தம் ஏற்றும் நிலைக்கு அந்த போராளியை நகர்த்த முடியவில்லை. காரணம் பல மணித்தியாலங்கள் காட்டுக்கால் வந்து சேர்ந்த தூரத்தை குறுகிய நேரத்துக்குள் கடந்து தளமருத்துவமனைக்கு அனுப்பி இரத்தம் போடுவது என்பது மிகக்கடினமான ஒன்றாகும். ஆனாலும் அந்த பெண் போராளி காப்பாற்றப்பட வேண்டும். மருத்துவ அணி போராளிகள் உடனடியாக அந்த போராளியை தூக்கி கொள்கிறார்கள். காவுபடுக்கையில் வைத்துக் கொண்டு நகர்கிறார்கள். அதற்கு மேல் அந்த இடத்தில் வைத்து சிகிச்சை அழிக்க முடியாத சூழல். திட்டமிட்ட தாக்குதல் எதிரியால் முன்கூட்டியே தொடங்கப்பட்டு அணிகள் சிதறியதால் மருத்துவ அணி தனித்துவிடும் நிலை. காயப்பட்ட போராளியை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு. எதையும் சிந்திக்க நேரமில்லை காவுபடுக்கையில் அந்த பெண் போராளியை கிடத்தி தூக்கி கொண்டு ஐந்து போராளி மருத்துவர்களும் அந்த காட்டுப் பாதையில் நகர்கிறார்கள். நகர்வென்பது நடையல்ல ஓட்டம். ஏனெனில் அந்த காலம் காவலரண் வேலி என்று எந்த நிலைகளும் இல்லை மாணலாறு காடு சிங்களத்தையும் எம்மையும் ஒன்றாகவே தாங்கி நின்றது எமது கட்டுப்பாடு என்று எதுவுமற்ற நிலையில் அவர்கள் ஜீவன் முகாம் கடந்து இராணுவ மருத்துவர் அன்ரியிடமோ அல்லது இராணுவ மருத்துவர் அடம்ஸிடமோ அந்த போராளியை கொண்டு சென்றாலே அவளுக்கான சரியான மருத்துவ காப்பு வழங்க முடியும். உடனடியாக இரத்த மாதிரி பரிசோதிக்கப் பட்டு இரத்தம் போட முடியும். இடையில் வைத்து பரிசோதிப்பதற்கு கூட அவர்கள் தரித்து நிற்க முடியவில்லை. எதுவுமே செய்ய முடியாத சூழல். உடனடியாக வெளியேறியே ஆக வேண்டிய நிலை. அவர்கள் தளபதியின் “எங்க நிக்கிறியள்? வந்தாச்சா? போன்ற அதட்டல் குரலுக்கு பதில் கூற முடியாதவர்களாக நகர்ந்தார்கள். ஏனெனின் அன்றைய விடுதலை அமைப்புக்கு மிக முக்கிய தேவைகளில் ஒன்றான இராணுவ மருத்துவர்கள் இழக்கப்படக் கூடாத ஒரு வளம் என்பது நியம். ஏனெனில் தமிழீழ மருத்துவத் துறை இல்லாத காலம் ஒன்றில் மருத்துவக்காப்பு இன்றி தன் மடியில் தலைசாய்த்து விதையாகிப் போன தமிழீழத்தின் முதல் வித்து சங்கர் அண்ணையின் நிலை எந்த போராளிகளுக்கும் வரக்கூடாது என்பதில் தேசியத்தலைவர் உறுதியாக இருந்தார். ஒரு போராளி மருத்துவரின் இழப்பு பல போராளிகளின் இழப்புக்கு காரணமாகலாம் என்று உறுதியாக நம்பினார். அதனால் தான் எந்த உயிர் சேதமும் இன்றி உடனடியாக அந்த மருத்துவ அணியை வெளி வருமாறு தளபதி கட்டளையிடுகிறார். உண்மையில் கவி இரத்தம் போட்டிருந்தால் அந்த பிள்ளையை நாம் காப்பாற்றி இருக்கலாம் என்று நம்புகிறேன். எவ்வாறாயினும் காப்பாற்றும் நோக்கோடுதான் தூக்கி கொண்டு ஓடி வந்தோம் ஆனால் நாம் செய்த சிகிச்சை பலன் தர வில்லை. எம்மால் எதையும் செய்ய முடியவில்லை அடித்த பரா வெளிச்சத்தில் எம்மாலான சிகிச்சையை கொடுத்தோம். என்கிறார் போராளி மருத்துவர் ஒருவர். சிறு தூரம் கடந்திருப்பார்கள் மருத்துவர் ஒருவரின் கன்னத்தில் முட்டி சென்ற பெண்போராளியின் கையில் உடற்சூடு இல்லாது இருந்ததை அவர் அவதானிக்கிறார். டேய் நில்லுங்கோ பிள்ளைக்கு ஏதோ நடந்திட்டுது போல கை குளிருது… உண்மை தான் கவி அவள எங்களால காப்பாற்ற முடியவில்லை. அது சண்டைகளில் வழமையாக நடப்பது தான் என்றாலும் அண்ணையின் எண்ணத்தை அன்று எம்மால் நிறைவேற்ற முடியவில்லை. போராளி மருத்துவர் ஒருவர் இருந்தால் பல போராளிகளை காத்தட முடியும் என்று எண்ணிய அவரின் எண்ணத்தில் மண்ணை போட்டது போல நாம் அன்று ஐவர் இருந்தும் ஒரு போராளியின் உயிரைக் காக்க முடியவில்லை கவி. அவர் மௌனித்துப் போகிறார். விழி கலங்கியருக்கும் அதை துடைத்திருப்பார். டொக்டர் … நான் அழைக்க கலங்கிய மனதோடு ஓம் கவி கப்டன் அல்லி என்ற எம் சகோதரியை உயிரற்ற உடலாக எம் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வந்து சேர்த்தோம். சண்டை தோல்வி ஆனாலும் பல படிப்பினைகளை எமக்குத் தந்திருந்தது. ஒரு போராளி மருத்துவ அணி சண்டைக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டோம். அதன் பின்பான பல கோண விசாரணைகளை முகம் கொடுத்து எம் மருத்துவக் கல்லூரி அமைந்திருந்த யாழ்ப்பாணம் நோக்கி வந்த போது கப்டன் அல்லி துயிலும் இல்லத்தில் விதையாக விதைக்கப்பட்டிருந்தாள். மறக்கமுடியாத நினைவுகளோடு அவரின் தொலைபேசி அணைகிறது நானும் என் நெஞ்சத்தில் அவளின் நினைவை வைத்து நிமிர்கிறேன்… நன்றி தணிகை அண்ண… கவிமகன்.இ 25.11.2017