Jump to content

uthayakumar

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  476
 • Joined

 • Last visited

Everything posted by uthayakumar

 1. ஓவியாவின் கனவுகள் மண்ணுக்காய் மரணத்தை சுமந்தவன் மலரவன். அவன் உயிர் எறிந்து சென்று பத்து வருடம் ஆகிவிட்டது. பாவம் இவன் குடும்பம் இப்போ படும் பாடு போதும். ஒன்றாகவே விடுதலைக்கு போன ஓவியாவை திருமணம் செய்தவன். நாம் தமிழர் விடுதலைக்காய் நாளும் பொழுதும் உழைத்த குடும்பம். இரவு பகலாய் எதிரி எம் மண்ணில் நுழையாமல் எல்லையில் நின்று கண் முழித்து காவல் நின்றவள் ஓவியா. இறுதி யுத்தத்தில் இவன் போன பின் எல்லாமே இழந்த பின் மலரவனின் மனைவி ஓவியாவுக்கும் இவள் நான்கு குழந்தைகளுக்கும் எதுக்கும் இப்போ வழி இல்லை. நான்கு பிள்ளைகள் நாளாந்தம் குடும்பம் ஓட்டுவதே கடினம். ஓவியா இப்போ கூலி வேலை செய்து குடும்பத்தை ஓட்டுகிறாள். அவள் படும் பாடு இப்போ பெரும் பாடு அவள் சுமக்கின்ற வலியோ தீராது. ஒரு காலம் நிமிரொடு தமிழ் தந்த திமிரோடும் இருந்தவள். இவள் கனவு எல்லாம் காலமது தின்ற பின்பு கை நீட்டும் நிலையதுவாகிப் போனாள். இளைய மகன் இனியவன் இப்பவும் விபரம் தெரியாதவன் போல் அம்மா சைக்கில் வேண்டித் தா என்று அடம் பிடித்தபடி இருக்கிறான். மூத்தவன் முகுந்தன் படிக்கிறான் எப்படியோ இவனை படிக்க வைத்து பெரியவன் ஆக்க பாவம் இவள் படும் துயரம் சொல்லில் அடங்கா. மலரவனின் தாய் இன்னும் ஒரு பாரம். இவள் திண்ணையில் கிடந்து காடு அதிரக்கத்தியபடி கிடக்கு இன்னும் மகன் மலரவனின் பாசம் விட்டுத் தொலையவில்லை. வருவான் என்றபடி இரவோடு இன்னும் கதைத்தபடி கிடக்கிறது கிழவி. இரவுகளும் கதை கேட்டபடி இவளோடு குந்தி இருக்கிறது. இருமியபடியும் கத்தியபடியும் கிடக்கும் இவளுக்கு வேற மருந்துச் செலவு. இரண்டு பெண் பிள்ளைகள் பாரதி பைரவி என்று இவர்கள் பற்றிதான் ஓவியாவுக்கு அதிகம் கவலை எதிர்காலம் என் பிள்ளைகள் வாழ்வு எப்படி என்றே. கூலி வேலை தான் குடும்பத்தை கொண்டு போக. அருகில் இருக்கும் அந்தோனியார் கோவில் அருட்தந்தை அவள் துயர் அறிந்து ஐந்தோ பத்தோ கொடுத்து உதவுவார். அவ்வளவு தான் காலை மாலை வேலை முடிய கர்த்தரிடம் போய் கருணை வேண்டி நிற்பது தவிர வேறு உதவி எவரும் இல்லை. அண்ணண் தம்பி அக்காள் தங்கை என்று உதவ அவளுக்கு வெளி நாட்டில் யாரும் இல்லை. ஒரு காலம் எங்கள் போராளிகள் என்று போற்றிய சமூகம் கூட இன்று ஒரு பக்கம் ஒதுக்கி வைத்த கதை வேற. இவளின் வீட்டை கடந்து செல்பவர்களும் முகத்தை ஒரு பக்கம் திருப்பி தான் கடக்கிறார்கள். அவளின் ஏதோ நல்ல காலம் அருகில் ஒரு அம்பிகா ஆண்டி என்று அந்த கிராமத்தின் பெண்ணுரிமை வாதி சமூக நீதிக்காய் போராடிய பெண் பல முறை சிறை சென்றும் வந்தவள். ஓவியாவை சிறு வயதில் இருந்து தெரியும். அடிக்கடி அவளுக்கு ஆறுதல் வார்த்தையும் ஏதும் ஒரு சிறு உதவியும் செய்யும் ஒரு அன்பு உள்ளம் யாரும் உதவா இவளுக்கு இது பெரும் ஆறுதல். மலரவன் ஓவியா என்ற இந்த மலர்களின் அரைப்பங்கு வாழ்வு அந்த மண் மீட்பு போருக்காய் அந்த மக்களை விடிவுக்காய் அர்பணிக்கப்பட்ட தியாக வாழ்வோடு தொடக்கி மலரவனின் வீர மரணத்தோடு இன்று இவன் மனைவி ஓவியாவின் துயர வாழ்வு கடந்து போகும் நிலை மாறுமா. இன்று இளைய மகனுக்காய் ஒரு சைக்கிள் வேண்டும் கனவோடு இன்னும் இவள் வியர்வைத் துளி சிந்திய வண்ணம் உள்ளது. சுதந்திரம் வேண்டி எனக்கும் உனக்குமாய் போராடிய ஓவியா என்ற போராளியின் வாழ்வு ஒரு சைக்கிள் வேண்டும் கனவோடு முடிந்தது. இப்பொழுது எல்லாம் அந்த ஏசு பிரான் சொன்னது போலவே மன்னித்து விட்டாள் ஓவியா ஆனால் அவளால் எதையுமே மறப்பதற்கு இல்லை. வர்ணங்களிலான வாழ்வை நேசித்தவள் ஓவியா மனித குலத்தின் விடுதலையை விரும்பியவள் ஓவியா அந்த பறவைகள் போலவே பறக்க விரும்பியவள். அவள் சிறகுகள் உடைந்து விழுந்தாலும் அவள் மனச் சிறகுகள் பறக்கின்றன அவள் வாழ்வின் கதையை எழுதியபடி இந்த பிரபஞ்சத்தை சுத்தியே. மாற்றம் ஒன்றே மாறாதது ஒரு நாள் மழை வரும் என் கனவுகளை நனைக்கும். இப்பொழுது இல்லையென்றாகிலும் எப்பொழுதாவது ஒருநாள் எமக்கான விளக்கு எரியும் என்ற நம்பிக்கையுடன் இன்று மலரவனின் நினைவு நாளில் கையில் பூக்களோடும் கண்ணில் ஊறிய கடல் கசிவோடும் அவன் நினைவோடும் நாளை ஒரு காலம் வரும் நமக்காய் ஒரு வாழ்வு வரும் காலை வரும் பூக்கள் எல்லாம் எங்கள் கண்ணீரை துடைக்க வரும் காற்றில் ஒரு கீதம் வரும் எங்கள் கவலைகளை போக்கிவிடும் நேற்று வரை இருந்த துன்பம் எல்லாம் தீர்த்து வைக்க தெய்வம் வரும் என்று கோடை காலாப் பொழுதொன்றில் நதியோரம் அந்த நிலவின் அருகோரம் மலரவனின் மடியோரம் தான் இருந்து எழுதிய கவிதை ஒன்றை பாடிய படியே காலம் ஒரு நாள் மாறும் என்ற கடைசி துளி நம்பிக்கையோடு உயிர்த்தலே இனி விதி என்று மீண்டும் உயரப் பறக்கவே எண்ணுகிறது ஓவியாவின் கனவுகள் சுமந்த சிறகுகள். நன்றியுடன் பா.உதயன்
 2. காலை புலர்ந்தது- காலை புலர்ந்தது காலை புலர்ந்தது காலைச் சேவல் கூவிச் சொன்னது கனவுகள் உயிர்த்தது கதிரவன் எழுந்தான் பொழுது புலர்ந்தது பூக்கள் மலர்ந்தது உழவனுக்கு என்றே உலகம் செய்து உன்னையும் என்னையும் உயிரோடாக்கி மண்ணையும் தந்து மகிழ்வித்த ஈசனை எண்ணுக மனமே எண்ணுக காலை புலர்ந்தது காலை புலர்ந்தது எழுக தமிழா எழுக தமிழா இன்றைய காலை உனக்காய் விடிந்தது பொங்குக மனமே பொங்குக வயல் வெளி எங்கும் தீபங்கள் எரிய வானத்து தேவனை விருந்துக்கு அழைத்து வாசல்கள் எங்கும் பூக்கட்டும் வாழ்வு வண்ணமாய் வசந்தம் வீசட்டும் எங்கும். ஆலய மணிகள் கோவிலில் ஒலிக்க அழகிய குயில்கள் கூவி பாடின காலையில் மல்லிகை கோலம் போட்டாள் கதிரவன் வாசலை திறந்து இங்கு வந்தான். பா.உதயன் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்
 3. பரிந்துரைக்கப்பட்ட உங்கள் ஆக்கம் வெற்றி பெற வாழ்த்துகள்.
 4. நாளை ஒரு காலம் வரும்-பா.உதயன் நாளை ஒரு காலம் வரும் நமக்காய் ஒரு வாழ்வு வரும் காலை வரும் பூக்கள் எல்லாம் எங்கள் கண்ணீரை துடைக்க வரும் காற்றில் ஒரு கீதம் வரும் எங்கள் கவலைகளை போக்கிவிடும் நேற்று வரை இருந்த துன்பம் தீர்த்து வைக்க தெய்வம் வரும் காலை வரும் பொழுதுகளில் கவித் துளியாய் மழை தெறிக்கும் நாளை வரும் விடுதலைக்காய் குயில் கூவி எமை எழுப்பிவைக்கும் வானமெங்கும் நிலவு வரும் எங்கள் வயல் வெளியில் பூத்திருக்கும் கனவொருநாள் எழுந்து வரும் கார்திகையில் பூ மலரும் எங்கள் தேசம் எல்லாம் விளக்கெரியும் தெருக்கள் எல்லாம் பறவை பாடும் நாளை வரும் காலம் என்று நம்பிக்கையின் ஒளி தெரியும். நாளை ஒரு காலம் வரும் மாற்றம் ஒன்றே மாறாதது அனைத்து யாழ் உறவுகளுக்கும் ஆங்கில புது வருட வாழ்த்துகள் 2022 பா.உதயன்
 5. Poet, சுவ.சோமசுந்தரம் ,சுவே உங்கள் பதிவுகளுக்கும் கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிகள்.
 6. தாத்தாக்கள் அப்பாவிகளாக இருந்தார்கள் பாவம் . பெருமாள்,ஈழப்பிரியன், புரட்சிக்கர தமிழ் தேசியன் உங்கள் அனைவரின் அன்பான கருத்துக்களுக்கு நன்றிகள்!
 7. தாத்தாவுக்கு பேரன் எழுதும் கடிதம்-பா.உதயன் அன்பின் தாத்தாவுக்கு உங்கள் பேரன் எழுதுவது தாத்தா சுகமா தாத்தா எங்கள் வீட்டல் முன்பு போல் யாரும் நத்தார் கொண்டாடுவது இல்லை எங்கள் வீட்டு பூ மரம் பூக்க மறந்து விட்டது தாத்தா அப்பா அம்மா யுத்தம் முடிவு இல்லாமல் தொடர்கிறது நானும் சமரசம் செய்து களைத்து விட்டேன் காலைச் சூரியன் எங்கள் கதவடியில் வந்து கன காலம் ஆகிவிட்டது தாத்தா நத்தார் இம்முறை உங்களோடு கொண்டாட முடியுமா தாத்தா உங்களுக்கு பிடித்தமான காந்தி சிலையை நத்தார் பரிசாக கொண்டு வருகிறேன் தேவன் வருகையை உங்களோடு பாடி மகிழ்வதில் எத்தனை சந்தோசம் தாத்தா எல்லாக் கடவுளுமே சொல்லும் தத்துவம் ஒன்றென்றே எனக்கு சொல்லித்தந்தீர் தாத்தா தாத்தா நினைவு இருக்கிறது உங்கள் பாடல் ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
 ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் இன்னும் இசைத்தபடியே இருக்கிறது என் காதுகளில் கண் போகும் தூரம் வரை காத்துருக்கிறேன் தாத்தா தாத்தா உங்கள் கைத்தடி கதிர் வேட்டி பாட்டுப் பெட்டி பத்திரமாய் எடுத்து வைத்திருக்கிறேன் கைத்தடி மட்டும் கன காலமாய் காத்திருக்கிறது காற்று வேண்ட உங்களை கூட்டிப் போக தாத்தா நீங்கள் வளர்த்த புறாக்கள் இன்னும் வீடு திரும்பி வரவே இல்லை உங்களைப் போலவோ அவைகள் எங்கு போனது நீங்கள் எங்கு போனீர்கள் என்றறிய ஆவல் தாத்தா தாத்தா நானும் நீங்களும் புறாக்களும் கூடி விளையாடிய நாட்களை நினைத்துப் பார்க்கிறேன் பறவைகளோடு உங்கள் பாசம் பாரதியைப் போல் தாத்தா கூடு மட்டும் தனியாகக் காத்திருக்கிறது தாத்தா அருகில் உங்கள் கதிரையோடும் நீங்கள் வாசித்து விட்டுப் போனா புத்தகத்தின் பக்கத்தோடும் அத்தோடு நீங்கள் எழுதி முடித்த மனிதம் என்ற கவிதை ஒன்று என்னோடு தான் இருக்கிறது நீங்கள் விட்டுச் சென்ற பக்கத்தில் இருந்து நான் தொடர்ந்து எழுதவிருக்கிறேன் தாத்தா வந்து விடு தாத்தா ஞாபகங்கள் கொல்லுதென்னை நினைவுகள் தூங்குவதில்லை தாத்தா இப்படிக்கு உங்கள் அன்புப் பேரன் முகவரி இல்லாத கடிதத்தை கிழித்து எறிந்து போகிறான் ஒரு தபால்காரன் நிரந்தரமாய் தூங்கிய தாத்தாவை எப்படி எழுப்ப முடியும் இவன் அப்பாவால் ஏதோ ஆறுதல் சொல்லி அவன் அழுகையை நிறுத்துகிறார் அப்பாக்காரன் பதிலுக்காக இன்னும் பார்த்திருக்கிறான் பேரன்காரன். பா.உதயன்
 8. ஜீவநதியாக வாழ்வு இன்னும் பெரும் கவிதையாக ஓடட்டும்.அருமை இணைப்புக்கு நன்றிகள்.
 9. கவிஞரே வாருங்கள் மீண்டும் யாழில் தேன் கூடு கட்டுங்கள் மலையாளப் படம் எப்போது திரைக்கு வருகிறது,தமிழில் எடுப்பார்களா.வாழ்த்துகள்
 10. ஈழப்பிரியன்,புரட்சிகரதமிழ் தேசியன் உங்கள் கருத்துக்கு நன்றிகள்.
 11. புலராத பொழுதென்று எதுகும் இல்லை கடக்காத துயர் என்று யாதும் இல்லை முடியாத பகை என்று ஒன்றும் இல்லை கூவாத குயில் என்று எங்கும் இங்கில்லை ஒரு நாளும் மறையாத ஒளி வேண்டினேன் ஒரு கோடி தவம் இங்கு நான் செய்கிறேன் ஆனந்த யாழோடு சுரம் தேடுறேன் அதனோடு தனியாக இசை மீட்கிறேன் அறமே தான் வாழ்வாக அதைத் தேடினேன் ஒரு போதும் குனியாத நிலை வேண்டினேன் அறிவோடு ஞானங்கள் தினம் தேடினேன் என்றும் யார் என்று எனைத் தேடினேன் கனவு காணாத மனிதரென்று எவருமில்லை காதல் பேசாத மொழி என்று எதுகுமில்லை காலம் சொல்லாத கதை என்று எதுகும் இல்லை கவிதை இல்லாத உலகு என்று இருப்பதில்லை சிற்பி செருக்காத சிலை என்று ஒன்றும் இல்லை சலங்கை ஒலிக்காத சுரம் என்று யாதும் இல்லை இயற்கை பேசாத மொழி என்று எதுகும் இல்லை இத்தனை கோடி இன்பங்கள் இங்கு தவமெல்லவோ.
 12. எனக்கு நீ ஏதாவது செய்ய நினைத்தால் என் கல்லறையில் எழுதிவை எப்பவுமே உன்னை நான் நேசித்து இருந்தேன் என்று அதன் அருகில் ஒரு பூச் செடியை நட்டு வை அவ்வப்போது வந்து பார் அந்தப் பூவிற்குள் என் முகம் தெரியும்.
 13. நன்றிகள் தமிழ்த் தேசிகன் அருமையான படம்
 14. மரம்- பிறக்கும் போது தொட்டிலானது வாழும் போது கட்டிலானது இறக்கும் போது பெட்டியானது எரிக்கும் போது நெருப்புமானது மரம் என்று தான் இருந்தேன் மனிதன் பேசாத அன்பும் அறமும் மரங்கள் பேசியது மடியில் ஏந்தி நிழலும் தந்தது மரம் இல்லையேல் மனிதன் இல்லை. பா.உதயன்
 15. இறந்து போகும் வேளை வந்த போதும் இறுதிப் பக்கத்தை தான் வாசித்த புத்தகத்தில் படித்து விட்டு வருகிறேன் என்றான் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிரேக்க தத்துவவியளாளன் ஒருவன்.கல்வி கற்பதற்கு ஏது வயது எல்லை. மண்ணைத் தோண்டத் தோண்ட தாகம் தீர்க்கும் தண்ணீர் கிடைப்பது போல் நீ உன்னை தோண்டத் தோண்ட அறிவு என்னும் ஞானக்கிணறு உன்னில் ஊற்றெடுக்கும். தேடலே ஞானம் தேடுங்கள் தேடுங்கள் தேடலே ஞானம் தேடலே அறிவு தேடலே தவம் தேடலே கல்வி தேடலே வாழ்வு தேடுங்கள் தேடுங்கள் உன்னையும் தேடு உனக்குள் இருப்பவனையும் தேடு இருக்கும் வரையில் எல்லாமே தேடு இதுவே வாழ்வின் தத்துவம் இதுவே வாழ்வின் தவம். பா.உதயன்
 16. தமிழ்த்தேசியன் துல்பின் உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.துல்பின் உங்கள் கருத்துக்களில் பல உண்மைகள் இருகின்றன நம் தலைவர்கள் கொடுத்த அமைச்சு பதவிகளோடு அன்றும் தான் இன்றும் தான் அடங்கி விட்டனர்.சர்வதேச போக்குக்கு இணங்க சரியான சர்வதேச அணுகு முறையையோ இல்லை உள் நாட்டு இராஜதந்திர காய் நகர்த்தல்களையோ சரியாக நகர்த்தவில்லை.இது ஒரு புறம் இருக்க சிங்கள பெரும் தேசிய இன வாதமும் தமிழருக்கான உரிமையையும் கொடுத்து இந்த நாட்டை சமாதான பாதையில் நகர்த்தத் தவறியமையும் தான் இந்த பெரும் அழிவுகளுக்கே காரணமாகியது.அதன் பலனை இந்த தேசம் இன்று அனுபவிக்கின்றது.
 17. இரு மொழி ஒரு நாடு ஒரு மொழி இரண்டு தேசம் -கலாநிதி கொல்வின் ஆர்.டீ.சில்வா இலங்கையில் ஏற்பட்டு வரும் பெரும் பொருளாதார சரிவுகளுக்கு பின் ராஜபக்சர்களின் மக்கள் செல்வாக்கு பெரும் சரிவை ஏற்பட்ட பின் மீண்டும் பேரினவாத பெரும் அரசியலை முன் எடுத்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று அரசியல் அமைப்பொன்றை உருவாக்கும் வகையில் ஏனைய இந்த நாட்டில் வாழும் தேசிய இனங்களை இரண்டாம் தரப் பிரஜைகள் ஆக்கி மீண்டும் மீண்டும் அமைதியும் ஐக்கியமும் சமாதானமும் இல்லாததோர் தேசமாகவே இருண்ட யுகத்தை நோக்கி பயணிக்கவிருக்கிறது. ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லுவதன் மூலம் இந்த நாட்டில் வாழும் ஏனைய இனங்களுக்கு நீங்கள் எல்லாம் மரத்தில் படரும் கொடிகள் மாத்திரமே என்று அந்த மக்களின் கன்னத்தில் அடித்து சொல்லியிருக்கிறார் ஜனாதிபதி. இந்த சிங்கள பௌத்த சித்தாந்தக் கொள்கையானது( Buddhist ideology ) இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களின் மனங்களை வெல்லுவதை விட இவர்களை இரண்டாம் தரப் பிரஜைகள் ஆக்குவதாகவே அமைவதோடு மாத்திரம் இன்றி இந்த நாட்டை ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு(Authoritarian rule ) வழி சமைப்பதாகவும் அமைந்து விடும் ஒரு அச்ச நிலைமையே இன்று காணப்படுகிறது. ஒரே நாடு ஒரே சட்டம் என்று இலங்கையில் எல்லா மக்களுக்கும் சமத்துவமான சட்டத்தை வழங்க அந்த நாட்டின் தலைவர் நல்ல சிந்தனை கொண்டு அமுல் நடத்துவதாக இருந்தால் இன்று அவர் ஏன் பெரும் குற்றம் செய்த பெரும் பான்மை சிங்கள இனத்தை சேர்ந்த குற்றவாளிகளுக்கு மட்டும் மன்னிப்பு வழங்கி அப்பாவி அரசியல் தமிழ்க் கைதிகளுக்கு இன்னும் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யாமல் இருக்கிறார்.இப்படி மனப்பான்மை கொண்ட ஒரு தலைவரால் எப்படி எல்லோருக்கும் ஒரே சமத்துவமான சட்டத்தை அமுல் படுத்த முடியும். பௌத்த பேரினவாத தேசிய சித்தாந்தக் கொள்கையைக் பின் பற்றி ஏனைய மத மக்கள் மீது இனவாதத்தை விதைக்கும் ஒரு துறவி தலைமையில் கூடும் குழுவால் எல்லா இனங்களுக்கும் சமத்துவமான சட்டம் பரிந்துரைக்கப்படும் என்று எதிர் பார்க முடியுமா. இந்த நாட்டில் வாழும் ஏனைய சிறு பான்பை தேசிய இனங்களின் கருத்துக்களை உள்வாங்காமல் நடை முறைப்படுத்தப்படும் எந்தச் சட்டமும் ஒரு வகையில் தனி மனித சர்வாதிகாரம் தான்.நாட்டின் சட்டங்களை துஸ்ப்பிரயோகம் செய்வதாகவே அமையும். மதத்தை அடிப்படையாகக் கொண்டே இலங்கையின் அரசியல் வரலாறு தொடர்ந்து கொண்டே போகிறது மதமும் அரசியலும் சட்டமும் பிரிந்து பயணிக்காத வரையில் இந்த நாட்டின் எதிர் காலம் மாற்றத்துக்கு வருவது கடினமே. சர்வதேசதுக்கு தாங்கள் சமாதான தூதராகவும் காட்டி அதே வேளை புலம் பெயர் தமிழ் மக்களுடனும் பேசுவதாக அறிவித்து விட்டு முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளை ஏனைய தேசிய இனங்களுக்கு எதிராக நடை முறைப்படுத்தவுள்ளது . இதனால் தான் இன்று பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட புலம் பெயர் அமைப்புகளுடன் தாங்கள் பேசத் தயார் இல்லை என்றும் அறிவித்திருக்கின்றனர். இது பலருக்கு ஆச்சரிக்கமாக இல்லாத போதும் இலங்கை அரசோடு பேசத் தயாராக இருந்தவர்களும் அபிவிருத்தி பொருளாதாரம் என்று கதைத்தவர்களுக்கும் இது கொஞ்சம் ஏமாற்றமாகத் தான் இருக்கும். சட்டவாளர்களும் சட்ட அறிஞர்களும் இருக்கும் போது சட்டம் நீதியை மதிக்காதவர்களும் குற்றவாளிகளும் நாட்டின் சட்டங்களை அமுலாக்கும் பொறுப்பில் அமர்த்துவது இலங்கையைப் பெறுத்த வரையில் ஆச்சரியம் அளிப்பதாகவில்லை ஏனெலில் இங்கு சரியான நீதி இருப்பதாகவில்லை. இங்கு நீதி வழங்கிய தீர்ப்புகளில் இருந்து பலர் தப்பிப் கொள்கின்றனர். பல்லின சமுகங்கள் வாழும் இந்த நாட்டிலே இந்த சமூகங்களை புறக்கணித்து ஒரு நாடு ஒரு சட்டம் என்பது மேலும் மேலும் இந்த நாட்டில் பெரும் குழப்பங்களை உண்டு பண்ணி வளமை போலவே அமைதியும் சமாதானம் இன்றி தொடர்ந்து வாழ வேண்டிய நிலை தான் ஏற்படும். காலம் காலமாக இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தவர்களால் கடைபிடிக்கப் பட்டு வந்த பல தேசவழமைச் சட்டங்களை எல்லாம் இல்லாமல் செய்து சிங்கள பௌத்த பெரும் பான்மை இனத்தின் ஆதிக்கத்தின் கீழ் இந்த நாட்டை அவர்களுக்கு மட்டுமே உரித்தானதாக்கி பௌத்த சிந்தாந்தங்களோடும் பேரினவாத சிந்தனையோடும் மட்டும் பயணிக்க விரும்புகிறது. எப்படி தாங்கள் ஆட்சிக்கு வருவதற்காக யுத்த வெற்றியையும் பேரினவாதத்தையும் முன் எடுத்தார்களோ அதே ஆயுதத்தைய் மீணடும் கையில் எடுத்து ஆட்சிக்கு வரும் நோக்கில் காய் நகர்த்தப் பார்க்கின்றனர். மீண்டும் இந்த மக்கள் ஏமாற்றப்படு வார்களா இன்னும் இந்த நாட்டை சூழ்ந்திருக்கும் இருள் விலகுமா காலம் பதில் சொல்லட்டும். பா.உதயன்
 18. இலங்கையில் ஏற்பட்டு வரும் பெரும் பொருளாதார சரிவுகளுக்கு பின் ராஜபக்சர்களின் மக்கள் செல்வாக்குபெரும் சரிவை ஏற்பட்ட பின் மீண்டும் பேரினவாத பெரும் விச அரசியலை முன் எடுத்து ஒரே நாடு ஒரே சட்டம்என்று அரசியல் அமைப்பொன்றை உருவாக்கும் வகையில் ஏனைய இந்த நாட்டில் வாழும் தேசிய இனங்களைஇரண்டாம் தரப் பிரஜைகள் ஆக்கி மீண்டும் மீண்டும் அமைதியும் ஐக்கியமும் சமாதானமும் இல்லாததோர்தேசமாகவே இருண்ட யுகத்தை நோக்கி பயணிக்கவிருக்கிறது.சர்வதேசதுக்கு தாங்கள் சமாதான தூதராகவும்காட்டி அதே வேளை புலம் பெயர் தமிழ் மக்களுடனும் பேசுவதாக அறிவித்து விட்டு முற்றிலும் மாறுபட்டகொள்கைகளை ஏனைய தேசிய இனங்களுக்கு எதிராக நடை முறைப்படுத்தவுள்ளது . எப்படி தாங்கள்ஆட்சிக்கு வருவதற்காக யுத்த வெற்றியையும் பேரினவாதத்தையும் முன் எடுத்தார்களோ அதே ஆயுதத்தைய்மீணடும் கையில் எடுத்து ஆட்சிக்கு வரும் நோக்கில் காய் நகர்த்தப் பார்க்கின்றனர். மீண்டும் இந்த மக்கள்ஏமாற்றப்படுவார்களா காலம் பதில் சொல்லட்டும். அன்று கொல்வின் ஆர் டீ சில்வா சொன்னார் இரண்டு மொழிகள் ஒரு தேசம் - ஒரு மொழி இரண்டு தேசங்கள் என்று இன்று கோத்தபய ராஜபக்ச சொல்கிறார் ஒரு நாடு ஒரு சட்டம் என்று. பா.உதயன்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.